“என்னை ஏன் ஏமாத்திட்ட மாமா?” என்ற சுகன்யாவின் கேள்வியில் சக்தி அதிர்ந்து நிற்க, மணிமேகலை ஓடிச் சென்று அவளது கையை தன் புடவையின் முந்தானையை வைத்து இரத்தம் வெளியேறாமல் அழுத்திப் பிடித்தார். சிகிச்சையகத்திற்கு அழைத்து வரப்பட்டாள் சுகன்யா.
சிகிச்சையகத்தில் இருந்த ஒற்றைப் பெஞ்சில் சுகன்யா படுக்க வைக்கப்பட்டிருக்க, அவளது கையின் காயத்தை சுஜாதாவை தவிர மற்ற மூன்று மருத்துவர்களும் ஆராய்ந்தனர்.
“இல்ல ஆழமாதான் இருக்கு. இங்க பண்ண முடியுமான்னு தெரியலை. ஷீ மே நீட் அனஸ்தீசியா, ஓ.டி செட் அப் உள்ள ஹாஸ்பிடல் போலாம்” என பிரபா கூறினார்.
இவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா, “தள்ளுங்க” என வந்து நின்றார்.
கையுறை அணிந்து கொண்டு கையின் காயத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு, “ஓ. டி எல்லாம் வேண்டாம். லோக்கல் அனஸ்தீசியா போதும். இருக்கான்னு உங்க பொண்ணுகிட்ட கேளுங்க” என்றார்.
பிரபா மதுவின் முகத்தைப் பார்க்க, மது தேவையானவற்றை எடுத்து தந்தாள்.
“முதல்ல கூட்டம் போடாம எல்லாரையும் வெளியில போகச் சொல்லுங்க” என்ற சுஜாதா, ஒரு ஸ்டூலை எடுத்து போடச்சொல்லி சுகன்யாவின் அருகில் உட்கார்ந்து கொண்டார். சுஜாதா தையலிட மது அவருக்கு உதவி செய்தாள்.
“என்ன படிச்சிருக்கா உங்க பொண்ணு? எல்லாம் ரெடியா இருக்கு. ஓ.டிக்கு போகணும்னு நீங்க சொல்றீங்க? இங்கேயே செய்யலாம்னு சொல்லாமல் அப்படியே நிக்குறா?” என பிரபாகரனிடம் கேட்டார்.
மது பிரபாவின் முகத்தை பார்க்க, அவரும் பாவமாய் மதுவை பார்த்து நின்றார். சுகன்யா அரை மயக்கத்தில் இருந்தாள். முடித்துவிட்டு வெளியே வந்த சுஜாதா, “இந்தப் பொண்ணு ஏன் இப்படி பண்ணிக்கிட்டு?” என கேட்டார்.
“உங்க பொண்ணாலதான்” என அழுதார் மணிமேகலை.
“அந்தப் பொண்ணு கையில எழுதியிருந்த சக்திதரன்தான் இவரா?” என சுஜாதா சக்தியைக் காட்டி கேட்க, “ஆமாம்” என அழுது கொண்டே கூறினார் மணிமேகலை.
“இர்ரெஸ்பான்சிபிள் கேர்ள்ஸ், பெத்தவங்களை பத்தி யோசிக்கவே மாட்டாங்க. நீங்க பயப்படாதீங்க, பெருசா ப்ராப்ளம் இல்லை. நான் மருந்து எழுதி தரேன்” எனக் கூறி மீண்டும் உள்ளே சென்றார்.
தங்கதுரை எதிர் வீட்டுத் திண்ணையில் சோர்ந்துபோய் அமர்ந்திருந்தார். அன்னபூரணி ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, விஸ்வநாதன் மலைத்துப் போய் நின்றிருந்தார்.
உள்ளே வந்த சுஜாதா, சுகன்யாவை பார்த்தார். மயக்கத்திலிருந்து தெளிந்திருந்தாள் சுகன்யா.
