Advertisement

அத்தியாயம் 10

அந்த மண்டபத்தில் அங்கங்கு சில சல சலப்புகள் முணுமுணுப்புகளை மிஞ்சும் வகையில் ஏற்பாடு செய்திருந்த ஒலிப்பெருக்கிகள் அதன் வேலைகளைச் செவ்வனே செய்ய ஐயரின் மந்திர ஒலியும் மங்கல வாத்தியங்கள் ஒலியும் விடாது ஒலித்துக் கொண்டிருந்தது. 

ஓம குண்டத்தின் முன்னே பட்டு வேஸ்டி சட்டையில் கம்பீரமாய் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான் சர்வா.. அவன் முகத்தில் திடீர் மாப்பிள்ளையென்ற

எந்த பாவமும் இல்லை.. 

என் திருமணம் தான் இது என்ற பாவனையுடன் வரும் உறவுகளை புன்னகையுடன் தலையசைத்து  வரவேற்றபடி அமர்ந்திருந்தான்..

அதில் அவர்களுக்கே குழப்பம் தான்.. ஒரு வேளை ஆரம்பத்தில் இருந்தே இவன் தான் மாப்பிள்ளையோவென்று..

ஆம் அப்படியொரு மாயத் தோற்றத்தை உருவாக்கியிருந்தான் சர்வா..

நேற்று மாலை மண்டபம் வந்திருந்த சர்வாவுக்கு அங்கு எதுவோ சரியில்லையென்று தோன்றவே, என்னவென்று பார்க்க போனவனுக்கு, அன்று மதியமே சென்னை சென்றிருந்த பிரபா ஃபோன் செய்திருக்க அதைப் பேச மண்டபத்தின் பின் தோட்டப் பகுதிக்கு விரைந்தான்..

பிரபா சொன்ன விசயத்திலும் தோட்டத்தில் அவன் கண்ட காட்சியிலும் விரைந்து தன் குடும்பத்தாரை தேடிச் சென்றான் சர்வா.. 

செல்வதற்கு முன் மண்டபத்தின் வாயிலில் மணமக்கள் பெயர் இருந்த பலகையை சென்று பார்க்க, அழகாய்  மின்னிக் கொண்டிருந்தது மணமகள் பெயர் ஆதிரா என்று.. 

அவள் பெயரை உச்சரித்தவனுக்கு தாய் தங்கை மேலான இறுதி நம்பிக்கையும் உடைந்ததில் வெறுத்துப் போனான்.. நடந்திருக்கக் கூடியவை என்னவென்று சிறு சிறு காட்சிகளாக மனக் கண்ணில் ஓட்டிப் பார்த்தவன் முகமே இறுகிப் போனது.. அதே இறுக்கம் சற்றும் தளராது குடும்பத்தார் இருக்கும் இடம் சென்றான்..

அங்கு விசாலம் கையைப் பிசைந்து கொண்டு அமர்ந்திருக்க, சுமியின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது.. 

எதிரே அருணாச்சலம் ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தார் மனைவி மகள் செயல் அறிந்து..

கயல் ,ஆதி, ராஜி தவிர தணிகைவேல் குடும்பம் மொத்தமும் அங்கே தான் நின்றிருந்தது.. அவர்களுடன் அருணாச்சலத்தின் நண்பர் பால்ராஜ், மனைவி  சரசு, அவரின் தங்கை தயா மற்றும் தயாவின் கணவன் ஆகியோரும் உடனிருந்தனர்..

அந்த அறையின் உள்ளே நுழைந்த சர்வாவுக்கு அங்கிருப்பவர்கள் யாரென்று அறிந்தவனுக்கு ஏற்கனவே என்ன நடந்திருக்கும் என்ற விடுபட்ட மிகுதி காட்சிகளும் புலப்பட்டது..

