“அவ போகட்டும்மா” என்ற உத்தமசீலன் அதியாவை பார்த்து, “நீ என்ன நினைக்கிறன்னு தெரியலம்மா. ஆனால் உன்னோட பிள்ளைய மறந்துறாத” என்றார். அவள் அவரை பார்த்துக் கொண்டே சென்றாள்.
“அப்பா, என்ன சொல்றீங்க?” ஆரியன் கேட்டுக் கொண்டே அதியாவை பார்த்தான்.
“சோர்வா இருக்காப்பா. அதான் போறா. நீ போ அதி. ஓய்வெடு. உணவை துரு கொண்டு வருவா” ஆரியன் சொல்ல, அதியா சென்றாள். புருவம் சுருக்கி துருவினி அவனருகே வந்து, “கரிசனம் பெருசா தெரியுதே! என்னப்பா சொல்றீங்க?” என உத்தமசீலனை பார்த்தார்.
“ஆமா” என அவர் ஆரியனை பார்த்து, “விசயம் ஏதும் இருக்காடா?” எனக் கேட்டார்.
“இல்லையே!” என்று ஆரியன் இரு பிள்ளைகளையும் தூக்கி உணவுண்ண அமர வைத்தான்.
“ஆரு, நான் உன்னோட தூங்கவா?” ஆகர்ஷனா கேட்க, ஹம்ம்..அதுவும் சரிதான். அதிக்கு காய்ச்சலா இருக்குல்ல? துருவினி சொல்ல ஆகர்ஷனா மேலே பார்த்தாள். உத்தமசீலன் யோசனையுடன் அவளை பார்த்தார்.
“இருவரும் என்னோடவே இருங்க” என அவர்களுக்கு முத்தமிட்டான் ஆரியன்.
“இதை பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?” உத்தமசீலன் கேட்க, அண்ணா..இனி தர்சுவை நீ தான் பார்த்துக்கணும். ஆகர்ஷனா அவளை பார்க்க, “ஆகா..நீ என்னோட வர்றீயா?”
“நோ..நானும் தர்சுவோட ஆருவோட தான் இருப்பேன்” என்றாள் ஆகர்ஷனா.
உணவை முடித்து அவர்கள் உறங்க சென்றனர். யாரும் அறியாமல் கண்ணீருடன் அதியா அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காய்ச்சல் விட, உடல் சோர்வுடன் மட்டும் இருந்தது. ஆனால் பள்ளிக்கு தயாராகி வந்தாள் அதியா.
ஆகர்ஷனா பள்ளியில் சேரும் நாள். தர்சன் வகுப்பிலே அவளும் சேர்ந்தாள். இம்முறை உத்தமசீலனுடன் ஆரியனும் வந்திருந்தான். அவர்கள் பள்ளிக்கு உள்ளே செல்லவில்லை.
அதியாவிற்கு பதினொன்றாம் வகுப்பு போட்டிருந்தார்கள். பசங்களை பார்த்து கேசுவலாக பேசினாலும் அவ்வப்போது தடுமாறினாள். அதை தலைமையாசிரியரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இரு நாட்கள் பார்க்கலாம் என இருந்தார் அவர்.
மருத்துவர் கூறியது போல் ஒரு நாள் விட்டு ஒருநாள் வெளியே அழைத்து சென்றான் ஆரியன் அனைவரையும். ஆனால் அதியா பிள்ளைகளிடம் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை என்பதால் ஆரியன் அவளிடம் தனியாக பேச எண்ணினான். துருவினியோ உத்தமசீலனோ பேசினால் அவர்களிடமும் பேசுவதை நிறுத்தி இருந்தாள். ஆனால் ஆரியனிடம் அதிகமாகவே பேசினாள்.
இம்முறை விடுப்பு நாள் என்பதால் பீச் சென்றனர். உத்தமசீலன் மட்டும் வரவில்லை.
தண்ணீரில் விழுந்த ஆகர்ஷனாவை தூக்காமல் அப்படியே அதியா நிற்பதை பார்த்து அதிர்ந்தனர் மற்றவர்கள். வரும் அலையில் அவள் மூழ்கி அதிம்மா..அதிம்மா..என தான் அழைத்தாள். ஆனால் அதியா மனதை திடப்படுத்தி கேளாதது போல் நின்றாள். ஆரியன் தான் கடலுக்குள் சென்று ஆகர்ஷனாவை தூக்கி வந்தான்.
பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த மற்ற தாய்மார்களும் பெண்களும் பதற, அவள் மட்டும் அப்படியே நிற்பதை பார்த்து சீற்றம் எழுந்தது ஆரியனுக்கு.
“ஒன்றுமில்லை ஒன்றுமில்லை” ஷனாவை அமைதிபடுத்தி சரி செய்து விட்டு ஆரியன் அதியாவை நோக்கி கோபமாக வந்தான். ஆகர்ஷனாவோ அழுது கொண்டிருக்க, துருவினி அவளை அணைத்திருந்தாள்.
