பெண் அழைக்க மாப்பிள்ளை விட்டார்கள் வந்து விட்டனர் கைகள் சில்லிட ஒரு வித நடக்கத்தோடு இருந்தாள் நமது கள்ளி.
ஆம் நாட்கள் விரைய இன்று பரிசத்துக்கு அழைத்துப் போக வந்திருந்தனர். இது வரை இருந்த தைரியமெல்லாம் எங்குச் சென்று ஒளிந்து கொண்டதோ தெரியவில்லை.
அவளும் பெண் தானே பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் போது அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அது மட்டுமா பேச்சியை விட்டு அவள் எங்கும் சென்றது இல்லை.அவரைத் தன்னோடு அழைக்க மனமும் ஒப்பவில்லை பெண்ணைக் கொடுத்த வீட்டில் தங்க சொல்ல கண்ணாம்பாவிற்கும் சரியாக படவில்லை.
வாரம் ஒரு முறை வந்து பார்த்து செல்லவதாக பக்கத்து வீட்டில் பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி விட்டாள் அதுவும் அரை மனதோடு தான்.
பச்சையில் மஞ்சள் பார்டர் வைத்த சேலையைக் கட்டி மதுரை மீனாட்சி போல் வந்த கண்ணாம்பாவை பார்க்கையில் பேச்சியின் கண்கள் உடைப்பெடுத்தது கிழவி!..என்ற கூவலோடு பேச்சியை இறுக்கக் கட்டி கொண்டு அழுது தீர்த்தாள்.
இதுவரை எப்படியோ இனி நான் அவர்களது உடமை என்று எண்ணும் பொது அதனை ஏற்று கொள்ள முடியவில்லை.
அழுதே பார்த்திடாத பேத்தி அழுகவும் பேச்சிக்கே வருத்தமாக இருந்தது இருந்தும் அவளைத் தேத்தும் பொருட்டு
“என்னத்துக்கு அழுவுறவ எம்ம ராசா உம்ம தாங்கு தாங்குனு தாங்குவாகக் கண்ணு அவர் மனசு கோணமா சூதனமா நடந்துகிடு” என்று சொல்லியவர்
அவளை இழுத்து அவள் காதுக்குள் “கண்ணு அந்த குருவி கூட்டுக்குள்ள கருநாகமும் இருக்குச் சாமி பதமா கடந்து போகணும்” அன்று வீம்புவின் அத்தைகள் பார்வையை எண்ணி அவர் சொல்ல
“இந்தப் பேச்சி பேத்திகிட்ட எதுவும் பழிக்காது கிழவி எம்மகிட்ட ஓரண்டு இழுக்க யாருக்குத் தைரியம் இருக்கு சொல்லும் நீ கண்டதையும் காதுல போடாத கிழவி உம்ம பேத்தி அம்புட்டு நாகத்தையும் புடுச்சு தலையைச் சுத்தி அப்படிக்கா தூக்கி வீசிடுவேன்”
அவள் சொல்ல பேச்சி பலமாகச் சிரித்தார் “செஞ்சாலும் செய்வடி எம்ம கொட்டி சிறுக்கி” அத்தனை ஆனந்தம் அவர் குரலில்
வாழ்க்கை பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆயிற்றே தனது பேத்திக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை அவர் விளக்க அதற்கு அவசியம் இல்லை என்பது போல இருந்தது கள்ளியின் பதில்.
காரில் ஏறும் போது ஒரு முறை பேச்சியைப் பார்க்க அவர் கண்கள் பேத்தியிடம் கெஞ்சியது அந்நிலையிலும் அவளுக்குச் சிரிப்பு எட்டி பார்க்க.
ஐந்து விரல்களையும் மடக்கி குத்திடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றாள் வேறு ஒன்றுமில்லை அன்று வீம்பு செய்த முத்தம் யுத்தத்திற்குப் பிறகு அவள் அவனது அழைப்பை ஏற்க வில்லை பேச்சி தூது போக
“அடிப்பாவி எம்ம உசுருக்கே வெட்டு வைக்கா எம்ம ராசா பாடு திண்டாட்ட ந்தேன்” இப்போது அதை எண்ணி தான் சிரித்தாள்.
கேலியும் கிண்டலுமாக மண்டபத்தை அடைந்தனர் கள்ளி காரில் வர அவரை தொடர்ந்து அவர்களது சொந்தமும் பேச்சியும் வந்தார்.
மாப்பிள்ளையின் தங்கைகள் ஒரு பத்து பெண்கள் ஆரத்தி எடுத்து அவளை வரவேற்க சிறிதே சிறுது பதட்டம் அவளுள்
“ஆத்தி எம்புட்டுச் சனம் கருப்பண்ண சாமி என்ன காப்பாத்து உமக்கு கெடா வெட்டி பொங்க வைக்கேன்” அவசர வேண்டுதல் வைக்க அவரோ அட போமா உன் சங்காத்தமே வேண்டாம் என்று இரு காதுகளையும் இறுக்க மூடிக்கொண்டார்.
