Advertisement

அத்தியாயம் 06

அப்போது கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நேத்ராவின் தாய் வீட்டில் இருந்து வந்திருந்த கயல் தாயின் அதட்டலில் ஹாலில் தன் பள்ளியில் கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை எடுத்து வைத்து அமர்ந்திருந்தாள்..

அவள் குவித்து வைத்திருந்த புத்தகங்களைப் பார்க்கவே பரிதாபமாகவிருக்க, அவள் கேளாது தானாகவே உதவிக்கு வந்தாள் ஆதிரா..

அத்தையும் மருமகளும் தங்களுக்குள் வளவளத்தபடி வீட்டுப் பாடம் செய்வதைப் பார்த்த நேத்ரா, இன்னும் சிறிது நேரத்தில் கணவனும் மாமனாரும் வந்து விடுவார்கள் என்பதால் மாலை சிற்றுண்டி செய்து எடுத்து வர சமையலறை சென்றவள், வேலைகளில் மூழ்கினாள்..

சற்று நேரத்தில் வெளியே சென்றிருந்த தாய் உள்ளே நுழைவதைக் கண்ட ஆதி, எழுந்து சென்றவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அவளைப் பார்த்துக் கொண்டே வாங்கியவர் , அதன் பின்னும் அவளையே பார்க்க அவர் பார்வை புரியாது ஆதியும் பார்த்திருந்தாள்..

அதற்குள் மாமியார் வந்ததை அறிந்து தயாரித்த டீ,  வடையையை அவரோடு சேர்த்து மகள், ஆதிக்கும் வைத்துக் கொடுத்தாள் நேத்ரா..

அப்போதும் அவர் ஆதியையே பார்த்திருக்க, அதை நேத்ராவும் கவனித்து விட்டாள். அவள் ஆதியைக் கேள்வியாகப் பார்க்க அவளும் இவளை நோக்கி குழப்ப பார்வை பார்த்தாள்.. அவளும் தன்னைப் போலவே எதுவும் அறியாது உள்ளாள் என்று புரிந்து கொண்டவளுக்கு பயமே உண்டானது.. எங்கே மீண்டும் மாத்திரை மருத்துவமனை என்று தொடங்கி விடுவாரோ என்று.. அதே கலக்கம் தான் ஆதிக்கும்..

டீயைக் குடித்து வடையையும் உண்டு எழுந்த ராஜி, நேத்ராவை நோக்கி, “இனி நீ வேலை பார்க்கறப்போ இவளுக்கும் எல்லாம் பழக்கி விடு.. இவளுக்கும் கல்யாண வயசாகிடுச்சுல.. போற இடத்துல பொழைக்கத் தெரியாம, இது தான் உங்க வளர்ப்பான்னு ஒரு சொல் கேட்டுடக் கூடாது.. அதுனால ஒரு குடும்பத்துல எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடு..

சொல்லியவர் மகளை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு சென்று விட்டார்..

நேத்ராக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வதெனத் தெரியவில்லை.. மகன் திருமணம் செய்து வையுங்கள் என்று அடம் பிடித்துக் கொண்டு இருக்க இவரென்னவென்றால், கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத இவளுக்கு திருமணம் என்கிறாரே.. அதுவும் ஹாஸ்பிடலில் இருந்து வந்த இந்த ஐந்து நாட்களும் அமைதியாயிருந்தவர் கடந்த இரண்டு நாட்கள் கடும் யோசனையில் இருந்து விட்டு, இன்று இப்படிக் கூறினால் யோசிக்க வேண்டும் தானே.. அதுவும் ராஜி போன்றவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாதே..

இது எல்லாத்தையும் விட அவளுக்கு அதிர்ச்சி ஆதிக்கு தன்னை எல்லாம் கற்றுக் கொடுக்க சொன்னது தான்.. வெளியே போய் வீட்டுக்குத் திரும்பியது தன் மாமியாரா இல்லை எதுவும் டபுள் ஆக்ஷனா? என்று சந்தேகமாக இருந்தது.. அவ்வளவு சீக்கிரம் அவர் கிரீடம் கீழிறங்காதே.. என்ற எண்ணம் விதைத்த சந்தேகம் அது..

