வானவில் கோலங்கள்-3

அத்தியாயம் 3

இரவு உணவு உண்ணும் வேளை. சுஜாதாவும் மயூரியும் இன்னும் வீடு வரவில்லை. சுஜாதாவின் தந்தை மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது காலத்திலேயே மகளுக்கு தனி மருத்துவமனை கட்டி தந்துவிட்டார். சுஜாதாவும் பிரபாகரனும்தான் அங்கே மருத்துவம் பார்த்து வந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுஜாதா மருத்துவமனையை புதுப்பித்து மத்திய அமைச்சர் ஒருவரை வைத்து திறப்பு விழாவும் செய்திருந்தார். மத்திய அமைச்சருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றியது சுஜாதாதான். அவருடைய குடும்ப மருத்துவர் பிரபாகரன்தான். இருவருக்காகவும் எதையும் செய்வார் இந்த மத்திய அமைச்சர்.

சுஜாதா தனக்குப் பிறகு தன் மகள்கள் இருவரும் இந்த மருத்துவமனையை பார்த்துக்கொள்ள வேண்டுமென விரும்பினார். அதனால்தான் இருவரையும் மருத்துவம் பயிலச் செய்து மாப்பிள்ளையும் மருத்துவராகவே தேர்ந்தெடுத்தார்.

இந்த மருத்துவமனை சுஜாதாவின் கனவு என்றே சொல்லலாம், அதற்கான அவருடைய உழைப்பு அதிகம். மயூரிக்கும் சுஜாதாவின் கனவில் விருப்பம் இருந்ததால் அவளும் அதிகமாகவே உழைத்தாள்.

மதுவுக்கு அப்படி இல்லை. தன்னுடைய வாழ்வை ரசித்து வாழ வேண்டும் என்று நினைப்பவள். அம்மா சொன்னார் என்றெல்லாம் அவள் மருத்துவம் பயிலவில்லை. உண்மையிலேயே அவளுக்கு விருப்பம் இருந்ததால் பயின்றாள். அவளும் அம்மாவின் மருத்துவமனைக்கு சென்று வருகிறாள். மருத்துவத்தை வியாபார நோக்குடன் பார்க்க மாட்டாள்.

அன்று மாலை விரைவிலேயே விடு திரும்பியவள் சமையல்கார அம்மாவை தடுத்து தானே சமைத்தாள். சுஜாதாவின் அம்மா இன்று உயிரோடு இல்லாவிட்டாலும் மதுவை அவர்தான் வளர்த்தார். அவரிடமிருந்து நல்ல பண்புகளுடன் சமையலையும் சேர்த்து கற்று வைத்திருந்தாள் மது. அடிக்கடி இணையத்தின் உபயத்தால் புதிது புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருப்பாள்.

உணவு மேசையில் வந்தமர்ந்த பிரபாகரன், கோபிபராத்தா,ராஜ்மா, வெள்ளரிக்காய் ரைதா, பிரட் அல்வா என உணவு வகைகளை பார்த்துவிட்டு, “என்னம்மா இன்னைக்கு உன் சமையலா? என்ன சந்தோசமான விஷயம் எதுவும் இருக்கா?” என மதுவிடம் கேட்டார்.

“டாடி நான் ஹாப்பி இல்ல. சோ சேட். அதான் மூட் சேஞ்ச் பண்றதுக்காக சமைச்சேன்” என்றாள் மது.

“அப்படி என்ன ஆச்சு?”

“அம்மா திரும்பவும் கௌசிக்கை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி பேசினாங்க. நான் மறுத்தாலும் கேட்க மாட்டேங்கிறாங்க. ஒரு வருஷம் டைம் கேட்டாலும் விட மாட்டேங்கிறாங்க. என்னை கன்வின்ஸ் பண்றதிலேயே இருக்காங்க” என்றாள்.

“சரி, மயூரி கல்யாணம் முடியட்டும். இதைப்பத்தி உன் அம்மாகிட்ட நானே பேசுறேன்” என்றார் பிரபா.

