“டேய் புயல் சின்னம் உருவாகியிருக்கு. நைட் புயல் கண்டிப்பா வரும். இந்த நிலையில இந்தப் புள்ளையை வச்சிக்கிட்டு இந்த ஓட்டு வீட்டுல எப்படிடா இருப்ப? நீ வீட்டுக்கு வா. தாத்தா என்ன சொல்றாருன்னு நான் பார்க்குறேன்” என கூறினான் குரு.
மது கருவுற்றிருந்தாள். இரட்டை குழந்தைகள் வேறு. ஐந்தாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. ஐந்தாம் மாதமாக இருந்தாலும் இரட்டை குழந்தைகள் என்பதாலோ என்னவோ வயிறு பெரிதாகவே இருந்தது.
“ஆமாம்டா. இங்க இருக்க வேண்டாம்டா” என அனுசுயாவும் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“எய்யா ராசா… அப்பத்தா மாப்பு கேட்டுக்குறேண்டா, பேத்தியை கூட்டிக்கிட்டு அங்கன வந்துடு. புசல் காத்து அடிக்கும்போது இந்த ஓட்டு கட்டிடத்தில இருக்க வேணாம்யா” என கெஞ்சிக் கொண்டிருந்தார் அன்னபூரணி.
வெளியில் நின்று கொண்டிருந்த வீரவேல், சட்டென்று உள்ளே வந்து, “என்ன சொல்றான் இவன்? வர மாட்டேன்னு சொன்னா இந்தப் பய இங்கேயே இருக்கட்டும். அந்தப் புள்ளையை அழைச்சிகிட்டு நீ வா அனுசுயா” என்றார்.
மது சக்தியின் முகத்தை பார்க்க, சக்தி முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி நின்றுகொண்டிருந்தான்.
“இப்போ கூட தாத்தா வரல இல்ல. என் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு அங்க வரும்போது எந்த நெருடலும் இல்லாம அவ வரணும். நாங்க அங்க வரலை” என்றான் சக்தி.
“மாப்ள… நீங்க அந்த வீட்டுக்கு போக வேணாம்யா. வந்து எங்களோட தங்கிக்க. மாப்பிள்ளை வேற ஃபோன் மேல ஃபோன் போடுறார். உங்கள வீட்ல தங்க வச்சுப் பார்த்துக்கணும்னு சுகன்யா வேற சொல்லியிருக்கு” என்றார் தங்கதுரை.
ஆமாம் கௌசிக், சுகன்யா இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்திருந்தது. நல்ல விதமாக முன் நின்று நடத்தியது சக்தி, மது இருவரும்தான்.
“என்ன நீங்க… மாப்பிள்ளையும் பொண்ணும் சொன்னதாலதான் நம்ம கூப்பிட வந்திருக்கோமா?” என தங்கதுரையைப் பார்த்து கேட்ட மணிமேகலை, சக்தியை பார்த்து, “சக்தி சட்டுபுட்டுன்னு தேவையானதை எடுத்து வச்சுகிட்டு கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றார்.
“வேண்டாம் அத்தை. நம்ம ஊர்ல குடிசை வீட்டுல, ஓட்டு வீட்டில் இருக்குறவங்கள எல்லாம் சமுதாயக் கூடத்திலயும் பள்ளிக்கூடத்திலயும் கோயில்லயுமாய் தங்க வைக்க ஏற்பாடு பண்ணியிருக்கு. நாங்க அங்க எங்கேயாவது தங்கிக்குறோம்” என்றான் சக்தி.
“நல்ல கதை. சுகன்யாவை கௌசிக் மாப்பிள்ளை பொண்ணு கேட்டப்போ, தூரமா இருக்குன்னு நாங்க யோசிச்சோம். அப்ப நீயும் உன் பொண்டாட்டியும் வந்துதானே எங்ககிட்ட பேசினீங்க. எங்கள சம்மதிக்க வச்சீங்க. உங்க பேச்சை கேட்டு எங்க பொண்ணுக்கு நாங்க கல்யாணமே பண்ணி வைப்போம். ஒரு நாள் ராத்திரி எங்க வீட்டுல வந்து நீங்க தங்க மாட்டீங்களா?” என சண்டை போடுவது போல கேட்டார் மணிமேகலை.
சக்தி மதுவின் முகத்தை பார்க்க, அவள் செல்லலாம் என கண்களால் சம்மதம் தெரிவித்தாள்.
“பார்த்தியாம்மா உன் மகனை. பொண்டாட்டிகிட்ட கண்ணாலேயே பர்மிஷன் கேட்கிறானாமாம். அந்த புள்ளைகிட்ட ஒரேடியா மயங்கிக் கிடக்கான் இந்த பய. உன் கடைசி காலத்துல நான்தான் உன்னை பாத்துக்கணும். அவனை எல்லாம் நம்ப முடியாது நீ” என அனுசுயாவிடம் மெதுவாக கூறிக் கொண்டிருந்தான் குரு.
