மதுமிதா சிகிச்சையகத்தில் இருக்க, சுகன்யாவை அழைத்துக்கொண்டு விஸ்வநாதன், அன்னபூரணி, தங்கதுரை, மணிமேகலை என கூட்டமாக உள்ளே வந்தனர்.
“என்னாச்சு?” என மது எழுந்து நின்று கேட்க, “என் பேத்திக்குதான் டாக்டரு ஒரே காய்ச்சல்” என்றார் அன்னபூரணி. அவள்தான் சக்தியின் அத்தைப் பெண் என்பது மதுவுக்கு புரிந்தது.
“என்ன பண்ணுதும்மா?” என சுகன்யாவிடமே கேட்டாள்.
“ஃபீவர்” என்றாள்.
“எத்தனை நாளா?”
“நேத்து நைட்ல இருந்து காய்ச்சல் அடிக்குது. நேத்து சாயங்காலம் பச்சை குத்தி விடுற பாப்பாத்திகிட்ட அவ மாமன் பேர எழுதிகிட்டா. அதிலேருந்துதான் இப்படி” என்றார் மணிமேகலை.
“எங்க பச்சை குத்தியிருக்க? காட்டு” என்றாள் மது.
சுகன்யா அவளது வலது கையை காட்ட, ‘சக்திதரன்’ என பச்சையாக எழுதப்பட்டு அந்த இடம் கன்றிச் சிவந்தும், சிறிது வீங்கியும் போயிருந்தது. மதுவுக்கு அவளது உணர்வுகளை அடக்க பெரும்பாடாகிப் போனது.
“இதனாலதான் இன்ஃபெக்சனாகி காய்ச்சல் வந்திருக்கு. நான் இன்ஜெக்ஷன் போடுறேன் சரியாகிடும்” என்றவள், “இன்னும் ஏதாவது தொந்தரவு இருக்கா?” என கேட்டுவிட்டு, டிடி மருந்தும், காய்ச்சலுக்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்தினாள். சில மாத்திரைகளும் கொடுத்தவள் எந்த வேளை சாப்பிட வேண்டும் என விளக்கினாள்.
“இன்னும் என்னென்ன கிறுக்குத்தனம் பண்ணி என்னென்ன இழுத்து வச்சுக்க போறியோ?” என தங்கதுரை சொல்ல, “மாப்பிள்ளை, இந்த முறை கோயில் கொடை முடியட்டும். சித்திரையில பேசிக்கிட்டு, வைகாசியில சக்திக்கும் சுகன்யாவுக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுவரை கண்ணும் கருத்துமா புள்ளைய பார்த்துக்குங்க” என்றார் விஸ்வநாதன்.
முதல் நாள் மாலையில் சுகன்யா பச்சை குத்திக்கொள்ள அதன் விளைவாய் காய்ச்சல் வந்துவிட்டது. அவளுக்கு காய்ச்சல் என்ற விஷயம் தெரிந்து பார்க்க சென்ற விஸ்வநாதனும் அன்னபூரணியும் சிகிச்சையகத்திற்கு அழைத்து வந்துவிட்டனர். வந்த இடத்தில்தான் சக்தி சுகன்யா திருமணத்தை தங்கதுரையிடம் உறுதிப் படுத்தியிருந்தார் விஸ்வநாதன்.
அனைவரும் சென்றுவிட, மதுவுக்கு இருட்டிக்கொண்டு வருவது போல இருந்தது. அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டாள். அவளை அறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதை துடைக்கவும் மறந்து வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். சுகன்யாவின் பிம்பமே மாறி மாறி வந்து போனது. ஒரு முடிவுடன் சிகிச்சையகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றாள்.
தந்தைக்கு அழைத்து தான் எடுத்த முடிவைப் பற்றி சொன்னாள். சொல்லும்போதே குரல் உடைய, “மதும்மா தைரியமா இருடாம்மா. உன்னை நினைச்சு பெருமையா இருக்குடா. இதிலிருந்து நீ வெளியில வந்துடலாம் அப்பா உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்” எனக் கூறவும், “ம்…” என கூறி வெடித்து வரும் அழுகையை அடக்கிக் கொண்டாள்.
