Advertisement

அத்தியாயம் 1

காலை வேளைக்கான அனைத்து பரபரப்பும் முடிந்து அதன் பின்னுள்ள சற்றே அமைதியான சூழலில் எஞ்சிய வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அந்த வீட்டின் மருமகள் ஆதிரா.. தான் செய்யும் வேலைகளுக்கும் மேல் இடையிடையே மாமியார் ஏவும் வேலைகளையும் முக சுணக்கமேயின்றி செய்து கொண்டிருந்தாள்…

அருணாச்சலம் தான் மனைவியின் செயலில் அதிருப்தி அடைந்தார் .. அவர் மனைவியைக் கண்டிக்கலாம் தான்.. ஆனால் அதன் பின் விசாலாட்சியின் ஆவேசம் அதிகரித்து அதுவும் மருமகள் தலையிலே தான் விழுமென்றறிந்து, அமைதியாக தன் ரைஸ் மில்லுக்கு சென்று விட்டார் அவர்..

அப்போது மணி பதினொன்றிருக்கும்.. அந்த வீட்டின் அமைதி பிடிக்காதது போல் திடீரென  “அம்மா ..” என்ற அலறல் குரல் கேட்டு ஆதிராவுக்கு விதிர் விதித்தது.. போன வாரம் தான் ஒரு பஞ்சாயத்து முடிந்திருக்க இப்போது என்னவோ என்ற சலிப்புடன் கூடிய அச்சம் பிடித்துக் கொண்டது அவளுக்கு..

கையிலிருந்த வேலையை அப்படியே கிடப்பில் போட்டவள், கிச்சனிலிருந்து கிட்டத்தட்ட ஓடி வந்திருந்தாள்.. இல்லையென்றால் அதற்கும் பாடுவாரே மாமியார்.. இன்னும் கொஞ்சம் ஆடி அசைந்து வா என.. இம்முறை பிரச்சனை கொஞ்சம் இல்லை ரொம்பவே பெரிது தான் போல என விசாலத்தின் மடியில் விழுந்து விடாது கதறும் சுமித்ராவின் கதறல் கட்டியம் கூறியது ஆதிராவுக்கு..

“ஏய் சுமி, என்னடி ஆச்சு? என்னன்னு சொல்லிட்டு அழுடி.. ” எனக் கேட்டு விசாலமும் அவளுக்கு மேல் கதறிக் கொண்டிருக்க, அவளோ அதற்கு செவி சாய்க்காது கதறிக் கொண்டிருந்தாள்.

இந்தக் காட்சியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அப்படி திடீரென்று எல்லாம் போய் அவர்களுக்கிடையில் புகுந்து கொள்ள முடியாது.. அது அவளுக்கு இன்னும் ஆபத்து என்று அனுபவப் பூர்வமாய் அறிந்து கொண்டவள் அவள்.. அதனால் அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள்.

அமைதியாய் நின்றிருந்த அவளைத் திரும்பிப் பார்த்த விசாலம் மகளின் டென்ஷனை அவளைக் கத்தித் தீர்த்துக் கொண்டார்.

“ஏய், என்ன பார்த்திட்டிருக்க? என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா அவகிட்ட ? எல்லாம் வந்து வாச்சிருக்குங்க எனக்குன்னே.. கல்லு மண்ணு மாதிரி.. போ போய் என் புள்ளையையும் புருஷனையும் வரச் சொல்லு.. இவ அழறதை பார்த்தா சாதாரணமா எதுவும் இருக்கும்னு தோணல.. அவளுக்கு என்னன்னு தெரிய வரட்டும்.. இருக்கு உங்க எல்லாருக்கும்..”

தானே மகளுக்கு இன்னும் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தவரை பார்க்க இவளுக்கு அசூயையாக இருந்தது. இருந்தும் அவ்விடம் விட்டு அகன்றாள்.. அவர் சொன்னதை செய்ய.. கவனமாக முதலில் மாமனாருக்கு அழைத்து விவரம் சொல்லி விட்டு , எல்லா தெய்வத்தையும் வேண்டிக் கொண்டு கணவனுக்கு அழைத்தாள்.. ஃபோன் ரிங் ஒலியின் தாளத்திலே தன் இதயமும் துடிப்பதான பிரம்மை ஏற்பட்டது ஆதிராக்கு.

அந்தப் பக்கம் சர்வேஸ்வரன் அழைப்பை ஏற்கத் தாமதமானது கண்டு எடுக்காது விட்டால் தேவலாம் என இவள் சிந்தித்திருக்க அவளை ஏமாற்றும் விதமாக சர்வா சிறிது நேரம் சென்று அழைப்பு ஏற்றவன் , நேரடியாகவே “என்ன?” என்றான்.

அவன் கணீர் குரல் காதில் விழ பேச்சு மறந்த மழலையின் நிலையில் முழித்துக் கொண்டு நின்றாள்.. சொல்லப் போகும் விடயம் அப்படியானது.. இருந்தும் தன்னை சரிப்படுத்தி தத்தி தத்தி சொல்லி முடித்தாள்..

