வானவில் கோலங்கள் -7

அத்தியாயம் 7

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ நோயாளிகள் யாரும் அதிகமாக வரவில்லை. நற்பகல் பன்னிரெண்டு மணிக்கே சிகிச்சையகத்தை மூடிய மது, சக்திக்கு கைப்பேசியில் அழைத்தாள்.

“மினி பஸ் ஒன்னு இப்போ ஊருக்குள்ள வரும். அதுல ஏறி ஊருக்கு வெளியில் இருக்கிற முதல் ஸ்டாப்பிங்கில் இறங்கிக்க” என்றான்.

அவன் கூறியது போலவே சிற்றுந்தில் ஏறிக் கொண்டவள், ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு வந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள். அங்கே ஒரு ஈ காக்கா கூட இருப்பது போல தோன்றவில்லை.

வெயில் அதிகமாக இருக்க, கைப்பையிலிருந்து தன் கருப்புக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டாள். தன் துப்பட்டாவை எடுத்து முகத்தை மறைத்தவாறு சுற்றிக் கொண்டாள். சக்தியை காணாமல் மீண்டும் கைப்பேசியை கையில் எடுக்க, அவனது புல்லட் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். சக்திதான் வந்து கொண்டிருந்தான்.

“நேரத்தை கீப் அப் பண்ண மாட்டீங்களா முறைப்பையா?” எனக் கேட்டாள் மது.

“நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு. கொஞ்சநேரம் ஒளிஞ்சி நின்னு உன்னை பயமுறுத்தலாம்ன்னு பார்த்தா, நீ என்னை பயமுறுத்திற மாதிரி நிக்கிறே” என சிரித்தான்.

“கிண்டல் பண்ணாதீங்க. இதெல்லாம் வெயிலுக்கு” என தன் கண்ணாடியையும் முகத்தை மறைத்திருந்த துப்பட்டாவையும் காட்டிக் கூறினாள்.

மீண்டும் சிரித்தவன் “போலாம் ஏறு” என்றான்.

இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து கொண்ட மது அவனது தோளில் ஒரு கை போட புல்லட்டுடன் சேர்ந்து சக்தியின் மனமும் பறந்தது. ஒரு மணி நேரப் பயணம் சில நொடி துளிகளாய் இருவருக்கும் கடக்க, திருவாரூரை வந்தடைந்தனர்.

சக்தி திருவாரூர் வந்தால் எப்பொழுதும் சாப்பிடும் உணவகத்தில் மதிய உணவு அருந்தினார்கள்.

“என்ன வேணும் சொல்லு. வாங்கித் தர்றேன்” என்றான் சக்தி.

“சாண்டல் ஷோ ரூம் அழைச்சிட்டு போங்க” என்றாள்.

“முதல் முதல்ல ஏதாவது வாங்கித் தர்றேன்னு சொல்றேன். செருப்புக் கடை கூட்டிட்டு போகச் சொல்றியே?” என்றான்.

“கூட்டிட்டு போங்க” என மது கூற, சக்தியும் அழைத்துச்சென்றான்.

குதிகால் உயரம் உடைய இரு ஜோடி காலணிகள் வாங்கிக் கொண்டாள். ஒரு ஜோடி காலணியை அட்டைப் பெட்டியிலிருந்து பிரித்தவள், தான் அணிந்திருந்ததை அந்த அட்டைப் பெட்டியில் வைத்து விட்டு, புதியதை அணிந்துகொண்டாள்.

சக்தி பணம் செலுத்தி விட்டு வெளியே வர, அவன் பக்கத்தில் நின்று “இப்போ எப்படி உயரமா இருக்கேனா?” எனக் கேட்டாள்.

“ஏய் சுண்டெலி நாலு இஞ்ச் செருப்பு போட்டா நீ உசுரம் ஆகிடுவியா? எப்பவும் நீ சுண்டெலிதான்” என சக்தி கூற, மதுவின் முகம் வாடிப்போனது.

