Advertisement

அத்தியாயம் 07

 

அந்த வீடே அவ்வளவு அமைதியில் ஆழ்ந்திருக்க நேத்ரா தான் அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.. உடன் அவளின் தாயும் அவளுடன் கூட ஓடிக் கொண்டிருந்தார் மகளுக்கு உதவிக்கென.. சவுண்டு பார்ட்டிகள் விசாலம், ராஜி இருவரும் மொத்தமாய் அமைதியாகி அமர்ந்து விட்டார்கள்.. இல்லை அவர்கள் வாயே திறக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டுமோ?..

ஒவ்வொருத்தரும் ஒரு மூலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் முடங்கிப் போயிருக்க, எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த நேத்ரா , மாமியாரை இன்னுமே மிகுந்த பாசத்தில்(?) பார்த்திருந்தாள்.. செய்வது எல்லாம் செய்து விட்டு இப்போது எனக்கு என்ன என்பது போல் பொறுப்பின்றி அமர்ந்திருந்தவரைப் பாசமாகப் பார்க்க இரு கண்கள் போதவில்லை நேத்ராவுக்கு.. 

இப்போது அதற்கு நேரமில்லை என்பதால் கயலை ஆதியின் அறையில் அவளுடன் இருக்க சொல்லி விட்டவள், பொறுப்பான மருமகளாக நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டாள்.. மண்டபத்தில் இருந்து அவள் தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறாள்.. இப்போதும் கணவனிடம் மெதுவான குரலில் ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டே மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள்..

அவனும் எல்லாம் கேட்டு விட்டு வெளியே கிளம்பியவன் , பைக் எடுக்க வரும் போது அதில் கையூன்றி  நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்த சர்வாவைக் கண்டவனுக்கு என்ன சொல்லி அழைப்பதென்ற குழப்பம் மேலோங்க அமைதியாக நின்று விட்டான்.. பேசி முடித்து விட்டு அவனாக விலகட்டும் என்று.. 

சர்வா தன் பின்னே நிழல் அசைவதை உணர்ந்து பேசிக் கொண்டே திரும்பியவன் அன்பரசன் நிற்கவே, அவன் பார்வை தன் கையிலும் பைக்கிலும் மாறி மாறி வர புரிந்து கொண்டவன் பைக்கிலிருந்து கையெடுத்துக் கொண்டான்..

அன்பும் அவனிடம் தலையசைத்து விட்டு பைக்கை உயிர்ப்பித்துக் கொண்டு மனைவி சொன்னவைகளைச் செய்யப் புறப்பட்டான்.. சர்வாவும் பெரு மூச்சுடன் தன் பேச்சைத் தொடர்ந்தான்..

நேத்ராவின் தாய் பார்வதி ஜுஸ் எடுத்து வந்தவர், எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டு வந்தார்.. இறுதியாக விசாலம் அருகில் கொண்டு செல்லவே அவர் பார்த்த பார்வையில் கண்ணாடி குவளை உடையாத குறை தான்.. சாதுவான பார்வதிக்கு அவர் பார்வையில் நடுங்கினாலும் அவர் முன்னிருந்த டீபாயில் ஜூஸை வைத்து விட்டவர் மற்றவர்களுக்கும் கொடுத்து விட்டு மகளிடம் போய் நின்று விட்டார்..

இங்கு நடக்கும் எந்த நிகழ்விலும் பாதிக்கப்படாது சுமி பரணியை முறைத்துக் கொண்டே நின்றிருக்க, அவன் நான் என்ன செய்தேன் என்பது போல் பார்த்திருந்தான்.. ஆதி அறைக்கு சென்ற நேத்ரா அவளைப் புடவையை மாற்றாது முகம் மட்டும் கழுவி , முடி திருத்தி ஹாலுக்கு வருமாறு சொல்ல, அவளும் பொம்மையாய் எழுந்து பாத்ரூம் சென்றாள்.. இப்பொழுது சிறிது நேரம் முன் தான் புகுந்த வீட்டுக்கு சென்று‌

விளக்கேற்றி‌ பிற சடங்குகள் முடித்து உடனே இங்கே வந்தும் விட்டிருந்தாள்.