அதியா கையை பிடித்து இழுத்து வந்து ஆகர்ஷனா முன் நிறுத்தி, “ஷனா உன்னை தான அழைத்தால் உனக்கு கேட்கலையா? அப்படியே நிக்குற..கடலுக்குள்ள போறா..மத்தவங்க பதறுறாங்க. அவளோட அம்மா உனக்கு பதட்டமே இல்லை” சீற்றமுடன் கத்தி அவளை உலுக்கினான் ஆரியன.
“ஆமா, என்னால முடியல. ரொம்ப டயர்டாகிட்டேன். அதான் நீங்க இருக்கீங்கல்ல? பார்த்துக்கோங்க. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். எனக்கு நீங்க வேணும்” அவள் சொல்ல, அவன் சீற்றம் எல்லையை கடந்து, அவளை கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
நீங்க அடிச்சாலும் இதை தான் சொல்வேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. நீங்க மட்டும் போதும் என கத்தினாள் அதியா.
“அதி” துருவினி கத்த ஆகர்ஷனா அதிர்ந்து, “அதிம்மா” என அவளிடம் ஓடி வந்தாள். ஆகர்ஷனாவை மனசாட்சியே இல்லாமல் பிடித்து கீழே தள்ளினாள் அதியா.
“அதிம்மா” என சொல்லிக் கொண்டே ஆகர்ஷனா கீழே விழுந்தாள். “ஆகா” தர்சன் அவளிடம் வந்தான்.
ஆகர்ஷனா அழுது கொண்டே, “தர்சு அதிம்மா என்னை தள்ளி விட்டுட்டாங்க” என அழுதாள். “அதிம்மா, ஐ ஹேட் யூ” கத்தினான் தர்சன்.
ஆரியனோ சினம் மிகுதியில்..ச்சீ..உன்னை நான் குழந்தை போல் எண்ணினேன். எனக்கும் உன்னை பிடித்திருந்தது. என் எண்ணம் தவறுன்னு நிரூபிச்சுட்ட. இனி ஷனா என் பொறுப்பு. எங்க வாழ்க்கையில நீ வரவே கூடாது. இனி தர்சனுக்கு மட்டுமல்ல ஷனாவுக்கும் எல்லாமே நான் மட்டும் தான் என கத்தினான்.
“ஆரு, சாரி. நான் கோபத்துல்ல பேசிட்டேன்” என அதியா ஆரியனிடம் கெஞ்சினாள்.
அவளை அவன் தள்ளி விட்டு,“வா துரு” என அவளையும் இழுத்து சென்றான். துருவினி கீழே விழுந்த அதியாவை முறைத்துக் கொண்டே சென்றாள்.
“நான் நினைச்சது நடந்துருச்சு” என கண்ணீருடன் அங்கேயே அமர்ந்தாள் அதியா. அவளை சுற்றி இருந்தவர்கள், என்ன அம்மா இவ? பிள்ளையை காப்பாத்தாம இப்படி பேசுறா? அவன் இவ புருசன் இல்லை போல..அடுத்தவ புருசனை வளைச்சு போட பாக்குறா போல. அவன் உசறாகிட்டான்.
அவனை மாதிரி தான் ஆண் இருக்கணும். தன்னை அடைய நினைத்தவள் பொண்ணை அவளிடம் விட்டால் அவளும் கெட்டுப் போயிருவான்னு தான் வளர்ப்பதாக சொல்றானே.. அவன் மனிதன் என ஆரியனை போற்றியும் அதியாவை தூற்றியும் பேச்சுக்கள் அவள் காதில் கேட்க, மனம் உடைந்து கதறி அழுதாள் அதியா.
அவள் முன் ஒருவன் வந்தான். “மேம் தயாரா இருக்கீங்களா?” கேட்டான். கண்ணை துடைத்து அவள் எழ, “மேம் இங்கேயே..” அவன் பேசத் தொடங்க, கையை உயர்த்தி “பேச வேண்டாம்” என எழுந்து அவனுடன் சென்றாள்.
வீட்டிற்கு இவர்கள் வர இரவானது. உத்தமசீலன் அதியாவை தேட, ஆரியனின் கோபமான முகத்தில் அவனிடம் ஏதும் கேட்கவில்லை. அவன் துருவினியிடம் பிள்ளைகளை கொடுத்து விட்டு அவனறைக் கதவை படாரென சீற்றமுடன் சாத்தினான்.
“அதி எங்கம்மா?” தன் மகளிடம் கேட்டார் உத்தமசீலன்.
“அப்பா, அவ இப்படி பண்ணீட்டா” என அழுது கொண்டே விசயத்தை சொல்லிக் கொண்டே ஆகர்ஷனாவை இறுக அணைத்தாள் துருவினி.
