வானவில் கோலங்கள்-10

அத்தியாயம் 10

அழகிய சூரபுரம் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. முதல் நாள் கொடியேற்றத்துடன் கோயில் திருவிழா தொடங்கியது. அருள்மிகு சற்குணநாதர் மங்களநாயகி திருக்கோயிலின் விழா சிறப்பாக நடைபெற, பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் படையெடுக்க ஆரம்பிக்க, ஊரே நிறைந்து காணப்பட்டது.

புதிதாக முளைத்த சிறுசிறு தெருவோரக் கடைகள் வீதிகளை அடைத்திருக்க, ஆங்காங்கே நீர் மோர், பானகம் வைத்து வழங்கப்பட, ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் காற்றைக் கிழித்துக் கொண்டிருக்க, விருந்தினர் வருகையால் அனைவரது வீட்டிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, தேர் காவடி என பல பக்தர்கள் தெருவில் காவடி எடுத்துக்கொண்டு கோயில் நோக்கி செல்ல, ஆங்காங்கே பெண்கள் குடத்தில் நீர் கொண்டு அவர்களின் கால்களில் ஊற்றி வெயிலின் வெப்பத்தை கொஞ்சம் குறைத்தனர்.

சிகிச்சையகத்திலும் காலையில் இருந்து யாரும் வராததால், ஜன்னலுக்கு அருகில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மது.

சக்தி மதுவை தோப்பு வீட்டில் சந்தித்து பேசியதோடு சரி. அதற்குப் பின் அவளை வந்து பார்க்கவில்லை. தன் தந்தையிடம் காப்புத்தடை பற்றி மட்டும் கூறியிருந்தாள் மது. சக்தி பேசியதைப் பற்றி எதுவும் கூறியிருக்கவில்லை.

சக்தியிடமும் யாரும் சுகன்யா பச்சை குத்தியது பற்றியோ அவர்களது திருமணம் குறித்தோ எதுவும் பேசவில்லை. தங்கதுரையும், மணிமேகலையும் பேசலாம் என கூறியதற்கும், திருவிழா முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என விஸ்வநாதன் கூறிவிட்டார்.

சக்தி ஏற்கனவே சுகன்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து கொண்டிருப்பதால், விஸ்வநாதனே பேசிக் கொள்ளட்டும் என்று மற்றவர்களும் அமைதியாகவே இருந்தனர்.

திருவிழாவின் முதல்நாள் நடு இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அம்மன் சிறு பெண் போல அலங்காரம் செய்யப்பட்டு தாழம்பூவில் சடை பின்னி, தாமரை மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஊருக்கு நடுவில் இருந்த மண்டபத்தில் வைக்கப்பட, மக்கள் பூக்களை மழையென பொழிவித்து அம்மனை மகிழ்விக்க, வானத்திலும் தூறல்கள் விழ ஆரம்பித்தது.

தூறலோடு மழை நின்று விட, மேளதாளங்கள் ஒரு பக்கம் இசைக்கப்பட, பொய்க்கால் குதிரை நடனம் ஒருபக்கம் நடைபெற திரண்டிருந்த மக்களில் சில வாலிபர்களும் சேர்ந்து ஆட, பொன்னுத்தாயுடன் மதுவும் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதிர்ப்புறம் நின்றுகொண்டிருந்த சக்தியை மது பார்க்க, சக்தி மதுவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மதுவுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. வானவேடிக்கை நடக்க அதை எல்லோரும் பார்க்க, சக்தியையே பார்த்து நின்றாள் மது. அவன் இவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.

அவனது பாரா முகத்தை தாங்க முடியாமல், “எனக்கு தூக்கம் வருது, நான் வீட்டுக்கு போறேன் நீங்க பார்த்துட்டு அப்புறமா வாங்க” என பொன்னுத்தாயிடம் கூறி சென்று விட்டாள்.