“சக்திதரன் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டானா? சொல்லு போலீஸ் வெளியிலதான் நிக்குது. கம்ப்ளைன்ட் கொடுத்திடலாம்” என சுஜாதா கூற, சட்டென நிமிர்ந்து பார்த்த சுகன்யா, “அப்படியெல்லாம் இல்லை” என்றாள்.
“அப்போ ஒன் சைடு லவ்வா?” எனக்கேட்டார் சுஜாதா.
பதில் எதுவும் கூறாமல் சுகன்யா அமைதியாக இருக்க, “இங்க பாரும்மா. நீ உயிரை விடுற அளவுக்கு அந்தப் பையன விரும்புற. அவன் வேற ஒரு பொண்ணை விரும்புறான். அந்த பொண்ணை விட்டுட்டு உன்னையவே அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த பொண்ண மறக்காம உன்னோட வாழ்ந்தா உனக்கு ஓகேவா. அப்புறம் உன்னோட அன்புக்கு என்ன மதிப்பு? இல்லை உனக்கேதான் என்ன மதிப்பு?” என கேட்க பிரபாகரன் சுஜாதாவை கூர்மையாக பார்த்தார்.
“வெளியில உன் அம்மா அழுதுகிட்டு நிக்குறாங்க. உன்னை பெத்து வளர்க்க என்ன கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்களையெல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சு பாக்க மாட்டீங்களா?” எனக்கூறிவிட்டு மதுமிதாவை பார்த்தார் சுஜாதா.
“ஆன்ட்டி விடுங்க, இந்த பொண்ணு ஏற்கனவே ரொம்ப கஷ்டத்தில இருக்கு. மேல மேல பேசி இன்னும் கஷ்டப்படுத்தாதீங்க, பாவம்” என்றான் கௌசிக்.
பழனிவேலும் மற்றொருவனும் இளநீர் கொண்டு வந்து கொடுக்க எல்லோருக்குமே நாக்கு வறண்டு, குடிக்க ஏதாவது தேவைப்பட மறுக்காமல் வாங்கிக் கொண்டனர். சுகன்யாவுக்கு அங்கிருந்த ஒரு பாத்திரத்தில் குடிக்க ஏதுவாக ஊற்றி கொடுத்த மதுமிதா அவளுக்கு வேண்டாம் என மறுத்து விட்டாள்.
வெளியே நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டு இருந்த காவல்துறை ஆய்வாளருக்கும், கான்ஸ்டபிளுக்கும் கூட இளநீர் வழங்கப்பட்டது. எல்லாம் சக்தியின் ஏற்பாடு. சக்தி சொல்ல குரு செய்துவிட்டான்.
சக்தியிடம் வந்த பழனிவேல், “அண்ணன், டாக்டர் மேடம் மட்டும் வாங்கிக்கல” என்றான்.
“ஏனாம்…?” என்றவன், சுகன்யா குடித்தாளா என கேட்டறிந்து கொண்டு, அவன் கையில் இருந்த இளநீரை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
“வேண்டாம்னா விடுங்களேன் சக்தி” எனம் மது கோவமாக கூற, “என்கிட்ட அப்புறமா கோவப்படு. நல்லா அழுதிருக்க. சோர்வா தெரியிற. இதை குடி, கொஞ்சம் தெம்பா இருக்கும்” எனக் கூறி நீட்டிய இளநீரை நீட்டியபடியே இருந்தான்.
வாங்காமல் செல்ல மாட்டான் என உணர்ந்தவள் கையில் வாங்கிக்கொள்ள, அங்கேயேதான் நின்றிருந்தான்.
‘என்ன?’ என்பது போல மது பார்க்க, ‘குடி’ என சைகை செய்தான். மது இளநீரை குடித்து முடிக்கவும்தான் வெளியே சென்றான்.
