Advertisement

அத்தியாயம் 5

சுமி தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து அறையின் நீள அகலங்களை அரை மணி நேரமாக அளந்து கொண்டுடிருந்தாள்.. 

அவளுக்கு எங்கே தன் திருமணம் பரணியுடன் இல்லாது அண்ணன் பார்த்து வைக்கும் யாரோ ஒருவனுடன் நடந்து விடுமோ என்ற பயம் ஒரு புறம் என்றால் மறுபுறம் கோபம் கோபமாக வந்தது.. 

இன்னும் கல்லூரி படிப்பைக் கூட முடித்திடாத ஒரு சிறு பெண் தன் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பதா? என்று.. தன் வாழ்க்கையில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தன் வீட்டினருக்கே இல்லை என்னும் போது இவள் யார் நடுவில்? நான் எல்லாம் இவளை நினைச்சு டென்ஷனாகற அளவுக்கு நீ என்ன அவளோ பெரிய ஆளா? என்ற நினைவில் ஆதிதிதிதி … என்று பல்லைக் கடித்தவள்,

“நீ முடிவு பண்ணி என் கல்யாணம் நிக்குமா ? ஹா.. என் கல்யாணம் பரணி கூட தான் நடக்கும்.. யாரு நெனச்சாலும், ஏன் எங்க அண்ணனே நெனச்சாலும்

அதை மாத்த முடியாது..” தன்னுள்ளே உறுதி பூண்டவள், அன்று வீட்டில்  இரண்டு வேளையும் உணவுண்ணாது பட்டினி கிடந்தாள்.. கேட்ட தாயிடம் வயிறு வலியென்று போய் கூறி அனுப்பி விட்டாள்..  அவர் காய்ச்சிக் கொடுத்த  பாலையும் வேண்டாம் என்றாள். இரவுணவுக்கு  வந்த அருணாச்சலமும் சர்வாவும் இவளைக் காண வில்லையென்று விசாரிக்க, 

அவளுக்கு வயிற்று வலி ஓய்வெடுக்கிறாள் என்று விசாலம் சொல்லவே , அவளிடம் பரணி வீட்டு திருமணப் பேச்சு நிலவரம் கேட்க எண்ணிய சர்வாவும் ,அவள் ஓய்வெடுக்கட்டும் என்று தந்தையிடம் கணக்கு வழக்குகள் பற்றி பேசிவிட்டு உறங்க சென்று விட்டான்.. 

கணவரும் உறங்கிய பின்னே, மகளுக்காக எளிய உணவாக செய்த இடியாப்பத்தை உணவுத் தட்டில் வைத்து மகளின் அறைக்கதவை திறந்து உள்ளே வந்தார் விசாலம்..

அவளுக்கும் தெரியும்.. இரவு உணவையும் புறக்கணித்தால் எப்படியும் தாய் தன்னைக் கண்டுகொண்டு தேடி வருவார் என்று.. அதற்காகவே கலங்கிய கண்ணும் கலைந்த தலை முடியுமாக எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சுமி..

விசாலம் அவளின் நிலை கண்டு பயந்துர் போனவர் , கொண்டு வந்த உணவை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு,

“சுமி ஏன்டி இப்டி உக்காந்திருக்க? வயிறு ரொம்ப வல்லிகுதா 

டி ?ரொம்ப‌ முடியலனா சொல்லிருக்க வேண்டியது தானே? அப்பவே சொன்னேன் சாப்பிட்டது எதுவோ சேரல‌ போல.. ஒரு எட்டு‌ ஆஸ்பத்ரி போய்ட்டு வரலாம்னு.. வலி அதிகம்னா எங்ககிட்ட சொல்லாம இப்பிடி சத்தமில்லாமல் இருந்து அழுதிட்டிருக்க? நாங்க எல்லாம் எதுக்குடி இருக்கோம்? உன்ன இப்பிடி கஷ்டப்பட விட்டுட்டு வேடிக்கை பார்க்கவா? ” கேட்டுக் கொண்டே முந்தானையால் அவள் முகத்தை துடைத்து விட்டவர் அவள் தலையையும் கையால் நீவி சரி செய்து விட்டார்.. 

