Advertisement

அத்தியாயம் 11

சர்வா தன் திருமணம் எவ்வாறு நடந்து முடிந்தது என்பதை தன் பார்வையில் சொல்லி முடித்திருக்க பிரபா தான் வாயைப் பிளந்து கேட்டிருந்தான்.. 

“நாட்ல இப்பிடிலாம் கூட நடக்கும்னு இப்போ தான் மச்சான் எனக்குத் தெரிது.. என்ன சொல்லன்னே தெரில..”

“ஹ்ம்ம்.. அது இருக்கட்டும்.. உனக்கு எப்பிடி தெரிஞ்சது கல்யாணம் பத்தி? திடீர்னு சரியான நேரத்துக்கு கால் பண்ண?”

“அதுவா, அன்னைக்கு பரணியப் பத்தி ஃபுல் டீடைல்ஸ் சொன்னானே அவன் ப்ரெண்டு ஒருத்தன் அவனைப் போய்ப் பார்த்தேன்..

வேலைன்னு இவளோ தூரம் வந்திட்டமே.. வந்ததோட வந்து இவனைப் பார்த்து பரணி பத்தின அப்டேட்ஸ் எதுவும் கிடைக்குமான்னு பார்த்துட்டே போலாம்ன்னு போனா, அவன் தான் சொன்னான் காலைல தான் அவன் தங்கச்சி கல்யாணம்ன்னு சொல்லிட்டு போனான்னு.. என்னடா இது இவன் கல்யாணம் பத்தி இப்போ பிரச்சினை இருக்க, திடீர்னு தங்கச்சி கல்யாணம்னு சொல்லிட்டு கிளம்பிருக்கானே ஒரு வேளை இவங்கட்ட பொய் சொல்லிட்டு போய் அங்க அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறானோன்னு சந்தேகப்பட்டு தான் உனக்கு கால் பண்ணி விசாரிக்க சொன்னேன்..

ஆனா இப்பிடி ஒரு ட்விஸ்ட் வரும்ன்னு சத்தியமா தெரியாதுடா.. 

திடீர்னு உனக்கு கல்யாணம்ன்னு கடைப் பசங்க ஃபோன் பண்ணவும் என்ன ஏதுன்னு விசாரிக்க கூட நேரமில்லாமல் அரக்கப் பரக்க சென்னைல இருந்து கிளம்பி வந்தா, சரியா நீ தாலி கட்டுற நேரத்துக்கு தான் வர முடிஞ்சது..

அப்றம் நீயும் பிசியோ பிசி.. நானும் வந்தவங்களை கவனிச்சு அனுப்புறதுல பிசி.. அதான் இப்போ உன்னை உக்கார வெச்சு விசாரிச்சிட்டு இருக்கேன்..

ஆனா ஒன்னு மச்சான் அவசரத்துல அமைஞ்சாலும் உனக்கு அமைஞ்ச பொண்ணு தங்கம்டா.. மண்டபத்தில அவங்க சொந்தக்காரங்க பேசிக்கிட்டதைக் கேட்டேன்.. ‘ தன் வேலை உண்டு.. தானுண்டுன்னு எந்த வம்புக்கும் போகாம இருக்க இந்தப் பொண்ணுக்கே இந்த நிலைமை’ன்னு பேசிக்கிட்டாங்க..

இப்போலாம் எதிரிகிட்ட கூட நல்ல பேர் வாங்கிடலாம்.. ஆனா சொந்தக்காரங்ககிட்ட நல்ல பேர் வாங்கிறதுன்றது அவ்ளோ ஈசியில்ல.. அதை வச்சு சொல்றேன்.. பொண்ணு பியூர் கோல்ட்டு பார்த்துக்கோ..”

அதற்கு அவன் பதில் சொல்லவில்லை.. பார்வையை எங்கோ தொலைவில் பதித்திருந்தான்..

பிரபா என்னவென்று கேட்கவே ஒன்றுமில்லையென்றவன், வீட்டுக்கு செல்வதாகக் கூறி கிளம்பிச் சென்றிருந்தான்.. என்னவோ அவன் மனதில் உழன்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட பிரபா பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கிளம்பியிருந்தான்..

