வானவில் கோலங்கள் -11

அத்தியாயம் 11

திருவிழா முடிந்து காப்பு அகற்றப்பட்டது. மதுமிதா சக்தி கூறிய காரணத்தை கூறியே அந்த ஊரிலேயே இருந்து கொண்டாள். தாலிக்கயிற்றை யாருக்கும் தெரியாமல் சுடிதாரின் உள்ளே மறைத்து வெளியே வராதவாறு பின் செய்து கொண்டு எப்பொழுதும் போல சிகிச்சையகம் சென்றாள்.

மணிமேகலை தன் கணவர் தங்கதுரையுடன் சக்தியின் வீட்டிற்கு சென்றார். சுற்றி வளைக்காமல் தன் மகளின் திருமணம் குறித்து விஸ்வநாதனிடம் கேட்க, வீரவேலை அழைத்தவர், “பஞ்சாங்கம் எடுத்துட்டு வர சொல்லுப்பா. வைகாசியில எந்த நாள் நல்லா இருக்குன்னு பார்க்கலாம். அன்னைக்கே சக்தி சுகன்யா கல்யாணத்தை வச்சிடலாம்” என்றார்.

தாத்தா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சக்தி, “என்ன தாத்தா இது? எத்தனை முறை நான் சுகன்யாவை கட்டிக்க மாட்டேன்னு சொல்றது? மீறி கல்யாணப் பேச்சு பேசுனா என்ன அர்த்தம்?” என்றான்.

“என்னடா தாத்தாவையே கேள்வி கேட்குற? உனக்கும் வயசாகுது. கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாமா? பெரியவனுக்கும் நாங்கதான் செஞ்சோம். ஏதாவது மறுப்பு சொன்னானா? உனக்கு மட்டும் என்னாங்குறேன்” என்றார் வீரவேல்.

“இருப்பா… அவன் என்ன சொல்றான்னு கேட்போம்” என்ற தாத்தா சக்தியைப் பார்க்க, “நான் சுகன்யாவை கட்டிக்க மாட்டேன். சுகன்யாவுக்கு வேற இடத்துல கல்யாணம் பேசுங்க. அதுக்கப்புறம் என் கல்யாணத்தை பத்தி பார்க்கலாம்’ என்றான்.

“என் பொண்ணு உன் பேரை பச்சை எழுதி வச்சிருக்கு மாப்பிள்ளை. வேற இடத்துல பார்க்க சொன்னா எப்படி?” என்றார் தங்கதுரை.

“சுகன்யாவை கட்டிக்கிறேன்னு நான் எப்பவும் சொல்லலை. அதுவா பச்சை குத்திக்கிட்டா நான் பொறுப்பாக முடியாது” என்றான் சக்தி.

“எய்யா சாமி… சக்தி கண்ணு… அப்படியெல்லாம் சொல்லாதய்யா. எம்மூட்டு பேத்தி உன்னைதாண்டா உசுரா நெனச்சு கிடக்கா. அவள ஏமாத்திபுடாதய்யா ராசா” என்றார் அன்னபூரணி.

“உன் பேத்தியை பத்தி மட்டும் கவலைப்படுறியே அப்பத்தா… என்னை பத்தி, என் மனசை பத்தி உனக்கு கவலை இல்லையா?” எனக் கேட்டான் சக்தி. அனுசுயா நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“சக்தி அந்த டாக்டர் புள்ளையை மனசுல வச்சுக்கிட்டுதான் இப்படி பேசுதுன்னு நினைக்கிறேன்ப்பா. என் பொண்ணுக்கு நீங்கதான் வழி சொல்லணும்” என்றார் மணிமேகலை.

“ப்ச்… சும்மா வாய்க்கு வந்தத உளறாத. அந்த புள்ளைக்கு வேற யாரோ ஒரு டாக்டரோட கல்யாணப் பேச்சு நடந்துகிட்டு இருக்கு” என மணிமேகலையை கண்டித்தார் விஸ்வநாதன்.

“சுகன்யா உன்னையே நினைச்சிகிட்டு இருக்குய்யா. நாங்களும் சொல்லி ஆசை காட்டிட்டோம். வேணாம்னு சொல்லாதப்பா. எங்களுக்காக சுகன்யாவை கல்யாணம் கட்டிக்கய்யா” என சக்தியிடம் கெஞ்சுவது போல பேசினார் விஸ்வநாதன்.