“கொஞ்சம் இரு சுமி.. போய் உங்கண்ணன எழுப்புறேன்.. நாம டாக்டர்கிட்ட பார்த்திட்டு வந்திரலாம்.”

“அண்ணா எல்லாம் வராதுமா.. எதுக்கு அவரை தொல்லை பண்ணனும்? அவருக்கு நான்னா இப்போலாம் ஆகறதே இல்லை.. முன்னாடி நான் வீட்டுக்கு வந்தாலே தன் கூடவே நம்ம தோப்பு மில் நிலமுன்னு கூட்டி போவாங்க.. ஆனா இந்த முறை நான் வந்து ஒரு வாரம் மேல ஆகுது.. என்கிட்ட பேசுறதையே எண்ணி எண்ணி தான் பேசுறாரு.. அவருக்கு என் மேல முன்னாடி போல பாசம் எல்லாம் இல்லம்மா.. ” சொல்லிக் கொண்டே விசும்பினாள்.. 

அவளுக்கு உண்மையிலே அந்த குறை உண்டு உள்ளே.. காதல் என்று தான் வந்து நின்றதில் இதுவரை அண்ணனிடம் இருந்து கிடைத்த அன்பு, சலுகைகள் திடீரென இல்லாது போனதே என்று.. அவளுக்கும் அவன் மேல் அன்பு, மரியாதை எல்லாம் உண்டு தான்.. ஆனால் தான் என்று வரும் போது தான் கொஞ்சம் சுயநலம் எட்டிப் பார்க்கும்..

அவளின் கலக்கத்தில் முழுதும் கரைந்தார் விசாலம்.. காதலித்து விட்டு எங்கே வீட்டினர் வெறுத்து விடுவார்களோ என்ற கலக்கமே அவளை இவ்வாறு சிந்திக்கச் செய்வதாக எண்ணினார்.. அதுவரை தானும் அவள் மீது சிறு சுணக்கத்தில் இருந்தவர், இந்த நொடி எல்லாம் உதறி விட்டு மகளின் பக்கம் நின்றார்..

அவளின் கண்களைத் தன் கையால் துடைத்து விட்டு கன்னம் வருடியவர், “உங்க அண்ணனுக்கு உன் மேல பாசம் இல்லாம போகுமா சுமி? அவன் என்னைக்கு எனக்கு பாசம் இருக்கு இருக்குன்னு பேசிக் காட்டிருக்கான்.. அவன் செய்கைல தான் அதெல்லாம் நமக்குத் தெரியும்.. நீ இங்க பாசம் இல்லைன்னு புலம்புற.. ஆனா அங்க அவன் உன் கல்யாணத்துக்கு ஒவ்வொரு வேலையா பார்த்திட்டிருக்கான்.. பையனைப் பத்தி விசாரிச்சானாம்.. ஆள் கொஞ்சம் ஊதரியாமே? அப்பறம் குடிப்பழக்கம் இருக்குன்னும் சொன்னான்..

மகளின் எதிர் காலம் குறித்த கவலையில் அவர் குரல் இறங்கி வரவே, 

சுமி பரணியை எண்ணி மனதில் பல்லைக் கடித்தாள்.. இருந்தும் வெளியில் தாயிடம் ,

“அங்க இதெல்லாம் ரொம்ப சாதாரணம்மா.. சில பொண்ணுங்களே இப்படித் தான் குடி அது இதுன்னு சுத்துவாங்க.. பரணி ஒன்னும் தினமும் குடிக்க மாட்டான் மா.. வீக்கெண்ட் மட்டும் தான்.. அப்பறம் செலவு பண்ணுவான் தான்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் செலவெல்லம் நான் தானே பார்த்துக்க போறேன்.. நான் சிக்கனமா இருந்தா ஓகே தானேமா..” என்றாள் வேகவேகமாக.. 