மயூரி அஜய் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. மீண்டும் சுஜாதா மதுவின் திருமணம் பற்றிப் பேச பிரபாகரன் எப்போதும் போல அமைதியாக இல்லாமல் இந்த முறை சற்று அழுத்தமாகவே மகளின் பக்கம் பேசினார். எப்போதும் சண்டையிட்டு சுஜாதா தன் காரியத்தை சாதித்துக் கொள்வார். இந்த முறை சுஜாதாவை சமாதானம் செய்யாமல் தானும் அவருடன் சண்டையிட்டு பேசாமல் இருந்தார் பிரபாகரன்.

தன் கல்யாணம் குறித்து பெற்றோர் சண்டையிடுவது குறித்து வருத்தமடைந்த மது, தன் தந்தையை தனிமையில் சந்தித்து பேசினாள்.

“அப்பா எனக்காக நீங்க அம்மாகிட்ட சண்டை போட வேண்டாம். நான் வேணும்னா இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடவா” எனக் கேட்டாள் மது.

“கல்யாண முடிவு எல்லாம் இப்படி நிர்ப்பந்தத்தில் எடுக்கக்கூடாதும்மா. உன் பக்கம் நியாயம் இருக்கு. உன்னோட வாழ்க்கைக்கு நாங்க வழிகாட்டியா இருக்கலாம். அதை விட்டுட்டு உன் விருப்பத்தை மதிக்காமல் அவ இஷ்டத்தை உன்மேல திணிக்கிறது தப்பு. அதனால நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம். நீ ஒரு வருஷம் டைம் கேட்ட மாதிரி எடுத்துக்கோ. அதுக்கு அப்புறம்தான் உன்னுடைய கல்யாணத்த பத்தி பேசுவோம்” என்றார்.

“தேங்க்ஸ் டாடி. ஆனா அம்மா அமைதியா இருப்பாங்கன்னு தோணலை. என் கல்யாணத்தை பத்தி பேசி பேசியே என்னை ஒரு வழியாக்கப் போறாங்க. பேசாம இந்த ஒரு வருஷம் வேற எங்கேயாவது போயிடலாம்ன்னு யோசிக்கிறேன்” என்றாள்.

“நான் ஒன்னு சொல்றேன். கேட்பியா?” எனக் கேட்டார் பிரபாகரன்.

“சொல்லுங்க டாடி” என்றாள் மதுமிதா.

“என்னோட பேட்ஜ் மேட் மூர்த்தி திருவாரூரில டாக்டரா இருக்கான். என்னோட சொந்த ஊரு அழகியசூரபுரத்துக்கு சர்வீஸ் மைண்ட் உள்ள டாக்டர் தேவைன்னு எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் மெசேஜ் பண்ணியிருக்கான். நான் அவன்கிட்ட ஃபோன்ல பேசினேன். என்னோட ஊருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கறதுல சிரமம் இருக்கு. அதனால என்னோட தங்கச்சி பையன் சக்திதான் அங்க ஏதோ சின்னதா கிளினிக் மாதிரி கட்டி சேவை செய்ய டாக்டர் தேடிகிட்டு இருக்கான். எனக்கு போகனும்னு ஆசைதான். ஆனா போக முடியாது. நீ போறியா? ஒரு ஒரு வருஷத்துக்கு இருந்தா போதும். அதுக்கப்புறம் வேற யாரையாவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்” என்றார் பிரபாகரன்.

“நானா… நான் எப்படி டாடி?” என சில நொடிகள் யோசித்தவள், “ஓகே டாடி நான் போறேன்” என்றாள்.

“நல்லா யோசிச்சு சொல்லுமா. அது ஒரு வில்லேஜ். சென்னை மாதிரி வசதிகள் இருக்காது” என்றார்.

“அங்கேயும் மனுஷங்கதானே வாழ்றாங்க. அதோட உங்க பிறந்த ஊர் வேற. எனக்கு எப்படியாவது அம்மாகிட்ட இருந்து தப்பிச்சா போதும். அதோட ஒரு நல்ல விஷயமும் செய்றேன்னா சந்தோஷம்தானே டாடி” என்றாள் மது.

“சரி அப்படின்னா நீ அடுத்தவாரமே அங்க கிளம்பு. நான் மூர்த்திகிட்ட சொல்லிடுறேன். அப்புறம் நீ என் பொண்ணுன்னு அங்க யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

“உங்க தங்கச்சிக்கு கூடவா?”

