Advertisement

அத்தியாயம் 4

அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ராஜி ஒரு மணி நேரத்திற்கு முன் தான் தனியறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.. நேத்ரா இரவு அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு தன் மட்டும் இருப்பதாகக் கூறி ஆதிக்கு கொடுத்திருந்த அறையில் அவளுடன் தங்கிக் கொண்டாள்.. மறக்காது தாய்க்கும் ஃபோன் செய்து கயலைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தாள்..

ராஜி அதிக மாத்திரைகளை உட்கொள்ள முன் ஆதி வந்து தடுத்திருந்ததாலும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த காரணத்தாலும் அவர் காப்பாற்றப்பட்டார்.. எனினும் வயதின் காரணமாக இரவு முழுதும் தொடர்ந்து அப்சர்வேசனில் வைக்கப் பட்டிருந்தார்..

விடிந்ததும் கயல் தவிர எல்லோரும் ஹாஸ்பிடலில் ஆஜராகியிருக்க சற்று நேரம் கணவன் பொறுப்பில் ஆதியை விட்டு விட்டு வீடு சென்று வந்திருந்தாள்.. ஆதிக்கு ஹாஸ்பிடல் காண்டீனிலே உணவு நன்றாயிருக்க வாங்கிக் கொடுத்தவள் மற்றவர்களுக்கு சமைத்து எடுத்து வருவதாகக் கூறவே அன்பு தான் மனைவியின் சிரமம் உணர்ந்து வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான்..

அதில் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.. வந்தவள் ஆதியை ஹாட் வாட்டரில் உடல் கழுவச் சொல்லி , கொண்டு வந்த உடையை அணியச் செய்து தலை சீவி விட்டாள்..

ஆதி பொம்மை போல் அண்ணி சொன்னதைச் செய்தவள், இன்னும் நேற்றைய தாக்கத்திலிருந்து மீளவில்லை.. யாரால்  இயலும் பெற்ற தாய் கண் முன் தற்கொலை செய்யச் சென்ற காட்சியை நேரில் கண்டு உடனே நார்மலாக மாற.. அதனாலே அவளை யோசிக்க விடாதபடிக்கு நேத்ரா எதையாவது சொல்லியும், அவளிடம் ஏதேனும் கேட்டும் கொண்டிருந்தாள்..

எல்லாம் முடிந்ததும் ஆரம்பித்து விட்டாள், அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று. அவள் சிறிது ஓய்வெடு என்று சொல்லியும் ஆதி அடம் பிடிக்கவே ,

“ராஜேஸ்வரி பொண்ணு தானே நீ? சொல்றத உடனே கேட்டுகிட்டா நூலைப் போல சேலைன்னு சொல்ற பழமொழியே தப்பாயிடாது? ” என்று அவளைக் கடிந்து கொண்டே அழைத்துச் சென்று தாயைக் காட்டினாள். கண் மூடிப் படுத்திருந்த தாயைக் கண்டவளுக்கு அழுகையில் உதடு பிதுங்க,

“இப்போ மட்டும் நீ அழுது மறுபடி எதையாச்சும் இழுத்து வச்சுக்கிட்ட? மயக்கத்துல இருக்க உங்கம்மாவ கள்ளத் தோணில ஏத்தி நாடு கடத்திருவேன்.. மூச்..” என்று அதட்டவே பிதுங்கிய உதட்டை மீண்டும் ஒட்ட வைத்துக் கொண்டாள்..

“அது! அப்டியே நல்ல பிள்ளையா வெளில வா. இல்ல இங்க காவல் காக்கிற ஐடியா எதுவும் இருந்தா, அதை வெளில பெரிய டஸ்ட்பின் வச்சிருக்காங்க பாரு.. அதுல தூக்கிப் போடு.. உங்கம்மாவ கடத்திட்டு போற நல்ல காரியம்லாம் எவனும் பண்ணமாட்டான்.. அதனால அவங்க இங்க தான் இருப்பாங்க.. ” அவள் பேச்சில் எதுவும் பேசாது, அவள் பின்னோடே தானும் வெளியேறினாள் ஆதிரா..

