Advertisement

அத்தியாயம் 9

ஹாலில் இருந்த இரு வீட்டுப் பெரியவர்கள் தம்முள் பேசிக் கொள்ள, அது காதில் விழுந்து தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தொண்டையில் மிடறு விழுங்கி முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அடக்கிக் கொண்டாள் ஆதிரா..

சுட்டு விரலளவு ஜரிகையிட்ட அடர் பச்சை வண்ண மென் பட்டில் கழுத்தில் ஒரு ஆரம் கைகளில் தலா இரண்டு வளையல்கள் தலைக்கு அளவான பூச் சூடி இடை தாண்டிய பின்னல் அவளைப் போலே அசையாமல் நின்றிருக்க ஆதிரா அவளும் அதே ஹாலின் சுவரோடு சுவராக நின்றிருந்தாள்..

எல்லாப் பேச்சு வார்த்தைகளும் முடிய நாயகி எழுந்து வந்தவர் அவளுக்குப் பூச் சூடி தன் மருமகள் என்று சபைக்கு அறிவித்தார்..

                    ***************

அன்று ஜாதகம் பொருந்தி விட்ட நாள்.. 

இரவு உணவு முடித்த கையோடு ராஜி தான் ஆதிக்கு பார்த்த வரன் பற்றி எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிட்டார்.. மகளையும் உடன் வைத்துக் கொண்டு..

நாளை மறுநாள் ஆதியைப் பெண் பார்க்க வருவதாக அவர் கூறிய செய்தியில் ஆதி தவிர அனைவருக்கும் அதிர்ச்சியே..

நேத்ரா ஆதியைப் பார்க்க, அவள் இவளைத் திரும்பியும் பாராமல் தாய் முகத்தையே பார்த்திருந்தாள்..

தணிகைவேல் ஒரு வித அழுத்தமான அமைதியைக் கடைப்பிடிக்க, அன்புதான் அவர் முடிவை ஆட்சேபித்தான்.. 

அவள் படிப்பை முடிக்கவில்லை.. சின்ன வயது.. என்று அவன் அடுக்கிய எந்தக் காரணத்தையும் ராஜியின் செவிகள் கேட்கத் தயாராக இல்லை.. தன் வார்த்தைகளில் அவன் வாயடைப்பதிலே குறியாக

இருந்தார்..

“என்னடா தங்கச்சி மேல புதுசா பாசத்தைக் கண்டுட்ட? எதைப் பத்தியும் கவலையில்லாம நீ உன் வாழ்கையைப் பார்த்துக்கிட்ட.. உன் தம்பியும் இன்னும் கொஞ்ச நாள்ல யாரோ ஒருத்தியை பொண்டாட்டினு கூட்டிட்டு வந்து நிப்பான்.. நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையைப் பார்த்திட்டிருப்பிங்க..

திடீர்னு எனக்கோ உங்கப்பாக்கோ எதுவும் ஆச்சுன்னா இவ அனாதையா நின்னு சீழ்ப் படவா இவளை நான் பெத்தேன்?” தீக் கங்கென வந்த அவர் கேள்வியில் மொத்தம் உடைந்து போனான் அன்பு..

அவர் வார்த்தைகளில் நேத்ராக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.. இன்னும் எத்தனை நாள் தான் இதையே சொல்லிக் காட்டுவார் இவரென்று பற்றிக் கொண்டு வந்தது மாமியார் மேல்..

தாங்கள் என்ன விரும்பியா அப்படி ஒரு திருமணம் செய்து கொண்டோம்? நேத்ரா தந்தையில்லாமல் தாயுடன் வாழ்ந்து வந்தவள் கல்லூரியில் கூடவே படித்த அன்பரசனின் ஆதரவான அன்பில் தந்தை பாசத்தையுணர்ந்து அது காலம் முழுதும் வேண்டி அவனிடம் முதலில் காதலை சொன்னதும் அவள் தான்..

அவனோ சொந்தத்தில் மணம் முடிக்க விரும்பும் தன் தாயின் எண்ணம் அறிந்து முதலில் தயங்கியவன், முடிவில் அவள் உண்மை நேசத்தின் முன் மொத்தமாய் சரணடைந்திருந்தான்..