மதுவின் தந்தை கைப்பேசியை வைத்த பின்பு, தன் முழங்காலில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள். மதியம் சாப்பிடவும் இல்லை. பெட்டிகளில் தன் துணிகளை அடுக்கியவள், அவன் முதன்முதலாய் வாங்கிக்கொடுத்த குதிகால் உயரமான காலணிகளை பார்த்துவிட்டு அதை பெட்டிக்குள் பத்திரப்படுத்திவிட்டு மீண்டும் அழுதாள்.
சக்திக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று நினைத்தவள் அவன் மாலையில் வயலுக்குச் செல்வதை அறிந்து கொண்டு அந்த நேரம் அவனது வீட்டிற்கு சென்றாள்.
மது நினைத்தது போலவே சக்தி அங்கில்லை. அழுது அழுது கண்கள் சிவந்து இமைகள் தடித்து இருந்ததால் முன்னெச்சரிக்கையாக கருப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். விஸ்வநாதன் வீட்டின் வெளியில் திண்ணையிலேயே அமர்ந்திருக்க நேரே அவரிடம் சென்றாள்.
“வாம்மா” என்றார் தாத்தா.
“எனக்கு அர்ஜெண்டா ஊருக்கு போகணும்” என்றாள்.
“என்னம்மா என்ன விஷயம்?” எனக் கேட்டார் தாத்தா.
“அப்பா அம்மா யுஎஸ்ல இருந்து சென்னை வராங்க. அடுத்த மாசம் எனக்கு கல்யாணம்” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம், மாப்பிள்ளை யாரும்மா?”
“அவரும் ஒரு டாக்டர்” என்றாள்.
“பலே… பலே… டாக்டரம்மாவுக்கு டாக்டர் மாப்பிள்ளை. ரொம்ப ரொம்ப சந்தோஷம். எங்க ஊருதான் டாக்டர் இல்லாமல் கஷ்டப்பட போகுது” என்றார்.
“நான் சீக்கிரமாவே வேற ஒரு டாக்டர் இந்த ஊருக்கு ஏற்பாடு பண்ணி தரேன்” என்றாள்.
“அப்படியாம்மா, இன்னும் நல்ல விஷயம்” என்றார்.
“நான் இன்னைக்கு ஊருக்கு போகணும். என்னோட திங்க்ஸ் எல்லாம் பாக் பண்ணிட்டேன். வண்டி ஏற்பாடு பண்ணி கொடுத்தீங்கன்னா திருவாரூர் போயிடுவேன்” என்றாள்.
“கல்யாணத்துக்காக போறேன்னு சொல்ற. இப்ப ஊர்ல காப்புத் தடை இருக்குமா. காப்பு கட்டுன நேரத்துல நீ இந்த ஊர்லதானே இருந்த. காப்பு இறக்கிற வரை நீ ஊரை விட்டுப் போகக்கூடாது மா. சாமி குத்தம் ஆகிடும். இன்னும் ரெண்டு நாள்ல திருவிழா ஆரம்பிச்சுடும். அஞ்சு நாள் திருவிழா. அதுக்கப்புறம் காப்பை இறக்கிடுவோம். போறதுதான் போற ஒரு வாரம் இருந்து சாமிய நல்லா கும்பிட்டுட்டு போம்மா. அந்த மங்களநாயகி தாயி உன் மனசு போல வாழ்க்கை அமைச்சுத் தருவா” என்றார் விஸ்வநாதன்.
“இன்னைக்கே நான் கிளம்ப வேற வழியில்லையா?” எனக் கேட்டாள்.
“இப்ப நீ ஊரை விட்டுப் போனா ஊருக்கும் நல்லதில்ல, உனக்கும் நல்லதில்ல. ஒரு வாரம்தானேம்மா” என விஸ்வநாதன் கூற, ‘இது என்னடா புது தடங்கல்?’ என மது நினைத்தாலும், விஸ்வநாதனிடம் மறுப்பாக எதுவும் கூறாமல் நின்றாள்.
