காலையில் அலைபேசியில் மதுவிடம் இருந்து வந்த ‘குட்மார்னிங்’ என்ற குறுஞ்செய்தி சக்தியின் காலைப்பொழுதை அழகாக்க, பதிலுக்கு காலை வணக்கம் என செய்தி அனுப்பிவிட்டு அதே உற்சாகத்துடன் தயாராகி அறையிலிருந்து வந்தான்.
சக்தியும் குருவும் காலை உணவு சாப்பிட வளர்மதி பரிமாறிக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், “டேய் சக்தி… இன்னைக்கு புளியந்தோப்புல புளி உலுக்குறாங்க. நீ அங்க போடா” என குருபரன் கூற, அவனை கவனிக்காமல் எதையோ நினைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் சக்தி.
“டேய் உன்கிட்டதாண்டா” என குரு சக்தியை உலுக்க “என்னடா?” என்றான்.
“நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா தனியா சிரிக்குற?” என குரு கேட்க, அருகில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த தாத்தா என்னவெனப் பார்த்தார்.
குருவின் கையைப் பிடித்திழுத்த சக்தி “மெதுவா பேசுடா” என்றான்.
“ஏண்டா தனியா சிரிக்குற?” என குரு மெதுவாக கேட்க, “நான் எங்கடா தனியாக சிரிச்சேன்? நீ சொன்னதுக்குதான் சிரிச்சேன்” என்றான்.
“நீ சிரிக்கிற மாதிரி நான் என்னடா சொன்னேன்?” என குரு கேட்க, அவன் என்ன சொன்னான் என்றே தெரியாத சக்தி, “எங்க திருப்பி நீயே சொல்லு, உனக்கு தெரியும்” என்றான்.
“புளியந்தோப்புல புளி உலுக்கப் போறாங்க, நீ போய் நில்லுடான்னு சொன்னேன். இதுல சிரிக்க என்னடா இருக்கு?”
“அப்படியா சொன்ன?இல்லடா மாந்தோப்புல புளி உலுக்குறாங்கன்னு சொன்ன. அதான் சிரிச்சேன்” எனக் கூறி சமாளித்து விரைவாக அங்கிருந்து வெளியேறினான்.
“நான் மாந்தோப்புன்னா சொன்னேன்? இல்லையே புளியந்தோப்புன்னுதானே சொன்னேன்” என தனக்குத்தானே குரு கேட்டுக்கொள்ள, “என்னடா தனியா பேசிக்கிட்டு இருக்குற? இன்னைக்கு வயல்ல உளுந்து தெளிப்பு இருக்கு. வெரசா போடா” என அங்கு வந்த வீரவேல் சொல்ல, விழித்த குரு, “இதோ போறேன்ப்பா” எனக் கூறி அவனும் வெளியே சென்றான்.
சக்தி வெளியே வர, மூச்சிரைக்க ஓடி வந்தாள் சுகன்யா.
“ஏன் இப்படி ஓடி வர்ற?” எனக் கேட்டான் சக்தி.
“மாமா எனக்கு பஸ்சுக்கு லேட்டாயிடுச்சு. அப்பா ஏதோ வேலைன்னு காலையிலேயே போயிட்டாங்க. என்னை பஸ் ஏத்தி விடுங்க” என்றாள் சுகன்யா.
சக்தி யோசனையாய் அவளை பார்க்க குருவும் வெளியில் வந்தான். “டேய் குரு நீ வயலுக்குதானே போற. அப்படியே சுகன்யாவை பஸ் ஏத்தி விட்டுடு” என்றான்.
“ஏன் நீ கொண்டு போய் விடுறத்துக்கு என்ன?” என குரு கேட்க, “நீதானடா புளியந்தோப்பு போகச் சொன்ன? நீ போற வழியிலதான் பஸ் ஸ்டாப் இருக்கு, நீ குருவோட போ சுகன்யா” என்றான்.
‘சரியான மக்கு மாமா’ என மனதிற்குள் புலம்பிக்கொண்டே முகம் சுளித்து குருவுடன் சென்றாள் சுகன்யா.