அரை மணி நேரம் கழித்து ராஜியின் அறையிலிருந்து வெளி வந்த நர்ஸ் அவங்க கண் முழிச்சிட்டாங்க.. போய் பேஷண்டை தொல்லை பண்ணாம பாருங்க என்று சென்றுவிட்டாள்.. நேத்ரா, மாமனாரைப் போகச் சொல்லியவள் ஆளுக்கு முந்தி எழுந்த ஆதியின் கையைப் பிடித்து தடுத்தாள். கணவனையும் செல்ல வேண்டாமென பார்வையிலே தடுத்து நிறுத்தியிருந்தாள்..

ஆதி பாவமாக நேத்ராவைப் பார்க்கவே ,

“நீ எவ்ளோ பாவமா மூஞ்சியை வைச்சாலும் நான் இளக மாட்டேன்.. கொஞ்சம் நல்லவளா இருந்தா அம்மாவும் புள்ளைங்களும் மத்தவங்க தலைல நல்லா மிளகா அரைப்பிங்க.. ஹும் ..” என்று சிலுப்பிக் கொண்டாள் அவள்..

அவளின் சிடு சிடுப்பில் அன்பு, ஏன்டி என்பதைப் போல் பார்த்திருந்தான்.. நேற்றே அவன் தாயையும் தம்பியையும் சொல்லி சொல்லி அவனிடம் கத்தித் தீர்த்திருந்தாள்..

கல்யாணமோ கருமாதியோ அவங்களுக்குள்ள முடிச்சிக்க வேண்டியது தானே.. எப்ப பாரு வீட்டுல சண்டை சச்சரவுன்னு பத்தாத குறைக்கு எங்கேயோ தன் பாட்டில இருந்தவளை இழுத்துட்டு வந்து ஹாஸ்பிடல போட்டாச்சு.. ” என்று காச் மூச் என்று காத்தியிருந்தாள்..

அதனால் இப்போது எதையும் கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாதவன் அமைதியாக தங்கை அருகில் அமர்ந்து அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான்..

தணிகைவேலுடன் பரணியும் உள்ளே சென்றவன், எதுவும் பேசாமல் தாயைப் பார்த்தவாறு நின்று விட்டான்.. தணிகைவேல் தான் மனைவியை நலம் விசாரித்தவர் குரலே கலங்கிப் போய் இருக்க , ராஜிக்கே ஒரு மாதிரியானது.. ஏற்கனவே உயிர் பயம் ,மகள் நிலை எல்லாம் அவரைத்த் தாக்கியிருக்க இப்போது கணவனின் கலங்கிய குரலும் அதில் சேர்ந்து கொள்ள பரணியைப் பார்த்தவர் , எதுவும் கூறாமல் ஆதி பற்றி மட்டும் விசாரிக்க , அவள் சரியாகி விட்டாள் என்று கணவன் கூறவே ஆசுவாசமானார்.. ஆயிரம் இருந்தாலும் அன்னை மனம் இல்லையா?

கொஞ்ச நேரம் உள்ளே இருந்து விட்டு தணிகை வேல் வெளியேறவும் பரணி தயங்கி நின்றவன் , “ம்மா என்னால கண்டிப்பா லாவண்யாவ கட்டிக்க முடியாதும்மா.. ஆனா அன்னைக்கு சொன்ன மாதிரி ரெஜிஸ்டர் மேரேஜ் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்.. நீங்களா சுமிய எனக்கு கட்டி வைக்கிற வரை எதுவும் கேட்கவும் மாட்டேன்மா. இது மாதிரி எதுவும் பண்ணி அநியாயமா உங்க உயிரையும் போக்கி என்னையும் ரிஸ்க்ல மாட்டி விட்டு என் எதிர் காலத்த பாழாக்கிடாதீங்க. இப்போ கூட  என் ஸ்கூல்ல கூடப் படிச்ச பையன் மாமனார் ஹாஸ்பிடல் இதுங்கிறதால‌ தான் போலிஸ் கேஸ் அண்ட் எந்த ரிஸ்கும் இல்லாம அவன் பார்த்துக்கிறேன்னான்.. இல்லன்னா என்னாகிருக்கும்? பாத்துக்கோங்க‌.. என்றவன் வெளியேறினான்..