சர்வாவைக் கண்ட அருணாச்சலம், “சர்வா, நம்ம கண்ணைக் கட்டிட்டு இவங்க பண்ணி வச்சிருக்க காரியத்தைப் பார்த்தியாப்பா?” மனம் வெம்பிப் போய் கேட்டவரைப் பார்த்தவனுக்கு மனம் பொறுக்கவில்லை.. ஊருக்குள் எப்பேர்பட்ட மனிதர் அவர்? அவரே இன்று மனைவி மகளின் செயலில் பிறர் கேள்வி கேட்கும் இடத்தில் நிற்கிறார்..

“தெரியும்பா.. இப்போ தான் பிரபா ஃபோன் பண்ணான்.. இப்போ என்ன பண்றதா இருக்காங்களாம்?” என்றான்.. தந்தையை நோக்கி, தாயிடம் பேச்சில்லை என்பது போல்..

அவனின் கேள்வியின் தொனியே வேறு மாதிரி இருக்க, தன் முன் பேசுவது தன் மகனாக அன்றி தனக்கு தூக்கு தண்டனை எழுதப் போகும் நீதிபதியாக தெரிந்ததில் விசாலம் வியர்த்துப் போனார்..

“சர்வா அம்மா ஏன் அப்படி?..” என்றவர் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க,

“எனக்கு காரண காரியம்லாம் தேவை இல்லை.. இதுக்கு அப்பறம் என்ன பண்ணப்ப பொறீங்கன்றது தான் என்னோட கேள்வி?” அழுத்தமாய் வந்து விழுந்தது அவன் கேள்வி.. 

என்ன செய்ய முடியும் அவரால்? அவர் எழுதிய கதையில் தான் இறைவன் நிறைய ட்விஸ்ட்களை அவருக்கே தெரியாது அள்ளிப் போட்டு வைத்திருந்தாரே..

சற்று மணி நேரத்துக்கு முன் மண்டபம் வந்த மாப்பிள்ளை அபினந்தன், பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கவே அவன் குணமறிந்த தாய் ஆதியை உறவினர்களுக்கு அறிமுகம் செய்யவென தான் அழைத்து செல்வது போல் கூட்டிச் சென்று அவனைத் தனிமையில் சந்திக்க விட்டிருந்தார்..

அவளுக்கே தெரியாது அவர் எங்கு கூட்டிச் செல்கிறார் என்று.. தாயின் வற்புறுத்தலில் அவருடன் சென்றவள் அங்கு நின்றிருந்த அபியைக் கண்டு திகைத்துப் போனாள்.. அங்கு அவன் என்ன பேசினானோ? அதற்கு ஆதி என்ன பதில் பேசினாளோ? திரும்பி வந்தவன் சைலண்டாக கம்பி நீட்டியிருந்தான்..

சிறிது நேரம் கழித்தே மகனைத் தேடிய நாயகி, அவன் இல்லாது போகவே பதட்டத்துடன் கணவனைத் தேடிச் சென்றார்..

ஏற்கனவே இங்கிருக்கும் வரை ஒழுக்கமாக இருந்தவன், ஆன்சைட் என்று ஃபாரின் சென்று அங்கு ஒரு பெண்ணுடன் லிவிங் ரிலேஷனில் இருந்து வந்துள்ளதை அறிந்தவர் அவர்.. அந்த உண்மை இங்கு பரவும் முன்பே மகனின் திருமணத்தை முடித்து விடத் தான் அவசரகதியில் பெண் வீட்டாரை சிந்திக்கவும் விடாது திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்..

ஆனால் அந்த அவசரத்திலும் தெளிவாக முழு செலவையும் பெண் வீட்டார் தலையில் கட்டி விட்டார் சாந்த மூர்த்தி.. மகனும் வேண்டா வெறுப்பாய் பெண் அழகாய் உள்ளாளே.. என்று ஒப்புக் கொண்டான்.