                   ********************

இன்று

அதே லைஃப் கேர் ஹாஸ்பிடலில், இன்னும் நான் வாழ்ந்து என்ன தான் அனுபவிக்க வேண்டுமோவென்ற விரக்தி மன நிலையில் கட்டிலில் வைத்திய சாலை பெட் ஜாக்கெட்டில் படுத்திருந்தாள் ஆதி..

கண் மூடியிருந்தாளேயன்றி துளியும் உறக்கம் அவள் விழிகளை அண்டவில்லை.. மூடிய அவள் இமைகளுக்குள் கருவிழிகள் சுழன்று அவள் தன்னுள் வேதனையில் சுழல்வதைப் பறை சாற்றின..

நேத்ராவும் பல முறை சொல்லி விட்டாள், எதையும் நினையாது உறங்கு எல்லாம் சரியாகி விடுமென்று.. அவள் கேட்ட பாடு தான் இல்லை.. அழுது விட்டால் கூட சமாதானம் சொல்லி விடலாம்.. முற்றும் துறந்து விட்ட துறவி போல் இனி எதுவும் இல்லை என்ற அவள் நிலை தான் நேத்ராவைப் பயங்கொள்ளச் செய்கிறது.. அவள் இழப்பு பெரிது தான் என்றாலும் இனி அதற்கு வருந்தி ஆகப் போவது ஒன்றுமில்லையே.. இருக்கும் தன் உடலைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?

நேற்று இரவும் டாக்டர்கள் கூட எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் விழி மூடாது விழித்தே இருக்க, இப்படியே இருந்தால் ஸ்ட்ரெஸ் அதிகமாகி பிளீடிங்க் அதிகரிக்கும் என்று தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்திருந்தனர்..

இன்றும் தொடர்ந்து மாத்திரை கொடுப்பது உடலுக்கு நல்லதல்ல என்று அவளாகத் தூங்க உதவுமாறு இவளிடம் சொல்லி விட்டுச் செல்ல, நேத்ராவும் முயற்சித்து முயற்சித்து முழுத் தோல்வி கண்டாள்..

நேற்று மதியம் போல் திடீரென ஆட்டோவில் வந்திறங்கியவள் கையில் பயணப் பை இருக்கவே ஏதோ சரியில்லை என்று தோன்றியது தான்..  இருந்தும் நேத்ரா பொறுமையாக விசாரித்துக் கொள்ளலாம் என்றிருந்தவளுக்கு நேர் மாறாக அவள் வந்து அமர்ந்ததுமே ராஜி தன் புராணத்தைத் தொடங்கிவிட்டார்..

“நான் பெத்த மூனுமே என் சொல்லைக் கேட்காம போய், இப்போ என் தலையில தானே எல்லாம் வந்து விழுது.. என்னடி ஆச்சு ஆதி? ஏன் இப்படி பொட்டியும் கையுமா வந்திருக்க? ஏன்டி அமைதியா இருக்க? என்னன்னு தான் சொல்லித் தொலையேன்..”

அவர் எப்படி எப்படியோ  கேட்டுப் பார்த்தும் அவள் அமைதி காக்கவே, பொறுமையிழந்தவர் இறுதியில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்..

அதுவரை தாயாக அவரின் கவலை புரிந்து, அவர் கேட்டால் என்ன பிரச்சினை என்று சொல்வாளோ என்று அமைதி காத்த நேத்ரா, அவர் அடிக்கவுமே “அத்தை..” என்று கத்தியபடி அவரை அவளிடமிருந்து பிரித்து, ஆதியின் கன்னத்தைத் தடவிக் கொடுக்க அது ஏற்கனவே வீக்கமாய் இருப்பது போல தெரிந்தது.. 

அதில் பதறியவள், ஆதி தன் இடது பக்க முகத்தை மறைக்குமாறு  விரித்து விட்டிருந்த முடியை நன்றாக பின்னுக்குத் தள்ளி அவள் கன்னத்தை ஊன்றிப் பார்க்க, அவள் கன்னம் கன்னிப்போய் தெரிந்தது..  

