வானவில் கோலங்கள் -14(1)

அத்தியாயம்-14(1)

மதுவின் கோவமான பேச்சால் சக்தியும் கோவமடைந்து வெளியே சென்றுவிட, தனியாக வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்து அழுத மது சிறிது நேரத்தில் தெளிந்தாள். நேரம் மாலை 4 ஆகியிருக்க, மதுவுக்கு பசிக்க ஆரம்பித்தது. காலையிலேயே பொன்னுத்தாயி மதியத்திற்கும் சேர்த்தே சமைத்து விட்டுதான் சென்றிருந்தார்.

சாப்பிடலாம் என எழுந்தவள், ‘சக்திக்கும் பசிக்குமே, எங்கே சென்றிருப்பார்? வீட்டிலும் சேர்க்கலைன்னு சொன்னாரே… என்ன மது நீ… இப்படியா சத்திகிட்ட கோவப்படுவ?’ என தன்னையே நொந்து கொண்டவள் அவனுடைய எண்ணிற்கு அழைத்தாள்.

வீட்டிற்கு வெளியிலிருந்து அவனது கைப்பேசி ஒலிக்க, வெளியே சென்று பார்த்தாள். சாய்வு நாற்காலியில் அமர்ந்து சக்தி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க அவனது சட்டைப்பையிலிருந்து ஒலியெழுப்பிய கைப்பேசி ஓய்ந்து போனது. அவன் எழவே இல்லை.

‘எவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு? எப்படி தூங்குறது பாரு’ என மனதிற்குள் நினைத்தவள் அவன் தோளைத் தொட்டு அசைத்து எழுப்பினாள். கண் திறந்தவன் “என்னடி?” என்றான்.

“சாப்பிட வாங்க” என்றாள் மது.

“கோபம் போயிடுச்சா?” எனக்கேட்டான் சக்தி.

“கோபம் இருக்குதான். அதுக்காக சாப்பிடாம இருப்பீங்களா? வாங்க” என்றாள்.

எழுந்து கொண்டவன் ஓய்வறை சென்றான். மது சமையலறை சென்று பார்க்க, வத்தல் குழம்பும், முட்டைக்கோஸ் பொரியலும் இருந்தது. பொரியலில் வாடை வர அதை விட்டுவிட்டு சாதத்தையும், குழம்பை சூடு செய்து அதையும் எடுத்துவந்து கூடத்திலிருந்த சிறிய மேசையில் வைத்தாள்.

அவசரத்திற்கு அப்பளம் மட்டும் பொரித்து அதையும் எடுத்து வந்து வைத்தாள். ஒரு நாற்காலி மட்டுமே இருக்க, மது சுற்றும்முற்றும் பார்த்தாள். அதற்குள் வந்து விட்ட சக்தி அங்கிருந்த ஒரு ஸ்டூலை எடுத்து வந்து போட்டான்.

இரண்டு தட்டுகளை வைத்து தனக்கும் அவனுக்குமாய் பரிமாறி விட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள். சக்திக்கும் நல்ல பசி. அவனும் எதுவும் பேசாமல் சாப்பிட்டான். குழம்பு ஊற்றி கொஞ்சம் சாப்பிட்டவள், பின்னர் தயிர் போட்டு கொண்டு சாப்பிட்டு முடித்தாள். சக்தி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை மீண்டும் சமையலறையில் வைத்தவள் சக்தியிடம் ஒன்றும் கூறாமல் அவளது அறைக்கு சென்று விட்டாள்.

“கூப்பிட்டு சாப்பாடு போட்டுட்டு மூஞ்சிய திருப்பிக்கிட்டு போறத பாரு” என வெளிப்படையாக புலம்பினான் சக்தி.

“நீங்க பண்ணுன வேலைக்கு ஈன்னு இளச்சுகிட்டு பேசணுமா?” என திரும்பி நின்று கோபமாக கேட்டாள் மது.

“ஐயையோ கோட்டையெல்லாம் அழிச்சிட்டு திரும்பவும் ஃபர்ஸ்ட்லேர்ந்து போடுறியா? எனக்கு இதுக்கு மேல இன்னைக்கு தாங்க முடியாது” என்றவன் வெளியே சென்று சாய்வு நாற்காலியில் மீண்டும் அமர்ந்துகொண்டான்.

வெறுமனே கண்களை மூடி சாய்ந்து கொண்டான். மதுவுக்கும் அழுததில் கண்கள் எரிய அவளும் படுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.

