வானவில் கோலங்கள்-8

அத்தியாயம் 8

மணிமேகலை வந்து அவரது பெண்ணைத்தான் சக்தி மணமுடிக்க போவதாக கூறிச் செல்ல, அதிர்ச்சியும் குழப்பமுமாய் மதியம் வீடு திரும்பினாள் மதுமிதா. சக்தியின் அழைப்பு வர ஏற்றவள் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

“மது லைன்ல இருக்கியா?” என்றான் சக்தி.

“ம்…” என்று மட்டும் கூறினாள்.

“ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?” எனக் கேட்டான்.

“என்ன பேசணும்?” என்றாள் மது.

“ என் மேல எதுவும் கோவமா?” என கேட்டான்.

“ உங்க மேல கோபப்பட நான் யாரு?”

“ நீ யாரா…? என்னாச்சு உனக்கு?”

“எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன், நான் வைக்கிறேன்” என வைத்துவிட்டாள்.

மது சாப்பிடாமல் இங்குமங்கும் உலாத்திக் கொண்டிருந்தாள். சக்தியின் புல்லட்டின் ஓசை கேட்டது. அவன்தான் என தெரிந்தும் உள்ளேயே இருந்தாள்.

கதவு திறந்தே இருந்தாலும் உள்ளே செல்லாமல், “மது” என வெளியில் நின்று கொண்டே அழைத்தான். மது வெளியே வந்தாள்.

“என்னாச்சு மது? ஏன் கோவமா இருக்க?” எனக் கேட்டான்.

“உங்க அத்தை இன்னைக்கு கிளினிக் வந்திருந்தாங்க” என்றாள்.

“என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான்.

“அவங்க பொண்ணைதான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னாங்க” என்றாள்.

“ஓ… அதுதான் டாக்டரம்மாவுக்கு கோவமா? அத்தை சொல்ற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா கொஞ்ச நாளா என்னை அந்த புள்ளையை கட்டிக்க சொல்லி கேட்டுக்கிட்டுதான் இருக்காங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். இருந்தும் ஏன் அத்தை இப்படி பேசிக்கிட்டு திரியுதுன்னு தெரியலை” என்றான்.

மது சந்தேகமாக சக்தியைப் பார்க்க “என்னை நம்பு மது” என்றான்.

“நீங்க யாரை கட்டிக்கிட்டா எனக்கென்ன?” என ஜம்பமாய் மது கேட்க, “சுண்டெலி ஃபார்முக்கு திரும்பிட்டீங்க போல…” என்றவன் “சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

“இல்ல இனிமேதான்” என்றாள்.

“என் அத்தை சொன்னதையே நினைச்சுகிட்டு சாப்பிடாம இருந்தியா?”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. இந்த தாயம்மா குழம்புல எப்பவும் காரம் அதிகம் போட்டுடுறாங்க. எனக்கு சேர மாட்டேங்குது. அதான் சாப்பிடாம என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

“அது சரி… யார் அந்த தாயம்மா?”

“பொன்னுத்தாய்… சுருக்கமா தாயம்மா” என்றாள்.

சிரித்தவன், “கொஞ்சம் வெய்ட் பண்ணுறியா? என் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துகிட்டு வர்றேன்” எனக் கேட்டான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்? நானே உங்க வீட்டுக்கு வர்றேன்” என சக்தி சம்மதிக்கும் முன்னரே இறங்கி தோப்பு வழியே நடக்க ஆரம்பித்தாள்.

“ஏய்… நீ பாட்டுக்கு கிளம்பிட்ட… அங்க தாத்தா, அப்பா எல்லாரும் இருப்பாங்க. கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்?”

“சரி எனக்கு சாப்பாடு வேண்டாம்” என மது திரும்பி நடக்க, “பொசுக்கு பொசுக்குன்னு கோவப்படாத. வா… வீட்டிலேயே சாப்பிடலாம்” என்றான்.