அந்த பக்க அமைதியில் கேட்ட அவன் மூச்சு சத்தமே ஆதிராக்கு கணவனின் ஆவேசத்தின் அளவை சொன்னது.. இவளுக்கு இப்போதே லேசாய் உதறத் தொடங்கியது.. அடுத்து என்ன வருமோ என்று..

“என்ன ஏதுன்னு எதுவும் சொன்னாளா?” உறுமலாய் வந்து விழுந்தது கேள்வி..

“இல்லங்க.. அத்தை ரொம்ப கேட்டுப் பார்த்தாங்க.. அண்ணி எதுவுமே சொல்லல..”

“ம்ம்…” அவ்வளவு தான்.. ஃபோனை வைத்து விட்டான்.. அவள் எண்ணியது சரிதான்.. என்றும் போல் இதுவும் அவள் தலையில் விடிந்து விட்டது.. இம்முறை எதுவோ அவளுக்கு நெருடலாகவே இருந்தது..

ஃபோனை ஸ்லாப்பில் வைத்தவள், அமைதியாக பூஜையறை சென்று அமர்ந்து விட்டாள்.. எந்த அசம்பாவிதமும் நிகழாமல் காக்குமாறு தென்னாடுடைய ஈசனைக் கேட்டு உருகி நின்றாள் அவன் பாதமே சரணம் என்று..

விசாலமும் அவளைத் தொல்லை செய்யவில்லை.. மகளைக் கவனிக்கும் பணி அவருக்கும் இருந்ததே.. சுமித்ராவோ அண்ணன், அப்பா வரும் வரை ஓயமாட்டேன் என கங்கணம் கட்டிக்கொண்டு விடாது அழுது கொண்டிருந்தாள்..

முதலில் வந்து சேர்ந்தது அருணாச்சலம் தான்.. அவர் வந்து உசுப்பியும் சுமித்ரா அசையவில்லை.. சர்வாவின் புல்லட் சத்தம் வாசலில் கேட்கவும் சுமி அதுவரை கதறியது குறைவே என்னும் படியாக, கணவனின் புல்லட் சத்தத்தில் விரைந்து வாசலுக்கு வந்த ஆதிராவையும் தள்ளி விட்டு விட்டு அண்ணனை சென்று அணைத்துக் கதறினாள்.

தங்கையைப் பிடித்துக் கொண்டே உள்ளே அழைத்து வந்து அமர வைத்தவன், வாசலருகே நின்ற மனைவியை முறைத்தான்..

சுமி தள்ளி விட்டதில் கதவோடு பலமாக மோதியவள், சுள்ளென்ற வலியை உணர அதை மறக்கடித்தது கணவனின் அக்னிப் பார்வை.. விரைந்து அவர்களிடம் வந்தவள் அமைதியாகத் தண்ணீரை எடுத்து தந்து விட்டு ஓரமாக நின்று கொண்டாள்..

அதை வாங்கித் தங்கைக்குப் புகட்டியவன் அவள் குடித்து சத்ரு ஆசுவாசமானதும் ,

“என்ன ஆச்சுன்னு சொல்லு சுமி? எதுக்கு இப்டி விடாம அழுதிட்டிருக்க? காரணம் கேட்டும் சொல்லாம இப்டியே அழுதுட்டிருந்தா வயசானவங்க என்ன ஏதுன்னு பதற மாட்டாங்களா? முதல்ல கண்ணை தொடை.. ” அவன் போட்ட அதாட்டலில் விசும்பியபடி கண்ணைத் துடைத்துக் கொண்டாள் சுமி..

“சர்வா.. அவளே கஷ்டத்துல நம்மள தேடி வந்திருக்கா.. அவள ஏன் சர்வா அதட்டிட்டு இருக்க? மெதுவா விசாரி.. அதட்டி உருட்ட வேண்டியவங்களை அதட்டாம அவளை அதட்டிக்கிட்டு..”

முணுமுணுப்பபாக ஜாடை பேசினார் அவர்..

அருணாச்சலம் மனைவியை நிறுத்துமாறு சொன்னவர்,

“இப்போ சொல்லு சுமி.. அண்ணனும் தான் வந்திட்டானே! என்ன பிரச்சனைனு இப்போவாச்சும் சொல்லேன்.? மாப்பிள்ளை இல்லாம தனியா வந்திருக்க? இப்போ இங்க வரணும்னா விடியக் காலை மூணு நாலு மணிக்கு கிளம்பிருக்கணுமே.. வர்றேன்னு எங்ககிட்டவும் சொல்லாம, தனியா இப்டி பாதுகாப்பில்லாம வந்திருக்கியே.. இடைல ஒன்னுக்கிடக்கா ஒன்னு ஆயி போச்சுன்னா என்ன ஆகும்? இதெல்லாம் யோசிக்க மாட்டியா?”

ஏற்கனவே பயந்து போயிருந்த விசாலம் கணவன் பேச்சில் நடுங்கிப்போய் மகளை‌‌ அணைத்திருந்தார்..

தந்தையின் கேள்விகளிலும் தாயின் பயந்த முகத்திலும், உடல் விறைக்க அவன் பார்வை ஆதிராவைத் துளைத்தது.. அவளிடம்‌ எதுவோ ஒவ்வாமை காணப்படுவதாக உணர்ந்தான் சர்வா..

