சற்குணநாதர் மங்களநாயகி திருக்கல்யாணம் முடிந்து தேரில் ஊர்வலமாக வர ஊரே வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. வருடா வருடம் கோயில் திருவிழாவிற்கு வரும் பிரபாகரன் குடும்பத்தினர் இந்த வருடமும் தவறாமல் வந்திருந்தனர். மயூரி தன் கணவன் மற்றும் 3 வயது மகன் சஞ்சயுடன் வந்திருந்தாள்.
கௌசிக் சுகன்யா இருவரும் வரவில்லை. சுகன்யா மேற்படிப்பு படிக்கிறாள். இப்போது தேர்வு நெருங்கும் நேரம் என்பதால் அவர்கள் வரவில்லை. அவளுடைய மகள் அனந்த்ராவை கௌசிக்கின் அம்மா பார்த்துக்கொள்ள, சிரமமில்லாமல் படித்துக் கொண்டிருக்கிறாள். கௌசிக் சொன்னதுபோலவே அவனது காதலால் அவனை சுகன்யாவின் மனதில் ஆழமாக பதியச் செய்துவிட்டான்.
இந்த நாள் சக்திதரன் மதுமிதா தம்பதியினரின் ஐந்தாம் வருட திருமண நாளும் என்பதால் மது புடவையில் இருந்தாள். குடும்பத்தினர் யாராவது கூடவே இருக்க, மதுவிடம் தனியே பேச முடியாமல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.
“உன் மகனை பார்த்தியா? கோயிலுக்கு வந்து சாமி கும்பிடாம அவன் பொண்டாட்டியவே பார்த்துகிட்டு இருக்கான். இவன் அலப்பறை தாங்க முடியலை” என குரு அனுசுயாவிடம் புலம்ப, “நீயும் வேணும்னா உன் பொண்டாட்டிய பாருடா. சும்மா அவனையே ஏதாவது சொல்லிட்டு இருக்காத” என்றார் அனுசுயா.
“அதானே பார்த்தேன்… நீயாவது அவனை ஏதாவது சொல்றதாவது?” என சலித்துக்கொண்டே வளர்மதியை தேட ஆரம்பித்தான் குரு.
பிரபாகரனுக்கு மனது நிறைவாக இருந்தது. அவரது ஊருக்கு அடிக்கடி வந்து செல்வது, அதுவும் தன் மனைவியுடன் வந்து செல்வது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
பிரபாவின் காதலை சுஜாதா என்று புரிந்து கொண்டாரோ அன்றிலிருந்து அவர் மறைத்து வைத்திருந்த பிரபாவின் மீதான காதலையும் வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார். காலம் கடந்து என்றாலும் இப்போது ஒருவருக்கு ஒருவர் இனிய துணையாக இருக்கின்றனர்.
சிகிச்சையகத்திற்கு மாதா மாதம் ஒரு தொகையை பிரபாகரன் அளித்துக் கொண்டிருப்பதை நிறுத்தவே இல்லை. சுஜாதாவுக்கு தெரிந்த மத்திய அமைச்சர் மீண்டும் அமைச்சராகி விட்டார். அவரது மகன் மாநில அமைச்சர்.
ஊரில் உள்ளவர்கள் பலமுறை மனு கொடுத்து நடைபெறாததை அமைச்சர் மூலமாக நடத்தி வைத்தார் சுஜாதா. அந்த ஊரில் இருந்த பள்ளியின் தரத்தை மேம்படுத்தப் பட்டு ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க பட்டிருந்தது.
திருநாவுக்கரசர் பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எந்த நலப் பணியாக இருந்தாலும் அவரது பங்கு கட்டாயமாக இருக்கும். தேவியின் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்திருந்தார். அதன் மூலமாகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.
தங்கதுரை பிரபாகரனை இப்பொழுது பொறாமையாக எல்லாம் பார்ப்பதில்லை. சகோதரத்துவத்துடன் பழகுகிறார்.
சக்தி சொன்னது போலவே வேலைக்கு ஆள் வைத்து அனுசுயாவின் வேலைப் பளுவை குறைத்து விட்டான். மது காலையில் சிகிச்சையகம் சென்று விடுவாள். அவள் மதியம் வரும்வரை அன்னபூரணி, அனுசுயா, வளர்மதி ஆகியோர் மிக நன்றாக குழந்தைகளை பார்த்துக் கொண்டனர். பிரதீபா ஒரு நல்ல அக்காவாக தன்னுடைய சகோதரனையும் சகோதரியையும் பார்த்துக் கொண்டாள்.