முகத்தைத் துடைத்த படி பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு குனிந்த படியே வெளியே வந்தவள், கீழே தன் முன்னே பட்டு வேஷ்டியின் நுனி தெரியவே அதன் வழியே

பார்வையை உயர்த்தியவள் முன்னே காலையே‌ அவளுக்கு அறிமுகமாகி தாலி கட்டிக் கணவன் என்ற பதவி ஏற்ற சர்வா அவளையே பார்த்தபடி எதிரில் நின்றிருப்பதைக் கண்டாள்..

உண்மையில் அவளுக்கு இப்போது எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியாது  முழித்து நின்றாள் அவள்.. சர்வா அவளை எதுவும் சொல்லாது ஆழமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவளைத் தாண்டி பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே சென்று கதவடைத்தான்..

அப்போது தான் அவளுக்கு மூச்சின் லயம் சீராக வந்தது.. இப்போது அவள் இருக்கும் நிலையில் அவனும் எதுவும் பேசி விட்டால் மனது விட்டுப் போய்விடுவாள் என்பதை அவளே அறிவாள்..

உள்ளே சென்ற சார்வாவுக்கும் அவள் நிலை புரியவே செய்தது.. நேத்ரா வந்து பரணியின் அறையில் தன்னை ஃப்ரெஷ் ஆகி வரச் சொல்லி சொல்லவே, அவனுக்கும் சற்று முகம் கழுவி தன்னைப் புத்துணர்வாக்கிக் கொண்டால் நன்றாயிருக்கும் எனத் தோன்ற உள்ளே வந்தவன்  

பரணி அறைக்கு செல்ல மனம் ஒப்பவில்லை.. அவன் முதலிலே ஆதி சென்ற அறையைப் பார்த்திருந்தான் ஆகையால், வெளியே இருந்த யாரையும் கண்டு கொள்ளாது அவள் அறையினுள்ளே நுழைந்து விட்டான்.. அவன் மனைவி அறை தானே என்ற சொந்த உணர்வாக இருக்கலாம்..

நேத்ரா சொல்லி தன் அறைக்கு அவனை அழைத்து செல்ல அவனை நெருங்கிய பரணியும் இவன் செயலில் அசந்து போய் நின்று விட்டான்.. சுற்றி உறவுகள் இவ்வளவு பேர் இருக்க , காலையே திருமணம் செய்தவன், என்ன சொல்லுவார்கள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி யாரையும் சட்டை செய்யாது சர்வ சாதரணமாக இப்படி மனைவி அறைக்குள் நுழைகிறானே என்று.. சுமி இவனைப் பற்றி சொன்னது எல்லாம் பில்ட்டப் இல்லை.. உண்மை தான் போல என்று எண்ணிக் கொண்டான்..

சுமிக்கும் விசாலத்துக்கும் தான் முகம் செத்துப் போனது.. விசாலத்துக்கு ஏற்கனவே தான் ஒன்று நினைத்திருக்க அது நடக்காது தன்னை மீறி நடந்த நிகழ்வுகளில் உள்ளே எரிமலை ஒன்று கொதித்துக் கொண்டிருக்க, இப்போது இது எரிமலையில் எண்ணெய்யைப் பரலோடு ஊற்றியது போலானது..

அருணாச்சலத்துக்கு அப்படி எந்த கவலையும் இல்லை, சொல்லப்போனால் மிக்க மகிழ்ச்சியே.. எங்கே மகன் அவசரத்தில் முடிவெடுத்து விட்டு வாழாது போய் விடுவானோ என்று பயந்தவர் , இப்போது அவன் வாழ்ந்து கொள்வான் என்று நம்பினார்.. (விட வேண்டுமே)

உள்ளே ஆதி , அவனை விட்டு விட்டு தனியே வெளியில் வருவது நாகரீகமாக

இருக்காது என்று அவன் வெளியே வரும் வரை காத்திருந்தாள்..