ஆதிக்கோ , அவள் என்ன செய்தாள் என்ற‌ கேள்வி தான் ஒவ்வொரு முறை சுமித்ரா கலவரத்துடன் வரும் போதெல்லாம் அவளுள் எழும்.. ஒவ்வொரு முறை அவள் இங்கு‌ வரும் போதும் இவள் வாழ்க்கையில் அல்லவா புயல் வீசுகிறது?

அந்த நேரங்களில் தன் இரத்தங்களின் முன் தன் பாதியானவளின்‌ நியாயங்கள் அநியாயமாகிப் போகும் சர்வாவுக்கு..

“சாரி ப்பா, ஏதாவது பிரச்சனைன்னு உங்களைக் கூப்டா நீங்களும் அம்மாவும் பயந்துடுவீங்கன்னு எதுவா இருந்தாலும் எனக்கோ, இல்ல ஆதிக்கோ ஃபோன் பண்ணுன்னு அண்ணா தான் சொல்லிருக்காரு.. அதுனால அண்ணா ஃபோனுக்கு எடுத்தேன் அது நாட் ரீச்சபிள்னு வந்திச்சு.. அதான்..” என அடுத்து ஆதிராவுக்கு கொக்கி போட்டு நிறுத்தவே அவள் குறி தவறவில்லை.. சர்வா ஆதிராவைப் பார்த்தவன்,

“சுமி உனக்கு ஃபோன் பண்ணாளா?” என சந்தேகமாமாய்க் கேட்டான்..

அவன் கேள்விக்கு ஆதிரா தலையைக் குனிந்தாளே அன்றி பதிலேதும் சொல்லவில்லை.

அவள் அமைதி அவனைக் கரை காணா கொதிப்புக்குள்ளாக்கியது.

அவள் அவ்வாறே தொடர்ந்து நிற்க,

உன் ஃபோன் எங்க? அவனின் அடுத்த கேள்விக்கு ஆதிராவிடமிருந்து உடனடிப் பதில் வந்தது திக்கியபடியே..

“கிச்சன் ஸ்லாபில..”

சர்வா அங்கு விரைந்தவன் , மொபைலை கண்டு எடுத்து வரும்போதே அவள் மொபைலை செக் செய்து கொண்டு வந்தான்.. அதில் சுமியின் நம்பர் ப்ளாக்கில்  வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி கலந்த கோபத்துடன் அவன் அவளைப் பார்க்க, அவளுக்கு சர்வமும் நடுங்கியது.. இருந்தும் அவள் தன்பக்க விளக்கமாக ஏதோ சொல்ல வரவும் அவளை அதை சொல்ல விடாது இடைவெட்டினாள் சுமி..

“என்ன ண்ணா என் நம்பர் ப்ளாக்ல இருக்கா? இனி நான் அவளுக்கு உறவில்லைங்கும் போது அவ‌ அப்படித் தான பண்ணுவா.. அவளுக்கு தான் புதுசா ஒரு அண்ணி வரப் போறாங்களே.. அவங்க நம்பர் வேணா கான்டாக்ட்ல இருக்கான்னு செக் பண்ணிப் பாருங்கண்ணா.. அவ அண்ணன்காரன் குடுத்திருப்பான்.. எல்லாரும் என்னைய ஏமாத்துறாங்கண்ணா..” அழுகையில் விக்கி‌ விக்கி வந்தது சுமியின் வார்த்தைகள்.

அவள் பேச்சில் யாருக்கு அதிக அதிர்ச்சி என்று எடை போட்டுப் பார்த்தால் கூட அறிய முடியாது.. ஆதிராவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அந்நிலையிலும் அவள் மீதான குற்றச்சாட்டை வைத்தவளைப் பார்த்து என்ன பெண்ணிவள் என்று தான் எண்ணத் தோன்றியது..

விசாலம் அவள் சொன்ன சேதி கேட்டு மற்றவை மறந்து மகளை உலுக்கத் தொடங்கினார்..

“என்னடி சொல்ற? என் வயித்துல நெருப்பள்ளிக் கொட்டாம ஒழுங்கா நடந்ததை சொல்லுடி..” இப்போது அவர் குரலும் கலங்கிப் போய் வந்தது.. மகளின் வாழ்க்கைப் பிரச்சனை ஆயிற்றே..

“அம்மா நீங்க கொஞ்சம் அமைதியா இருங்கம்மா.. முதல்ல நீங்க உட்காருங்க.. கல்லாய் சமைந்து நின்ற தந்தையைப் பார்த்தவன் அவரையும் சமநிலைப் படுத்த முயன்றான்..