இரண்டாவது நாள் பகலில் சற்குணநாதர் உற்சவமாக வர எல்லா வீடுகளிலும் நிறுத்தி ஆரத்தி காட்ட சிகிச்சையகத்திலும் நிறுத்தப்பட்டது. மது வெளியேதான் நின்று கொண்டிருந்தாள். உற்சவ மூர்த்தியை சுமந்துகொண்டு வந்தவர்களில் சக்தியும் ஒருவன். மது நிற்கும் திசைப் பக்கம் கூட திரும்பவில்லை சக்தி. கனத்த மனதுடன் சுவாமியை வணங்கிவிட்டு உள்ளே வந்துவிட்டாள் மது.

அன்று இரவு சீதா கல்யாணம் மேடை நாடகம் நடத்தப்பட்டது. மது அங்கே செல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி மூலமாக நாடகம் அவளுக்கு நன்றாகவே கேட்டது. ஏகபத்தினி விரதன் என ராமனை புகழ்ந்து பாடல் ஒலிக்க, சக்தியின் நினைவுகளே மதுவின் மனதில்.

எப்படி இவனை மறப்பது என நினைத்து நினைத்து தவித்துப் போனாள். ‘ஏன் மறக்கணும்? என் சக்தியை நான் மறக்க மாட்டேன். அவன் நினைவுகளோடே வாழ்ந்து விடுவேன்’ என தனக்குத்தானே கூறிக் கொண்டாள்.

மூன்றாவது நாள் மங்களநாயகி உற்சவம் நடைபெற்றது. அப்போதும் சக்தி மதுவை பார்க்கவில்லை. அவனைப் பிரிந்து செல்லலாம் என முடிவெடுத்தவளுக்கு கண்முன்னே அவனை வைத்துக்கொண்டு, தன்னை பார்க்காமல் அவன் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள்.

இன்னும் இரண்டு நாட்கள் எப்போது முடியும் என நிமிடங்களைக் கூட எண்ண ஆரம்பித்து விட்டாள் மது. இந்த பேரவஸ்தையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நான்காவது நாள் பூமிதி திருவிழா. பக்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை மனதிற்குள் வைத்து மூன்று நாட்கள் விரதம் இருந்து நான்காவது நாள் பூக்குழியில் இறங்க வேண்டும். பூக்குழி இறங்கும் பெண்கள் மஞ்சள் நிறப் புடவை அணிந்தும் ஆண்கள் மேலாடை இன்றி மஞ்சள் நிற வேஷ்டியுடன் இடுப்பில் துண்டு மட்டும் கட்டி கைகளில் வேப்பிலை தாங்கி நின்று கொண்டிருக்க, அவர்களில் ஒருவனாய் சக்தியும் நின்றுகொண்டிருந்தான்.

பக்தியுடன் அவர்கள் இறங்கி பூ மிதிக்க ஆரம்பிக்க சக்தியும் இறங்கி நடந்தான். மதுவுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது. ‘காலில் எதுவும் செப்டிக் ஆகிடுமோ?’ என நினைத்துப் பதறினாள்.

ஐந்தாம் நாள் காலையில் சற்குணநாதர் மங்களநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றது. வழக்கத்தை விட அன்று கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. திருக்கல்யாணம் முடிந்து தம்பதி சமேதராய் இருவரும் பெரிய தேரில் ஊரில் உலாவர, ஊரே கூடி வடம் பிடித்து தேர் இழுத்துக் கொண்டிருந்தது.

பொன்னுத்தாயி மதுவிடம் “நாளைக்கு திருக்கல்யாணம், நீங்க புடவை கட்டிக்கோங்க” என முதல் நாளே சொல்லியிருக்க மதுவுக்கு சக்தி வாங்கி கொடுத்த புடவை நினைவுக்கு வர, அதையே அன்று கட்டியிருந்தாள்.

தேர் இழுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க அவளது அலைபேசி அழைத்தது. சக்தியிடம் இருந்துதான் அழைப்பு வந்தது. ஆறு நாட்களாக ஒன்றும் பேசாமல் அவன் அழைக்கவும் பார்த்தவுடனே அழைப்பை ஏற்றுப் பேசினாள்.