அருகில் நின்று கொண்டிருந்த அன்னபூரணி, “அது என்னடியம்மா வீட்டுக்குள்றவே கண்ணாடி போட்டிருக்க?” என அங்கலாய்ப்பாய் கேட்டார்.
“எனக்கு கண்ணுல இன்ஃபெக்சன்” என்றாள்.
“என்னா ஜன்?” என பூரணி கேட்க,
“இந்தா ஒன்னும் தெரியாட்டி வாயை மூடிக்கிட்டு உட்காரு. சும்மா லொள்ளு பேசிக்கிட்டு…” என்ற விஸ்வநாதன், “ஒரு வாரம் இங்க இரும்மா. எங்க ஊருக்கு எவ்வளவு நல்லது பண்ணியிருக்க நீ? கோயில் திருவிழாவை இருந்து பார்த்துட்டு போ. உன்னை நல்லபடியா ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார்.
வந்த வழியே திரும்பிச் சென்றாள் மது. அனுசுயாவும் அங்கே நின்றிருந்ததால் அவருக்கும் விஷயம் தெரிந்தது.
இடையில் எதற்காகவோ தன் அன்னைக்கு கைப்பேசியில் சக்தி அழைக்க, அனுசுயா மது வந்துபோன விவரத்தை சக்தியிடம் கூறினார்.
“டாக்டருக்கு டாக்டர் மாப்பிள்ளை” என அனுசுயா கூறவும் சக்திக்கு அப்படி ஒரு ஆத்திரம் எழுந்தது. அதற்கு மேல் அவனுக்கு அங்கு இருக்க முடியவில்லை. கட்டுக்கடங்காத கோவத்துடன் தோப்பு வீட்டிற்கு சென்றான்.
தோப்பு வீட்டில் தன் அறையில் அமர்ந்து ஜன்னல் வழியே வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. இன்னும் பொன்னுத்தாயி வரவில்லை. சக்தியின் வண்டி சத்தம் கூட மதுவுக்கு கேட்கவில்லை.
கதவு திறந்தே இருக்க, சக்தி வெளியே நின்றெல்லாம் மதுவை கூப்பிடவில்லை. நேரே உள்ளே சென்றான். கூடத்து முற்றத்தில் மதுவின் பெட்டிகள் அணிவகுத்திருக்க, இன்னும் ஆத்திரம் தலைக்கேற மதுவைத் தேடிக்கொண்டு அவளது அறைக்கு சென்றான். சக்தி அறைக்குள் வந்த அரவம் கூட உணரவில்லை மது.
மதுவின் கையைப் பிடித்து இழுத்து தன் புறம் திருப்பிய சக்தி, அவளின் சிவந்த கண்களையும் தடித்த இமைகளையும் பார்த்து, கோவமெல்லாம் வடிய “என்னாச்சு மது?” என பதறிப் போய் கேட்டான்.
அவன் கையிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டவள் “ஒன்னும் இல்லை” என்றாள்.
“ஒன்னும் இல்லன்னா… ஏன் இப்படி அழுதிருக்க?” எனக் கேட்டான்.
மதுவுக்கு மீண்டும் கண் கலங்குவது போலிருக்க “எனக்கு என் வீட்டுக்கு போகணும்” என்றாள்.
“என்ன நடந்துச்சும்மா?” என்றான்.
“எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்” என பொய்யுரைத்தாள். இறங்கிய கோவம் மீண்டும் தலைக்கேறியது சக்திக்கு.
“உண்மையாவே என்னை மாங்கா மடையனா ஆக்கணும்னு பார்க்கிறியா?” எனக் கேட்டான்.
“என்ன சொல்றீங்க… எனக்கு ஒன்னும் புரியலை”
“என்னோட பழகிட்டு இப்ப அடுத்த மாசம் கல்யாணம்னு என்கிட்டயே சொல்லுவியா?”