அரை மணி நேரத்திற்கு மேல் ஆனதும் எழுந்துகொண்ட சக்தி மெதுவாக உள்ளே சென்று பார்த்தான். மது உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் படுத்திருந்த கட்டிலின் ஓரம் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளால் சக்திக்கும் மனம் என்னவோ போல் இருந்தாலும் ‘மது செல்லவில்லை. என்னை விட்டு இனி செல்லவும் மாட்டாள்’ என்ற நினைவு அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.

சுகன்யாவை பற்றியும் நினைத்துக்கொண்டான். அவள் மீது ஆர்வம் இல்லாவிட்டாலும் அத்தை மகள் என்ற அக்கறை இருந்தது. காலையில் அவள் செய்த செயலில் கோபம் வந்தாலும், ஒரு பக்கம் பாவமாக இருந்தது. இதற்கு காரணமான பெரியவர்கள் மீதும் கோவம் வந்தது.

முன்பே சுகன்யாவை சந்தித்து ‘தன்னுடைய எண்ணத்தை அவளிடமே தெளிவாக கூறியிருக்கலாமோ’ என நினைத்தவன் சில நாட்கள் சென்று அவளிடம் தெளிவாக பேசி, அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். வெளியில் யாரோ வரும் அரவம் கேட்க எழுந்து வந்து பார்த்தான். பொன்னுத்தாயிதான் வந்திருந்தார்.

“என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க?” எனக் கேட்டான்.

“சமைச்சு வச்சிட்டு பொழுதோட போயிடலாம்னுதான் சீக்கிரம் வந்துட்டேன்” என்றார் பொன்னுத்தாயி.

“சரி போங்க” என்றவன் கூடத்தில் வந்தமர்ந்து கொண்டான். ஒரு மணி நேரத்தில் பொன்னுத்தாயி சமைத்து விட்டு சென்றுவிட, மது எழுந்து வந்தாள்.

“தாயம்மா இன்னும் வரலையா?” எனக் கேட்டாள்.

“வந்துட்டு சமைச்சு வச்சிட்டு போய்ட்டாங்க” என்றான்.

“ஏன் போய்ட்டாங்க?”

“ஏன்னா…? வேலையை முடிச்சுட்டாங்க போய்ட்டாங்க”

“நைட் நான் எப்படி தனியா தூங்குறது?” என மது கேட்க, அவளைப் பார்த்து முறைத்தான்.

“நீ ஏன் தனியா தூங்கணும்? அதான் நான் இருக்கேனே” என்றான்.

“ஒன்னும் வேண்டாம். தாயம்மாவ வர சொல்லிட்டு நீங்க உங்க வீட்டுக்கு போங்க. என்னோட சேர்ந்து போனாதான் உங்களை ஏத்துக்க மாட்டாங்க. தனியா போனீங்கன்னா ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்றாள்.

“கட்டின பொண்டாட்டியை இங்க தனியா விட்டுட்டு, நான் மட்டும் அங்கே போகணுமா? ஊர்ல எல்லாரும் என்ன பேசுவாங்க?” எனக் கேட்டான்.

“இவ்ளோ நாள் அப்படித்தானே இருந்தோம்” என்றாள்.

“அப்ப எவனுக்கும் நம்ம புருஷன் பொண்டாட்டின்னு தெரியாது. இன்னைக்கு ஊருக்கே தெரிஞ்சு போச்சு. இனிமே உன்னை இங்க தனியா விட்டுட்டு நான் மட்டும் அங்க போனா நல்லாயிருக்காது” என்றான்.

“யார் வேணா என்ன வேணா பேசட்டும். நீங்க இங்க தங்க வேண்டாம். போய்டுங்க” என்றாள்.

“ஏன் நான் இங்க தங்கினா என்ன?”

“எனக்கு பிடிக்கலை”

“நான் தங்குறது பிடிக்கலையா? என்னையவே பிடிக்கலையா?” எனக்கேட்டான் சக்தி.

“புரியாம பேசாதீங்க. பிரச்சனை எல்லாம் சரியாகட்டும். அது வரை நாம தனித்தனியாவே இருப்போம்” என்றாள்.

“இங்க நான் இருந்தா மட்டும் என்ன… என் கூட சேர்ந்தா வாழப் போற? நான் இங்கதான் இருப்பேன்” என்றான்.

“நீங்க நினைக்கிறதுதான் நடக்கணும்? எல்லாம் உங்க இஷ்டம்தான் இல்ல?” என சூடாக கேட்டாள்.