கல்லூரி முடிந்ததும் , இத்துடன் படித்தது போதும் என நேத்ராவை தாய் வீட்டில் இருக்க வைக்க , இவன் மேற்படிப்பிற்கு கோயம்புத்தூர் சென்றிருந்தான்.. 

இவன் கோவையில் இருக்கும் போது‌ சொத்து பிரச்சனையில் நேத்ராவின் தாய் வழி மாமன் ஒருவன் வயது வரம்பின்றி இவளை மணம் முடிக்க கட்டம் கட்ட,தெய்வாதீனமாகத் தப்பி அன்புடனும் நேத்ராவுடனும் படித்த நண்பன் ஒருவன் துணையுடன் இவன் தங்கியிருந்த இடம் வரை வந்து சேர்ந்தவளை அவகாசமின்றி உடனே திருமணம் செய்து கொண்டான் அன்பு..

அந்த இடத்தில் தன்னை நம்பி வந்தவள் நம்பிக்கையைக் காப்பாற்றிய அவன் செயலே தன் வளர்ப்புக்கு சான்று என்று பெருமைப்பட்டுக் கொள்ள ராஜி ஒன்றும் புரட்சித் தாயல்லவே..

தான் விரும்பிய பெண்ணை சூழ்நிலையை காரணம் சொல்லி திருமணம் செய்து கொண்டான் என்றாலும் தாயாக அவருக்கும் பிள்ளைகள் திருமணத்தில் கனவுகள், ஆசைகள் இருக்கும் என்றுணர்ந்து தாயிடம் விளக்கம் கூறி தன் செயலுக்கு மன்னிப்பும் வேண்டினான் அன்பு.. நேத்ராவுமே மன்னிப்புக் கேட்டாள்.. அன்பு வேண்டாம் என்று கூறியும் கேளாது அவனுக்காய் கேட்டாள்..

எத்தனையோ முறை இதை சொல்லியும் கேட்டும் இப்படி சமயங்களில் குத்திப் பேசுபவர் செயலில் கோபமிருந்தாலும் காட்டிக் கொள்வதில்லை அன்பு, நேத்ரா இருவருமே.. ஆனால் இன்று அவரின் வார்த்தைகள் ரொம்பவே அதிகம் ஆகையால் அதில் நேத்ரா பேச வாயெடுத்தவள்,

“நீங்க சொன்னா சரியா தான்மா இருக்கும்.. எனக்கு கல்யாணம் பண்ணிக்க பரிபூரண சம்மதம் மா..” என்ற ஆதியின் குரலில் அதிர்ந்து அவளைப் பார்க்க அவள் முகத்தில் சின்ன சலனம் கூட இல்லை..

அன்பு‌ தான், 

“அம்மா வார்த்தைல சொன்னதை, நீ உன் பதில் மூலமா  சொல்றியா ஆதி? என்று கேட்டிருந்தான்.. மனம் வலிக்க..

அண்ணனின் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல தொண்டையடைத்ததில் அமைதியாகவே நின்றாள் அவள்..

“பதில் சொல்லு ஆதி.. உனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லைன்னு எனக்கும் தெரியும்.. இப்போ நீ ஒத்துக்கிறது அம்மா சொன்ன காரணத்துக்காகவா?”

இல்லண்ணா, அம்மா சொன்னா நல்லதுக்குத் தானே இருக்கும்.. அதான்.. மற்றபடி உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லண்ணா..” அதற்கு மேலும் அவனை தவிக்க விட முடியாமல் பதில் கூறி விட்டாள்..

அவள் பதிலில் மாமியார் முகத்தில் வந்து போன பெருமையை வெறுப்பாய்ப் பார்த்திருந்தாள் நேத்ரா..

அதன் மேலும் என்ன பேச என்ற அங்கலாய்ப்பில் தந்தையைப் பார்த்தான் அன்பு.. அவரேதேனும் கூறுவாரா என்று?

அவருக்கும் மனைவியின் பேச்சில் உடன்பாடே என்பது போல் நின்றிருந்தார். 

