வல்லவன் 4

ஆரியன் ஜாகிங் சென்று வீட்டிற்கு வந்தான். மாடியில் தன் மகன் நிற்பதை பார்த்து உள்ளே வந்ததும், “அப்பா தர்சு எதுக்கு மேல போயிருக்கான்?”

மேலேயா? உத்தமசீலன் கேட்டுக் கொண்டே ஆரியனை பார்த்தார்.

மேல தான் இருக்கான். அவனை நீங்க கவனிக்கலையா? என வேகமாக படியில் ஏறினான். அவரும் அவன் பின் சென்றார்.

அதியாவும் ஆகர்ஷனாவும் ஒரே போல் யோகா செய்து கொண்டிருந்தனர்.

அதிம்மா..நானு..தர்சு கேட்க, தர்சு நாங்க முடிச்சிட்டு வாரோம் என்றாள்.

நோ..நோ..என அவன் தரையில் காலை உதைத்தான்.

தர்சு, நீ யோகாவை விட எக்சர்சைஸ் பண்ணு ஸ்ட்ராங்கா இருப்ப.

சொல்லித் தாங்க அதிம்மா..

நானா?

எனக்கு யோகா தான் பிடிக்கும். நான் எக்சர்சைஸ் பண்ணா உடம்பு குறைஞ்சிடும். அப்புறம் என்னை காணோம்ன்னு தேடணும்..

உத்தமசீலன் சத்தமாக சிரித்தார்.

மூவரும் அவரை பார்க்க, “தாத்தா” என தர்சன் அவரிடம் வந்து, அதிம்மாவை எனக்கு யோகா சொல்லி தர சொல்லுங்க

“கண்டிப்பா சொல்லித் தாரேன் தர்சு” என இருவரையும் பார்த்தாள்.

அங்கிள், எதுக்கு சிரிச்சீங்க? கொஞ்சலாக கேட்டாள்.

எக்சர்சைஸ்ல்ல உடம்பு குறையும் தான்ம்மா. ஆனால் அதுக்கு சாப்பிடுவதையும் கன்ட்ரோல்ல வச்சிருக்கணும்.

அங்கிள், நான் நிறையலாம் சாப்பிட மாட்டேன். கொஞ்சம் தான் சாப்பிடுவேன்.

“அதிம்மா, உங்க கொஞ்சமா அது?” என கையை நீட்டி கேட்டான் தர்சன். அங்கே நட்ஸ், பழங்கள் கட் செய்து வைத்திருந்தாள்.

தாத்தா, இது யோகா முடிந்தவுடன் சாப்பிடுவது. அப்புறம் தான் காஃபி..அடுத்தது பிரேக் பாஸ்ட்..அப்புறம் லவனுக்கு மேல ஸ்நாக்ஸ் என ஆகர்ஷனா அடுக்கினாள்.

“அங்கிள், பார்த்தீங்கல்ல? நான் குறைவா தான் சாப்பிடுறேன்”.

“எதும்மா? இந்த லிஸ்ட் குறைவா?” உத்தமசீலன் மேலும் சிரிக்க, ஆரியன் அவளை எப்பொழுதும் போல் முறைத்தான்.

அங்கிள், நான் எதுவுமே செய்யலை. உங்க பையன் என்னை முறைக்கிறார்?

“ஆரியா, எதுக்குடா பிள்ளைய முறைக்கிற? போடா” என அவன் தோளில் கையை போட்டார்.

அவர் கேலியில் “அங்கிள்..என பெருமூச்சு விட்டு, நான் சாப்பிட வர மாட்டேன்..போங்க” என்றாள்.

“அப்படியா?” என தந்தை மகன் கையை தட்டி விட்டு இடையே நுழைந்த துருவினி, அவள் எடுத்து வைத்திருந்த பழங்களை கையில் எடுத்து, “அதி..நீ சாப்பிடாமல் இரு. பார்க்கலாம்” என எடுத்து அவள் தந்தைக்கும் அண்ணாவுக்கும் இடையில் நின்று ஒரு பீஸை எடுத்து வாயில் வைத்தாள்.

