மதுமிதா பெங்களூரில் இருப்பதாக பொய்யுரைத்துவிட்டு அழகிய சூரபுரத்தில் இருக்கிறாள் என்பதில் கட்டுக்கடங்காத கோபம் கொண்ட சுஜாதா பிரபாகரன் மற்றும் கௌசிக்கை அழைத்துக்கொண்டு மதுவை பார்க்க காரில் புறப்பட்டு சென்றார்.
சென்று கொண்டிருக்கும் பொழுதே, சந்தர்ப்பம் பார்த்து மதுவுக்கு கைப்பேசி மூலம் குறுஞ்செய்தியாக தகவல் அளித்திருந்தார் பிரபா. சிகிச்சையகத்தில் இருந்த மது ஒரு நோயாளியைப் பார்த்து விட்டு, வேறு யாரும் பார்க்க இல்லாததால் தனது கைப்பேசியை எடுத்தாள். தந்தை அனுப்பியிருந்த செய்தியை பார்த்துவிட்டு, உடனே சக்திக்கு அழைத்து விட்டாள்.
அவனிடம் விவரத்தைக் கூற, “நீ பயப்படாத நான் அங்க வர்றேன்” என்றான்.
“வேண்டாம் சக்தி, நான் இங்க இருக்கிறது மட்டும்தான் அம்மாவுக்கு இப்போ தெரிஞ்சிருக்கு. நம்ம கல்யாண விஷயம் யாருக்கும் தெரியாது. நீங்க வந்தா ஏதாவது சொல்லிடுவீங்க. அப்புறம் ப்ராப்ளம் பெருசாகிடும். நானே சமாளிச்சுக்கறேன்” என்றாள்.
“தானா சமாளிக்கிறவ, பதறிப்போய் எனக்கு எதுக்குடி ஃபோன் பண்ணனும்? நான் எதுவும் சொல்ல மாட்டேன். உன் கூட நான் நின்னா உனக்கு தைரியம்தானே… நான் வர்றேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் உடனே கிளம்பி விட்டான். சில நிமிடங்களில் சிகிச்சையகத்தையும் வந்தடைந்தான்.
“ம்…ம்… உனக்கு ஏன் இப்படி வேர்க்குது?” எனக் கேட்டுக் கொண்டே அவளது முகத்தை துடைக்க செல்ல, அவன் கையைத் தட்டிவிட்டவள், “இப்போ இதுவா முக்கியம்? நானே டென்ஷன்ல இருக்கேன்” என்றாள்.
“என் மாமியார் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?” என சக்தி கேட்க, “என் அப்பாகிட்டதான் பயங்கரமா சண்டை போடுவாங்க. அதை நினைச்சுதான் கவலையா இருக்கு” என்றாள் மது.
ஒரு பெரிய கார் ஒன்று வாசலில் வந்து நிற்க, மூவரும் கீழே இறங்கினர்.
“அது யாரு ஹீரோ கணக்கா இறங்கி வர்றது?” எனக் கேட்டான் சக்தி.
“டாக்டர் கௌசிக், எனக்கு அம்மா பார்த்த மாப்பிள்ளை” என மது கூற, காரணமே இல்லாமல் அவன் மீது கோபம் வந்தது சக்திக்கு.
பெரிய கார் ஒன்று ஊரின் உள்ளே நுழையவுமே என்ன ஏது என்று மக்கள் பேசிக் கொள்ள, கார் சிகிச்சையகம் முன்பு நிற்கவும் செய்தி தீயெனப் பரவ, விஸ்வநாதனுக்கும் செய்தி தெரிந்தது. அவர் மதுவின் பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வந்து விட்டார்கள் போல என நினைத்துக் கொண்டார்.
உள்ளே நுழைந்த சுஜாதா, “என்ன மது… உன்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சா உன் அப்பா கூட சேர்ந்துக்கிட்டு ரொம்ப பெரிய பெரிய வேலை எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்ட போல” என்றார்.
“அம்மா, இந்த ஊருக்கு மெடிகல் ஃபெஸிலிடி தேவைப்பட்டது. உண்மையை சொன்னா நீங்க விட மாட்டீங்கன்னு பொய் சொல்லிட்டோம். சாரிம்மா” என்றாள் மது.