திருமணமாகி பத்து வருடங்கள் கடந்து அவள் மகளுக்கே ஆறு வயது இருந்தும் , மாமியாராக இருக்க முக்கிய தகுதியான ‘மருமகள் என்ன செய்தாலும் குறை கூறுதல்’ என்ற தன் கடமையை தவறாது ஆற்றுபவர் ராஜி.. அவருக்கும் தெரியும் அவள் சரியாக தான் செய்கிறாள் என்று.. இருதும் மாமியார் பதவியின் மகத்துவத்தை காப்பாற்ற வேண்டுமே.. இப்படி தன் சிந்தனையில் அவள் இருக்க,

பாட்டியின் தலை மறைந்ததும், 

“ஐஐஐ அத்தைக்கு கல்யாணமா? எனக்கு  புது டிரஸ், புது செருப்பு எல்லாம் நிறையா வேணும்..” என்று கூச்சலிட்டாள் கயல்.. அவளுக்கு தெரிந்தது திருமணம் என்றால் இவை தான்..

மகளின் கூச்சலில் தான் தன்னிலை வந்து ஆதியைப் பார்க்க அவள் பீதியாய் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. விட்டால் அழுது விடும் நிலையில் இருந்த அவளைப் பார்க்கவே பாவமாக இருக்க, 

“கயல் நீ போய் ரூம்ல விளையாடு.. அத்தைக்கு கல்யாணம் நடக்கும் போது, எல்லாம் ரெண்டு ரெண்டா  உன் மாமா கிட்ட கேட்டு  வாங்கிக்கலாம்.. இப்போ சாப்டு முடிச்சேன்னா, ரூம்ல போய் விளையாடு போ.. தாயின் பேச்சில் அமைதியாகி தன் புத்தகங்களை அள்ளிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் கயல்..

அவள் சென்ற பின்னே இவளிடம் திரும்பி, 

“என்ன ஆதி இப்போ இருந்தே ட்ரெய்னிங் ஸ்டார்ட் பண்ணிடலாமா?” கண்சிமிட்டி கேட்டாள் அவள் கலக்கம் போக்க..

“அண்ணி அம்மா தான் ஏதோதோ சொல்லி என்னைப் பயங்காட்டிட்டுப் போறாங்கன்னா, நீங்களும் ஏன் இப்டிப் பேசிட்டு இருக்கிங்க? அம்மா ஏன் அண்ணி இப்டிப் பேசிட்டுப் போறாங்க?” விழி நிறைய கலக்கத்துடன் அண்ணியைப் பார்த்தாள்.  

“அட நீ வேற ஏம்மா சும்மா ..

எங்க அத்தையே நான் கல்யாணம் பண்ணி வந்து பத்து வருஷம் கழிச்சு நீ தான் இதைப் பண்ணனும்னு சொல்லி, நான் நல்ல மருமகன்னு வார்த்தைல அவார்ட் குடுத்துட்டு போறாங்க.. நீ அந்த கடமையை சரியா செய்ய விடாம முடக்கற?  எப்பிடியும் உன் கல்யாணம் முடிக்க ரெண்டு இன்னும் வருஷமிருக்கும்.. அதுக்குள்ள அத்தைகிட்ட  இன்னும் பல விருதுகள் வாங்க ஹெல்ப் பண்ணுவியா? அதை விட்டுட்டு பயம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு.. அப்டி‌ என்ன பயம் ?

என்னை விடவா கொடுமையான மாமியார் உனக்கு வரப்போறா?”