இப்போது மகனைக் காணவில்லையென்றால்.. நாயகிக்கு அதை நினைக்கவே பதறிப் போனது.. 

அவர் பதற்றம் அறியாது அவர் கணவனோ, அப்போது தான் மண்டபத்தில் அதிகமாக இறக்கப்பட்ட தேங்காய்கள்களுக்கு கணக்கு கேட்டுக் கொண்டிருந்தார்.. ஏதோ தான் கொடுத்தழிவதைப் போல..

நாயகி அவரை இழுத்துச் சென்று விவரம் கூற அவருக்குமே தலையில் இடி விழுந்த உணர்வு..

இவ்வளவு சொந்தங்களை அழைத்து விடிகாலையில் முகூர்த்தம் இருக்க மகன் காணாமல் போய் விட்டானென்றால் சொந்தங்கள் முன்னில் எவ்வளவு அசிங்கம்?

நாயகியிடம் ஏதோ விசாரிக்கவென வந்த சரசுவின் காதில் இது‌ விழுந்து விட, நைசாக நகர்ந்து சென்று விசயத்தைப் பரப்பி விட, இப்போது அது சர்வாவின் பஞ்சாயத்தில் நிற்கிறது..

விசாலத்தின் தொடர் அமைதியில், “இனி நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..” என்ற சர்வாவின் அழுத்தமான வார்த்தைகள் ஏனோ விசாலத்துக்கு நல்லதாகப் படவில்லை..

ஆனால் அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டே அப்போது உள் நுழைந்த ராஜி பொங்கி விட்டார்..

“என்னத்தைப் பார்த்துப்பீங்க நீங்க?

இப்பிடி தன் பொண்ணு நல்லா இருக்கணும்னு என் பொண்ணு வாழ்க்கையை நாசம்  பண்ணிட்டாங்க இவங்க.. கொஞ்சமும் இரக்கம் இல்லாம என் பொண்ணுக்கு செஞ்ச பாவம் எல்லாம் உங்களை சும்மா விடுமா? உங்க குலமே நாதியத்து போகட்டும்..  இதுக்கு அப்புறம் உங்க பொண்ணு நல்லா வாழுழுழுவா……” என்று இன்னும் சாபம் கொடுப்பதைப் போல் பேசிக் கொண்டே போனார்..

அருணாச்சலம் தொய்ந்து போய் அமர்ந்து விட்டார் அந்த வார்த்தைகளில்.. விசாலமே நடுங்கி விட்டார், எங்கே தன் பெண்ணின் வாழ்க்கை சீர் குலைந்து விடுமோவென்று.. மற்றபடி இப்போது தன் வாழ்க்கைக்கு வழி தெரியாது நிற்கும் ஆதியை எண்ணி அவருக்கு எந்த கவலையும் இல்லை..

விசாலம் வீட்டினரும் ஆதியின் கவலையில் அமைதியாயிருக்க, தன் பெண் இந்த நிலையிலிருக்க , தன் தங்கைக்கும் அதே என்று அவர் அள்ளி‌ வழங்கும் சாபங்களை அதன் மேலும் கேட்க சகியாத சர்வா, அங்கிருந்த செயற்கைத் தாவரம் வைக்கப் பாடிருந்த பூந்தொட்டியை முழு விசையோடு தூக்கி நிலத்தில் அடித்திருந்தான்.. 

“வாய மூடுங்க..” என்ற கர்ஜனையோடு..

அங்கிருந்த அனைவருக்குமே உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது.. சர்வாவுக்கு ஏனோ ராஜியைப் பார்க்கப் பார்க்க இனம்புரியா கோபம் ஒன்று உள்ளுக்குள்ளே கனன்றது.. அதை தன்னுள் அடக்கியவன் கழுத்து நரம்புகள் புடைக்க, சரசு தயா அவர்களின் பக்கம் பார்வையத் திருப்பி வரவழைத்த நிதானத்துடன்,

“நீங்க கொஞ்சம் வெளிய இருங்க.. நான் இவங்ககிட்ட பேசிட்டு என்னன்னு சொல்றேன்..” என்று சொன்னான்..

