வானவில் கோலங்கள்-15

அத்தியாயம் 15

மதுமிதா சிகிச்சையகத்தில் அமர்ந்திருக்க, அவளுடைய அக்கா மயூரி அழைத்தாள். முதலில் திட்டியவள் பின் மதுவின் விளக்கத்திற்கு பின் மதுவை புரிந்து கொண்டாள்.

“என்னை டாடி ரொம்ப தப்பா நினைச்சுட்டார்” என்றாள் மது.

“அப்பாவைப் பத்தி உனக்கு தெரியாதா? அவரோட கோவம் எல்லாம் எத்தனை நாளைக்கு? கிளம்பும்போது உன்கிட்ட பேசிட்டுதானே வந்தார். அம்மாவுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும், அவ்வளவுதான். உன்கிட்ட பேசாம எல்லாம் இருக்க முடியாது. அவங்களுக்கு நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டது கோவம் இல்லை. அந்த வில்லேஜ்ல எப்படி இருக்கப் போறேன்னுதான் ரொம்ப ஃபீல் பண்றாங்க. நீ அங்க சந்தோஷமாதான் இருக்கன்னு தெரிஞ்சா அவங்களும் ஹாப்பி ஆயிடுவாங்க” என ஆறுதலாக பேசினாள்.

“ம்…ம்…” என கேட்டுக் கொண்டாள் மது.

“இருந்தாலும் நீயும் அப்பாவும் பெரிய கேடிங்கதான் என்கிட்ட கூட சொல்லலை. சரி விடு, உன் வீட்டுக்காரர் எப்படி? உங்க கல்யாண ஃபோட்டோஸ் அனுப்பு” என்றாள் மயூரி.

“என் வீட்டுக்காரர் ரொம்ப நல்லவர். என்னை நல்லா பார்த்துக்கிறார். கல்யாண ஃபோட்டோ எல்லாம் இல்லை மயூரி. அன்னைக்கு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கணும்னு கூட தோணலை” என சோகமாக கூறினாள்.

“என்னடி நீ? ஒரு செல்ஃபி கூட எடுத்துக்கலையா? சரி விடு. உன் ஹஸ்பெண்ட்ட இங்க கூட்டிட்டு வா. ஒரு ஃபோட்டோ ஷூட்டே பண்ணிடலாம்” என்றாள். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தனர்.

மணிமேகலை சுகன்யாவை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.

“வாங்க” என்றாள் மது.

“போடி, போய் கையை காட்டு” என்றார் மணிமேகலை.

சுகன்யாவை உட்காரச் சொன்ன மது, “என்னாச்சு சுகன்யா?” எனக் கேட்டாள்.

“ரொம்ப வலிக்குது” என்றாள்.

“டேப்லெட் எல்லாம் ஒழுங்கா போட்டியா?”

“போட்டேன், இருந்தும் வலி குறையலை” என்றாள்.

தன் தாய்க்கு அழைத்தாள் மது. அவர் எடுக்கவில்லை. உடனே தன் தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூற, சிறிது நேரத்தில் அவரே அழைப்பதாக கூறி வைத்து விட்டார்.

மீண்டும் பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வந்தது. கான்ஃபரன்ஸ் அழைப்பில் வைத்தவர் “உன் அம்மா இருக்கா பேசு” என்றார்.

“அம்மா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள் மது.

“உங்க பொண்ணு சுகன்யா ட்ரீட்மென்ட் சம்பந்தமா பேசணும்னு சொன்னதாலதான் நான் லைனுக்கு வந்தேன். அதை மட்டும் பேச சொல்லுங்க” என்றார் சுஜாதா.

கலங்கிய கண்களை துடைத்து விட்டு குரலை செருமி “சுகன்யாவுக்கு டேப்லெட்ஸ் போட்டும் வலிக்குதாம்” என சொன்னாள்.

“அது ரொம்ப சென்சிடிவ் ஏரியா. கைக்கு அசைவு கொடுக்க வேண்டாம்னு சொல்லு. ஆர்ம் ஸ்லிங்க் போட்டுவிடு. வேற டேப்லெட்ஸ் வேண்டாம். இப்ப மட்டும் பெயின் கில்லர் இன்ஜெக்ஷன் போடு” எனக் கூறி வைத்து விட்டார்.