“உங்ககிட்ட ஒரு ஃபிரெண்டாதான் பழகினேன்”
“கண்ட நேரத்திலேயும் ஃபோன் பண்ணி பேசினியே… அதுக்கு என்ன அர்த்தம்?”
“என்ன கண்ட நேரம்? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார் கூடவும் நைட் முழுக்க சாட் பண்ணுவேன். இந்த ஊருல நீங்கதான் என்னோட ஃப்ரெண்ட். அதனால பேசினேன்” என்றாள்.
“என் புல்லட்டில் என்கூட ஒண்ணா உட்கார்ந்து ஊர் சுத்தினியே அதுக்கு என்ன அர்த்தம்?”
“ஒரு ஃப்ரெண்ட் கூட பைக்ல போறது எல்லாம் சாதாரண விஷயம்”
“என் உயரத்துக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு ஹில்ஸ் வாங்கிப் போட்டுகிட்டது…?”
“இது கிராமம், வசதி பத்தாது, போரடிக்கும்ன்னு நான் சொன்னதுக்கு எல்லாம் அப்படியெல்லாம் இல்லை, இந்த ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அப்படி இப்படின்னு சொன்னியே ஏன் சொன்ன?”
“இப்பவும் அதையேதான் சொல்றேன். அதுக்காக இங்கேயே இருக்க முடியுமா?”
“நான் கடிச்ச மாங்காயை… “ என சக்தி ஆரம்பிக்க,
“ஓ… நோ சக்தி… நீங்க ஏன் இவ்வளவு குடைஞ்சு குடைஞ்சு கேட்கிறீங்க? நீங்க என் அத்தைப் பையன். அந்த உரிமையிலதான் நான் பழகினேன், பேசினேன், கிண்டல் பண்ணினேன். எல்லாத்தையும் பெருசா எடுத்துப்பீங்களா?”
“ஓஹோ…. அன்னைக்கு தோப்புல முத்தம் கொடுத்தப்போ மயங்கி நின்னியே அது எந்த உரிமையில?”
“அது… அது…” என மது திணறினாள்.
“சொல்லு அது…?”
“அது ஏதோ வயசுக்கோளாறுல…” என மது சொல்ல ஆரம்பிக்க,
“வாயை மூடுடி. என்ன வயசுக்கோளாறு…? இதுக்கு மேல ஏதாவது பேசுன… பல்லை பேத்துடுவேன். பொய் மேல பொய் பேசிக்கிட்டே போகாதே. என்கிட்ட பேசணும்னு நினைச்சுதான் கண்ட நேரத்திலேயும் எனக்கு ஃபோன் பண்ணுன. ஆசைப் பட்டுதான் என் கூட புல்லட்டுல ஒண்ணா வந்து ஊர் சுத்துன”
“வேற யாரும் உன்னை சுண்டெலின்னு கேலி பண்ணுனா சும்மா விடுவியா? நான் சொன்னதுதானே உன்னை பாதிச்சது. உன் மனசுல நான் இல்லாமையா என் கிண்டலை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்ட? நீ என்கிட்ட பேசுன எதுவும் விளையாட்டுப் பேச்சு இல்லை. உன் பேச்சில எல்லாம் என் மேல உனக்கு இருந்த ஆசைதான் தெரிஞ்சது”
“தோப்புல நான் கொடுத்த முத்தத்தை வயசுக்கோளாறுன்னு சொல்லுவியா? எங்க என் மூஞ்சிய பாத்து சொல்லு. சொல்லுடி… சொல்லு… உன் மனசுல நான் இல்லைன்னு என் முகத்தை நேருக்கு நேரா பாத்து சொல்லு” என்றான் சக்தி.
சக்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு பேசமுடியாமல் மதுமிதா அழுகையில் வெடித்து, முகத்தை மூடிக்கொண்டு தேம்ப ஆரம்பித்தாள். ஆதரவாய் அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டவன், “நீ எதுவும் சொல்ல வேண்டாம். உன் மனசு நிறைய நான்தான் இருக்கேன்னு எனக்கு தெரியும். அழாதடி, என்ன நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லு” என்றான்.
