வானவில் கோலங்கள்-19

அத்தியாயம் 19

அன்று காலையில் பதினோரு மணியளவில் தில்லைநாயகம் தங்கதுரையின் வீட்டை வந்தடைந்தார். அவரை உபசரித்து உட்காரவைத்து விட்டு குருவுக்கு கைப்பேசியின் மூலம் தகவல் தெரிவித்தார் தங்கதுரை. அதற்கெனவே காத்திருந்த சக்தியும் குருவும் அங்கே சென்றனர்.

“என்ன மாப்பிள்ளைகளா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டார் தில்லைநாயகம்.

“ம்… நல்லா இருக்கோம்” என குரு பதிலளித்தான்.

“என்ன சக்தி மாப்ள… செலவே இல்லாம, மாமனுக்கு கறி சோறும் போடாம காதும் காதும் வச்ச படி கல்யாணத்தை முடிச்சுபுட்டியே” எனக் கேட்டார்.

“அதுக்கென்ன மாமா? இன்னைக்கு அத்தையை ஆட்டை வெட்ட சொல்லியிருக்கேன். கறிசோறு சாப்பிட்டிட்டே போங்க” என கூறினான் சக்தி.

“அண்ணே எதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்களே… என்ன விஷயம்?” என்றார் தில்லை.

“மாப்பிள்ளை சொல்வாரு” என்றார் தங்கதுரை.

தில்லைநாயகம், சக்தி மற்றும் குருவின் முகங்களை பார்க்க, அந்த பழைய மரப்பாச்சி பொம்மையை எடுத்து அவர் முன் நீட்டி “இது என்னன்னு தெரியுதா?” எனக் கேட்டான் சக்தி.

சிரித்த தில்லை “என்ன மாப்ள முக்கியமான விஷயம்னு சொல்லிட்டு மரப்பாச்சி பொம்மையை காட்டுற?” எனக் கேட்டார். சக்திக்கு கோபம் வந்துவிட்டது.

“இந்த மரப்பாச்சி பொம்மை இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் தேவி அத்தைக்கு நீங்க கொடுத்தது” என்றான்.

முகம் மாறிப் போன தில்லைநாயகம் “என்ன மாப்ள உளர்ற?” என்றார்.

“உளறல, இந்த பொம்மைக்கு அடியில டிஎன் அப்படின்னு எழுதியிருக்கு. அந்த டிஎன் தில்லைநாயகம் நீங்கதான். உங்க கல்யாணம் ஆன பின்னாடிதான் தேவி அத்தை செத்து போயிருக்காங்க” என்றான் சக்தி.

பயந்துபோன தில்லைநாயகம் “என்ன மாப்ள என்னென்னமோ சொல்ற?” என்றார்.

“நீங்க இதுக்கு மேலயும் உண்மையை மறைக்க முடியாது” என்றான் குரு.

தில்லைநாயகம் தங்கதுரையின் முகத்தைப் பார்க்க, “எதா இருந்தாலும் உண்மையை சொல்லுடா. தேவியை கட்டிக்கிறேன்னு சொல்லி உன் மாமனார் வீட்டு வசதியை பார்த்து தேவியை ஏமாத்திட்டியா?” எனக் கேட்டார் தங்கதுரை.

“ஐயோ அண்ணா நீயும் இப்படி பேசுறியே… சத்தியமா தேவிகிட்ட அதை மாதிரி எல்லாம் நான் பழகலை” என்றார் தில்லைநாயகம்.

“அப்புறம் எப்படிடா தேவி உன் கல்யாணம் முடிஞ்சு 10 நாள்ல செத்துப்போச்சு?” எனக் கேட்டார் தங்கதுரை.

“அண்ணா, அப்படி நான் பழகி ஏமாத்தியிருந்தேனா 10 நாள் எதுக்காக தேவி காத்துக்கிட்டு இருக்கனும்? அப்பவே செத்துப் போயிருக்குமே?” என்றார் தில்லைநாயகம்.