தன் கணவரை முறைத்த சுஜாதா, “உங்களை சொல்லணும். எதை நம்பி மதுவை அவளுக்கு தெரியாத ஊருக்கு தனியா அனுப்பி வச்சீங்க? வீட்டுக்கு போய் உங்ககிட்ட பேசிக்கிறேன்” என்றவர் மதுவைப் பார்த்து, “அவர் சொன்னார்னா உனக்கு எங்க போச்சு அறிவு? கல்யாணம் ஆகாத பொண்ணு. முன்ன பின்ன தெரியாத ஊருக்கு இப்படித்தான் வருவியா?” என்றார்.
“ஆன்ட்டி மதுவை ஒன்னும் சொல்லாதீங்க. ஒரு நல்ல விஷயத்துக்காகதானே பொய் சொல்லியிருக்காங்க” என கௌசிக் கூற, “ஆமாம் கௌசிக் அவளுக்கு சின்ன வயசுலேயிருந்தே இப்படி நிறைய சர்வீஸ் பண்ணனும்னு ஆசை. அதான் ஒரு ஆர்வத்துல இப்படி பண்ணிட்டா. டோண்ட் மிஸ்டேக் ஹெர்” என்றார் சுஜாதா.
“நோ நோ ஆன்ட்டி. ஆக்சுவலி ஐ அட்மியர் ஹெர் “ என கௌசிக் கூறி மதுவை காதலாக பார்க்க, சக்தி அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சுஜாதா சக்தியை கவனிக்கவில்லை.
“சரி மது நீ கிளம்பு” என்றார் சுஜாதா.
“எங்கம்மா?”
“என்ன கேள்வி இது? எங்களோட கிளம்பு. இனிமேலும் உன்னை இங்க தனியா விட முடியாது. நீ சொல்றதை எல்லாம் இனிமேல் கேட்கவும் முடியாது. நெக்ஸ்ட் மன்த் உனக்கு கௌசிக்கோட கல்யாணம். உன் திங்ஸ் எல்லாம் எங்க இருக்கு? எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிளம்பு” என்றார் சுஜாதா.
சக்தியின் முகம் கோவம் அடைவதை கண்ட மது, கண்களாலேயே ‘அமைதியாக இரு’ என கூற அவளுக்காக பொறுமையாக நின்றிருந்தான் சக்தி.
“அம்மா நான்தான் ஒரு வருஷம் டைம் கேட்டிருந்தேனே? இந்த ஊருக்கு வேற ஒரு டாக்டர் வர வரையிலும் நான் இங்கே இருக்கேன். இல்லன்னா இங்க மக்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்க” என்றாள் மது.
பிரபாகரனை பார்த்த சுஜாதா, “ஒன்னும் சொல்லாம பார்த்துகிட்டே நிக்குறீங்க. அவளை கிளம்ப சொல்லுங்க. எனக்கு டைம் ஆகுது. இன்னைக்கு மெடிக்கல் கேம்புக்கு கலெக்டர் வர்றார். சீக்கிரம் போகணும்” என்றார்.
பிரபாகரன் சுஜாதாவிடம் ஏதோ சொல்லப்போக, தன் முறைப்பால் அவரை அடக்கினார் சுஜாதா.
“கிளம்பு மது. இந்த ஊருக்கு வேற ஒரு டாக்டர் ஏற்பாடு பண்ணிடலாம்” என்றார் பிரபாகரன்.
“மாமா, இப்படி சொன்னா எப்படி? அவ்ளோ சீக்கிரமா வேற டாக்டர் கிடைச்சுடுவாங்களா? மக்கள் சிரமப்படுவாங்க. அத்தைகிட்ட சொல்லுங்க, மது இங்க தனியா இருக்கிறதைப் பத்தி பயப்பட வேண்டாம்னு. நான் நல்லா பார்த்துக்குவேன்” என்றான் சக்தி.
“யார் நீ?” என சக்தியை பார்த்து கேட்டார் சுஜாதா.
“மாமாவோட தங்கச்சி பையன் அத்தை” என்றான் சக்தி.
கண்களை மேலே சுழற்றி “ஊஃப்ப்” என மூச்சு விட்டவர், “நீ யார வேணா இரு. என்னை அத்தை சொத்தைன்னு எல்லாம் சொல்ல வேண்டாம். அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம். இங்கே எல்லாம் விட முடியாது. மக்கள் கஷ்டப்படுவாங்கன்னா வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிக்கோ” என்றார் சுஜாதா.
சக்திக்கு கோபமாக இருந்தாலும் மதுவின் முகத்தைப் பார்த்து அமைதியாக நின்றிருந்தான். அதற்குள் விஸ்வநாதன் வீட்டிற்கு ஓடிய ஒருவன், “டாக்டர் பொண்ணோட அப்பாம்மா வந்திருக்காங்க. நம்ம சக்தி தம்பி மாமா அத்தைன்னு கூப்பிடுறாரு. அந்த அம்மா நம்ம சக்தி தம்பிகிட்ட ஒரு மாதிரி பேசுது” என்றான்.