“அப்பா நீங்களும் உக்காருங்க ப்பா.. நீங்களே இப்டி இருந்தா அம்மாவை எப்டி சமாளிக்க? எதுவா இருந்தாலும் நான் சரி பண்ணிடுவேன் ப்பா..” இவ்வாறெல்லாம் அவர்களை ஆசுவாசப்படுத்தியவன் மனைவியிடம் மட்டும் தண்ணி எடுத்துட்டு வா ஆதிரா..” என்று கத்தினான்.. அவள் கொண்டுவரவே கட்டாயப்படுத்தி அவர்களைக் குடிக்க வைத்தவன், இப்போது தங்கையை நோக்கினான். அவளும் மெல்ல கேவிக் கொண்டு தானிருந்தாள்.. அவள் தலையைப் பாசமாக தடவி விட்டவன்,

“தெளிவா சொல்லு சுமி.. என்ன நடந்துச்சுன்னு.. உன் பக்கம் அண்ணன் இருக்கேன்.. தப்பு யார் பண்ணாலும் அதுக்கான தண்டனையும் அவங்களுக்குத் தான்.. இறுதி வார்த்தைகளை மனைவியைப் பார்த்தவாறே சொன்னவன் மனதில் அதற்குக் காரணம் ஆதிராவாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்ட

ஆதிராவிடம் அமைதியோ அமைதி.. சும்மாவே அவள் பேச்சு எதுவும் இங்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.. இதில் இன்று சாட்சியோடு சிக்கியிருக்கிறாள்.. எதுவும் சொல்லும்படியாக இல்லை அவள் நிலை..

“அண்..ணா ப..ரணி அங்க , அவங்க ஆபீஸ்ல மதின்னு ஒரு பொ..ண்ணு கூட சுத்திட்டிருந்தாரு.. ரொம்பக் க்ளோசா.. அது எனக்குப் பிடிக்கலன்னு சண்டை போட்டப்பலாம் என்கிட்ட , அவ கிட்டபேசல பேசலன்னு சொல்லிட்டு, எனக்குத் தெரியாம அவக் கூட சுத்திட்டிருந்திருக்காரு. இது தெரிஞ்சு நேற்று நான் இனி அவ கூடப் பேசக் கூடாதுனு முடிவா சொன்னப்போ….. என்றவள் மேலே சொல்ல முடியாமல் விசும்பினாள்..

கை முஷ்டி இறுக தங்கை சொன்னதைக் கேட்டிருந்த சர்வா, அவள் நிறுத்தியதும் “என்ன சொன்னான்?..” என்று கேட்டான், இரும்பை ஒத்த குரலில்..

“என்.. என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு, அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு நைட் ஷிஃப்ட் கிளம்பி போய்ட்டாருண்ணா.. எனக்கு அதுக்கு மேல அங்க இருக்க முடியல.. அதான் இங்க கிளம்பி வந்திட்டேன்..” சொல்லியவள் அழுத அழுகையில் ஆதிராவுக்கே பாவமாகிப் போனது..

தன் கணவனின் பார்வை தன்னையன்றி இன்னொரு பெண் மீது போனாலே பெண்களின் உயிர் ஆட்டம் கண்டுவிடும்.. பேச்சுக்கென்றாலும் இன்னொரு பெண்ணை தன்னோடு ஒப்பிட்டுப் பேசினாலே தாங்காது. இதில் காதலித்து மணம் முடித்த கணவன் இன்னொரு பெண்ணுடன் திருமணம் என்றால்? ஆனால் இது தேவையில்லாத கவலையென்று ஆதிரா அறிவாளே..  அவள் அழுகையில் மனம் இளகியவள், தன்னையும் மீறி சமாதானம் சொல்லி தன் தலையில் தானே மண்ணையும் அள்ளிப் போட்டுக் கொண்டாள்..

“அண்ணி ,நீங்க நினைக்கிற மாறி எல்லாம் இல்ல. அவங்க ……”

“ச்சீ நிறுத்து. நீயும் அவக் கூட.. அந்த மதிக் கூட பேசிட்டிருக்க தான? இப்போ வந்து ஆறுதல் சொல்ற மாதிரி நடிக்கிறியா? அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் நல்லவங்க மாறி நடிச்சே என் வாழ்க்கை கூட சேர்த்து என்  அண்ணன் வாழ்க்கையையும் கெடுத்திட்டீங்களே! பாவிங்களா..” ஆவேச அழுகை அவளிடம்..

ஆதிரா அவள் ஆவேசத்திலும் அர்த்தமற்ற குற்றச் சாட்டிலும் திகைத்துப் போனாள்..

சுமியின் பேச்சில் செய்வதறியாது ,தன்னிலை மறந்திருந்தவர்கள், ஆதிரா பேச ஆரம்பித்ததும் சுமியின் குற்றச் சாட்டில் மொத்தப் பேரின் பார்வையும் இப்போது ஆதிராவின் மேல் விழுந்தது.. அதுவும் சர்வாவின் பார்வையில் குளிர்க் காய்ச்சலே வந்து விடும் போலிருந்தது ஆதிராக்கு.

எல்லாரையும் முந்திக்கொண்டு விசாலம் தான் வெகுண்டெழுந்தார்.. “ஏ ஆதி! அவ சொல்றது உண்மையா சொல்லுடி. நீ.. அவ பேரு என்ன? ஆன் மதி.. மதி.. அவ கூட பேசினியா? சொல்லுடி” கேட்டுக் கொண்டே அவர் அவளை உலுக்கிய உலுக்கில் நடுங்கியவள்,

“அண்ணன் சொல்லி ரெண்டு தடவை பேசிருக்கேன் த்தை. ஆனா….” கணவனைப் பார்க்கும் தைரியம் இன்றி தரையைப் பார்த்தவாறே மென் குரலில் அவள் சொன்னதை முடிக்கவிடவில்லை விசாலம்..