சக்தி அவன் கிளம்புவதற்கு முன் சிவப்பியைப் போய் பார்க்க, அனுசுயாவும் அங்கேதான் நின்றிருந்தார். “சீம்பால் திரட்டு இருந்ததே சாப்பிட்டியா?” எனக் கேட்டார் அனுசுயா.
“எடுத்து வைக்காம இந்த வளர் என்ன சாப்பாடு பரிமாறினா? ஒரு நிமிஷம் நில்லு, எடுத்துட்டு வரேன் சாப்பிட்டுட்டு போகலாம்” என்றார்.
“நேரம் இல்லைம்மா நீ ஒரு டப்பால போட்டுக் கொடு” என்றான்.
“சாப்பிட எம்புட்டு நேரம் ஆகப்போகுது டப்பால எதுக்குடா?”
“அதான் நேரம் இல்லைன்னு சொல்றேன்ல. டப்பால கொடு” என்றான். அனுசுயாவும் அவ்வாறே கொடுக்க எடுத்துக்கொண்டு தன் புல்லட்டில் கிளம்பினான் சக்தி.
போகும் வழியில் சிகிச்சையகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். மதுமிதா புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாள். இவன் வரவும், “என்ன முறைப்பையா காலையிலேயே வந்திருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?” எனக் கேட்டாள்.
“என்ன புக் படிச்சுட்டு இருக்க, யாரும் வரலையா?” எனக் கேட்டான்.
“காலையிலேயே ஒரு தாத்தா வந்தார். அப்புறம் யாரும் வரலை. ரொம்ப போரடிக்குது” என்றாள்.
“இங்க பக்கத்துல இருக்கிற கிராமங்களுக்கும் மருத்துவ வசதி கிடையாது. நீ இங்க வந்து பார்க்கிறது அவங்களுக்கு எல்லாம் தெரியாதுல்ல… அதான் கூட்டம் வரலை. நான் தெரியப்படுத்துறேன். அப்புறம் கொஞ்சம் நிறையப் பேர் வருவாங்க” என்றான்.
“சீக்கிரம் தெரியபடுத்துங்க. அப்புறம் இன்னைக்கு ஈவ்னிங் அப்பா அனுப்பி வச்சது எல்லாம் திருவாரூர் வந்துடும். எடுத்துட்டு வந்துடுங்க” என்றாள்.
“இந்த எமர்ஜென்சி விசயத்ததான் நைட்டே சொல்லிட்டியே” என சக்தி கூற, சிரித்த மதுவுக்கு இலேசாக வெட்கம் எட்டிப் பார்த்தது.
“இந்தா, இது சீம்பால் திரட்டு. இதெல்லாம் நீ சாப்பிட்டிருக்க மாட்ட. ரொம்ப நல்லாயிருக்கும். சாப்பிடு” என அனுசுயா கொடுத்த பாத்திரத்தை அவளிடம் நீட்டினான்.
“சீம்பால் திரட்டுன்னா என்ன?” என கேட்டுக்கொண்டே வாங்கினாள்.
“பசு கன்னு போட்டதும் முதல் மூணு நாளைக்கு வர்ற பாலை சீம்பால்ன்னு சொல்லுவோம். அதுல செய்யுற இனிப்புக்கு பேருதான் சீம்பால் திரட்டு” என்றான்.
“கன்னு குடிச்சது போக மீதி பால்ல செய்றதுதான் இது. அப்படி எல்லாம் எல்லா பாலையும் பசு கிட்ட இருந்து நாம கறந்திட முடியாது. அதோட கன்னுக்கு தனியா பாலை மடியில ஒளிச்சு வச்சுக்கும். மீதி பாலைத்தான் நாம கறக்க முடியும்” என்றான்.
ஒரு வாய் எடுத்து சாப்பிட்டவள், “வாவ் யம்மியா இருக்கு” என்றாள்.
“சரி நீ சாப்பிடு நான் கிளம்புறேன்” எனக்கூறி சக்தி வெளியே செல்ல, மதுவும் வெளியே வந்து வழியனுப்பினாள்.