விஸ்வநாதன் அங்கு புறப்பட, வயலில் வேலை செய்து கொண்டிருந்த வீரவேலுக்கும், குருபரனுக்கும் செய்தி தெரிவிக்கப்பட, வளர்மதியின் மூலம் மணிமேகலைக்கு விஷயம் தெரிய சக்தியின் குடும்பமே சிகிச்சையகம் நோக்கிப் புறப்பட்டது.
“மது கிளம்பப் போறியா? இல்லையா?” என சுஜாதா கேட்க, பிரபாவும் மதுவை கிளம்ப சொல்ல, “கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றேன்” என மது கூற, “ஷட் அப் மது. உன் திங்ஸ் எதுவுமே எடுக்க வேண்டாம். நீ கிளம்பு” என அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றார் சுஜாதா.
“விடுங்கம்மா” என கூறிக்கொண்டே அம்மா இழுத்த இழுப்புக்கு சென்று கொண்டிருந்தாள் மது.
சுஜாதா மதுவை இழுத்துக்கொண்டு காருக்கருகில் செல்ல, அதற்கு மேல் பொறுக்க முடியாத சக்தி, “விடுங்க மதுவை. அவதான் வர மாட்டேன்னு சொல்றாளே. அப்புறம் ஏன் கட்டாயப்படுத்துறீங்க?” என வந்து நின்றான். அதற்குள் சக்தியின் மொத்த குடும்பமும் அங்கு வந்தடைந்திருந்தது.
“சக்தி நீங்க எதுவும் பேசாதீங்க. நான் இப்ப அம்மா கூடவே கிளம்புறேன். எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்” என கூறிய மது இப்போது முரண்டு பிடிக்காமல் காருக்குள் ஏறப் போக, “அப்படியெல்லாம் அனுப்ப முடியாது மது” என்றான் சக்தி.
நடப்பதையும் பிரபாகரனையும் பார்த்த தாத்தா, மது யார் மகள் என்பதை புரிந்து கொண்டார்.
“சக்தி, அந்த பொண்ணை போகவிடு. எல்லாரும் போகட்டும். சீக்கிரம் கிளம்ப சொல்லு. யார் மூஞ்சியையும் பார்க்க எனக்கு பிடிக்கல” என்றார் விஸ்வநாதன்.
“பார்த்தீங்களா… நன்றி கெட்டவங்க எப்படி பேசுறாங்கன்னு? இவங்களுக்காகதான் உங்க பொண்ணை இங்க அனுப்பி வச்சீங்களா? நமக்கு மட்டும் இவங்க மூஞ்சி எல்லாம் பாக்கணும்னு ஆசையா என்ன? கிளம்பலாம் வாங்க?” எனக்கூறிய சுஜாதா காரில் ஏறப் போக, மதுவும் தன் தாயின் பின்னால் சென்றாள்.
மதுவை போக விடாமல் அவளது கையை பிடித்துக் கொண்ட சக்தி, “நீ எங்க போற?” எனக் கேட்டான்.
அவர் கூறிய விதத்தில் கோபமடைந்த சக்தி மதுவை இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தி, அவள் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டு நின்றான்.
“என்ன பண்றீங்க சக்தி?” என மெதுவாக கேட்டுக்கொண்டே, தன் தோளில் இருந்த சக்தியின் கையை அகற்ற முற்பட்டாள் மது. ஆனால் மதுவால் முடியவில்லை. “கையை எடுங்க சக்தி” என மது சக்தியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“யூ ராஸ்கல்… என்ன வம்பு பண்றியா? மது மேல இருந்து கையை எடுடா” என தன் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு வந்து நின்றான் கௌசிக்.
“ஏய் என்ன நீ… எங்க ஊருக்கு வந்து என் தம்பி மேலேயே கை வைக்க வருவியா?” என வந்து நின்றான் குரு.
“அதானே… டாக்டர் பொண்ணுதான் போக மாட்டேன்னு சொல்லுது. சக்தி தம்பி இந்த ஊருக்காக எவ்ளோ செய்யுது. நம்ம எல்லாம் பாத்துக்கிட்டு சும்மா நிக்கலாமா? வாங்கடா” என வரிந்து கட்டிக்கொண்டு ஆண்கள் அனைவரும் முன்னே வர,
விஸ்வநாதன் சக்தியிடம் வந்து, “நான்தான் சொல்றேன்ல சக்தி. அந்தப் பொண்ணை விடு. அவன் பொண்ணு இந்த ஊர்ல இருக்கக்கூடாது” என்றார்.
