“என்ன வேணா சொல்லிட்டு எப்படி சமாளிக்கிறதுன்னு உங்ககிட்டதான் தெரிஞ்சுக்கணும்” என்றாள்.
“நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. இன்னைக்கு நைட் நான் சொல்லித் தரேன்” என்றான்.
“போய் உங்களோட இந்த தில்லைநாயகம் மாமாதான் டிஎன் ன்னான்னு கண்டுபிடிங்க. அதுவரைக்கும் இந்த பேச்சை கொஞ்சம் கம்மி பண்ணுங்க” என்றாள்.
“சாப்பாடு எடுத்து வைடி” என அவளை முறைத்துக் கொண்டே கூறி ஆடை மாற்ற சென்றான்.
காலை உணவு முடித்து மதுவை சிகிச்சையகத்தில் விட்டவன் பொம்மையை எடுத்துக் கொண்டு குருவைப் பார்க்க சென்றான். அவனிடமும் விவரத்தைக் கூற, “அப்போ அந்த ஆளுதான் கருப்பு ஆடா?” என ஆச்சரியமாகக் கேட்டான் குரு.
“ஆமாண்டா, ஆனா அவரை ஒத்துக்க வைக்கனும்” என்றான்.
“அந்த ஆளை பத்தி நமக்கு அவ்வளவா தெரியாது. இப்ப தங்கதுரை மாமா வீட்டில் இருக்கமாட்டார். வா மணிமேகலை அத்தைகிட்ட போய் விசாரிப்போம்” என குரு கூற இருவரும் மணிமேகலையை பார்க்க கிளம்பி சென்றனர்.
தங்கதுரை வீட்டில் இல்லை. சுகன்யாவும் மணிமேகலை மட்டும்தான் இருந்தனர். இருவரையும் மணிமேகலை வரவேற்று அமர வைத்தார். குரு அவரிடம் எல்லாவற்றையும் கூறி “அத்தை அவர் ஆள் எப்படி?” என கேட்டான். மணிமேகலை பதில் கூறும் முன்பு,
“என்ன மாப்பிள்ளை… என் தம்பி மேலயே சந்தேகப்படுகிறீங்களா?” என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் தங்கதுரை.
சக்தியும் குருவும் அதிர்ந்து பார்க்க “உன் மாமனார் மேல தப்பு இல்லைன்னு மாமாகிட்ட காட்ட என் தம்பிய கெட்டவனாக்கப் பார்க்கிறீங்களா?” என சக்தியைப் பார்த்து கேட்டார் தங்கதுரை.
“ஐயோ மாமா, இங்க பாருங்க” என பொம்மையைக் காட்டி விவரத்தைக் கூறினான் குரு.
வாங்கிப் பார்த்தவர் கலக்கமாய் இருவரையும் பார்த்தார்.
“இது மட்டும் உண்மையா இருந்துச்சு… என் கையாலதான் அவனுக்கு சாவு” என்றார் தங்கதுரை.
“என்ன மாப்பிள்ளை பார்க்குறீங்க? தேவி என் மாமாவோட பொண்ணு. எனக்கும் அக்கறை இருக்கு” என்றார்
“நீங்க ஏதாவது காரணத்தை சொல்லி இங்க வர வைங்க. நம்ம அவர்கிட்ட இருந்து உண்மையை வரவழைப்போம்” என்றான் சக்தி.
“சரி மாப்பிள்ளை” என உடனே சம்மதித்தார் தங்கதுரை. அண்ணனும் தம்பியும் பேசிவிட்டு வெளியே வந்தனர்.
“ஏண்டா நம்மகிட்ட சரி சரின்னு சொல்லிட்டு மாமா எதுவும் டபுள் கேம் ஆடிட மாட்டாரே?” எனக் கேட்டான் சக்தி.
“நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட. நாம அந்த தில்லைநாயகம் இடத்துக்குப் போய் விசாரிக்க முடியாது. எப்படியும் இங்க வரவழைக்கறேன்னு சொல்லிட்டார்ல… வரட்டும் ஒரு கை பார்த்துடுவோம்” என்றான் குரு.
“சரிடா நான் சமுதாயக்கூடம் வரை போயிட்டு வந்துடறேன். மொத்தம் 20-25 பேர் வருவாங்க. ரெண்டு நாள் கேம்ப். எல்லாருக்கும் சாப்பாடு நம்மதான் ஏற்பாடு பண்ணனும். தங்க திருவாரூர்ல அவங்களே பார்த்துக்குவாங்க” என்றான்.