மாமரத்திலிருந்து காய்ந்த இலைகள் சருகாய் கீழே கிடக்க சிறுபிள்ளை போல அதை மிதித்து சத்தம் எழுப்பி விளையாடிக்கொண்டே நடந்து சென்றாள் மது. அவள் விளையாடுவதை ரசித்துக்கொண்டே அவளுடன் நடந்து சென்றான் சக்தி.

“இந்த மாங்கா எவ்ளோ பெருசா இருக்கு? ஒன்னு பறிச்சுத் தாங்க” எனக் கேட்டாள் மது.

சக்தி எம்பி குதித்து ஒரு மாங்காய் பறித்து அதன் காம்பை பிய்த்து பால் வெளியேறும்படி மரத்தில் தேய்த்து அவளிடம் நீட்டினான். ஆசையாக வாங்கி மாங்காயை கடித்த மது கண்களை மூடிக்கொண்டு, “ஷ்… ப்பா… என்ன புளிப்பு?” என்றாள்.

“ரொம்ப புளிக்குதா?” எனக் கேட்டான்.

“ஆமாம் ரொம்ப…” என்றாள்.

வந்த வழியே திரும்பி சென்று இன்னொரு மாமரத்திலிருந்து செங்காயாக ஒரு மாங்காயை பறித்தவன், தானே ஒரு கடி கடித்து சுவைத்தான்.

“இந்த மரத்து மாங்காய் இனிக்குது. இரு உனக்கு ஒன்னு பறிச்சு தர்றேன்” என்றவன் இன்னொன்று பறிக்க முயல, அவன் கையிலிருந்த மாங்காயைப் பறித்தவள் அதையே சுவைக்க ஆரம்பித்தாள்.

“ஆமாம் சக்தி… இது ரொம்ப டேஸ்டியா இருக்கு” என்றவள் தன்னை மறந்து அதை சாப்பிட, சக்திக்கு மனசுக்குள் மழை பொழிய ஆரம்பித்தது. அவள் சாப்பிடும் வரை அமைதியாக நின்றவன், முடித்ததும் “போலாமா?” என்றான்.

“கை பிசு பிசுன்னு இருக்கு. எங்க வாஷ் பண்றது?” எனக் கேட்டாள். அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்கு அழைத்துச் சென்று “கை கழுவிக்கோ” என்றான்.

“இது என்ன உங்க ஊர் மினி ஸ்விம்மிங் பூலா?” எனக் கேட்டாள்.

“எங்க ஊர்ல மெகா நீச்சல் குளமே இருக்கு. இது தோப்புக்கு தண்ணி பாய்ச்ச” என்றான்.

“என்ன மெகா நீச்சல் குளமா! எங்க இருக்கு?” எனக் கேட்டாள்.

“எங்க ஊர் தாமரைக்குளம்தான்” என்றான்.

“அங்க குளிக்கலாமா?”

“குளிக்கலாம்”

“நான் குளிக்கலாமா?” என ஆசையாக மது கேட்க,

“வயசுப் பொண்ணுங்க எல்லாம் அங்க குளிக்க வர மாட்டாங்க மது” என்றான்.

“ஏன் நீங்க போய் சைட் அடிப்பீங்கன்னு யாரும் வர மாட்டாங்களா?”

“உனக்கு ரொம்ப ஏத்தம்தான்” என சக்தி கூற, வீடும் வந்து விட்டது.

அனுசுயாவைத் தவிர மற்றவர்கள் மதிய உணவருந்திவிட்டு அவர்களது அறைகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். சக்திக்காக அனுசுயா மட்டும் காத்துக் கொண்டிருந்தார்.

சக்தி உள்ளே வரவும் “எவ்வளவு நேரம்டா?” என கேட்டவர் பின்னால் மது நிற்பதைப் பார்த்துவிட்டு “வாம்மா” என்றார்.