பார்த்துக்கொண்டிருந்த சுகன்யாவிற்கு கண்கள் கலங்க, பிரபா பெருமையாய் சுஜாதாவைப் பார்க்க, “இதுல என்ன பெருமை வேண்டிக் கிடக்கு. இந்த பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணி இருக்கு. இதுக்கு காரணமே இவங்க ரெண்டு பேரும்தான். அவன் என்னடான்னா கூலா இளநீர் கொண்டு வந்து கொடுத்துட்டு போறான். நீங்க அத வேற ரொம்ப பெருமையா பாக்குறீங்க” என்றார் சுஜாதா.
“பார்த்தியா…? இவனை நீ கல்யாணம் பண்ணியிருந்தீனா உன் நிலைமை என்னாகி இருக்கும். நீ தப்பிச்சுட்ட. உனக்கு என்ன குறை? பார்க்க நல்லா இருக்க. படிச்ச பொண்ணு மாதிரி இருக்க. வேற ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ. நான் இப்பவே சொல்றேன். உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் ரொம்ப லக்கி. சும்மா சொல்றேன்னு நினைக்காதே. உன்னை நினைக்காத இவனுக்காக உயிரைவிட பார்த்த, உன்னை கட்டிக்கிட்டவன் மேல எவ்வளவு அன்பா இருப்ப? இனிமே இதை மாறி முட்டாள்தனம் பண்ணாம, உன்னோட வாழ்க்கையை உனக்காக வாழு” என சுஜாதா பேச, எதற்கும் பதில் அளிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள் சுகன்யா. கௌசிக் சுகன்யாவையே பார்த்திருந்தான்.
காவல்துறை ஆய்வாளர் உள்ளே வந்து, சுகன்யா எப்படி இருக்கிறாள் என விசாரித்து அறிந்து கொண்டு, “இது தற்கொலை முயற்சி. கேஸ் போடனும்” என்றார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் வேணும்னா மினிஸ்டர்கிட்ட சொல்ல சொல்றேன்” என்றார் சுஜாதா.
“வரவர போலீசுக்கு மரியாதையே இல்லாம போச்சு. அவங்க எடுபிடியா நினைச்சுக்குறாங்க” என முணுமுணுத்துக் கொண்டே சென்றார் காவல்துறை ஆய்வாளர்.
“இதெல்லாம் என்னடா?” என சக்தியிடம் கேட்டார் அனுசுயா.
“அப்பா அவர் தங்கச்சி பொண்ணை அண்ணனுக்கு கட்டி வச்சார். உனக்கு சப்போர்ட்டா இருக்கட்டுமேன்னுதான் உன் அண்ணன் பொண்ணை நான் கட்டிக்கிட்டேன்” என்றான் சக்தி.
சக்தியை முறைத்த அனுசுயா, “என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியாடா? பாரு எவ்ளோ பிரச்சனை?” என்றார்.
“இதுக்கு நான் என்னம்மா பண்றது? மனசுல ஒருத்திய வச்சிக்கிட்டு வேறு ஒருத்தி கூட குடும்பம் பண்ண முடியுமா? நான்தான் ஆரம்பத்தில இருந்தே சுகன்யாவை கட்டிக்க மாட்டேன்னு சொன்னேனே” என்றான்.
“விடும்மா, சுகன்யாவை பார்த்தா பாவமாதான் இருக்கு. ஆனா பாவப்பட்டு எல்லாம் சக்தி அவளை கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவன தப்பு சொல்ல முடியாது. அவன் சொல்ல சொல்ல கேட்காம மத்தவங்க அவ மனசுல ஆசைய வளர்த்தா, சக்தி என்ன பண்ணுவான்?” என்றான் குரு.
சுகன்யா வெளியில் வர, மணிமேகலை, அன்னபூரணி, வளர்மதி மூவரும் அவளிடம் ஓடிச் சென்றனர். மணிமேகலை சுகன்யாவை கட்டிக்கொண்டு அழ, தங்கதுரை மகளை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஏற்கனவே டயர்டா இருக்கா. இன்னும் ஏன் இப்படி பண்றீங்க? முதல்ல வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க, ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் சுஜாதா. மணிமேகலை தன் மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, வளர்மதியும் அன்னபூரணியும் அவர்களுடனே சென்றனர்.