ஹ..ஹ..ஹ..என கொஞ்சலாக சத்தமிட்டு, “அதுல மட்டும் கைய வைக்காத எனக்கு கெட்ட கோபம் வரும்” என சினமுடன் துருவினியிடம் வந்தாள் அதியா.

“அதி, நல்லா பாரு. செம்ம டேஸ்ட்” என வாயில் போட்டு மென்று கொண்டு அதியாவை துருவினி வெறுப்பேற்ற, அதியா துருவினியை விரட்டினாள். இருவரும் ஓட பிள்ளைகளும் அவர்கள் பின் ஓடினர்.

மூச்சிறைத்து நின்ற அதியா உத்தமசீலன் என நினைத்து ஆரியன் தோளில் கை வைத்து, “இவள மாதிரி ஓட முடியல” என நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தாள்.

“அதிம்மா, அங்க பாரு” ஆகர்ஷனா சொல்ல, அவள் ஆரியனை பார்த்து, “ஆத்தாடி, சிடுமூஞ்சி சார். சாரி சாரி. அய்யோ..உலறுறேனே!” என கையை எடுத்து “சாரி..சாரி” என பின்னே சென்றாள்.

உத்தமசீலன் தன் மகனை பார்த்து அட்டகாசமாக சிரித்தார்.

“ஆன்ட்டி, டயர்டாகிட்டீங்களா?” என துருவினி அதியாவை கேலி செய்ய, “ஆன்ட்டியா? உனக்கு நான் ஆன்ட்டியா?” என அவளை விரட்ட எண்ணியவள் ஆரியனை பார்த்து, “கூல் அதி..கூல் அதி..”என சொல்லிக் கொண்டாள்.

“அச்சச்சோ, தர்சு பள்ளிக்கு நேரமாகுது. நீ சமையல் இன்னும் முடிக்கலை. மறந்துட்டியா?” என அதியா ஓரக்கண்ணால் துருவினியை பார்க்க, அவளும் ஏதோ பதட்டத்தில் அவள் அதை கீழே வைத்து திரும்பி காலை எடுத்து வைத்து சிந்தனையுடன் அதியாவை பார்த்தாள்.

அதியா அவள் வைத்த பழங்களை நோக்கி ஓடி வர, துருவினி எடுக்கும் முன் ஆரியன் அதை எடுத்தான். ஓடி வந்த அதியா பிரேக் போட அவள் கால்கள் நிற்க மறுத்தது.

நேராக அவன் மீது மோதி நின்று, “போச்சு” என முணங்கியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் முறைக்க, “அங்கிள்..நான் தெரியாமல் தான?” என அவள் விழிகள் அவன் கையிலிருந்த பழத்தின் மீது பதிந்தது.

துருவினியோ ஆரியன் கையிலிருந்ததை பிடுங்க வந்தாள். அவன் இருவரையும் பார்த்து விட்டு, மாடியின் விளிம்பில் ஏறி நின்று அவர்களை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விட்டான்.

ஆவென அவன் வாயையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஆரு, எனக்கு?” ஆகர்ஷனா கேட்க, மொத்தமாக வாயில் சரித்து மென்று விழுங்கி விட்டு, “இதுக்கு மேல யாராவது சாப்பிடுறது அடிச்சுக்கிட்டா வீட்ல எதுவும் இருக்காது” என்றான்.

“துருவினியோ இவனுக்கு என்ன ஆச்சு? நாங்க சாப்பிட சண்டை போட்டால் இவனுக்கென்ன?” என நினைத்துக் கொண்டு அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.

நல்லா சாப்பிடுறவங்க. திடீர்ன்னு சாப்பாட்டை நிறுத்தக்கூடாது. கேலி செய்றதை விட்டு வேலையை பாருங்க என சொல்லி அவன் நகர்ந்தான்.