அவருக்கோ வேறு எண்ணம்.. இளைய மகன் தான் காதலிக்கும் பெண் ஏதோ பெரிய இடம் என்று சொல்லியிருந்தான்.. இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து ஏதேனும் கலவரம் ஆகி மகள் வாழ்க்கை பாதிக்கப்படும் முன் மகள் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.. 

தன்னை முந்தி மனைவி இதில் இறங்கி விட அவளும் இதை எண்ணித் தான் இவ்வளவு அவசரமாகப் பார்க்கிறாள் என்று புரிந்து கொண்டவர், 

“மகனிடம் அம்மா உன்னைப் பத்தி சொன்னதை அப்பா ஏத்துக்கல அன்பு.. ஆனா ஆதி கல்யாணம் இப்போ நடக்க வேண்டியது அவசியம் தான்.. அதை நாம ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும்..

உன் தம்பி லவ்வுன்னு வந்து இவ்வளவு பிரச்சனை ஆனதுல இருந்து அது மூலமா பின்னாடி ஆதி கல்யாணத்துல எதும் பிரச்சனை வந்திடும்ன்ற பயம் எனக்கும் இருக்குப்பா.. முதல்ல அவங்க வந்து பொண்ணு பார்த்திட்டுப் போகட்டுமே.. அப்பறம் விசாரிச்சு மிச்சத்தப் பார்த்துக்கலாம்..”

அவர் பேசுவதும் நியாயமாகப் படவே அன்பு தம்பதியினர் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை..

அதையே பிடித்துக் கொண்ட ஆதியும், 

“ஆமாண்ணா அம்மாவும் இதையே தான் சொல்லி ஃபீல் பண்ணாங்க..

எப்படியும் எப்போ ஒரு நாள் இதே கல்யாணத்தை பண்ணிக்க வேண்டி இருக்கும் தானேண்ணா?

சும்மான்னாலும் பரவால்ல.. பரணி அண்ணாவும் லவ்வுன்னு வந்திருக்க, எனக்கு முடிக்காம அவங்களுக்கு பண்ண முடியாதில்ல? அப்படி பண்ணா வெளில என்னலாம் பேசிப்பாங்கன்னு எனக்கும் தெரியும்.. இதுல எனக்கு முழு சம்மதம் தான்.. நீங்க எதுவும் வருத்தப் படாதீங்க அண்ணா.. அண்ணி நீங்களும் தான்.. நீங்க இப்பிடி வருத்தமா இருக்கறது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவள் குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது.. 

எல்லாமே ஒன்றுக்கு ஒன்று ஒத்துப் போய் காரணங்கள் சரியாய் இருக்கவே, அதற்கு மேல் எதுவும் பேச இல்லாது ஒரு வேளை இது தான் அவள் வாழ்க்கைக்கு சரியோ என்று எண்ணி , அன்பு நல்ல அண்ணனாய் மாப்பிள்ளையின் விவரங்களைப் பெற்றுக் கொண்டான்.. விசாரித்துக் கொள்ளவென..

விசாரித்த வரை நல்ல குடும்பப் பின்னணி.. பையனும் நல்ல வேலை என்று எல்லாம் திருப்தியே..

அதன் பின் இன்று வந்த மாப்பிள்ளை வீட்டினர் எல்லாம் பேசி முடித்து இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவும் செய்தாயிற்று.. மாப்பிள்ளை தான் வரவில்லை.. லீவு கிடைக்கவில்லையென..

நேத்ராவும் ஒரு முறைக்கு பல முறை இவளுக்கு திருமணத்தில் சம்மதமா? என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்..

அதில் அவளுக்கே சலிப்பு வந்து, “உங்களை விடவா கொடுமையான மாமியார் அமைஞ்சிடப் போகுது?” என்று அவள் கேட்டதையே கேட்டு விட்டு..” அப்பிடியென்ன நீங்கல்லாம் பயப்படற மாதிரி இருந்திட போகுதுன்னு நானும் பார்த்திடுறேனே..” என்றிருந்தாள்.. 

அவள் தைரியமான பேச்சில் வாயடைத்துப் போனாள் நேத்ரா.. அதன் பின் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளவில்லை‌ அவளிடம்..