“சீக்கிரம் கோயிலுக்கு வா” என்று மட்டும் கூறிவிட்டு கைப்பேசியை அணைத்து வைத்தான் சக்தி. இவள் மீண்டும் முயற்சி செய்ய, அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வர, என்னவோ ஏதோ என பயத்துடன் மது கோயிலுக்கு விரைந்தாள்.

ஊரே தேரிழுக்க கோயிலில் யாரும் இல்லை. மது சுற்றும் முற்றும் பார்க்க அவளது கையைப் பற்றியிழுத்து கோயிலுக்குள் சென்றான் சக்தி.

“சக்தி விடுங்க… என்ன பண்றீங்க? விடுங்க” எனக்கூறிய மது, அவனது பிடியிலிருந்த தன் கையை மற்றொரு கையால் விடுவிக்கப் பார்க்க, அவளால் முடியவில்லை.

அவனுடைய இழுப்பிலிருந்து விடுபட முடியாமல் கோயிலின் உள்ளே சென்றாள். அம்மன் சந்நிதிக்கு முன்னால் அவளை நிறுத்திய சக்தி “சாமி கும்பிடு” என்றான்.

“எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க?” எனக் கேட்டாள் மது.

“ம்… தாலி கட்டப் போறேன்” என்றான்.

“விளையாடாதீங்க” என்றாள் மது.

“நீ முதல்ல சாமி கும்பிடு. உன் மனசுல என்ன நினைக்குறியோ வேண்டிக்கோ. அதுக்கப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன்” என்றான்.

சக்தியை ஒரு முறை பார்த்தவள் அம்மனை நோக்கி கண்மூடி வணங்கினாள்.

“ஏதாவது மேஜிக் பண்ணி எங்க ரெண்டு பேரையும் எந்த பிரச்சினையும் இல்லாம சேர்த்து வச்சிடேன்… ப்ளீஸ்…” என மது மனமுருக வேண்ட, தன் சட்டைப் பையிலிருந்து பொன்னால் செய்யப்பட்ட திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றை எடுத்து மதுமிதாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளிட்டு, செல்வி.மதுமிதாவை, திருமதி.மதுமிதா சக்திதரன் ஆக்கியிருந்தான் சக்தி.

தன் கழுத்தில் சக்தியின் கைகள் உரச மது கண்களைத் திறந்து பார்க்க, மூன்றாவது முடிச்சிட்டு முடித்தவன், குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் வைத்துவிட்டு, “இந்த ஜென்மம் மட்டும் இல்லடி, இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் பொண்டாட்டி” எனக் கூறி சிரித்தான்.

மதுவுக்கு சந்தோஷம், பயம், அழுகை, கோபம்,இயலாமை எல்லா உணர்வுகளும் கலந்து வர “ஏன் இப்படி பண்ணுனீங்க?” எனக் கேட்டாள்.

“நீ சென்னைக்கு போனாலும் உன்னை தேடி வந்து தூக்கிட்டு வந்து தாலி கட்ட ரெடியாதான் இருந்தேன். அப்புறம் ஈசியா நடக்க வேண்டியத ஏன் சிக்கலாக்கிக்கணும்னு தோணுச்சு. அதான் இன்னைக்கே கல்யாணம் பண்ணிட்டேன்” என்றான்.

“ஒரு பொண்ணுக்கு இப்படி கட்டாய தாலி கட்டுறது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?” என்றாள்.

“கரெக்டா பேசு. விருப்பமில்லாத பெண்ணுக்கு கட்டாயத் தாலி கட்டுறதுதான் தப்பு. மனசு நிறைய என்னையவே நெனச்சுக்கிட்டு பெரிய தியாகி மாதிரி யாருக்காகவோ என்னை விட்டுட்டு போகப் பார்க்கிற உனக்கு கட்டினது தப்பில்லை. உண்மையை சொல்லு. இப்ப கூட என்னை கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தான அம்மன்கிட்ட வேண்டுகிட்ட?” எனக் கேட்டான் சக்தி.