“அம்மா… நம்ம டாக்டருக்கு பொன்னுத்தாயி சமையல் பிடிக்கலையாம். அதான் இன்னைக்கு நம்ம வீட்டில சாப்பிட அழைச்சிட்டு வந்தேன்” என்றான்.

“அதுக்கென்ன சாப்பிட வாம்மா” என புன்னகையோடு அழைத்தார் அனுசுயா.

கோழிக்குழம்பும், வறுவலும் செய்யப்பட்டிருக்க மதுவும் சக்தியும் சாப்பிட ஆரம்பித்தனர். மாலையில் பால் கறக்க வருபவர்கள் வந்துவிட அனுசுயா மாட்டுத் தொழுவத்திற்கு சென்றார். இந்த சாப்பாட்டிலும் காரம் அதிகமாக இருக்க மதுவின் கண்களில் நீர் வழிந்தது. சக்திக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“இதெல்லாம் ஒரு காரமா?” எனக் கேட்டான்.

“என்ன இதெல்லாம் காரம் இல்லைனா… இன்னும் காரமா சாப்பிடுவீங்களா?” எனக் கேட்டாள்.

“இது என் வாய்க்கு சப்புன்னுதான் இருக்கு” என்றான்.

“இவ்வளவு காரம் எல்லாம் சரிப்பட்டு வராது. வரப்போற உங்க வை ஃபுக்கு காரமா சமைக்க தெரியலனா என்ன பண்ணுவீங்க? காரத்தை குறைச்சுக்குங்க” என்றாள்.

“காரமா சமைக்கிறது பெரிய விஷயமா? நாலு கரண்டி மிளகாய் தூளை சேர்த்து போட்டா போச்சு” என்றான்.

“நீங்க மட்டும் சாப்பிட்டா போதுமா உங்க வைஃப் சாப்பிட வேண்டாமா?”

“என் பொண்டாட்டியையும் என்னை மாதிரியே காரம் சாப்பிட பழக்கிடுவேன்” என்றான்.

“எப்படி பழக்குவீங்க?”

“அதுவா… கல்யாணம் ஆகட்டும். தானா தெரியும்?”

“யாருக்கு யார் கூட கல்யாணம்?” எனக் கேட்டாள் மது.

“ம்… எனக்கு என் பொண்டாட்டி கூட கல்யாணம்” என்றான் சக்தி.

“ஓகே அப்ப சரி” என்றாள் மது.

இப்படியாக இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். அனுசுயாவும் வந்துவிட, மது அவரிடம் “உங்க பையன் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்” என சொன்னாள். சக்தி அதிர்ந்து போய் அவளைப் பார்க்க, அனுசுயா சக்தியைப் பார்த்தார்.

“டாக்டர் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க அம்மாவுக்கு உதவியா இருக்கும்னு சொன்னாங்க. அதுதான் சீக்கிரம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். வேற ஒன்னும் இல்லைம்மா” என்றான்.

“இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் என்ன உதவி செய்றாங்க. இதோ என் மூத்த மருமக இருக்கா. சமையல் செய்றதோடு சரி. மேல் வேலை எதுவும் செய்ய மாட்டா. ரெண்டாவது மருமக எப்படி வரப்போறாளோ?” என அலுப்பாக கூறினார்.

“என்ன நீங்க இப்படி சொல்றீங்க? உங்க பையன் பாட்டுக்கு எதுவும் தெரியாத பொண்ணை கட்டிக்கிட்டு வரப் போறாரு” என மது கூற, “என் பொண்டாட்டிக்கு ஒன்னும் தெரியலைன்னாலும் வேலைக்கு ஆள் போட்டு நானே பார்த்துப்பேன். என் அம்மாவை வேலை செய்ய விட மாட்டேன்” என்றான் சக்தி.

“பாருங்க ஆன்ட்டி. இப்பவே உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்தானே. பொண்டாட்டி வந்ததுக்கு அப்புறம்தான் ஹெல்ப் பண்ணுவாராம்” என மது வம்பாக பேச, சக்தி அவளைப் பார்த்து முறைத்தான்.