“நீ பாரும்மா. நான் அப்புறம் பேசுறேன்” எனக்கூறி பிரபாகரனும் வைத்துவிட்டார். சுஜாதா கூறிய படியே செய்தாள் மது.

“என்னம்மா இது கைய தொட்டில்ல போட்டு வச்சுட்ட” எனக்கேட்டார் மணிமேகலை.

“அப்பதான் கைக்கு அசைவு இல்லாம இருக்கும். வலி குறையும்” என்றாள் மது.

“என்னமோ அன்னைக்கு உன் அம்மா தெய்வம் மாதிரி வந்து என் பொண்ணை காப்பாத்தி கொடுத்துட்டாங்க” என்றார் மணிமேகலை. மது அவரைப் பார்த்து லேசாக சிரித்து விட்டு, சுகன்யாவை பார்த்தாள். மதுக்கு மனதை பிசைவது போல இருந்தது.

“மாமா மேல எந்த தப்பும் இல்லை. என் மேல தான் தப்பு. நான்தான் ஏதேதோ நினைச்சுகிட்டு…” என கூறும் பொழுதே சுகன்யா அழுது விட, மணிமேகலையும் கண் கலங்கிப் போய் அமர்ந்திருந்தார். மதுவுக்கு என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை.

“அழாத சுகன்யா” என்று மட்டும் சொன்னாள்.

கண்களைத் துடைத்துக் கொண்ட சுகன்யா, “உங்க அம்மாவுக்கு தேங்க்ஸ் கூட சொல்லலை. சொல்லிடுறீங்களா?” எனக் கேட்டாள்.

“நீயே பேசுறியா?” எனக் கேட்டாள் மது.

“என்கிட்ட பேசுவாங்களா?”

“அம்மா எப்பவும் அவங்க பேஷன்ட்ஸ்க்கு நம்பர் கொடுத்திருப்பாங்க. அந்த நம்பருக்கு கூப்பிட்டா கண்டிப்பா அட்டென்ட் பண்ணி பேசுவாங்க. உன் ஃபோனை கொடு” என்றாள் மது.

சுகன்யா கொடுக்க சுஜாதாவின் எண்ணிற்கு அழைத்து ஒலிபெருக்கி பயன்பாட்டில் வைத்து தந்தாள். சுஜாதாவும் தன் நோயாளி யாரோ என நினைத்து எடுத்தார். தன்னை அறிமுகம் செய்து கொண்ட சுகன்யா நன்றி உரைத்தாள். ஒலிபெருக்கி பயன்முறையில் இருந்தது தெரியாத சுஜாதா,

“பாரு சுகன்யா தெரிஞ்சோ தெரியாமலோ உன் மனசு கஷ்டப்பட என் பொண்ணு காரணமாயிட்டா. நீ மனசால அவளுக்கு எந்த சாபமும் கொடுத்துடாதே. அவளுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவ நல்லா இருக்கணும்” என்றார். கேட்டுக்கொண்டிருந்த மதுவுக்கு அழுகை வந்துவிட்டது.

“ஐயையோ அப்படியெல்லாம் நான் நினைக்கலை மேடம். மது மேடம் மாமா கூட நல்லா இருப்பாங்க” என்றாள்.

“தேங்க்ஸ் சுகன்யா, உனக்கு என்ன உதவி வேனும்னாலும் என்கிட்ட கேளு” எனக் கூறி வைத்து விட்டார்.

கண்களைத் துடைத்துக் கொண்ட மது, சுகன்யாவை பார்த்து சிரிக்க அவளும் மெல்ல சிரித்தாள். பார்த்துக்கொண்டிருந்த மணிமேகலை, “என் மேலதான் தப்பு. தேவையில்லாம என் பொண்ணு மனசுல ஆசைய விதைச்சு அவளை இந்த கதிக்கு ஆளாக்கிட்டேன்” என தன்னையே நொந்து கொண்டவர், “வா போகலாம்” என சுகன்யாவை அழைத்துச் சென்றார்.

‘கடவுளே இந்தப் பெண்ணுக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விடு’ என மனதார வேண்டிக் கொண்டாள் மது.