“எனக்கு ஹில்ஸ் போடவே பிடிக்காது. நீங்க சுண்டெலி, சுண்டெலின்னு கிண்டல் பண்றதாலதான் வாங்கிப் போட்டேன். திருப்பியும் அப்படியே சொல்றீங்க?” என பாவமாய் கேட்டாள்.

“என் மாமன் பொண்ணு நீ. உன் அத்தைப் பையன் நான். அப்படித்தான் எல்லாத்துக்கும் கிண்டல் பண்ணுவேன். நீயும் திருப்பி என்னை கிண்டல் பண்ணு. அதை விட்டுட்டு நான் சொல்றதை எல்லாம் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு உனக்கு பிடிக்காததை ஏன் செய்யணும்?” என்றவன், அட்டைப் பெட்டியில் இருந்த பழைய காலணிகளை வெளியே எடுத்தவன், “அதை கழட்டிட்டு இதையே போட்டுக்க” என்றான்.

“என்னை சுண்டெலின்னு கிண்டல் பண்ண மாட்டீங்களே?” என மது கேட்க, “குறைச்சுக்கிறேன், ஆனால் சொல்ல மாட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஒரு ஃப்ளோல அப்ப அப்ப வரும்” என்றான்.

அவனை முறைத்துக் கொண்டே காலணிகளை மாற்றிக்கொண்டவள் “இதை திரும்ப கொடுத்துடலாமா?” எனக் கேட்டாள்.

“வேண்டாம். முத முத வாங்கி கொடுத்திருக்கேன், உன்கிட்டயே இருக்கட்டும்” என்றவன் துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான்.

“ஏதாவது வாங்கிக்கோ மது” எனக் கூற இரவில் அணியும் பேண்ட், சட்டை இரண்டு செட் வாங்கிக் கொண்டாள்.

“புடவை இல்லைன்னா சுடிதார் வாங்கிக்குவன்னு பார்த்தா… இது என்ன?” எனக் கேட்டான்.

“நைட்ல போட்டுக்க” என்றாள்.

“ஒரு புடவை வாங்கிக்கோயேன் மது” என சக்தி கூற, “உங்களை பேண்ட் போட சொல்றேன்னா… இல்லைதானே? எனக்கு புடவை கட்டினா ரொம்ப அன்கம்ஃபர்டபிளா இருக்கும். நீங்க வாங்கிக் கொடுத்தாலும் அடிக்கடி எல்லாம் கட்ட மாட்டேன். எப்பவாவது ஒரு அக்கேஷன்ல… அப்பவும் கட்ட்டுவேனான்னு தெரியாது” என்றாள்.

“பரவாயில்லை வாங்கிக்க. எப்பவாவது கட்டணும்னு தோணினா கட்டிக்கோ. அப்புறம் நானும் அப்பப்ப பேண்ட் எல்லாம் போடுவேன்” என சிரித்தான்.

“அப்படியா நான் பார்த்ததே இல்லை”

“வயல்ல வேலை பார்க்க எனக்கு இதுதான் வசதி. அதுதான் எப்பவும் வேஷ்டியே கட்டிக்குறேன். மத்தபடி நானும் ஒரு காலத்தில பேண்ட் போட்டுக்கிட்டு திரிஞ்சவன்தான்” எனக் கூறி சிரித்தான்.

“எனக்கு புடவை செலக்ட் பண்ண தெரியாது. நீங்களே செலக்ட் பண்ணுங்க” என்றாள்.

“எனக்கு மட்டும் என்ன தெரியும்?” என்று கேட்டாலும், பாசி வண்ணத்தில் ஒரு புடவையை தேர்ந்தெடுத்து கொடுத்தான்.

“நல்லா இருக்கு” எனக்கூறி வாங்கிக்கொண்டாள். அதேநேரத்தில் அவனுக்கும் ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தாள்.

“இதென்ன நான் வாங்கிக் கொடுத்ததுக்கு பதில் நீ வாங்கி தர்றியா?” எனக் கேட்டான் சக்தி.

“நீங்க வாங்கி தரலன்னாலும் நான் வாங்கி தந்திருப்பேன். ரொம்ப யோசிக்காதீங்க, வாங்க” என்றாள் மது.

