Advertisement

அத்தியாயம் 3

சர்வா தங்கையிடம் திருமணம் பற்றி பேசி ஒரு வாரம் கடந்திருந்தது.. அன்றைய தினத்துக்குப் பின் அவளிடம் தேவையான பேச்சுக்கள் மட்டுமே பேசுபவன் வீட்டில்  அமைதியாகிப் போனான்..

தந்தையிடமும் பக்குவமாக சுமியின் காதல் விஷயத்தைச் சொல்லிவிட்டிருந்தான் அவன்.. அவருக்கும் சற்று ஏமாற்றமே என்றாலும் மகன் வருந்துவானேயென்று எதுவுமே காட்டிக்கொள்ளவில்லை..

ஆனால் அவரின் அந்த மௌனம் அவனுக்கு மன அமைதியைத் தரவில்லை.. அவரின் சாதாரண பார்வை கூட  உன் பொறுப்பில் விட்டேனே, இப்போது பார்த்தாயா நிலையை? என்று கேட்பது போலவே இருந்ததில் வெந்து போனான்.. 

சுமியின் படிப்பிற்கு சென்னை செல்ல ஒப்புக் கொண்டவர் வேலைக்கு என்றதும் சற்று தயங்கினார்.. தங்கையின் ஆசை என்று இவன் தான் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான்.. 

மகனின் பொறுப்புணர்வு தெரிந்தவராதலால் அவரும் மகன் சொன்னால் சரியென்று விட்டு விட்டார்.. மகன் பொறுப்பாக இருந்து என்ன மகள் அண்ணன் தனக்கு ஆதரவாக செய்தவற்றை அவள் அல்லவா துஸ்பிரயோகம் செய்திருந்தாள்..

இன்று மாலை  சந்திக்க வருவதாக பிரபா காலை ஃபோன் செய்திருந்தான்.. எப்படியும் முழுத் தகவலறிந்து தான் வருவான் என்பது சர்வாவுக்கு‌ நிச்சயம்.. இந்த விஷயத்தை தான் விசாரிப்பதாக ஊருக்குள் சிறிது கசிந்தால்  கூட அதற்கு ஆயிரம் தலைப்பில் கதை புனைந்து ஆளுக்கொரு எபிலாக் எழுதிவிடுவர்.. அதனால் தான் பிரபா உதவிக்கு வந்தான்.. காதலித்து விட்டாள் என்பதற்காக தண்ணீர் தெளித்து விட்டு விட முடியாதே.. பெண்ணைப் பெற்றவர்கள் திருமண விசயத்தில் அவசரமும் காட்ட இயலாது.. அதனால் தீர விசாரித்து தெரிந்து கொள்ளக் காத்திருந்தான் சர்வா..

இந்த யோசனைகளோடே சர்வா, தோப்பில் வேலைகளை முடித்து வேலையாட்களுக்கும் சம்பளம் கொடுத்து அனுப்பி வைத்தான்.. தன்னை சுத்தம் செய்தவன் தோப்பு வீட்டினுள் உடை மாற்றி வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து நண்பனுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் ..

அரைமணி நேரம் கழித்து கையில் ஃப்ளாஸ்க்கில் டீ , ரெண்டு கப் சகிதம் வந்தான் அவன்.. கொண்டு வந்த பானத்தை சூடாகவே இருவரும் பருகி முடித்தனர் ..

“சொல்லு பிரபா. நிலவரம் என்ன?”

நிலவரம் என்ன பெருசா? எப்போவும் போல தான். பையன் சுமி காலேஜ் தான். ரெண்டு வருஷம் சீனியர் . அவன் காலேஜ்ல இருந்து லீவ் ஆகும் போது தான் ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அப்றம் சுமி படிப்பை முடிச்சதும் தான் வேலை பார்க்கிற கம்பெனியில

இவனே ரெக்கமெண்ட் பண்ணி சேர்த்து விட்ருக்கான்..

இதை சொல்லும் போது அவன் குரலே இறங்கியிருந்தது.. தங்கைக்கு பிளேஸ்மெண்ட் கிடைத்துள்ளது என்று வீடு தேடி வந்து சொல்லி மகிழ்ந்த நண்பனின் நினைவு வந்து தாக்கியதில்..

சர்வாவும் அதைத் தான் நினைத்தான்.. எப்படியெல்லாம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்று.. தொழில் என்று வரும் போது ஆதி முதல் அந்தம் வரை அலசுபவன் ,பாச மிகுதியில் எதையும் ஆராயாமல் அப்படியே நம்பினான் அவளை.. அதையெல்லாம் நினைக்க இப்போது பெருமூச்சு தான் வந்தது ..