அண்ணியின் அலும்பிலும், அந்த ரெண்டு வருடம் என்றதிலும் அதுவரை இருந்த கலக்கம் மறைய, 

“விட்டா உங்க மாமியாகிட்ட விருது வாங்க என்னைப் பலி குடுத்திடுவீங்க போல.. ஆனா எங்க அம்மா எவ்ளோ பெருமையா உங்களை நல்ல மருமகன்னு சொல்லிட்டு போய்ருக்காங்க.. அப்போ கூட நீங்க எங்கம்மாவ கொடுமையான மாமியார்னு தானே சொல்றிங்க.. அப்படி ஒரு தங்கமான மாமியாருக்கு இப்படி ஒரு  மருமகள் வந்தா வாய்க்கணும்?” போலியாக அங்கலாய்த்தாள் ஆதி..

“அடிங்க… உங்கம்மா தங்கமான மாமியாரா ? மொத்தமா மரக்கழண்ட கூட்டத்தை ஒத்தையாளா மேய்க்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அதெல்லாம் அசால்ட்டா பண்ற என்னை  என்னன்னு சொல்லுவ?”

“நீங்க தங்கம் எல்லாம் இல்ல அண்ணி.. நீங்க வைரம்.. இந்த வீட்டுக்கு.. அன்பு அண்ணாக்கு , எனக்கு எல்லாருக்குமே ரொம்ப பிரீசியஸ் நீங்க..” சொன்னவள் நேத்ராவின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சி விட்டு கயலின் “அத்தை..” என்ற குரலுக்கு அவளிடம் ஓடிப் போனாள்..

அவள் செயலில் நேத்ராக்கு அவள் மீது அத்தனை வாஞ்சை.. கணவனிடம் பேசுவதைப் போலவே இவளிடமும் அவள் தாய் பற்றி அவ்வளவு வம்பிழுப்பாள்.. மற்றவர்களிடம் எல்லாம் அவள் உரையாடல் கேள்வி பதில் அவ்வளவே.. ஆனால் கணவன் போலவே தன்னைப் புரிந்து நகைச்சுவையை நகைச்சுவையாய் கடந்து செல்லும் அவள் செயலில் புரிந்துகொள்ளலாம் அவள் வெள்ளை உள்ளத்தை.. ஆதிக்கு வஞ்சம் வைத்துப் பழகத் தெரியாது.. ஒத்து வரவில்லையென்றால் ஒதுங்கி விடுவாள்.. வீட்டிலே கூட அப்படியே தான்.. ஏதேனும் வாக்குவாதம் என்றால் அந்த இடத்தில் நிற்கக் கூட மாட்டாள்..

இவளுக்குத் திருமணமா? நினைவே மலைப்பானது நேத்ராக்கு.. ஆனால் என்றானாலும் அது நடந்து தானே ஆகும். அதனால் மாமியார் சொன்னபடி அவளுக்கு சிலதைக் கற்றுக் கொடுப்பதென எண்ணிக் கொண்டாள்..

                       ********************

மாலையிலிருந்து ஒரு வித பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருந்த தாய் , அடிக்கடி வீட்டு வாயிலைப் பார்ப்பது கண்டு சுமி தான் குழம்பிப் போனாள்.. அப்பா அண்ணா ரெண்டு பேரும் தான் வந்துட்டாங்களே.. இன்னும் யார் வரக் காத்திருக்கிறார் இவரென்று.. நீண்ட நேரம் அவர் செய்கை தொடரவே பொறுமை இழந்தவள், 

“அம்மா இப்போ எந்த விருந்தாளி வரப்போறான்னு வாசலையே பார்த்திட்டிருக்க? எனக்கு ரொம்ப பசிக்குது.. இப்போ  சாப்பாடு போடுவியா? இல்ல பட்டினியாவே போய் தூங்கவா?”