“பார்த்தியா சர்வா இவ பண்ண காரியத்தை? ஊமைச்சி மாதிரி இங்க ஒரு சொல் பேசாம நமக்கு அடங்கி இருக்க மாதிரி இருந்திட்டு, அந்த பக்கம் சுமி வாழ்க்கையில விளையாடி நம்மள எல்லாம் பழி வாங்கப் பார்த்திருக்கா.. எவ்ளோ வெறி இருந்திருக்கும் இவளுக்கு.. சொந்த அண்ணனுக்கு என்ன வேலை பார்த்திருக்கா பார்த்தியா?”

சர்வாவுக்கு அதுவரை அவள் மேல் தளர்ந்திருந்த நம்பிக்கை இன்னும் கொஞ்சம் கூட தளர்ந்தது.. அதனால் தாய் பேசக் கேட்டவன் அதன் பின் அவன் அமைதியாகிப் போனான்.

“அத்தை…”

ஆதி அதுவரை அவரின் தவறான புரிதலுக்கு விளக்கம் சொல்லும் வாய்ப்புக்கு காத்திருந்தவள் ,அவரின் இறுதி வார்த்தையில் வழமையையும் மீறி கத்தியிருந்தாள் .

அவள் குரலின் பின்னோடே “ஆதிரா..” என்ற ஆக்ரோஷமான சர்வாவின் குரலும் எதிரொலித்தது..

அவள் பெயரின் முழுவடிவம் அவள் கணவன் வாயிலிருந்து மட்டுமே வரும் . அவன் இதுவரை அவள் பெயரை சுருக்கியழைத்த வரலாறு இல்லை. ஆனால் அவன் அழைப்பிலேயே அவன் உணர்வுகளைக் கொட்டி விடுவான்.. இப்போது உச்ச ஆத்திரத்தில் அழைப்பது புரிந்த ஆதிராவும் அமைதியானாள்..

“என் முன்னாடியே எங்கம்மாவ குரலுயர்த்தி பேசுறியா? அவங்க அவங்க பொண்ணு வாழ்க்கைக்கு நியாயம் கேக்குறாங்க.. கோபத்துல ரெண்டு வார்த்தை தடிச்சலா தான் வரும். நீ பொறுத்து தான் ஆகணும்..” என்று அழுத்தி அவள் மனதில் பதியும் படி அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஆதிரா எதுவுமே சொல்லவில்லை.. எல்லாம் பாழாய் போன பதி பக்தி..

“உன் ஃபோன்ல சுமி நம்பர் ப்ளாக்ல இருக்கிறதை பார்த்தது நான்.. அந்த பொண்ணு கூட பேசினேன்ன்னு வாக்குமூலம் குடுத்தது நீ.. அதை தான் என்னன்னு அவங்க கேக்குறாங்க.. அதுக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும்.. சரி அவங்களை விடு.. இப்போ நான் கேக்குறேன், டெய்லி அவங்க பேசினாங்க ,இவங்க பேசினாங்கன்னு அன்னைக்கு பேசின அத்தனை பேரையும்,‌ என்ன பேசினாங்கன்றதையும் நியாபகம் வச்சி சொல்ற நீ இப்போ கொஞ்ச நாளா சுமி, உங்க அண்ணன் பேசினாங்கன்னு சொன்னதே இல்லையே.. ஏன்? சுமி நம்பர் ப்ளாக்ல இருக்கு சரி, உங்க அண்ணன் கிட்ட பேசிட்டுத் தானே இருந்திருப்ப.. அதையேன் சொல்லல? அப்றம் அந்த பொண்ணு பேசினத கூட சொல்லலியே.. உன் பேச்சுல இவங்கல்லாம் அடிபடவே இல்லையே. ஏன் ஆதிரா?”

அவள் பதில் சொல்ல விரும்பவில்லை.. இந்த சூழ்நிலையில் சொன்னால் அது அவள் தப்பிக்கும் மார்க்கமாகப் பார்க்கப்படும்.. தன்னை இங்கே நம்பப் போவது யாருமல்ல.. என்று புரிந்து அமைதி காத்தவளுக்கு அந்த பட்டியலில் கணவனும் இருப்பது சொல்லொணா மன பாரத்தை தந்தது.. ஆனால் அவள் அமைதியே அவள் மேல் உள்ள குற்றத்தை அவள் ஒப்புக் கொள்வது போல் காட்ட சர்வா பேசிக் கொண்டே போனான்..

“நான் உங்ககிட்ட எதையுமே மறைக்கல.., உண்மையா இருக்கேன்ற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கி அதை என்னை நம்ப வைக்க நடிச்சுட்டு, இந்தப் பக்கம் இப்டி ஒரு வேலை……. எப்டிலாம் ஏமாத்திருக்க? ச்சே..”