“சும்மா எதையாவது சொல்லாதீங்க. பத்து நாளும் நினைச்சு நினைச்சு வருத்தத்தில் இருந்திருப்பாங்க. ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம கிணத்துல விழுந்திருப்பாங்க” என்றான் சக்தி.

“என்னை யாருமே நம்ப மாட்டீங்களா?” என்றவர் எழுந்து நேரே பூஜை அறை சென்றார்.

அங்கிருந்த சூடத்தை தட்டில் வைத்து ஏற்றியவர் “எனக்கும் ரெண்டு பொம்பளை புள்ளைங்க இருக்கு. நான் பொய் சொல்லலை. நான் தேவிகிட்ட எதுவும் பழகல. என்னால தேவி சாகலை. இது சத்தியம்” எனக்கூறி எரிந்துகொண்டிருந்த சூடத்தை அடித்து சத்தியம் செய்தார்.

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்றனர்.

“மாப்ள அவன் சூடம் ஏத்தி சத்தியம் பண்ணிட்டான். அவன் மேல தப்பு இருக்காது. இந்த டிஎன் வேற யாரோ” என்றார் தங்கதுரை.

“ஆமாம் சக்தி, உன் மாமனாரோட தேவிக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருந்தார் அப்பா. திடீர்னு உன் மாமனார் வேற பொண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்தார். ஆனா அப்போ தேவி பெருசா அதிர்ச்சியான மாதிரி எனக்கு தெரியலை. அதே மாதிரி தில்லை தம்பிக்கு கல்யாணம் ஆச்சு. அந்த கல்யாணம் கூட ரெண்டு மாசம் முன்னாடியே பேசி முடிவாகி இருந்தது. அப்பவும் தேவி வருத்தப்பட்ட மாதிரி தெரியலை” என்றார் மணிமேகலை.

“அப்போ இந்த டிஎன் யாரு?” எனக் கேட்டான் சக்தி.

“அதை நீங்கதான் மாப்ள கண்டுபிடிக்கணும்” என தில்லை கூற சக்தி சோர்ந்து போய் குருவைப் பார்த்தான்.

சக்தியின் தோளை தட்டிக் கொடுத்த குரு, “ தில்லை மாமாவுக்கும் அத்தை சாவுக்கும் சம்பந்தம் இல்லடா. நாம வேற ஏதாவது யோசிச்சு இது யாருன்னு கண்டு பிடிப்போம்” என்றான்.

“நீங்க கறிசோறு சாப்பிட்டுட்டு போங்க மாமா. நாங்க கிளம்புறோம்” என குரு கூற, “மாப்பிள்ளைகளா நீங்க செஞ்சதுல என் வயிறு இப்பவே கட முடங்குது. நாலு நாளைக்கு பழைய கஞ்சியே குடிச்சிக்கிறேன். நான் ஊரை பார்க்க கிளம்புறேன்” எனக்கூறி இவர்களுக்கு முன் தில்லைநாயகம் கிளம்பிவிட்டார்.

மதுவை பார்த்து நடந்ததை சக்தி கூற, சக்தியின் சோர்ந்த முகத்தை பார்த்த மது “விடுங்க சக்தி, நம்ம பொறுமையா தேடலாம். முதல்ல கேம்ப்ப நல்லபடியா முடிப்போம். அம்மாகிட்ட சுகன்யா கையில் பச்சை குத்தியிருக்கிறத நீக்கிறது பத்தி அப்பா மூலம் பேசியிருக்கேன். சென்னையிலேயே ட்ரீட்மெண்ட் பண்ணலாம்னு சொல்லியிருக்காங்க. அதை பார்ப்போம்” என்றாள்.

“கடைசில என்னால கண்டுபிடிக்க முடியலை டி” என்றான் சக்தி.

“என்னங்க இது சினிமாவா? நாம தேடுனதும் உடனே எல்லாம் தெரிய? முயற்சி செய்துகிட்டே இருப்போம். தெரியறப்ப தெரியட்டும்” என்றாள்.

“எம்மேல கோவம் இல்லையா?”