அவள் திருமண வாழ்வுக்குத் தயாராகி விட்டாள் என்று அவளை அவளே நம்ப வைக்கத் தான் இப்படிப் பேசி அலைவதேயன்றி அபினந்தன் என்ற அவன் பெயர் தவிர ஏதும் அவனைப் பற்றி அறிய முனையவில்லை.. அவளுக்கிருக்கும் பிரச்சனைகளில் அவனை ஆராயவோ, எண்ணிக் கனவு காணவோ அவளுக்கு நேரமும் இருக்கவில்லை..

இன்னுமே தன் இறுதி செமஸ்டர் படிப்பு பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை.. எங்கே படிக்க முடியாது போகுமோ? என்ற பயமிருந்தாலும் எங்கே அதைக் கேட்கப் போய் அதைத் தொட்டு ஒரு பிரச்சனை வருமோ என்ற பயம் பிடித்து ஆட்ட அமைதியாகி விட்டாள்.. 

ஏற்கனவே அமைதியானவளுக்கு பரணி வந்து சென்ற பின் சொந்த வீட்டிலே பேசவே பயம் பிடித்துக் கொண்டது.. இதை சொன்னால் பிரச்சனை வருமோ? அதை சொன்னால் பிரச்சனை வருமோவென்று சிந்தித்து இறுதியில் ஏன் பேச வேண்டும்? என்று இருந்து விட்டாள்..

இப்படியே நாட்கள் நகர இன்னும் திருமணத்துக்கு நான்கு நாட்கள் இருக்க முதல் முறை அபினந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது அவள் ஃபோனுக்கு..

போனை வெறித்துப் பார்த்தவளுக்கு என்ன செய்ய? என்று தெரியாமல் போக அது கட் ஆகியே விட்டது.. மீண்டும் அழைப்பு வராது போகவே நிம்மதிப் பெரு மூச்சுடன் அமைதியாகி விட்டாள்..

ஆனால் அடுத்த நிமிடம் இவள் அறைக்குப் பரபரப்பாய் ஓடி வந்தார் ராஜி.. இதோங்க மாப்பிள்ளை குடுக்கிறேன்.. என்றவர் , மகளை முறைத்துக் கொண்டே, “இந்தா மாப்பிள்ளை பேசுறார்..” என்று மொபலைத் திணித்தார்..

அவள் ஹலோ.. என்று பேச ஆரம்பித்த பின்னே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.. 

“என்ன ஆதி ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா? உன் கூடப் பேச நான் இன்னொருத்தரப் பிடிக்கணுமா என்ன? அவன் முதல் வார்த்தைகளே தீக்கணையாகத் தாக்கியது பெண்ணை.. அவன் குரலே இவளை நடுங்க வைத்தது.. இன்னொரு முறை அழைத்துப் பார்த்தால் இவன் சொத்தா அழிந்து போய் விடும்..

“இல்ல, ஃபோன் கைல இல்லை..” என்றாள் குரல் திணற.. 

“என்ன யாரோகிட்டப் பேசுற போல மொட்டையா பேசற.. கால் மீ அபி.. உங்கம்மா சொன்னாங்க.. எங்கம்மா சொன்னாங்கன்னு இந்த மாமா அத்தான்னு நீட்டி முழக்கி கூப்பிட கூடாது புரியுதா? நான் வேலை பார்க்கிறது ஐடில.. தெரியும் தானே?”

“ம்ம்..” என்று தலையாட்டிக் கேட்டுக் கொண்டவள், அதென்ன ஐடில வேலை பார்க்கிறதுங்கிறது இவங்களுக்கு எல்லாம் ப்ராண்டா? இதையே சொல்லிட்டு அலையறாங்க? பரணி அண்ணாவும் இதே தான் சொல்லி அலையும்..

மனதுக்குள் தான் புலம்ப முடிந்தது . வேற வழி?..

“ப்ச்.. உன் கூட பேசக் கூப்பிட்டதே வேஸ்ட்.. ச்சை.. நல்லா பார்த்தாங்க எனக்கு பொண்ணுன்னு உன்னை. பேசவே கூலி கேட்பா போல?” அவன் அங்கு முணகுவது இங்கே இவளுக்கு கேட்டது..