ஆகர்ஷனா அவளிடமிருந்து துள்ளி, “நான் அதிம்மாட்ட போகணும்.. அதிம்மா..அதிம்மா” என வெளியே ஓட, கதவை திறந்து வந்த ஆரியன் அவளை தூக்கி தோளில் போட்டு அவனறைக் கதவை சாற்ற முனைய, “அப்பா” தர்சன் உள்ளே ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டான்.
“ஷனாம்மா, நீ என்னோட இருக்க மாட்டாயா?” ஆரியன் கண்கலங்க கேட்க, அதிம்மா விட்டு நான் இருந்ததேயில்லை. அதிம்மா எதுக்கு என்னை தள்ளி விட்டாங்க? என்னை அம்மாவுக்கும் பிடிக்கலையா? அப்பா மாதிரி அதிம்மாவுக்கும் என்னை பிடிக்காமல் போச்சா ஆரு? என அவனை கட்டிக் கொண்டு பாப்பா அழுதாள்.
இல்லடா. நான் இருக்கேன்ல்ல. ஷனா அழக் கூடாது என அவளுக்கு முத்தமிட்டு படுக்கையில் படுத்து பிள்ளைகளை அணைத்தவாறு படுத்தான்.
“அண்ணா” சத்தம் கேட்டு “உள்ள வா” என்றான் சினமான குரலில்.
“பிள்ளைகளுக்கு உணவு” அவனுக்கும் எடுத்து வந்திருந்தாள் துருவினி.
வச்சிட்டு நீ போ..
அண்ணா, நீயும் சாப்பிடு..
போ..கத்தினான்.
அவள் செல்லவும் பிள்ளைகளுக்கு உணவை கொடுத்து விட்டு அவர்களை தன் மார்பில் போட்டு உறங்க வைத்தான். அவனால் அவன் மனைவியின் செயலை விட அதியாவின் பேச்சு மிகவும் பாதித்தது.
பின் தான் ஆகர்ஷனா பேசிய எண்ணம் வர, “அப்பா மாதிரி அதிம்மாவுக்கும் பிடிக்காமல் போச்சான்னா? ஷனா அப்பாவுக்கு அவளை பிடிக்காதா? அவள் அப்பா தான் உயிரோடவே இல்லையே!” சிந்தித்தான். அவனால் தூங்க முடியவில்லை.
அதியாவை அப்படியே விட்டு வந்தது ஓடிக் கொண்டே இருக்க, மனபாரத்துடன் அவள் பேசியதை வைத்து கண்களை மூடி படுத்தான். அவனை நித்ராதேவி ஆட்கொள்ள வந்தும் அவனை அவளால் ஆக்கிரமிக்க முடியாமல் சென்று விட்டார்.
மறுநாள் காலை நேரம் கழித்து விழித்தான் ஆரியன். அருகே பசங்க இல்லை.
“இது கனவாக இருக்கக்கூடாதா? அதியாவின் க்யூட்டான அழகு முகமும், அவளின் குழந்தைதனமும் தன் முன் தோன்றாதா?” அவன் மனம் ஏங்கியது.
வெளியே வந்தான் ஆரியன்.
“உத்தமசீலனோ, அவ என்ன செஞ்சிருந்தாலும் இப்படி பொட்டப்பிள்ளையை விட்டு வரலாமா? பிள்ளை என்ன செய்றாலோ? எங்க இருக்காலோ? யாரும் அவளை ஏதும் செய்திருந்தால்” என ஆதங்கமுடன் கத்தினார்.
நான் பார்த்துட்டு வாரேன்..
இனி என்னத்த பாக்க போற? நேற்று இரவே நான் சென்று பார்த்தேன். அதி அங்க இல்லை..அங்க மட்டுமல்ல சுற்றி எல்லா இடத்திலும் தேடினேன் இல்லை என்றார் ஆங்காரமாய்..
இல்லையா? வந்துருப்பான்னு..
வர்றதா? அண்ணா எனக்கு பயமா இருக்கு. அவளுக்கும் இன்னும் ரோடு கூட கிராஸ் பண்ணத் தெரியாது.
அதிம்மா, கொஞ்ச நாளாக என்னிடம் பேசவில்லை. என்னிடம் விளையாடலை. சாப்பாடு எனக்கு கொடுத்த பின் தான் சாப்பிடுவாங்க. பசித்தாலும் அவங்க முதல்ல சாப்பிட மாட்டாங்க.
ஆரு, எனக்கு அதிம்மா வேணும் அவள் அழ, தர்சனும் அழுதான்.
“நான் தேடிட்டு வாரேன்” என ஆரியன் சொல்லும் போது அவன் அலைபேசி ஒலித்தது. துருவினி கையிலிருந்த அலைபேசியில் மெசேஜ் சத்தம் கேட்க, அவள் எடுத்து பார்த்து அலைபேசியை தவற விட்டாள்.
