வானவில் கோலங்கள் -16

அத்தியாயம் 16

வீட்டிற்கு வந்த சக்தி தான் வனஜாவை மறுநாள் பார்க்க போவதை பற்றி மதுவிடம் கூறினான்.

“ஏதாவது தெரிய வருமா?” என மது கேட்க, “நம்பிக்கையோட இருப்போம். எதுவும் தெரிஞ்சா சரி. இல்லேன்னா வேற ஏதாவது முயற்சி செய்ய வேண்டியதுதான்” என்றான்.

“நீங்க இந்த விஷயத்துல இன்னும் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுக்கலாம்” என்றாள் மது.

“பார்த்துகிட்டுதான் இருக்கேன் மது. வேலையும் அதிகம். அண்ணனையே  எல்லாத்தையும் பார்த்துக்க சொன்னா நல்லா இருக்குமா? சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம். எனக்கு பசிக்குது. சாப்பிடலாம் வா” என கூறிவிட்டு குளிக்க சென்றான்.

குளித்து விட்டு வருகையில் மேசையில் உணவு தயாராக இருந்தது. ஆடை மாற்றி சக்தி வந்தமர சாப்பாடு பரிமாறினாள் மது. சாப்பாட்டைப் பார்த்த சக்தி,

“என்ன மது இது? இன்னைக்கு யார் சமைச்சது?” எனக் கேட்டான்.

“உங்க பொண்டாட்டி” என்றாள் மது.

“உனக்கு நல்லா சமைக்க தெரியுமா?”

“சமைக்க தெரியும். நல்ல சமையலான்னு சாப்பிடுறவங்கதான் சொல்லணும்” எனக் கூறினாள்.

“கடவுளே என்னை காப்பாத்து” என சக்தி இரு கைகளையும் மேல் நோக்கி கும்பிட, “என்ன கிண்டலா?” என்றாள்.

“பின்ன கல்யாணம் ஆனதோட சரி. இன்னும் ஒன்னும் நடக்கல. அதுக்குள்ள என் உயிருக்கு ஏதாவது ஆகிட்டுன்னா?” என கேட்க, “நீங்க சாப்பிடவே வேண்டாம்” என தட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.

“சரி கிண்டல் பண்ணலை கொடு” என்றான்.

“வேணாம் கஷ்டப்பட்டு ஒன்னும் என் சாப்பாட யாரும் சாப்பிட வேண்டாம்” என முறுக்கி கொண்டாள் மது.

“சரி கொடுடீ பசிக்குது” என சக்தி கூறிய பின்தான் தட்டைக் கொடுத்தாள். ஒரு வாய் எடுத்து சக்தி சாப்பிட அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.

“ஆஹா… ஆஹா… ஆஹா… என்ன சுவை… என்ன சுவை” என்றவன் “இதை செஞ்ச கைக்கு ஏதாவது கொடுத்தே ஆகணும்” எனக் கூறி அவள் கைகளில் முத்தமிட்டான்.

“விடுங்க இப்பதான் கடவுளைக் காப்பாத்த சொல்லி வேண்டிக்கிட்டீங்க”

“ரொம்ப பண்ணாதடி உண்மையாவே அப்போ பயமாதான் இருந்துச்சு. உனக்கு சமைக்க வரும்னு எனக்கு தெரியாது” என்றான்.

“பொழைச்சு போங்க” என்றவள் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“காரம்தான் கம்மி” என சக்தி கூற, “நீங்க காரமா சாப்பிடுவீங்கன்னுதான் நான் எப்பவும் சமைக்கிறத விட இன்னைக்கு காரமா சமைச்சேன்” என்றாள்.

“இதெல்லாம் எனக்கு பத்தாதுடி” என்றான்.

“நான் சமைச்சா இப்படித்தான் இருக்கும். அவ்வளவு காரம் உடம்புக்கு நல்லது இல்லை. எனக்கே தெரியாமல் தாலி கட்டுனீங்கல்ல… இனிமே இவ்வளவுதான் சாப்பாட்டில் காரம் இருக்கும். நல்லா அனுபவிங்க” என்றாள்.

