Advertisement

அத்தியாயம் 08

தோப்பு வீட்டின் முன்னிருந்த மரத்தின் கீழே கயிற்றுக் கட்டிலில் ஒரு கரம் தலைகக்கடியிலும் மறு கரம் விழிகளை மறைத்தும் இருக்க மல்லாந்து பார்த்து கண்மூடிப் படுத்திருந்தான் சர்வா.. அவன் வேண்டிய தனிமை இரண்டு நாட்கள் கழித்து இன்று தான் கிடைத்திருந்தது..

மாமியார் வீட்டில் காலையுணவு முடித்து மனைவியுடன் வீடு வந்தவன், அமைதியாக அவளை அறையில் கொண்டு விட்டு விட்டு.. நேராகத் தாயிடம் தான் போய் நின்றான்.. சிறிது நேரத்தில் சுமியும் அவர்களுடன் இணைந்து கொள்ள காரசாரமான விவாதம் மூவருக்கும் இடையில்..

இறுதியில் அறிந்து கொண்ட விடயத்தில் இவன் தான் இறுகிப் போனான்.. எங்கோ தான் தோற்றுப் போன உணர்வு அவனுள்.. அதைத் தாங்க முடியாது இங்கே வந்தவன் தான்..  இப்போது மதிய உணவு நேரமும் கடந்திருந்தது.. வந்ததிலிருந்து இதே போசில்  தான் படுத்திருந்தான்.. அன்று தோப்பில் வேலையும் ஏதும் இல்லையென்பதால் எந்த தொந்தரவும் இருக்கவில்லை அவனுக்கு..

அது எப்படி என்பது போல் ஒரு வண்டிச் சத்தம் அவன் காதில் கேட்டது.. பிரபா தான் வருகிறான் என்று தெரிந்து கொண்டவன் பெரு மூச்சோடே எழுந்து அமர்ந்தான்..

பிரபா பைக்கை மர நிழலில் நிறுத்தி விட்டு கையில் சாப்பாட்டு கூடையுடன் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்..

“ஏன்டா உனக்குத் தான் கல்யாணம் ஆயிடுச்சே.. இன்னும் ஏன்டா  நான் தான் உன் பொண்டாட்டிங்குற மாறி உனக்கு  சோறு சுமக்குற வேலையை எனக்கே தர? டைமுக்கு வீட்டுக்கு போய் சாப்பிட மாட்டியா?” என்று கடிந்து கொண்டே அவனுக்கு உணவு எடுத்து வைக்க ஆரம்பிக்க, 

அவன் புலம்பலை எல்லாம் கண்டுகொள்ளாத சர்வா கை கழுவி வந்தவன் அவன் உண்டு விட்டானா என்று கேட்டு விட்டு பசித்த வயிற்றுக்கு அவன் வைத்த உணவை உண்டு முடித்தான்..

அவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்திருந்தான் பிரபா.. அவன் உண்டு முடித்து கை கழுவி வரவே “நான் சாப்பிட்டேனானு கேட்டியே, உங்க வீட்ல உன்ன நம்பி ஒரு பொண்ணு இன்னைக்கு வந்திச்சே.. அது சாப்பிட்டுச்சான்னு தெரிஞ்சிக்கிட்டியா?” புருவமுயர்த்தி 

அவன் கேட்ட கேள்வியில் இரைப்பையில் இறங்கிய உணவு தொண்டையில் வந்து சிக்கிக் கொண்டது சர்வாவுக்கு.. இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“அவளை வீட்டில தான விட்டிருக்கேன்.. அப்றம் என்ன விசாரிச்சுக்கிட்டு?” என்றான் அலட்சியம் போல.. (ரைட்டு.. நல்லா இருந்தவன் மனச கெடுக்கன்னே அவன் வீட்டு சாத்தான்கள் என்னவோ வேதம் ஓதி விட்டிடுச்சுங்க..)