அதில் அவளுக்கு வருத்தமோ, கவலையோ ஏற்படவில்லை.. மாறாகப் பயம் வந்தது.. இவனோடான எதிர் காலம் என்ன வைத்துக் காத்திருக்கிறதோ? என்று..

மீண்டும் அவனே பேசினான்.. நான் இன்னைக்கு ப்ரெண்ட்ஸ் கூட ஏர்காடு வந்துடுவேன்.. நாளைக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் பேச்சிலர் பார்ட்டி இருக்கு.. நீ அங்க வந்தன்னா உன்னை அவங்களுக்கு இன்ட்ரோ குடுக்கலாம்ன்னு இருக்கேன்.. சோ ஈவினிங் ஒரு ஃபோருக்கு கார் அனுப்பி வைக்கிறேன்.. அங்க வந்திடு.. நைட் பார்ட்டி எல்லாம் முடிஞ்சு மார்னிங் கிளம்பிடலாம்..” என்றான் சர்வ சாதரணமாக..

அவன் பேச்சில் இவளுக்கு தான் உதறல் எடுத்தது.. பார்ட்டிக்கு வான்னு எங்கே வந்து அழைக்கிறான் இவன் என?

அவள் அமைதியில் புரிந்து கொண்டவன், 

“என்ன பார்ட்டியான்னு ஷாக்காகி நிக்கிறியா? இனி இது மாதிரிலாம் அடிக்கடி நீ கலந்துக்க தான் வேணும்.. சோ இதுலயிருந்தே பழகிக்கோயேன்.. நீ ட்ரிங் பண்ணனும்னு அவசியம் எல்லாம் இல்ல.. ஜஸ்ட் ஒரு பிரெண்ட்ஸ் கெட் டூ கெதர் போலத் தான்.. காரனுப்புறேன் வந்து சேரு.. இப்போ வச்சிடுறேன்.. அவன் வைக்கப் போகவே இவள் அவசரமாக “ஹலோ..” என்று தடுத்திருந்தாள்..

“என்ன சீக்கிரம் சொல்லு..”

“இல்ல கார்லாம் அனுப்ப வேண்டாம்.. என்னால ட்ரிங்க் பண்ற இடத்தில எல்லாம் இருக்க முடியாது..” தயங்கியே என்றாலும் சொல்லி விட்டிருந்தாள்..

“ஏன்?” அந்தப் பக்கம் அவன் உறுமினான்.. தான் இவ்வளவு சொல்லியும் இப்படிப் பேசுகிறாளேயெனக் கோபம்..

“அது எனக்கு அந்த ஸ்மெல் ஒத்து வராது.. ஒரு மாதிரி வாமிட்டிங் வர மாதிரி இருக்கும்..” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தப்பக்கம் அழைப்புத் துண்டிக்கப் பட்டது..

அழைப்பு துண்டிக்கப்பட்ட ஒலியில் இவள் தான் மொபைலை புரியாது பார்த்துக் கொண்டாள்..

அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ராஜி மகள் ஃபோன் பேசாதிருப்பதில் 

“பேசி முடிச்சிட்டயா?” என்றவர், 

“அவர் உன் நம்பருக்கு கூப்பிட கூப்பிட நீ எடுக்கவேயில்லைன்னாரு..

ஏன் அவரு கூப்பிட்டா எடுத்து பேசுறதுக்கு என்ன? நீ இன்னும் குழந்தை இல்லை.. ஒன்னொன்னும் சொல்லிட்டிருக்க..  இனி ஒரு ரிங்லயே எடுத்துப் பேசுற..” என அதட்டி விட்டுப் போன தாயை வெறுமையாகப் பார்த்தாள்.. 

அவன் ஒரு தடவை தான் அழைப்பு விடுத்தானென்றால் நம்பவா போகிறார்? அதை விட இனி ஒரு முறை அவன் எடுத்தால் என்ற எண்ணம் வரவே ஐயோ என்றானது..

அந்தப் பக்கம் அபியோ , தீவிர சிந்தனையிலிருந்தான்.. இந்தத் திருமணம் சரி வருமா? வராதா? என்று..

தொடரும்…..

Advertisement