“அன்பு அதிகமானா முட்டாளா ஆகிடுவோம் இல்ல?” எனக் கேட்டவன் “நீ மேல சொல்லு பிரபா..” என அவனை ஊக்கினான்..

நண்பன் தோளை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தவன்,தொடர்ந்து கூறினான்..

“பையனுக்கு இங்க தர்மபுரி பள்ளிப்பட்டு தான் சொந்த ஊரு.. அவங்க அப்பா வழி பூர்வீக  நிலமும்  வீடும் ஒரு கோழிப் பண்ணையும் இருக்கு.. அதை அவங்க அண்ணன் தான் பார்த்துக்குறாங்க.. பையன் கொஞ்சம்  நாகரீக மோகம் உள்ளவன்.. அதான் இங்க பண்ணை, பண்ணையம் எல்லாம் பார்க்க கசந்துட்டு சென்னைலயே படிச்சி அங்கேயே செட்டில் ஆகிற பிளான்ல இப்போ சொந்தமா பிளாட் வாங்க பார்த்துட்டிருக்கான்.. ஐடி கல்ச்சர் வீக் எண்ட் பார்ட்டி உண்டு.. அதால சம்பளத்துக்கு மேல சொத்துல எனக்கும் பங்கிருக்குன்னு மாச மாசம் அண்ணன்கிட்ட ஒரு அமவுண்ட் கறந்திர்றான்.  அவங்க அண்ணன் இருபத்திமூனு வயசுலயே காதலிச்ச பொண்ணை கட்டிட்டு வந்ததுல உஷாராகி அவங்க அம்மா ,இவனை சென்னை அனுப்பும் போதே தன் அண்ணன் பொண்ணைத் தான் கட்டிக்கணும்.. இல்லன்னா நீ சென்னை போகவே வேணாம்ன்னு சொல்லவே அப்போதைக்கு எல்லாத்துக்கும் மண்டையாட்டி வச்சிருக்கான்.. ஆனா அவனுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல.. நல்லா நாகரீகமான பொண்ணா பார்த்து கட்டுறது தான் அவன் லட்சியம்.. இதுக்கும் மேல அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு.. நம்ம சேலம் கவர்மெண்ட் காலேஜ்ல தான் ஃபைனல் இயர் படிக்குது.. அவங்க அண்ணனுக்கு ஒரு பொண்ணு இருக்கு . இவ்ளோ தான் அவன் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஊத்திக் குடுத்து கலக்ட் பண்ண டீடேல்ஸ் ப்ளஸ் ஊர்ல ஒருத்தர்ட போட்டு வாங்கின டீடேல்ஸ்.. சொல்லி விட்டுக் கையை விரித்தான்..

பிரபா சொல்லி முடித்துப் பல நிமிடம் சர்வாவிடம் பலத்த அமைதி. பிரபாவும் அவனைக் குறுக்கிடவில்லை..

சிறிது நேரம் கழித்து பிரபாவே அவனைக் கலைத்தான்.. என்ன சர்வா யோசிக்கிற? அன்னைக்கே சொன்னேன் தானே? காதலிக்கிற யாரும் அவ்ளோ ஈசியா வீட்டில சொல்லமாட்டங்கடா. அது எப்படிப்பட்ட க்ளோசான பேரண்ட்ஸ்னாலும் சரி.. பாசமான அண்ணன் தம்பி அக்கா தங்கச்சினாலும் சரி.. அதுவும் பொண்ணுங்க..  ரொம்ப கஷ்டம்.. அவங்கவங்களுக்கு அவங்க நியாயம் விட்டுத் தள்ளு..”

“அதில்லடா இது வேற.. ஒரு தடவை நடந்து முடிஞ்ச விஷயத்துக்கு எத்தனை தடவை ஃபீல் பண்றது? இல்ல, அவன்கிட்ட நெறையா மைனஸ் இருக்கும் போலவே.. ஆளு ஊதாரி  அவங்க அம்மாக்கே உண்மையா இல்ல.. அவனை எப்டின்னு தான் யோசிக்கிறேன் இதுல தண்ணி வேற?”