“பாரேன்.. உனக்கிருக்க இந்த அறிவு அந்த பொண்ணுக்கு சுத்தமாவே இல்ல.. புருஷன் வெளில தான போயிருக்கான், எங்கயாச்சும் ஹோட்டல்ல சாப்பிட்டிருப்பான்னு நெனச்சு அப்பிடியே விடாம என் நம்பரை கோமதி அக்காக்கிட்ட வாங்கி வீட்டுக்கு வர சொல்லி, உனக்கு சாப்பாடுலாம் கட்டித் தந்திச்சு.. அதை வக்கணையா முழுங்கிட்டு உன் வாய் எப்டிலாம் பேசுது பாரு. நீயெப்போடா சர்வா இப்டி மாறிப் போன?” அதிசயம் போல் அவன் கேட்டு நிற்க,

அதற்கு அவனிடம் பதிலில்லை.. ஆனால் ஆதியின் செயலில்

மனதின் எங்கோ ஒரு மூலையில் பரவிய இதம் அவன் மூளையை எட்டவில்லையாதலால் அவன் அதை உணரவுமில்லை..

அவன் அமைதியில் பிரபா கடுப்பானவன், 

“சொந்தக்காரங்க கல்யாணம்ன்னு போய் உன் கல்யாணத்தை முடிச்சு வந்தியே, அந்தக் கதையையாவது சொல்லு.. இவளோ தூரம் உன்னைத் தேடி வந்ததுக்கு அதுவாவது பிரயோஜனமா இருந்துட்டுப் போகட்டும்..” என்று விட்டு அவன் எதிரில் கதை கேட்க வசதியாக சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான்..

அவன் கதை என்றதில் அவனை முறைத்தாலும் நண்பனிடம் சொல்ல மறுக்கவில்லை சர்வா.. 

அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு வந்த நாயகி, மற்றும் அவர் கணவனால்  சர்வா எதிர் பார்த்த பிரச்சனை எதுவும் கிளம்பவில்லை.. மாறாக மறு நாள் மாலை அவர்கள் மகன் அபியிற்கு பெண் அமைந்து விட்டதாகவும் இன்னும் இரு வாரங்களில் திருமணம் என்ற செய்தியும் தான் கிடைத்தது..

அதில் அவனுக்கும் சந்தோசமே.. இவர்கள் நம் வீட்டுப் பிரச்சனையை ஆராயவில்லையென்று.. அதனால் அந்தத் திருமணத்தைப் பற்றி எதையும் விசாரிக்காமல் அப்படியேயும் விட்டு விட்டான்.. 

ஆனால் சுமி தான் அது என்ன? எப்படி? என்று தாயைப் போட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள்.. அவளால் அதை அவ்வளவு சீக்கிரம்

அவள் அண்ணனைப் போல் சாதாரணமாக எண்ணி விட முடியவில்லை.. காரணம் தாயின் முகத்தில் தெரிந்த எதையோ சாதித்து விட்டோம் என்ற பாவம் அவளை அது குறித்து ஆராயும் படி தூண்டியது..

தாயின் தற்கொலை முயற்சியின் பின் பரணியும் சென்னை சென்று விட, அண்ணனிடம் தாய் என்ன சொன்னாரோ தெரியாது அவனும் தற்காலிகமாக அவள் திருமணப் பேச்சை எடுக்காதிருந்தான்.. தாயிடம் தன் திருமண விஷயத்தை ஒப்படைத்து விட்டு இனி அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இவளுக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை.. வீட்டில் செய்வதற்கு வேலையும் இல்லாதிருக்கவே இப்படி அடுத்தவர் விஷயத்தை நோண்டிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள்..

அவளின் நச்சு தாங்காமல் விசாலம் உண்மையை சொல்லியிருந்தார்..

“அபிக்கு பார்த்த பொண்ணு யாரு தெரியுமா?” அவர் கண்கள் மின்னக் கேட்கவே,

இவளும் ஆர்வம் தாங்காது “யாரும்மா?” என்றாள்..

“எல்லாம் உனக்கு வரப்போற நாத்தனார் தான்..” அசட்டையாக சொன்னார் விசாலம்..