இன்னும் கடை வீதிகளில் அலைந்து, காதுகளுக்கு பொருத்தமாக பல நிறங்களில் காதணிகள் வாங்கிக் கொண்டாள்.

“பரவாயில்லையே ரொம்ப செலவு வைக்காம ஊர் சுத்துற” என்றான்.

“ஃபர்ஸ்ட் டைம் அழைச்சிட்டு வர்றீங்க, இப்பவே செலவு வச்சுட்டா பயந்திட மாட்டீங்க” என மது கேட்க,

“உன் முறைப்பையன் ஒரு விவசாயி. என் கூட எப்ப வெளியில வந்தாலும் இதை நினைவு வச்சுக்கோ” என்றான்.

“ஒரு பெரிய பண்ணையார் இப்படியெல்லாம் பேசலாமா? பொண்ணுங்க கூட வெளியில வரும்போது காசைப் பத்தி கவலை படக்கூடாது. அப்புறம் எப்படி பொண்ணுங்கள இம்ப்ரெஸ் பண்ணுவீங்க?” என்றாள் மது.

“பணத்தையும் பவுசையும் காட்டி யாரையும் நான் இம்ப்ரெஸ் பண்ண வேண்டாம். அதைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆவுற பொண்ணும் எனக்கு வேண்டாம்” என ரோஷமாக  கூறினான் சக்தி.

“என்ன கோவத்த பாரு. நானும் உங்க பணத்தையும் பகட்டையும் பார்த்து ஒன்னும் இம்ப்ரெஸ் ஆகல” என பதிலுக்கு மதுவும் கூறினாள்.

“நீதான இப்ப காச கணக்கு பார்க்காம செலவு பண்ணனும்னு சொன்ன?”

“பொண்ணுங்க பசங்க செலவு பண்ணனும்னு நினைப்பாங்கதான். நீங்க அப்படித்தான் என்ன வேணா செய்வேன், என்ன வேணா வாங்கிக்கோ அப்படின்னு சொல்லணும்” என மது கூற, “இப்படி கேட்கிறதெல்லாம் வாங்கிக்கொடுத்து, அதிகப்படியா செலவு பண்ணுனா குடும்பத்தை எப்படி ஓட்டுறதாம்?” என்றான் சக்தி.

“நீங்க எல்லாம் வாங்கி தர்றேன்னு சொன்னா உடனே நாங்க வாங்கிக்குவோமா? எல்லாம் உங்க நிலைமை தெரிஞ்சி அதுபடி நடந்துக்குவோம்” என்றாள் மது.

“அது சரி…. அப்ப வா இந்த ஊரையே உனக்கு வாங்கித் தர்றேன்” என சக்தி கூற, இருவரும் சிரித்தனர்.

தெப்பக்குளம் அழைத்துச் சென்றான். திருவாரூர் தேர் நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று காட்டினான். மனுநீதிச்சோழன் வரலாற்றைக் கூறினான். மதுவுக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. கோவிலுக்கு செல்லலாம் என மது அழைக்க, “இல்ல இப்பவே நேரமாயிடுச்சு. இப்ப கிளம்பினாதான் இருட்டறதுதுக்குள்ள ஊருக்கு போக முடியும். கிளம்பலாம்” என்றான்.

“இருட்டுனா என்ன? நீங்கதான் கூட இருக்கீங்களே” என்றாள்.

“இல்ல மது வெளிச்சத்தோடேயே போய்டலாம்” எனக் கூறி பிடிவாதமாக மதுவை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

சக்தியும் மதுவும் புல்லட்டில் சென்று கொண்டிருக்க, “நான் ஓட்டவா?” எனக் கேட்டாள் மது. 

“என்ன விளையாடுறியா?” என்றான்.

“எனக்கு பெரிய வண்டி ஓட்ட தெரியும். புல்லட்தான் ஓட்டினதில்லை. ஆசையா இருக்கு” என மது கெஞ்ச, இறங்கி அவளை முன்னால் அமரச்செய்து பின்னால் அமர்ந்துகொண்டு “ஓட்டு” என்றான்.