“இவன் பொண்டாட்டி முந்தானையை பிடிச்சுகிட்டு சுத்தப் போறான்னு சூரமங்கலம் ஜோசியர் ஒருத்தர் சொல்லியிருக்கார்மா. கடைசியில அப்படித்தான் பண்ணப் போறான் போல” என அனுசுயாவும் கூறி சிரித்தார்.

மது அவரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். சக்தியும் “அம்மா என் வண்டி தோப்பு வீட்டில கிடக்கு. நான் போய் எடுத்துட்டு வந்துடுறேன்” எனக் கூறி மதுவுடன் கிளம்பினான்.

“ஏய் சுண்டெலி நில்லு” என்றான் சக்தி.

“என்னை அப்படி கூப்பிடாதீங்கன்னு சொல்லியிருக்கேன்தானே?” என்றாள் மது.

“நீ மட்டும் அம்மா முன்னாடி எடக்கு மடக்கா பேசலாமா?” என்றான்.

“நான் என்ன எடக்கு மடக்கா பேசினேன்? பிராக்டிகலாதானே பேசினேன்” என்றாள்.

“பொடி வச்சே பேசு. எனக்குதான் இருக்கிற மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு. கொஞ்சம் தெளிவா சொல்லிடுறியா?” என்றான்.

“ என்ன சொல்லணும்?” எனக்கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மது.

“இருக்கா? இல்லையா?” என்றான்.

“நீங்கதான் தெளிவா பேச மாட்டேங்கிறீங்க?” என்றாள்.

‘ஐயோ இவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே… ஒரு சமயம் என் மேல ஒரு இது இருக்குற மாதிரியே பேசுறா, சரின்னு நான் உரிமையோட கொஞ்சம் முன்னேறிப் பேசுனா ஒன்னுமே இல்லைங்கிற மாதிரி பேசுறா’ என மனதிற்குள் புலம்பியவன்,

“உன் மனசுல என்னைப் பத்தின எண்ணம் இருக்கா? இல்லையா?” எனக் கேட்டான்.

“ம்… இருக்கே” எனப் பட்டென மது சொல்ல, “என்ன இருக்கு?” எனக் கேட்டான்.

“சொன்னா கோவப்படக் கூடாது”

“கோவிச்சுக்கல… என்ன இருக்குன்னு சொல்லு”

“அது என்ன?” என மாமரத்தில் இருந்த மாங்காயை காண்பித்து கேட்டாள்.

“மாங்கா” என்றான்.

“அதோட மடையன சேர்த்தா?”

“மாங்கா மடையன்” என சக்தி கூற, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் மது.

“அடிங்க… நான் என்ன மாங்கா மடையனா?” எனக்கேட்டு அவளை அடிக்க வர, அவனுக்கு அகப்படாமல் ஓடினாள் மது.

காற்று வீச, தூசு பறந்து வந்து மதுவின் கண்களில் விழ, அப்படியே நின்றாள். சக்தியும் அவளிடம் வந்துவிட்டான். மது கண்களை கசக்க,

“என்னாச்சு மது?” எனக் கேட்டான்.

“கண்ணுல தூசி விழுந்துட்டு போல” என்றாள்.

“கசக்காதே. கையை எடு, நான் பார்க்கிறேன்” என்றான்.

மது கையை எடுக்க சக்தி நெருங்கி வந்து அவள் விழியை தன் கைகளால் திறந்து பார்த்தான். சிறு புள்ளியாய் தூசு ஒன்று இருக்க, “ரொம்ப உறுத்துது” என்றாள் மது.

“இரு, அசையாத, நான் எடுத்து விடுறேன்” என்றவன், இன்னும் நெருங்கி வந்து அவன் நாவின் நுனியால் அவள் விழியிலிருந்த தூசை எடுத்து விட்டு ஊதி விட்டான்.