ஊர்ப் பெரியவர் ஒருவர் வந்து சக்தியிடம், “அப்புறம் என்னப்பா உன் பொண்டாட்டிய அழைச்சிகிட்டு நீ உன் வீட்டுக்கு போ” எனக்கூற, “அந்த துரோகியோட பொண்ணு வீட்டுக்கு வந்தா நான் வீட்டை விட்டு போய்டுவேன்” என அறிவித்தார் விஸ்வநாதன்.
“என்னங்கய்யா இது? உங்க பேரனோட சம்சாரம் பின்ன வேற எங்க போகும்?” எனக் கேட்டார் அந்த ஊர் பெரியவர் ஒருவர்.
“அந்தப் பொண்ணு இருக்குற வீட்டுல நான் இருக்க மாட்டேன். தாராளமா என் பேரன் அழைச்சுக்கிட்டு வரட்டும். நான் அந்த வீட்டுல இருக்க மாட்டேன்” என்றார் தாத்தா.
“நீங்க ஏன் வீட்டை விட்டு போகணும்? அது உங்க வீடு. வேணும்னா அவன் அவனோட பொண்டாட்டிய அழைச்சிக்கிட்டு போகட்டும்” என்ற வீரவேல் “வாங்கப்பா நாம போகலாம்” எனக்கூறி தந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்.
“விடு சக்தி. பெருசு ரொம்ப வீராப்பா இருக்கு. பெருசு மனசு மாறுற வரைக்கும் நீ தோப்பு வீட்டிலேயே உன் பொண்டாட்டியோட இரு” என கூறினார் அந்த ஊர்ப் பெரியவர்.
“டேய் கொஞ்ச நாள் தோப்பு வீட்டிலேயே நீங்க இருங்க. தாத்தா மனசு மாறுனதுக்கு அப்புறமா நம்ம வீட்டுக்கு வரலாம்” என்ற குரு, “என்ன இருந்தாலும் என் கிட்ட கூட அந்த பொண்ணு யாருங்கிற உண்மையை நீ சொல்லலைலடா?” என்றான்.
“என்கிட்டயே சொல்லல” என்றார் அனுசுயா.
“அம்மா அவன் கல்யாணத்தை பதிவு பண்ண சாட்சி கையெழுத்து போட மட்டும் என்னை கூப்பிட்டுகிட்டான்” என குரு கூற, “எனக்கு தெரியாம இன்னும் என்னென்ன எல்லாம் பண்ணி வச்சிருக்கடா?” என சக்தியை பார்த்து கேட்டார் அனுசுயா.
“சொல்லுடா” என்றான் குரு.
“இப்ப வரைக்கும் அவ்வளவுதான்டா. இதைத் தவிர உங்களுக்கு தெரியாம… அப்படின்னா இனிமேதான் ஏதாவது செய்யணும்” என சக்தி கூற, “அம்மா இவன்கிட்ட வச்சுகிட்டோம் நம்மளையும் ஏதாவது வம்புல மாட்டி விடுவான். வா நாம போகலாம்” எனக்கூறி அனுசுயாவை அழைத்துக் கொண்டு சென்றான் குரு.
“அப்புறம் என்ன சக்தி. உன் சம்சாரத்தை அழைச்சுக்கிட்டு நீ தோப்பு வீடு போ” என்றார் ஒரு பெரியவர்.
“அட சக்திக்கு இதுல எதுவும் வெசனம் இருக்க போவுதா என்ன? இனிமே தோப்பு வீடே பேராண்டியோட ஆட்டத்தில அலறப்போகுது” என வயதானவர் ஒருவர் நையாண்டி பேச, கூடியிருந்தோர் கொல்லென்று சிரிக்க, “போங்கப்பா, போங்க… போயி உங்க உங்க சோலிக் கழுதைய பாருங்க” என ஒருவர் தன் தோளில் கிடந்த துண்டால் காக்கை கூட்டத்தை கலைப்பது போல கூட்டத்தை கலைத்தார்.