இப்போதும் அன்னையின் நலம் பாதி என்றால் சுயநலம் பாதி என்று பேசிச் சென்றவன் மாறுவது என்பது எளிதல்ல என்பதை நன்றாக அறிந்து கொண்ட ராஜி அமைதியாக யோசிக்க ஆரம்பித்தார்..

தாய் நலமாக உள்ளதாகக் கேட்ட பின்னே ஆதியும் அமைதியாகி அறைக்குள் சென்றாள்.. இன்று அவளை டிஸ்சார்ஜ் பண்ணுவதாகப் பேசியுள்ளார் டாக்டர்.. அன்புதான் மனைவியிடம் மனம் தாங்காது கேட்டான்..

“ஏன் நேத்து, அவளை ஒரு தடவை அம்மாவைப் பார்க்க விட்டிருக்கலாமே? பாவம் அவ முகமே சரி இல்லை..  அம்மாவும் எதிர் பார்த்திருப்பாங்களே? “என..

“எதுக்கு உங்க அம்மாவை பார்க்க விட்டு இன்னும் ரெண்டு நாள் அவளை இங்க இருக்க வைக்கவா? உங்கம்மா ஏன் எதிர்பார்க்கணும்? இவளும் தன்னோட பொறுப்புன்னு தெரிஞ்சு தானே அதைப் பத்தின கவலையே இல்லாம சாகப் போனாங்க.. அப்றம் என்ன பொடலங்கா பாசம் வேண்டிக் கிடக்குது?” அவளின் கேள்விக்கு அவனிடம்‌ பதிலில்லை..

“இதுல அவளும் யாரையும் இழுத்துட்டு வந்துடுவா.. அதைப் பார்க்க நான் உயிரோட இருக்கக் கூடாது, சாகணும்னு வேற அவகிட்டயே சொல்லிருக்காங்க உங்க அம்மா.. அவங்க வயசுக்கு பெத்த பொண்ணுக்கிட்ட எப்படிப் பேசணும்னு கூடவா தெரியாது.. ச்ச..” என்றவள் கணவனைப் பார்த்து

“மறுபடியும் மறுபடியும்‌ சொல்றேன், உங்கம்மாக்கு ஏத்துக்கிட்டு என்கிட்ட பேச வந்திங்க, இதே ஹாஸ்பிடல்ல இவருக்கு மனநிலை சரியில்லைன்னு சேர்த்து விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்..”

அன்பு அவளைக் கையெடுத்துக் கும்பிட்டவன், வாயை சிப் போட்டு மூடிக் காண்பித்தான்..  அவனை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு அவ்விடமிருந்து அகன்றாள்..

இங்கோ சுமி விடாது பரணிக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.. அவனும் சலிப்போடு என்ன பேசுவதென்று தெரியாது தொடர்ந்து அழைப்பை ஏற்காதிருந்தான்..

“இவன் அழைப்பை ஏற்காமல் இருக்கவே அடுத்து மெசேஜ் பறந்து வந்தது.. இப்போ மட்டும் நீ ஃபோன் ஆன்சர் பண்ணல, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் வீடு முன்னாடி வந்து நிற்பேன்..” அவள் மெசேஜைப் படித்தவன்,

அடுத்து அவள் அழைக்க முன்னே இவன் அழைத்திருந்தான்..

“சொல்லு சுமி இப்போ எதுக்கு நொய் நொய்ன்னு ஃபோன் போட்டு சாவடிக்குற?” இருக்கும் கடுப்பு மொத்தத்தையும் அவள் மேல் கொட்டினாள்..

“ஏன்டா பேச மாட்ட? நீ இது இல்ல இன்னும் பேசுவ.. பேசு.. பேசு.. நான் கேட்டிட்டு இருக்கேன்.. ம்ம்.. நீ நல்லா பேசு..”