தேர் ஒரு தெருவின் திருப்பத்தில் திரும்ப, குறுகிய சந்தாக இருந்ததால் இழுக்க முடியாமல் மக்கள் திணற, அவர்களை உற்சாகமூட்ட வெடிகள் வெடிக்கப் பட, சட்டென கேட்ட சத்தத்தில் பயந்துபோன மது, அனிச்சையாய் சக்தியிடம் நெருங்கி வந்து, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, கண்களை இறுக மூடி, தோளில் சாய்ந்த வண்ணம் நின்றாள்.

வெடிச்சத்தம் ஓயவும் கண்களைத் திறந்த மது அவனிடமிருந்து விலகப் பார்க்க, அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டான் சக்தி.

“விடுங்க சக்தி நான் போறேன்” என்றாள்.

“எங்க?” என்றான்.

“எங்கேயோ…” என்றவள் அவன் கையை உதறிவிட்டு கோயிலில் இருந்து வெளியே வந்தாள்.

யாரும் பார்ப்பதற்கு முன்னே வீடு நோக்கி விரைந்து சென்று விட்டாள். உள்ளே வந்தவள் பெரும் குழப்பத்துடன் தலையில் கை வைத்துக்கொண்டு கூடத்தில் இருந்த மர சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

பின்னாலேயே வந்த சக்தி, “ஏய் சுண்டெலி எப்படி இருந்துச்சு உன் மாமன் கச்சேரி?” எனக் கேட்க, அருகில் இருந்த தண்ணீர் குவளையை அவன் மீது விட்டெறிந்தாள். சக்தி நகர்ந்து கொள்ள, தரையில் விழுந்த குவளை ‘ணங் ணங்’ ஒலியெழுப்பி பின் ஓய்ந்தது.

அவளருகில் போய் அமர்ந்து கொண்ட சக்தி, “என்னால உன்னை விட்டுத் தர முடியல மது. அதான் தாலி கட்டிட்டேன். எனக்கு மட்டும் ஆசையா என்ன… நம்ம கல்யாணம் இப்படி நடக்கணும்னு? எனக்கு வேற வழி தெரியலை” என்றான்.

“இதனால என்னென்ன பிரச்சனை வரும்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தீங்களா?”

“என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம்”

“எப்படி முடியும் சக்தி? சுகன்யா உங்களையே நினைச்சுக்கிட்டு இருக்கா. அவளுக்கு என்ன பதில் சொல்றது? உங்க தாத்தாவுக்கும் அதுதான் விருப்பம். ஏற்கனவே என் அப்பா மேல கோவத்தில இருக்கிற தாத்தா, அவர் பொண்ணால உங்களுக்கும் சுகன்யாவுக்கும் நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சுன்னா என்ன சொல்வார்?”

“நான் ஒன்னும் அவளை விரும்பறேன்னு சொல்லி ஏமாத்தல. எல்லார்கிட்டயும் நான் தெளிவா அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். இருந்தும் அவங்க ஆசை படுறாங்கன்னு என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது. சுகன்யா ஒருத்திக்காக பார்த்தா… நம்ம ரெண்டு பேரு வாழ்க்கை என்னாகும்? உன்னை கல்யாணம் பண்ணலன்னாலும், ஏன் உன்னை பார்க்காமலேயே இருந்திருந்தாலும் கூட அவளை நான் கல்யாணம் கட்டியிருக்க மாட்டேன்” என்றான்.

“இப்ப எல்லோரும் என்னையும் என் அப்பாவையும்தான் தப்பா சொல்வாங்க” என்றாள்.

“உன்னை யாரும் எதுவும் பேச விட்டுட்டு நான் வேடிக்கை பார்ப்பேன்னு நெனச்சியா?”

“எனக்கு தெரியும் சக்தி. ஆனா அந்த பொண்ணு பாவம்தானே? உங்க பேரை பச்சையெல்லாம் குத்தியிருக்கு” என்றாள்.

“நானா ஆசைப்பட சொன்னேன். இத்தனைக்கும் உரிமையா கூட பழக மாட்டேன். இந்த அத்தைதான் தேவையில்லாம ஏதேதோ பேசி அந்த புள்ள மனச கெடுத்து வச்சிருக்கு. அதுக்கு நான் என்ன பண்ண?” என்றான்.