ஆசையாக மது வண்டியை ஓட்ட ஆரம்பிக்க, வண்டியின் கனம் தாங்காமல் சமநிலை இழந்தாள். வண்டி சாய்வது போல் இருக்க, மது பயந்து விட்டாள். பின்னாலிருந்து வண்டியின் கைப்பட்டியை பிடித்து விழாமல் இயக்கினான் சக்தி. அவனது முழு உடலும் மதுவின் முதுகில் உரச, அவளின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தது.

“இதுதான் நீ வண்டி ஓட்டுற லட்சணமா? கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் அந்த குட்டையில் விழுந்திருப்போம்” என்றான்.

“சக்தி” என மெல்ல அழைத்தாள் மது.

“என்ன?”

“வண்டியை நிறுத்துங்க” என்றாள்.

“ஏன்? நீதானே ஓட்ட ஆசைப்பட்ட. இப்போ நான் புடிச்சிருக்கேன், பயப்படாம ஓட்டு” என்றான்.

“இல்ல வேணாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் பின்னாடியே உட்கார்ந்துக்குறேன்” என்றாள்.

அப்பொழுதுதான் அவளை உரசிக்கொண்டு அமர்ந்திருப்பதை உணர்ந்த சக்தி வண்டியை நிறுத்தி இறங்கினான். அவளும் இறங்கி நின்றாள்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் நிற்க, “லேட் ஆகுது. போலாமா?” என அவனை பார்க்காமலேயே கேட்டாள் மது.

“ம்… போலாம்” என்றவன் வண்டியில் அமர, பின்னால் அமர்ந்தவள் அவன் தோளில் கைவைத்து பிடித்துக்கொள்ள நிதானமாகவே வண்டியை செலுத்தினான் சக்தி.

ஊருக்கு வெளியிலேயே நிறுத்தியவன் ஒரு சிற்றுந்து வர அதில் ஏறிக் கொள்ளச் சொன்னான். ஏறிக்கொண்ட மது வெளியில் பார்க்க அவனது புல்லட் மட்டும்தான் இருந்தது. சக்தியை காணவில்லை. சுற்றும் முற்றும் அவனைத் தேட, சிற்றுந்தின் உள்ளே அவளது இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தான். ஐந்து நிமிடங்களில் ஊர் வந்து விட இருவரும் இறங்கிக் கொண்டனர்.

இருவரது மனமும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க பேச்சு தேவையில்லை என்பதுபோல நடந்தனர். தோப்பு வீடு வரை உடன் வந்தவன், “உனக்கு பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

“ம்… ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் மது.

“இது கிராமம்” என்றான் சக்தி.

“தெரியும்” என்றாள்.

“ரொம்ப வசதி இருக்காது”

“எனக்கு ஒன்னும் அப்படி தெரியலை” என்றாள்.

“கொஞ்ச நாள்ல போரடிக்கும்”

“அப்படி தோணலை” என்றாள் மது.

“நல்லா யோசிச்சுக்க. ஏன்னா ஒரு தடவை உள்ள வந்துட்டா அப்புறம் போக முடியாது. நான் விடமாட்டேன்” என்றான்.

“இதுல யோசிச்சு சொல்ல என்ன இருக்கு? அப்புறம் என்ன உள்ள வந்தா நீங்க என்னை விட மாட்டீங்க?” என எதுவும் தெரியாதது போல கேட்டவள் பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, “ஏய் சுண்டெலி நான் பெருச்சாளி தெரியுமா?” என்றான்.

“அப்படியா பெருச்சாளி?” என்றவள் உடனே தன் முகத்தை மாற்றி தீவிரமாக வைத்துக்கொண்டு, அவனுக்கு பின்னால் பார்த்து, “சக்தி உங்க தாத்தா வர்றாங்க” என்றாள்.

பதறிப்போன சக்தி திரும்பிப்பார்க்க, “இந்தப் பெருச்சாளியை எப்படி சமாளிக்கிறதுன்னு இந்த சுண்டெலிக்கு நல்லா தெரியும்” எனக் கூறிவிட்டு உள்ளே ஓடி விட்டாள்.

