காலையில் கண் விழித்தவன் ஓய்வரை சென்று வந்தான். முகம் மட்டும் கழுவிவர, மதுவும் எழுந்திருந்தாள்.
“நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் மது. மாத்து துணி கூட இல்லை, எடுத்துட்டு வர்றேன்” என்றான்.
“யார்கிட்டயும் எதுவும் கோவமா பேசிடாதீங்க” என்றாள்.
“நான் கோவமா பேசுறதா? அங்க இருக்கிற பெருசுங்க எல்லாம் என்னை முதல்ல வீட்டுக்குள்ள விடுதான்னு பார்ப்போம்” என கூறி சென்று விட்டான்.
வீட்டிற்கு வெளியில் இருந்த இரும்பு கதவை திறந்து கொண்டு சக்தி உள்ளே செல்ல, அனுசுயா வெளியில்தான் நின்றிருந்தார். சக்தியை பார்த்ததும் ஓடி வந்தார்.
“என்னம்மா நிலவரம் எப்படி இருக்கு?” எனக் கேட்டான் சக்தி.
“உன் தாத்தாவும் அப்பாவும் ரொம்ப கோவத்துல இருக்காங்க. உன் அப்பத்தா ஒரே ஒப்பாரிதான். வளர் அவ அம்மா வீட்டுல இருக்கா” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே குரு வெளியில் வந்தான்.
“என்னடா சக்தி உன் மாமனார் மாமியார் எல்லாம் ஊருக்கு அனுப்பி வச்சுட்டியா? என் மாமியார்தான் வில்லங்கம்ன்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். உன் மாமியார பார்த்ததுக்கு அப்புறமா என் மாமியார் எல்லாம் ஒன்னுமில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான்.
“அண்ணிய ஒன்னும் சொல்லாதடா” என அனுசுயா கூற, “பார்டா பாசம் பொங்குறத? என் மாமியார் கூட உனக்கு அண்ணிதானே. எத்தனை முறை நான் குறை சொல்லியிருப்பேன். ஏதாவது சொல்லியிருக்கியா? உன் அண்ணன் பொண்டாட்டின்னதும் சப்போர்ட் பண்றியா? உன் அண்ணன் அந்த அம்மா கூட எப்படித்தான் குடும்பம் பண்றாரோ?” என்றான் குரு.
“இவன் கிடக்கிறான், நீ சொல்லுடா. என் மருமக எப்படி இருக்கிறா?” எனக் கேட்டார் அனுசுயா.
“என் பொண்டாட்டிய மட்டும் உன் பொண்டாட்டி உன் பொண்டாட்டின்னு சொல்லிட்டு, அவன் பொண்டாட்டிய மட்டும் என் மருமகள்ன்னு சொல்லுறியா?” என மீண்டும் குரு சண்டைக்கு வர,
“அம்மா இவன்தான் என்னோட கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டான்னு அண்ணிகிட்ட சொல்லிட வேண்டியதுதான்” என சக்தி கூற, “டேய்…?” என அதிர்ந்தான் குரு.
சக்தியும் அனுசுயாவும் சிரிக்க, குருவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
“எம்மூட்டு பேத்தி செத்து பொழச்சுருக்கா. வெசனம் இல்லாம எல்லாரும் கூடிக் கூடி சிரிக்கிறாவோளே…. இத கேட்க ஒரு நாதி இல்லையா?” என உள்ளிருந்து அன்னபூரணியின் ஒப்பாரி குரல் கேட்க, “வயசானாலும் இந்த கிழவிக்கு காது மட்டும் ஷார்ப்பா இருக்கு டா” என்றான் குரு.
சிரிப்பை நிறுத்திய அனுசுயா “மது எப்படி இருக்குடா. அண்ணனும், அண்ணியும் ரொம்ப திட்டினாங்களா?” என விசாரித்தார்.
“ரொம்ப எல்லாம் திட்டலம்மா. உன் அண்ணன் மதுவை தப்பா நினைச்சுக்கிட்டார். உன் அண்ணி மதுகிட்ட பேசாம போய்ட்டாங்க. நேத்தெல்லாம் ஒரே அழுகை. அப்புறம் நைட் சரியாகிட்டா” என்றான் சக்தி.
“சக்தி கண்ணு உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன் டா. நேத்து நல்ல நாள் கிடையாதேடா” என அனுசுயா கவலையாக கூற,
என்ன பேசுகிறார்கள் என புரிந்து கொண்ட சக்தி, “அட ஏம்மா நீ வேற? அவ என்னை வீட்டைவிட்டு துரத்தாம விட்டதே பெருசு” என சலிப்பாக கூறினான்.
“ஏண்டா உன் மேல மதுவுக்கு விருப்பமில்லையா?” எனக் கேட்டார் அனுசுயா.
“எல்லாம் இருக்கு. என்னமோ இவளாலதான் சுகன்யா வாழ்க்கை பறிபோய்டுச்சுன்னு இவளுக்கு ஒரு எண்ணம். அதை விடு, தேவி அத்தை ஏன் செத்துப் போச்சு?” எனக் கேட்டான்.