“கோபப்பட என்ன இருக்கு? உங்க மேல என்ன தப்பு? போங்க போய் வேலையை பாருங்க” என அனுப்பி வைத்தாள். அந்த டிஎன் யார் என்பது கண்டுபிடிக்கப் படாமலே இருந்தது.

முதல் நாள் இரவே திருவாரூர் வந்தடைந்த மருத்துவ குழுவினர் திருவாரூரிலே தங்கிக் கொண்டனர். அவர்கள்  சென்னையிலிருந்து வர பயன்படுத்திய பேருந்திலேயே  புறப்பட்டு காலையிலேயே அழகிசூரபுரம் வந்தடைந்தனர்.

சமுதாய நலக் கூடத்தில் வெளியேயும் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அந்த ஊர் தொடக்கப்பள்ளியின் கட்டிடத்திலும் முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தன்னார்வலர்களாக அந்த ஊர் மற்றும் பக்கத்து கிராமங்களில் இருந்து பல இளைஞர்கள் மருத்துவ முகாமிற்கு வந்தவர்களுக்கு உதவி கொண்டிருந்தனர். சுகன்யாவும் அவர்களில் ஒருத்தி.

மிகவும் நேர்த்தியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான் சக்தி. சுஜாதாவே வியந்து போனார். மருத்துவ குழுவினரையும் நன்றாக கவனித்துக் கொண்டான். முறையாக பக்கத்து கிராமங்களில் தெரிவித்திருந்ததால் மக்களும் அதிகமாக வந்தனர்.

மருத்துவர் மூர்த்தியும் அன்று இவர்களுடன் இணைந்து கொண்டார். சக்தியைப் பற்றி பெருமையாக சுஜாதாவிடம் கூறினார்.

“எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா சக்திக்குதான் கொடுத்திருப்பேன். கடவுள் 2-ம் பையனா கொடுத்துட்டார். அதனால என்ன…? சக்தியும் எனக்கு ஒரு பையன் மாதிரிதான்” என்றார் மூர்த்தி.

கேட்டுக்கொண்டிருந்த சுஜாதா சக்தி எங்கே என்று தேடினார். ஒருபக்கம் மது நோயாளிகளை பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு சூடாக தேநீர் கொண்டு வந்து கொடுத்தான். மற்றவர்களுக்கும் பழனிவேல் மூலமாக தேநீர் கொடுத்தனுப்பினான்.

அங்கு வெட்கையாக இருக்க மதுவுக்கு வியர்த்து வழிந்தது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலே மின்விசிறி இல்லை. எங்கிருந்தோ நிலை மேடை மின்விசிறி எடுத்து வந்து அவளுக்கு காற்று வருமாறு வைத்துவிட்டான் சக்தி.

தனக்கு பார்த்து பார்த்து செய்யும் கணவனை ஒரு நொடி பார்த்து புன்னகை சிந்தினாள் மது. பதிலுக்கு அவனும் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றான். பார்த்துக்கொண்டிருந்த சுஜாதாவுக்கும் புன்னகை அரும்பியது.

“என்ன உங்க மாப்பிள்ளை பத்தி உங்க ஃப்ரெண்ட் மூர்த்தி ஆஹா ஓஹோன்னு புகழ்றார்” என பிரபாகரனிடம் கேட்டார் சுஜாதா.

“அது என்ன… என் மாப்பிள்ளை? நம்ம மாப்பிள்ளைன்னு சொல்றதுக்கு என்ன?” என அவர் கேட்க, “போங்க போங்க பேஷன்ட்ஸ் வர்றாங்க போய்ப் பாருங்க” எனக் கூறினார்.

“அதானே அவ்வளவு சீக்கிரம் நீ இறங்கி வந்துட்டீன்னா… நீ சுஜாதாவா என்ன?” என கேட்டுக்கொண்டே நோயாளிகள் பார்ப்பதை தொடர்ந்தார் பிரபாகரன்.

