Advertisement

அத்தியாயம் 2

கோடை காலங்களில் அதி வெப்பத்தையும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை குளிரையும் அள்ளி வழங்கும் வனவளமுள்ள தருமபுரி மாவட்டத்தின் பள்ளிப்பட்டியில்,

அந்த ஒரு வீட்டில் அவ்வளவு காலையிலும் காரசாரமான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.. தாய் வேண்டாம்.. வேண்டாம்.. என்க.. மகன் இல்லை நடந்தே ஆக வேண்டுமென்ற பிடிவாதத்தில் நிலையாக நின்றான்..

அன்பரசன் தாய் ராஜேஸ்வரியிடமும் தம்பியிடமும் வாதாடி ஓய்ந்து போய் சுவரில் சாய்ந்தபடி நின்று விட்டான்.. ஏற்கனவே அந்த நிலையில் தான் இருந்தார் அந்த வீட்டுக் குடும்பத் தலைவர் தணிகைவேலனும்..

இந்த கலவரங்களிலும் கடமை தவறாது மகள் கயல்விழியைக் கிளப்பி பள்ளியில் விட்டு வந்த நேத்ராவுக்கு கணவனின் நிலை காண அவ்வளவு குஷியாக இருந்தது . அது அவள் கண்களிலும் உதட்டின் ஓரத்தில் மறைக்கப்பட்ட சிரிப்பிலும் தெரிய கணவன் அவளை முறைப்புடன் பார்த்தான்..

அவள் வேண்டுமென்றே கணவனின் அயர்ந்த நிலையைக் கிண்டல் செய்ய என்றே, “என்னங்க குடிக்க எதுவும் எடுத்துட்டு வரவா? ரொம்ப களைப்பா தெரியறீங்க..” என்று அதீத அக்கறையை குரலில் காட்டி கண்ணில் கேலியுடன் கேட்டாள்..

அதுவரை மகனுடன் வாதாடிக் கொண்டிருந்த ராஜி ,இவளின் குரலில் கலைக்கப்பட்டு

“இதோ உன் அண்ணிக்காரிய பார்த்தல்ல.. என்ன தான் நான் பார்த்து வைக்காம உண்கண்ணன் கட்டிட்டு வந்தவன்னாலும் இங்க எல்லார் கூடவும் அனுசரிச்சுப் போறா.. வத்தலோ தொத்தலோ இவ நம்ம கூட ஒன்னுமண்ணா இருக்கதால சரியா போச்சு. இல்லன்னா என்னாகிருக்கும்?

நேத்ரா அவரின் உதாரண விளக்கலில் மாமியாரை முறைக்க முடியாது, கணவனை முறைத்தாள்.. இப்போது அவன் சிரிப்படக்கி நின்றான்..

அதில் முகத்தை ஒரு வெட்டு வெட்டி விட்டு சமையல் கட்டுப்பக்கம் திரும்பினாள் நேத்ரா.. யார் வாக்குவாதப் பட்டாலும் அவளுக்கு கடமைகள் காத்து நிற்குமே.  மனைவியைப் புரிந்தவனுக்கு என்றும் போல் கர்வமே இவள் என் மனைவியென்று.

வெளியே இவ்வளவு ஆரவாரம் நிகழ தன்னறையில் சாவகாசமாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆதிரா.. அந்த பச்சை நிற காட்டன் சுடிதாரில் துப்பட்டாவை இருபுறமும் ஸ்டெப் எடுத்து பின் செய்திருந்தவள் பேரழகியென மிளிர்ந்தாள்.. கண்ணாடியில் தன்னை ஒரு முறை சரி பார்த்தவள் வெளியே வராதே என்ற அறிவுரையுடன் அண்ணி உள்ளே கொண்டு வைத்த அந்த  மூன்று இட்லிகளையும் முழுங்கியவள் தண்ணீரையும் பருகி விட்டு சத்தமில்லாது பின் வாசல் வழியாக வெளியேறி சமையல் அறை ஜன்னல் வழி அண்ணிக்கு கையசைத்து போய் வருவதாகக் கூறிக்கொண்டு கிளம்பினாள்..

ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு சென்றவள் வீட்டின் மதில் சுவர் தாண்டியே அதை உயிர்ப்பித்து  ஓட்டிச் சென்றாள்..  அவள் மைண்ட் வாய்சில் உயிரே உயிரே‌ தப்பிச்சு எப்டியாவது ஓடி விடு.. என்று வடிவேல் பாடிக் கொண்டிருந்தார்.

ராஜியின் கண்ணில் பட்டிருந்தால் இவளையும் திடீர் உதாரணம் ஆக்கி மகனுக்குப் பாடமெடுத்துத் தான் விட்டிருப்பார். அதற்குள் இவள் படித்ததை மறந்துவிட்டு நடக்கவிருக்கும் பரீட்சையில் தாயின் சொற்பொழிவைத் தான் எழுதியிருப்பாள்..

ஆதிரா அடுத்த தெருவில் நான்கு வீடுகள் தள்ளியுள்ள தோழியின் வீட்டில் பைக்கை நிறுத்தியவள் நிவேதா வரவும் அவளையும் ஏற்றிக்கொண்டு பறந்தாள்..

சேலத்தின் கவர்ன்மென்ட் காலேஜில் BBA இறுதிஆண்டின் முதல் செமஸ்டர் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. இன்று இறுதிப் பரீட்சை முடிந்தால் செமஸ்டர் லீவு தான். அவள் நண்பி நிவேதா அதே கல்லூரியில் BA ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறாள்.. கல்லூரி சேர்ந்த ஆரம்பத்தில் பொதுப் போக்குவரத்தில் போய் வந்தவர்கள் பின் இடையிடையே ஸ்கூட்டியிலும் சென்று வரப் பழகினார்கள்..

நிவேதா வளவத்தபடி வர ஆதிரா தொடர்ந்து அமைதியாகவே வண்டி ஓட்டி வந்தாள்.  அவளுக்கு வீட்டிலே நின்றது சிந்தனை..

இப்படியே கல்லூரியும் வந்துவிட நண்பியிடம் விடை பெற்று பரீட்சைக்கு சென்றாள்.

         ******************

“ம்மா.. இது எதுவும் வேணாம்ன்னு சொல்லுங்களேன்மா..

“நேரம் ஆயிடிச்சு பாரு போய் ரெடியாகு சுமி . எல்லாரும் வந்துட்டா உங்க அண்ணன் என்னைத் தான் பிடிச்சு கத்துவான்..”

“நான் இந்த ஏற்பாடே வேணாம் நிறுத்துன்னு சொல்றேன். நீ என்னை ரெடியாகச் சொல்ற.. புரிஞ்சிக்கோம்மா ப்ளீஸ்.”

“இப்பிடியே மரியதையில்லாம வா, போன்னு பேசிட்டிரு.. உங்க அண்ணன் வந்து செவில்லயே ரெண்டு இழு இழுப்பான்.. அப்புறம் வீங்கின மூஞ்சியோட தான் மாப்ளை வீட்டுக்காரங்க முன்னாடி நிக்கணும்..”

“ம்மா.. வேணாம்மா..” தாயின் கையைப் பற்றியவள் குரல் கலங்கிப் போய் ஒலித்தது..

அவளைத் திரும்பிப் பார்த்த விசாலம்,

“இதை பாரு சுமி, சென்னைல படிக்கணும்னு வந்து நின்ன.. சரி படிக்கிறதுக்கு ஆசைப் படுற புள்ளையா ஏன் தடுக்கணும்னு உங்க அண்ணன் சேர்த்து விட்டான்.. அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சுது தானே, இனி கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னா அங்கேயே வேலைக்கு போகணுன்ன.. சரின்னு அவனும் அனுப்பி வச்சான்.

இப்போ கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவன் தான் முடிவெடுத்துருக்கான். அதை நீ ஏத்துக்க. மூணு வருஷம் வேலை பார்த்தது போதும் போய் ரெடியாகு..”