அது இப்போது மாமியார் அடித்த  அடியால் இல்லை என்பது நேத்ராவுக்குப் புரிந்தது.. எனில் சர்வாவா? 

சர்வா இவளை அடித்தான்.. என்ற  நினைப்பே நேத்ராவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கும் அவளின் எண்ணப் போக்குப் புரியவே கசப்பாய் சிரித்துக் கொண்டாள்..

அவள் அழுகையை எல்லாம் ஆட்டோவில் வரும் போதே விழுங்கி விட்டிருந்தாள்.. தனிமை கிடைத்தால் தான் மொத்த கதறலையும் கொட்டித் தீர்ப்பாள்.. அவள் என்று தான் தன் தன் பிரச்சனையை இவர்களிடம் சொல்லியிருக்கிறாள்‌? இதுவரை இவர்கள் பார்வையில் என்றுமே புகுந்த வீட்டினரையும் தரம் இறக்கியதில்லை அவள்.. எங்கே இரு வீட்டுக்கும் பிரச்சனையாகி விடுமோ? என்ற பயம் ஒன்றென்றால், ஏற்கனவே ராஜி, சமயம் கிடைக்கும் போதெல்லாம் நேத்ராவை அன்று தன்னை மீறி திருமணம் செய்து வைத்ததாய்.. என்று சொல்லி சொல்லிக் காண்பிப்பவர், தனக்கு அங்கே பிரச்சனையென்றால் அதை சொல்லியே அண்ணன் அண்ணியை நிம்மதியாக வாழ விட மாட்டார் என்றும் எதுவும் கூறமாட்டாள்.. தன் மன ஆறுதலை தானே தான் தேடிக் கொள்வாள்..

நேத்ரா அவள் கன்னத்தில் காயம் கண்டு அவளிடம் அது பற்றி கேட்க வர, தாய் இருப்பதை ஜாடையால் காட்டி வேண்டாமென கண்களால் மன்றாடினாள்.. அதில் நேத்ரா இவளை அதிருப்தியாய் பார்த்தாலும் ராஜியின் குணம் அறிந்து அமைதியாகி விட்டாள்..

நேத்ரா மட்டும் கன்னத்தைப் பார்த்திராவிட்டால் அவளிடமே இதை சொல்லியிருக்கமாட்டாள்..

அப்படியிருக்க தாயிடம் கணவனின் செயலை வெளிப்படுத்துவாளா? அவருக்கு விஷயம் தெரிந்தால் தான் அவர் அதை உலகப் போராக்கி விடுவாரே.. பின் அது இங்கிருந்து சுமி, பரணி வரை சென்று வெடிக்கும் என்றறிந்து ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் இது எதுவும் வேண்டாமென மனதோடு தன் வேதனையைப் புதைத்துக் கொண்டாள்..

ஆதி நேத்ராவிடம் தாய்க்கு தெரியாது, மாமனாருக்கு ஃபோன் பண்ணி அவரிடம் தான் வந்து விட்டதாகக் கூறி விடுமாறு மெதுவாக சொல்லவே அவளும் கிச்சன் சென்று சொல்லிவிட்டு இவளுக்கு குடிக்க சூடாக காபி தயாரித்தாள்.. வெளியே ராஜி தன் புலம்பலை நிறுத்தவில்லை.. 

காபியை அவளிடம் குடுக்க, மறுக்காது பெற்றுக் கொண்டவள், அதைக் குடிக்காது அடிக்கடி வலியில் முகத்தை வேறு சுருக்கி கொள்ள, நேத்ராவுக்கு தான் பயம் வந்து பிடித்துக் கொண்டது.. வேறு எங்கேனும் அடிபட்ட காயம், வலி எதுவும் இருக்குமோவேன்று.. மெல்ல அவளிடம் காதில் சென்று,

“வேற எதுவும் பண்ணுதா ஆதி? வேற எங்கேயும் அடி பட்டிருக்கா? காயம் எதுவும் வலிக்குதா? முகமே ரொம்ப சரியில்லாம இருக்கே? என்று முகத்தில் பீதி மாறாது கேட்டாள்..