“என்னடா தெரியாத மாதிரி கேக்குற? உன் மாமனார் கட்டிக்கிறேன்னு சொல்லி கடைசியில வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதான் அத்தை கிணத்துல விழுந்து செத்துப் போச்சு” என்றான் குரு.
இல்லடா” என்ற சக்தி பிரபாகரனின் கதையை கூறி முடிக்க, “நீ சொல்றத தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது சக்தி. எனக்கு தெரிஞ்சத ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன்” என்றார் அனுசுயா.
“சேச்சே… அப்படியெல்லாம் இருக்காதுடா. தேவி மணிமேகலை அண்ணி மாதிரி கிடையாது. ரொம்ப அமைதி” என்றார் அனுசுயா.
“ஏன் அமைதியா இருந்தா யாரையும் லவ் பண்ண மாட்டாங்களா?” என்றான் சக்தி.
“ஆமாண்டா கண்டிப்பா தேவி அத்தை யாரையாவது விரும்பியிருக்கணும். அவங்க ஏமாத்தினதால அத்தை சூசைட் பண்ணி செத்துப் போயிருக்கணும். அது யாருன்னு கண்டுபிடிக்கணும்” என்றான் குரு.
“என்னடா என்னென்னமோ சொல்றீங்க?” என அனுசுயா கேட்க,
“ம்மா நீ என்ன பண்றேன்னா… சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப எல்லாம் உன் மாமியார் வாயையும் உன் புருஷன் வாயையும் நல்லா கிளறு. ஏதாவது விஷயம் கிடைக்கும்” என்றான் சக்தி.
மலங்க மலங்க விழித்துக் கொண்டே அனுசுயா தலையை ஆட்ட, அவரது தோள்கள் இரண்டையும் கைகளால் பற்றி கொண்டவன், “முழிக்காதம்மா ஏதாவது பண்ணி என் வாழ்க்கையில விளக்கேத்தி வை” என சக்தி கூற குரு சிரித்தான்.
“நீ என்னடா சிரிக்கிற? உன் மச்சினிச்சிக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வை. உனக்கு புண்ணியமா போகட்டும். அப்பதான் மது சந்தோஷமா என்கூட குடும்பம் நடத்துவா” என குருவை பார்த்துக் கூறினான் சக்தி.
“ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு. பார்த்து ஏதாவது பண்றேன். நான் நெல்மூட்டை போட திருவாரூர் போறேன். இன்னைக்கு களை எடுக்கிறாங்க. போய் நின்னு பார்த்துக்க” என்றான் குரு.
“சரிடா” என்ற சக்தி அவனது அறைக்கு சென்று ஒரு பையில் தன் துணிகளை எடுத்துக் கொண்டு வெளியில் வர, தாத்தா நாற்காலியில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்தார்.
சக்தி தாத்தாவின் அருகில் செல்லவும், “என்கிட்ட எவனும் ஒரு வார்த்தை பேசக்கூடாது” என கடுமையாக சொல்லிவிட்டு உள்ளே எழுந்து சென்றார். சக்தி தனது அப்பத்தாவின் முகத்தை பார்க்க, அவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
அங்கே வந்த வீரவேல், “என்னடா… இங்க எதுக்கு வந்த?” எனக் கேட்டார்.
“ஏன் நம்ம வீட்டுக்கு நான் வரக்கூடாதா?” என்றான் சக்தி.
“உன் இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்சுட்டு இங்கே வரக்கூடாது” என்றார் வீரவேல்.
“மனசுக்கு புடிச்சவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அது தப்பா?” எனக் கேட்டான்.
“என் தங்கச்சி சாவுக்கு காரணமானவன் பொண்ணை கல்யாணம் பண்ணினது தப்புதான்” என்றார்.
“நீங்க மட்டும் அவரோட தங்கச்சி கூடதானே குடும்பம் பண்றீங்க? நான் மட்டும் அவர் பொண்ணை கட்டக் கூடாதா?” என்றான்.
“எதுக்கு எதை இணை கூட்டுறான். வெக்கம் கெட்ட பய” என்றவர் அங்கிருந்து சென்று விட்டார்.
சக்தி தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு தோப்பு வீட்டிற்கு வந்தான். பொன்னுத்தாயி சமைத்து முடித்து விட்டு அப்பொழுதுதான் சென்றிருந்தார். குளித்து முடித்து வந்த மது, “எதுவும் சண்டையாகிட்டா?” எனக் கேட்டாள்.
“இல்ல மது, நான் யாரையும் பார்க்கல. போனேன் துணியை எடுத்துகிட்டு அம்மாகிட்ட பேசிட்டு வந்துட்டேன்” என்றான். எல்லாவற்றையும் கூறி மதுவின் மனதை கஷ்டப்படுத்த சக்தி விரும்பவில்லை.
சக்தியும் குளிக்கச் சென்றான். குளித்து முடித்து இடுப்பில் ஒரு துண்டுடன் அறைக்குள் வந்தான். அதற்குள் மது தயாராகி இருந்தாள்.