நடிச்சிருக்கேன், ஏமாத்திருக்கனா? தொண்டைக் குழி வேதனையில் ஏறி இறங்க, கண்கள் குளம் கட்டி நிற்க சர்வாவை பார்த்தவாறு திகைத்து நின்றாள் பெண்.. எவ்வளவு பெரிய வார்த்தைகள்? அவளால் அவனிடம் நடித்தாள் என்ற அவன் வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை..

“இந்த சில நாள்ல நடந்த, இவ்ளோ விஷயம் மட்டும் போதுமாங்க, நீங்க நான் இப்டித் தான்னு முடிவு பண்ண?” தீனமான குரலில் என்றாலும் அழுத்தமாகக் கேட்க முனைந்தவள் தோல்வியுற்றாள்.. வேதனை அவள் தொண்டைய இறுகப் பற்றி இருந்ததில் அவள் குரல் கலங்கியே வந்தது..

சர்வா மனைவியின் குரலின் பேதம் கண்டு அவளுக்கு பதிலளிக்கப் போனவன்..,

“அய்யோ சுமி..”  என்ற தாயின் குரலில் பின்னால் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.. சுமி பாதுகாப்புக்கென தன் பாகில் இருந்த பாக்கெட் கத்தியால் தன் கையைக் கிழிக்கப் போனவளை அவள் பாகில் ஏதோ தேடுவதை முன்னமே பார்த்திருந்த அருணாச்சலம் கத்தியை வெளியே எடுத்த சமயம் அவள் கையைப் பற்றிப் பிடித்திருந்தார்..

நிலைமையைப் புரிந்து கொண்ட சர்வா, விரைந்து அவள் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கியிருந்தான்.. ஆதிராக்கு மட்டும் அவளின் செயலில் துளியும் பதட்டமில்லை..

சுமியின் தலையைத் தன்னோடு அணைத்துக் கொண்டு விசாலம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அருணாச்சலமும் சர்வாவும் அவள் கையைப் பற்றிக் கொண்டு தரையிலே அமர்ந்து விட்டனர்.. அருணாச்சலம் அவளைக் கவனிக்காது போயிருந்தால்?அவர் விரைந்து செயல்பட்டு அவள் கரத்தைத் தடுக்காது போயிருந்தால்?பின்னால் நடக்க இருந்ததை நினைத்துப் பார்க்கவே அவ்வளவு பயமாக இருந்தது மூவருக்கும்..

விசாலம் தான் அந்த நிலையிலும் ஆதிராவைக் கவனித்தவர் அவள் அப்படியே நிற்பதைப் பார்த்து,

“பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்டிக் கல்லு மாறி நிக்கிறா பாரு சர்வா.. இவளால என் புள்ள சாக போயிருக்கா..ஆனா இவ எவ்வளவு அழுத்தமா நின்னிருக்கா.. என் புள்ளைக்கு என்ன ஆனா தான் இவளுக்கென்ன கேடு? இல்ல இவ தினத்துக்கும் மருகிட்டு கிடக்க என் மகன் என்ன இவ அண்ணங்காரனை மாதிரியா அலையுறான்? ஒழுக்கமா தான இருக்கான்.. கல்யாணம் பண்ணி வச்சு ரெண்டு வருசம் ஆகியும் குழந்தை இல்லைன்னு ஒரு வார்த்தை பேச்சு வந்திருக்குமா இங்க அவளுக்கு? அந்த மிதப்பு இவளை இது இல்ல.. இன்னும் செய்ய வைக்கும்..”

“அத்தை.. உங்க பொண்ணுக்கும் எனக்கும் ஒரு மாச வித்தியாசத்தில தான் கல்யாணம் நடந்த நியாபகம் எனக்கு.. உங்க பொண்ணு ஒன்னும் <span;>பத்தைப் பெத்துப் போட்டுட்டு பதினொண்ணாவத பெத்து போட இங்க வந்திருக்கல.. பஞ்சாயத்தை கூட்டிட்டு தான் வந்திருக்காங்க..”

அவளின் உடனடித் தாக்குதலில் விசாலம் அதிர்ந்து தான் போனார்.. அமைதியான மருமகளின் இந்தப் பேச்சு அவருக்கு அத்தனை உவப்பானதாக இல்லை.
அவளின் குத்தலில் சுமியிடமும் அழுகை அதிகரித்தது..
“அப்போ இதை எல்லாம் மனசுல வச்சு தான் நீ இத்தனையும் பண்ணியா ஆதி?” என்று அழுகையினூடே அவள் கேட்டு வேறு வைக்க

சர்வா ஆதிராவைத் தான் இறுகிப் போய்ப் பார்த்திருந்தான்.. அதற்கு முன் அவன் தாய் பேசியது என்ன என்று சிந்தித்துப் பார்க்கத் தவறினான்.. விசாலமும் வார்த்தைகளைப் பிரயோகித்த விதம் அப்படி.. உன்னை நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லியே அப்படியும் உன்னை என்னால் சொல்ல முடியும்.. என்று அவர் சொன்னது புரியாது போனது சர்வாவுக்கு.. அதனால் அண்ணி.. என்று அழைத்து ஆதிரா அவளுக்கு எதுவோ சொல்ல முனைய அவளை அதட்டினான்..