“அங்கிள், நான் சாப்பிடலாம்ன்னு சொல்றாரா இல்லை அதிகமா சாப்பிடுறேன்னு சொல்லி காட்டுறாரா?” அதியா கேட்க, அவர் புன்னகைத்தார்.

துருவினியோ, “அப்பா..இவன் இப்படியெல்லாம் பேசவே மாட்டானே! ஒரு வேலை அண்ணா தொலைஞ்சுட்டானோ? இவன் ஏலியனா இருப்பானோ?” என கேட்க, அவள் தலையில் செல்லக்குட்டு வைத்து, அவன் உன் அண்ணா தான். அவன் நமக்கு ஏற்றவாறு மாறுகிறான் என அதியாவை காட்டினார்.

அவளோ யோசனையுடன் அமர்ந்தாள்.

“தர்சு, வா தயாராகலாம்” என துருவினி அதியாவை பார்த்து, அதி இன்னிக்கு தப்பிச்சுட்ட. உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்.

பார்த்துக்கோ என கூந்தலை விரித்து சூரிய கதிர்கள் அவள் மீது படுமாறு நின்றாள். ஆகர்ஷனாவும் அவளை போல் செய்ய, இருவரும் சிரித்துக் கொண்டனர்.

அறையிலிருந்து ஆரியன் தயாராகி ஹாலுக்கு வந்தான்.

“நேற்று பேசினாயா? என்ன பிரச்சனைன்னு அதி சொன்னாலாப்பா?” உத்தமசீலன் கேட்டார்.

ம்ம்..சொன்னாப்பா என அவன் விசயத்தை சொல்ல, துருவினியும் கேட்டுக் கொண்டாள்.

“அண்ணா, அதி மாமாவுக்கு தான் தனியா சொத்து இருக்குல்ல? அப்புறம் எதுக்கு இவங்க சொத்தும் வேணும்ன்னு எதிர்பாக்குறாங்க?” துருவினி கேட்டாள்.

“நிறைய சாக்லெட் வாங்கலாம்ல்ல அத்தை” தர்சன் சொல்ல, அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

“தர்சு, உள்ள போ” துருவினி அதட்ட, நீ மோசம் அத்தை. நான் அதிம்மாகிட்ட போறேன்.

“போடா போ..உன்னோட அதிம்மா ரொம்ப நாள் இங்கே தங்க மாட்டாங்க” என சொல்லி விட, தர்சன் வேகமாக மேலே ஓடினான்.

“துரு, பிள்ளைக்கிட்ட இப்படியா பேசுவ?” உத்தமசீலன் கோபமாக, “துரு தப்பா எதுவும் சொல்லலைப்பா. அவள் அவளோட வீட்டுக்கு போயிருவான்னு தர்சு ஏத்துக்கணும். இல்லை இவன் தான் கஷ்டப்படுவான்”.

துருவினி கோபமாக எழுந்து, “அதி எங்கும் போகக் கூடாது” என்றாள்.

“என்ன பேசுற?” ஆரியன் கோபமாக கேட்க, “நீ அதியை திருமணம் செஞ்சுக்கோ” என துருவினி பட்டென சொல்ல, அவன் அவள் கன்னத்தில் அறைந்து விட்டான்.

“என்னடா தப்பா கேட்டுட்டா? அந்த பொண்ணு அங்க போனா நிம்மதியா இருப்பான்னு உனக்கு தோணுதா?“

நீ ஒரு நாள் முழுவதும் வெளிய போகாம இருந்து பாரு தெரியும். இத்தனை வருசமா வெளிய வர விடாமல் அதியை வீட்டுக்குள்ளே அடைச்சி வச்சிருந்திருக்காங்க. நாளைக்கு அதி போல தான் ஆகாவும் இருப்பா..

“சிக்னலை கூட கடந்து வர தெரியாத பிள்ளை போல ஆகாவையும் ஆக்கணும்ன்னு நினைக்கிறியா? அந்த பொண்ணு மனசுல எவ்வளவு கஷ்டத்தை வச்சிட்டு இருக்கோ? பார்க்க தான் சிரிச்சிட்டு இருக்கு”.