“என்னம்மா சொல்றீங்க ஆதியா பொண்ணு? ஆனா ஏன் அவளை இப்டி நம்ம சொந்தத்துக்குள்ள கொண்டு வரீங்க? அவ யாரையோ கட்டிட்டு எங்கயோ வாழ்ந்திட்டு போய் இருப்பாளே.. எதுக்கு அவளை இப்பிடி நமக்கு நெருக்கமா கொண்டு வந்துருக்கீங்க? இதைத் தான் இவளோ நாள் ப்ளான் பண்ணிங்களா? உங்களை என்னம்மோன்னு நெனச்சேன்.. பொங்கம்மா..” என்று வெகுவாய் சலித்துக் கொண்டாள்..

“அடியே சுமி உனக்கு இன்னும் உங்கம்மா பத்தி தெரிலன்னு சொல்லுடி.. உங்கண்ணன் உனக்கு எப்படியும் கல்யாணம் பண்ணி வச்சிடுவான்.. ஆனா அதுக்கப்பறம்???” அவர் கேள்வியாக நிறுத்த அவளும் எதுவோ புரிவது போல் அவரைப் பார்த்தாள்.. 

கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை வரவிடாம பண்ண சாகிறளவுத்துக்கு போனவ, கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை வாழ விடாம பண்ண எவ்வளவு தூரம் வேணாலும் போக மாட்டா? அவ வேற யாரையோ கட்டிக்கிட்டு வேற யாரோவா நமக்கு இருந்தா அவளை நாம என்ன பண்ண முடியும்? ஒய்யாரமா அவ பொறந்த வீட்டுக்கு வரும் போதலாம் அவளுக்கு நீ சேவை செஞ்சிட்டு இருக்கணுமா என்ன?

இவளைன்னு இல்லாம அங்க இருக்க எல்லார் பத்தியும் விசாரிச்சேன்.. மத்தவங்க எல்லாம் ஓகே.. உன் மாமியார் தான் கொஞ்சம் அடாவடியான ஆளு போல..(உன்னை விட இல்லமா..) முதல் மருமகளை இன்னுமே அடிமை மாதிரி தான் வச்சிருக்காங்களாம்.. என்ன தான் நீ சென்னைலயே தனிக்குடித்தனம் இருந்தாலும் உன் புகுந்த வீடு இது தானே..

அதான் அங்க உனக்கு ஒரு உயர்ந்த இடம் எப்பவுமே இருக்கணும்.. அதே நேரம் உன் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. இதெல்லாம் நடக்கணும்ன்னா அவங்க பிடி நம்மக்கிட்ட இருக்கணும்.. இங்க பிரச்சனையா இருக்கறதே அந்தப் பிடாரி ஆதி தானே.. அதான் அந்த பிரச்சனையவே நம்ம பிடிக்குள்ள வச்சிருந்தா?” திரைப் பட வில்லி ரேஞ்சுக்கு புருவம் உயர்த்தி அவர் கேட்க, தாயை வியந்து போய் பார்த்தாள் சுமி..

“ம்மாமாமா.. எப்பிடிம்மா இப்பிடி? நீ ஏம்மா அரசியலுக்கு எல்லாம் வரல.? பிளானிங்ல சும்மா பிச்சு உதர்ற போ..”

“இப்போ தான் எனக்கு அறிவே  இல்லைன்னு பேசின?”

“அது அப்போ.. இது இப்போ.. அது இருக்கட்டும், நீ முழுசா சொல்லி முடிம்மா. ஆர்வம் தாங்கவே இல்ல..” என்று பரபரத்தாள்..

“ம்ம்.. இருடி பறக்காத.. அன்னைக்கு உன்கிட்ட அவங்க யார் என்னன்னு விசாரிச்சேன் இல்ல? அதை வச்சி அந்த பக்கம் நமக்கு உதவி பண்ண கூடிய மாறி நம்ம சொந்தம் யாரும் இருக்காங்களான்னு யோசிச்சேன்.. சட்டுன்னு உங்க அப்பா சிநேகிதம் பால்ராஜ் அண்ணன் பொண்டாட்டி சரசு நினைவு தான் வந்துச்சு..