வெளியில் வந்த சர்வா அவள் அங்கிருப்பதைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் துடைத்து விட்டு பெட்டில் போட்டிருந்த துண்டையே எடுத்து துடைத்துக் கொள்ள இவளுக்கு தான் சங்கடமானது.. அதில் தலையைக் குனிந்து கொண்டாள்.. 

துடைத்து முடித்தவன் அவளைப் பார்த்தவாறே டவலை அங்கிருந்த மேசையின் முன்னிருந்த மரச்சேரில் விரித்து விட்டான்.. அவன் செயல்களைப் பாராது பார்த்திருந்தவள், நாக்கைக் கடித்துக் கொண்டாள்..

தாயிடமும் அண்ணியிடமும் எத்தனை முறை திட்டு வாங்கினாலும் அதை சமயத்தில் மறந்து இப்படி ஈர டவலை பெட்டில் போட்டு விடுவாள்.. இவனுக்கும் இது பிடிக்கவில்லை போல என அவன் பார்வையிலே புரிந்து கொண்டவள் இனி மேல் இன்னுமே கவனமாக இருக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.. 

உனதென்றும் எனதென்றும் பிரிவில்லையென்று சர்வாவும் 

உனக்குப் பிடிக்காத செயல் செய்யாதிருப்பேன் என்று ஆதியும் அவர்களே அறியாது மனமெனும் மாளிகையின் உள் தங்கள் திருமண வாழ்வின் முதல் அடியை எடுத்து வைத்தனர்..  அங்கு இயல்பாகவே கணவன் மனைவி பந்தமொன்று உருவானது..

அவன் அறையில் இருந்து வெளியேற கதவு நோக்கி நடக்கவே, ஆதியும் அவன் அடி பற்றி தானும் வெளியேறினாள்..

நேத்ரா தான் உள்ளே இவன் சென்றதில் இருந்து வெளியே வரும் வரை டென்ஷனாகக் காத்திருந்தாள்.. ஆதியை பாத்ரூம் அனுப்பி வைத்தவள், தன்னோடே மகளையும் அழைத்து வந்திருந்தாள்.. எப்படியும் ஆதி வெளியில் வர வேண்டும் தானே என.. ஆனால் இப்படி சர்வா அவள் அறைக்குச் செல்வானென அவள் எதிர் பார்க்கவில்லை.. இவனை தன் அறையில் எதிர்பாராமல் ஆதி அச்சத்தில் எதுவும் செய்யப் போய் எங்கே  சர்வா ஏதேனும் அவள் மனம் நோக சொல்லி விடுவானோ என்று பயந்திருந்தாள்..

அன்று நேத்ரா எந்த வாயில் சொன்னாளோ கலவரக் கல்யாணம் என்று? இன்று காலை அப்படி ஒரு கலவரக் கல்யாணம் தான் நடந்திருந்தது.. என்ன ஒன்று பரணிக்கு நடக்கும் என்று நேத்ரா சொல்லியிருக்க அது ஆதிக்கு நடந்திருந்தது..

அவள் யோசனை இப்படி இருக்க, அவளை அதிகம் காக்க வைக்காமல் சிறிது நேரத்தில் இருவரும் வெளியே வந்திருந்தனர்.. நேத்ரா ஆதியின் முகத்தைப் பார்த்தவள் அது சாதாரணமாக இருக்கவே அவ்வளவு நிம்மதி அடைந்தாள்..

இருவரையும் எதிர் கொண்டு வரவேற்றவள் அமர வைத்து விட்டு பால் பழம் கொடுத்தாள்..

அதற்குள் கணவனும் வந்திருக்கவே வம்படியாக அவனை சர்வா பக்கம் நிறுத்தியிருந்தாள் நேத்ரா.. அவனும் ஒன்றும் சொல்லாது, ஊமையாக அவனருகே நின்றிருந்தான்.. எந்த பிகுவும், எந்தப் பிசிறும் இல்லாது சடங்கு இனிதே நடந்து முடிந்தது.. பலரின் மௌன ஆசியிலும்.. சிலரின் மறைக்கப்பட்ட வெறுப்பிலும்..