நடுத்தர வயது பெண்மணி ஒருவரை பரிசோதித்து இதயம் சம்பந்தமாக பிரச்சனை இருப்பதாக சந்தேகப்பட்டு கௌசிக்கை பார்க்குமாறு அனுப்பி வைத்தாள். கௌசிக் பள்ளிக்கூடத்தில் இருந்து நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி வழி தெரியாமல் நிற்க அவளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றாள் சுகன்யா.

கௌசிக்கிடம் அழைத்துப் போய் விட, “சிஸ்டர் சாப்பிடப் போயிருக்காங்க. இவங்க லேடி பேஷன்ட். கொஞ்சம் கூட நில்லுங்க” எனக் கேட்டுக் கொண்டான் கௌசிக்.

சுகன்யாவும் அங்கே நின்றாள். அந்தப் பெண்மணியை பரிசோதித்துவிட்டு பரிசோதனைகள் எழுதியவன் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. சிஸ்டர் வந்துடுவாங்க, ஈசிஜி எடுத்துட்டு வந்து காட்டுங்க” என கூறினான். சுகன்யாவும் அதுவரை அங்கேயே இருந்தாள்.

செவிலியர் வந்துவிட சுகன்யா அங்கிருந்து போக பார்த்தாள். “கொஞ்சம் என்கூடவே இரும்மா” என அந்தப் பெண்மணி கேட்டுக்கொள்ள அங்கேயே இருந்தாள்.

பரிசோதனை முடிந்து அந்த பெண்மணி கௌசிக்கிடம் காட்டிவிட்டு சென்றுவிட, “டாக்டர் நீங்க போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க” என செவிலியர் கூற “எங்க போகணும்?” எனக்கேட்டான் கௌசிக்.

“நான் அழைச்சிட்டு போறேன், வாங்க” எனக்கூறி சுகன்யாவே அழைத்துச் சென்றாள்.

பள்ளிக்கு வெளியில் வந்தவன் “உங்ககிட்ட ஒரு 5 மினிட்ஸ் பேசலாமா?” எனக் கேட்டான்.

“என்ன சொல்லுங்க” என்றாள் சுகன்யா.

“நான் இந்த கேம்ப்க்கு ஏன் வந்தேன் தெரியுமா? உங்களைப் பார்க்கத்தான்” என்றான்.

“ஏன் என்னை பார்க்கணும்?”

“லாஸ்ட் டைம் நான் வந்துட்டு போனதிலிருந்து உங்க நினைவாவே இருந்தது. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. வில் யூ… நீங்க என்னை…” என கௌசிக் தடுமாற வெறுமையாக சிரித்த சுகன்யா தன் கையை அவன் முன் நீட்டினாள்.

பச்சை குத்தியிருந்த அவளது கையைப் பார்த்துவிட்டு “இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை சுகன்யா. உங்களுக்கு சக்தி எதனால பிடிச்சது?” எனக் கேட்டான்.

சுகன்யா ஒன்றும் கூறாமல் நிற்க, “உங்க சின்ன வயசிலே இருந்து உங்க கிட்ட சொல்லி சொல்லி உங்களுக்கு பிடிச்சுப் போச்சு. உங்களுக்கு உங்க பேரண்ட்ஸ் வேற சாய்சே கொடுக்கலை. சக்தி உங்க பொருள்ன்னு உங்களுக்கு மனசுல பதிஞ்சு போச்சு. நீங்களும் பச்சை எல்லாம் குத்திக்கிட்டு… அவருக்கு கல்யாணமானது தெரிஞ்சு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி… உங்க பிஹேவியர் பார்த்தா ஒரு குழந்தையோட பிஹேவியர் மாதிரிதான் இருக்கு. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபீலிங்ஸ்” என்றான்.

“திடீர்னு வந்து என்னென்னமோ சொல்றீங்க” என்றாள் சுகன்யா.

“நான் இங்க வந்துட்டு போனதிலிருந்து நல்லா யோசிச்சு பார்த்துட்டேன். எனக்கும் ஆசைப்பட்டது நடக்கலை. உங்களை என்னமோ எனக்கு பிடிச்சிருக்கு. உங்க மனசு மாற டைம் தேவைப்படும்னு எனக்கு தெரியும். ஆனா பாருங்க எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். ஹார்ட் பேஷன்ட். என் கல்யாணத்தை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப் படுறாங்க, அதனால சீக்கிரமே அவங்களுக்காக கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்” என கௌசிக் கூற திகைத்து போனவளாக நின்றிருந்தாள் சுகன்யா.