இருவரது முகங்களும் அருகாமையில் இருக்க, இருவருக்கும் டோபமைனும், ஆக்ஸிடோசினும் தாறுமாறாக சுரக்க, சக்தி மதுவை இன்னும் நெருங்கினான்.

மது விலகாமல் எதையோ எதிர்பார்த்து, மயக்கத்துடன் அவனைப் பார்த்து நிற்க, ஒரு நூலிழை இடைவெளிதான் இருவரது இதழ்களுக்கும். அந்த இடைவெளியையும் கடந்து சக்தி மதுவுக்கு முத்தமிட, மது தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

சிட்டுக் குருவி ஒன்று, தன் இணையை பார்த்த மகிழ்ச்சியில் மெல்லிசையாய் குரலெழுப்ப, தன் மாய வலையிலிருந்து விழித்துக் கொண்ட மது, சக்தியை பிடித்து தள்ளி விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தாள். “ஏய் மது நில்லு” என கூறிக் கொண்டே பின்னால் ஓடினான் சக்தி.

வீட்டிற்கு வந்துதான் தன் ஓட்டத்தை நிறுத்தினாள் மது. மூச்சிரைக்க வீட்டின் திண்ணையிலேயே மது நிற்க, பின்னால் ஓடிவந்த சக்தி, “ஏன் மது என் மேல கோவமா?” எனக் கேட்டான்.

அவன் இவ்வாறு கேட்கவும் இன்னும் வம்பு செய்ய நினைத்த மது, “நீங்க இப்படி மோசமா நடந்துப்பீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றாள்.

சக்திக்கு சற்றுமுன் வரை இருந்த உற்சாக மனநிலை அடியோடு மறைந்தது. முகம் வெளிறிப் போய் விட்டது. ‘அவ மனசை சரியா புரிஞ்சுக்காம நான்தான் அவசரப்பட்டுட்டேனா?’ என நினைத்து நின்று கொண்டிருந்தான்.

“கொஞ்சம் சிரிச்சு பேசினா ஓவர் அட்வான்டேஜ் எடுத்துப்பீங்களா?” எனக் கேட்டாள்.

“சாரி மது” என்றான்.

“எதுக்கு சாரி?” எனக் கேட்டாள்.

சக்தி பதில் கூறாமல் தலைகுனிந்து நிற்க, “இதுக்கெல்லாம் சாரி கேட்பீங்களா? உங்க வைஃப் ரொம்ப பாவம். கல்யாணத்துக்கு அப்புறம் எவ்ளோ சாரி கேட்பீங்க?” என்றாள் மது.

அவள் விளையாடுகிறாள் என புரிந்த சக்தி, தலைநிமிர்ந்து, “பொண்டாட்டிகிட்ட ஏன் சாரி கேட்கப் போறேன்?” என்றான்.

“அப்புறம் இப்போ ஏன் சாரி கேட்டீங்க?”

“நீ சொன்ன மாதிரி நான் மாங்கா மடையன்தான்” என சக்தி கூற, “புரிஞ்சா சரி” என்றாள் மது.

“அடிங்க…” என  கூறிய சக்தி அவளை பிடிக்க வர, வீட்டிற்குள் ஓடிச் சென்று விட்டாள்.

வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு அவளை காணாமல், “மனுஷன ஒரு நிமிஷம் பதைக்க வச்சிட்டாளே ராட்சசி” என புலம்பிக்கொண்டே, மீண்டும் உற்சாகமடைந்த மனதுடன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

இனிய நினைவுடன் மது கட்டிலில் படுத்திருக்க, அவளது தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. உற்சாகமாகவே அவருடன் பேசினாள்.

அன்று மணிமேகலை வந்ததைப் பற்றியும், அவர் கூறியதையும் அதற்கு சக்தி கூறியதையும் சொன்னாள்.