“வாயை மூடு ஆதிரா.. எல்லா குழப்பத்தையும் பண்ணி வச்சிட்டு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு கூடக்கூடப் பேசிட்டிருக்க.. இன்னொரு தடவை நீ ஏதாச்சும் பேசினனா நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது.. இங்க என்ன நடந்திட்டு இருக்கு.. என்ன பண்ணனே புரியாம நான் இருக்கேன்.. இதுல நீயும் பேசிப் பேசியே என்னை வெறியாக்காத.. சொல்லிட்டேன்..”

மனதில் அவன் மீது ஏக வருத்தம் இருந்தாலும் , அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதன் பின் எதுவும் பேசாது அமைதி காத்தாள் ஆதிரா.. இங்கே இவள் அனைத்தையும் பொறுத்துப் போக இவனொருவன் தானே காரணம்.. அவனுக்கு அவள் எப்படியோ ? அவளுக்கு அவன் தான் உயிர் நாதம்..

அவள் அமைதியானாலும் விசாலம் அடங்கவில்லை.. “அவளைப் பேச விடு சர்வா.. மனசுல இருக்கற அழுக்கெல்லாம் வெளிய வரட்டும்.. போட்ட வேசம்லாம் இப்போ இவ பேசப் பேசக் கலையுது பார்த்தியா.. எம் பொண்ணுக்கு குழந்தை‌ இல்லன்னு தான உங்க அண்ணனுக்கு வேற பொண்ணை பார்த்து குடுத்திருக்க? உன் வாயிலயே வருதே உண்மை. அவள் மேல் வீண் குற்றம் சுமத்தினார் விசாலம்..”

அவர் கேள்வியில் ஆதிரா மனதில் அவ்வளவு ஆதங்கம், கோபம் எழுந்த போதும் கணவனுக்காய் அமைதி காத்தாள்..

ஆனால் அதைக் குலைக்கும் முயற்சியில் விசாலம் இருந்தார் போலும்..
“அது தான் உன் நோக்கம்னா, எனக்கும் என் பையன் குழந்தைய பார்க்கணும்னு ஆசை இருக்கும் தான? அதனால அவனுக்கு நல்ல ஆரோக்கியமான பொண்ணா பார்த்து கட்டி வச்சிடுறேன்.. என் பொண்ணு வாழ்க்கைக்காக தானே உன்னையே என் பையன் கட்டிக்கிட்டான்.. இப்போ அதுவே இல்லன்னா நீ எதுக்கு இங்க?”

அவ்வளவு தான் அவளின் கட்டுப்பாடு எல்லாம்..
“நான் எங்க அண்ணனுக்கு பண்ணது ஏதோ வேலைன்னு பழிச்சு சொன்னிங்க.. இப்போ நீங்களும்
உங்க பையனுக்கு அதே மாமா வேலைய தானே பார்க்கப் போறீங்க.. உங்களுக்கு புரோக்கர் வேல பார்க்க அசிங்கமா இல்லையோ..” கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் பேசி வைப்பேன் என்ற விசாலத்தின் பேச்சு இந்த தென்றலையும் புயலென கிளப்பி விட்டது..

அவள் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாய் வந்த “ஆதி , ஏய்..” என்ற குரல்கள் மத்திமமாய் அவள் காதில் கேட்க, அவள் கன்னம் எரிதழலாய் எரிந்து கொண்டிருந்தது சர்வா அவளை இழுத்துவிட்ட அறையில்..

இந்த விசயத்தில் சுமியையே பாவம் பார்த்தவளுக்கு ,தன் கணவனுடன் இன்னொரு பெண், அது யார் என்ன என்று சொல்லவில்லை என்றாலும் தன்னிடத்தில் ஒருத்தி என்ற எண்ணமே‌ அப்படி எரிந்தது.. அந்த கொதிப்பில் வார்த்தைகளை விட்டவள், கணவனின் அறையில் தான் தன் சொல்லின் வீரியம் உரைத்தது.. இருந்தும் அவள் அதற்காக வருந்தவில்லை.. அவளைப் பொறுத்தவரை சர்வாவுக்கு வேறு மனைவி என்ற அவரின் வார்த்தை லட்சம் கெட்ட வார்த்தைகளுக்கு சமம்..

சர்வாவுக்கு அவள் பேசியது மீண்டும் மீண்டும் தன் காதில் ஒலிப்பது போல் இருக்க ஆத்திரம் அடங்காதவன்,
“என்ன பேச்சுடி அது? ஹான்? யாரைப் பார்த்து உன் நாக்கு இப்பிடி நீண்டிச்சு?” எனக் கேட்டுக் கொண்டே அவளை மீண்டும் அடிக்கப் பாய்ந்தவனை அருணாச்சலம் பிடித்துக் கொண்டார்..