“சுண்டெலி உனக்கு வாய் ரொம்ப நீளமாயிட்டு” என்றான்.

சாப்பிட்டு முடிக்கவும் ஒரு கிண்ணத்தில் கேரட் அல்வாவை எடுத்து நீட்டினாள்.

“என்னடி இது? “

“கேரட் ஹல்வா” என்றாள்.

“நான்தான் உனக்கு அல்வா தரனும், நீ எனக்கு தர்றியா?” என்றவன் அதையும் வாங்கி சுவைத்தான். சாப்பிட்டு முடித்து இருவரும் வெளியில் தோப்பு பக்கமாக நடந்தனர்.

“ஏண்டி தள்ளி நடந்து வர்ற? இப்ப யாரும் இங்க வரமாட்டாங்க. கிட்ட வா” என்றான் சக்தி.

“நான் மாட்டேன். கிட்ட வந்தா ஏதாவது வம்பு செய்வீங்க?”

“நீ கிட்ட வரலைன்னாலும் வம்பு செய்வேன்” என்றவன் அவளை சட்டென்று பிடித்திழுக்க பார்க்க, சுதாரித்த மது நகர்ந்து கொண்டாள். சக்தி மதுவை பிடிக்க வர, அவள் அகப்படாமல் இங்கும் அங்கும் ஓடினாள்.

“ஆ…” என கால்களைப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டான் சக்தி. அவனுக்கு ஏதோ அடிபட்டுவிட்டது என்றெண்ணி “என்னாச்சுங்க?” எனக் கேட்டுக் கொண்டே மது அருகில் வர, அவளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன் “மாட்டுனியா?” என்றான்.

“ஃபிராடு ஃபிராடு” என திட்டினாள்.

“நான் ஃபிராடுன்னா நீ ஜில்லா கேடி” என்றான்.

“பின்ன உங்களை சமாளிக்கனுமே” என்றவள் அவனது மீசையை முறுக்கி விட, “ஏய் சுண்டெலி…” என மெதுவாக அழைத்தான்.

“என்ன?”

“இன்னைக்கு இருக்கா?” என கேட்டான்.

“என்ன இருக்கா?”

“புரியாத மாதிரியே கேட்காதடி”

“கொஞ்சம் சிரிச்சு பேசிடக்கூடாதே. நான் சொன்ன எதையும் செய்யக் காணோம். அதையெல்லாம் செய்யுங்க, அப்புறம்தான் எல்லாம். அதுக்குள்ள கிடைக்கிற கேப்ல எல்லாம் ஏரோபிளேன் ஒட்டக்கூடாது மாமா” என கூறிய மது, “இப்போ வேணும்னா இதை மட்டும் வச்சுக்குங்க” என்றவள் அவனது இதழில் பட்டும் படாமல் முத்தமிட்டு அவனிடமிருந்து விலகி வீட்டிற்குள் ஓடினாள்.

சக்தி வீட்டிற்குள் வர மது அவளது அறைக்குள் சென்றிருந்தாள். அறை மூடப்பட்டிருந்தது. முற்றத்தில் ஒரு பாயும் தலையணையும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பாயை விரித்து அதில் படுத்தவன்,

“எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு ஒருநாள் இருக்குடி” என சத்தமிட்டான்.

“அந்த ஒரு நாளில் எல்லாம் பார்த்துக்கலாம். இப்போ படுத்து தூங்குங்க” என அறையிலிருந்து சத்தமிட்டாள் மது.

பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்றாலும், மது இருந்த அறையின் மூடிய கதவை பார்த்து சிரித்துக்கொண்டே மனதில் ஒரு இதம் பரவ கண்களை மூடினான் சக்தி.

அடுத்த நாள் காலையிலேயே வனஜா இருந்த கிராமத்திற்கு சென்றுவிட்டான் சக்திதரன். அங்கே அவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. வனஜா இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. வனஜாவின் கணவருக்கும் தேவியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

இவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறானே என வனஜாவின் கணவரும் அவர் மனைவியின் பொருட்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். உபயோகமாக எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினான் சக்தி.