சிரித்துக் கொண்ட சக்தி தன் வண்டியை எடுப்பதற்காக மீண்டும் சிற்றுந்தில் ஏறச் சென்றான்.

அன்று இரவு தன் தந்தையிடம் பேசிய மது, “அப்பா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கவா?” எனக் கேட்டாள்.

“என்னம்மா?” என்றார் பிரபாகரன்.

“உங்க பொண்ணு யாரையாவது லவ் பண்றதா சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்றாள். பிரபா பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

“என்னப்பா பதிலையே காணோம். பதில் சொல்லுங்க” என்றாள் மது.

“நீ சக்தியை விரும்புறியாம்மா?” எனக் கேட்டார் பிரபா.

தயக்கமே இல்லாமல், “எஸ் டாடி” என்றாள் மது.

“இது எப்படிம்மா சரிவரும்?”

“ஏன் சரியா வராது?”

“நீ சென்னையிலேயே வளர்ந்த பொண்ணு. அங்க எப்படி உன்னால பொருந்திப் போக முடியும்? நீ டாக்டர் அவன் விவசாயி. அதோடு உன்னை அவங்க வீட்டுல ஏத்துக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல உன்னோட அம்மா இதுக்கு ஒத்துக்கவே மாட்டா” என்றார்.

“நீங்க சொல்ற மாதிரி இந்த ஊர் ஒன்னும் எனக்கு பிடிக்காம இல்லை டாடி. சென்னையிலேயே இருக்கிற நீங்க அப்படி என்ன என்ஜாய் பண்றீங்க? ஆனா எனக்கு இங்க அப்படி இல்லை. இந்த அமைதியான ஊரும், மக்களும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”

“நான் எப்படி என் தொழிலை நேசிச்சி செய்றேனோ அதே மாதிரி சக்தியும் அவரோட தொழிலை நேசிச்சி செய்றார். டாக்டர்ன்னா உயர்வுன்னும் விவசாயின்னா மட்டம்ன்னும் கிடையாது”

“விவசாயத்தை மட்டமா சொல்லலம்மா. ரெண்டு பேரோட வாழ்க்கை முறை வேற வேறன்னுதான் சொல்றேன்” என்றார் பிரபாகரன்.

“ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர். உங்களுக்கு தெரியாதா? அப்புறம் நீங்களும் அம்மாவும் டாக்டர்ஸ். ஒரே ப்ரொபஷனல்ல இருந்தும் உங்களுக்கு மட்டும் ஒத்துப் போகுதா?” எனக் கேட்டாள் மது.

மதுவின் கேள்வியில் சிரித்துக் கொண்ட பிரபாகரன், “ஊரை பிடிச்சிருக்கு, சக்தியை பிடிச்சிருக்கு, எல்லாம் சரி. அவங்க வீட்டில உள்ளவங்களையும் அம்மாவையும் என்ன பண்றது? அவங்க சம்மதிக்க மாட்டாங்க” என்றார் பிரபாகரன்.

“அவங்க வீட்டில உள்ளவர்களை சக்தி சமாளிச்சுப்பார். அம்மாவை நீங்க சமாளிங்க” என மது கூற, “விளையாடாத மது, நீ இன்னும் நல்லா யோசிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்” என்றார் பிரபாகரன்.

“டாடி நான் நல்லா யோசிச்சுட்டேன். சக்தியை பார்த்த அன்னையிலேருந்து எனக்கு அவர் மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. போகப்போக அவர் கூட என்னால நல்லா பழக முடிஞ்சது. இப்போ சக்தியைத் தவிர வேற யாரையும் என் ஹஸ்பண்ட்டா என்னால நினைச்சுப் பார்க்கவே முடியல. அந்தக் குடும்பத்துல என்னால பொருந்திப் போக முடியுமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனா சக்தி கூட என்னால ஈசியா பொருந்திப் போக முடியும். அவர் இல்லைனா எனக்கு ரொம்ப கஷ்டம் டாடி” என்றாள்.