“என்னாச்சும்மா?” உத்தமசீலன் கேட்க, பீச்ல்ல ஒரு பொண்ணோட சடலம் இருக்காம் அவள் அதை ஓபன் செய்ய, அவளது அலைபேசியில் டேட்டா இல்லை என வரவும் இது வேற என அழுதாள் துருவினி.
“இல்ல, அதி இப்படியெல்லாம் பண்ண மாட்டா” அவர் சொல்ல, ஆரியனுக்கு வந்த அலைபேசியில் சொன்னதை கேட்டு அதிர்ந்து கண்ணீருடன் தன் குடும்பத்தை பார்த்தான்.
“என்னாச்சு? நம்ம அதி யாஅது? சொல்லுடா?” துருவினி அவனை உலுக்க, இல்ல..இல்ல… இல்ல என தலையை பிடித்து கத்தினான் ஆரியன்.
என்னன்னு சொல்லுடா? உத்தமசீலன் பதட்டமாக கத்தினார்.
அப்பா, பள்ளியில் அவளோட சான்றிதழை வாங்க ரௌடி ஆளுங்க வந்தாங்களாம். தர மாட்டேன்னு சொன்னதுக்கு அவர்களில் ஒருவன் அதிக்கு, இப்ப திருமணம்ன்னு சொல்லி அவளது திருமணக்கோல புகைப்படத்தை காட்டினானாம்..
“வாட்? பீச்ல்ல அந்த பொண்ணு அவ இல்லையா?” என நெஞ்சில் கையை வைத்து “தேங்க் காட்” என்றாள்.
திருமணமா? என உத்தமசீலன் சிந்திக்க, ஆரியன் அலைபேசி மீண்டும் அலறியது. உத்தமசீலன் அதை ஸ்பீக்கரில் போட்டார்.
சார், அதியாவை அவ அம்மா அவங்க சொந்தக்காரப்பையனுக்கு மணமுடிக்க அவளை வரவச்சிருக்காங்க. அவள் திருமணம் நடக்கும் நேரம் யாரோ அவளை கடத்திட்டாங்க. அவ மாமாவாக தான் இருக்கும். சீக்கிரம் வாங்க..
“நீங்க யாரு? எங்க வரணும்?”
சார்..வாங்க..முதலாவதாக அவளை நீங்க டிராப் செய்த “பீச் சைடு ஹோட்டல்” என்று அலைபேசி துண்டிக்கப்பட்டது.
மறுநொடி பைக்கை விரட்டி கிளம்பினான் ஆரியன்.
“ஹெல்த்தி வே” பீச் சைடு ஹோட்டல்”
ஆரியன் பைக்கை கீழே போட்டு விட்டு வேகமாக பீச் பக்கம் ஓடினான். வருண் அனைத்தையும் ரிசர்வ் செய்து வைத்திருக்க அங்கே ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. அதியாவை காதலிப்பது போல் ஏமாற்றிய நிரஞ்சனும் அங்கே தான் இருந்தான்.
நிரஞ்சனை பார்க்கவும் ஆரியனுக்கு சினம் பற்றிக் கொண்டு வந்தது. அவனை ஆரியன் அடிக்க, அவனும் ஆரியனை கண்டு கொண்டான்.
“டேய் வாங்கடா” கத்தினான் நிரஞ்சன். ஆட்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்களிடம் ஆரியன் சண்டையிட்டு கொண்டிருக்க, ஆரியனுக்கு உதவ சிலர் வந்தனர். “இவனுக எப்படி இங்க வந்தாங்க?” ஆரியன் அவர்களை பார்த்தான்.
அது அவனுடனே வளர்ந்தது. எப்படிடா குறையும்? பிரகாஷ் சொல்ல, சரிடா வந்த வேலையை பாருங்க விஷ்ணு சொல்ல, “அட நல்லவன் சொல்றான். கேளுங்கடா லோகேஷ்” மேலும் அவனை கேலி செய்தனர்.
நண்பர்களின் உரையாடலை ஆரியன் காது கேட்டுக் கொண்டிருந்தாலும் நினைவு முழுவதும் அதியாவாக இருந்தாள்.
ஆரியன் உள்ளே நுழைய, “டேய் இவனுக யாருடா?” என ஆரியன் நண்பர்களை பார்த்து வருண் தன் ஆட்களிடம் கேட்டான்.
சார், ப்ரெண்ட்ஸ் மாதிரி பேசிக்கிட்டாங்க..
“நண்பர்களா? அவனுகளையும் சேர்த்து முடிங்கடா” என வருண் சொல்ல, ஆரியனோ மனம் அடிக்க அதியாவை பார்த்தான்.
அவள் வாயில் துணியை திணித்து கையை கட்டி வைத்திருந்தனர். பட்டுப்புடவை, நகைகள், அதிகப்படியான ஒப்பனை, தலைமுழுவதும் பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். அழுது கொண்டிருந்தாள்.