“ஐயோ அம்மா.. உங்களுக்குப் புரியலையா? என்னால முடியாது.. முடியாது… முடியாது…. ஆவேசம் வந்தவளாய்க் கத்தினாள் அவள்..

அதுவரை மகள் இப்போது கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லையென்று மறுக்கிறாளென்றெண்ணிய விசாலத்துக்கு அப்போது தான் விசயம் வேறோ என்று எண்ணத் தோன்றியது . அது தந்த திடுக்கிடலை அடக்கியவர் மகளைக் கூர்மையாய் பார்த்தார்.

“ஏன் முடியாது?”

“நான்…. நான்.. அங்க வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தரை  லவ் பண்றேன்..” பயமிருந்தாலும் இனியும் தாமதிக்கவியலாது திக்கித் திணறி சொல்லி முடித்து விட்டாள்.

கொஞ்சமேனும் இதை எதிர் பார்த்திருந்தாலும் கூட, இதைக் கேட்ட விசாலத்துக்கு அவ்வளவு அதிர்ச்சி.. தன் மகளா இவள் என்று? பெற்றவர்களுக்கு பிள்ளைகள் வளர்ச்சி உடலளவில் மட்டுமே தெரியும்.. உள்ளத்தில் தாங்கள் சிறுவயதில் பார்த்த அந்த குழந்தை மனதையே எதிர்பார்ப்பர்..

“சுமி.. என்ன சுமி சொல்ற? யாரு எவருன்னு தெரியாம ஏமாந்திருப்படி நீ.. உனக்கு என்னடி தெரியும் யார் எப்பிடின்னு? வேணாம் டி அதெல்லாம் மறந்துட்டு..”

“ம்மா, நிறுத்தும்மா. அதெல்லாம் ஒன்னும் இல்ல. என் காலேஜ் சீனியர் தான் அவரு.. இங்க பக்கத்துல தருமபுரி பக்கம் தான் அவங்க சொந்த இடம்..  அவர் தான் என் வேலைக்கு கூட ரெபர் பண்ணாரு.. எனக்கு அங்க நிறைய உதவியும் பண்ணிருக்காரும்மா. ரொம்ப நல்லவரும்மா.. அண்ணங்கிட்ட சொல்லி இந்த ஏற்பாட நிறுத்த சொல்லுமா.. அவரும் இது சம்பந்தமா பேசி முடிவெடுக்க தான் அவங்க வீட்டுக்கு போயிருக்காரு.. அவங்க வீட்ல பேசி சம்மதம் வாங்கிட்டு பொண்ணு பார்க்க வருவாங்கம்மா.. அப்பாகிட்ட கூட நானே எல்லாத்தையும் சொல்லிடுவேன்.. ஆனா அண்ணாகிட்ட நீங்க தான் மா பேசி சம்மதம் வாங்கித் தரணும் பிளீஸ்மா..

“உன் கல்யாணத்துக்கு எனக்கு அழைப்பு உண்டா சுமி?”

திடீரென ஒலித்த கணீர் குரலில் இருவரும் திகைத்துப் போய் சர்வாவை நோக்கினர்..

கதவு நிலையில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு காலைக் குறுக்கே ஊன்றி நின்று அவன் கேட்ட தோரணையே சுமியை எச்சில் விழுங்கச் செய்தது.

“பிரபா சொன்னப்போ கூட இப்போ எப்பவோ வந்த பழக்கம்னு தான் நினைச்சேன்.. ஆனா நீ சொல்றது பார்த்தா பல வருஷக் கணக்கு ஆகிருக்கும் போலவே.. ம்ம்?” கேட்டவாறு எதிரில் நின்றவன் .அவளை நோக்கிய பார்வையில் அத்தனை கூர்மை.. தன் தங்கை தன்னை ஏமாற்றினாளா? என்ற எண்ணம் வரவே மனம் தாங்கவில்லை அவனுக்கு..