“நான் அப்பவே சொன்னேன்டி சித்திரையில சக்திக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு… எப்படி கரீக்டா நடந்திருக்குதுன்னு பாத்தியா?” என முக ஜோசியம் பார்த்த செல்லக்கிளி ஒரு பெண்ணிடம் கூறிச் செல்ல, “அப்போ கிழவி ஜோசியம் உண்மைதானா?” என பழனிவேல் பதற்றமாக பக்கத்தில் இருந்தவனிடம் கேட்க, “ இந்த சக்தி பய ஒரு பொண்ண கூட நிமிர்ந்து பார்த்ததில்ல, இப்படி அதிரடியா டவுன்கார டாக்டர் புள்ளைய லவ்ஸ் பண்ணி தாலியும் கட்டிப்புட்டானே” என வயதான பாட்டி ஒருவர் பக்கத்தில் இருந்தவரிடம் பேச, இப்படி ஆளுக்கொன்று பேசிக் கொண்டும் நினைத்துக் கொண்டும் கலைந்து சென்றனர்.
தோப்பு வீட்டின் மர சோஃபாவில் பிரபாகரனும் சுஜாதாவும் அமர்ந்திருக்க, கௌசிக் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். சக்தி ஒருபுறம் நிற்க, மதுமிதா ஒருபுறம் நின்றாள்.
“இப்ப உங்களுக்கு சந்தோஷமா? என் பொண்ணோட வாழ்க்கையவே கெடுத்து வச்சுட்டீங்க. எனக்கு உண்மையாவே இருக்க மாட்டீங்களா? இன்னும் என்னென்ன எல்லாம் பொய் சொல்லி வச்சிருக்கீங்க?” என பிரபாகரனை திட்டிக் கொண்டிருந்தார் சுஜாதா. பிரபாகரன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
“அம்மா ப்ளீஸ் அப்பாவை ஒன்னும் சொல்லாதீங்க. அவர் நல்ல எண்ணத்திலதான் என்னை இங்கே அனுப்பி வச்சார். நான்தான் தப்பு பண்ணிட்டேன்” என மது கூற, மது கூறிய தப்பு என்ற வார்த்தையில் நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தான் சக்தி.
“தப்புன்னு தெரியுதுல்ல என் கூட வந்துடுறியா?” எனக்கேட்டார் சுஜாதா.
“ஒரு வருஷம் டைம் கேட்டியே… உனக்காக காத்துகிட்டு இருக்கிற இவருக்கு என்ன பதில் சொல்றது?” என கௌசிக்கை காட்டி சுஜாதா கேட்க, அவனைப் பார்த்த மது, “சாரி கௌசிக். உங்கள என்னால ஃப்ரெண்டாதான் பார்க்க முடிஞ்சது. உங்கள மேரேஜ் பண்ண இஷ்டம் இல்லைன்னு அம்மாகிட்ட அப்பவே சொல்லிட்டேன். அவங்க உங்ககிட்ட சொல்லாம என்னை கன்வின்ஸ் பண்றதிலேயே இருந்துட்டாங்க” என்றாள்.
கௌசிக்குக்கு மிகவும் வலித்தது. ‘என்னை விட எந்த வகையில அவன் உசத்தின்னு அவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா?’ என்றுதான் யோசித்தான்.
“என்னை ஏன் மது உனக்கு பிடிக்காம போயிடுச்சு?” என கௌசிக் கேட்க, மது சங்கடமாக அவனைப் பார்த்தாள். சக்திக்கு கோபம் வந்துவிட்டது.
“அவளுக்கு உன்னை பிடிக்கலை. அவ்வளவுதான்டா. சும்மா ஏன் பிடிக்கல எதுக்கு பிடிக்கலன்னு…” என எரிச்சலாக கூறினான்.
“சக்தி ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க” என்றாள் மது.
“நான் ஏண்டி அமைதியா இருக்கணும்? அவன் வாயை மூட சொல்லு” என்றான் சக்தி.