சக்தி அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே திரும்பி வர, ஆவலுடன் அவனுக்கு அழைத்தாள் மது. சக்தி விஷயத்தை கூறவும் மதுவுக்கும் ஏமாற்றமாகிப் போனது.

ஊருக்கு வந்த சக்தி நேரே தன்னுடைய வீட்டிற்கு சென்றான். தனது அன்னையிடம் சென்று, “தேவி அத்தையோட பழைய பொருட்கள் ஏதாவது இருக்கா?” எனக் கேட்டான்.

“அப்படின்னு தனியா எல்லாம் எதுவும் எடுத்து வைக்கலைடா. எதுக்கும் பழைய சாமான் போட்டு வச்சிருக்கிற ரூமை போய் பாரு” என்றார்.

குருவையும் அழைத்துக் கொண்டு சக்தி பழைய சாமான் போட்டு வைத்த அறைக்கு சென்றான். சல்லடை போட்டு இருவரும் தேடினர். ஒரு டிரங்குப் பெட்டியை திறந்த குரு அதை ஆராய்ந்து பார்த்தான்.

ஒரு பாலித்தீன் பையிலிருந்து ஏதோ கடிதங்கள் கிடைக்க, “டேய் கிடைச்சுட்டுடா… இதெல்லாம் ஏதோ லவ் லெட்டர்ஸ் மாதிரி இருக்கு” என்றான்.

ஆவலாய் வாங்கிப் பார்த்தான் சக்தி. ஓரங்களில் செல்லரித்துப் போய், எழுத்தும் மங்கிப் போய், எப்போது வேண்டுமென்றாலும் கிழியலாம் என்ற நிலையில் இருந்த கடிதத்தை பார்த்து பார்வையை ஓட்டியவன் குருவைப் பார்த்து முறைத்தான்.

“ஏண்டா முறைக்கிற?”

“இது அப்பா அம்மாவுக்கு எழுதின லெட்டர் டா” என்றான். ஆவலாய் அதை வாங்கிப் பார்த்த குரு, படித்துவிட்டு,

“என்னடா இது…? அப்பாவுக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் ஒளிஞ்சிகிட்டிருந்த விஷயம் நமக்கு தெரியாம போய்ட்டே” எனக் கூற சக்தியும் குருவும் வாய்விட்டு சிரித்தனர்.

“சும்மாவாடா….? அவரோட ஜீன் உன்கிட்ட அப்படியே இருந்திருக்கு. அதான் நீயும் லவ்ல சும்மா பூந்து விளையாடியிருக்க” என குரு சக்தியை கிண்டல் பேச,

“என்னையவே சொல்லாதே. நீ ரொம்ப ஒழுங்கு பாரு. உன் கல்யாணத்துக்கு முன்னாடியே நீயும் அண்ணியும் திருட்டுத்தனமா மேயாதமான் படம் பார்க்க போகல? எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டியா?” என்றான் சக்தி.

“அடப்பாவி உனக்கு எப்படிடா தெரியும்?” எனக் கேட்டான் குரு.

“என் ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான். அதைவிடு அப்பாவோட காதல் கடுதாசியை பத்திரமா வச்சிட்டு உபயோகமா ஏதாவது கிடைக்குதான்னு தேடு” என்றான்.

அந்த டிரங்குப் பெட்டியை இன்னும் ஆராய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பொம்மை கிடைத்தது. “என்னடா இது மரப்பாச்சி பொம்மை கிடக்குது” என்றான் குரு. வாங்கிப் பார்த்த சக்தி, “ரொம்ப அழகா இருக்கு. ஏது இது?” என்றான்.

“சின்னப்பிள்ளைல நம்ம விளையாண்டதா இருக்கும்டா” என்றான் குரு.

“பார்க்க நல்லா இருக்கு. நான் மதுகிட்ட கொண்டு போய் கொடுக்கிறேன்” என்றான் சக்தி.