“மந்த்லி பிராப்ளம் அண்ணி.. அங்க இருந்து கிளம்பும் போதே தயாரா தான் வந்தேன்..” அவள் சாதாரணமாய் சொல்ல இவளால் தான் அதை ஈசியாக எடுத்துக் கொள்ள இயலவில்லை..

“உனக்குத் தான் அந்த நேரத்துல அவ்ளோ வலிலாம் வராதே ஆதி? , இப்போ மட்டும் என்ன புதுசா? என்றாள் குழப்பமாக.. 

எல்லோரும் அந்த மூன்று நாட்களா? என்று அலறினால் ஆதி அதனை மற்ற நாட்கள் போல் அனாயசமாக கடந்து விடுவாள்.. நேத்ராவே கூறுவாள் கொடுத்து வச்ச மகராசி.. என்று.. அந்த யோசனையில் தான் கேட்டிருந்தாள்..

“தெரில அண்ணி.. ஆனா ரொம்ப பெயினா இருக்கு தாங்கவே முடியல..”

“டேட் எல்லாம் கரக்ட் தான ஆதி? இல்ல முன்ன பின்ன ஆச்சா?”

அவள் கேள்வியில், மனக் கணக்குப் போட்டுப் பார்த்தவள் உடல் தூக்கி வாரிப்போட, முகம் முழுக்க திகிலுடன் தன் அண்ணியைப்  பார்த்தவள் கண்ணெல்லாம் சிவந்து கலங்கி விட்டிருந்தது.. 

“இ..இருபது நாளுக்கு மேல லே..ட் அண்ணி..” என்றவள் குரலே தளுதளுத்து வர, தன் வலது கையால் தன் வயிற்றைப் பற்றிப் பிடித்தாள் ஆதி..

அதில் நேத்ராவுமே அதிர்ந்த்வள் தன் அதிர்வை அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “ஓ அதான் வலி அதிகம் போல?..” என்று சாதரணமாக சொல்வது போல் சொல்லி இரு ஹாஸ்பிடல் போய் பார்த்திட்டு வந்திடலாம் என்று சொல்லிக் கொண்டே கணவனுக்கு அழைத்து விவரம் கூறினாள்.. அவன் வரும் வரை அண்ணி பயமாருக்கு என்ற வார்த்தையும் ஆதியின் கண்ணீரும் மட்டும் நிற்கவில்லை..

இதுவரை அவர்கள் தமக்குள் கிசுகிசுத்து பேசியிருக்க அது எதுவும் கேளாது சற்று தள்ளி அமர்ந்திருந்த ராஜி, ஆதியின் கண்ணீரிலும், நேத்ராவின் பரபரப்பிலும்  அப்போதும் ஆதியை தான் விடாது  நச்சரித்தார்.. 

“என்ன நடந்ததுன்னு சொல்லித் தொலையேன்டி..  ஏய் நேத்ரா உனக்கு ஏதாச்சும் தெரியுமாடி? இவ ஏன் இப்போ அழுதிட்டிருக்கா?” என்று அவளிடமும் காய்ந்தார்..

“அத்தை கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன்.. அவளுக்கு வயிறு வலிக்குதுன்னு சொல்றா.. ஹாஸ்பிடல் போகணும்..” என்றவள் ஆதியைத் தட்டிக் கொடுத்தவாறு இருந்து விட்டாள்..  என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லி அவரைப் பயங்காட்ட வேண்டாமேயென்று மேலோட்டமாக சொல்ல, மகளுக்கு வலி என்றதும் அவரும் அமைதியாக‌ அவளருகே வந்து அமர்ந்து விட்டார்..

அன்புவும் வந்து ஹாஸ்பிடலில் செக்கப் முடித்து டாக்டர் சொன்னதைக் கேட்டதும் ஆதியின் குடும்பம் மொத்தமும் உடைந்தேவிட்டது.. 

தொடரும்…..

Advertisement