மகளின் பொறுப்பான பேச்சில் அவ்வளவு ஆனந்தம் விசாலத்துக்கு.. இப்போதே அவள் திருமண வாழ்வு பற்றி திட்டமிட்டிருக்கிறாள்.. எப்படியும் எதிர்காலத்தில் பிழைத்துக் கொள்வாள் என்று நிம்மதியானார். கூடவே தாமும் இருப்போமே பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார் . (சர்வ நாசம், சர்வா வாழ்க்கையும் நாசம்)

“இதெல்லாம் சின்னப் பிரச்சனைம்மா.. மத்த படி அவன் வேலைல எல்லாம் ரொம்ப திறமைசாலி.. எங்க மேலதிகாரிங்க எல்லாம் ரொம்ப பாராட்டுவாங்க அவனை..” மீண்டும் அவசர அவசரமாய் அவனிடம் இருக்கும் நல்ல பண்புகளை விளக்கினாள்.. 

சர்வாவும் அதைத் தான் விசாலத்திடம் கூறினான்.. சில குணங்களைத் தவிர அவன் நல்லவனே என்று நண்பன் கூறியதை இங்கு ஒப்பித்தான் அவ்வளவே.. அவன் மனதிலிருந்து அந்த வார்த்தைகள் வரவில்லை.. ஏனோ வர மறுத்தது..

உண்மையிலே வேலை, பெண்கள் விசயத்தில் எல்லாம் பரணியைக் குறை கூறவே முடியாது.. அதைத்தான் எண்ணி திருப்திப் பட முடிந்தது சுமி வீட்டாருக்கு.. அவனுக்கு அவளைத்  திருமணம் செய்து வைக்க தேடித்தேடி காரணம் சேர்த்தனர் என்று தான் சொல்ல வேண்டும்..

அதையே மகளும் கூற , அவளை ஆதுரமாகப் பார்த்தவர், இவளை எந்த சூழ்நிலையிலும் தவிக்கவே விடக்கூடாது.. தன் காலம் வரை தானும், தன் காலத்தின் பின் சர்வாவும் இவளைத் தாங்க ஸ்திரமான அஸ்திவாரம் போட்டே ஆவது என்று முடிவு எடுத்துக் கொண்ட்டார்..

அவர் இவ்வளவு யோசித்துக் கொண்டிருக்கும்போதே சுமியின் நின்றிருந்த அழுகை மெல்ல அதிகமாகியது..

“சுமி, அதான் உன் கல்யாணத்தை நடத்தி வைப்போம்னு சொல்றோமே.. இன்னும் ஏன் இப்டி அழுற? ஒரு வேளை வயிறு வலிக்குதா?” என்ற

இல்லையென்று தலையாட்டியவள் தாயின் தோள் சாய்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். 

“வயிறு வலி இல்லைன்னா ஏன்டி இப்டி அழற? எனக்கு பதறிப் போய் வருதுடி.. எதுக்கு அழறேன்னு சொள்ளிட்டாவது அழேன்டி..”

அவருக்கு உண்மையில் பதறியது தான்.. விசயம் பெரிதாக இருக்குமோ? வயிறு வலி என்று வேறு சொன்னாளே ஒரு வேளை,……

நினைவே திடுக்கிட்டது.. அப்படி மட்டும் இருந்தால், சர்வா தொலைத்துக் கட்டி விடுவானே..

மகனை எண்ணிய மாத்திரத்திலே உடல் நடுங்கியவர் , தோள் மேல் சாய்ந்திருந்த மகளை உதறித் தீப் பார்வை பார்த்தார்..

“இப்போ எதுக்குன்னு சொல்லிட்டு நீ அழகல? உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது.

சொல்லுடி என்னன்னு?”

“அண்ணா ஓகே சொன்னாலும்

இந்த கல்யாணம் நடக்காதுமா.. யார் நெனச்சாலும் நடக்காது.. அண்ணா என்னால வீணா அசிங்க பட வேணாம்.. எல்லாத்தையும் இப்போவே நிறுத்த சொல்லுங்க..” சொல்லிக் கொண்டே மீண்டும் தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள். 

“ஏன் சுமி இப்டி சொல்ற? ஒரு வேளை அந்த பையன் உன்னை ஏமாத்தப் பார்க்குதா? அண்ணன்கிட்ட சொன்னா அதை அவன் பார்த்துப்பானே? அப்பறம் எப்டி கல்யாணம் வேணாம் சொல்றாங்கனு நாம பார்க்கலாம்..”

