வானவில் கோலங்கள்-17(1)

அத்தியாயம்-17(1)

அன்று மதியம் நேரம் மூன்றை கடந்தும் சக்தி சாப்பிட வராததால் அவனுக்கு அழைத்தாள் மது.

“இல்லை மது, இன்னும் லேட்டாகும். நீ சாப்பிடு” எனக் கூறி வைத்து விட்டான்.

சாப்பாட்டை பாத்திரங்களில் அடைத்து ஒரு வயர் கூடையில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். நடந்தே வயலை வந்தடைய, “சக்தி தம்பி உம்ம சம்சாரம் வர்றாவோ” என்றார் ஒரு பெண்மணி.

சக்தி திரும்பிப்பார்க்க மது கையில் ஒரு கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். சக்தி வேகமாக போய் அவளை எதிர்கொண்டான்.

“என்ன மது இது? இந்த வெயில்ல ஏன் இப்படி நடந்து வர்ற?” என கேட்டுக் கொண்டே அவள் கையிலிருந்த கூடையை வாங்கிக்கொண்டான்.

“டைம் என்னாகுது? இன்னும் சாப்பிடாம என்ன பண்றீங்க?” என்றாள்.

“இன்னைக்கு உளுந்து எடுக்கிறோம் மது. நான் நின்னாதான் வேலை சீக்கிரம் நடக்கும்” என்றான்.

“ஏன் உங்க அண்ணன், அப்பா எல்லாம் கொஞ்ச நேரம் பார்த்துக்க மாட்டாங்களா?” எனக் கேட்டாள்.

“நமக்கு இங்க மட்டும் நிலம் இல்லை. மேற்காலயும் வயல் இருக்கு. அண்ணன் அங்கே நிக்குறான். அப்பா நெல்லை கொள்முதல் பண்ண போயிருக்காரு” என்றான்.

“அதுக்காக சாப்பிடாமலே இருப்பீங்களா? அதான் நானே எடுத்துட்டு வந்துட்டேன்” என்றாள்.

“எத்தனை நாள் இப்படி இருக்கேன்? ஒரு நாள்ல ஒன்னும் ஆகிடாது. அதுக்காக எவ்வளவு தூரம் இந்த வெயில்ல நடந்து வந்திருக்க?” என கேட்டான்.

“இனிமே நேரத்துக்கு நீங்க சாப்பிட வரலைன்னா இப்படித்தான் வருவேன்” எனக் கூற, “உன்னை கஷ்டப்படுத்துறேனா?” எனக் கேட்டான் சக்தி.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நானாதானே வந்தேன். எங்க உட்கார்ந்து சாப்பிடுவீங்க?” என சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

மோட்டார் அறைக்கு அருகில் சென்று அங்கிருந்த வேப்பமரத்தின் அடியில் அவளை அமரச்செய்து கை கால் கழுவிக்கொண்டு வந்தான். தட்டில் எல்லாம் வைத்து மது கொடுக்க, வாங்கிக் கொண்டவன் “நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

“எனக்கு நல்ல பசி சாப்பிட்டுட்டேன். இல்லைனா இவ்வளவு தூரம் நடக்கிறதுக்குள்ள எனக்கு மயக்கம் வந்திருக்கும்” என்றாள்.

தன் இடது கையால் அவள் பாதத்தை  சக்தி அமுக்கி விட “என்ன பண்றீங்க?” என பதறினாள் மது.

“உனக்கு கால் வலிக்கும்தானே?” என சக்தி கேட்க,

“என்னைக்காவது ஒரு நாள் திடீர்னு நடந்தா வலிக்கத்தான் செய்யும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும். நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை தண்ணீரில் கழுவச் செல்ல, “நீ தள்ளு உன் டிரஸ் நனையுது” என்றவன் அவனே கழுவி கூடையில் வைத்தான்.

“நீ இங்கேயே இரு. நான் ஒரு தடவை போய் தலையை காட்டிட்டு வந்துடுறேன். நானே வண்டியில கொண்டு வந்து விடுறேன். நீ நடக்க வேண்டாம்” என்றான்.