“உங்களுக்காக உசுர விட சொல்லுங்க விடுறேன். ஆனா இது மட்டும் நடக்காது தாத்தா. அப்படி என்னை மீறி செஞ்சீங்கன்னா உசுரோட என்னை சூலையில எரிக்கிறதுக்கு சமம். சொல்லிட்டேன்” என சக்தி கூற, அனுசுயா பயந்து போய் அவன் கையைப் பிடித்துக் கொள்ள, அன்னபூரணியும் பதறிப்போனார்.

“எய்யா அப்படி சொல்லாதய்யா என்னைப் பெத்த சாமி” என அழ ஆரம்பித்தார் அன்னபூரணி.

சாப்பிடாமலேயே சக்தி வெளியேற, அன்னபூரணி ஒரு பக்கமும் மணிமேகலை மறுபக்கமும் கண்ணீர் வடிக்க, “மாமா எங்களுக்கு உங்கள விட்டா யார் இருக்கா? ஆசையா காத்துக்கிட்டு இருக்கிற உங்க பேத்திகிட்ட இதை சொல்ற தைரியம் எங்களுக்கு இல்ல. நீங்களே சொல்லுங்க” என்றார் தங்கதுரை.

பெருமூச்சு விட்ட விஸ்வநாதன் “எல்லோரும் கொஞ்சம் பொறுமையா இருங்க. சக்தி உடனே வழிக்கு வர மாட்டான். கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். எப்படியும் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறது என்னோட பொறுப்பு” என்றார்.

அனுசுயா இவர்கள் பேசுவதை எரிச்சலுடன் நோக்க, வளர்மதி “என்னங்க உங்க தம்பி இப்படி சொல்லிட்டு போறார்” என தன் கணவனிடம் கேட்டாள்.

“அவன்தான் அப்போதிலிருந்தே வேணாம் வேணாம்ன்னு சொல்றானே… அதுக்குள்ள உன் தங்கச்சிய யார் பச்சை எழுத சொன்னது” எனக் கேட்டான் அவன்.

அனுசுயா சக்திக்கு காலை சாப்பாட்டை ஒரு டப்பாவில் அடைத்து குருவிடம் கொடுத்து, கொடுக்கச் சொல்ல வாங்கிக் கொண்டவன் அவனைப் பார்க்க சென்றான். சக்தி களத்தில் நின்று கொண்டு வைக்கோல் போரை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். அங்கு வந்த குரு,

“ஏண்டா சாப்பாடு மேல கோவத்தை காட்டுற? உன்னை மீறி என்ன நடக்க போகுது?” என்றான்.

“உனக்கு தெரியாது, பொசுக்குன்னு ரெண்டு பெருசுல ஏதாவது ஒன்னு படுத்துகிட்டு, என் கடைசி ஆசை… கட்டுடா அவ கழுத்துல தாலின்னு சொன்னாலும் சொல்லுவாங்க” என்றான்.

“உடனே நீ தாலிகட்டிடுவியா?” எனக் கேட்டான் குரு.

“ஏற்கனவே கல்யாணம் ஆனவன் எப்படி இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டுவேன்? ஏகபத்தினி விரதன் டா உன் தம்பி” என சக்தி கூற, “என்னடா சொல்ற?” என அதிர்ச்சியாய் கேட்டான் குரு.

“நேத்துதான் எனக்கு கல்யாணம் ஆச்சு” என்றான்.

“யாரோட?”

“டாக்டரோட”

“நம்ம ஊர் டாக்டர் பொண்ணோடவா?”

“அதை ஏண்டா இவ்வளவு சந்தேகமா கேட்கிற?”

“நம்ப முடியல டா. நீ உண்மையாதான் சொல்லுறியா?”

“சத்தியமா டா. மதுதான் என் பொண்டாட்டி” என்றவன் மதுவுக்கு அழைத்து ஒலிபெருக்கி பயன்முறையில் வைத்தான்.

“சொல்லுங்க சக்தி” என்றாள் மது.

