அத்தியாயம் 27
மண்டபத்திலிருந்து வரும் பொழுதே! விது நன்றாக தூங்கி இருக்க, வாசன் குழந்தையை தன் தோளில் போட்டுக்கொண்டு சோர்ந்திருந்த மனைவியையும் மறுகையால் அணைத்தவாறுதான் வீட்டுக்குள் வந்தான்.
மந்த்ரா திடிரென்று இப்படி செய்வாளென்று எதிர்பார்க்காத அபர்ணா சுதாரிக்கும் முன் மூவரும் அவளை பார்த்து விட்டதில் இதற்கு மேலும் எதற்கு முகத்தை மறைக்க வேண்டும் என்று தலையில் இருந்த தொப்பியையும் நீக்க,
“அபி….” என்று நாதன் கண்கலங்க,
நீண்ட நாட்களுக்குப் பின் மகளைக் கண்டு “அம்மு…” என்று ராஜம் துடிக்க,
“வெக்கமா இல்ல… உங்க ரெண்டு பேருக்கும். ஓடிப்போனவளுக்காக இப்படி துடிக்கிறீங்க, என்ன மாஜி பொண்டாட்டி மேல பாசம் பொங்குதா?” அபர்ணா அடித்த அடியும் நியாபகத்தில் வரவே! பூர்ணா நாதனை முறைக்கலானாள்.
தன்னோடு இத்தனை நாட்கள் இருந்த அம்மு தன்னை பெற்ற அம்மாவா? என்ற அதிர்ச்சியில் வாசுகியின் உடல் ஆட்டம் காண விதுவை ராமநாதனின் கையில் கொடுத்த வாசன் அறைக்கு செல்லுமாறு கூறியவாறே! மனைவியை தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
பாய்ந்து அவள் கன்னத்தில் அறைந்த அபர்ணா “யாரு டி ஓடிப்போனா… எல்லாம் உன்னாலதான்” ஆவேசமாக கத்த, அபர்ணா என்ன புதுக் கதை கூறுகிறாள் என்று அனைவரும் திகைத்துப் பார்த்துக்கொண்டிருக்க,
“நீங்க தான் என் அம்மாவா… ஏன் மா…. என்ன விட்டுட்டு போய்ட்டிங்க? உங்க கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல” என்று வாசுகி அபர்ணாவின் கையை பிடித்துக்கொண்டு கதற, வாசனின் நெஞ்சங் கூடு வெற்றிடமான உணர்வு.
“நான் எங்கம்மா போனேன்…. என்ன கடத்திக் கொண்டு போய்ட்டாங்க” என்று அபர்ணா அன்று நடந்தவைகளுக்காக வாய் விட்டு கதறி அழலானாள்.