“நான் மட்டும் வீட்டுக்கு போய் என்ன பண்ண? இங்கேயே வேடிக்கை பார்க்கிறேன்” என சொல்ல சரி என்று அழைத்து சென்றான்.

இவர்கள் இருவரும் பக்கத்தில் வர ஆட்கள் குசுகுசுவென பேசிக் கொள்ள, சில பெண்கள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர். பார்த்த மது சக்தியிடம் கண்களால் என்னவென்று கேட்க தெரிய வில்லை என அவளிடம் கண்களால் கூறியவன் “என்ன சங்கதின்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க” என்றான்.

“அதா தம்பி உன் முகத்தைப் பார்த்து சித்திரையில கண்ணாலம் நடக்கும்னு செல்லக்கிளி சொல்லுச்சாம். அதுபடியே நடந்துட்டுதாம்” என்றார் ஒரு பெண்மணி.

“அதுல என்ன சிரிப்பு?” எனக்கேட்டான் சக்தி.

“அட முழுசா கேளு தம்பி. அதே மாதிரி உன்னோட சம்சாரம் முகத்தைப் பார்த்தா அடுத்த சித்திரைக்குள்ள புள்ளையும் பொறந்துடும்ன்னு சொல்லிச்சு. அதுக்கு நம்ம தங்கமணி அக்கா அதுக்கு எதுக்கு உன் முகர கட்டை ஜோசியம்? அவ்வோ ரெண்டு பேரையும் பார்த்தாலே எல்லாருக்குமே தெரியுது 10 மாசத்துல புள்ள வந்துடும்னு சொல்லிச்சு” எனக்கூற, இதைச் சொன்ன பெண்மணி வெட்கத்தில் சிரித்தாள்.

“நீ எதுக்குடி இப்படி வெட்கத்தில நெளியற?” என அவளைப் பார்த்து தங்கமணி கேட்க, குரலை செருமிக் கொண்ட சக்தி, “இம்புட்டு நேரம் சோலி ஒன்னும் நடக்கல. இந்த வெட்டிப்பேச்சுதான் பேசிகிட்டு நின்னீங்களா?” என்றான்.

“சோலி பாட்டுக்கு சோலி,  பேச்சு பாட்டுக்கு பேச்சு” என ஒருவர் கூற மது இவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்து நின்றிருந்தாள்.

“யார் அந்த முகம் பார்த்து சொல்ற ஜோசியர்?” என மது கேட்க, “இதோ இவ்வோதான்” என செல்லக்கிளியை ஒருவர் கைகாட்ட, “உங்களுக்கு உண்மையாவே முகத்தைப் பார்த்து ஜோசியம் பார்க்க தெரியுமா?” எனக் கேட்டாள் மது.

“என்ன இப்படி கேட்டுபுட்டீங்க? நான் சொன்ன அம்புட்டும் நடந்திருக்கா இல்லையான்னு ஊர்ல கேட்டுப் பாருங்க” என்றாள் செல்லக்கிளி.

“அட நீங்க வேற டாக்டர்? அது ஏதாவது அடிச்சிவிடும். அப்படியே குருட்டாம்போக்கில் நடக்கவும் எல்லாரும் அதை நம்பிக்கிட்டு திரியுறாங்க” என்றான் பழனிவேல்.

“எலேய் நீ வேணா பாரு டா… அடுத்த சித்திரைக்குள்ள சக்தி தம்பிக்கும் டாக்டர் பிள்ளைக்கு புள்ள பொறக்கல… அடங்கொப்பரானா…. எங்கப்பன் சத்தியமா நான் வெத்தலை போடுறதையே விட்டுடுறேன்” என சவாலாய் கூறினாள் செல்லக்கிளி.

“புள்ளை பொறக்கும்னு ஊருக்கே தெரியும். என்ன புள்ளைன்னு கரீக்டா சொல்லு” என்றாள் தங்கமணி.

“சக்தி தம்பி மாதிரியே ஆம்பளபுள்ளைதான் முதல்ல. அப்புறம்தான் பொம்பளப் புள்ள” என செல்லக்கிளி கூற, மது சிரித்துக்கொண்டே சக்தியைப் பார்த்தாள்.