“சர்வா, அவ சின்னப் பொண்ணு, ஏதோ தெரியாம..” பேச வாயெடுத்த தாயைத் திரும்பியும்  பார்க்காமல் பக்க வாட்டில் கை காட்டி நிறுத்தியவன் , “நீ சொல்லு சுமி..” என்று தங்கையிடம் பதில் வேண்டி நின்றான்..

“அண்ணா,.. ” என்ற அழைப்பைத் தாண்டி எதுவும் இல்லை அவளிடம்.. சொற்களுக்குப் பஞ்சமானது போல் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

“ஏற்கனவே ரொம்ப லேட் சுமி.. சோ எனக்கு தேவையானது எதுவோ அதை மட்டும் சொல்லு.. இதெல்லாம் என்னால விசாரிச்சு தெரிஞ்சுக்க முடியாம உன்கிட்ட கேக்கல.. என் வீட்டுப் பொண்ணப் பத்தி வெளில விசாரிக்கறது உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தான் அசிங்கம். அதான் உன்கிட்டயே கேட்கிறேன்.. சொல்லு..”

அதன் மேலும் அவன் பொறுமையை சோதிக்கவில்லை அவள்..

“அவர் பேரு பரணிதரன்.. என்ன விட ரெண்டு வயசு சீனியர்.. காலேஜ்லயே லவ் பண்றோம்.

ஊரு இங்க..” என்று சொல்லிக் கொண்டே போக அவளை நிறுத்துமாறு கை காட்டியவன்,

“நீ லவ் பண்றதுன்னு நான் கேள்வி் பட்டது உண்மையான்னு தான் எனக்கு தெரிய வேண்டி இருந்துச்சு.. யாரோ சொல்லி நான் நம்பினேன்னு இருக்கக் கூடாதில்லையா?”

அந்த கேள்வியே சுமியை சுட்டது.. யாரோ சொல்லி தான் நான் முதலில் அறிந்து கொண்டேன்.. நீ என் நம்பிக்கையை காப்பாற்றவில்லையென்று கூறுவதாக இருந்தது அவன் பேச்சு.. சுமி கண்ணில் நீர் திரையிட தலை குனிந்து கொண்டாள்..

“அப்போ யார் தடுத்தாலும் நீ அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்ப இல்லையா?”

அதற்கு அவளிடம் பதிலில்லை.

அவள் மௌனமே அவனுக்கு மறுமொழி சொல்ல, புரிந்து கொண்டான் சர்வா.

நீ சும்மா இரு சர்வா.. நாலு சாத்து சாத்தி கட்டி வச்சா வாழ்ந்துட்டு போறா.. நீ பார்த்த இடம் நல்ல வரன்னு சொன்னியே அதையே முடிச்சிடலாம். அவ இஷ்டத்துக்குலாம் அப்டி விட முடியாது..

தாய் பேசப் பேச சுமி முகத்தைப் பார்வையால் அளவிட்ட சர்வா,

தாயின் பேச்சில் அவள் முகத்தில் வந்த பிடிவாதத்தைப் பார்த்தவன் பெருமூச்சை இழுத்து விட்டவாறே,

“நான் வரன் பார்த்திருக்கேன்னு சொன்னது பொய்ம்மா..

அப்டி சொன்னதால தான் இப்போ இதை சொல்லிருக்கா.. இல்லேன்னா..” என்றவன் சொல்ல வந்ததை முழுதாய் முடிக்கவில்லை.. சுமிக்கு தான் அவனை நேருக்கு நேர் நோக்கவே சங்கடமாக இருந்தது..

சிறிது அமைதிக்குப் பின் சர்வா, “அவளுக்குப் புடிச்ச எல்லாத்தையும்  குடுத்துட்டு இதுல மட்டும் அவளுக்கு வேண்டாதத திணிக்க வேண்டாம்..

விடுங்கம்மா.. அவ புடிச்ச வாழ்க்கைய வாழ்ந்துட்டு போகட்டும்..” என தாயிடம் சொன்னவன், தங்கையிடம் திரும்பினான்..