அந்த அண்ணன் கொஞ்சம் நீக்கு போக்கான ஆளு.. ஆனா பொண்டாட்டி ஒரு கோக்கு மாக்கு..

கொஞ்சம் கிள்ளி விட்டா போதும் ஓயாம பாடுற ரேடியோ மாறி ஊர்க்கதை எல்லாத்தையும் ஒப்பிச்சிடுவா..

அங்க அவங்க பக்கத்துல துர்க்கை அம்மன் கோவில் ஒன்னு இருக்கு.. அவ பொண்ணு கல்யாணத்துக்கு தோஷம் போக வேண்டி ஒவ்வொரு செவ்வாய் கிழமையும்  ராகு பூஜைக்கு தொடர்ந்து போறான்னு உங்கப்பாகிட்ட அந்த அண்ணன் சொன்னதா இவர் என்கிட்ட சொன்ன நியாபாகம்.. அதான் அவளை அப்படியே கோயில்ல எதர்ச்சியா பார்க்கிற மாதிரி சந்திச்சு உங்க அண்ணன் கோழிப் பண்ணை ஆரம்பிக்கப் போறதா பிளான்ல இருக்கான்னு சொல்லவே அங்க உன் மாமனார் பண்ணை ரொம்ப பிரபல்யமாமே?..”

“ஆமாம் மா பரணி சொல்லிருக்கான்.. அவன் தான் பிசினஸ் ஐடியாலாம் குடுப்பான்.. அதுனால தான் அது ரொம்ப ஃபேமஸ்.. அவங்க அண்ணன் இவன் சொல்றதை செயல் படுத்திறது மட்டும் தானாம்..” (நீ பார்த்த?) என்று அவள் பெருமை பீற்றினாள்..

“ம்ம்.. நல்லது டி.. என்ன தான் தனியா வேலைக்குப் போனாலும் , குடும்பத் தொழில்ல கவனம் வச்சிருக்கணும்.. இல்லன்னா பங்குக்கு போனா நீ என்ன பண்ணேன்னு கேட்டு நைசா ஒதுக்கப் பார்ப்பாங்க.. மாப்பிள்ளை‌ கெட்டி தான்..” என்று அந்த ஊதாரிக்கு புகழாரம் சூட்டினார்..

“அப்புறம் என்ன? நான் கோழின்னு ஆரம்பிச்சதும் அவ அவங்க வீட்டு கதையெல்லாம் எடுத்து விட்டா.. அந்தம்மா வேற அதான் உன் மாமியார் தன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி ரெண்டு நாள் முன்ன தான் சரசு நாத்தனார் புருசன்கிட்ட ஜாதகம் குடுத்துச்சாம்.. சும்மா விசாரிக்கலாம்ன்னு போன எனக்கு லட்டு மாதிரி வாய்ப்பு.. விட மனசு வருமா?

அக்கா அபிக்கு பொண்ணு பார்க்கிற விசயமும் அதே நேரம் எனக்கு நியாபகம் வரவே, அந்த விசயத்த சும்மா சொல்ற மாதிரி சொல்லி  அவ நாத்தனார் புருஷங்கிட்ட அபிக்கு

பொண்ணு இருந்தா சொல்ல சொன்னேன்.. அவளும் தரகு பணத்துல வர கமிஷனுக்கு ஆசைப்பட்டு அக்கா நம்பர் வாங்கிகிட்டா.. நம்பர குடுத்திட்டு நான் கமுக்கமா வந்திட்டேன்..

எல்லாம் சரியாகி இந்த சம்மந்தம் கூடி வரணும்னு நான் வேண்டிக்காத தெய்வம் இல்லடி.. அந்த வேண்டுதல் எல்லாம் பலிச்சு இப்போ கல்யாணம் வரை வந்துடுச்சு.. அதை சீக்கிரம் ஏற்பாடு பண்ற மாதிரி அக்காவ பேசி சம்மதிக்க வச்சதே நான் தான்.. உன் கல்யாணத்துக்கு முன்னாடி அவ கல்யாணம் நடந்தா அவ, அவ வாழ்கையை பார்ப்பாளா? இல்ல, உன் வாழ்க்கைக்கு குறுக்க நிப்பாளா? அத்தோட இனி அவ உன் வாழ்க்கைல வாலாட்டினா அக்காவை வச்சே அவ வாலை ஒட்ட நறுக்கிடலாம்..” 