“மது நீ பேசி வேலையை கெடுக்காத, தள்ளிப் போ” என்றான் சக்தி.

“நான் ஒன்னும் வேலையைக் கெடுக்கல. இவங்க வேலையை பார்த்துக்கிட்டுதானே என்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க” என்றாள் மது.

ஒரு பக்கம் உளுந்து எடுத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் உளுந்து செடியிலிருந்து உளுந்தை பிரித்தெடுத்து, தோல் நீக்க புடைத்துக் கொண்டிருந்தனர்.

“இங்க பாரு மது. உளுந்து புடைக்கும் போது கண்ணில் தூசு விழும். நீ அங்க போ” என்றான்.

அவனுக்கு மட்டும் கேட்கும்படி, “ஏன் தூசு விழுந்தா எடுத்து விட மாட்டீங்களா?“ எனக் கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி போய் நின்றுகொண்டாள். மற்றவர்கள் வேலை செய்கிறார்களா என கவனித்து விட்டு மெல்ல அவளிடம் வந்தான்.

“நல்லா உசுப்பேத்து. அப்புறமா நான் சொல்றதை செஞ்சுட்டு வான்னு ரூல்ஸ்ம் பேசு. அவங்கதான் விஷயம் தெரியாம கண்டமேனிக்கு பேசுறாங்க. நீ என்னை பார்த்து சிரிச்சீன்னா என்னடி அர்த்தம்?” என்றான்.

“இப்படி எல்லாரும் பேசுறாங்களே, உங்க பதில் என்னன்னு அர்த்தம்?”

“அவங்க பேசுறதுக்கு பதிலை உன்னைத்தான் நான் கேட்கணும்” என்றான் சக்தி.

“இன்னும் உங்க அத்தை இறந்ததுக்கு காரணம் கண்டு பிடிக்கல” என்றாள் மது.

“நான் என்னடி பண்றது? என்னால முடிஞ்சதை முயற்சி பண்ணி பாத்துட்டேன். இன்னைக்கு நாள் முச்சூடும் இங்கேயே போயிட்டு. நாளைக்குதான் என்னன்னு பார்க்கணும்” என்றான்.

காற்று சற்று வேகமாக வீச, பரந்த தன் கேசத்தை அழுந்தக் கோதிய சக்தி, தன் மீசையை அனிச்சையாய் முறுக்கிக் கொண்டான். அவனைப் பார்த்துக்கொண்டே இருந்த மது,

“ரொம்ப ஸ்டைலா இருக்க மாமா நீ” என கிறக்கமாய் கூறினாள்.

“வேணாம்டி, அழுதுடுவேன்” என சக்தி கூற மது சிரித்தாள்.

“நல்லா சிரிடி. நீயாவது சிரிச்சு சந்தோஷமா இரு” என்றான்.

“எனக்கு மட்டும் ஆசை இல்லையா மாமா? எல்லாம் நல்லபடியா நடந்தா எதுக்கும் நான் தடை சொல்ல மாட்டேன்” என்றாள்.

“சரி நீ கிளம்பு, நான் வர லேட்டாகும்” என்றவன், “இரு நான் போய் தலையை காட்டிட்டு வந்துடுறேன்” எனக்கூறி வேலை செய்யும் இடத்திற்கு சென்றான்.

மதுவுக்கு பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வர, எடுத்துப் பேசியவள் அவர் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷமாக சக்தியை அழைத்தாள்.

அவன் வந்து என்னவென்று கேட்க, “எங்க பாட்டி நினைவு தினத்துக்கு மெடிக்கல் கேம்ப் இங்கேயே போட அம்மா ஒத்துக்கிட்டாங்களாம்” என்றாள்.

“பரவாயில்லையே… என் மாமியார் பார்க்கத்தான் டெரர் போல உள்ளுக்குள்ள நல்லவங்களா?” எனக் கேட்டான்.

“ம்…” என மது கூற, “ஆனா என் பொண்டாட்டி பார்க்கத்தான் சாது. உள்ளுக்குள்ள டெரர், கல்நெஞ்சக்காரி” எனக் கூறினான்.

“போதும் போதும், வீட்டுல கொண்டு போய் விடுங்க” என மது கூற அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.