அதியா ஆரியனை பார்த்து அழுது கொண்டே எழுந்தாள். வருண் வேகமாக அவளிடம் வந்து, கையில் துப்பாக்கியை எடுத்து, நீ மட்டும் இப்ப நகர்ந்தேன்னா, “அவன் இந்த நிமிசமே செத்துருவான்” என துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து, “ஓர் அடி எடுத்து வச்ச இவளோட மூளை சிதறிடும்” என ஆரியனை மிரட்டினான்.
ஆரியன் கையை மேலே தூக்க, “அவனோட நண்பர்களை பிடிச்சு கட்டுங்கடா” வருண் சொல்ல, அவன் நண்பர்களை கட்டி போட்டனர்.
வருண் அதியாவை இழுத்துக் கொண்டே ஆரியன் முன் வந்து துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்துக் கொண்டு, இவனை முடிங்கடா. நேரம் போயிட்டே இருக்கு.
நல்லா பாரு. நீ சொன்ன மாதிரி வந்துட்டான். ஆனால் உயிரோட போக மாட்டான் என்றான் வருண் அதியாவிடம். அவள் அழுது கொண்டே அவனை கண்ணீருடன் பார்த்து, ஏதோ பேச எண்ணினாள்.
ஷ்..என வருண் அதியாவை அணைத்தவாறு துப்பாக்கியுடன் தோளில் கையை போட்டு அவள் தலையில் வைத்து, “ஆரம்பிங்கடா” என கொஞ்சலாக சொல்லி அவள் கழுத்தில் முத்தமிட நெருங்கினான். அதியா அழுது கொண்டே முகத்தை திருப்பினாள்.
ஆரியனுக்கோ சுர்ரென ஏறியது. ஆனால் எதுவும் செய்யமுடியாது என அமைதியாக நின்றான். ஆட்கள் அவனை அடிக்க, வேண்டாம்டா..என அவன் நண்பர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தனர்.
மாமா பாரு அது..என வருண் அவளது அழகிய பணியார கன்னத்தை அழுத்தி பிடித்து திருப்ப, அவள் வாயிலிருந்த துணி கீழே விழுந்தது.
“வாவ், ப்யூட்டிபுல் லிப்ஸ்” அவன் வர்ணிக்க, அவன் முகத்தில் எச்சிலை துப்பினாள் அதியா.
“ஏய், உனக்கு எவ்வளவு தைரியம்டி?” என அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் வருண். அதியா கீழே விழுந்தாள்.
அடி வாங்கிக் கொண்டிருந்த ஆரியனுக்கு கண்ணிற்கு மேல், உதடு, நெற்றி, கை, கால்களில் அடிபட்டு கீழே கிடந்தான். அவன் நண்பர்களோ ஆரியா..கம் ஆன்..கம் ஆன்..அவனை ஊக்குவித்தனர்.
“ஆரு, எழுந்திருங்க..போயிருங்க” அதியா எழாமல் கத்திக் கொண்டிருந்தாள். இச்சமயத்தை ஆரியன் பயன்படுத்தி வருண் கையிலிருந்த துப்பாக்கியை எத்தி விட்டு அவனையும் தள்ளினான்.
துப்பாக்கி தள்ளி சென்று விழ, அதியாவை தூக்கி விட்டு ஆரியன் அவளுடன் திரும்ப, ஆரியனை ஓங்கி எத்தினான் வருண்.
ஆரியன் கீழே விழ, அதியாவும் கீழே விழுந்தாள்.
“ஆரு, நீங்க போயிடுங்க. இவன் கொன்றுவான்” என அதியா அழுது கொண்டே அவனுடன் எழுந்தாள். எழுந்தவுடனே வருண் ஆட்கள் ஆரியனை அடிக்க வந்தனர். அதியாவை அவன் நெருக்கமாக நிற்க வைத்து, “சும்மா அழாம நான் சொல்வதை கொஞ்சம் கேக்குறியா?” கேட்டான்.
திரும்பி ஹா..என அவள் அவனை விழித்து பார்க்க, அவள் தலையை அழுத்தி குனிய வைத்து அவனும் குனிந்து அவர்களை அரிவாளால் வெட்ட வந்தவனை லாவகமாக ஏமாற்றி அவளை அணைத்தவாறு திரும்பி நகர்ந்து நின்று, கேக்குறியா? கேட்டுக் கொண்டே சண்டை போட்டான்.
ம்ம்..கேக்குறேன் என அவள் அவனையே பார்க்க, அவளை அவனது ஒரு கையிலிருந்து மறுகைக்கு மாற்றியவன். அழாம எனக்கு ஏற்றவாறு அசைந்தேனா போதும் என பேசிக் கொண்டே அவன் சண்டையிட, அவளோ அவனை மெய்மறந்து பார்த்துக் கொண்டு.. அவன் நெற்றியிலிருந்த இரத்தத்தை துடைக்க, “சொன்னதை செய்” என்றான்.