“என்னங்க பொண்டாட்டி… புருஷனுக்கு ஒரு கால் கூட பண்ண மாட்டேங்கறீங்க?” எனக் கேட்டான் சக்தி.

“தேடி வந்து தாலி கட்டத் தெரியும். கால் பண்ணி பேச தெரியாதா உங்களுக்கு?” என மது கேட்க, சாதாரண பயன்முறையில் கைப்பேசியை மாற்றிய சக்தி, தள்ளி நின்று பேச ஆரம்பிக்க, குரு அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

சக்தி பேசி முடித்து வரவும், “என்னடா நடக்குது? அந்த புள்ளை உன்னை லவ் பண்ணி கல்யாணம் கட்டிகிட்டா?” என மீண்டும் ஆச்சர்யமாய் கேட்டான் குரு.

“ஏண்டா என்னை அந்த பொண்ணு விரும்பாதா? அவ மனசு முழுக்க நான்தான் இருக்கேன்” என தன் மீசையை முறுக்கிக் கொண்டே சக்தி கூற, “இப்ப என்னடா செய்யப் போற?” எனக் கேட்டான் குரு.

“ எனக்கு நீதான் சப்போர்ட்டா இருக்கணும்” என்றான் சக்தி.

“இங்க பாருடா மறைமுகமா என்ன வேணா செய்றேன். என்னைய எதிலேயும் இழுத்து விட்டுடாத”

“ஏன் தாத்தா மேல அம்புட்டு பயமா உனக்கு?”

“தாத்தா மேல இல்லடா பயம், என் பொண்டாட்டி மேல” என குரு கூற சக்தி சிரித்தான்.

“யார்கிட்டயும் சொல்லாத” என சக்தி கேட்டுக்கொள்ள, “எதுக்கு வம்புல மாட்டிக்கவா? நான் இதப் பத்தி வாய தொறக்க மாட்டேன். சீக்கிரம் உன் பொண்டாட்டியோட வீட்டுக்கு வந்து வாழற வழியை பாரு” என்றான் குரு.

சக்தி கோவமாக பேசி விட்டு செல்லவும் அவனது திருமண பேச்சை தற்காலிகமாக ஒத்தி வைத்தார் விஸ்வநாதன். சக்தியும் தேவியின் இறப்பு குறித்த மர்மத்தை கண்டுபிடிக்க, தன் அப்பத்தாவிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

தேவியின் இறப்பை பற்றி விசாரிக்க ஆரம்பித்த உடனே, ஒழுங்காக பதில் கூறாமல், பிரபாகரனை திட்டிக்கொண்டே ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.

அனுசுயா வந்து சக்தியை முறைக்க, “ஐயோ அப்பத்தா உன்கிட்ட தெரியாம கேட்டுட்டேன். விட்டுடேன்” என கையெடுத்துக் கும்பிட்டான்.

தன் அன்னையிடம் சென்று விசாரிக்க, “நீ ஏண்டா இதெல்லாம் கேட்குற?” எனக்கேட்டார்.

“உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. மாமாவை இந்த வீட்டோட சேர்த்து வைக்கலாமேன்னுதான். அப்படியே அவருக்கு இன்னொரு பொண்ணு இருக்குல்ல. அவரை இந்த குடும்பத்தோட சேர்த்து வச்சா எனக்கு கட்டி தர மாட்டாரு? ” என்றான் சக்தி.

“அன்னைக்கு நான் சொன்னப்ப என் அண்ணன் கதை விடுறார்ன்னு சொன்ன? இப்ப மட்டும் அவர் பொண்ண நீ கட்டனுமா? அதெல்லாம் தர முடியாது போடா” என அனுசுயா சொல்ல,

“மாமாவே தர்றேன்னாலும் நீ முடியாதுன்னு சொல்லுவ போல? நீங்க என்ன கட்டி தர்றது? அந்தப் பொண்ண நானே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறேன். அப்ப என்ன பண்ணுவ?” என்றான் சக்தி.