“ஏண்டா என் பொண்ணுகிட்ட கொடுத்தா கூட விளையாடிக்கிட்டு இருப்பா. உன் பொண்டாட்டி என்ன பாப்பாவா? மரப்பாச்சி பொம்மை கொடுக்க” என்றான் குரு.

“எனக்கு அவ பாப்பாதாண்டா. அவ இத மாதிரி பொருள் எல்லாம் பார்த்திருக்க மாட்டா. நான் வேணும்னா பிரதீபாவுக்கு வேற வாங்கி தரேன்” எனக்கூறி ஆசையாக அந்த பொம்மையை பார்த்தான்.

“உன்னைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. நீயே வச்சுக்க” என பெரிய மனது வைத்து விட்டுக்கொடுத்தான் குரு.

வேறு ஒன்றும் உபயோகமாக கிடைக்காமல் அறையை பூட்டிவிட்டு அனுசுயாவிடம் அந்தக் கடிதங்களை கொடுத்தான் சக்தி. அந்தக் கடிதங்களை பார்த்த அனுசுயா அழுதே விட்டார்.

“எங்க இருந்துடா கிடைச்சது. இதையெல்லாம் நான் தொலைச்சிட்டேன்னு என்கூட எவ்வளவு சண்டை போட்டிருப்பார் தெரியுமா? இப்பக் கூட சொல்லி சொல்லி காட்டுவார்” எனக் கூற சக்தியும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்து சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டனர்.

“பின்ன மனுஷன் உருகி உருகி எழுதியிருக்கார். நீ இவ்ளோ அசால்ட்டா தொலைச்சீன்னா சண்டை போடாம என்ன பண்ணுவார்?” எனக் கேட்டான் குரு.

“படிச்சுப் பார்த்திங்களாடா?” என கேட்டு அனுசுயா வெட்கப்பட,

“பயப்படாத சாம்பிலுக்கு ஒன்னே ஒன்னுதான் படிச்சுப் பார்த்தோம்” எனக் கூறி சிரித்தான் சக்தி.

அங்கே வந்த வீரவேல் சக்தியை பார்த்துவிட்டு, “இவன் எதுக்கு இங்க வர்றான்?” என கோவமாக கேட்க, “உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி ரொம்ப நேரம் ஆகிட்டு. என்னை ஏதாவது சொன்னீங்க இந்த கடுதாசியை எல்லாம் தாத்தாகிட்ட கொடுத்திடுவேன்” என தன் தந்தையை மிரட்டுவது போல  கூறினான் சக்தி. 

“சும்மா இருடா” என சக்தியை அதட்டிய அனுசுயா, “ஏங்க நீங்க எனக்கு எழுதின எல்லா கடுதாசியும் கிடைச்சுட்டுங்க” என உற்சாகமாய் வீரவேலிடம் கூற, அசடு வழிய நின்றார் வீரவேல்.

“வாடா இதுக்கு மேல இந்த சீன்ல நம்ம நிக்கக்கூடாது” எனக்கூறி சக்தியை அங்கிருந்து அழைத்துச் சென்றான் குரு.

ஊரில் இருந்த வயதான பெரியவர்கள் பலரிடம் விசாரித்தாயிற்று. பலன்தான் இல்லை. தேவியின் இறப்பு மர்மமாகவே இருந்தது.

வீட்டிற்கு வந்த சக்தி ஆசையாக அவளிடம் அந்த மரப்பாச்சி பொம்மையை கொடுக்க, வாங்கிப் பார்த்தவள் “ரொம்ப அழகா இருக்கு, ஏது?” எனக் கேட்டாள்.

சக்தி அந்த பொம்மை கிடைத்த கதையைக் கூற, “ஃபீல் பண்ணாதீங்க சத்தி. என்னோட உள்ளுணர்வு சொல்லுது. சீக்கிரமே நமக்கு ஏதாவது க்ளு கிடைக்கப் போகுது பாருங்க” என்றாள்.

“அப்படியே உன் உள்ளுணர்வுகிட்ட இன்னொன்னும் கேட்டு சொல்லு” என்றான்.

“என்ன?”