டேய் மச்சி, நம்ம ஆரியனாடா இது? என்ன ரொமான்டிக்கா இருக்கு? இந்த பொண்ணை லவ் பண்றானோ? லோகேஷ் கேட்க, அவன் வரவும் நீயே கேளேன்..
ஏன்டா?
“அவன் சொல்றது சரின்னு தான் படுது” என பிரகாஷ் சொல்ல, “வாய்ப்பேயில்லை” என விஷ்ணு சொன்னான்.
பார்க்கலாம்டா. எவ்வளவு பெட் வைக்கலாம்?
“ஷ்…ஹப்பா ஆரம்பிச்சிட்டானுகளே!” விஷ்ணு அலுத்துக் கொண்டான்.
ஆரியன் வருணின் ஆட்களிடம் சண்டை போட ஒருவன் நீட்டிய கத்தி அதியா மீது படும் முன் அவன் கையை பிடித்து “அதி கொஞ்சம் நகரு” என சொல்லி, அவளது வெற்று இடையை பிடித்து அவனுடன் இணைத்து அவளுடன் அவனும் திரும்பி கத்தி வைத்திருந்தவனையும் இழுத்து அவன் கையிலிருந்த கத்திய ஆரியன் உருவிய வேகத்தில் கொல்ல வந்தவன் தள்ளி சென்று விழுந்தான்.
அதியாவோ ஆரியனையே கண்ணிமைக்காது பார்த்தாள். மற்றொருவன் அவர்களிடம் வர, அதி..காலை ஃபிஃப்டி பர்சன்ட் ஸ்ட்ரெயிட்டா நீட்டி மற்ற காலை மடக்கிகோ என சொல்ல, அவன் அவளது இடையை பிடித்து அவளையே தூக்க, அவள் நீட்டிய காலருகே மற்றவன் வரவும், “ஓங்கி எத்து பார்க்கலாம்” என்றான்.
“அவள் எங்கே எத்துவது?” மூச்சற்று அவள் அவனை பார்க்க, “சொல்றதை செய்” என அவன் சொல்லி அவளை அப்படியே தூக்கி சுற்ற, அவர்களை சூழ்ந்த மூவரை எட்டி உடைத்தாள்.
ஆரியன் இறக்கி விடவும், ஆரு..எனக்கு..எனக்கு..எனக்கு அவள் இழுக்க, “உன்னோட பேச எனக்கு நேரமில்லை” என அவளை அருகே வைத்துக் கொண்டே சண்டை போட்டான். வெளியிலிருந்து விசில் பறந்தது.
“இல்ல மச்சி, இவன் ஆள் எவனாக தான் இருக்கும்” என விஷ்ணு கூறினான்.
அதை விடுங்கடா. இங்க பாருங்க..நம்ம மிஸ்டர் பர்பக்ட் சண்டை ரொமான்ஸ்ன்னு கலக்குறாரு. கண்டிப்பா இவ நம்ம தங்கச்சிம்மா தான்டா லோகேஷ் சொல்ல, அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
பணத்தை தயாரா வச்சுக்கோ. பெட்ல நான் தான் ஜெயித்தேன் என லோகேஷிடம் பிரகாஷ் சொல்ல, நான் ஒத்த நயா பைசா கூட தரமாட்டேன். உன்னால முடிஞ்சா என்னோட மனைவிட்ட வாங்கிக்கோ..
“எனக்கு தேவை தான்” பிரகாஷ் தலையில் அடித்தான்.
வருணோ கொந்தளித்து விட்டான்.
ஒரு கட்டத்தில் ஆரியனுக்கு எனர்ஜி குறைய வருணே களத்தில் இறங்கினான்.
என்ன தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அதியாவின் நெருக்கம், அவளின் அழகான தோற்றம், பூவின் நறுமணத்தோடு அவளுடைய மனமும் ஆரியனை வெகுவாய் ஈர்த்துக் கொண்டு தான் இருந்தது.
இவளை தனியே விட்டால் மறுநிமிடம் அந்த வருண் கையில மாட்டிருவான்னு பக்கத்துல்ல வச்சி சண்டை போட்டால், தீப்பிழம்பாக நெஞ்சம் கொதிக்குதே! என எண்ணிய நேரம் தான் வருண் அவன் ஆட்களை தள்ளி விட்டு அவர்களிடம் சீற்றமுடன் வந்தான்.
இவனை யாரும் ஏதும் செய்யக் கூடாது. நான் தான் செய்வேன் என வருண் கத்த, இவ்வளவு நேரம் ஆரியனின் பிடியிலும் உணர்வுகளின் பிடியிலும் இருந்த நம்ம பைங்கிளி அதியாவோ மிரண்டு, மீண்டும் ஆரியனை ஒட்டிக் கொண்டாள்.