அதில் அவர்கள் நால்வரும் சத்தமே இல்லாது வெளியேறினார்கள்..

அவர்கள் வெளியேறும் வரை பார்த்திருந்தவன், ராஜியின் புறம் பார்வையைத் திருப்பினான்.. 

“என்ன சொன்னீங்க, தன் பொண்ணு நல்லா இருக்கணும்னு சூழ்ச்சி பண்ணாங்கன்னா? ஆமா பண்ணாங்க.. அவங்க பொண்ணு நல்லாருக்க என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணாங்க.. எந்த அம்மாக்கும் இருக்கிற சுயநலம் அவங்களோடது.. ஆனா நீங்க உங்க பொண்ணு  நல்லாருக்கணும்னு நினைச்சிங்களா? அப்படிக் கொஞ்சம் யோசிச்சிருந்தாக் கூட உங்க அவசரத்தால உங்க பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்காதே!..”

அவன் கேட்ட கேள்வி சுருக்கென்று இருந்தது ராஜிக்கு.. மகளின் திருமணத்திற்கு அவசரப்பட்டவர் அவர் தானே.. கணவனும் மகனும் அன்று பூ முடிக்கும் போது எல்லாம் அவசரமாய் நடப்பது போல் இருக்கே.. நிதானமாக பேசலாமென்று எவ்வளவு கூறினர்.. தன் பிடிவாத்தில் இங்கு வரை இழுத்து விட்டவர் அவர் தானே.. அந்த நினைவில் மேலும் பேச முடியாது மௌனமாகி விட்டார்..

அன்புவும் தணிகைவேலும் அவன் கேள்வியில் ராஜி என்ன சொல்லியிருந்தாலும் தாம் நிதானித்து செயல் பட்டிருக்க வேண்டுமோ? என்று தம்முள் மருகி நிற்க , நேத்ரா தான் சர்வாவுக்கு மனதில் சபாஷ் போட்டுக் கொண்டாள்.. தன் மனதில் இருந்து தன்னால் பேச முடியாததை அவன் பேசியதில்..

தன் கணவனையும் மாமனாரையும் கூட பாவம் பார்க்கவில்லை.. அவர்களுக்கும் தான் எவ்வளவு எடுத்து சொல்லியிருப்பாள்.. அவள் கவலையெல்லாம் ஆதிரா என்ற ஒற்றைப் புள்ளியில் தான் சுழன்றது..

அதற்கும் சர்வாவே முற்றுப் புள்ளி வைத்தான்.. 

தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியவன், ஏன் இதை சொல்கிறான் என்று மற்றவர்கள் யோசித்திருக்கையிலே, 

“உங்க பொண்ணுக்கு சம்மதம்னா நான் உங்க பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு ஆட்சேபம் இருக்கா?” அவன் கேள்வி மொத்தமும் அன்பு தணிகைவேலிடம் மட்டுமே..

அவன் கேள்வியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.. நேத்ரா, அன்பு ,அவன் தந்தை மூவரும் அவனைப் பற்றிக் கேட்டவை இப்போது அவன் நடவடிக்கை பார்த்தது எல்லாம் குறை சொல்லும் படி இல்லையென்றாலும், ஏற்கனவே அவசரத்தில் எடுத்த முடிவில் தான் இங்கு வந்து நிற்கிறோம்.. மீண்டும் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டுமா? என்ற சிந்தனையில் நின்றனர்..

மகன் ஏதேனும் மாற்று வழி கூறுவான் என்று நினைத்த அருணாச்சலத்துக்கு இப்படி அவன் வாழ்க்கையை பணயம் வைக்கிறானே என்றிருந்ததென்றால் சுமிக்கு தன்னை அவள் வீட்டுக்கு வர விடாது சதி செய்யும் ஆதி, தன் அண்ணியா என்ற கசப்பு ..