விசாலத்துக்கு பயங்கர கோபம் தன் பெண்ணையே ஏமாற்றுவானா? என்று..

“அவன் இல்லம்மா. அவன் ரொம்ப பாவம்மா‌. (?)  அவனுக்கு அவன் தங்கச்சியின்ன்னா ரொம்ப பிடிக்கும்.. இவன் என்னை விரும்புறேன்னு நேத்து அவங்க வீட்ல சொல்லிருக்கான் போல..

அதுக்கு அந்த பொண்ணு,

நீ எவளோ ஒருத்தியைக் கட்டினா எங்க கூட எல்லாம் இருக்க மாட்ட.. வர்றவ உன்னை தனியா பிரிச்சி கூட்டிப் போய்டுவா.. நம்ம மாமா பொண்ணையே கட்டிக்கோன்னு சொன்னாளாம்.. அவளை இவன் தானாம் படிக்க‌ வைக்கிறான்.. எங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுலாம் நின்னு போயிடுமோன்ற பயத்துல இன்னும் என்னை பத்தி தப்பு தப்பா சொல்லிருக்காம்மா.. இவன் முழுசா சொல்லத் தயங்கறான்.. உன்னை தப்பா சொல்றாங்கடின்னு இதையே அழுதிட்டே தான் சொன்னான்..”

“எவடி அவ? உன்னைப் பத்தி அப்படில்லாம் பேசுறதுக்கு யாருடி அவளுக்கு உரிமை கொடுத்தா?பெத்தவ நானே அதிக வார்த்தை போட்டுப் பேசினதில்லை? அவ மட்டும் என்கிட்ட சிக்கட்டும்? அப்பறம் தெரியும் அவளுக்கு? அது சரி அவ சொன்னா மாப்பிள்ளைக்கு எங்கடி போச்சு புத்தி? அவளுக்கு ரெண்டு இழு இழுத்து விட்டிருக்கலாம.

சுமி கெட்டிக்காரி.. பரணியை ஏற்றுக் கொள்ளவே தயங்கிய தாயிடம் ஆதியைக் கெட்டவளாக்கி பரணியை மாப்பிள்ளையாக்கி விட்டாள்..

“அதில்லம்மா இப்போ பிரச்சனை.. இவன் நான் யார் என்ன சொன்னாலும் ஒத்துக்க முடியாது.. நான் சுமியத்தான் கட்டிப்பேன். நீங்க முடியாதுன்னு சொன்னா அவங்க வீட்டுக்கே வீட்டோட மாப்பிள்ளையா போய்டுவேன்னு  மிரட்டி இருக்கான்.. “

“ம்ம் அப்படி தான் இருக்கணும்.. அவளுக்கு மாப்பிள்ளை தான் சரியான ஆளு.. இப்போ எனக்கு முழு நம்பிக்கை இருக்குடி.. மாப்பிள்ளை உன்னை கடைசி வரைக்கும் பார்த்துப்பாருன்னு.. அவர இங்கவே வர சொல்லு.. அவர் இங்க வரதால என்ன குறைஞ்சிடப்போது? நீயும் எங்க பக்கத்துலயே இருப்ப.. எனக்கு வேற என்ன வேணும்?”

( வரப்போகும் மாப்பிளையைப் பாராட்டும் விசாலம் தன் மகன் இதே வார்த்தையை சொன்னால் பாராட்டுவாரா என்ன? அவரவருக்கு வந்தால் தான் இரத்தம்.. அடுத்தவன் குடும்பத்தில் விசாலத்துக்கு ரத்தம் வருமா?)

“விஷயத்தை முழுசாக் கேட்டுட்டு அழறதா சந்தோஷப் படறதான்னு பாருங்கம்மா.. இவன் இப்படி சொல்லவுமே அந்தப் பொண்ணு நான் சொன்ன மாதிரித் தானே நடக்குது.. இப்போவே விட்டுப் போறேன்னு தானே சொல்றேன்னு சொல்லி… அவங்கம்மா சாப்பிடற தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை‌ ட்ராமா பண்ணிருக்கா..”

“அய்யோ என்னடி சொல்ற? இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க? இப்போ என்ன ஆச்சாம் அவளுக்கு? மாப்பிள்ளை ஃபோன் பண்ணாரா?” 