“நீ ரொம்ப ஒழுங்கு மாதிரி அவனை பேசாதடா. ரெண்டு பேருமே அப்படியே அவனுங்க அப்பனை மாதிரியே” என அலுத்துக் கொண்டார் அனுசுயா.
“குடும்ப ரகசியத்தை இப்படி பப்ளிக்கா சொல்லாதம்மா. யார் காதிலாவது விழுந்தா அப்பாவோட வீராப்பு என்னாகிறது?” என குரு கேட்க, அனுசுயா சிரித்துக்கொண்டார்.
ஒரு வழியாக மதுவை அழைத்துக்கொண்டு தங்கதுரை வீட்டிற்கு செல்ல ஒத்துக் கொண்டான் சக்தி.
“சரி கிளம்புங்க” என்றார் மணிமேகலை.
“நாங்க சாயந்திரமா வர்றோம் அத்தை. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்றான்.
‘எப்படியோ சம்மதித்தானே’ என நிம்மதியடைந்து மற்றவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
“சாப்பிடலாம் வா மது. அதுக்கப்புறம்தான் தேவையானது எல்லாம் எடுத்து வைக்கணும்” என்றான்.
மதுவுக்காக காரம் குறைவாகவே சமைக்கப்பட்டிருந்த சாப்பாட்டை இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்து சக்தி முக்கியமானதை பத்திரப்படுத்தி தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
அந்த மரப்பாச்சி பொம்மையை எடுத்து வந்த மது, “இதையும் பத்திரமா எடுத்து வைங்க” என்றாள்.
அந்த பொம்மையை கையில் வாங்கியவன், “கடைசிவரை இந்த டி என் யாருன்னே கண்டுபிடிக்க முடியலை” என இயலாமையோடு சொன்னான்.
“இல்லை என் மனசு சொல்லுது. சீக்கிரமே நாம கண்டுபிடிக்க போறோம் பாருங்க” என்றாள் மது.
சக்தி பதில் எதுவும் கூறாமல் சிரித்துக்கொண்டான். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, பழச்சாறு பிழிந்து எடுத்து வந்து மதுவுக்கு கொடுத்தான்.
“வேண்டாம் சக்தி, மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.
“சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் ஆயிட்டு. இதைக் குடி. ரெண்டு புள்ளைங்க வயித்துல இருக்குடி. அப்பப்ப ஏதாவது கொடுத்துக்கிட்டே இருக்கணும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க” என்றான்.
“நான் பிரெக்னெண்ட் ஆனதிலிருந்து என்னை ரொம்ப படுத்துறீங்க” என சொல்லிக்கொண்டே வாங்கிக் கொண்டாள். பாதி குடித்தவள் வைத்துவிட்டாள்.
“என்னடி….? ஒரு பிள்ளைக்கு மட்டும்தான் குடிச்சிருக்க? இன்னொரு பிள்ளைக்கு…? மீதியும் குடி” என்றான் சக்தி.
“அதானே… இருடி” என சொன்ன சக்தி மீண்டும் சமயலறை செல்ல பார்க்க, “ஐயோ… கொடுமை பண்ணாதீங்க” என அலறினாள் மது.
“சரி விடு, இந்தப் பாதியை குடிச்சிடு” என்றான்.
“குடிக்கிறேன், கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றாள்.
“சரி நீ ரெஸ்ட் எடு, நான் ஒரு எட்டு போய் எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திடறேன். மறக்காம ஜூஸை குடிச்சிடு” என வெளியில் கிளம்பி சென்றான்.
இரவு நேரம் பத்து. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான புயல் காற்று வீசிக் கொண்டிருந்தது. பாதுகாப்பு இல்லாத இடங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கால்நடைகளும் பாதுகாப்பாக பண்ணைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தன.
சக்தியும் மதுவும் தங்கதுரை வீட்டில் இருந்த ஒரு அறையில் தூங்காமல் அமர்ந்திருந்தனர். சக்தியின் கலக்கமான முகத்தை பார்த்த மது,
“ஏன் சக்தி. ரொம்ப லாஸ் ஆகிடும்னு இப்படி இருக்கீங்களா?” எனக் கேட்டாள்.
“அடிக்கிற காத்துக்கு எப்படியும் பயிரெல்லாம் நாசமாகிடும். பயிர் மட்டுமா… எத்தனை பேரோட உழைப்பு வீணாகப்போகுது? நம்மள விடு. எப்படியோ நாம சமாளிச்சுக்கலாம். இதனால வர்ற இழப்பை சமாளிக்க முடியாதவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க இதிலிருந்து மீண்டு வரணும். அதுதான் கவலையா இருக்கு” என்றான்.