“ஏன் இப்படி மரியாதை இல்லாம பேசுறீங்க? அவர் ஒரு கார்டியாலஜிஸ்ட்” என்றாள் மது.
“எவனா இருந்தா எனக்கென்ன?நான் இருக்கும் போதே என் பொண்டாட்டிகிட்ட வந்து என்னை ஏன் புடிக்கலைன்னு கேட்டா.. என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது” என்றான் சக்தி.
“எப்படி பேசுறான் பாருங்க. இவன் கூட மது எப்படி குடும்பம் நடத்துவா? எல்லாம் உங்களாலதான்” என்றார் சுஜாதா.
“கல்யாணமான மதுகிட்ட வந்து கௌசிக் இப்படி கேட்கிறது நமக்கு வேணா தப்பா தெரியாம இருக்கலாம். சக்தி கிராமத்துல வளர்ந்த பையன், அவனுக்கு பிடிக்கல, அதான் அப்படி பேசுறான். மத்தபடி நல்ல பையன். நம்ம பொண்ணும்தான் விரும்பியிருக்கா” என்றார் பிரபாகரன்.
“முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?” எனக் கேட்டார் சுஜாதா.
“நீங்களே சொல்லிக்கிட்டு கிளம்புங்க. யார்கிட்டயும் பேசுற ஐடியா எனக்கு இல்லை” என்றார் சுஜாதா.
எழுந்துகொண்ட பிரபாகரன், “சக்தி நாங்க கிளம்புறோம்ப்பா. மதுவை பார்த்துக்கங்க. மனசு எல்லாத்தையும் ஏத்துக்க கொஞ்சம் டைம் தேவைப்படுது. கொஞ்ச நாள் கழிச்சு வர்றோம்” என்றவர் மதுவிடம் சென்றார்.
“நாங்க வர்றோம் மது. உன் விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட. வாழ்ந்து காட்டு” எனக் கூறினார்.
“என் மேல கோவம் இல்லையேப்பா” என மது கேட்க, “இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் மது. உன் மேல நிறைய நம்பிக்கை வச்சிருந்தேன். விடு… சீக்கிரம் எல்லாம் சரியாகும்” என்றார்.
“மது மேல எந்த தப்பும் இல்லை மாமா. நான்தான்… “ என சக்தி பேச, அவனை இடையிட்டு தடுத்தவர், “கல்யாணத்துக்கு அப்புறமா கூட என் பொண்ணு என்கிட்ட இதைப்பத்தி சொல்லலை. என்னை விட நீ அவளுக்கு முக்கியமா போயிட்ட. எல்லாத்தையும் விடு. ஒரு காலத்துல நான் தெளிவில்லாமல குழப்பத்தில் நிறைய செஞ்சி என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சிட்டேன். இன்னைக்கு நீயும் அதே நிலைமையில்தான் இருக்க. நீயாவது இப்பவே சரி பண்ணிக்க” என்றவர் சுஜாதாவையும் கௌசிக்கையும் அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்று விட்டார்.
வீட்டில் சக்தியும் மதுவும் மட்டும் இருந்தனர். சோஃபாவில் அமர்ந்த மது தன் மடியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள். தந்தை தன்னை தவறாக நினைத்தது, சுஜாதாவின் பாராமுகம், சுகன்யாவின் தற்கொலை முயற்சி, விஸ்வநாதனின் நிராகரிப்பு, சக்தி குடும்பத்தினரின் ஒதுக்கம் என அனைத்தாலும் பாதிக்கப்பட்டதால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தாள்.
மதுவின் அருகில் வந்த சக்தி அவள் தோள் மீது கை வைக்க, “எல்லாம் உங்களாலதான், இப்போ சந்தோஷமா?” என வெடித்தாள்.
“நான் என்னடி பண்ணினேன்?” எனக் கேட்டான் சக்தி.
“நீங்கதான் என்னை எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. யார்கிட்டயும் இப்போதைக்கு சொல்லாதீங்கன்னு சொன்னேன்தானே…? ஏன் எல்லாரும் முன்னாடியும் சொன்னீங்க?” என்றாள்.