நாம பேச, சிரிக்க, உணர்வுகளை பகிர்ந்துக்க யாராவது வேணும். என்னால நம்பவே முடியல. இத்தனை வருசமா அக்கா, அம்மா, மாமா, ஆகா..என சில உறவுகளை மட்டும் பார்த்துட்டு இருந்திருக்கா வருத்தமாக உத்தமசீலன் சொன்னார்.

“ஆமா, நானெல்லா அதி போல இருந்தா மூச்சு முட்டி செத்தே போயிருப்பேன். எப்படி எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டாளோ? அவளுக்கு திருமணம் செஞ்சு வச்சிருக்காங்க பாரு..பொறுக்கி பயல” துருவினி கோபமாக திட்டிக் கொண்டே ஆரியனை பார்த்து..

உன்னால அதியோட அம்மா, மாமாவிடமிருந்து அவளை காப்பாற்ற முடியும்ன்னு வச்சுக்கோ. “அவளோட எதிர்காலம்? அந்த வீட்ல எப்படி இருப்பா?”

அவளை யாரு திருமணம் செஞ்சுப்பாங்களோ அவங்களுக்கு தான சொத்து முழுசா போகும். எவன் நல்லவனா அவளுக்காக திருமணம் செய்வான்? அவள் சொத்துக்காக தான் திருமணம் செய்வான். அப்புறம் என்ன அவளோட அக்கா கதி தான அவளுக்கும்? அப்புறம் ஆகா..நினைச்சு பாரு..

“இதுக்கு நீ அவங்கள காப்பாற்றாமல் இருப்பதே நல்லது” என துருவினி சொல்ல, இதை கேட்டு உத்தமசீலனுக்கும் ஆரியனுக்கும் துருவினி சொல்வது சரியாக பட்டது.

“அதுக்கு நான் எப்படி திருமணம் செய்ய முடியும்?” அவளுக்கும் ஆகாவுக்கும் பிடிக்கணும். என்னால அவளை சமாளிக்க முடியாது. வேணும்ன்னா நமக்கு தெரிஞ்ச நல்ல பையனா மேரேஜ் செஞ்சு வச்சுட்டா எந்த பிரச்சனையும் வராதுல்ல..

எதுக்கு அவனையும் அவ மாமா கொன்னு போடவா?”

“திறமையானவனா பார்ப்போம்” என இவர்கள் பேசுவதை கேட்ட அதியாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

வேகமாக அறைக்கு சென்றாள். “வினு சொல்றது சரிதான். என்னை திருமணம் செய்பவனாலும் ஆகுவிற்கு பிரச்சனை வரும்” என அழுதாள்.

“அதிம்மா” தர்சன் அழைக்க, “கண்ணை துடைத்து, தர்சு பள்ளிக்கு கிளம்பீட்டியா?” புன்னகை முகமாக கேட்க, “எதுக்கு அழுற அதிம்மா?” ஆகர்ஷனா கேட்டாள்.

“ஆகும்மா, எனக்கு குழப்பமா இருக்கு” என கண்களை மூடி அவளை அணைத்தாள்.

“இதை பற்றி அப்புறம் பேசலாம்” என துருவினி தர்சுவை தேடினாள்.

“தர்சு தர்சு” அவள் அழைக்க, ஆரியனும் அழைத்தான்.

சத்தம் கேட்டு அதியா, தர்சு “அப்பா கூப்பிடுறாங்கல்ல போ” என அவனை அனுப்பி வைத்தாள்.

அவனாகவே கீழே வரவும் உத்தமசீலன், “அதி..கீழ வாங்க”.

“அங்கிள், நாங்க கொஞ்ச நேரம் கழித்து வாரோம்” என அவள் மேலிருந்து சத்தமிட்டாள்.

“அப்பா நேரமாகுது. நானும் ஆபிஸ் கிளம்பணும்” என துருவினி, “அதி கீழ வா..நாங்க கிளம்புறோம்”.