“நம்மளால முடிஞ்ச ஹெல்ப் செய்வோம் சக்தி” என மது கூற, “கண்டிப்பா மது” என்றான் சக்தி.
“சரி வை. நான் என்னன்னு பார்க்கிறேன்” என்ற மது சக்தியிடம் விசயத்தை கூறி “எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்றாள்.
“பயப்படாதே. நீ அவங்க நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இரு” என்றான்.
மது பதற்றத்துடன் இருக்க கைப்பேசியை வாங்கிக் கொண்டவன், “மது நீ ரொம்ப டென்ஷன் ஆகுற. இந்த நிலையில இப்படி ஆகக்கூடாது. ரிலாக்ஸா இருடி. நான் என்னன்னு பார்க்குறேன்” என்றவன், அவனே பிரபாகரன், சுஜாதா இருவரது எண்களுக்கும் மாறி மாறி அழைக்க ஆரம்பித்தான்.
இடையிடையே சிக்னல் வந்தும் போயும் கொண்டிருக்க, சக்தி விடாமல் முயன்று கொண்டிருந்தான். ஒரு மணி நேர முயற்சிக்குப் பின்னர், பிரபாகரனுக்கு அழைப்பு சென்றது.
“மது” என பிரபாகரன் கூற, “நான் சக்தி பேசுறேன் மாமா. எங்க இருக்கீங்க?” எனக் கேட்டான் சக்தி.
“ஊருக்கு வெளியில் இருக்கோம் சக்தி. மரம் ஒன்னு சாய்ஞ்சு கிடக்கு. கார்ல வரமுடியாதுன்னு நினைக்கிறேன்” என்றார்.
“நீங்க அங்கேயே இருங்க. நான் வர்றேன்” என்றவன், மதுவிடம் விவரம் சொல்லி குருவுக்கு அழைத்தான். குருவை கார் எடுத்து வரச் சொன்னவன் மதுவை அழைத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.
தங்கதுரையிடமும் மணிமேகலையிடமும் விவரத்தைக் கூறி, “மதுவைப் பார்த்துக்குங்க, நான் போய் அவங்களை அழைச்சிக்கிட்டு வந்துடுறேன்” என்றான்.
“நானும் வரேன் மாப்பிள்ளை” என தங்கதுரையும் உடன் கிளம்பினார். சில நிமிடங்களில் கார் எடுத்துக்கொண்டு குரு வந்துவிட, சக்தியின் கையைப் பிடித்துக் கொண்ட மது “பத்திரம்” என்றாள்.
“பார்த்துக்குங்க” என மணிமேகலையை பார்த்து சக்தி கூற, “நான் பார்த்துக்க மாட்டேனா? நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்புங்க” என்றார் மணிமேகலை.
காரின் முன் விளக்கு வெளிச்சத்தில் மெதுவாக காரை செலுத்திக் கொண்டிருந்தான் குரு.
ஊருக்கு வெளியில் மரம் ஒன்று விழுந்து கிடக்க, அதற்கு மேல் முன்னேற முடியாமல், காரிலேயே அமர்ந்திருந்தனர் பிரபாகரனும் சுஜாதாவும். மழையுடன் கூடிய புயல் வீசிக் கொண்டிருக்க, சுஜாதா பயத்தில் பிரபாகரனின் கரங்களைப் பிடித்துக் கொண்டார்.
“பயப்படாத சுஜாதா, சக்தி வர்றேன்னு சொல்லியிருக்கான்” என்றார்.
“அவரை ஏன் வரச் சொன்னீங்க? எதுவானாலும் நம்மளோட போயிருக்கும்?” என்றார் சுஜாதா.
சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியுடன் கூடிய மின்சார விளக்கை கையில் எடுத்துக்கொண்டு, சக்தியும் குருவும் பிரபாகரன் கார் நிற்கும் இடம் வந்து சேர்ந்தனர். பிரபாகரன் அவரது பக்க கார்க் கதவை திறந்து கொண்டு வெளியேற, சுஜாதா இன்னொரு பக்கம் கதவைத் திறக்க முற்பட்டார். அவரால் திறக்க முடியவில்லை.
“சுஜாதா சீக்கிரம் வெளியே வா” என்றார் பிரபாகரன்.
“கதவைத் திறக்க முடியலை” என்றார் சுஜாதா.
“இந்த பக்கமா வா” என்றார் பிரபாகரன்.