அன்று மாலையே பிரபாகரன் அனுப்பிய இன்னும் சில மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் சிகிச்சையகத்தில் உபயோகத்திற்கு வைத்தாள். எல்லாவற்றிற்கும் லட்சங்களில் செலவாகியிருக்கும். ஆனால் இவற்றின் பண மதிப்பை பற்றியெல்லாம் மது சக்தியிடம் கூறவில்லை.
சில மருந்துகள் வைக்க குளிர்சாதனப் பெட்டி தேவையாக இருக்க, சிறிய குளிர்சாதன பெட்டி ஒன்றும் தானே பணம் கொடுத்து வாங்கி வரச் செய்தாள். சக்தி அவன் வாங்கி தருவதாக கூறியும் மறுத்து விட்டாள். மொத்தத்தில் எந்த அவசர சிகிச்சையும் உடனடியாக வழங்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தாள்.
சக்தி மற்ற கிராமங்களில் இருந்தும் மதுவின் இலவச மருத்துவ சேவை பற்றி தெரிவித்திருக்க இப்போது அதிகமான ஆட்கள் வர ஆரம்பித்திருந்தனர்.
மது கிராமத்திற்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. சக்திக்கும் மதுவுக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது. அதை தாண்டிய ஏதோ ஒன்றும் இருவருக்கும் இடையே இருந்தாலும், அதை இருவருமே அறிந்திருந்தாலும் வெளிப்படையாக இருவரும் எதுவும் கூறிக் கொள்ளவில்லை.
தான் செய்ய முடியாததை தன் மகள் செய்வது நினைத்து பிரபாகரனுக்கு மிகுந்த மகிழ்ச்சியானது. மாதாமாதம் அவரே ஒரு குறிப்பிட்ட தொகையை மருந்துகளுக்காக கொடுப்பதாகவும் கூறினார். இதை சக்தியிடம் மது தெரியப்படுத்தினாள்.
“பரவாயில்லை உன் அப்பா நிறைய நல்லது செய்றார். இதெல்லாம் என்ன பரிகாரமா?” என சக்தி கேட்டான். மதுவுக்கு கோவம் வந்து விட்டது.
“பரிகாரம் செய்ய, என் அப்பா எந்த பாவமும் செயலை” என சூடாக பதிலளித்தாள்.
“எதுக்கு கோவப்படுற? உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். உன் அப்பா என் அத்தையை…” என சக்தி ஆரம்பிக்க, அவனை மேலே பேச விடாமல் தடுத்து நிறுத்தினாள்.
“எனக்கு எல்லாம் தெரியும். என் அப்பா மேல எந்த தப்பும் இல்லை” என்றவள் பிரபாகரன் கூறிய அனைத்தையும் அவனிடம் கூறினாள்.
“இதே கதையைத்தான் உன் அப்பா என் அம்மாகிட்டயும் சொல்லியிருக்கார்” என்றான் சக்தி.
“இது ஒன்னும் கதையில்லை, உண்மை. உங்க அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அவங்க செத்துடுவாங்களோன்னு பயந்து போய்தான், உங்க தாத்தா ஏற்பாடு பண்ணியிருந்த கல்யாணத்தை நிறுத்த வேறு வழி தெரியாம அவசர அவசரமா என் அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார்”
“என் அம்மாவை அவர் லவ் எல்லாம் பண்ணலை. இந்த விஷயம் கல்யாணத்துக்கு அப்புறம் என் அம்மாவுக்கும் தெரிஞ்சு இப்ப வரையிலும் என் அப்பா அம்மாக்குள்ள சண்டை நடந்துக்கிட்டே இருக்கு. இப்படி கதையெல்லாம் கட்டி அவர் வாழ்க்கையை நிம்மதியில்லாம மாத்திக்கணும்னு அவருக்கு ஒன்னும் அவசியம் இல்லை” என்றாள்.
“அப்புறம் ஏன் என் அத்தை செத்துப் போகணும்?”