“வேண்டாம்மா. அவள இதுல எதிலேயும் இழுக்க வேண்டாம். ஒருவேளை நீ என் பொண்ணுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சா, அவளுக்கும் முன்னாடியே தெரியும்ன்னா அவளுக்கு ஏதாவது பிரச்சனை ஆகலாம். எதுக்கு வம்பு? யாருக்கும் தெரிய வேண்டாம். அவங்களுக்கு தேவை ஒரு டாக்டர். யாரா இருந்தா என்ன?” என்றார் பிரபாகரன்.

“எல்லாம் சரி டாடி, அம்மாவை எப்படி சமாளிக்கிறது?”

“இதெல்லாம் சொன்னா உன் அம்மா ஒத்துக்க மாட்டா. வேற ஏதாவதுதான் சொல்லணும். என்ன சொல்றதுன்னு எனக்கும் ஒன்னும் தெரியலை” என்றார் பிரபாகரன்.

சில நிமிடங்கள் இருவரும் யோசிக்க, “டாடி நம்ம சுப்பு அங்கிள் பெங்களூர்ல இருக்காரே… அவரோட ஹாஸ்பிடல்ல அட்மினிஸ்ட்ரேஷன் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக நான் ஒரு வருஷம் போறேன்னு சொல்லிக்கலாமா?” எனக் கேட்டாள் மது.

பிரபாவுக்கும் இது சரியான யோசனையாக பட சம்மதித்தார்.

அன்றே சுஜாதாவிடம் மது கூற, “நமக்கே சொந்தமா ஹாஸ்பிடல் இருக்கும் போது நீ ஏன் அங்கே போகணும்?” எனக் கேட்டார்.

“சுப்பு அங்கிளோட ஹாஸ்பிடல் பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். நம்ம ஹாஸ்பிடல்ல விட 10 மடங்கு பெருசு. அங்க கத்துக்க நிறைய இருக்கும். அப்பதானே அம்மா நம்ம ஹாஸ்பிடல்ல நல்லா டெவலப் பண்ண முடியும்?” என்றாள் மது.

“அப்படியா மது… இந்த ஹாஸ்பிடல் மேல எப்போ இருந்து உனக்கு இந்த அக்கறை?” எனக் கேட்டார் சுஜாதா.

“என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க? இந்த ஹாஸ்பிடல் உன்னோட கனவு மட்டுமா? என்னோட தாத்தா ஸ்ரீ ராஜேந்திர சக்கரவர்த்தியோட கனவு. அவர் கனவை இன்னுமின்னும் வளர்க்க வேண்டியது அவர் பேத்தியோட கடமை இல்லையா? எனக்கு தடை சொல்லாதீங்கம்மா. இன்னும் ஒரு வருஷத்துல எல்லாத்தையும் கத்துகிட்டு நம்ம ஹாஸ்பிடலை எப்படி டெவலப் பண்றேன்னு மட்டும் பாருங்க” என்றாள் மது.

‘ஐயையோ மது இது கொஞ்சம் ஓவரா இருக்கு. கொஞ்சம் குறைச்சுக்கோ’ என்பதை சாடையிலேயே பிரபாகரன் காட்ட, மதுவும் விழிக்க ஆரம்பித்தாள்.

தன் கணவரை திரும்பி சுஜாதா பார்க்க, அவர் தலையைச் சொறிவது போல செய்ய, மகளையும் கணவரையும் மாறி மாறி பார்த்தவர், தலையை இடவலமாக ஆட்டி விட்டு, “நீ என்ன கத்துக்க போறியோ எனக்கு தெரியாது. ஆனா ஒரு வருஷம் கழிச்சி உனக்கும் கௌசிக்குக்கும் மேரேஜ். அதுக்கு ஒத்துகிட்டா நீ அங்க போ, இல்லைன்னா வேண்டாம்” என்றார் சுஜாதா.

“நான் போகலைன்னா மேரேஜை கேன்சல் பண்ணிடுவீங்களா?” என ஆசையாக மது கேட்க, “அங்க போனா ஒரு வருஷம் கழிச்சு மேரேஜ், போகலைன்னா இன்னும் 3 மாசத்துல மேரேஜ்” எனக்கூறிச் சென்றார் சுஜாதா.