“ஆள் வச்சி சமைச்சிக்கலாம்டா. நான் அப்பாகிட்ட சொல்லிட்டேன். அவர் பஞ்சாயத்து ஆபீஸ்ல சொல்லிட்டார். இந்த தாத்தாதான் முறைச்சுக்கிட்டே திரியுறார்” என்றான்.
“உண்மை மட்டும் தெரியட்டும் முகத்தை எங்க போய் வச்சுகிறார்ன்னு நான் பார்க்கிறேன்” எனக் கூறி சமுதாயநலக்கூடம் நோக்கி சென்றான் சக்தி.
தங்கதுரை தில்லைநாயகத்தை “முக்கியமான விஷயம் பேசணும். தனியா வீட்டுக்கு வா” என அழைத்தார்.
அவரும் அடுத்த நாளே வருவதாக கூறினார். அவர் வரப்போகும் விவரத்தை மாப்பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார் தங்கதுரை.
மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்த சக்திதரன் மீண்டும் வயலுக்கு செல்லவில்லை. இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
தில்லைநாயகம் நாளை வரப்போவதை பற்றியும், மருத்துவ முகாமுக்கு நடந்துகொண்டிருக்கும் ஏற்பாடுகள் பற்றியும் மதுவிடம் கூறினான்.
“ஜெட் வேகத்தில் வேலையெல்லாம் நடக்குது போல” என்றாள் மது.
“ஆமாம்… இவ்வளவு வேலை பார்த்து மாமனுக்கு மூளை ரொம்ப சூடாயிடுச்சு. கொஞ்சம் குளிர்ச்சி பண்ணி விடு” என்றான் சக்தி.
சக்தி ஆசையாக கண்களை மூட, அருகில் இருந்த தண்ணீர் குவளையில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் தலை மீது ஊற்றினாள் மது.
“ஏய் என்னடி இது?” என கேட்டுக்கொண்டே சக்தி அவளை பிடிக்க வர, அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
“சுண்டெலி… அசந்த நேரம் பார்த்து என் தலையில தண்ணிய ஊத்திட்டீல்ல… இருடி இன்னைக்கு இருக்கு உனக்கு” என்றவன் முழுவதும் நன்றாக குளித்துவிட்டு வந்தான். சிறிது நேரத்தில் மது கதவை திறக்க, “இப்படியாடி பண்ணுவ?” என கேட்டான்.
“மூளை சூடு குறைஞ்சுதா இல்லையா?” என்றாள் மது.
“மூளை சூடு குறைஞ்சுட்டு ஆனா…” என சொல்லிக்கொண்டே சக்தி மதுவின் அருகில் வர, யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டது.
கண்களை மூடி பெருமூச்சு விட்டவன், “ஊர்முழுக்க எனக்கு எதிரிங்க இருக்காங்க. போ போய் யாருன்னு பாரு” என்றான். மது சென்று கதவை திறக்க பொன்னுத்தாயி வந்திருந்தார்.
மது கண்களாலேயே சக்தியை பார்த்து சிரிக்க, ‘போகட்டும் அப்புறம் இருக்குடி உனக்கு’ என சாடையில் பேசினான் சக்தி. மது சக்திக்கு அகப்படாமல் சமையலறையில் போய் நின்று கொண்டாள். அங்கே வந்த சக்தி,
“மது என்னோட பச்சை சட்டையை காணோம். கொஞ்சம் எடுத்து தா” என அழைத்தான்.
“எதுக்கு இப்போ பச்சை சட்டை, வேணும்னா வேற சட்டை எடுத்துக்கங்க” என்றாள் மது.
“போட்டுக்க இல்லடி. அதுல ஒரு முக்கியமான பேப்பர் வச்சிருந்தேன், எடுத்து தா” என்றான்.
“ஓ… அந்த பேப்பரா? அது பத்திரமா இருக்கட்டுமேன்னு உங்க அம்மாகிட்ட கொடுத்து வச்சுக்க சொல்லிட்டேன்” என்றாள் மது.
“உன்னை யார் கொடுக்க சொன்னா? எனக்கு இப்ப வேணும்” என்றான் சக்தி.
“அவளை நான் பார்த்துக்கிறேன் இன்னைக்கு காரம் நல்லா தூக்கலா இருக்கணும்” என்றான்.
“சரி தம்பி” என்றார் பொன்னுதாயி.
எண்ணெய் குப்பியையும் நெய்யையும் எடுத்துவந்து கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்தான்.
மது பேசிவிட்டு உள்ளே வர சமைத்து முடித்து பொன்னுத்தாயி கிளம்பிவிட்டார். மதுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே காலையில் வந்த தினசரியை படிப்பது போல பாசாங்கு செய்தான். சாப்பாட்டைக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு இரவு உடை மாற்றி வந்தாள்.