“அடேய், நல்லவனே நூறு சதவீதம் நல்ல மாப்பிள்ளை தான் வேணும்னு பொண்ணைப் பெத்தவங்க எல்லாம் காத்திருந்தா உலகத்துல எந்த ஆணுக்கும் பொண்ணுக்கும் கல்யாண ப்ராப்தமே இருக்காது.. ஏன் உனக்கும் எனக்குமே இந்த ஜென்மத்தில கல்யாணம் நடக்காது.. அவன் வாரம் வாரம் குடிக்கிறான். நான் ஊர்ல ஏதும் விசேஷம்ன்னா குடிப்பேன்.. நம்ம ஊர்ல எப்டியும் மாசத்துல ரெண்டு விசேஷம் இருக்கும்.  அப்போ எனக்கு பொண்ணு பார்த்தா பொண்ணு வீட்ல போய் சொல்லுவியா? இவனுக்கு பொண்ணு குடுக்காதீங்க இவன் சரியான தண்ணி வண்டின்னு?”

அவன் கேள்வியில் அது வரை இருந்த யோசனை முகம் மாற, கேலியாய் நண்பனைப் பார்த்து “ஒரு பொண்ணு வாழ்க்கைய காப்பாத்த எதை வேணாம் பண்ணலாம்..” என்று தீவிரமாக சொன்னான்..

“அட துரோகிய! ம்ஹும் இந்த விஷயத்துல நான் ரிஸ்க் எடுக்கவே மாட்டேன்.. கல்யாணம் பண்ணிட்டு வந்து இது தான் என் பொண்டாட்டின்னு சொல்லி அறிமுகம் செய்வனே தவிர அதுக்கு முன்னால கடுகளவு கூட என் கல்யாண விஷயத்த்தை வெளிய கசிய விடமாட்டேன்..

சர்வா நண்பனின் முன்னெச்சரிக்கையில் மெல்ல சிரித்துக் கொண்டவன், “உன்னை சொன்ன சரி.. என்னை ஏன்டா சேர்த்து சொன்ன? நான் எப்போடா தண்ணியடிச்சுப் பார்த்த நீ?”

“ஓ தண்ணியடிக்கிறது மட்டும் தான் தப்பு. அது இல்லாததால சார்வாள் ரொம்ப நல்லவரு ஆகிடுவிங்களோ? ஊரே அதை ஒப்புக்கிட்டாலும் நான் அதை ஏத்துக்கவே மாட்டேன்.. உன் முன் கோபமே எல்லா ட்ரக்ஸயும் கலந்து அடிச்சது மாறித்தான்.. அதுவும் கெட்ட பழக்கம் தான?”

சர்வா அவனை முறைத்தவன் மூடு என்பதாய் சைகை காட்டி விட்டு எழுந்தான் வீடு செல்ல..

“உண்மையை சொன்னேன்..” என்றவாறு தோள் குலுக்கி தானும் எழுந்து கொண்டான்..

“சுமி ஏதோ சொன்னா அவனும் அவங்க வீட்டில பேச வந்திருக்கான்னு.. ரெண்டு நாள் பார்க்கலாம்.. இல்லன்னா நாமளே போய் பேசலாம்.. இதுக்கு மேல விட்டா.. சரி வராது..”

“சர்வா அன்னைக்கு சொன்னது அந்தப் பையன் மட்டும் முடிவு பண்ணதுன்னு தான்.. சுமிக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்ல..”

“அதான்டா. அப்டி எந்த ஐடியாவும் வந்துரக் கூடாதுன்னுறது தான் என்னோட எண்ணமும்..” சொல்லியவன் அமைதியாய் வண்டியில் ஏறி கிளம்பவே,

“எப்போ எப்டி மாறுவான்னே தெரில. ஆண்டவா! இவனுக்கு வாய்க்கப் போற பொண்ணுக்கு ரொம்ப மன தைரியத்தைக் குடுப்பா.. புலம்பியபடியே அவன் பின்னே தானும் விரைந்தான்..

                      **************

அந்த லைஃப் கேர் பிரைவேட் ஹாஸ்பிடலின் எமர்ஜென்சி  வார்டின் வெளியே நேத்ராவின் மடியில் உடல் நடுங்க கண்ணில் நீர் வற்றிப் போய் படுத்திருந்தாள் ஆதி.

நேத்ராவும் அவளுக்குப் பலவாறு சமாதானம் சொல்லி ஓய்ந்து விட்டாள்.. அவளுக்கு தன் மாமியார் மேல் தான் பற்றிக் கொண்டு வந்தது.. இப்படி எல்லோரின் நிம்மதியையும் குலைத்து இவர் என்ன சுகம் காணப் போகிறார் என்று..