“என்னப்பா இது?” என பிரபாகரனை மது பார்க்க, “உன் அம்மாதான் நீ போக ஒத்துக்கிட்டாளே. நீ ஒன்னும் கவலைப்படாதே. இன்னும் ஒரு வருஷம் நமக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள அந்த கௌசிக் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிப்பான். இல்லன்னா உனக்கு யார்கிட்டயாவது ஃபீலிங்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் உண்டாகலாம். எப்படியும் உன் கல்யாணம் உன்னோட விருப்பப்படிதான்” என்றார் பிரபாகரன்.

மருத்துவர் மூர்த்தி சேவை மனப்பான்மையுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரைநாள் அழகியசூரபுரம் வந்து இலவசமாக மருத்துவ சேவை செய்வார். அதைப் போலவே அன்றும் வந்திருந்த மூர்த்தி, “சக்தி ஒரு குட் நியூஸ்பா. உங்க ஊருக்கு டாக்டர் கிடைச்சுட்டாங்க” என்றார் மகிழ்ச்சியுடன்.

“நிஜமாவா டாக்டர் சொல்றீங்க?” எனக் கேட்டான் சக்திதரன்.

“ஆமாம்ப்பா ஒரு லேடி டாக்டர். சின்ன பொண்ணு. என் ஃப்ரண்டோட பொண்ணு. இங்க சர்வீஸ் பண்ண ரொம்ப ஆர்வமா இருக்காங்களாம். நெக்ஸ்ட் வீக் வந்திடுவாங்க. நீதான் அவங்களுக்கு எல்லா வசதியும் பண்ணி கொடுக்கணும்” என்றார்.

“கண்டிப்பா டாக்டர். உரமூட்டை போட்டு வெச்சிருக்க குடவுன க்ளினிக்கா மாத்தியாச்சு. டாக்டருக்கும் எங்க தோப்பு வீட்டிலேயே தங்க ஏற்பாடு பண்ணிடுறேன். எந்த வசதிக் குறைவும் இல்லாமல் பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான் சக்தி.

“சரிப்பா. உன்னோட நம்பர் அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டேன். எப்படியும் திருவாரூர் வரைதான் அவங்களால வர முடியும். நீ போய் ரிசீவ் பண்ணிக்கிறியா?” எனக் கேட்டார் மூர்த்தி.

“கண்டிப்பா டாக்டர். நானே போய் கூப்பிட்டுக்குறேன்” என உறுதியளித்தான் சக்திதரன்.

குளிரூட்டப்பட்ட அந்த படுக்கை வசதியுடன் கூடிய சொகுசுப் பேருந்து சென்னையிலிருந்து திருவாரூர் புறப்பட, ஆயிரம் முறை பத்திரங்கள் சொல்லி மதுமிதாவை வழியனுப்பினார் பிரபாகரன். மதுமிதாவுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முதல் முறையாக தனியாக பயணம் செய்கிறாள். பிரபாகரன் எல்லோரைப் பற்றியும் ஊரைப் பற்றியும் விவரமாக கூறியிருந்தார்.

மூர்த்தி கொடுத்த எண்ணைப் பார்த்த பிரபாகரன், “ இது சக்தியோட நம்பர்தான்மா. அவன்தான் உன்னை கூப்பிடவும் வருவான். கிராமத்துல இருந்தாலும் ரொம்ப ஷார்ப் மாதிரி தெரிஞ்சான். ஏதாவது சொல்லி மாட்டிக்காத” என ஏற்கனவே கூறியிருந்தார்.

“ஏன்பா அவர்தான் நல்லவர்ன்னு சொல்லியிருக்கீங்களே… அவர்கிட்ட மட்டும் நான் உங்க பொண்ணுன்னு சொல்லிடவா?” என மது கேட்க,

“வேண்டாம்மா அவன் நல்லவன்தான். ஆனா அவனோட தாத்தாவை மீறி எதுவும் செய்வானான்னு தெரியாது. அதனால இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்” என கூறிவிட்டார் பிரபாகரன்.

அவளுக்கும் சரியெனப் பட சக்தியின் எண்ணுக்கு அழைத்தவள் தான் யார் என்ற விவரத்தை கூறாமல் வரப்போகும் விவரத்தையும், வந்துசேரும் நேரத்தையும் கூறினாள்.