“ஏண்டா நீ விளையாட்டாதான பேசுற? முன்ன எல்லாம் என் அண்ணன்னு சொல்லுவ… இப்போ மாமாங்குற? கதை விட்டார்ன்னு சொன்ன… இப்போ கண்டுபிடிக்கிறேன்னு சொல்ற? அவர் பொண்ணை கட்ட போறேன்னு சொல்ற? என்னடா என்ன சங்கதி?” என சந்தேகமாய் அவனைப் பார்த்துக் கேட்டாள் அனுசுயா.

“வேற யார் என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டு. என்கிட்ட மட்டும் நல்லா பாயிண்ட் பாயிண்டா கேள்வி கேளு” என அவரது கன்னத்தை இடித்தான்.

சிரித்தவர் “உனக்கு என்ன தெரியணும் கேளு சொல்றேன்” என்றார்.

“தேவி அத்தையைப் பத்தி ஒன்னு விடாம எல்லாத்தையும் சொல்லு” என சக்தி கேட்க, சிறுவயது முதல் சக்தி கேட்டறிந்த அதே கதையை சிறிதும் குரலில் ஏற்ற இறக்கத்தை கூட மாற்றாமல் அப்படியே ஒப்பித்தார்.

‘ஒன்னும் கதைக்கு ஆகாது போலவே’ என சக்தி மனதிற்குள் சலித்துக்கொள்ள, “ஏண்டா என் அண்ணனை இந்த குடும்பத்தோட சேர்த்து வச்சிடுவியா?” எனக் கேட்டார் அனுசுயா.

“ஒன்னும் உருப்படியா சொல்லிடாத, நீ சொன்ன விஷயத்தை வச்சி, உன் அண்ணனை இந்த வீட்டுக்குள்ள இல்ல, இந்த ஊருக்குள்ளேயே கொண்டுவர முடியாது. நல்லா உக்காந்து எனக்கு யூஸ் ஆகுற மாதிரி ஏதாவது யோசிச்சு வை” எனக்கூறிச் சென்றான்.

வீட்டை விட்டு சென்றவன், மதுவை ஊருக்கு வெளியில் வர வைத்து, தன்னுடன் திருவாரூர் அழைத்துச் சென்றான். பதிவாளர் அலுவலகத்தில் வண்டியை நிறுத்த, “இங்கு எதுக்கு?” எனக் கேட்டாள் மது.

“எல்லாம் சட்டப்படி பதிவு செய்யத்தான்” என்றான் சக்தி.

“இப்போ இது தேவையா?”

“ஆமாம், ரொம்ப தேவை. என் தாத்தா, அப்பத்தா ரெண்டு பேரும் என்ன பிளான் வச்சிருக்காங்கன்னு தெரியல. உன்னையும் நம்ப முடியாது. உங்கப்பா வந்து நீ செஞ்சது தப்பு, என் மனசு கஷ்டப்படுது, என் மாமாவுக்காக சக்தியை விட்டுட்டு வந்துடு அப்படி இப்படின்னு ஏதாவது புலம்பினா என்னை விட்டுட்டு போனாலும் போய்டுவ. நமக்கு கல்யாணம் நடந்ததுக்கு என்ன சாட்சி இருக்கு? அதான் ரெஜிஸ்டர் பண்ணிட்டேனா நிம்மதியா இருப்பேன்” என கூற அவன் தோளிலேயே அடித்தாள்.

“ஏய் உள்ளததானடி சொல்றேன். ஏற்கனவே எனக்கு தெரியாம என்னை விட்டு போக பார்த்தவதான நீ?”

“அப்போ நான் மிஸ்.மதுமிதா. இப்போ உங்க பொண்டாட்டி”

“சரி விடு. உன்னை விட்டுட்டு நான் போய்ட்டேனா…? உனக்கு ஒரு சேஃப்டி வேணாம்?” என சக்தி கேட்க, “போய்டுவிங்களா…? கொன்னுடுவேன் உங்களை” என்றாள் மது.

இவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே குரு வந்திறங்க “ஐய்யோ… உங்க அண்ணன்” என்றாள் மது.

குருவுடன் அவர்களது வயலில் வேலை பார்க்கும் பழனிவேலும் வந்திருந்தான். மதுவை பார்த்து சினேகமாக சிரித்த குரு, சக்தியிடம் “இருடா நான் போய் பார்த்துட்டு வரேன்” எனக் கூறி உள்ளே சென்றான்.