மதியம் சாப்பாட்டிற்காக சக்தி வீட்டுக்கு வந்தபோது மது ஏற்கனவே வீட்டில் இருந்தாள். காலையில் கிளம்பும் போது இருந்த தெளிவு மறைந்து சோர்வாக காணப்பட்டாள் மது.

“என்னடி காலையில நல்லாதானே இருந்த? இப்போ என்னாச்சு” எனக் கேட்டான் சக்தி.

“ஒன்னும் இல்ல, நீங்க கை கால் கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம்” என குரலிலும் சுரத்தின்றி கூறினாள்.

அவளைப் பார்த்துக்கொண்டே பின்னால் சென்று கைகால் கழுவிக் கொண்டு வந்தவன், துண்டால் முகத்தை துடைத்து அவளது தோளில் போட்டான். அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அவள் முகத்தை தன் கையால் தன்னை பார்க்க திருப்பியவன்,

“என்னடி…?” எனக் கேட்டான்.

“மனசு சரியில்லை” என்றாள்.

“நான் சரி பண்ணவா?” என்றான்.

“சும்மா விளையாடாதீங்க, வந்து சாப்பிடுங்க”

“ஏன் மனசு சரி இல்லை? சொல்லு, அப்புறம் சாப்பிடலாம்” என்றான்.

சுகன்யா சிகிச்சையகம் வந்ததையும் அவளிடம் பேசியதையும் தன் அன்னையுடன் சுகன்யா பேசியதையும் கூறினாள்.

“எல்லாம் நல்ல விஷயம்தானே. சுகன்யா சீக்கிரம் தெளிஞ்சுடுவா. உன் அம்மா கூட நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க. இதுல மனசு கஷ்டப்பட என்ன இருக்கு?” எனக் கேட்டான்.

“என்ன இருந்தாலும் சுகன்யா பாவம்தானே? ரெண்டு மாசம் பழகின நீங்க எனக்கு கிடைக்க மாட்டீங்கன்னு பயந்து எவ்வளவு கஷ்டப்பட்டேன்? சின்ன வயசில் இருந்து உங்களையே நெனச்சுக்கிட்டு இப்ப நீங்க கிடைக்கலைன்னா எவ்ளோ கஷ்டப்படுவா?”

“உங்களுக்காக உயிரையே விட துணிஞ்சிருக்கானா உங்க மேல எவ்ளோ ஆசை இருக்கணும்? என்னாலதான் அவளுக்கு இந்த கஷ்டம்? அதே மாதிரி அம்மாவும் என் மேல எவ்வளவு கோபம் இருந்தாலும் நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா நான் என்ன பண்ணினேன்… அவங்க கஷ்டப்படுற மாதிரி அவங்களுக்கே தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மதுவின் கண்ணீரை துடைத்து விட்டவன், “ஆ… ஊ ன்னா டேமை திறந்து விடாதே. சுகன்யாவோட கஷ்டத்துக்கு நீயோ நானோ பொறுப்பில்லை. சின்ன வயசிலேர்ந்தே ஏன் அவ அம்மா என்னை கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொல்லச் சொல்லி வளர்க்கணும்? அவங்கதான் அவ கஷ்டத்துக்கு காரணம். காதலிக்கிறது தப்பில்லை. நீயும் என்னை காதலிச்ச. ஏன்… உங்க அம்மாவே காதல் கல்யாணம்தான் பண்ணிக்கிட்டாங்க. அவங்களுக்கு தெரியாம நீ ஒன்னும் என்னை கல்யாணம் பண்ணிக்கல. யாருக்கும் தெரியாம நான்தானே உன்னை கல்யாணம் கட்டிக்கிட்டேன். அதனால நீ எந்த தப்பும் பண்ணல. சும்மா புலம்பாம அடுத்தது என்னன்னு பாரு” என்றான்.

அவன் பேசிய பிறகு மதுவும் தன் குற்ற உணர்ச்சியில் இருந்து கொஞ்சம் வெளி வந்தாள். மனது தெளிந்தது. “சாப்பிடலாம் வாங்க” என்றாள்.

மேசையில் இருந்த காரக்குழம்பை பார்த்துவிட்டு, சக்தி குறும்பாய் சிரிக்க, மது நல்லெண்ணெய் குப்பியையும், நெய் டப்பாவையும் எடுத்து வைத்தாள்.