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பேருந்து திருவாரூரை வந்தடைய, பேருந்தின் உள்ளேயே வந்துவிட்டான் சக்திதரன். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் திருவாரூருக்கு முன்பிருந்த பல ஊர்களிலேயே இறங்கிவிட, இவளும் இன்னும் இரண்டு பேர் மட்டும்தான் இருந்தனர். எளிதாக இவளை அடையாளம் கண்டு கொண்டவன், “நான் சக்தி, நீங்கதானே டாக்டர் மதுமிதா” எனக் கேட்டான்.

“ஆமாம்” என இவள் கூற, அவளது இருக்கையில் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டவன், “வேற எதுவும் லக்கேஜ் இருக்கா? எனக் கேட்டான்.

“பஸ் பின்னாடி இருக்கு?” என்றாள்.

“சரி இறங்குங்க” என்றவன் முதலில் பேருந்தில் இருந்து இறங்க, அவன் பின்னே சென்றாள் மதுமிதா. அவளுடைய மற்ற பெட்டிகளையும் சேகரிக்க பேருந்து கிளம்பி சென்றது.

சக்தி மதுவைப் பார்த்தான். ஒரு ஜீன்சும், குர்தாவும் அணிந்திருந்தாள். தலை முடியை உயரத் தூக்கி கொண்டையாகப் போட்டிருந்தாள். நலுங்கியிருந்த கொண்டை, மதுவின் அசைவில் அவிழ, அலையென அவள் தோளில் புரண்டு விழுந்தது.

சக்தியிடம் அனுமதி கேட்காமல், அவனது மனம் மதுவை ரசிக்க, தலையை சிலுப்பி மனதை அடக்கியவன், “டீ சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டான்.

தை மாதக் குளிருக்கு சூடாக ஏதாவது சாப்பிட்டால் தேவலாம் என இருக்க, மதுவும் சரி என்றாள்.

திருவாரூர் பேருந்து நிலையம் அந்த அதிகாலைப் பொழுதில் அதிக கூட்டம் எதுவும் இன்றி அமைதியாகவே இருக்க, காரில் அவளது பெட்டிகளை வைத்தவன், அங்கேயே நிற்கச் சொல்லி, தேநீர் கடைக்கு சென்று இரண்டு தேநீர் கோப்பை வாங்கி வந்தான்.

அவளுக்கு ஒன்று கொடுத்து தானும் ஒன்று எடுத்துக் கொண்டான். ஒருவாய் தேநீரை பருகியவள், “ம்… நைஸ் டீ. தேங்க்ஸ் ஃபார் த டீ சக்தி” எனக் கூறினாள்.

“என்னங்க டாக்டர் மேடம் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு… எங்களுக்காக எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கீங்க? உங்களை நல்லபடியா பார்த்துக்கிறது எங்க கடமை இல்லையா?” எனக் கேட்க மது சிரிப்பை பதிலாக தந்தாள்.

வாடைக் காற்றில் உடல் நடுங்க, இரண்டு கைகளாலும் தேநீர் கோப்பையை பிடித்துக்கொண்டு, உள்ளங்கையில் இதமான சூட்டை அனுபவித்து, தேநீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிந்து ரசித்துப் பருக, இமை மூட மறந்து மதுவை ரசித்துப் பார்த்தான் சக்தி.

‘டேய் சக்தி… உன்னை நம்பி, உன் ஊரை நம்பி, நல்ல மனசோட இந்த பொண்ணு வந்திருக்கு… இப்படி பார்க்காத’ என அவள்பால் சென்ற மனதிற்கு கொட்டு வைத்து தன்னோடு இறுக்கிப் பிடிக்க சக்தி அரும்பாடுபட்டுக் கொண்டிருக்க, காலி கோப்பையை அவனிடம் நீட்டி “போலாமா?” எனக் கேட்டாள்.

சக்தி அவனது மனதை இழுத்துப் பிடித்து வைத்திருந்த கயிறு சட்டென்று தளர்ந்து மீண்டும் அவளிடம் தஞ்சமடைந்தது அவனது மனம்.

‘டேய் அந்த பொண்ணு டாக்டர். நீ விவசாயம் பண்றவன். அந்த பொண்ண பார்த்தாலே தெரியுது எவ்ளோ மாடர்ன்னு. நீ நாட்டுப்புறத்தான். இதெல்லாம் சரியா வராது. ஒழுங்கா இரு’ என தன் மனதிற்கு எச்சரிக்கை செய்து, காரின் பின் கதவை திறந்து விட, மது ஏறியதும் காரை எடுத்தான் சக்தி.