“கண்டிப்பா… கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் உங்க மனசு மாறும் வரை நல்ல ஃபிரெண்டா மட்டும்தான் இருப்பேன்” என்றான்.

சுகன்யாவுக்கு அழுகை வந்துவிட்டது. எவ்வளவு சிரமப்பட்டு அடக்கியும் அழுது விட்டாள்.

“நீங்க அழறீங்க. துடைச்சுவிடனும் போல இருக்கு. ஆனா எங்க தப்பா எடுத்துக்குவீங்களோன்னும் பயமா இருக்கு” என்றான்.

கண்களை துடைத்துக் கொண்டவள் “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை” என்றாள்.

“நான் உங்க வீட்ல பேசட்டுமா?” எனக் கேட்டான்.

சுகன்யா அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, “சரின்னு சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். இல்லைன்னு சொன்னாலும் உங்களை மறக்கமாட்டேன். வெயிட் பண்ணுவேன்” என்றான்.

“நான் நாளைக்கு சொல்லட்டுமா?” எனக் கேட்டாள்.

“நல்ல பதிலா சொல்லுங்க” என்றான்.

“வாங்க சாப்பிட போகலாம்” என அழைத்துச் சென்றாள்.

போகும் வழியில் “இந்த பச்சை குத்தியிருக்கிறதை அழிக்க முடியுமா?” என தயங்கி தயங்கி கேட்டாள் சுகன்யா.

“அதை அழிக்க வழி இருக்கு. ஆனா அதை அழிக்கணும்னு உங்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உங்க இஷ்டம். இது எனக்கு பெரிய விஷயம் இல்லை” என்றான்.

“அது எப்படி இன்னொருத்தர் பேரை கையில எழுதியிருக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிப்பீங்க?” எனக் கேட்டாள்.

“அதனால என்ன…? நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க. என் பெயரை உங்க மனசுல இதைவிட ஆழமா எழுதி வைக்கிறேன். அதுதானே முக்கியம்” என்றான்.

மெதுவாக சிரித்த சுகன்யா “இந்த பேர் என் கையில வேண்டாம். இது என்னோட முட்டாள்தனம்” என்றாள்.

“உங்களுக்கு பிடிக்கலைனா இதை எடுத்திடலாம். நான் ஏற்பாடு பண்றேன்” என்றான்.

அதற்குள் சாப்பிடும் இடம் வந்துவிட்டது. தோப்பில்தான் சிறிய பந்தல் போடப்பட்டு சாப்பாடு போடப்பட்டு கொண்டிருந்தது.

சக்தியும் மதுவை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தான். அவர்களை அமர வைத்து சக்தி பரிமாற செல்ல, மதுவும் எழுந்துகொண்டாள்.

“நீ உட்காரு மது” என சக்தி கூற, “காலையிலிருந்து எவ்வளவு வேலை பார்ப்பீங்க? உங்களுக்கும் பசிக்கும்தானே, உங்களை விட்டுட்டு நான் எப்படி சாப்பிடுறது?” என மது கேட்க, “நீங்க ரெண்டு பேருமே உட்காருங்க நான் பார்த்துகிறேன். இதோ பழனி கூட வந்துட்டான்” என்றான் குரு.

“நைஸ் ஜோடி இல்ல” என கௌசிக் சுகன்யாவிடம் கேட்க, “ஆமாம்… ரொம்ப அந்நியோன்யம்” என்றாள். அவளிடம் துளியும் பொறாமை இல்லை. மகிழ்ச்சியே தெரிந்தது.

மருத்துவ முகாம் முடிந்து மருத்துவக்குழு சென்னை புறப்படும் பொழுது கௌசிக் சுகன்யா திருமணமும் முடிவாகி இருந்தது.