“அது, என் பக்கத்துல்ல வா இல்ல இவனை கொன்றுவேன்” வருண் அதியாவை மிரட்ட, அவள் மெதுவாக ஆரியனிடமிருந்து விலகினாள்.
ஆரியன் அவள் கையை இறுக பற்ற, “ஆரு..வேண்டாம். நீங்க எல்லாருக்கும் வேண்டும்” அவன் கையை எடுத்து விட்டாள்.
“வாவ், அருமையான காட்சி. இந்த சீனை மட்டும் படத்துல்ல வச்சானுக படம் ஹிட் அடிக்கும்” லோகேஷ் சொல்ல, அடியாள் ஒருவன் இதை கேட்டு, “உங்க நண்பன் ஆபத்துல்ல இருக்கான். படம் பார்ப்பது போல் கமெண்டு பண்ணீட்டு இருக்கீங்க?”
“அய்யோ, இனி இந்த காட்சி கிடைக்குமோ கிடைக்காதோ? எங்க நண்பனை காதல் மன்னனாக இப்பொழுது தான் பார்க்கிறோம். நீ வேற பார்க்க விடாமல் டிஸ்டர்ப் பண்ற?”
ஆரியனோ அவள் கையை பிடித்து இழுக்க, வருண் ஆரியன் அசந்த நேரத்தில் அவன் வயிற்றில் ஓங்கி குத்தினான். ஆரியன் வாயிலிருந்து இரத்தம் வடிந்தது.
அதியா பதறி, “ஆரு” என அவனது வாயை அவளது புடவை முந்தானையால் துடைக்க, வருண் கோபமாக அவளை பற்றி இழுத்தான்.
ஆரியன் அவன் கையை இறுக பற்ற, வலியுடன் மறு கையால் ஆரியனை வருண் தாக்கினான். ஆயினும் ஆரியன் வருண் கையை விடாமல் பற்றுதலை அதிகமாக்கினான்.
வருண் அதியாவின் கையை விட, இருவருக்கிடையிலும் சரியான மோதல் ஏற்பட்டது. அதியா பயந்து அழுது கொண்டிருந்தாள்.
“டேய், நம்ம ஆரியாவுக்கு சியர் அப் பண்ணுங்கடா” விஷ்ணு சொல்ல, போட்டி நடப்பது போல அவர்கள் கத்தினார்கள்.
ஆரியன் இடையிடையே அதியாவை பார்த்தான். அவளருகே யாரும் இல்லாததை பார்த்து, வருணை தள்ளி விட்டு கீழே கிடந்த துப்பாக்கியை எடுக்க சென்றான்.
வருண் அவனை எடுக்க முடியாமல் செய்ய, “அதி துப்பாக்கியை எடு” ஆரியன் கத்தினான்.
அவள் எடுத்து கண்ணீருடன் புரியாமல் பார்த்தாள்.
“சூட் பண்ணு அதி” மேலும் கத்தினான். அவளுக்கு பயம். யாரும் சாகக்கூடாது என்று அதனால் ஆரியன் நண்பர்களை பார்த்தாள்.
“சிஸ்டர், சூட் பண்ணுங்க” அவர்கள் கத்த, அவள் அவர்களை குறி வைத்தாள்.
“அய்யோ எம்மா, நாங்க என்ன செஞ்சோம்?” லோகேஷ் பதற, அதி..கத்தினான் ஆரியன்.
அதியா கயிற்றை குறி வைக்க எண்ணிய சமயம் விஷ்ணுவின் கயிற்றில் நெருப்பு பிடித்தது. அதியா துப்பாக்கியை சுற்றி சுற்றி பார்க்க, விஷ்ணு கயிறு அவிழவும் அவனை சிலர் அடிக்க வந்தனர்.
துப்பாக்கியை மேல் நோக்கி சுட்டாள் அதியா. “அதி, சூட் ஹிம்” கத்தினான் ஆரியன்.
மற்றவர்களின் கயிறும் நெருப்பில் அவிழ, எப்படிடா? லோகேஷ் கேட்க, இந்த ஆராய்ச்சி முக்கியம் பாரு என பிரகாஷ் எழுந்தான்.
அதியா அவள் கையிலிருந்த துப்பாக்கியை விஷ்ணுவிடம் தூக்கி போட்டாள். அவன் அதை பிடித்து சற்றும் தாமதிக்காது ஆட்களை டப்டப்பென சுட்டு தள்ளினான்.
துப்பாக்கி சத்தத்தில் பயந்து கீழே காலை குறுக்கி அமர்ந்து முகத்தை மறைத்து அழுதாள் அதியா.
வருண் ஆட்களில் சிலர் விஷ்ணுவை பிடிக்க வர, அவர்களுக்குள் நடந்த சண்டையில் துப்பாக்கி மீண்டும் கீழே விழுந்தது.
வருண் சிரித்துக் கொண்டே வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்து விட்டு, ஆரியனை பயங்கரமாக தாக்க, ஆரியன் தரையில் சரிந்து இருந்தான்.