“அதுதான் தெரியலை. ஆனா கண்டிப்பா அவங்க இறந்ததுக்கு என் அப்பா காரணம் இல்லை. அதுக்காக நீங்க சொன்ன மாதிரி பரிகாரமா இதையெல்லாம் செய்யலை. போதுமா?” என்றாள்.
“உங்க அப்பாவை சொன்னதும் என்னமா பொங்குற?”
“பின்ன தப்பே செய்யாதவரை இப்படி எல்லாரும் வறுத்தெடுத்தா? பாவம் அவர்” என்றாள்.
“உங்க அம்மா வறுத்தெடுக்குறதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. ஆனா உன் அப்பாவை பழையபடி அவர் மாமா குடும்பத்தோடு சேர்த்து வைக்கலாம்” என்றான்.
“முடியுமா சக்தி?” என தன் பெரிய விழிகளை இன்னும் பெரிதாக்கி கேட்டாள் மது.
“அத்தை ஏன் இறந்தாங்கன்னு கண்டு பிடிச்சுட்டா உன் அப்பா காரணமில்லைன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிடும். அப்புறம் கண்டிப்பா உன் அப்பாவை என் தாத்தா ஏத்துக்குவார்” என்றான்.
சட்டென அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவள், “இதை மட்டும் நீங்க செஞ்சுட்டீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றாள்.
தன் கைகளை பிடித்திருந்த அவளது கைகளைப் பார்த்துக்கொண்டே, “தெரியுது… செய்றேன்னு சொன்னதுக்கே இவ்ளோ சந்தோஷம்ன்னா, செஞ்சா எவ்வளவு சந்தோஷப் படுவேன்னு தெரியுது” என ஆழ்ந்த குரலில் கூற, சட்டென கைகளை விட்டாள். சக்தி மதுவை பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலை தாழ்த்தி கொண்டாள் மது.
அப்போது நான்கைந்து ஆட்கள் மருதுவை தூக்கிக் கொண்டு ஓடி வந்தனர். அவனை அங்கிருந்த ஒற்றை மரப் பெஞ்சில் படுக்க வைக்க சொன்ன மது “என்னாச்சு?” எனக் கேட்டாள்.
“தெரியலைங்க நல்லாதான் இருந்தான். மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தான். திடீர்னு கீழ விழுந்துட்டான், கண்ணு முழி ரெண்டும் மேலே சொருகுது. எதுவும் பேச மாட்டேங்கிறான்” என அழுகையும் தவிப்புமாய் கூறினார் மருதுவின் அன்னை.
மருதுவின் ஒரு வயது குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு நின்றிருந்தாள் அவனின் மனைவி.
“கொஞ்சம் தெளிவா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க. அப்பதான் என்னன்னு பார்க்க முடியும்” என்றாள் மது.
“என்ன நடந்துச்சுன்னே தெரியலையே. நல்லா இருந்தவன் திடீர்னு இப்படி ஆயிட்டான்” எனக் கூறி மீண்டும் மருதுவின் தாயார் அழ, அவனை தூக்கி கொண்டு வந்தவர்களும், “யாருக்கும் எதுவும் தெரியலை நீங்களே என்னன்னு பாருங்க” என்றனர்.
ஒருவரை மட்டும் உள்ளே இருக்க செய்து மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டு மருதுவை பரிசோதிக்க ஆரம்பித்தாள் மது. சக்தியும் அங்கேதான் இருந்தான்.
“மருது… மருது… நான் பேசுறது கேக்குதா?” எனக் கேட்டாள். அவன் தலையை ஆட்டினான். ஆனால் எதுவும் பேச முடியாமல் குரல் குழறியது. இரு கருவிழிகளும் மேல் நோக்கி இருக்க, அவனை இன்னும் பரிசோதித்தவள் “இது பாம்புக்கடி மாதிரி இருக்குது” என்றாள்.
“என்ன பாம்பு கடியா?” சக்தி கேட்க, “ஆமாம் இவரோட சிம்டம்ஸ் அப்படித்தான் இருக்கு” என்றாள் மது.