மதுவை நன்றாக புரிந்து வைத்திருப்பவர் பிரபாகரன். அவள் பேசுவதிலிருந்து எந்த அளவுக்கு சக்தியை விரும்புகிறாள் என உணர்ந்து கொண்டார்.

“சக்திக்கும் இதுல சம்மதமா?” எனக் கேட்டார் பிரபாகரன்.

“அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள்.

“என்னம்மா இது?அப்போ இது ஒன் சைடு லவ்வா?” எனக் கேட்டார்.

“இல்லப்பா அவருக்கும் என்னை பிடிச்சிருக்கு. ரெண்டுபேருமே இன்னும் நேரடியா சொல்லிக்கல. ஆனா ரெண்டு பேருக்குமே நாங்க லவ் பண்றது தெரியும்” என்றாள்.

“குழப்பாதம்மா” என்றார்.

“வாயால ஒருத்தரை ஒருத்தர் இன்னும் சொல்லிக்கலைன்னாலும் வீ கேன் ஃபீல் அவர் லவ். நீங்க முதல்ல அம்மாவை லவ் பண்ணுங்க. அப்பதான் உங்களுக்கு புரியும்” என மது சொல்ல, வாய் விட்டு சிரித்தார் பிரபா.

“உன் அம்மாவுக்கும் இந்த அட்வைச சொல்லுடாம்மா” என பிரபாகரன் கூறினார்.

“அவ்ளோதானே நீங்க சொல்லச் சொன்னதா சொல்லிடுறேன்” என்றாள் மது.

“அப்பப்ப மக்கர் பண்ணினாலும் ஏதோ என் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு. நீ மொத்தமா டேமேஜ் பண்ணிடாதே” என பிரபா கூற மது கலகலவென சிரித்தாள்.

மதுமிதா சிகிச்சையகத்தில் இருக்க, மணிமேகலை அங்கு வந்தார். அவர் யார் என்பது மதுவுக்கு தெரியாது.

அவரை அமரச் செய்து, “என்ன செய்யுது?” எனக் கேட்டாள்.

“ரொம்ப சோர்வா இருக்குது. பசி எடுக்க மாட்டேங்குது. ஏதாவது மருந்து எழுதி தாம்மா” என்றார்.

அவரை பரிசோதித்தவள், “எல்லாம் நல்லாதான் இருக்கு. நான் சில பிளட் டெஸ்ட் எழுதித் தர்றேன். அதை எல்லாம் எடுத்துட்டு வந்து பாருங்க” என்றாள்.

“இப்போ ஏதாவது மருந்து எழுதித் தாம்மா” என்றார்.

“என்னன்னு தெரியாம எப்படி மருந்து எழுதறது? டெஸ்ட் பண்ணிட்டு வாங்க” என்றாள்.

“என்னமோ என் மருமகன் நீ பெரிய டாக்டரு… பாம்பு கடிச்சவன் உசுரையே காப்பாத்திட்ட, அப்படியாக்கும், இப்படியாக்கும்ன்னு சொல்றான். எனக்கு என்னன்னு வைத்தியம் பார்க்க தெரியாம டெஸ்ட் பண்ண சொல்றியே?” என மணிமேகலை அங்கலாய்ப்பாய் கூற, மதுவுக்கு சிரிப்புதான் வந்தது.

“யார் உங்க மருமகன்?” என மது கேட்க,

“இந்த ஆஸ்பத்திரிய அமைச்சுக் கொடுத்தானே சக்தி… அவன்தான் என் பொண்ண கட்டிக்க போற என்னோட மருமகன்” என்றார் மணிமேகலை.

மது அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, “இப்படி காச கரிகோலம் பண்ணி ஊருக்கு வைத்தியம் பாக்கன்னு உன்னை புடிச்சுகிட்டு வந்தா… உனக்கு ஒன்னும் தெரியலை. என்னமோ போ, எம்பொண்ணு போயிதான் எல்லாத்தையும் இழுத்து பிடிக்கணும்” என கூறிக் கொண்டே வெளியில் எழுந்து சென்றார்.

மதுவின் மனம் கடலில் சிக்கிய துரும்பென ஆனது.