ஒரு வாரமாக பரணியும் வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டு வீட்டில் தான் தங்கியிருந்தான்.. இந்த ஒரு வாரமும் தாய்க்கும் மகனுக்கும் வாக்குவாதத்தில் பஞ்சமிருக்காது.. ஆதி அந்த பக்கம் எட்டியும் பார்க்க மாட்டாள்.. பெரிய அண்ணன், அண்ணி, கயலுடன் பொழுதைப் போக்குவாள்.. அந்த நாளில் எல்லாம் இந்த நேரமா காலேஜ் லீவ் விடணும் என்று நொந்து கொள்ளாத நாளில்லை அவள்.. 

இன்றும் மதிய‌ உணவு முடிந்த கையோடு , வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க வீட்டில் அவர்கள் இருவருடன் ஆதிரா மட்டுமே தனித்திருந்தாள்.. தணிகைவேலனும் அன்புவும் பண்ணைக்கு சென்றிருக்க, நேத்ரா காலையே கயலைக் கூட்டிக் கொண்டு தாய் வீடுவரை சென்றிருந்தாள்.. இவளையும் அழைத்தாள் தான்.. இவளுக்கு உடல் கொஞ்சம் அசதியாக இருக்கவே வேண்டாம் இங்கேயே இருக்கிறேன் என்று விட்டாள்..

தாய்க்கும் தமையனுக்கும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருக்க ,சலிப்புடன் தன் அறைக்குள் சென்று ஒரு நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்..

ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும் தாயின் அறையில் ஏதோ விழும் சத்தம் கேட்டது.. அதில் திடுக்கிட்டவள் எழுந்து அவரறை நோக்கி ஓடினாள்.. அங்கே அண்ணன் இல்லாதிருக்கவே தாயைத் தேடினால் மேஜை மேலிருந்த செம்பு கீழே விழுந்து‌ நீர் நிலத்தில் சிந்தியிருக்க, அதன் அருகில் அமர்ந்து தண்ணீர் இல்லாமல் சில மாத்திரைகளை முழுங்கிக் கொண்டிருந்தார்.. அவர் மாத்திரை போடும் நேரமல்லவே இது என எண்ணியவளுக்கு நடுங்கிக் கொண்டு வந்தது.. சற்றும் தாமதியாது பாய்ந்து சென்று தாயை அணைத்துப் பிடித்தவள் அவரை மேலும் மாத்திரைகளைப் போட விடாது தடுத்தாள்.. “பரணிண்ணா.. பரணிண்ணா.. ” என்று உதவிக்கு வேண்டி உரக்கக் கத்திக் கொண்டிருந்தாள்.. அவன் அங்கே இருந்தால் தானே இவள் கூப்பிட்ட உடன் வருவதற்கு?

ராஜியோ அடங்காது அவளிடம் திமிறிக் கொண்டிருந்தார்.. 

“விடு என்னை, ஏய் ஆதி விடுடி என்னை.. உங்க ரெண்டு அண்ணங்களும் அவங்க எண்ணப்படி ஒருத்தியைக் கூட்டி வந்தாங்க.. நீயும் அந்த வழில ஒருத்தனை இழுத்துட்டு வருவ.. இதெல்லாம் பார்க்க நான் உயிரோட இருக்கணுமா? என்னை நிம்மதியா சாக விடுடி..” கேட்டுக் கொண்டே அவளை உதற பார்க்க, அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள், 

“நிச்சயமா இல்லம்மா.. நான் அப்படி ஏதும் பண்ண மாட்டேன்.. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.. இப்போ ஹாஸ்பிடல் வாங்கம்மா. பிளீஸ் வாங்கம்மா..” அவளும் என்ன செய்வாள். அந்த மெல்லிய உடலால் கனத்த உடலோடு திமிறும் ராஜியை சமாளிக்க முடியாமலும் தாய்க்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயத்தில் நடுங்கும் உடலோடு அழுகையும் சேர்ந்து கொள்ள மூச்சு விடவே வெகுவாய் சிரமப்பட்டாள்.. 

தன்னகங்காரத்தில் இருந்த ராஜி மகளின் நிலையைக் கவனிக்கவே இல்லை.. ஏற்கனவே காலையில் இருந்து கவனிக்க யாருமின்றி தொடர்ந்து தும்மிக் கொண்டிருந்தாள்.. நேத்ரா இருந்திருந்தால் ஏதாவது செய்து கொடுத்திருப்பாள்.. தாயும் மகனிடம் சண்டைக்கு நேரம் சரியாயிருக்கவே, இவளைக் கவனிக்கவில்லை.. இப்போது எல்லாம் சேர்ந்து வீசிங்கைக் கொண்டு வந்திருந்தது..