பேச்சி வாய்க்கொள்ளாச் சிரிப்புடன் முதல் வரிசையில் உட்காந்து தனது பேத்தியின் சடங்குகளைக் கண்ணில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
எங்கே தனி மரமாக நின்று விடுவாளோ என்று பயந்தவர் இன்று கண் முன்னே கல்யாண கோலத்தில் பார்க்கவும் அவருக்கு எல்லை இல்லா ஆனந்தம்.
கண்ணம்பாவை அமர்த்தி நலுங்கு வைத்து அன்னலட்சுமி அவளுக்குத் தட்டில் உடையைக் கொடுத்து மாற்றி வர சொல்ல.
காலில் விழுந்து பணிந்து அந்தத் தட்டை வாங்கிக் கொண்டாள் அதுவரை வீம்பின் தரிசனம் கிட்டவில்லை அவளும் தேடவில்லை என்பதே உண்மை,
ஆனால் கண்ணாம்பா நுழைந்ததில் இருந்து மணப் பெண் அறைக்குச் செல்லும் வரை அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்.
கண்ணாம்பா அறைக்குச் சென்று கால் மணி நேரம் ஆகியும் வெளியில் வராததால் அன்னலக்ஷ்மியே சென்று கதவை தட்ட கதவை திறந்த திவ்விய தனது மாமியாரை பார்த்து மருண்டு விழித்தாள்.
அவளது பதட்டத்தை பார்த்தவர் அவசரமாக உள்ளே நுழைய அங்கே வேகா மூச்சுகளுடன் தன்னைச் சமாதானம் செய்ய போராடும் மூத்த மருமகளிடம் நெருங்கினர்.
“என்னடா உடம்புக்கு எதுவும் முடியலையா” என்று பதறிய அன்னலட்சுமி அவள் கழுத்தை தொட்டு பார்க்க அது மீதமான சூட்டில் தான் இருந்தது.
“என்னம்மா”அவர் வாஞ்சையாக அழைக்க
“அம்மா இந்த உடுப்பெல்லாம் புடிக்காது புடவை தாங்க கட்டி யாறேன்” என்று சிறு பிள்ளை போல் அடம் பிடிக்க அவர் கையைப் பிசைந்தார்.
அவரா எடுத்தார் தன் மகன் அல்லவா தேர்வு செய்தான் அன்னலட்சுமி சென்றும் நேரம் கடத்த பேச்சியே வந்துவிட்டார்.
அங்கே வந்தவர் என்ன நடந்திருக்கும் என்று யூகித்தவாறு “அங்கன எம்புட்டு நேரம் பெரியவுக காத்து கெடக்காங்க இங்க என்னடி கூத்து கட்டிக்கிட்டு இருக்க” என்று பேச்சி வாய்யை விட பிடித்து கொண்டாள் கள்ளி
“எல்லாம் உம்ம சொல்லணும் கிழவி” என்று அவர் மீது பாய
“இவள அடக்க நம்ம ராசாத்தேன் சரி இருடி வரேன் நீ வா தாயி அவ வருவா” என்று அன்னலக்ஷ்மியையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
சிறிது நேரத்தில் கதவு அடைக்கப் பட திடுக்கிட்டு நிமிர்ந்தவள் கண்டது வீம்புவை தான் அவசரமாகப் புடவை சுத்தி கொண்டாள்.
அவளை நெருங்கியவன் அந்த லெஹங்காவை கையில் எடுத்து கொடுக்க வந்ததே கோபம் “இங்கன பாருக எமக்கு இந்த உடுப்பெல்லாம் புடிக்காது புடவை மட்டுந்தேன் கட்டுவேன் அப்படி இல்லனா நடையைக் கட்டுவேன்” என்று உறுதியாகச் சொல்ல.
அழகான வஞ்ச புன்னைகையுடன் அவன் மறைத்து வைத்திருந்த புடவையை எடுத்துக் கொடுத்தான் அதற்குத் தகுந்தார் போல் ரவிக்கையும் இருந்தது.
அவன் சிரிப்பில் கடுப்பானவள் “இத முதல கொடுக்குறதுக்கு என்ன எல்லாத்துலையும் வீம்பு கருவாயா” என்று வசை பாட அவளிடம் புடவையைக் கொடுத்தவன்
வேறு பேச்சுகளின்றி நகர்ந்து போக அவனைப் பார்த்த கள்ளிக்கு சந்தேகம் “என்ன கருவாயன் பேசுமா போரார் நம்பக் கூடாது சாமி கண்ணாம்பா ஏமாந்துடாத எமகாதகன்” அவள் எண்ணி முடிக்கவில்லை.
வீம்புவின் திருவாய் மலர்ந்தது “நீ பண்ணுற அலும்புக்கெல்லாம் சேர்த்து வச்சு நாளைக்கி இரவு கொடுப்பேன்” என்று சொல்ல அதற்கும் அசையாமல்
“பார்ப்போமே”ன்று சவால் விட்டாள் தனது ஒற்றைப் பார்வையால்.