“அப்படின்னா கடிச்ச தடம் எங்கேயும் இருக்குமே” என கூட நின்ற மருதுவின் மச்சான் கூற, அவன் கால்களை சக்தியும் மதுவும் ஆராய்ந்து பார்க்க, அவனது வலது காலின் குதிரை முகத்தில் பாம்பின் பல் தடம் தெரிந்தது.
மருதுவின் மாதிரி இரத்தத்தை ஒரு ஊசி செலுத்தும் குழலில் எடுத்து உறையும் நேரத்தை கணக்கிட வைத்தாள். தன் தந்தையிடம் விரைவாக கலந்தாலோசித்து குளிர்சாதன பெட்டியில் இருந்த பாம்பு விஷத்தை முறிக்கும் ஏ எஸ் வி எனப்படும் ஆன்டி சிநேக் வீனம் மருந்துகளை சலைனில் கலந்து செலுத்த ஆரம்பித்தாள்.
“சக்தி நம்மகிட்ட மருந்து கொஞ்சமாதான் இருக்கு. இவருக்கு இன்னும் அதிகமா தேவைப்படும். உடனடியா இவரை பாம்பு விஷ முறிவு மருந்து கிடைக்கிற ஹாஸ்பிடல அட்மிட் பண்ணனும். இவருக்கு பாம்பு கடிச்சு ரொம்ப நேரம் ஆகியிருக்கணும். ரத்தம் இன்னும் உறையவே இல்லை. சில சமயம் வென்டிலேட்டர் சப்போர்ட் தேவைப்படும். சீக்கிரம் அழைச்சுட்டு போகலைன்னா உயிருக்கே ஆபத்தாகலாம்” என்றாள்.
சக்தி உடனே குருவுக்கு அழைத்து காரை எடுத்து வரச் செய்தான். மருதுவின் மச்சான் காரின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொள்ள அவன் மடியில் மருதுவின் தலையை வைத்து படுக்க வைத்து, மது முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, சக்தி காரை எடுத்தான். மருந்து கலந்த சலைனை கொஞ்சம் உயரத்தூக்கி கயிறு மூலம் கட்டியிருந்தாள் மது.
போகும் வழியிலேயே சக்தி மூர்த்திக்கு விஷயத்தைக் கூறியிருக்க, அவரும் மருத்துவமனையில் பணியிலேயே இருந்ததால், மருதுவை அழைத்துச் சென்றதும் நேரே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அனுபவம் வாய்ந்த அவரும் மருதுவுக்கு பாம்புகடிதான் என்பதை உறுதிப்படுத்தி சிகிச்சையை ஆரம்பிக்க செய்தார்.
மருதுவின் அன்னையும் மனைவியும் இன்னும் சிலரும் மருத்துவமனையை வந்தடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின்பு வந்த மூர்த்தி, “ரொம்ப புத்திசாலித்தனமா டயக்னோஸ் பண்ணி செயல்பட்டிருக்க மது. சரியான நேரத்தில ஏ எஸ் வி மருந்து செலுத்துனதால ரொம்ப க்ரிட்டிக்கல் ஆகாம போய்டுச்சு. மருதுவ காப்பாத்திடலாம்” என்றார்.
“அது சரி மது. ஏ எஸ் வி எப்படி நீ கிளினிக்கில் வச்சிருந்த?” என வியப்பாய் கேட்டார்.
“நான் முன்னாடியே என்னென்ன மெடிக்கல் எமர்ஜன்ஸி ஆகியிருக்குன்னு சக்திகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். சிக்ஸ் மன்த்ஸ் முன்னாடி ஸநேக் பைட் ஏற்பட்டு ஒருத்தர் இறந்து போனதா சக்தி சொல்லவும், அப்பாகிட்ட கேட்டு 10 வைல் மட்டும் ஏ எஸ் வி வாங்கி வச்சிருந்தேன்” என்றாள்.
“வெல் டன் மது. யூ ஹேவ் டன் அ கிரேட் ஜாப்” என பாராட்டினார் மூர்த்தி. மருதுவின் அன்னையும் மனைவியும் மதுவை கையெடுத்து கும்பிட, அவளுக்கு மிகவும் கூச்சமாகிப் போனது.