“ஒரு கொஞ்ச நேரம் உன்னால பசி பொறுத்துக்க முடியாதா சுமி?உனக்கு வேணும்ன்னா நீயே போட்டு சாப்பிட்டுக்கோ.. அம்மாவை கொஞ்ச நேரம் தொல்லை பண்ணாத..” அவர் பரபரப்பு அடங்குவதாய் இல்லை என்றதும்,

“சாயங்காலம் இருந்தே ஒரு மார்க்கமா தான் சுத்திட்டு இருக்கே.. என்கிட்ட கூட சொல்லாம அப்படி என்ன விசயம்?”

“எல்லாம் தெரியும் போது தெரியும் . இப்போ போய் உன் வேலையைப் பாரு..” அவளை அங்கிருந்து விரட்டி விட்டவர், தன் தொலைபேசியில் யாரையோ அழைத்துக் கொண்டிருந்தார்.. சுமியும் “என்னவோ எனக்கு நல்லது நடந்தா ஓகே தான்..” என்று தோளைக் குலுக்கியவள் சென்று விட்டாள்..

சாப்பிட்டு முடித்து வந்தவளுக்கு ஹாலில் தாய் தந்தை தமையனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைக் கண்டு இன்னும் குழப்பம்.. இவர்களையா இவ்வளவு எதிர் பார்த்துக் காத்திருந்தார் தாய் என்று..

அங்கே விசாலத்தின் ஒன்று விட்ட தமக்கையின் குடும்பமே வந்திருந்தது.. விசாலத்தின் தமக்கை நாயகி விசாலத்தையே விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்.. அந்தளவு நல்ல்ல்லவர்.. கணவன் சாந்தமூர்த்தி சாந்தமானவர் என்றாலும் எதுவும் ஒரு பணக்கணக்கு தான் அவருக்கு.. தோட்டம் தொரவு‌ என்று அமோகமாக இருந்தாலும் இவர்கள் அளவு இல்லையே என்ற குறையுண்டு அவருக்கு.. அதுவும் சர்வா தலையெடுத்து இன்னும் செல்வத்தை பெருக்கி விட, அதில் இன்னும் புகைச்சல் கூடி விட்டது மனிதருக்கு.. 

நானும் தான் பெத்து வைத்திருக்கிறேனே ஒரு தண்டத்தை.. இங்க இருக்கதை பெருக்காம அங்க எங்கயோ பொறுக்கிட்டு இருக்கு.. என்று மனதுக்குள் தான் பொருமிக் கொள்வார்.. மகனும் மனைவியும் ஒரு கட்சி என்பதால் இவர் சொல்லுக்கு அங்கே மதிப்பு இல்லை.. மிதிப்பு தான் கிடைக்கும்.. அதனால் வெளியில் பேருக்கேற்ற கப்சிப் தான்..  இப்போதும் அப்படியே இவர்களின் வீட்டோடு தன் வீட்டை ஒப்பிட்டு எடை போட்டுக் கொண்டிருந்தார் அவர்.. அப்படியே போன முறை வந்ததுக்கு பின் என்ன எல்லாம் மாறியிருக்கு என மனதில் குறித்துக் கொண்டார்.. இனி அதெல்லாம் அவர் வீட்டில் மாறியிருக்கும்.. 

சாந்தமூர்த்தி, நாயகியின் ஒரே ஒரு மகன் அபினந்தன்.. இருவரின் கலவை எனப் பிறந்தவன்.. அவன் இங்கே வந்திருக்கவில்லை. பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேரில் வேலை பார்க்கிறான்.. ஆனால் சாஃப்ட் என்றால் என்ன என்று அறியாத முரட்டுக் குணம் கொண்டவன்..

அவர்கள் குடும்பமே ஒரு குழப்பவாதிக் குடும்பம்..

இவங்களை ஏன் கூப்பிட்டாங்கன்னு தெரியலையே.. வந்தவர்களைத் தாண்டிச் செல்ல முடியாமல்

“வாங்க பெரியம்மா.. வாங்க பெரியப்பா..” என்று வரவேற்றவள் சில பல நல விசாரிப்புக்குப் பின்னே வேலை இருக்கு, லாகின் பண்ணனும் என்று கூறிக் கழண்டு கொண்டாள்..