“சக்தி, ப்ளீஸ் மதுவை விடுப்பா” என்றார் பிரபாகரன்.
“மதுவை அனுப்ப முடியாது மாமா” என்றான் சக்தி.
“நீ யாருடா என் பொண்ணை அனுப்ப முடியாதுன்னு சொல்றதுக்கு?” என சீறினார் சுஜாதா.
“ம்… மதுவோட புருஷன்” என சக்தி கூற, குருவையும், பழனிவேலையும் தவிர மது உட்பட கூடியிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.
ஊர்காரர்கள் ஆளுக்கொன்று பேசிக்கொள்ள, “என்னடா சக்தி என்ன உளறிக்கிட்டு இருக்க?” என கேட்டார் வீரவேல்.
“ஏன் சொன்னாய்?’ என்பது போல மது சக்தியைப் பார்க்க, அவளது பார்வையினை சக்தி பொருட்படுத்தவில்லை.
“என்ன மது இது? இந்த பையன் சொல்றது உண்மையா?” எனக் கேட்டார் சுஜாதா.
ஆம் என்பதாய் மது தலையசைக்க, பிரபாகரன் மதுவை குற்றம்சாட்டும் விதமாய் பார்த்தார்.
“என்ன மது இது? நீ என்கிட்ட என்ன சொன்ன, இப்போ நீ என்ன பண்ணி வச்சிருக்க? திருப்பி என்னை கெட்டவனா ஆக்கிட்டியே? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை” என்றார் பிரபாகரன்.
மது முகத்தை மூடிக்கொண்டு அழ, பொறுக்க முடியாத சக்தி, “மாமா, மது மேல எந்த தப்பும் இல்லை. மது எங்க என்னை விட்டு போய்டுவாளோன்னு பயந்து நான்தான் மதுவுக்கே தெரியாம தாலி கட்டிட்டேன். தப்பெல்லாம் என் மேலதான். அவளை எதுவும் சொல்லாதீங்க” என்றான்.
கௌசிக் ஒன்றும் கூற முடியாமல் அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருக்க, “அப்போ என் பொண்ணுக்கு கட்டாயத் தாலி கட்டுனியா நீ?” எனக் கேட்டார் சுஜாதா.
“மதுவுக்கும் என் மேல விருப்பம் இருக்கு” என்றான் சக்தி.
“மது இந்த கல்யாணம் செல்லாது, நீ கிளம்பு” என சுஜாதா கூற,
“உங்க பொண்ணை தாராளமா அழைச்சிட்டு போங்க” என தங்கதுரை கூற,
“அருமை பெருமையாய் என் பேத்தி காத்துக் கிடக்கும் போது சீமையில இல்லாத சித்தராங்கிய கட்டிகிட்டியேடா… உன்னை நினைச்சுகிட்டு இருக்க அந்த வாழைக் குருத்துக்கு நான் என்ன சொல்வேன்?” என அன்னபூரணி ஒப்பாரி வைக்க,
“மது நீ கிளம்பு. எதா இருந்தாலும் நம்ம ஊருக்கு போய் பேசிக்கலாம்” என பிரபாகரன் கூற,
“டேய் அனுப்புடா அந்த பொண்ணை” என வீரவேல் கூற,
“வா போகலாம்” என மதுவின் கையை பிடித்து இழுத்தார் சுஜாதா.
“இனிமே மது உங்க பொண்ணு இல்லை. என் பொண்டாட்டி. என் கூடதான் இருப்பா” என அவள் தோளில் இருந்த தன் கையை இன்னும் இறுக்கினான் சக்தி. செய்வதறியாது திகைத்து நின்றாள் மது.
சுஜாதா தனக்கு தெரிந்த அமைச்சரின் மூலமாக காவல்துறையின் உதவியை நாட, சிறிது நேரத்தில் அந்தப் பகுதி காவல்துறை ஆய்வாளர் வந்து சேர்ந்தார்.
“சுஜாதா, இதை ஏன் போலீஸ்க்கு எல்லாம் சொன்ன? மதுவும் சக்தியை விரும்பினாதான். எனக்கு தெரியும்” என்றார் பிரபாகரன்.