“ம்ம்.. ஆமாமா.. காலைல  ஹாஸ்பிடல்ல இருந்து தான் பேசினான்.. அவளக் காப்பாத்திட்டாங்களாம்.. அவங்க வீட்ல எல்லாரும் என் மேல தான் கோபமா  இருக்காங்களாம்.. அதுனால இதுக்கப்பறம் அவங்க வீட்டில என்ன முடிவெடுப்பாங்கன்னு சொல்ல முடியாதாம்.. அவ அப்படி பண்ணிட்டதால இனி அவனால குடும்பத்தை விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறத பத்தில்லாம் யோசிக்க முடியாது.. எதா இருந்தாலும் அவங்க முடிவு தான்னு சொல்றான் மா.. (அத்தனையும் அந்தப் பக்கி சீஃப் டாக்டர் ரூமில் இருந்து வந்து அடித்து விட்ட கதை..)

அப்படி அவனுக்கு வேற பொண்ணக் கட்டி வச்சா நான் என்னம்மா பண்ணுவேன்? 

பேசாம நானும் அவளை மாதிரினு இல்லாம நிஜமா தற்கொலை பண்ணிக்கிறேன்.. அவளை.. அந்த ஆதியை பரணி தான் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்தானாம். ஆனா அண்ணா என் மேல இருக்க கோபத்தில காப்பாத்த கூட‌ வர மாட்டாரு. அது தான் நல்லதும் கூட.. நான் செத்துப் போறேன்.. செத்துப் போறேன்..” சொல்லிக் கொண்டே தலையை கட்டிலின் தலைப்பில் மோதிக் கொண்டாள்.. 

அவள் செய்கையில் அதிர்ந்த விசாலம் மகளின் தலையை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவர், தானும் உடன் அழுதார்..

இறுதியில் முகத்தை அழுத்தித் துடைத்துக்‌ கொண்டவர்

முகமே அவர் ஏதோ தீர்மானத்துக்கு வந்து விட்டதாக சொன்னது..

மகளைத் தட்டிக் கொடுத்தவர் அவள் அழுகை விசும்பலாய் மாறவே, பேசத் தொடங்கினார்.

“நீ என் வயித்துல ஆறு மாசக் கருவா இருக்கும் போதே டாக்டருங்க சொன்னாங்க, கர்ப்பப்பை கொஞ்சம் வீக்கா இருக்கு.. பிரசவம் சிக்கலாகிடும்.. இந்த குழந்தை வேணாம்.. குழைந்தைய வெளில எடுத்திடலான்னு.. உங்கப்பாவுமே அதை தான் சொன்னாரு.. உனக்கு ஏதும் ஆகிடும்.. இந்தக் குழந்தை வேணாம்.. நமக்கு சர்வா மட்டும் போதும்னு.. சர்வா, அவனுக்கும் அப்போ ஐஞ்சு வயசு தான்.. அவனுமே அவன் அறிவுக்கு தெரிஞ்ச மாதிரி , பாப்பா வேணாம்.. அம்மா தான் வேணும்னு சொன்னான்.. ஆனா நான் அப்போ கூட நீ வேணாம்னு சொல்லலடி.. ஆறு மாசக் கருவா இருந்தாலுமே நீ நான் சுமக்குற குழந்தைனு அவங்க சொன்ன எதையும் கேட்டுக்கவே இல்ல.. நம்பிக்கையா பெத்து எடுத்து இவளோ தூரம் வளர்த்து விட்டது, இப்போ நீ சாகவா? ” கேட்டவர் குரலே கரகரத்துப் போனது.. விசாலம் சொல்லவே சுமி அமைதியாகக் கேட்டிருந்தாள்.. அவளுக்கு தாய் தனக்கு என்றுமே துணையிருப்பாரென நம்பிக்கை வந்தது.. 

இந்த எண்ணம் இனி உனக்கு வரவே கூடாது சுமி.. இனி இந்தக் கல்யாணப் பொறுப்பு உங்க அண்ணனோடது இல்ல. என்னோடது.. சர்வாவே வேணாம்னாலும் அம்மா நடத்தி வைப்பேன் சரியா? அம்மா மேல மட்டும் நம்பிக்கையா இரு.. இப்போ கொஞ்சமா சாப்பிட்டு தூங்கு..” என்ற தாய்க்கு தலையாட்டியவள் அவர் ஊட்டி விட்ட உணவை உண்டு விட்டு உறங்கிப் போனாள்.. 