விஸ்வநாதன் அன்னபூரணி குடும்பத்தினர் அனைவரும் கோயிலில் இறைவன் இறைவியை வணங்கிவிட்டு, வீட்டிற்கு வந்தனர். வடை பாயாசம் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
மதியம் உணவருந்திவிட்டு சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அனைவரும் தோப்பிற்கு சென்றனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் இயற்கைக் காற்றில் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர். மழை தூற ஆரம்பிக்க, அருகிலிருந்த தோப்பு வீட்டிற்கு சென்றனர்.
முற்றத்தில் நின்று குழந்தைகள் மழையில் விளையாட, “உடம்புக்கு எதுவும் வந்திடப் போகுது. வாங்கடா கண்ணுங்களா” என அன்னபூரணி அழைக்க, “நீயும் வா கொள்ளாத்தா” என அழைத்தான் கிரிதரன்.
“கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வைங்கிற கதையா… என்னை இந்த காலம் போன காலத்துல மழையில நனைய கூப்பிடுறியா?” என்றார் அன்னபூரணி.
அனைவரும் மழையை ரசித்து கொண்டும், மழையில் விளையாடும் குழந்தைகளை ரசித்துக் கொண்டும் இருந்தனர்.
மழை விட்ட பின்னும் குழந்தைகள் ஈரத்திலேயே நிற்க, “போதும் வாங்க” என்றார் அனுசுயா.
“இன்னும் கொஞ்ச நேரம்” என கெஞ்சி குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க கட்டாயப்படுத்தி அழைத்து வந்து துவட்டி வேறு உடைகள் அணிவித்தாள் மது. தோப்பு வீட்டிற்கு அடிக்கடி வருவதால் அவர்களது ஆடைகள் எப்பொழுதுமே அங்கு இருக்கும்.
பிள்ளைகள் பாட்டிகளுடன் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
சிலர் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு தூணுக்கு அருகில் மது நிற்க வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி. யாரும் தங்களை பார்க்கிறார்களா என கவனித்த மது மெதுவாக அவனிடம் சென்றாள்.
“உங்களுக்கு யாருக்கும் தெரியாம சைட் அடிக்க தெரியாதா?” என அவனுக்கு மட்டும் கேட்கும் படியாய் கேட்டாள்.
“நீயே என்னைக்காவது ஒரு நாள் புடவை கட்டுற. வீட்டில எங்க பாத்தாலும் ஜே ஜே ன்னு கூட்டம். மாமா வேற எப்படி உன்னை ரசிச்சு பார்க்கிறது?” எனக் கேட்டான் சக்தி.
“கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகிடுச்சு. இன்னும் நீங்க என்னை சைட் அடிக்கிறத நிறுத்தல” என்றாள்.
“எத்தனை வருஷம் ஆனா என்னடி? என் சுண்டெலியை நான் சைட் அடிச்சிக்கிட்டே இருப்பேன்” என்றான்.
யாரும் பார்க்கிறார்களா என கவனித்த மது “ரௌடி மாமா” எனக்கூறி அவனது மீசையை முறுக்கி விட்டாள்.
“ரௌடியாடி நான்?”
“ம்… காதல் ரௌடி” என்றாள் மது.
“பிள்ளைகளா… ஓடிவாங்க வானவில் தெரியுது” என வீரவேல் அழைக்க, அனைவரும் எழுந்து வெளியே சென்றனர். வானத்தில் வானவில் தன் வண்ணங்களால் கோலமிட்டிருந்தது.
“ஹை… ரெயின்போ!” என பிள்ளைகள் உற்சாகமாய் கூச்சலிட்டனர். எல்லோருமே நின்று வானவில்லை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்.
“எவ்ளோ அழகா இருக்குல்ல மாமா?” எனக் கேட்டாள் மது.
“ஆமாண்டி சுண்டெலி…” என அவளையே பார்த்து கொண்டிருந்த சக்தி கூற, மதுவும் சக்தியை பார்க்க ஆரம்பித்தாள்.
இருவரது கண்களும் காதல் மழை பொழிய ஆரம்பித்தது. வானத்தை வானவில் தன் வர்ணஜாலத்தால் அழகாக்க, சக்தியும், மதுவும் தாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஈர்ப்பால், காதலால், புரிதலால், அன்பால், ஆசையால், நேசத்தால், நம்பிக்கையால் தங்கள் வாழ்க்கையையும் அழகாக்கினர்.