“உன் அத்தைப் பொண்ணு சுகன்யா… உன் பெயரை அவ கையில பச்சை குத்தியிருக்கா” என அழுது கொண்டே சொன்னாள்.
இந்த விஷயம் இன்னும் சக்திக்கு தெரியாது. அதிர்ந்தவன், “அவ ஏதோ பைத்தியகாரத்தனம் பண்ணினா நீ என்னை விட்டுட்டு போயிடுவியா?” எனக் கேட்டான்.
“இல்ல சக்தி, நான் அப்பாகிட்ட சொன்னேன்” என்றவள் அவர் கூறிய முழுவதையும் கூறி, “நான் கௌசிக் கூட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன், நான் போறேன்” என மீண்டும் பொய் கூறினாள்.
“என் நினைப்பு இல்லாம நீ அவன் கூட வாழ்ந்துடுவியா?” எனக் கேட்டான்.
சக்தியின் நெஞ்சில் முகம் வைத்திருந்தவள் இன்னும் தேம்பித் தேம்பி அழ, “போடி கிறுக்கு. என் மேல இவ்வளவு அன்பு வச்சுக்கிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கப் போறியா?” எனக் கேட்டான்.
அவனிடமிருந்து விலகியவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் சக்தி. போகப்போக ரெண்டு பேருக்கும் மறந்திடும். என்னால யாருக்கும் எந்த மனக் கஷ்டமும் வேண்டாம். நான் இடையில வந்தவ. அதே மாதிரி போய்டுறேன்” என்றாள்.
“உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன் மது. யோசிச்சு உள்ளவா, வந்துட்டா போக முடியாதுன்னு. அதையேதான் இப்பவும் சொல்றேன். நீ இங்க வந்துட்ட” என அவன் நெஞ்சைத் தொட்டு காட்டியவன், “இனி நீயே நினைச்சாலும் நான் போக விடமாட்டேன்” என்றான்.
“கோயில் திருவிழா முடிஞ்சி ஏழு நாள் கழிச்சு நான் சென்னைக்கு போகப் போறேன். திரும்ப எப்பவும் வரவே மாட்டேன்” என்றாள் மது.
“என் மாமியார் வீட்டுக்கு உன் புருஷனோட சேர்ந்து போகலாம். இனிமே தனியா நீ சென்னையில்லடி… இந்த ஊரைத்தாண்டி வேற எங்கேயும் போக முடியாது” என்றான் சக்தி.
“சக்தி… சுகன்யாவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும். தேவையில்லாம குழப்பம் செய்யாதீங்க. என் அப்பா முகத்துல நான் முழிக்க முடியாது. அவர் ஆல்ரெடி நிறைய மனவருத்தத்தில இருக்காரு. இன்னும் நான் அவருக்கு எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்” என்றாள்.
ஒரு பக்கமாக உதட்டை வளைத்து சிரித்தவன், “உன்னை மனசுல வச்சுக்கிட்டு வேற எவ கழுத்துலயும் தாலி கட்ட மாட்டான் இந்த சக்தி. ஏகபத்தினி விரதன் டி நான். அதே மாதிரி உன்னையும் வேறு யாருக்கும் விட்டு தர மாட்டேன். இந்த ஜென்மத்துக்கு நீதான் எனக்கு பொண்டாட்டி, நான்தான் உனக்கு புருஷன்” என்றான்.
“இப்படி உளராம வேற வேலை ஏதாவது இருந்தா போய்ப் பாருங்க” என்றாள் மது.
“அப்போ திருவிழா முடிஞ்சதும் நீ என்னை விட்டுட்டு சென்னைக்கு போய்டுவ?”
தன் வேஷ்டியை மடித்து கட்டியவன், அவளைத் தீர்க்கமாக பார்த்து “என்னை மீறி என்ன நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்டி” எனக்கூறி தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
உள்ளம் வேதனையில் மூழ்க, ஏற்கனவே அழுது, அழுது எரிந்துகொண்டிருந்த கண்களிலிருந்து இன்னும் கண்ணீர் சொரியச் செய்தாள் மது.