சிறிது நேரத்திலேயே தான்

அருகே வந்து விட்டதாக பிரபாவிடம் இருந்து மெசேஜ் வந்து சேர, சர்வா..

“டைம் ஆச்சு கிளம்பணும்..” என்றிருந்தான் நேத்ராவைப் பார்த்து.. அவள் தான் எல்லாமே முன் நின்று செய்திருக்க அவளிடமே சொன்னான்..

அவளுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை.. கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.. ஆதியைப் பார்த்தால் அழுது விடுபவள் போல் நின்றிருந்தாள்.. இவளை இப்படியே அங்கே அனுப்பி வைத்தால் அழுதழுதே காரியத்தை சொதப்பி வைப்பாள் என்பது நிச்சயம் என்று புரிந்த நேத்ரா, அவனிடம் எப்படி சொல்வதென்று தெரியாமலும் சொன்னால் ஏற்றுக் கொள்வானா என்றும் யோசித்துக் கொண்டே உதவிக்கு சர்வாவின் தந்தையைப் பார்த்தாள்.. அவரொருவர் தான் தணிகைவேலுடன் ஓரளவு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்..

அவள் அவ்வாறு நின்றிருக்கவே எல்லோரையும் ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்த்தான்.. அவள் பார்வை தன் தந்தையிடம் இருக்கவே 

“என்னப்பா?” என்றான், இப்போது தந்தையை நோக்கி .

“இல்லை சர்வா இன்னைக்கு இங்க தான் தங்கணுமாம்.. இப்போ தான் சம்மந்தி இதப் பத்தி சொன்னாரு..” என்று தணிகைவேலைப் பார்க்க அவரும் தன் தவிப்பை முகத்தில் ஏந்தி மருமகனைப் பார்த்திருந்தார்..

“ஊஃப்..” என பின் கழுத்தை நீவிக் கொண்டவன் ஒன்றுமே சொல்லாமல் மீண்டும் ஆதி அறைக்குள்ளே நுழைந்து கொண்டான்.. இப்போது அவன் சம்மதித்தானா? இல்லையா? என்று இவர்கள் தான் குழம்பிப் போனார்கள்..

அதற்கு அடுத்த நிமிடமே பதில் வந்தது பிரபா மூலம்.. சர்வா தான் தங்களைப் பிக்கப் செய்ய அவனை அழைத்திருந்தான்.. இப்போது அவனுக்கு தேவை அமைதி, தனிமை.. அதைப் புரிந்து அளிக்கக் கூடியவன் நண்பன் மட்டுமே என்பதால் வீட்டில் தன் வீட்டினருடன் மனைவியையும் இறக்கி விட்டு நண்பனுடன் சென்று மாந்தோப்பில் சிறிது தனிமையில் இருக்கலாம் என்று எண்ணியிருக்க, இப்போது இங்கு தங்க வேண்டிய சூழ்நிலை.. 

அதனால் பிரபாவிடம் வீட்டினரை மட்டும் அழைத்து செல்லுமாறு சொல்லியிருந்தான்.. அவனும் சரியான நேரம் வந்து விடவே,

உள்ளே இருந்தே தந்தைக்கு ஃபோன் செய்து விவரம் கூறியவன், அவர்களை அனுப்பி வைக்கக் கூட வெளியே வரவில்லை.. தாயிடம் பேசக் கூட இல்லை.. அதில் விசாலத்துக்கு ஏக பயம் பிடித்துக் கொண்டது.. எங்கே தன் மேல் உள்ள கோபத்தில் மகன் மாமியார் வீட்டுப் பக்கம் சாய்ந்து விடுவானோ என்று.. 

இருந்தும் இதற்கு மேல் இங்கே இருந்து எதுவும் ரசாபாசமாகி தன் மதிப்பைக் குறைத்துக் கொள்ள விரும்பாமல் அமைதியாக கிளம்பி சென்று விட்டார்..

சுமிக்கும் அண்ணனின் போக்கு பீதியைக் கிளப்பியிருக்க அதற்கும் பரணியையே முறைத்தவாறு தானும் வீட்டினருடன் கிளம்பி விட்டாள்..

தொடரும்…..

Advertisement