இதில் விசாலமும் ராஜியும் தான் ஒரே எண்ணம் கொண்டிருந்தனர்..

அந்த வீட்டுக்கு என் மகள் மருமகளாகச் செல்ல வேண்டுமா? என்று ராஜியும், 

என் வீட்டுக்கு அவள் மருமகளா? என்று விசாலமும் நினைத்து இருவரும் தம் மறுப்பைக் கொட்ட வாய் திறக்க, 

அவர்கள் வார்த்தைகள் வெளிவரும் முன்னே தடுத்திருந்தான் சர்வா..

“நீங்க பேச வேண்டியது எல்லாம் பேசி, பண்ண வேண்டிய எல்லாம் பண்ணி முடிச்சாச்சு.. இனி இங்க நீங்க பேச எதுவும் இல்லை..

நான் யார்கிட்ட கேள்வி கேட்டேனோ, அவங்ககிட்ட இருந்து மட்டும் தான் பதிலையும் எதிர்பார்க்கிறேன்..” என்றவன் பார்வையை மீண்டும் அன்பு தணிகைவேலிடம் திருப்பிக் கொண்டான்..

இதில் பரணிக்கு தான் பெரும் புகைச்சல்.. நடந்த காட்சிகளில் இதுவரை தான் மௌன சாட்சியாக இருப்பதாய் உணர்ந்தவன், இப்போது அன்புவிடம் மட்டும் ஆதியின் அண்ணனாக சம்மதம் கேட்டு நிற்கும் சர்வாவின் செயல் அவன் தன்னை ஏதோ செல்லாக் காசாக ஆக்கியது போலாக தோன்றியது..

எங்கும் தானே முன்னிலைப்படுத்தப் பட வேண்டுமென்ற அவன் ஆணவத்துக்கு கிடைத்த பெரிய அடி இதுவாக சர்வா மேல் தொடர்ந்து கனலைக் கொண்ட காத்திருந்தது..   

ஏற்கனவே அவனுக்கு ஆதியின் திருமணம் செய்தி போல தான் சொல்லப்பட்டது.. இன்று தான் இங்கு வந்தவன் சுமியின் உறவுகள் சிலரை அடையாளம் கண்டு கொண்டவன், அதன்பின் விசாரிக்கவும் தான் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொண்டவன் தாயிடம் சென்று சவடால் பேசியிருந்தான்.. அப்போதே ராஜிக்கு பொறி தட்ட, அவர் விசாரிப்பதற்குள் மாப்பிள்ளை ஓடி பிரச்சனை திசை திரும்பியது‌.. இவன் யோசனை இவ்வாறு இருக்க,

சர்வாவின் பார்வையில் அன்பு தான் ஓரமாய் நின்றிருந்த  மனைவியைப் பார்த்தான் என்றால் தணிகை வேலுமே அவளைப் பார்த்து நின்றார்.. அவளுக்கு ஆதி மேல் உள்ள அக்கறை புரிந்தவர் ஆதலால்.. 

அவள் மனது ஒப்பாமல் தானே இந்தத் திருமணம் பற்றி சிந்திக்க சொல்லி அவ்வளவு தூரம் எடுத்துக் கூறினாள்.. தாங்கள் கேட்கவில்லை.. இனியாவது அவள் ஆலோசனை கேட்போம் என்ற காலம் கடந்த ஞானம்..

அதில் சர்வாவும் புருவம் சுருக்கி அவர்கள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவன், அவளை அப்போதே கண்டுகொண்டவன் அன்புவின் மனைவி என்று ஓரளவு புரிந்து கொண்டான்.. இப்போது அவன் அவளைப் பார்க்க, அவள் கணவனிடம் சம்மதிக்குமாறு தலையசைத்தாள்..