“இந்த மாமனோட மனசறிஞ்சு நீ என்னைக்கு நடந்துக்குவன்னு”

“மாமா அவரோட மாமன் பொண்ணு சொன்னதை செஞ்சு முடிக்கவும், எல்லாம் அவர் ஆசைப்படி நடக்கும்னு உள்ளுணர்வு சொல்லுது” என்றாள்.

“இதெல்லாம் ஓவர். முன்னேயெல்லாம் நைட் படுத்தா உடனே தூக்கம் வரும். இப்ப எல்லாம் ஒரே ஃபீலிங்ஸா இருக்கு. தூக்கமே வர மாட்டேங்குது டி” என்றான் சக்தி.

“எப்ப பாரு இதே நினைப்புதானா உங்களுக்கு?”

“புதுசா கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணாம இருந்தா இந்த நினைப்புதான் இருக்கும்” என்றான்.

“இந்த பொம்மை பார்க்க ரொம்ப அழகா இருக்கு” என பேச்சை மாற்றினாள் மது.

“உன் புருஷன் நான் காஞ்சிப் போய்க் கிடக்கேன்னு சொல்றேன். நீ உன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குன்னு பேசுறியா?” என்றான் சக்தி.

“சுகன்யாவுக்கு கல்யாணம் ஆகட்டும்” என்றாள் மது.

“நீ சொல்றது பைத்தியக்காரத்தனமா இருக்கு. அவ எப்படி உடனே கல்யாணம் பண்ணிக்குவா? அவளுக்கு கல்யாணம் ஆக ஒரு வருஷமாவது ஆகும்ன்னு வச்சுக்கோ… அதுவரைக்கும் நாம பிரிஞ்சே இருக்கணுமா?” என கடுப்பாகக் கேட்டான்.

“நாம சேர்ந்துதான் இருக்கோம். எங்க பிரிஞ்சி இருக்கோம்?” எனக் கேட்டாள் மது.

“இதுக்கு மேல உன்கிட்ட கெஞ்ச முடியாது, போடி. ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் சம்மதமாவது மண்ணாவதுன்னு மாமா அதிரடியா இறங்க போறேன். ஐயோ இதுக்கு நாமளே ஓகே சொல்லியிருக்கலாமேன்னு நீ ஃபீல் பண்ணப் போற” என்றான்.

“அப்படி எல்லாம் ஏதாவது பண்ணுனீங்க அப்புறம் காலம் முழுக்க நீங்க தனியா படுக்க வேண்டியதுதான்” என்றாள் மது.

“நடக்கிறது எல்லாம் வச்சு பார்த்தா எனக்கு என்னமோ இப்பவே அப்படித்தான் தோணுது”

“இப்படியெல்லாம் நம்பிக்கை இழக்கக்கூடாது முறைப்பையா. உங்களால முடியும்” என மது அவன் கன்னங்களை பிடித்து கிள்ளிக் கொண்டே கூற,

“போடி… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நமக்குள்ள ஏதாவது பிரச்சனைன்னு நீ தள்ளிப் போனா நான் சரின்னு வெயிட் பண்ணுவேன். நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசார விரும்புறோம். நமக்குள்ள தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. மூணாவதா ஒரு ஆளை காமிச்சு, நீ என்னை தள்ளி வைக்கிறது எனக்கு பிடிக்கலை” என சலித்துக் கொண்டான் சக்தி.

“எனக்கு கில்டியா இருக்கு சக்தி. கொஞ்சம் புரிஞ்சுக்குங்க” என்றாள் மது.

“நீ மட்டும் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கற. நான் மட்டும் உன்னை புரிஞ்சுக்கணுமா? போடி” என சிறு பிள்ளை போல கூறிவிட்டு உள்ளே சென்றான் சக்தி.

இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் முற்றத்தில் அமர்ந்திருந்தனர்.

“சக்தி என்னோட பாட்டியோட நினைவு தினம் வருது. அதுக்காக திருப்பி மெடிகல் கேம்ப் போடப் போறாங்களாம். எங்க போடலாம்னு என்கிட்டயும் அப்பா கேட்டார்” என்றாள் மது.