சக்தியை ஆச்சரியமாய் மது பார்க்க, “என் அண்ணன்கிட்ட சொல்லிட்டேன். அவன் யாருக்கும் சொல்ல மாட்டான். பழனிவேலும் நம்ம ஆளுதான். வெளில சொல்ல மாட்டான்” என்றான்.

சிறிது நேரத்தில் குருபரனும் பழனிவேலும் சாட்சிக் கையெழுத்திட சட்டப்படி சக்திதரன்- மதுமிதா திருமணம் பதிவு செய்யப்பட்டது. பின் குருவும் பழனியும் கிளம்பி சென்றுவிட்டனர்.

“இனிமே சட்டப்படியும் நீதான் என் பொண்டாட்டி. யாராலயும் ஒன்னும் செய்ய முடியாது” என்றான் சக்தி.

“நீங்க பெரிய ஆள்தான் மாமா” என் மது கூற, “என்ன சொன்ன… திருப்பி சொல்லு” என்றான் சக்தி.

“நீங்க கேட்கிறப்ப எல்லாம் சொல்ல மாட்டேன், நான் சொல்றப்பவே நீங்க கேட்டுக்கணும்” என்றாள் மது.

“அது சரி…” என பாவனையாய் கூறி சக்தி மதுவைப் பார்க்க, “இன்னைக்காவது கோயிலுக்கு அழைச்சுட்டு போறீங்களா?” என கேட்டாள்.

“புதுப் பொண்டாட்டி கேட்டா மறுக்கவா முடியும்?” என்றவன் ஸ்ரீ தியாகராஜேஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு இருவரும் ஊரை நோக்கி கிளம்பினர்.

இருவரும் புல்லட்டில் சென்று கொண்டிருக்கும்போது, “நான் புல்லட் ஓட்டவா?” என மது கேட்க, “எதுக்கு குட்டையில விழறுதுக்கா?” என்றான் சக்தி.

“நீங்க பின்னாடி உட்கார்ந்து பிடிச்சுக்கோங்க” என்றாள்.

“என் உடம்பு உன் மேல படும். உனக்கு ஒரு மாதிரியிருக்கும்” என்றான்.

“பரவாயில்லை” எனக் கூறி சிரித்தாள் மது.

“சுண்டெலி நல்ல ரொமாண்டிக் மூட்ல இருக்கீங்க போல?” என கேட்டுக்கொண்டே வண்டியை நிறுத்தி அவளை முன்னால் அமரச்செய்து பின்னால் அமர்ந்து கொண்டான். முதலில் தடுமாறிய மது பின் நன்றாகவே ஓட்ட ஆரம்பித்தாள்.

“உன்னை சுண்டெலின்னு நினைச்சேன். பெரிய பெருச்சாளியா இருப்ப போல” என்றான்.

“ரொம்ப பேசினீங்க பெருச்சாளி மாதிரி கடிச்சு வச்சுடுவேன்” என்றாள் மது.

“அதுக்காகதாண்டி காத்துகிட்டு இருக்கேன்” என சக்தி கூற, வண்டியை ஆட்டி ஆட்டி மது ஓட்ட, “ஏய் என்னடி பண்ற?” என பதறினான் சக்தி.

“இப்படி ஏதாவது பேசுனா உண்மையிலேயே குட்டையில விட்ருவேன். வாயை மூடிக்கிட்டு வாங்க” என மது கூற, அவளது இடுப்பைச் சுற்றி சக்தி கைகளை போட்டுக் கொண்டான். மது வண்டியை நிறுத்தி விட்டாள்.

“ரோட்டுல போறவங்க எல்லாம் பார்க்குறாங்க” என்றாள்.

“எவன் அவன் என் பொண்டாட்டிய பார்க்கிறவன்?” என சக்தி கேட்க அவனை முறைத்தாள் மது.

“சரி ஓட்டு, தொல்லை பண்ணாம வர்றேன்” என்றான்.

“ஒன்னும் வேண்டாம். நீங்களே ஓட்டுங்க” என மது கூற, அவனே ஓட்டினான்.