“என்ன சக்தி ரொம்ப அமைதியா இருக்கீங்க? ஏதோ சரியில்லையே?” என கேட்டாள்.
“என்னை தொல்லை பண்ணாத. நான் பேப்பர் படிக்கிறேன்” என்றான் சக்தி.
“உங்களுக்குதான் கள்ளத்தனமா சைட் அடிக்க தெரியலையே, அப்புறம் ஏன் இந்த நடிப்பு?” என்றாள் மது.
“நான் ஏண்டி என் பொண்டாட்டிய கள்ளத்தனமா சைட் அடிக்கணும்?” எனக் கேட்டான்.
“நானும் அதையேதான் கேட்குறேன்” என்றாள் மது.
“வர வர உன் வாய் ஒரு ஊருக்கு இல்லடி பத்து ஊருக்கு நீளுது” என்றான்.
“போதும் போதும். நீங்க வாய திறந்து பேசுறதே கிடையாது. நான்தான் பேசுறேன்” என்றாள்.
“சரி வா சாப்பிடலாம்” என்றான்.
“மணி 7 தான் ஆகுது. அதுக்குள்ள சாப்பாடா?”
“சீக்கிரம் சாப்பிட்டு படுக்கலாம். எனக்கு வேற வேலை இருக்கு” என்றான்.
“நீங்க சொல்ற அந்த வேலை இன்னைக்கு கிடையாது” என்றாள் மது.
“ஏன்?” என்றான் சக்தி.
“எனக்கு மூட் சரியில்லை” என்றாள்.
“என்னாச்சு?”
“அப்பா பேசினார். அவரோட மாமா இன்னும் அவரை தப்பா நினைக்கிறார்ன்னு அவர் ரொம்ப ஃபீல் பண்ணினார்” என்றாள்.
“இனிமே உங்க அப்பாவை பகல் நேரத்திலேயே ஃபோன் பண்ணி பேசச் சொல்லு. இந்த நேரத்துல பண்ணி என் குடும்ப வாழ்க்கையில கும்மி அடிக்கிறார்” என்றான்.
“என் அப்பாவை கிண்டல் பண்ணாதிங்க. அவர் எவ்ளோ ஃபீல் பண்றாரு தெரியுமா?”
“உன் புருஷனை தவிர மத்தவங்க ஃபீல் பண்றது எல்லாம் உனக்கு நல்லா தெரியும்டி. சரி வா சாப்பிடலாம்” என்றான்.
மதுவும் சாப்பிட அமர்ந்தாள். ஒருவாய் சாப்பிட்டவள் காரம் தாங்கமுடியாமல் தண்ணீரை குடித்துவிட்டு பொன்னுதாயை திட்டிக்கொண்டே எண்ணெய் எடுக்க சென்றாள். சக்தி நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே சாப்பிட்டான்.
சில நிமிடங்களில் சமையலறை விட்டு வந்தவள், “நீங்கதான் ஒளிச்சு வச்சிட்டீகளா?” எனக் கேட்டாள்.
“அப்புறம் என்னடி… நான் இருக்கும் போது அதெல்லாம் எதுக்கு உனக்கு?” என்றவன் அவளுக்கு காரத்தை பழக்க ஆரம்பித்தான்.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்து எழுந்து சென்ற மது ஒரு பாயையும் தலையணையையும் கொண்டு வந்து முற்றத்தில் வைத்தாள்.
“என்னடி பண்ற? நான் இனிமே தனியா எல்லாம் படுக்க மாட்டேன்” என்றான் சக்தி.
“உங்களை யார் தனியா படுக்க சொன்னது?”
“அப்புறம் இந்த பாய் எதுக்கு?”
“நாம படுக்க” என்றாள்.
“ரூம்ல படுக்கலாம்டி”
“ம்ஹூம்… இங்கதான் எனக்கு பிடிச்சிருக்கு” என்றாள்.
“ம்… அதுசரி… சுண்டெலி… கலக்குறடி” என்றவன் அவளை அள்ளிக் கொண்டான்.
முற்றத்தில் காதல் முரசு முழங்க ஆரம்பித்தது.
காலையில் மது கண் விழித்த போது முதல் நாள் போலவே அவளது படுக்கையில் படுத்து இருந்தாள். சக்திக்கு அழைத்தவள் “ஏன் இப்படி பண்றீங்க?” எனக் கேட்டாள்.
“என்னடி தெளிவா சொல்லு” என்றான் சக்தி.