“ப்ச் சுமி.. இங்க ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை போய்க்கிட்டிருக்கு.. இதுல நீயும் டென்ஷன் ஏத்தாத…”

பிரச்சனை என்றதும் பதறியவள் ,

“ஏன் ? என்ன  பிரச்சினை? கல்யாணத்துக்கு மாட்டேன்னு சொல்றாங்களா? என்னமோ நீ சொன்னா , நோ அப்ஜெக்சன்னு பில்டப்லாம் குடுத்ததை நம்பி தான் நான் எங்க வீட்ல உங்க வீட்ல பேசப் போறேன்னு சொல்லிருக்கேன்.. எங்க அண்ணா பத்தி தெரியும் தானே?” என்று அவள் எகிறவும்,

ஆமா பெரிய நொண்ணன்.. என தனக்குள் முனகியவன், “ப்ச்..

ஆதிய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன். கொஞ்சம் உடம்பு முடியாம. அது தான் வேற ஒன்னும் இல்லை..”

அவள் அண்ணன் பெருமை பேசியதும் பரணிக்கு என்றும் போல் இன்றும் புகைச்சலே.. எங்கள் வீட்டில் அண்ணன் முடிவு தான் இறுதி.. அவன் சொல்லி தான் தன்னை படிக்க அனுப்பினார்கள்.. அது இது என்று சர்வா பற்றிய உண்மைகளையே கூறியிருக்க, இவனுக்கு அது ஓவர் பில்டப்பாக தெரிந்ததில் தானும் ஆரம்பத்தில் இருந்து தன்னை அவளிடம் எக்கச்சக்கமாக பில்டப் செய்து வைத்திருந்தான்..

என் வீட்டிலும் என் முடிவு தான்.. தங்கையை படிக்க சேலமே அனுப்ப மாட்டேன் என்றவர்களிடம் வாதாடி அனுப்பி வைத்தது தான் தான்.. அவள் படிக்கக் காரணமே நான் தான்.. அது இது என்று ஏக போகமாய் அள்ளி விட்டிருந்தான்..

தன் ஊதாரித் தனத்துக்கு சம்பளத்துக்கு மேல் வரும் கிரடிட் கார்ட் பில்களை கட்ட தமையனிடம் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக வாங்கும் பணத்தையே தன் ஐடியாவில் வந்த இலாபத்தி்ன் பங்கு என்று பெருமை பீற்றி வருகிறான்..

அந்த பில்டப்புகளைக் காப்பாற்றவே இப்போது வரை தாயுடன் நிகழும் வாக்குவாதங்களையோ, தாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு வைத்தியசாலையில் இருப்பதையோ சொல்ல விரும்பவில்லை..

“ஓஹ் அப்படியா..” என்று இழுத்தவளுக்கு அந்த பக்கம் யாரோ ஒரு நர்ஸ் பேசுவது கேட்டது..

“சார்.. நீங்க தானே பரணிதரன், நேத்து அந்த சூசைடு கேஸ் அட்மிட் பண்ணது?” அவரின் கேள்விக்கு “ஆமாம் சிஸ்டர்..” என்று அவசரமாகப் பதில் கூறியவன் அழைப்பைத் துண்டித்தான்..

“உங்கள சீஃப் டாக்டர் கூப்பிடுறாங்க போய் பாருங்க..”

இந்த பக்கம் நர்ஸ் பேசியது அதற்கு அவனின் பதில் எல்லாம் துல்லியமாகக் கேட்டது சுமிக்கு.. அதில் அவளைப் பதட்டம் சூழ்ந்து கொள்ள மீண்டும் அவன் ஃபோனுக்கு அழைத்தாள்.

என்ன வருமோ என்று அச்சத்துடன் சீஃப் டாக்டர் அறை நோக்கி சென்று கொண்டிருந்தவன், இவளின் அழைப்பில் கடுப்பாகிப் போனான். அழைப்பை ஏற்காவிடினும் மறுபடி மறுபடி அழைத்து சாவடிப்பாள்.. மொபைலை அணைத்தும் வைக்க முடியாது.. ஆஃபீஸ் கால் வரும்.. ச்சை இம்சைடா என்றே ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்..