அதில் இருவருமே  உடனே சம்மதிதிருந்தனர்.. விசாலத்துக்கு தான் இதை எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை..

அவர்களைத் தாண்டி, இப்போது ஆதிராவின் சம்மதம் கேட்டு அவள் முன் நின்றான் சர்வா.. தான் கேட்கிறேன் எனக் கூறிய நேத்ராவிடம், தானே நேரடியாகக் கேட்டுக் கொள்வதாய் சொன்னவன், மகளிடம் பேச  வேண்டும் என்று சலம்பிய ராஜியை சட்டையே செய்யாமல் அவள் அறையினுள் நுழைந்திருந்தான்..

அவள் அவனைப் புரியாது நோக்கவே, 

“நான் சர்வேஸ்வரன்.. உன் அண்ணா பரணி விரும்புறது என் தங்கச்சி சுமியைத்தான்.. இப்போ நீ இருக்க நிலைக்கு ஒரு வகையில நாங்களும் தான் காரணம்.. இதெல்லாத்தையும் தாண்டி இப்போ நான் முழு மனசா உன்கிட்ட கேட்கிறேன்.. உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?”

ஆதிரா அவனைத் தான் பார்த்திருந்தாள்..  அவள் எண்ணம் அறியாதவன், ஏற்கனவே இருக்கும் அதிர்ச்சியில் அவளுக்குப் புரியவில்லையோ? என்று  மீண்டும் ஒருமுறை அழுத்திக் கேட்டான்.. 

ஆதிராவின் தலை அவள் சம்மதமின்றி சம்மதமாய் ஆடியதுடன், குனிந்தும் கொண்டது..

“இப்போ நீ சொன்னது தான் ஃபைனல். இந்த நிமிஷமே என் மனைவிங்கிற ஸ்தானத்தை ஏற்க ரெடியாயிரு.. உன் கல்யாணத்துக்குன்னு போன நிமிசம் வரைக்கும் நீ சுமந்திருக்க  எல்லாத்தையும் இந்த நிமிஷத்துல இருந்து இறக்கி வச்சிரு.. நான் சொல்றது புரியுதா?”

குனிந்த படியே புரிந்ததாய் தலையாட்டியவளை ஓரிரு நொடிகள் அழுத்தமாய் பார்த்தவன், வெளியேறி விட்டான்..

அதன் பிறகு ஆதி, சர்வா சொன்னான் என்பதற்காக தன் கையிலிருந்த  மருதாணியைக் கூட விட்டு வைக்காது தேங்காய் நாரில் தேய்த்து அழித்து விட்டாள்.. 

சர்வாவின் பணமும் ஆளுமையும் கை சேர அந்த  நேரத்திலிருந்து எல்லாம் அவன் வசமானது.. தாலி முகூர்த்தப் பட்டு எதுவுமே முதலில் எடுத்ததை அவன் பயன்படுத்தவில்லை.. அதைத் தாங்கள் தான் எடுத்தோம் என்ற பெண் வீட்டார் பேச்சையும் கேட்கவில்லை.. அதை யாருக்கேனும் தானம் கொடுக்குமாறு சொல்லி முடித்துவிட்டான்..

அதிலிருந்து இதுவரை எல்லாம் அவன் கட்டுப்பாட்டிலேயே.. இதோ அவள் அணிந்து வரும் காதணி முதல் கால் கொலுசு வரை நேத்ராவிடம் விசாரித்து அவன் வருவித்தவையே.. இதில் அன்புவுக்கும் தந்தைக்கும் தங்களை எதுவும் செய்ய விடவில்லை என்ற வருத்தம் என்றால்.. நேத்ராவுக்கு அவன் செய்கையில் ஏக சந்தோசம்..

இப்படி தன் திருமணம் என்றே அனைவர் மனதிலும்பதிவித்து ஆதியின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் சர்வா..

தொடரும் …..

Advertisement