“இனி நீ கல்யாணம் முடிச்சிட்டு தான் சென்னைக்குப் போற.. அது வரைக்கும் வேலைக்கு போணும்னா வொர்க் ஃபிரம் ஹோம் போடு.. அது முடியலனா வேலையை விட்ரு..” தீர்க்கமாக அவன் சொன்னதிலே புரிந்து போனது இனி திருமதியாக தான் சென்னை செல்ல முடியும் என்று..

எது எப்படியோ அவளுக்கு தான் விரும்பியவனுடன் திருமணம். அதுவே மகிழ்ச்சி.. தன்னால் காயப்பட்ட, ஏமாற்றத்தை விழுங்கிப் பேசும் அண்ணன் மனநிலை பற்றி எல்லாம் சிந்தனை இல்லை அவளுக்கு..

ஆனால் விசாலத்துக்கு தான் பயந்து வந்தது.. எங்கே இதைக் கொண்டு மகன் மகளிடையே கசப்பு வந்து விடுமோவென்று.. அதற்கு வழியமையாதவாறு இந்த திருமண ஏற்பாட்டை திட்டமிட வேண்டும் என்று குறித்துக் கொண்டார்.. மகன் திருமணத்தை முழு மனதாய் அங்கீகரித்தால் போதும்.. அதன் பின் மகளை என்றும் அரணாய் அவன் காப்பான் என்று நம்பினார்.. அதற்கு தன்னாலான காரியங்கள் நிச்சயம் புரிய வேண்டும் என நினைத்துக் கொண்டவர் மகளிடம் எதுவும் பேசாமல் வெளியேறிச் சென்றார்.. இனி கணவன் வர இன்னொரு பஞ்சாயத்து இருக்குமே..

சர்வா பிரபாவின் மரக்கடைக்குச் சென்றவன் கடையைத் தாண்டி பின்னால் சென்று அங்கே இருந்த நீர்த் தொட்டியில் சாய்ந்து நின்று கொண்டான்.. பார்வை எல்லாம் தொலைவில் எங்கேயோ நிலைத்திருந்தது..

இவன் வந்ததை அறிந்த பிரபா இவன் இருக்குமிடம் வந்து தோளில் தட்டினான்..

அவனைத் திரும்பிப் பார்த்தவன், “உண்மை தான் பிரபா . நான் தான்.. ப்பச்..” என்று தலையைக் கோதிக் கொண்டான்.. அது அவன் கண்ட ஏமாற்றத்தின் வலி..

“விடுடா லவ் பண்ற யாரு தான் வீட்ல சொல்லிட்டு பண்ணிருக்காங்க? அதெல்லாம் விட்டுத் தள்ளிட்டு அடுத்து என்னன்னு மட்டும் யோசி..”

“ஹ்ம்ம். அந்தப் பையன் பத்தி இன்னும் டீப்பா விசாரிக்கணும்.. அதை எல்லாம் சுமிக்கிட்ட சொல்லிட்டு அப்பறமும் அவன் தான் வேணும்னா …

நாம என்ன பண்ண முடியும்? கல்யாணம் பண்ணி வச்சிடலாம்..” சொல்லும் போதே அவன் தாடை இறுகியது.

“விசாரிச்ச வரைக்கும் பையன் அவ்ளோ கெட்டவன்லாம் இல்ல சர்வா.. கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சா நிமிர்த்திடலாம் ஸ்டேஜ் தான்.. அதும் உன்ன மாதிரி ஒரு மச்சான் கிடைச்சா திருந்தி தான ஆகணும்.. அவனுக்கு வேற வழியே இல்லையே.. பாவம் யார் செஞ்ச பாவம் அவன் தலைல விடிஞ்சிருக்கோ?”

அதுவரை இறுக்கத்திலிருந்தவன் நண்பன் சொல்லில் சின்ன புன்னகையோடு அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தான்..