“நான் சொல்லலைன்னா உன் அம்மா உன்னை அவங்களோட கூட்டிட்டு போயிருப்பாங்க” என்றான்.
“போனா என்ன? நான் பொறுமையா அப்பாகிட்ட சொல்லி பிரச்சனை வராமல் பார்த்துக்கிட்டிருந்திப்பேன். இப்போ அப்பாவும் என்னை தப்பா நினைக்கிறார். சுகன்யா கல்யாணத்தை முடிச்சிட்டு, உங்க தேவி அத்தையும் ஏன் இறந்தாங்கன்னு உண்மையையும் கண்டுபிடிச்ச பின்னாடி என்னை வந்து கூப்பிட்டுக்கலாம்தானே? சுகன்யாவும் தற்கொலை முயற்சி பண்ணியிருக்க மாட்டா. உங்க வீட்டிலேயும் என்னை ஏத்துகிட்டிருப்பாங்க. உங்க அவசரத்தால இப்ப என்னென்ன ஆயிடுச்சு பார்த்தீங்களா?” எனக் கேட்டாள்.
“சுகன்யா இவ்வளவு தீவிரமா இருந்துருக்கும்ன்னு எனக்கு தெரியாதுடி. என்னோட கல்யாண விஷயம் தெரியாம இருந்திருந்தா கண்டிப்பா அந்த புள்ளை வேற கல்யாணம் செய்திருக்காது. எனக்காக காத்துக்கிட்டுதான் இருந்திருக்கும். இந்த உண்மை தெரிஞ்சது நல்லதுதான். அந்தப் புள்ளையும் மனசு மாறி வேற கல்யாணம் பண்ணிக்கும். நம்ம கல்யாண விஷயம் தெரியாம போயிருந்தா பெரியவங்களும் சுகன்யாவுக்கு வேற பையனை பார்க்கவே மாட்டாங்க”
“தேவி அத்தை ஏன் இறந்தாங்கன்னு கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் மது. முடியும்னு உறுதியா சொல்ல முடியாது. அதை நான் கண்டுபிடிக்க எவ்வளவு காலம் ஆகும்ன்னும் சொல்ல முடியாது. உன் அம்மா வேற அடுத்த மாசம் அந்த கௌசிக்கோட கல்யாணம்ன்னு சொல்றாங்க. என்னால என்ன பண்ண முடியும்?” எனக் கேட்டான்.
“அவங்க சொன்னா நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சிங்களா?” என உக்கிரமாய் கேட்டாள் மது.
“அப்படியில்லை மது. உன் அம்மா அப்படி சொல்லவும் எனக்கு கோவம் வந்துடுச்சி. மரியாதை இல்லாம வேற பேசினாங்க. உன்னை அங்க அனுப்பிட்டு என்னால இங்க எப்படி இருக்க முடியும்? உன்னை எப்படியாவது இங்கேயே இருக்க வைக்க எனக்கு வேற வழி தெரியலைடி” என்றான்.
“நீங்க எதைப் பத்தியும் யோசிக்கலை. யோசிக்காமல் அவசரத்துல நம்ம கல்யாணத்த பத்தி சொல்லிட்டு இப்ப சொன்னதுக்கு காரணம் தேடி தேடி என்கிட்ட சொல்றீங்க. என் முன்னாடி நிக்காதீங்க. போங்க இங்கேயிருந்து” என கத்தினாள் மது.
“கோவப்படாதடி, என் வீட்டிலேயும் என்னை சேர்த்துக்க மாட்டாங்க. நீயும் துரத்தினா எங்கடி போவேன்?” எனக் கேட்டான்.
“எங்கேயாவது போங்க” என மீண்டும் கத்த, சக்தி கோபமாக வெளியே சென்று விட்டான்.
மது நிறுத்தியிருந்த அழுகையை மீண்டும் தொடர ஆரம்பித்தாள்.