காரின் ஜன்னலை திறந்தவள் இயற்கையை ரசித்துக்கொண்டே வர, காரில் தன் இருக்கைக்கு முன்னால் இருந்த கண்ணாடியின் உபயத்தால் மதுவை கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தான் சக்தி.

சிறிது தூரத்தில் பச்சை பசேலென வயல் வெளியைப் பார்த்தவள், “வாவ்!” என சிறு குழந்தையாய் தன் கைகள் இரண்டையும் கன்னத்தில் வைத்து ஆச்சரியப்பட, சக்தியின் உள்ளமும் பாசியில் வைத்த காலாய் அவளிடம் வழுக்கியது.

காரின் வேகத்தை குறைத்தே ஓட்டினாலும் ஊர் வந்துதானே ஆகவேண்டும். அழகியசூரபுரம் பெயர்ப் பலகையை பார்த்துவிட்டு “இதுதான் உங்க ஊரா சக்தி?” எனக் கேட்டாள் மது.

“ஆமாங்க… இது தான் எங்க சொர்க்கம். இப்போ நீங்க தங்கப் போற வசந்த மாளிகைக்குதான் போகப் போறோம்” எனக் கூறி தோப்பு வீட்டிற்கு முன் நிறுத்தினான்.

முற்றம் வைத்த ஓட்டு வீடு. மது தங்குவதற்காக சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மது இறங்கவும் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து, “வணக்கம் டாக்டரம்மா” என்றார்.

பதில் வணக்கம் கூறியவள், சக்தியைப் பார்க்க, “இவங்க பேரு பொன்னுத்தாயி. உங்களுக்கு துணையா இங்கே இருப்பாங்க. காலைக்கும் மதியத்துக்கும் சமைச்சு வச்சிட்டு போயிடுவாங்க. அப்புறம் சாயங்காலமா திரும்பி வந்து நைட்டு உங்க கூடயே தங்கிக்குவாங்க” என்றான்.

“இவங்களுக்கு குடும்பம் இல்லையா?” என மது கேட்க,

“என் வீட்டுக்காரர் போன வருஷம் தவறிட்டாரு. என் மவளுக்கு கல்யாணம் கட்டி அது புருஷன் கூட இருக்குதுங்க. நான் ஒத்தையிலதான் இருக்கேன்” என பொன்னுத்தாயே பதிலளித்தார்.

வீட்டிற்குள் மதுவின் பெட்டிகளை வைத்தவன் “நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, கிளம்பனதுக்கு அப்புறம் கால் பண்ணுங்க. ஹாஸ்பிடல் போகலாம்” எனக் கூறினான்.

“இங்க ஹாஸ்பிடல் இருக்கா?” எனக் கேட்டாள்.

“நீங்க நோயாளிகளை பார்க்க ஒரு இடம் வேணுமில்ல. அதுக்காக நாங்க ஒரு இடத்தை தயார் பண்ணி வச்சிருக்கோம். அதுதான் இனிமே இந்த ஊர் ஹாஸ்பிடல்” என்றான் சக்தி.

“சரி நான் கிளம்பிட்டு கால் பண்றேன்” என மது கூற, சக்தி சென்றுவிட்டான்.

‘பெரிய ஷார்ப் அது இதுன்னு அப்பா சொன்னார். பார்த்ததிலிருந்து என்னை சைட் அடிச்சுக்கிட்டே இருக்கான். ஃபிராடுக்கார அத்தைப் பையன்’ என நினைத்து சிரித்தாள் மது. பாவம் அவளுக்கு தன் குட்டு இன்று உடையப் போவது தெரியவில்லை.

வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் மதுவின் உருவமே சக்திக்கு தெரிய, ‘தப்புடா சக்தி… ஏழு கழுதை வயசாகுது. இன்னும் என்ன விடலைப் பையன் மாதிரி சைட் வேண்டிக் கிடக்கு. வேணாண்டா சக்தி…’ என அவனுக்கு அவனே கூறிக்கொள்ள, எதற்கும் மசிவேனா என அடம் பிடித்துக் கொண்டிருந்தது அவனது ஆசை மனம்.