“நீ என் இடுப்பை பிடிச்சுக்க. நான் ஒன்னும் உன்னை மாதிரி கோவிக்க மாட்டேன்” எனக் சக்தி கூற, பட்டும் படாமல் மது அவன் இடுப்பை பிடிக்க “கிச்சுக்கிச்சு மூட்டாம ஒழுங்கா பிடுடி” என்றான்.

இப்படியாக பேச்சும் சிரிப்புமாய் ஊர் எல்லையை வந்தடைந்தனர். மதுவை சிற்றுந்தில் ஏற்றிவிட்டு, சத்தி புல்லட்டில் பின்தொடர்ந்தான். சுகன்யாவின் திருமணம் முடியும் வரை தங்கள் திருமணம் பற்றி தெரிய வேண்டாம் என சக்தியுமே முடிவெடுத்திருந்தான்.

சுஜாதா அவருடைய தந்தை தாய் இருவரது நினைவு தினங்களிலும் ஏதாவது ஒரு ஊரில் இலவச மருத்துவ முகாம் இடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த முறை அவர்களது மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாமிட சுஜாதா தேர்ந்தெடுத்தது திருவாரூர்.

பிரபாகரன் “வேண்டாம், வேறு ஊருக்கு போகலாம்” என கூற “ஏன்? எதற்கு?” என ஆயிரம் கேள்விகள் கேட்டு தனது முடிவில் தீர்மானமாக இருக்க அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரண்டு நாள் இலவச மருத்துவ முகாமுக்காக சுஜாதா, பிரபாகரன் மற்றும் மருத்துவக் குழுவுடன் திருவாரூர் வந்திறங்கினார். இந்த குழுவில் கௌசிக்கும் இடம் பெற்றிருந்தான். மதுவிற்கு இவர்கள் திருவாரூர் வருவது பிரபாகரன் மூலம் தெரியும். அதனால் எச்சரிக்கையாக அன்று திருவாரூர் செல்லாமல் இருந்து கொண்டாள்.

மருத்துவ முகாமிற்கு தன் நண்பனை பார்க்க வந்திருந்தார் மருத்துவர் மூர்த்தி. மது தன்னுடைய மகள் என்பது ஊரில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறியிருந்த பிரபா, தன் மனைவிக்கு தெரியாமல்தான் அனுப்புகிறேன் என்ற விவரத்தை அவரிடம் கூறியிருக்கவில்லை.

சுஜாதாவிற்கு மூர்த்தியை தெரியும் என்பதால் அவரும் மூர்த்தியை பார்த்ததும் பேச வர, பிரபாவால் மூர்த்தியை எச்சரிக்கை செய்ய முடியவில்லை.

“மது வரலையா?” எனக்கேட்டார் மூர்த்தி.

“அவ வரலை. மதுவை உங்களுக்கு எப்படி தெரியும்?” எனக்கேட்டார் சுஜாதா.

“நான் சொல்லித்தானே மது அழகிய சூரபுரத்தில் சர்வீஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. ஒரு ஸ்நேக் பைட் கேஸ கூட கரெக்டா டயாக்னோஸ் பண்ணி காப்பாத்தினாளே. வெரி ஸ்மார்ட். பிரபா இதைப்பத்தி நீ ஒன்னும் சொல்லலையா?” என மூர்த்தி கேட்க, சுஜாதா காளி அவதாரம் எடுத்தார். சிறிது நேரத்தில் மூர்த்தி விடைபெற்று சென்று விட, பிரபாவுக்கு வியர்த்து வழிந்தது.

“மது இங்கே இருக்காங்களா?” என கௌசிக்கும் வியப்பாய் கேட்டான்.

கௌசிக் முன்பு எதுவும் கூற முடியாமல், தன் கோவத்தை அடக்கி, “வாங்க மதுவைப் பார்த்துட்டு வரலாம்” என பிரபாவை சுஜாதா அழைக்க, “நானும் வர்றேன்” என கௌசிக்கும் இணைந்து கொண்டான். அவனை தவிர்க்க முடியாமல் அவனையும் அழைத்துக் கொண்டு, முகாமின் பொறுப்பை வேறு ஒரு மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு மூவரும் அழகிய சூரபுரம் புறப்பட்டு சென்றனர்.