“கொஞ்சம் கூட உங்களுக்கு வெட்கமே இல்லையா? நீங்க பாட்டுக்கு அறையும் குறையுமா திரயுறீங்க?” எனக் கேட்டாள்.
“நீ என் பொண்டாட்டிதானே உன் முன்னாடி எப்படி வேணும்னாலும் சுத்தலாம். அதுக்கு எதுக்குடி வெட்கப்படனும்?” என்றான்.
தலையில் அடித்துக் கொண்டவள் அவனைப் பார்த்துவிட்டு, “உங்க பாட்டி அன்னைக்கே சொன்னாங்கல்ல. இடுப்புல கயிறு கட்டியிருக்கணும்னு இன்னும் கட்டாம இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“கயிறு கட்டியிருக்கேன்டி. துண்டுக்கு மேலே எப்படி கயிறு கண்ணுக்கு தெரியும்? என் அப்பத்தா அறிவாளின்னா… நீ அதுக்கும் மேல இருக்க” என்றான்.
“கட்டியிருந்தீங்கன்னா சரி” என மது கூற, “ வேணும்னா வந்து செக் பண்ணிக்கோ” என்றான் சக்தி.
“ஒன்னும் வேண்டாம்” என்றாள் மது.
“ஒரு நாள் உனக்கு தெரியத்தானே போகுது” என கூறிக்கொண்டே சட்டையை போட்டவன் வேஷ்டியை கையில் எடுக்க மது வெளியே சென்று விட்டாள்.
இருவரும் அமர்ந்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். இட்லிக்கு காரச் சட்னியை தொட்டு ஒரு வாய் சாப்பிட்ட மது, “எத்தனை தடவைதான் இந்த தாயம்மாகிட்ட சொல்லுறது. ஒரே காரம்” எனக் கூறிக்கொண்டு தண்ணீரை எடுத்து பருகினாள்.
“இது என்ன காரம்? எல்லாம் சரியாத்தான் இருக்கு” என்றான் சக்தி.
“நீ சாப்பிடு, உனக்கு காரம் சாப்பிட நான் பழக்கி விடுறேன்” என்றான்.
“ எப்படி?” எனக் கேட்டாள் மது.
“சாப்பிடு” என்று அவனே ஒரு வாய் கொடுக்க, கண்கலங்க சாப்பிட்டாள்.
“ஷ்.. ஆ…உரைக்குது” என மது கூற, அடுத்த நொடி அவளது இதழ்களில் தன் இதழ்களை பொருத்தினான் சக்தி. சில நிமிடங்கள் கழித்து அவளிடமிருந்து விலகி “இப்ப உரைக்குதா?” எனக் கேட்டான்.
இல்லையென தலைகுனிந்த வண்ணம் மது தலையாட்ட, அடுத்த வாய் உணவை எடுத்துச் சென்றான். மது அவன் முகம் பார்க்க, “சாப்பிடுடி” என்றான்.
இப்படியாக அவளுக்கு ஊட்டி முடித்தவன், “சீக்கிரம் நீ எங்க ஊர் காரத்துக்கு பழகிடுவ” எனக் கூறினான்.
“ ட்ராகுலா” என அவனைப் பார்த்து கூறினாள் மது.
“ ட்ராகுலா கழுத்திலிருந்து தான் ரத்தத்தை உறிஞ்சும். நான் என்ன ட்ராகுலாவா?” எனக் கேட்டான் சக்தி.
“ஆமாம் காதல் ட்ராகுலா” என்றாள் மது.
“அது சரி…” என சிரித்தவன், “நீ கூட காதல் ரசகுல்லா தாண்டி” என அவள் இதழ்களை பார்த்துக்கொண்டே கூறினான்.
வெட்கத்தில் சிரித்த மது, “இனிமே தாயம்மா வரட்டும், மிளகாய்த்தூள் டப்பாவை ஒளிச்சு வச்சிடுறேன்” எனக் கூறி எழுந்து சென்றாள்.
சக்தி சாப்பிட்டு முடித்து, “நான் வயலுக்கு போறேன், மதியம் வர லேட்டாகிட்டுன்னா எனக்காக காத்துகிட்டு இல்லாமல் சாப்பிடு” என்றவன், “காரமா இருந்துச்சுன்னா வெயிட் பண்ணு நான் வந்து சாப்பிட வைக்கிறேன்” எனக் கூறி கண் சிமிட்டினான்.
“போதும் போதும் கிளம்புங்க” என்றாள் மது.
“ரொம்ப பண்ணாதடி, உனக்கும் பிடிச்சிருந்துச்சுதானே” எனக் கேட்டான்.
“இப்போ கிளம்ப போறீங்களா இல்லையா? “
“வா போற வழியிலே உன்னை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு போறேன்” என அவளையும் அழைத்துக்கொண்டு புல்லட்டில் விசில் அடித்துக் கொண்டே புறப்பட்டான்.
மதுவை பார்ப்பதற்காக மணிமேகலை சுகன்யாவை அழைத்து கொண்டு சிகிச்சையகம் கிளம்பிக் கொண்டிருந்தார்.