கேட்ட பிரபாகரன், “என்னன்னு கொஞ்சம் நீ விசாரிச்சு தெரிஞ்சுக்க மது. என் மாமாவுக்கும் சக்திக்கே அந்த பொண்ணை கட்டி கொடுக்கிற எண்ணம் இருந்தா, நீ சக்திகிட்ட இருந்து இப்பவே விலகிக்கிறதுதான் சரி” என்றார்.

“டாடி…” என அதிர்ச்சியடைந்தாள் மது.

“ஆமாம் மது. என்னால என் மாமாவுக்கு ஒரு மனக் கஷ்டம். என் பொண்ணாலையும் எதுவும் பிரச்சனை வந்துச்சுன்னா என்னால தாங்க முடியாது. உனக்கு சக்தியை எவ்வளவு நாளா தெரியும்? ஆனா அந்த பொண்ணுக்கு சின்ன வயசில் இருந்தே தெரிஞ்சிருக்கும். அது மனசுல ஆசையிருந்தா? அந்தப் பொண்ணை நினைச்சு பாரு” என்றார்.

“ஆனா டாடி சக்திக்கு அந்த பொண்ணு மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை. அவருக்கு என்னைதான் பிடிச்சிருக்கு” என்றாள்.

“இருக்கலாம். அந்த பொண்ணை சக்தி கல்யாணம் பண்ணிக்க நினைக்காட்டாலும் பெரியவங்க பேசி சக்தியை சம்மதிக்க வைப்பாங்க. நீ இடைஞ்சலா இருக்கக் கூடாது” என்றார்.

“சக்தி ஏன் பிடிக்காத பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்?”

“கிராமத்துல அத்தை பொண்ணு, மாமா பொண்ணு இருந்தா வெளியில இருந்து கட்ட மாட்டாங்க. இதெல்லாம் அங்க சகஜம். என் மாமா எடுத்து சொன்னா, சக்தி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கவும் செய்யலாம். உன்னால அந்த குடும்பத்தில் வேற எந்த பிரச்சனையும் வரக்கூடாது” என்றார்.

“நானும் சக்திக்கு மாமா பொண்ணுதானே? உங்ககிட்ட என் லவ்வ சொன்னப்ப சப்போர்ட் பண்ற மாதிரிதானே அப்ப பேசினீங்க? இப்ப இப்படி சொன்னா நான் என்ன பண்றது?” என வாதாடினாள் மது.

“மது, நான் சொல்றது உனக்கு புரியலையாடாம்மா? அப்பா இத்தனை வருஷமா தப்பே பண்ணாமல் குற்றவுணர்ச்சியில் இருக்கேன். என்னை படிக்க வச்சி ஆளாக்கின என் மாமா என்னை துரோகியா பார்க்கிறார். திரும்பி என் பொண்ணால எதுவும் பிரச்சனை ஆனா என்னால அதை தாங்கிக்க முடியாது. நீ புரிஞ்சி அதுபடி நடந்துக்க” என்றார்.

மதுவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. பிரபாகரனிடம் பேசி முடித்துவிட்டு வெகுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள். எவ்வளவு எளிதாக சக்தியிடம் இருந்து விலகச் சொல்லி விட்டார். அவனைப் பார்த்து சிறிது காலமாக இருந்தாலும் அவனைத் தவிர வேறு ஒருவனை மதுவால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

‘சக்தியின் அத்தை பொண்ணுக்கு சக்தியின் மீது விருப்பம் இல்லை என்றால்…? சக்தியின் தாத்தாவுக்கும் இந்த கல்யாணத்தைப் பற்றிய எண்ணம் இல்லை என்றால்…? எதுவும் பிரச்சினை இருக்காது’ என தெளிந்தவள், இதை எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.

மீண்டும் இனிய நினைவுகள் அவளைச் சூழ, மணிமேகலை கூறியதும், பிரபாகரன் பேசியதும் இடையிட்டு அவளை அலைக்கழிக்க ஆரம்பித்தது.