“ஆரு” என்று அவனிடம் வந்த அதியா, அவனை பிடித்துக் கொண்டு அழ, “அது என்ன இது? அவனுக்காக எதுக்கு அழுற?” கத்தினான் வருண்.
அவன் பேசும் எதுவும் அவள் காதில் ஏறவேயில்லை. ஆரியனை மடியில் போட்டு ஆரு..ஆரு..என கத்தி அழுதாள். அவன் இமைகள் அசைய, “ஆரு..என்னை பாருங்க..பாருங்க” அழுதாள்.
“அது..வா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் வருண்” அவள் கையை பிடித்து இழுக்க, “போடா நான் ஆருவை விட்டு வர மாட்டேன்” என கத்தினாள். அவன் அவளை ஓங்கி அடிக்க அதியா மயங்கினாள்.
“டேய் விடுங்கடா” பிரகாஷ் கத்த, அவர்களை பிடித்து வைத்திருந்தனர்.
“இரு இவன் முன்னாலே தாலி கட்டுகிறேன்” என தாலியை வருண் எடுத்து வர, மின்னல் போல் ஓடி வந்த ஒருவன் வருண் சட்டையை ஓடியவாறே இழுத்து சென்றான். அவன் கத்தல் அவ்விடம் எதிரொளித்தது.
ஓர் அறையில் இருவரும் நுழைய, கத்தல் சத்தமும் வெடிக்கும் துப்பாக்கி சத்தமும் கேட்டது. அதை கேட்க அங்கு யாருமில்லை. அதியாவை காப்பாற்றியவனின் ஆட்கள் மற்றவர்களை மீட்டு ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அதியா விழித்து ஆரியன் அருகே அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஆரியனின் நண்பர்கள் அவளிடம் பேச வந்தும் அதியா “என்னால தான் ஆருவுக்கு இப்படி ஆகிடுச்சு” எப்போதும் போதும் உதட்டை பிதுக்கிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.
டேய்..ஆரியா அப்பாவுக்கு கால் பண்ணிடுவோம்டா..
“ஹே, கொஞ்ச நேரம் கழித்து சொல்லுங்கடா. இந்த பொண்ணு அழுறது க்யூட்டா இருக்கு” லோகேஷ் சொல்ல, “க்யூட்டா? எனக்கு காது வலிக்குது” விட்டால் ஆரியனே எழுந்திருவான் என பிரகாஷ் சொன்னான்.
அதை விடுங்கடா. இந்த பொண்ணு இப்படி அழுறத பார்த்தால் எனக்கு ஒன்று தோணுது விஷ்ணு சொல்ல, என்ன சொல்லப் போறன்னு எனக்கு நல்லா தெரியுது. இந்த பொண்ணுக்கும் நம்ம ஆரியன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குமோ?
டேய், சின்னப்பொண்ணா தெரியுறாடா. வயது வித்தியாசம் அதிகம் இருக்கும். சும்மா இருக்கிறவன காதல்ன்னு சொல்லி சொரிஞ்சு விட்றாதீங்க..
வயசெல்லாம் இப்ப பெரிய விசயமே இல்லை. அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, அதியாவிற்கு தொண்டை கரகரத்தது. அவள் திரும்பி லோகேஷை பார்த்து, “அங்கிள்..எனக்கு தாகமா இருக்கு. வாட்டர் ப்ளீஸ்” என்றாள்.
உனக்கு இருபத்து ரெண்டு இருக்குமா? அவன் கேட்க, இல்ல..இல்ல..இருபத்து நான்கு என சொல்லி விட்டு விழித்து அவர்களை பார்த்தாள். மூவரும் அவளை முறைத்து பார்த்தனர்.
என்ன?
“பதினாறு வயதில் குழந்தை பெத்துக்கிட்டீயா?” என லோகேஷ் கேட்க, அதியா கண்கள் கலங்க, வாயை பொத்திக் கொண்டு மெதுவாக வெளியே செல்ல நகர்ந்தாள். அவள் கையை லோகேஷ் இறுக பற்ற, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அச்சமயம் இமைகளை பிரித்து ஆரியன் தன் நண்பன் அதியா கையை பிடிப்பதையும், அவள் கண்ணீரை பார்க்கவும், “லோகு” சத்தமிட்டான்.
ஆரியனை பார்த்து பயந்து அவன் கேட்டு விட்டானோ? என விழித்தாள்.
என்னடா பண்ற? என சினமுடன் ஆரியன் எழுந்தான்.
அதியா அழுது கொண்டே வெளியே ஓட, கதவின் முன் அவளை மறைத்து நின்றான் விஷ்ணு.
அவர்கள் பேசும் முன், “ப்ளீஸ் சொல்லாதீங்க” என கண்ணாலே மூவரிடமும் கெஞ்சினாள். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.