“அந்தப் பொண்ணு மனசு மாறி அதுக்கு வேற ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும் சக்தி. அதுவரைக்கும் இந்த கல்யாணம் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றாள்.

“அடியே ஜக்கம்மா! இந்த அளவுக்கு நீ மலையிறங்கினதே பெரிய விஷயம்” என சக்தி கூற, “ரௌடி” எனக் கூறி அவன் நெஞ்சில் அடித்து, பின் அடித்த நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.

“ஹப்பா… இதுக்கு எவ்ளோ போராட்டம்?” என்றான் சக்தி.

“ஆறு நாளா என் மூஞ்சிய நிமிர்ந்து கூட பார்க்கல. எனக்கு எவ்வளவு கஷ்டமாகிப் போச்சு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“என்னை மறந்துடுவேன்னு ஈஸியா சொன்ன? கஷ்டம் புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

“கஷ்டமா? நரகம் மாதிரி இருந்துச்சு. ஏன் அப்படி என்னை அவாய்ட் பண்ணுனீங்க?”

“முத ரெண்டு நாள் உன்னை பார்க்கலைன்னு தெரியுமா? மாமா உனக்கு தெரியாம உன்னைதான் சைட் அடிச்சுகிட்டு இருந்தேன்” என்றான்.

“அப்ப மத்த நாலு நாள்?”

“அது நேத்து பூ  மிதிக்காக விரதம் இருந்தேன் டி. அப்போ போய் உன்னைப் பார்த்தா என்னென்னவோ நினைப்பு வரும். சாமி குத்தம் ஆகிடாதா? அதான் பார்க்கலை” என்றான்.

“என்ன நினைப்பு வரும்?” என விழிவிரித்து மது கேட்க, “சொல்லவா?” என்ன மையலாகக் கேட்டான் சக்தி.

“ஒன்னும் வேண்டாம். நேத்து ஏன் அப்படி பண்ணுனீங்க? காலுக்கு எதுவும் ஆகலையே?” என மது கேட்க, “எல்லாம் என் பொண்டாட்டி கூட எனக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்ன்னு வேண்டுதல். சாமிக்கு வேண்டிக்கிட்டு தீ மிதிக்கிறது ஒன்னும் ஆகாது” என சக்தி கூற, மதுவின் கைப்பேசி அழைத்தது. அவனிடமிருந்து விலகியவள் எடுத்துப் பார்த்தாள்.

“அப்பாதான் கால் பண்றாங்க. நாளைக்கு கிளம்பறதை பத்தி கேட்பாங்க என்ன சொல்ல?” எனக் கேட்டாள்.

“வரலைன்னு சொல்லிடு” என்றான்.

“காரணம் கேட்பாங்க” என்றாள். அதற்குள் பிரபாகரனின் அழைப்பு முடிந்திருந்தது.

“இப்ப ஒன்னும் பிரச்சனையில்லை. வேற டாக்டர் கிடைக்கிற வரை இங்கேயே இருக்கேன்னு சொல்லு”

“அப்பா வேற டாக்டர் ஏற்பாடு பண்ணிட்டா?”

“உடனே எல்லாம் யாரும் கிடைக்க மாட்டாங்க. இப்போதைக்கு இப்படி சொல்லி சமாளி” என சக்தி கூற மீண்டும் பிரபாகரனிடமிருந்து அழைப்பு வந்தது.

சக்தி கூறியபடியே மது கூற, பிரபாகரன் முதலில் யோசித்தார். “உனக்கு அங்க சக்திய பார்த்துட்டே இருக்கிறது கஷ்டமா இருக்கும்” என்றார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் இப்போ நல்லா இருக்கேன்” என மது கூறவும் அவள் குரலில் என்ன உணர்ந்தாரோ சரியென்று ஒத்துக் கொண்டார்.

“ஹப்பா…” என பெருமூச்சு விட்டவள், “இப்போ உங்க தாத்தா கேட்டா என்ன சொல்றது?” எனக் கேட்டாள்.

“உன் அப்பாம்மா வெளிநாட்டுல இருந்து வர்றதில ஏதோ ப்ராப்ளம். அவங்க வர நாளாகும். அது வரை இங்கேயே இருக்கேன்னு சொல்லிடு” என்றான்.