“இதெல்லாம் எதுக்கு?” எனக் கேட்டான் சக்தி.

“குழம்புல நல்லெண்ணெய் சேர்த்தா காரம் குறையும். அப்படியும் உரைச்சா நெய் யூஸ் பண்ணுக்கிறேன்” என்றாள்.

“உன்னோட மாமா நான் இருக்கும் போது இதெல்லாம் எதுக்குடி?” என மையலாய் சக்தி கேட்க,

“ஒழுங்கா சாப்பிடுங்க” என மிரட்டினாள் மது. அதற்கு மேல் எதுவும் வம்பு செய்யாமல் சக்தி சாப்பிட மதுவும் சாப்பிட்டு முடித்தாள்.

“அதான் ஒன்னும் இல்லைன்னு ஆகிப்போச்சு. உனக்கு காரம் பழக்குறேன்கிற பேர்ல கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அது உனக்கு பொறுக்கலையாடி?” எனக் கேட்டான் சக்தி. அவனைப் பார்த்து மது முறைக்க, “அப்பப்பா ஒரு முத்தத்துக்கு என்ன போராட்டம்?” என்றான்.

“அது என்ன ஒரு முத்தம்ன்னு அவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க? ஒரு முத்தம் கொடுக்கணும்னா நம்ம முகத்துல இருக்கிற 34 ஃபேஷியல் தசைகளும், 112 போஸ்டுயுரல் தசைகளும் ஒருங்கிணைஞ்சு ஈடுபடனும். தெரியுமா?” என பாடம் எடுத்தாள் மது.

மதுவை பார்த்து முறைத்த சக்தி, “விளக்கம் எல்லாம் நல்லாதான் இருக்கு. நீ சொல்ற தசையெல்லாம் என்கிட்ட எவ்ளோ வேணும்னாலும் வேலை செய்ய ரெடியா இருக்கேன்னு சொல்லுது. நீயும் அப்பப்ப வேலை கொடுக்கணும் மது. இல்லைனா பின்னாடி மக்கர் பண்ண போகுது” எனக்கூறி சக்தி நெருங்கி வர, சக்தியை தன் கை கொண்டு தடுத்தவள், “இன்னைக்கு காலையிலேயே ரொம்ப வேலை பார்த்தாச்சு” என்றாள்.

“காலையில சாப்பிட்டா மதியமும் பசிக்குதா இல்லையா? இதை சொன்னேன்னா இதுக்கு ஒரு கிளாஸ் எடுப்ப. போனா போகுதுன்னு உன்னை கொஞ்சம் விட்டு பிடிக்கிறேன்” என பெருந்தன்மையாய் கூறியவன், “வேலை கிடக்கு. நான் கிளம்புறேன்” எனக்கூறி கிளம்பினான்.

“உடனே கிளம்புறீங்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாம்” என்றாள் மது.

“நான் இங்க இருந்தேன்னா சும்மா இருக்க மாட்டேன் பரவாயில்லையா?” என அவளைப் பார்த்து கேட்டு, அவளை கொஞ்சம் வெறுப்பேற்றி, பின் விளையாட்டை கைவிட்டு, “இல்லை மது. நான் போய் நின்னாதான் அங்க வேலை நடக்கும். முடிச்சிட்டு வந்துடுறேன்” எனக் கூறி சென்று விட்டான்.

மது தன் மடிக்கணினியை எடுத்து வைத்து ஏதாவது படம் பார்க்கலாம் என நினைத்தாள். ஆனால் மனம் எதிலும் லயிக்கவில்லை. தேவி அத்தை இறந்த காரணத்தை கண்டு பிடிக்கிறேன் என சக்தி கூறினாலும் அதற்காக எதுவும் செய்யவில்லை என நினைத்து, தானே களத்தில் இறங்க வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டாள். எப்படி செயல்படுத்துவது என்றுதான் அவளுக்கு தெரியவில்லை.

மடிக்கணினியில் பாடல்களை ஒலிர விட்டு சக்தி எடுத்து வந்திருந்த பையிலிருந்த அவனது துணிகளை எடுத்து அடுக்கி வைத்தாள். பொன்னுத்தாயும் வந்துவிட்டார்.