மகளின் பிடி தளர்ந்து ,அவளின் மூச்சுச் சத்தம் அதிகரிக்கவே அவளைக் கவனித்த ராஜி பதறிப் போய் விட்டார்.. 

“ஆதி என்னம்மா பண்ணுது? ஆதி இங்க அம்மாவ பாரு.. ” என்று அவள் கன்னம் தடவி முதுகை நீவி விட்டவர், முயன்று எழுந்து இளைய மகன் தான் இப்போது அருகிலிருப்பான் என்ற உண்மை உணர்ந்து ,அவனுக்கு ஃபோன் செய்தார்.. அவனும் தெய்வாதீனமாமாய் ஃபோனை எடுக்கவே, ஆதியின் நிலையைக் கூறி அவனை வரும்படி சொன்னவர், மகளை அணைத்துப் பிடித்து தொடர்நது முதுகை நீவி விட்டார்.. பரணி அப்போது சற்று முன் தான் கிளம்பி வெளியில் சென்றிருந்தமையால் அடுத்த ஐந்தாவது நிமிடமே வீடு வந்து சேர்ந்துதிருந்தான்.. அதற்குள் ராஜிக்கும் போட்ட தூக்க மாத்திரைகள் வேலை செய்ய ஆரம்பிக்க துவண்டு துவண்டு விழுந்து கொண்டிருந்தார்..

இருவரின் நிலை கண்ட பரணிக்கு சர்வமும் அடங்கியது.. அதுவும் அறையில் சிதறிக் கிடந்த‌ மாத்திரைகள் அவனுக்கு நிகழ்ந்த கதையை சொல்ல, தன்னால் இப்படி ஒரு நிலையை நிச்சயம் அவன் எதிர்பார்க்கவில்லை.. உடனடியாக தங்கையை தூக்கிச் சென்று காரில் அமர்த்தியவன்.. மீண்டும் தாயையும் அணைத்துக் கூட்டிச் சென்று அமர்த்தி ,விரைந்து மருத்துவமனை சேர்த்திருந்தான்..

சிகிச்சையின் பலனாய் கொஞ்ச நேரத்திலேயே ஆதிரா சரியாகியிருக்க, ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் எவ்வளவு கூறியும் கேட்காது, தன் குடும்பத்தாருடன் இருக்க வேண்டுமென்று கூறி நேத்ரா மடி சாய்ந்தவள் தான்.. இரவுணவு நேரமாகிறது இன்னும்  எழும்பவே இல்லை.. கயலைத் தவிர எல்லோரும் மருத்துவமனையில் இருக்க அன்பு தன்னைத் தேற்றிக் கொண்டு மருத்துவமனை நடவடிக்கைகளை கவனிக்க. தணிகைவேலனோ தளர்ந்து போய் அமர்ந்திருந்தார்.. பரணிக்கு எண்ணிப் பார்க்கா நிகழ்வுகளின் அதிர்ச்சி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையிலிருக்க நேத்ராவுக்கு மாமியார், கொழுந்தானார் இருவர் மீதும் பயங்கர கோபம் வந்தது. தங்கள் பிரச்சனையில் ஒரு சின்னப் பெண்ணை இப்படி ஹாஸ்பிடல் அனுப்பி வச்சிட்டாங்களேன்னு.. மற்றபடி மாமியாரின் தற்கொலை நாடகம் பற்றி அவள் கவலை கொண்டதாகவே இல்லை.. 

இவள் இருந்திருந்தால் இன்னும் நாலு மாத்திரையை இந்தா போடு என எடுத்துக் குடுத்திருப்பாள்..

இம்முறை என்னவானாலும் பரவாயில்லை.. மாமியாரை ஒரு கை பார்ப்பது என்று கருவிக் கொண்டே தன் மடியில் கிடந்த ஆதியின் தலையை மென்மையாய் கோதிக் கொண்டிருந்தாள் அவள்..

ஆனால் மாமியார் எழுந்து பேசியதில் நீங்களா  பேசியது என் மாமியாரே? நீங்களா பேசியது? என்று வார்த்தை வராது வாயடைத்து‌ நிற்கப் போகிறாள்.. யாருக்குத் தெரியும் தலையில் ஏதும் அடிபட்டிருக்கா என சோதிக்க மாமியாரை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க அனுப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.. 

தொடரும்…

Advertisement