“ஆஆ.. இதே தான். இப்டி பாசமா ஒரு தட்டு தட்டினா போதும்.. கண்ணுல தண்ணி வந்திடும்னு.. சுமிய வெங்காயம் கூட உரிக்க விடமாட்டான்..” முதுகை நெளித்தவாறு வாயடித்தவனை “போயி வேலையப் பாருடா அரட்டை.. நான் கிளம்புறேன்.. பார்த்துக்கோ..” என்றவன்

போய் விட்டான்.

அவனிடம்‌ கொடுத்த  வேலை பற்றி இனி சர்வாவுக்கு கவலையில்லை. சர்வாக்கு தன் மேலுள்ளளவு நம்பிக்கை பிரபா மேலும் உண்டு.. சுமியை சென்னையில் ஒரு பையனுடன் பார்த்தேன் என்ற பிரபாவின் ஒற்றை சொல்லை நம்பி தான் சுமியை அன்னை மூலம் இங்கு வரவழைத்திருந்தான்.. சொன்னது வேறு யாரேனுமென்றால் என் வீட்டுப் பெண்ணைப் பேசுவாயா? என்று வாயை உடைத்திருப்பான்..

                     **************

மாலை ஐந்து மணியளவில் அண்ணியுடன் கிச்சனில் அவர் சொல்லும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொண்டு அண்ணி சொல்லும் கதைகளை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆதிரா.. எல்லாம் காலையில் வீட்டில் நடந்த கலவரம் பற்றிய கதைகள் தான்.. மாமியார் இல்லாததால் நேத்ராவும் விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தாள்..

“அப்போ கூடிய சீக்கிரம் நம்ம வீட்ல ஒரு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சொல்லுங்கண்ணி..”

“ம்ஹும் . கலவரம் நடக்கப் போகுது.. உங்கம்மா ஒருத்தர்னாலே தாங்காது.. இதுல உங்க சின்னண்ணா வேற.. சொல்லவா வேணும்? பாதிப்பில்லாம புயல் கரையைக் கடக்குமா? தெரியாதே..”

“மாமியார் இல்லன்னதும் எவ்ளோ தைரியம் வருது உங்களுக்கு? அவங்களை எப்படியெல்லாம் பேசறீங்க? இருங்க அம்மா வந்ததும் நீங்க பேசினது ஒன்னு விடாம சொல்லித் தரேன்..” என போலியாக மிரட்டினாள்..

“சொல்றத சொல்லிக்கோ.. தைரியம்லாம் என்கிட்ட நிறைய இருக்கு.. தேவைப்படும் போது எடுத்து விடுறதுக்கு சேமிச்சு வச்சிருக்கேன்.. நான் என் தைரியம் மொத்தமும் காட்டுற அன்னைக்கு உங்கம்மா ஒரு மூலைல அடங்கி ஒடுங்கி இருப்பாங்க.. நான் நடுக் கூடத்துல இருந்து அவங்களை முறைச்சிட்டு இருப்பேன்.. நீ வேணா பாரு.. ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் இது தான் நடக்கும்..”

“ஷபா.. கேட்டுக் கேட்டுப் புளிச்ச கதை இது.. நீங்க உங்க தைரியத்தை எல்லாம் சப்பாத்தில காட்டி தேச்சு வைங்க.. நான் கயலை டியூஷன்ல இருந்து  கூட்டி வந்தப்றம் கல்லுல போட்டுத் தரேன்..” என்று விட்டு அவள் கிளம்ப, போகும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டாள் நேத்ரா..

காலம் காலமாக வேலை மேல் வேலை ஏவும் அதிகாரம் வழங்கப்பட்ட நாத்தனார் பதவியில் இருந்து கொண்டு   தானாக வேலையில் உதவுகிறாளாம்.. இவ

ர்கள் கலவரம் எதிலும் சிக்காமல் இவள் நலமாய் வாழ வேண்டும் என்பதே அவள் வேண்டுதல்..

புயல் சேதாரம் இன்றி கரையைக் கடக்குமா?

தொடரும்…..

Advertisement