காலையில் இருந்து பரணியிடம் கதை கேட்டு அதைக் கொண்டு தான் தயாரித்து வைத்த ஸ்கிரிப்ட் தாயால் அங்கீகரிக்கப்பட்டு படமாக்கப்படப் போகும் மகிழ்ச்சியில் அவள் உறங்க விசாலமும் அவளை ஏமாற்றாது படத்துக்கான பூஜை வேலையை எங்கு எப்படி யாரிடம் தொடங்குவது என்று தான் சிந்தித்துக் கொண்டே மகளைத் தனியே விட மனமின்றி அவளுடனே உறங்கிப் போனார்..

இங்கே பரணி வீட்டிலோ மாலையே ராஜியயையும் ஆதியையும் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்திருந்தனர்.. குடும்ப உருப்படிகள் மொத்தமும் இரவுணவை அமைதியாக முடித்துக் கொண்டு அவரவர் அறையில் தஞ்சம் கொண்டிருந்தனர்..

வீட்டில் என்றும் விடாது ஒலிக்கும் ராஜியின் குரல் இன்று அமைதியாயிருக்கவே வீடும் நிசப்தமாக இருந்தது.. அப்போ அப்போ கயல் குரல் தான் அங்கே ஒரு வீடு இருப்பதற்கு அடையாளமாகக் கேட்டுக் கொண்டிருந்தது..

நேத்ரா ஆதியுடன் தூங்கவெனக் கூற, கயலும் அவளிடம் தொற்றிக் கொண்டாள்.. அன்பு தான் நேத்ராவைப் பாவமாகப் பார்த்தான்.. அவனுக்கு இருவரும் இன்றி தூங்குவது என்பது இயலாது.. தங்கையைப் பார்க்க மனைவி செல்ல வேண்டியது அவசியம் என்பதால் மகளையாவது கூட வைத்திருக்கலாம் என்று,

“கயலம்மா அம்மா அத்தைய பார்க்க போகட்டும்.. நீங்க அப்பா கூட தூங்குங்களேன்.. அப்பாக்கு தனியா இருக்கப் பயமா இருக்கும்ல. நீங்க இருந்தா அப்பாக்கு பயம் போய்டும்.. இங்கவே அப்பா கூட தூங்கறீங்களா? 

“ம்ஹூம்.. அத்தைய பார்க்கிறேன்னு சொல்லிட்டு அம்மா நடுல தூங்கிடுவாங்க.. அப்பறம் அத்தைக்கு யாரு நெத்தில கழுத்துல கை வச்சுக் காய்ச்சல் பார்க்கிறது?

நான் தூங்காம அத்தைய பார்த்துக்கப் போறேன்.. நீங்க பயம் வந்தா சித்தா கூட்டி வந்து தூங்குங்க.. அம்மா வாங்க நம்ம போலாம்.. அத்தைக்கு நெத்தி சுடப் போது‌..” தந்தை மறுக்கும் முன் சொல்லி விட்டு ஓடி விட்டாள்..

மகளின் பொறுப்புணர்வில் சிரித்தவனுக்கு எண்ணமெல்லாம் மனைவி மேல் தான்.. அவளை மாறியே பெத்து வச்சிருக்கா என்று சுகமாக சலித்துக் கொண்டான்.. 

நேத்ரா அவனைப் பார்த்து என்ன யோசனை என்று வினவவே,

“இல்லை அப்படியே உன்னை மாறியே பெத்து வச்சிருக்கிறயே, என் சொல்லக் கேட்கவே கூடாதுன்னு நேர்ந்திட்டே பெத்தியோ?”  என்று கேட்டான், மனைவியை வம்பிழுக்க..