சுஜாதா நகர்ந்து வர, அவர் வெளியே வர ஏதுவாக பிரபாகரன் கொஞ்சம் முன்னே சென்று நின்று கொண்டார். திடீரென மரம் ஒன்று சாய்ந்து காரின் மேலே விழுந்தது. பிரபாகரனுக்கு சர்வ நாடியும் ஒடுங்கிவிட்டது. சக்தியும் குருவும் கூட ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
சுதாரித்துக்கொண்ட சக்தி ஓடிப்போய்ப் பார்க்க, நல்லவேளையாக சுஜாதா இறங்குவதற்கு முன்னரே மரம் காரின் பின்பகுதியில் விழுந்திருந்தது. காரின் பின்பகுதி நசுங்கியிருந்தாலும் சுஜாதாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் அவரால் கதவை திறக்க முடியவில்லை.
விளக்கை குருவின் கையில் கொடுத்த சக்தி, அங்கிருந்து ஒரு மரக்கட்டையை எடுத்து வேகமாக காரின் முன் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தான். சுஜாதாவை பத்திரமாக வெளியே மீட்டான்.
சுஜாதா வெளியே வரவும் அவரை அணைத்துக் கொண்டார் பிரபாகரன். மழை பொழிந்து கொண்டிருந்ததாலும், வெளிச்சம் சரியாக இல்லாததாலும், பிரபாகரனின் கண்ணீர் சுஜாதாவுக்கு தெரியவில்லை.
“நான் ரொம்ப பயந்துட்டேன்” என்ற பிரபாகரனின் குரலும், அவரது வேகமான இதயத்துடிப்பும், அவரது அணைப்பும் சுஜாதாவுக்கு பிரபாகரனின் காதலை உணர்த்தியது.
“எனக்கு ஒன்னும் ஆகலைங்க” என்ற சுஜாதாவின் குரல் நெகிழ்ந்து போயிருந்தது.
“ஏதாவது ஆகியிருந்தா நானும் இருந்திருக்க மாட்டேன்” என கர கரப்பாக சொன்னார் பிரபாகரன்.
சுஜாதா எப்படி உணர்ந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. அவரும் அழுதார்.
இருவரையும் பார்த்த சக்தியும் குருவும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். குரலை செருமிக் கொண்ட சக்தி, “மாமா நேரமாகுது. நம்ம கிளம்பனும்” என்றான்.
வெட்கப்பட்டுக் கொண்டே பிரபாகரனும் சுஜாதாவும் விலகினர்.
வாசலில் நின்றுகொண்டு பதற்றத்துடன் வழியையே பார்த்திருந்தாள் மது. மின்சாரம் இல்லாமல் இரண்டு லாந்தர் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.
கார் வந்து நிற்க எல்லோரும் பத்திரமாக இறங்கினர். முதலில் சுஜாதா உள்ளே வர, அவரை கட்டிணைத்துக் கொண்டாள் மது.
“நான் ஈரமா இருக்கேன் மது” என சுஜாதா கூற, “ஈரமா இருந்தா இருந்துக்கோங்க. உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?” என்றவள் அணைப்பை மட்டும் விடவில்லை.
“டேய் சக்தி இதென்ன… உன் பொண்டாட்டி உன் மாமனாருக்கு போட்டியா?” என சக்திக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாக கேட்டான் குரு.
“இல்லடா என் மாமியார்தான் எனக்கு போட்டி” என மதுவையும் சுஜாதாவையும் பார்த்துக்கொண்டே பொறாமையோடு சக்தி கூற, தன் தம்பியின் பதிலில் அசந்து போய் விழித்தான் குரு.
“நீ எப்படி இருக்க?” என சுஜாதா மதுவிடம் கேட்க, “நல்லா இருக்கேன்” என்றவள் “ரொம்ப டென்ஷன் பண்ணிட்டீங்க ரெண்டு பேரும்” என்றாள்.
“உன் அம்மாதான் உடனே ஊருக்கு அழைச்சுட்டு போங்கன்னு ஒரே அடம்” என்றார் பிரபாகரன்.
“உடனே நீங்களும் வயசான காலத்துல கார் ஓட்டிக்கிட்டு கிளம்பிட்டீங்களா?” எனக் கேட்டாள் மது.
“ஏய் என்னடி…? அப்படி என்ன அவருக்கு வயசாகிட்டு?” என சுஜாதா மதுவை கேட்க, மது சுஜாதாவின் முகத்தைப் பார்த்தாள். சுஜாதாவின் அந்த வெட்கம் மது பார்த்தே அறியாதது. தன் தந்தையின் முகத்தை பார்க்க அவரது முகமும் மலர்ந்திருந்தது.
சக்தியிடம் வந்தவள் “என்ன நடந்துச்சுங்க?” எனக் கேட்டாள்.
“அதை ஏன் கேக்குற? மழை புயல் எல்லாம் வந்துச்சா? கூடவே உன் அப்பாம்மாவுக்கு லவ்வும் வந்துடுச்சு” என்றவன், அங்கே நடந்ததை சுருக்கமாக கூறி, “என்ன ரொமான்ஸ்ன்னு கேட்குற?” என கிண்டல் செய்தான்.