“என்ன சர்வா பழக்கம் இது? கட்டின பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிற? அதுவும் எல்லார் முன்னாடியும்.. இதை தான் உனக்கு சொல்லிக் குடுத்து வளர்த்தேனா? ஏற்கனவே இங்க ஒருத்தி வாழ்க்கை அந்தரத்துலன்னு சொல்லிட்டு இருக்கா.. இதுல நீயும்.. ப்ச்..”

தந்தை சொல்லக் கேட்டவன் தன்னை சற்று அமைதிப் படுத்தி
“இது சரி வராது.. நீ முதல்ல கிளம்பி உங்க வீட்டுக்குப் போ.. இனி நீ இங்க இருக்க வேணாம்.. உங்கண்ணன கூப்டு பேசினதும் முடிவெடுக்கிறதா? இல்ல அவனையே முடிக்கிறதான்னு பார்த்துட்டு மேல மத்ததை பேசிக்கலாம்.. இப்போ நீ கிளம்பு.. நான் வெளிய போறேன்.. திரும்ப நான் வரும்போது நீ இங்க இருக்கவே கூடாது.. ” என்று விரல் நீட்டி எச்சரிக்கையாய் சொன்னவன்
தந்தை சொல்ல வந்த எதையும் காதில் கேளாது கிளம்பி சென்று விட்டான்.. அவன் விட்டுச் சென்ற இடத்தில் கண்ணீரோடு வேரோடி நின்ற தன் மனையாளின் எண்ணம் பற்றி துளியும் தன் கருத்தில் ஏற்றாதவன் மனதில் இப்போது இருப்பதெல்லாம் தங்கையின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையே.. அதனால் முதலில் தங்கை சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என அறிய அவள் கணவனைப் பற்றி புலன் விசாரணை செய்யக் கிளம்பி விட்டான்.. புண்பட்டு நிற்கும் மனைவியை மறந்தே போனான்..

அருணாச்சலம் மட்டும் தான் அங்கே அவளுக்கு ஆதரவுக்கென்று இருந்த ஒரே ஜீவன்.. விசாலம் சுமி இருவரும் இது தான் தங்கள் விருப்பமும் என்பது போல் இவ்வளவு நேரம் போட்ட ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக அமைதியாக நின்றனர்.. தாய் அதுவும் விசாலத்துக்கு தன்னை எதிர்த்து பேசிவிட்டாளென்ற துவேசமும் கூட கண்ணீர் வழிய நின்றிருந்தவளை கண் குளிர ரசித்திருந்தார்..

ஆதிரா உள்ளே மொத்தமாய் உடைந்து போயிருந்தாள்.. தன்னையும் மீறி வழிந்த கண்ணீரை அழுந்த துடைக்கவே அவன் அடியில் கன்றிய கன்னம் வலியில் எரிந்தது.. அதற்கும் ஆயிரம் மடங்கு பலமாய் உள்ளம் செந்தீயில் எரிந்து கொண்டிருந்தது.. அமைதியாய் மாடியேறியவள், தன் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறிச் சென்றாள்.. அருணாச்சலம் இறுதி முயற்சியாய் மருமகளிடம் பேச வந்தார்.. அவள் அங்கிருந்து செல்வதில் அவருக்கு உடன்பாடே இல்லை..

அவர் பேச முன்னே,
“ப்ளீஸ் மாமா , ஏற்கனவே நிறையப் பழியை சுமந்து நிக்கிறேன்.. இதுல உங்க பேச்சையும் மீறி போய்ட்டேங்கிற சங்கடத்தை எனக்கு குடுத்திராதீங்க..” சோர்ந்த குரலில் சொன்னவளிடம் மேற்கொண்டு எதைப் பேச? ஹ்ம்ம்.. என்று பெருமூச்சை விட்டவர்,

“போய்ட்டு ஃபோன் பண்ணும்மா. இல்ல இரு.. நான் கூடவே வந்து விட்டுட்டு வரேன்..” என்று அவர் உடன் கிளம்ப,

“வேணாம் மாமா , தற்கொலை பண்ணி மத்தவங்க வாழ்க்கையை கெடுக்குற எண்ணம், மற்றவங்கள வாழ்நாள் குற்ற உணர்ச்சில தள்ளுற சின்ன புத்தி எல்லாம் எனக்கில்லை..” சுமிக்கு குத்தும் மொழி‌ சொன்னவள் தயங்கியபடியே,
“மன்னிச்சிருங்க மாமா, உங்க முன்னாடியே உங்க மனைவியை அப்டி பேசிருக்க கூடாது. ஆனா …”

“புரியுதும்மா.. அவளும் ஒன்னும் குறைச்சலா பேசிடலயே..” நீ போய் ஃபோன் மட்டும் பண்ணு போதும்.. இதெல்லாம் எதுவும் நினச்சுக்காத.. எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்..”

அவருக்காக ஒரு வறண்ட புன்னகையை சிந்தியவள் அங்கிருந்து கனத்த மனதுடன் விடை பெற்றாள்.. பிரச்சனை சீக்கிரம் சரியாகி விடும்.. தன் கணவனின் வல்லமை அறியாதவளா அவள்? ஆனால் காயப்பட்ட அவள் மனதுக்கு மருந்து போட்டு குணமாக்க சர்வா இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டுமே..

தொடரும்…

Advertisement