அதில் கோபமூச்சு விட்டவள், “என்னை மாதிரி தானே பெத்தேன்? அவ இன்னைக்கு என் கூடவே இருக்கட்டும்.. அப்பறம் அவ தூங்கினப்பறம் கதவத் தட்டி தூக்கிட்டுப் போகலாம்னு ஆதி ரூம் பக்கம் வந்திராதிங்க.. சுடுதண்ணிய எடுத்து மூஞ்சில ஊத்திருவேன்..” என்றபடி கையில் இருந்த ஃபிளாஷ்க்கை அவனை நோக்கி ஊற்றுவது போல் காட்டவே அரண்டவன் இரண்டடி பின் சென்றான்.

“வர வர ரொம்ப வைலண்டா மாறுறடி.. இதெல்லாம் நல்லதில்ல.. பார்த்துக்கோ!”

“என்ன பண்றது? எல்லாம் என் மாமியார் கூட பழகற சகவாச தோஷம் தான்.. மறக்காம நீங்க இப்படி சொன்னதா அவங்க கிட்ட சொல்லிடுறேன்..”

“ஐய்யோ அம்மாவா? 

ஆள விடு சாமி உன் கூட பேசி வெல்ல முடியுமா?.. அங்க ஆதி தனியா இருக்கா.. போ.. போய் பார்த்துக்கோ.. நீயும் நல்லா ரெஸ்ட் எடு. ரெண்டு நாளா உனக்கு தான்  ஒரே அலைச்சல்..” என கனிந்த குரலில் சொன்னான்..

இது தான் அவன்.. அவனைக் கொண்டே இந்த குடும்பத்தை நேசித்தளுக்கு போகப் போக ஆதிரா மேல் தனிப் பிரியம் உண்டானது.. கயலுக்கும் அவளுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிவதில்லை‌ நேத்ராக்கு.  இப்போது தன் மேல் அக்கறை காட்டிய கணவனைக் காதலாய் பார்த்திருந்தாள் நேத்ரா.. அவளை உணர்ந்தவன், 

“அதான் கயல் ஆதிய பார்த்துக்கிறேன்னு போய் இருக்கால்ல, நீ வேணா இங்க இருக்கியா?” என சிரிப்படக்கிக் கொண்டே கேட்டவனை பொய்யாய் முறைத்தவள் ரூமை விட்டு வெளியேறினாள்.. 

அவள் பின்னோடே, “மறக்காம கயல் தூங்கினதும் ஃபோன் பண்ணு.. நான் வந்து தூக்கிக்கிறேன் என்ற அவள் கணவன் குரல் ஒலித்தது.. அதில் சிரித்துக் கொண்டே ஆதி ரூம் சென்றவள் கண்டது , ஆதியின் கழுத்தில் கையை இறுக்கிக் கொண்டு உறங்கும் மகளைத் தான். பார்த்ததும் சிரித்து விட்டாள்..

அவள் திடீரென சிரிக்கவே ஆதி, “என்ன அண்ணி?” என்றாள்.. 

“இல்லை.. ஒரு பெரிய மனுஷி நான் நடுவுல தூங்கிடுவேனாம்ன்னு,

உன்ன தான் பார்த்துக்கப் போறதா அவங்கப்பாகிட்ட சொல்லிட்டு வந்தா.. இப்போ அவ தூங்கிட்டு இருக்க, நீ அவளைப் பார்த்துட்டிருக்க அதான் சிரிப்பு வந்துடுச்சு..”

நீங்க வேற அண்ணி பத்து செக்கண்ட்கு ஒரு தடவை நெத்திலயும் கழுத்திலயும் கை வச்சி இல்லாத காய்ச்சல சோதிச்சிட்டு இருந்தா.. அதான் நானே தட்டி தூங்க வச்சேன்..”

“ம்ம் சரி நீயும் தூங்கு.. ரொம்ப நேரம் முழிச்சுக்க வேணாம்.. நான் இவளை தூக்கிப் போய் ரூம்ல படுக்க வச்சிட்டு வரேன்..” என்ற

ஆதிரா, “ம்ம்..” என்றவள் மாத்திரையின் உதவியால் நொடியில் தூங்கிப் போனாள்.. மீண்டும் நேத்ரா வந்து படுத்தது கூட தெரியாது, அப்படியொரு தூக்கம் .

இனிக் கிடைக்குமா? 

தொடரும்……

Advertisement