“இங்க வரச் சொல்லேன்” என்றான் சக்தி.

“இப்பதான திருவாரூர்ல கேம்ப் போட்டாங்க”

“போட்டாங்க ஆனா நம்ம ஊர்ல இருந்தும், சுத்தியிருக்குற மத்த கிராமங்களிலிருந்தும் எத்தனை பேர் பயனடைஞ்சாங்க? நீங்க போடுற கேம்ப் உண்மையிலேயே பயனளிக்கனும்னா இது மாதிரி கிராமங்களில் போட்டாதானே சரியா இருக்கும்” என கேட்டான்.

“நீங்க சொல்றது கரெக்ட்தான், ஆனா அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியலையே”

“உன் அப்பாகிட்ட சொல்லி பேச சொல்லு. முடியாதுன்னு சொன்னா நாலு போட்டு அழைச்சிட்டு வரச் சொல்லு” என்றான்.

“என்ன சக்தி இது? அவங்களுக்குள்ள ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங், ஒத்து வரல. அதுக்காக என் அப்பா பேச்ச அம்மா கேக்கலைன்னா அடிக்க சொல்வீங்களா? டூ பேட். நான் கூட உங்க பேச்சை கேக்கலைன்னா அடிப்பீங்களா?” என கோபமாக கேட்டாள் மது.

“நீ இப்ப மட்டும் என் பேச்சை கேட்கிறியா என்ன?” என அவளது கன்னத்தை வருடிக் கொண்டே கேட்க, அவனது கையை தட்டி விட்டவள், “எப்படி நீங்க என் அம்மாவை அடிக்க சொல்லி சொல்லலாம்?” என சிலிர்த்துக் கொண்டு நின்றாள்.

“ஏய் ஏதோ ஒரு ஃபுளோல வந்துட்டு, விடுடி” என்றான்.

“அது எப்படி ஃப்ளோல வரும்? உங்க மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்க போய்தானே இப்படியெல்லாம் பேசுறீங்க? அப்போ நீங்களும் என்னை அடிப்பீங்க அப்படிதானே” என்றாள் மது.

சிரித்த சக்தி “ஆமாம்டி… ஆமாம். நீயும் என் பேச்சை கேட்கலைன்னா நாலு போடுவேன்தான். எப்படி தெரியுமா இப்படி…” என அவளது கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு இதழ்களை நோக்கி செல்ல, “நல்லா சமாளிக்கிறீங்க தள்ளிப் போங்க” என்றாள் மது.

“முத்தத்தைப் பத்தி அன்னைக்கு பெரிய கிளாஸ் எல்லாம் எடுத்த? புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரும்போது இப்படி முத்தம் கொடுத்துட்டா சண்டை எல்லாம் சரியா போயிடும் தெரியுமா?” எனக் கேட்டான் சக்தி.

“அது மட்டும் இல்லை. ஸ்ட்ரெஸ் குறையும். கொலஸ்ட்ரால் லெவல் கூட குறையும்” என்றாள் மது.

“இதெல்லாம் நல்லாதான் சொல்ற, அப்புறம் ஏன் வேணாம்னு சொல்ற?”

“நான் எங்க வேணாம்னு சொன்னேன். நீங்க பேச்சை மாத்தி நல்லா சமாளிக்கிறீங்கன்னுதான் சொன்னேன்” என்றாள் மது.

“அப்போ கொடுக்கவா” என சக்தி கேட்க, “போயா மாங்கா மடையா” என கூறிய மது, எழுந்து அவள் அறைக்கு சென்றாள்.

“என்னடி பொசுக்குன்னு எழுந்து போயிட்ட?”

“நான் சான்ஸ் கொடுத்தேன், உங்களுக்கு யூஸ் பண்ணிக்க தெரியலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” எனக் கூறி கதவை அடைத்துக் கொண்டாள்.

“டேய் சக்தி, கிடைச்ச சான்சை இப்படி மிஸ் பண்ணிட்டியேடா” என அவனுக்கு அவனே கேட்டுக்கொண்டு முற்றத்தில் படுத்துக்கொண்டான்.