“ப்ப்பா!.. எவ்வ்வ்ளோ பெரிய ஆளு நீ? இப்போ தான்மா எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு.. பரணி கூட என் கல்யாணம் கண்டிப்பா நடந்திடும்ன்னு நம்பிக்கையே இப்போ தான் வந்திருக்கு.. லவ் யூ ம்மா..” என்றவள் தாயின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி விட்டு உள்ளே ஓடி விட்டாள்..

சுமியின் முகத்தில் முழுமையான சந்தோசத்தை பார்த்த பின்னே விசாலத்துக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அன்று அவள் தற்கொலை பண்ணவா? என்று கேட்டதில் இருந்தே ஆவி துடிக்க அலைந்தவர், இன்றைய அவளின் துள்ளலில் ,

இதற்காக , இவளின் சந்தோசத்துக்காக எதுவும் செய்யலாம் என எண்ணிக் கொண்டார்.. அதற்காக எதுவுமே அறியாத ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கையில் அமிலத்தைப் பாய்ச்ச துணிந்தது எப்படி சரியாகும்? 

                     *****************

இங்கே இவர் மகளின் மகிழ்ச்சியில் தானும் திளைத்திருக்க அங்கே ஒருத்தி தாயின் சொற்களில் மனம் வெறுத்துப் போய் தனக்குள் ஒடுங்கியிருந்தாள்..

அன்று நேத்ராவிடம் ஆதிக்கு வேலை கற்றுத் தர சொன்ன ராஜி அதை விளையாட்டுக்கு சொல்லவில்லை.. அவர் வெளியே சென்று வந்ததே அவளுக்கு திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தான்.. ஹாஸ்பிடலில் இருந்து வந்தவர் வீட்டிலிருந்தே தன் தோழி தயா  மூலமாக அவள்  கணவரிடம் கமுக்கமாக போனிலேயே மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்திருக்க, அவர் நேரத்திற்கு நல்ல சம்மந்தம் அமைந்து விடவும், ஜாதகம் எல்லாம் பார்த்து விட்டு  மூத்த மகன் மற்றும் கணவன் வரக் காத்திருந்தார்..

இளைய மகன் சென்னையில் ஒரு பெண்ணை விரும்புவதாகக் கூறியிருந்தானே அன்றி யார் எவரென்று சொல்லவில்லை.. சொல்லவில்லையென்பதை விட அதைக் கேட்கக் கூட ராஜி விரும்பவில்லை..

தன் பிடிவாதத்தில் நின்றவருக்கு இப்போது மகளுக்கு வந்த சம்மந்தம் அவர்கள் வழியானது என்று தெரியாமல் போனது.. தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ தெரியாது? ஒரு வேளை விசாலம் மாதிரி யோசித்து சுமியைத் தன் பிடியில் வைத்திருக்க எண்ணி கண்டும் காணாதும் கடந்திருப்பாரோ என்னவோ..

ஆனால் இப்போது ராஜி தன் பிடிவாதத்தை மகளின் வாழ்விலும் புகுத்தி அவளையும் தெருவுக்கு இழுத்து விட்டார்.. பரணி கேட்டதும் ஆம் என்றிருந்தால் ஆதி பல இன்னல்களில் இருந்து தப்பித்து இருப்பாள்?.. ஆனால் விதி தான் வலியதாயிற்றே. அவள் வாழ்வை அவள் வாழவே அச்சமுறும்நி லையில் நிறுத்தி தன் கைப் பாவையாக அவளை ஒற்றை நூலில் ஆட்டி வைத்தது..

தொடரும்…

Advertisement