அவள் போகவே, “விசாலம் பயணம் பண்ணது ரொம்ப களைப்பா இருக்கும்.. போய் கை கால் எல்லாம் கழுவிட்டு வந்து சாப்பிட்டு தூங்குங்க.. எதுவானாலும் காலைல பேசிக்கலாம்..” நயமாகப் பேசி அவர்களை அனுப்பி வைத்தவர், அவர்கள் வந்ததும் மகன் கணவன் இருவருக்குமே சேர்த்து உணவைப் பரிமாறினார்.

அவர்கள் ஓய்வெடுக்க செல்லவே அதுவரை நாகரீகம் கருதி அமைதியாய் இருந்த சர்வா, “என்னம்மா திடீர்னு வந்திருக்காங்க.. இவங்க வர்றாங்கன்னு நீங்க சொல்லக் கூட இல்லையே..” 

“எனக்கும் என்னன்னு தெரியாதுப்பா.. இங்க வந்து தான் வந்திட்டோம்னு ஃபோன் பண்ணாங்க.. என்னமோ பக்கத்துல வேலையாம்.. ரெண்டு நாள் இங்க இருப்பாங்க..” என்றார் எதுவும் அறியாதவர் போன்று.. 

இங்கே இருக்கும் நிலையில் இப்போது இவர்கள் வருகை எதுவும் சரியாகப் படவில்லை சர்வாவுக்கு.. எதுவோ மனதை நெருடியது.. இருந்தும் வந்தவர்களை ஒன்றும் சொல்ல முடியாது,

“பார்த்துக்கோங்கம்மா , அவங்களுக்கு சுமி விஷயம் கொஞ்சமும் தெரிஞ்சிடக் கூடாது.. சுமிகிட்டவும் சொல்லிடுங்க..” என்றவன் தன்னறை நோக்கி சென்று விட்டான் குழப்பத்துடன்..

அருணாச்சலமும் அதையே மனைவியிடம் வலியுறுத்தி விட்டு சென்றார்.. எல்லாத்துக்கும் ஆமோதிப்பாய்

தலையாட்டி வைத்தார்.. 

அறைக்கு சென்ற சர்வா ,மாலை பிரபா ஃபோன் செய்ததைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான்..

ஃபோன்  எடுத்தவன் எந்த முகாந்திரமும் இல்லாமல், “அன்னைக்கு நான் ஏதோ சும்மா சொன்னேன் என் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் என் வைஃப உனக்குக் காட்டுவேன்னு.. ஆனா நீ உண்மையிலேயே அதான் பண்ணப் போற இல்லை.. துரோகி! ஒரு வார்த்தை சொன்னியாடா உனக்கு பொண்ணு பார்த்திருக்குன்னு.. உன் கல்யாணத்துக்குலாம் எனக்கு பத்திரிக்கை வச்சிடாத.. மீறி வச்சா நானே வந்து இவனுக்கு ஏழெட்டு செட்டப் இருக்குன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவேன்..” என விடாமல் பொரிந்தவனை,

“ஷட் அப் பிரபா..” என்ற ஆதியின் மென் கத்தல் இடை நிறுத்தியது.. பக்கத்தில் ஆட்கள் இருந்ததால் அமைதியானக் குரலில் கண்டித்தான்.. இல்லை பிரபாவின் காது கழன்று விழும் அளவு கத்தியிருப்பான்..

“ஷட் அப் இல்லடா.. செட் அப்..” அப்போதும் அடங்காது அவன் பேச,

பல்லைக் கடித்தவன் நின்ற இடத்தில் இருந்து நீங்கி தனியே வந்தவன், “வாயை மூடுடா எருமை.. மனுசன் இருக்கிற கடுப்புல கல்யாணம் காது குத்துன்னு பெனாத்திட்டு இருக்க? உனக்கு வேலை வெட்டி இல்லன்னா‌ எனக்குமா இருக்காது இடியட்.