“பரணி உன் தங்கச்சிக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன? ஆனா ஏதோ சூசைடுன்னு நர்ஸ் சொல்லிக் கூப்பிட்டாங்க.. உன் தங்கச்சிக்கு நீன்னா அவ்ளோ பிடிக்கும்ன்னு சொன்னல்ல? உண்மையை சொல்லு.. என்னை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சூசைடு டிராமா எதுவும் பண்ணாளா என்ன?”

அவளுக்கு தாயின் சூசைடு விசயம் தெரிந்து விட்டதோ? தன் பில்டப் மொத்தம் வீணானதோ? என்று பதைத்தவன் வாயில் நெய்கேசரி வைத்த தித்திப்பை உணர்ந்தான், ஆதி சூசைடு பண்ணினாளா என்ற சுமியின் கேள்வியில்.. அதுவும் காரணத்தையும் அவளே ஊகித்து அவனுக்கு வேலையே இல்லாது பண்ணி விட்டாள்..

உடனே சற்றும் கூசாமல்,

“ம்ம் ஆமா.. அவளுக்கு சின்னதில இருந்தே என்னை ரொம்ப பிடிக்கும்.. இப்போ நான் உன்னை கல்யாணம் பண்ணா எங்க வீட்டுப் பக்கம் வராமலே இருந்திடுவேனோன்னு பயந்து, அவ எங்க மாமா பொண்ண கல்யாணம் பண்ண சொல்லி ஒரே அழுகை ஆர்ப்பாட்டம்.. லாவண்யாவும் ஆதியும் ரொம்ப நெருக்கம்.. அதால அவள கல்யாணம் பண்ணா நான் வீட்டாளுங்க கூட அட்டாச்டா இருப்பேன்னு இப்டி பண்ணிட்டா.. இனி வீட்ல என்ன முடிவெடுப்பாங்களோ? அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு வேற.. ” என்றவன் வேண்டுமென்றே மூச்சை இழுத்து விட்டான்.. சரி சீஃப் டாக்டர் வெயிட் பண்ணுறாரு வச்சிடறேன்..” என்று துண்டித்தான்.. அவர் ஏதோ இவனிடம் அப்பாயின்மெண்ட் வாங்கியது போல்..

அவன் கொடுத்தது மொத்தமும் வெட்டி பில்டப் என்று அறியாது அந்தப் பக்கம் கேட்டிருந்த சுமியின் முகத்தில் ரௌத்திரம் என்ற சொல் சிறியது என்பது போல் அதைத் தாண்டிய கோபாக்கினி கொழுந்து விட்டெரிந்தது..

பரணி லாவண்யாவைக் கட்ட சொன்ன காரணங்கள் உண்மை.. ஆனால் சொல்லிய நபர்  ராஜி… தன்னை பிஸ்தாவாகக் காட்ட அவன் அடித்து விட்ட கதையே அவன் தங்கையின் வாழ்வில் வெட்டப்பட்ட முதல் குழி என்றறிவானா பரணி? (அறிந்தால் மட்டும்?)

சுமியின் அக்னி ஜுவாலையில் ஆதி அந்தமாவாளா? இல்லை இரும்பாகி தன்னை இறுக்கிக் கொள்வாளா?

“புயல் மழை வரும்..

ஒரு புறம் வெயில் வரும்..

மறுபுறம் இன்பம் துன்பம்..

இரண்டும் இணைந்து..

ஆட்டிவைக்கும்..

வாழ்க்கையடா ஆ..

நதியில் வந்து..

மிதக்கும் ஓர் இலை..

போலே வாழ்க்கை இங்கே..

செல்லும் திசை தெரிவதில்லையே..

இறைவன் அட அன்றே

நம்

வழி பாதை எழுதி வைத்தான்..

திருப்பங்கள் புரிவதில்லையே..”

தொடரும்…..

Advertisement