“அவ சின்னப் பொண்ணு. இவன் ஏதோ மிரட்டி வச்சிருக்கான். கல்யாணம் நடந்ததை யார் பார்த்தாங்கன்னு கேளுங்க” என சுஜாதா கூற, தன் சட்டைப் பையில் தயாராய் வைத்திருந்த திருமணப் பதிவு பத்திரத்தை எடுத்து நீட்டினான் சக்தி.
வாங்கிப் பார்த்த காவல்துறை ஆய்வாளர், “மேடம், அவங்க முறையா ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. உங்க பொண்ணும் அவங்க விருப்பத்தோடு கல்யாணம் நடந்ததா சொல்றாங்க. ஊரே அவங்க பக்கம் நிக்குது. பேசி சமாதானமா போயிடுங்க” என்றார்.
“மது… அம்மா உன் நல்லதுக்குதான் சொல்றேன். இந்த ஊர்ல உன்னால வாழ முடியாது. அந்தப் பையன் முரட்டு பையன் மாதிரி இருக்கான். இவன் கூட எப்படி உன்னால இருக்க முடியும்? இதுக்காகத்தான் உன்னை பெத்து வளர்த்தேனா. உன் வாழ்க்கையை பத்தி எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. எல்லாத்தையும் சிதைச்சிடாத, என் கூட வந்துடு” என்றார் சுஜாதா.
“சக்தி ரொம்ப நல்லவர்ம்மா. எனக்கு அவரை பிடிச்சிருக்கு” என்றாள் மது.
மதுவையும், சக்தியையும், தன் கணவரையும், ஊர் மக்களையும் மாறி மாறி பார்த்த சுஜாதா காவல்துறை அதிகாரியிடம் “இதுக்குதான் மினிஸ்டர் உங்களை இங்க அனுப்பி வச்சாரா? எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன். என் பொண்ணை என்னோட அனுப்பி வைங்க” என கேட்க,
“நம்ம ஊருக்குள்ள வந்து, நம்ம ஊர் மருமகளையே அராஜகம் பண்ணி கொண்டு போய்டுவாங்களா? எங்கள மீறி என்ன நடக்குதுன்னு பார்ப்போம். வாங்கடா எல்லாரும்” என ஊர் பெரியவர் ஒருவர் கூறினார்.
கடுப்பான காவல்துறை அதிகாரி, “மேடம், நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? நீங்க உங்க குடும்ப பிரச்சனையை ஊர் பிரச்சினையாக்க பார்க்குறீங்க. இன்னும் சொல்லப் போனா உங்க பொண்ணு எங்கள பிரிக்க பார்க்குறாங்கன்னு உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டியிருக்கும். சென்ட்ரல் மினிஸ்டர் உங்களுக்கு தெரிஞ்சவர்ங்கிறதாலதான் நான் இவ்ளோ பொறுமையா எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கேன்” என சுஜாதாவிடம் கூறியவர், “நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்” என பிரபாகரனிடமும் கூறினார்.
“நீங்க கொஞ்சம் என் தோள் மேலே இருந்து கையை எடுக்குறீங்களா?” என சக்திக்கு மட்டும் கேட்கும் படியாக மது சொல்ல, “இங்க இவ்ளோ பிரச்சனை நடந்துகிட்டு இருக்கே. எப்படி நீ தைரியமாக நிக்குற. இதனாலதானே?” என அவள் தோள் மீதிருந்த தன் கையை கண்களால் காட்டி சக்தியும் மெதுவாக மதுவிடம் கேட்க, “பிரச்சனையே உங்களாலதான்” என முணுமுணுத்தாள் மது.
திடீரென ஓடிவந்த மணிமேகலை “ஐயோ யாராவது ஓடியாங்களேன் சுகன்யா கதவை சாத்திக்கிட்டு திறக்க மாட்டேங்கிறா” என அலறினார்.
எல்லோரும் சுகன்யாவின் வீட்டிற்கு ஓட, கதவை சிலர் திறக்க முயல, விரைந்து கொல்லைப்புறம் ஓடிய சக்தி ஈட்டி ஒன்றை எடுத்து வந்து கதவை உடைத்தான்.
இடது கை மணிக்கட்டில் இரத்தம் வடிய, இரத்தம் தோய்ந்த பிளேடு ஒன்று கீழே கிடக்க, முகம் வெளிறிப் போய் இரண்டு அடி பின்னே எடுத்து வைத்து “ஏன் என்னை ஏமாத்திட்ட மாமா?” என சக்தியை பார்த்து கேட்டாள் சுகன்யா.