பின்னர் சக்தி மருதுவின் மச்சானிடம் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு, வேறு எந்த உதவி என்றாலும் கேட்க சொல்லிவிட்டு, மதுவை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினான். நன்றாக இருட்டி விட்டதால் காரின் முதன்மை விளக்கின் வெளிச்சத்தில் மெதுவாக காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
“தேங்க்ஸ் மது” என்றான்.
“நான் ஒரு டாக்டர். என்னோட கடமையைத்தானே செய்தேன்?” என்றாள் மது.
“நீ இன்னைக்கு ஒரு உயிரை மட்டும் காப்பாத்தலை. ஒரு வயசான அம்மாவோட நிம்மதியையும், வாழவேண்டிய பொண்ணோட வாழ்க்கையும், ஒரு சின்ன குழந்தையோட எதிர்காலத்தையும் சேர்த்து காப்பாத்தியிருக்க” என்றான்.
“என்னை ஓவரா புகழாதீங்க. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றாள்.
“இதை மாதிரி சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காம எத்தனை பேர் உயிரை விட்டுருக்காங்க தெரியுமா? நீ மட்டும் இந்த ஊருக்கு வரலைன்னா இன்னைக்கு மருதுவும் உயிரோட இருந்திருக்க மாட்டான். அதுக்காக உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்றான்.
“இப்படி வாயால வெறும் நன்றி சொன்னா போதாது” என்றாள்.
“வேற என்ன வேணும்? கேளு செஞ்சுடுவோம்” என்றான் சத்தி.
“நாளைக்கு என்னை அவுட்டிங் கூட்டிட்டு போகணும். நான் கேட்கிறது எல்லாம் வாங்கிதரணும்” என்றாள்.
“எங்க ஊர்ல என்ன இருக்கு வாங்கி தர?”
“உங்க ஊர்ல இல்லை, வேற எங்கேயாவது அழைச்சிட்டு போங்க” என்றாள்.
“நாளைக்கு ரெடியா இரு. நான் கார் எடுத்துட்டு வர்றேன். திருவாரூர் போலாம்” என்றான்.
“கார்லயா? “ என இழுத்தாள்.
“பின்ன?” எனக் கேட்டான் சக்தி.
“உங்க புல்லட்டுல கூட்டிட்டு போங்க”
“உன்னை என் புல்லட்டில உட்கார வச்சி கூட்டிட்டு போனா என் ஊருல எல்லாரும் ஒரு ஒரு மாதிரி பேசுவாங்க” என்றான்.
“எந்த மாதிரி பேசுவாங்க?” என புருவத்தை உயர்த்தி மது கேட்க, “இது வேலைக்கு ஆகாது” என தனக்குதானே முணுமுணுத்து தன் தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டான்.
“என்ன வேணா கேளு செஞ்சுடுவோம்ன்னு சொன்னீங்க? இப்போ பின்வாங்குறீங்களே? அத்தை மகனுக்கு இதுதான் அழகா? மாமன் பொண்ணு கேட்டு மறுக்கலாமா?” என கேட்டாள் மது.
‘ஒரு உயிரைக் காப்பாற்றிய மருத்துவரா இவள்?’ என வியப்பாய் அவளைப் பார்த்தவன், “சரி ஒன்னு பண்ணு. காலையிலே நோயாளிகளை பார்த்துட்டு மினி பஸ் புடிச்சி ஊருக்கு வெளியில் இறங்கிக்க. நான் புல்லட்டோட அங்க நிக்குறேன்” என்றான்.
“நிஜமா?“ என மது கேட்க,
“நெசந்தேன்” என தோரணையாய் சக்தி கூற, இருவருமே சிரித்தனர்.
தோப்பு வீட்டில் மதுவை இறக்கிவிட்டு தன் வீட்டுக்கு வந்தடைந்தான் சக்தி. விடியப் போகும் நாளைக்காக இருவரும் ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தனர்.