“தாயம்மா இன்னைக்கு நீங்க சமைக்க வேண்டாம். நானே சமைச்சுக்குறேன்” என்றாள்.

“ஏன் தாயி இன்னைக்கு சாப்பாடு காரமா இருந்துச்சுன்னு எம்மேல வெசனமா?” எனக்கேட்டார் பொன்னுத்தாயி.

“கொஞ்சம் காரமா…?” என பொன்னுத்தாயை முறைத்தவள் “அதுக்காக சொல்லல, எனக்கு போரடிக்குது. அதான் நானே சமைக்கிறேன். நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு பாத்திரத்தை மட்டும் கழுவி வச்சிடுங்க” என்றாள் மது.

கோதுமை மாவிலேயே பரோட்டாவும் அதற்கு குருமாவும் செய்தாள். கேரட் அல்வாவும் செய்தாள். அவள் நேர்த்தியாக சமைப்பதை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார் பொன்னுத்தாயி.

“என்னமா சமைக்கிறீங்க? கமகமன்னு வர வாசமே சொல்லுதே… சாப்பாடு நல்லாருக்கும்னு. சக்தி தம்பி கொடுத்து வச்சதுதான்”

“ஓஹோ… பொண்டாட்டி நல்லா சமைச்சா புருஷன் கொடுத்துவச்சவரா?” எனக் கேட்டாள் மது.

“சமைச்சு போடுறது மட்டுமா? வீட்டை சுத்தமா வச்சிக்கிறது, புருஷன அனுசரிச்சு போறது, புருஷன் மனம் கோணாம நடந்துக்கிறது, பிள்ளைகளை பார்த்துக்கிறது எல்லாம்தான்” என்றார் பொன்னுதாயி.

பொன்னுத்தாயின் பதிலை கேட்டு சிரித்த மது, “என்ன படிச்சிருக்கீங்க?” எனக் கேட்டாள்.

“நான் என்னத்த படிச்சேன்? பள்ளிக்கூடம் பக்கம் எல்லாம் நான் போனதில்லீங்க. கண்ணாலத்துக்கு முன்னாடி காட்டு வேலைக்கு போனேன். 16 வயசிலேயே கண்ணாலம் பண்ணி வச்சிட்டாங்க. வாக்கப்பட்டு இந்த ஊருக்கு வந்தேன். இங்கயும் கஷ்ட சீவனம்தான். சக்தி தம்பி வீட்டுக்குதான் வேலைக்கு போனேன். எப்படியோ என் பொண்ண கரை சேர்த்துட்டேன். அவரும் போய் சேர்ந்துட்டாரு” என்றார்.

“நீங்க சக்தி வீட்டுக்கா வேலைக்கு போனீங்க?” எனக் கேட்டாள் மது.

“ஆத்தி… புருஷன் பேரை இப்படி தலையில அடிச்சமாதிரி சொல்லலாமா…? அப்படி சொல்லாதீங்க” என்றார் பொன்னுத்தாயி.

கை வேலையை விட்டுவிட்டு ஒரு நொடி கண்களை மூடி சிரித்த மது, “சரி என் வீட்டுக்காரர் வீட்டுக்கா வேலைக்கு போனீங்க?” எனக் கேட்டாள்.

“ஆமாம்”

“இப்ப போறதில்லையா?”

“எனக்கு கண்ணாலம் ஆன புதுசுல போனேன். தேவியம்மா செத்துப் போகவும் எனக்கு அங்க போக பயமாயிடுச்சு. ஒருநாள் பயத்தில காய்ச்சல் வந்துருச்சு. என் வூட்டுக்காரர் பயந்துகிட்டு வேலைக்கு போக வேணாம்னு நிறுத்திட்டார். அப்புறம் அவ்வோ காட்டுக்கே வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன். நீங்க வரவும் என்னை தம்பி இங்கே வேலைக்கு வர சொல்லிட்டு” என்றாள்.

“உங்களுக்கு தேவி அத்தையை தெரியுமா?” எனக் கேட்டாள் மது.