அவள் உடை மாற்றி வர அனைவர் முன்னிலையும் பரிசம் போடப்பட்டது. பின்பு இக்காலத்துக்குத் தகுந்தாற் போல மோதிரம் மாற்ற பட ஒழுங்கு முத்தாக மோதிரத்தை மட்டும் மாற்றினான் நமது வீம்பு.
அதற்குப் பிறகு உறவினர்கள் வாழ்த்து உணவு என நேரம் பத்தை தாண்டியது காலையில் சீக்கிரம் விழிக்க வேண்டுமென்று அனைவரும் கண்ணம்பாவை தூங்க சொல்ல.
அவுளோ வீம்புவின் அமைதியை எண்ணி கதிகலங்கி படுத்திருந்தாள் அவனைப் பற்றி எண்ணி எண்ணியே தூக்கம் வந்து விட்டது நமது கள்ளிக்கு.
*********
அழகான விடியல் திருமணக் கலை என்பார்களே அது போல அந்த மண்டபமே கலை கட்டி இருந்தது. பன்னீர் ரோஜாக்களின் வாசமும், சந்தனமும் வரவேற்க,
தாழம்பூ குங்குமத்தின் வாசனை இதமாக வீசியது,வாசலில் கட்டிய வாழை மரம் தலை சாய்த்து வந்தவர்களை அழைக்க வரவேற்பில் நீட்டப்பட்ட தட்டில் கற்கண்டு வைரங்களாக ஜொலித்தது.
பன்னீர் வந்தவர்களின் உடல் தீண்டி இதமாக வரவேற்க இளம் கன்னியர்கள் கையில் கொடுத்தச் சந்தனம் வந்தோர்களைக் குளிர் வித்தது.
இளம் காளையர்கள் சிரித்துக் கொள்ளையிட இளம் கன்னியர்கள் முறைத்தே கொள்ளையிட்டனர் பிள்ளைகளின் விளையாட்டும்,பெரியவர்களின் பரபரப்பும்,
நீண்ட நாட்களுக்கு பின் பார்த்த சொந்தங்களின் உரையாடலுமாக மண்டபம் நிறைந்து இருக்க, மனதிற்கும் இதம் அளிக்கும் நாதஸ்வரம் இதமாகச் செவியைத் தீண்டியது.
அன்னலட்சுமி,பெருமாள்,பேச்சி,ஹரிஷ்,திவ்வியா அனைவரும் மணப்பந்தலில் நிற்க கண்ணாம்பாவின் பெரியப்பா முறையில் உள்ளவர் பெண்ணை தாரை வார்த்துக் கொடுத்தார்.
கண்கள் கலங்கி பேச்சியைப் பார்த்தவளை அவரும் பார்த்தார் அதே நிலையில் கெட்டி மேளம் முழங்க வந்தோர்கள் வானவர்களாக வாழ்த்துரைக்க அனைத்துச் சொந்தங்களுடன் தேவர்கள் சாட்சியாக அக்னி சாட்சியாகத் தனது சரி பாதியாக ஆக்கி கொண்டான் யூஜிவன்.
தாலி கட்டும் வரை கண்ணியம் காத்த கண்ணியவான் திரு.வீம்பு அவர்களது வேலையை இனிதே தொடங்கினார்.
குங்குமத்தை எடுத்து அவளது நெற்றியில் வைக்கச் சொல்ல அவளைத் தன்னோடு இறுக்கி அதை அவன் செய்ய வேகமாக அவனைத் திரும்பி பார்த்தாள் கள்ளி,
“என்னடி முறைப்பு எங்க இப்போ பேசு பார்ப்போம்” என்று அவளது கழுத்தில் தொங்கும் தாலியை பார்க்க இன்னும் அவனை முறைத்தாள்.
அதற்குப் பிறகு அவனோடு மல்லு கட்ட அவளுக்கு எங்கு நேரம் .உறவினர்கள் தேனிக்களாக மொய்க்க பொறுமை காற்றில் பறந்தது
“யோவ் எம்புட்டு நேரம் தான் நிக்க வைப்பிக காலு கடுக்குது கருவாயா உம்ம சனத்துக்கு ஈடு கொடுங்க சாமி நான் மாட்டேன்” என்று பொரிய தனது தாயை அழைத்தவன்
“என்னடா தம்பி”அவர் கேட்கவே
“உங்க மருமகளுக்கு இப்பவே ரூமுக்கு போகணுமா” என்று ஒரு குண்டை போட்டுவிட்டு அவன் அந்தப் பக்கம் திரும்பி வந்தவரிடம் பேச தொடங்கிவிட்டான்.
கண்ணாம்பா பதறி “ஐயோம்மா அதெல்லாம் இல்ல காலு கடுக்குது” என்று அலறியவளை அவன் சும்மா உன்ன வம்புக்கு இழுக்குறான் நீ வாம்மா கொஞ்சம் நேரம் உட்காரு சாப்பிட்டு கிளம்பிடலாம்” என்று மருமகளை அமர் வைத்தார் அவர் சென்றதும் அவன் புறம் திரும்பியவள்.
“கருவாயா……………………….”என்று தொடங்க அவன் செய்த வேலையில் அவள் தான் புறமுதுகிட்டு ஓடினாள்.