“கண் முழிச்சு பார்த்தா உங்களை என் பக்கத்துல காணோம். ஒன்னு நான் முழிச்சதுக்கு அப்புறம் போங்க. இல்லைன்னா என்னை நீங்க எழுந்திருக்கும் போதே எழுப்பி விடுங்க. காலையில நீங்க இல்லாம என்னவோ மாதிரி இருக்கு” என்றாள்
“சரி வை வேலையிருக்கு” என்றான்.
“பேசிக்கிட்டே வேலை பாருங்க. நான் வைக்க மாட்டேன்” என்றாள்.
“சரி பேசு. நான் கேட்கிறேன்” என்றான்.
மது அவனிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க திடீரென அவள் முன்பு வந்து நின்றவன் அவளருகில் வந்து படுத்து அணைத்துக்கொண்டான்.
“தேங்க்ஸ் மாமா” எனக் கூறி அவன் கழுத்தை கட்டிக் கொள்ள, “சுண்டெலி… மாமா இன்னைக்கு அண்ணன்கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். எப்பவும் இதே மாதிரி எதிர்பார்க்கக் கூடாது” என்றான்.
“ம்… ம்…” என்றவள் தூங்க ஆரம்பிக்க,
“என்னடி பண்ற?” எனக் கேட்டான்
“தூங்க விடுங்க, பேசாதீங்க” என்றாள்.
“இதுக்குதான் கூப்பிட்டியா?”
“ஆமாம். எனக்கு காலையில் கண்விழிச்சதும் திருப்பி கொஞ்ச நேரம் தூங்க பிடிக்கும். இப்படி உங்களை கட்டிப் பிடிச்சிக்கிட்டு தூங்கனும்னு ரொம்ப ஆசை” என்றாள்.
சிரித்தவன், “தூங்குடி” எனக் கூறி அவளை அணைத்துக் கொள்ள, மது அவன் மார்பில் நித்திரை கொண்டாள்.
தூக்கம் வராத சக்தி வெறுமனே அவளின் அருகாமையை ரசித்து படுத்திருந்தான். அரைமணிநேரத்தில் எழுந்தவள் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு “இப்பதான் இந்தநாள் ஹேப்பியா போகும்” என்றாள்.
“மது குட்டி… நான்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா?” எனக் கேட்டான்.
“ம்…” என்றாள் மது.
“எனக்கு எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு மது. நீ ஒரு டாக்டர். நான் ஒரு விவசாயி. என்னை எப்படி உனக்கு பிடிச்சது?”
“இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேட்க வேண்டியதுதானே?”
“எனக்கு தெரியும் உனக்கு என்னை பிடிக்கும்ன்னு. ஆனாலும் எப்பவும் ஒரு கேள்வி இருக்கும். இவளுக்கு நம்மளை போய் எப்படி பிடிச்சதுன்னு?”
“அது என்ன நம்மள போய்… உங்களுக்கு என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவன் மீசையை முறுக்கி விட்டாள்.
“கேட்டதுக்கு பதில் சொல்லுடி” என்றான்.
“லவ் ஒரு ஸ்பார்க். எப்ப வேணா யார் மேல வேணா வரும். சில பேர் இதெல்லாம் சரியா வராதுன்னு வெளியில சொல்லாமலேயே அவங்கள அவங்களே ஏமாத்திக்குவாங்க. நான் என்னை ஏமாத்திக்க தயாரா இல்லை”
“உங்கள பார்த்த உடனே ஒரு அட்ராக்ஷன் இருந்துச்சு. போக போக காதலா மாறிட்டு. உங்கள மிஸ் பண்ண நான் விரும்பல. நீங்க எனக்கு கிடைக்க மாட்டீங்கன்னு ஒரு சூழ்நிலை வந்தப்போ கூட, வேற கல்யாணம் செய்துக்கணும்னு எண்ணம் வரல. உங்க நினைப்போடவே வாழணும்னுதான் நினைச்சேன். எனக்கு காரணமெல்லாம் தெரியாது. ஆனால் ஐ லவ் யூ மாமா” என்றாள்.
மதுவின் நெற்றியில் தன் நெற்றி வைத்து முட்டியவன், “அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்குடி” என்றான்.
“இருக்கும், இருக்கும். கிளம்புங்க அந்த டிஎன் யாருன்னு கண்டுபிடிங்க”
“உனக்கு பொறுக்காதே. அவர் வரட்டும் போய் விசாரிக்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். சுகன்யா கையிலே பச்சை எழுதி இருக்கே அதை எப்படி நீக்குறது?” எனக் கேட்டான்.
“அதுக்கு லேசர் ட்ரீட்மெண்ட் இருக்கு. நான் அம்மாகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்”