“நல்லா தெரியும், ஆனா அவுக உங்க அத்தை முறையில்ல, உங்களுக்கு சின்னம்மா முறை. ஹ்ம்ம்… அவ்வோ செத்தத என்னால நம்பவே முடியலை” என்றார் பொன்னுத்தாயி.

“அவங்களை பத்தி உங்களுக்கு என்னென்ன தெரியும்? சொல்லுங்க“

“ரொம்ப தங்கமான பொண்ணு. எப்ப என்னைப் பாத்தாலும் சிரிக்கும். சாப்பிட்டியான்னு கேட்கும். ரொம்ப அழகு…. ம்… ஆசை நிறைவேறாம அல்பாயுசுல செத்துப்போச்சு” என்றார் பொன்னுத்தாயி.

“வேற என்ன தெரியும்?”

“வேறன்னா?”

“ம்… அவங்களுக்கு யாராவது ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களா?”

யோசித்த பொன்னுத்தாயி, “அவ்வோ கூட படிச்ச பொண்ணு ஒன்னு இருந்துச்சு. பேரு மறந்து போச்சு. அது கூட எப்பவும் வெள்ளி செவ்வா கோயிலுக்கு போவாங்க. அந்த பொண்ணும் அப்பப்ப தேவியம்மாவ பார்க்க இங்க வரும்” என்றார்.

“அவங்க பேர் என்ன?”

“அது…” என தலையைச் சொரிந்த பொன்னுத்தாயி “மறந்து போச்சு” என்றார்.

“சரி உங்களுக்கு தேவியை பத்தி வேற என்ன நினைவு வந்தாலும் என்கிட்ட சொல்லணும். சரியா?” எனக் கேட்டாள் மது

சரியென பொன்னுத்தாயி கூற, தான் செய்த உணவில் அவருக்கும் சாப்பிட கொடுக்க, மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சக்தியிடம் அலைபேசி மூலமாக மது இந்த விஷயத்தைத் தெரிவிக்க, அவனும் தன் அன்னையிடம் கேட்பதாக கூறி வைத்து விட்டான்.

அனுசுயாவுக்கு அழைத்து சக்தி கேட்க, முதலில் யோசித்தவர் நினைவு வந்தவராய், “வனஜான்னு தேவிக்கு ஒரு சினேகிதப் பொண்ணு இருந்துச்சு” என்றார்.

“வனஜாவா…? எனக்கு தெரியாம நம்ம ஊருல யாரும்மா அது?” எனக் கேட்டான் சக்தி.

“தேவி சாவுக்கு முன்னாடியே அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி அது புருஷன் ஊருக்கு போய்ட்டு. அது அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு. அவங்களும் அப்பவே செத்துப் போக, அப்புறம் இங்கே வர்றதே இல்லை” என்றார் அனுசுயா.

“எந்த ஊர்ல கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க?”

“அந்த விவரம் எல்லாம் எனக்கு தெரியாதுடா”

“போம்மா எது கேட்டாலும், ஒழுங்காவே பதில் சொல்ல மாட்டேங்குற. நானும் என் பொண்டாட்டியும் நம்ம வீட்டுக்கு வரணும்னு எண்ணம் இருக்குதா இல்லையா உனக்கு?”

“எனக்கு தெரிஞ்சாதானேடா சொல்ல முடியும்?” என அனுசுயா கேட்க, சரியென்று வைத்துவிட்டான் சக்தி.

என்ன செய்யலாம் என யோசித்தான். ‘தாத்தாவுக்கு விவரம் தெரியலாம். என்னை பார்த்தாலே மூஞ்சியை திருப்பிக்கிட்டு போறார். எப்படி அவர்கிட்ட கேட்க முடியும்?’ என யோசித்தான்.

வேலை முடியும்வரை காத்திருந்தவன், முடிந்ததும் ஊரிலேயே வயதில் மூத்த பெரியவரை பார்க்க சென்றான். அவரிடம் விசாரித்து வனஜா எந்த ஊரில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டான்.

ஊர் பெரியவர் தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயரை சொல்லி அங்குதான் வனஜாவை திருமணம் செய்து கொடுத்ததாக கூறியிருந்தார். நாளைக்கே சென்று விசாரிக்க வேண்டும் என நினைத்தவனாய் வீட்டிற்கு கிளம்பினான்.