“அடடா… வாய தொறந்தா என்னமா பொய் வருது?” என மது சொல்ல, அவள் கையைப் பிடித்திழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டவன், “உனக்கு ஐடியா சொன்னா என்னையவே கிண்டல் பண்ணுவியா?”எனக் கேட்டான்.

“விடுங்க சக்தி” என்றாள் மது.

“விடவா உன்னை கட்டியிருக்கேன்? புடவையில் சும்மா நச்சுன்னு இருக்கடி. அதுவும் இந்த இடுப்பு இருக்கே…” என சொல்லிக்கொண்டே அவளது இடுப்பில் கை வைக்கப் போக, “ஒழுங்கா சொன்னா கேக்க மாட்டீங்களா?” என்றவள் அவன் கையைப் பிடித்து மெதுவாய் கடித்தாள். அவன் கையை உதறும் நேரம் பார்த்து அவன் மடியிலிருந்து எழுந்தவள், “முதல்ல இங்கிருந்து கிளம்புங்க” என்றாள்.

“என்னையவா வெளியில போக சொல்ற?”

“இங்க உங்களைத் தவிர வேற யாரும் இல்லை. உங்களைத்தான் சொல்றேன், வெளியில போங்க”

“நான் உன் புருஷன்டி. இன்னைக்குதான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு. இன்னைக்கே இப்படி வெளியில் துரத்துறியே… இது நியாயமா?”

“ அட அப்படியா… எனக்கே தெரியாமல் என் கழுத்துல தாலியை கட்டிட்டு, பேசுற பேச்சை பாரு. உங்க கிட்ட கோபப்படாம இப்படி நான் பேசிக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம். நல்லா நினைப்பு வச்சுக்குங்க, சுகன்யாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். அப்படியே உங்க தேவி அத்தை ஏன் இறந்தாங்கன்னு கண்டுபிடிச்சு என் அப்பா மேல எந்த தப்பும் இல்லைன்னு உங்க தாத்தாவுக்கு நிரூபிக்கனும். அதுவரைக்கும் நம்ம கல்யாண விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது” என்றாள் மது.

“அப்போ இன்னைக்கு நைட் நமக்குள்ள ஒன்னும் கிடையாதா?”

“ரொம்பதான் ஆசை… முதல்ல எல்லாத்தையும் சரி பண்ணுங்க. அப்புறம்தான் எதா இருந்தாலும்”

“நான் பாவம் இல்லையாடி…”

“ஒழுங்கா சொன்னா கேக்க மாட்டீங்களா? எழுந்திரிங்க முதல்ல” என்றவள் அவன் கையைப் பிடித்து எழுப்பி, இழுத்து வந்து வீட்டிற்கு வெளியில் விட்டாள்.

சக்தி கண்களால் மதுவை உரிமையாய் பார்க்க, அவன் பார்த்த பார்வையே மதுவுக்கு வெட்கத்தை வரவழைத்தது.

அவன் கண்களை தன் கை கொண்டு மூடியவள் “எப்படி பார்க்குறீங்க?” என்றாள்.

விளையாட்டை கைவிட்டவன், தன் கண்களில் இருந்து அவள் கையை விலக்கி, “நம்ம கல்யாணத்துல உனக்கு சந்தோஷமா?” எனக் கேட்டான்.

“ம்… ஆனா கொஞ்சம் பயமாவும், கொஞ்சம் கில்டியாவும் இருக்கு” என்றாள்.

தன் கைகளால் அவள் முகத்தை தாங்கியவன், “சந்தோஷமா மட்டும் இரு. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். சரியா?” எனக் கேட்டான்.

மது சரி என்பதாய் மேல் கீழாய் தலையை ஆட்ட, “வர்றேன்டி பொண்டாட்டி” எனக்கூறி அங்கிருந்து கிளம்பினான் சக்தி.

திண்ணையில் இருந்த தூணைப் பிடித்துக்கொண்டு, தன் மனதிற்கு இனியவன் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மது.