“உன்மேல மட்டும்தான் எனக்கு இஷ்டம். வேற எது மேலேயும் எனக்கு இஷ்டம் இல்லை” என்றான்.

மது மீண்டும் அவளது அறைக்கு சென்று விட்டாள். அமைதியாக சக்தி கூடத்தில் அமர்ந்திருந்தான். தூங்கி எழுந்ததால் தெளிவாக இருந்த மது அமைதியாக யோசித்தாள்.

சக்தி அதிரடியாக தன் கழுத்தில் தாலி கட்டவில்லை என்றால் இந்த கல்யாணம் நடந்தே இருக்காது என்பதை உணர்ந்தாள். இன்று தங்கள் திருமணத்தைப் பற்றி கூட, தன்னை அம்மா எங்கே அழைத்துக் கொண்டு போய் விடுவாரோ என்பதால்தான் கூறியிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

தான் கோவமாக வெளியே போகச் சொல்லிய பிறகும், தன்னை தனியே விட்டுச் செல்லாமல் வெளியிலேயே அமர்ந்திருந்த சக்தியின் செயல் மதுவை வெகுவாக கவர்ந்தது. அதை நினைத்து மெல்ல சிரித்துக் கொண்டாள். காலையில் அத்தனை சண்டையிலும் தனக்கு துணையாக நின்றதை நினைத்துப் பார்த்தாள். அவளது கோவத்தை விலக்க, மறைந்திருந்த அவன் மீதான மதுவின் காதல் மட்டுமே அவளுக்கு தெரிந்தது.

எல்லோரும் அவனை திட்டும் போது தானும் கோவப்படுவது தவறு என நினைத்தவளாய் எழுந்து கூடத்திற்கு வந்தாள். அவனருகில் போய் அமர்ந்து கொண்டாள். சக்தி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக அவளைப் பார்த்தான்.

“சாரி” என்றாள் மது.

“ம்… ம்… மன்னிச்சிட்டேன்” என சக்தி கூற, மதுவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“எல்லாம் சரியாகிடுமா?” எனக் கேட்டாள்.

“சரி பண்ணிடுவோம்” என்றான்.

“அழுது அழுது கண்ணெல்லாம் எரியுது” என்றாள்.

“எதுக்கு இப்படி அழுவனும்?”

“ஆமாம் ரொம்ப அழுதுட்டேன். இங்க வந்ததுக்கு அப்புறம்தான் அடிக்கடி அழுவுறேன்” என்றாள்.

“இனிமே அழ விட மாட்டேன்” என்றான்.

“நான் இங்கே வராம இருந்திருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காதில்லை?”

“நீ இங்க வந்ததால எந்த பிரச்சனையும் இல்லை. சுகன்யாவை எப்படியும் நான் கல்யாணம் கட்டியிருக்க மாட்டேன். நாம சேரணும்னு விதி இருந்தா நீ எங்க இருந்தாலும், நமக்கு கல்யாணம் ஆகியிருக்கும். முடிஞ்சு போனதைப் பத்தி பேசாத. உன் கவலையெல்லாம் தீர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

“ம்…” என்றாள் மது.

பின்பு மது சக்தியிடம் கோபம் இல்லாமல் இணக்கமாகவே இருந்தாள். இரவு உணவு முடித்து, இரவு உடை மாற்றி வந்தவள், “நான் ரூம்ல படுத்துகிறேன். நீங்க ஹால்ல படுத்துக்குங்க” என்றாள்.

“நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன். நானும்…” என சக்தி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவனைப் பேச விடாமல் தடுத்தவள்,

“இந்தக் கதையே வேண்டாம். என்னை பார்த்த அன்னைக்கே கண்ணாலேயே என்னை சாப்பிட்ட ஆள் நீங்க. உங்களை எல்லாம் நம்ப முடியாது. நீங்க இங்க, நான் அங்க” என்றாள்.

“கடைசியில சினிமாவுல வர்ற மாதிரியே நானும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிதானா?” என சக்தி கேட்க, ஒரு பாயையும் தலையணையும் எடுத்துவந்து அவன் கையில் திணித்தவள், “எல்லாம் சரியானதுக்கு அப்புறம்தான் நீங்க சம்சாரி. அதுவரைக்கும் பிரம்மச்சாரிதான்” என்றாள்.

சக்தி ஏக்கமாக மதுவைப் பார்க்க, “குட் நைட்” எனக் கூறி அவளது அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள்.