அவன் கத்தலில் பிரபா மூச்சைக் கூட சற்று மெதுவாய் தான் விட்டான்.. நேரம் தெரியாம வாயை விட்டமோ?” “அவன் மைண்ட் வாய்சும் ஹஸ்கி வாய்சிலே அவனைக் கேள்வி கேட்டது..

“இங்க தேங்கா லோட் ஏத்த  ஆள் பத்தல.. என்ன பண்றதுன்னு தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன்.. நீ ஃபோன் போட்டு என்கிட்ட விளையாடிட்டு இருக்கியா? நீயா ஃபோனப் போட்டல்ல, அப்போ ஒரு நாலு பேரை இங்க நம்ம தென்னந் தோப்புக்கு அனுப்பி வைக்கிற இல்ல, நீயே வந்து தேங்கா பொறுக்குற மாதிரி எதுவும் பண்ணி விட்டுடுவேன்..”

“இப்போ போய் நான் எங்கடா ஆளுங்கள புடிக்க? எல்லாம் ஃபுல் போதைல பொரண்டுட்டுக் கிடப்பானுங்களே.. எங்க பக்கத்து தெருல ஒரு காதுக்குத்து தெரியும் தானேடா உனக்கும்?” அவனிடம் எகிறினால் ஆகாதென்று இறங்கியே போனான்..  

“ஆஆ.. யாரோ எனக்கு பொண்ணு பார்த்ததா சொன்னியே.. அந்தப் பொண்ணுக்கு அண்ணன் தம்பி இருந்தா அனுப்பி விடு..

அப்படியே மச்சாங்களோட உறவ வளர்த்துக்கிறேன்.. அடச்சீ உன் கடைப் பசங்க நாலு பேரை சீக்கிரம் அனுப்பி வை.. அவங்களுக்கு இன்னைக்கு முழு நாள் கூலிய நான் குடுத்துக்கறேன்..”

“காச நீயே குடுத்துடுறியா? இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்போ நானும் கடைய சாத்திட்டு எங்க பக்கத்து தெரு வரைக்கும் போய்ட்டு வரேன்.. நான் வச்சிடறேன் மச்சான்.. ” மச்சான் என்பதை அழுத்தி சொன்னவன் , “ச்ச.. எனக்கொரு தங்கச்சி இல்லாம போச்சே.. மொத்தமா பசங்க சம்பளக் கணக்கை மச்சாங்கிட்ட தள்ளி விட்டிருக்கலாம்..” என்று அவன் காதில் பட முனகி விட்டு அவன் திட்டுவதற்குள் காலைக் கட் பண்ணி விட்டான்..

சுமி வாழ்க்கை செட்டில் ஆகாமல் தன் திருமணம் பற்றி யோசிக்க அவன் தயார் நிலையிலேயே இல்லை.. அப்படியிருக்க யார் இப்படி அவனிடம் சொல்லியிருக்கக் கூடும்? 

சர்வா வேலை டென்ஷனில் யார் அவனிடம் தனக்குப் பெண் பார்ப்பது எனக் கூறியது எனக் கேட்கவும் இல்லை. பிரபாவும் இவன் டென்ஷனில் அதை விளக்கவும் இல்லை..

அதை எண்ணியவாறே இப்போது அவனுக்கு ஃபோன் எடுக்க, அழைப்பு ஏற்கப் படவில்லை . பிரபா இப்போது எல்லாம் மறந்த தியான நிலையில் இருந்தான்..

  1. அனைவரின் கனவுகள், கணக்குகள் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி அடுத்த இரண்டாம் வாரம் சர்வமும் அவனென திருமதி சர்வேஸ்வரன் ஆகியிருந்தாள் ஆதிரா.. விதியும் சதியும் கைகோர்த்து அவளை சர்வாவின் கை சேர்த்தது..

 

தொடரும்…..

Advertisement