ம்ம்..போயிட்டு வாங்க என ஆகா சத்தமிட்டாள்.

“என்னாச்சு இவளுக்கு? அப்பா இதை பிடிங்க: என அவளது பையை அவரிடம் கொடுத்து விட்டு துருவினி மேலே ஏறினாள்.

“நாங்க கிளம்பும் போது இப்படி படுத்திருக்க?” வா..என அதியா கையை பிடித்து இழுத்தாள் துருவினி.

“நீங்க கிளம்புங்க” அழுதாள் அதியா.

அட, கிரையிங் குயின். நாங்க கிளம்பும் போது அழுதால் நாங்க போற வேலை விளங்கிடும் என உதட்டை சுளித்தாள். அவளால் ஆரியனை ஃபேஸ் பண்ண முடியாமல் படுத்து விட்டாள்.

“துரு, நான் தர்சுவை பள்ளியில் விட்றேன். அவனுக்கு நேரமாகுதாம்” என ஆரியன் சொல்ல, துருவினி மகிழ்வுடன் மேலிருந்து எட்டி பார்த்தாள்.

தர்சன் ஆரியனுடன் பைக்கில் அமர்ந்திருப்பதை மகிழ்வுடன் பார்த்து, “அண்ணா..சூப்பர்..பை பை” என கையசைத்தாள் துருவினி. இருவரும் மேலேயை பார்த்துக் கொண்டிருந்தனர். “ஆன்ட்டி நானும்” என கையை தூக்க சொல்லி நீட்டினாள் ஆகர்ஷனா.

“ஆரு, தர்சு பை பை” ஆகர்ஷனா சொல்ல, “ஆகா..அதிம்மாவை கூப்பிடு” தர்சன் சொல்ல, ஆரியன் பைக்கை எடுத்தான்.

“அப்பா, இருங்க அதிம்மா” என தர்சன் சொல்ல, பைக்கை நிறுத்தி ஆரியனும் மேலே பார்த்தான்.

துருவினியும் ஆகர்ஷனாவும் அதியாவை இழுத்து நிறுத்தினார்கள். கண்ணை துடைத்து, “பை பை தர்சு” என கையை ஆட்டினாள். அவள் அழுதிருக்கிறால் என கண்டுகொண்ட ஆரியன் அவளையே பார்த்தான்.

“அப்பா கிளம்பலாம். நேரமாகுது” தர்சன் சொல்ல, பைக்கை பள்ளிக்கு விரட்டினான்.

“எதுக்கு அழுற அதி?” துருவினி அவள் முகத்தை நிமிர்த்தி கேட்டாள்.

“வினு, எனக்கு பயமா இருக்கு” கட்டிக் கொண்டு அழுதாள்.

ஆகாவிற்கு ஒன்றும் ஆகாது அதி. பயப்படாத. நம்ம வீட்ல யாரும் காலெடுத்து வைக்க முடியாது என அவள் சொல்ல, அவளை பார்த்து விட்டு மீண்டும் அணைத்து அழுதாள் அதியா.

அதி, இப்படியே நீ அழுதுட்டு இருந்த இன்றும் நான் விடுப்பெடுக்கணும் அந்த மனோகரன் சொட்டத் தலையன் என் உயிரை வாங்குவான்.

ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திருவேன். அது வரை சாப்பிட்டு சமத்து பிள்ளையா இருக்கணும். பாரு ஆகாவுக்கு சொல்ல வேண்டியதை உன்னிடம் சொல்லீட்டு இருக்கேன். நான் கிளம்புகிறேன். அப்பா வீட்ல தான் இருப்பாரு என்று “பை” சொல்லி விட்டு துருவினி கிளம்பினாள்.

ஆரியன் கடையில் எப்பொழுதும் போல் கல்லாவில் அமர்ந்து அவனது ஊழியர்களை கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு அம்மாவும் பொண்ணும் வந்திருந்தனர்.

குட்டிப் பொண்ணு அவள் அம்மாவை பார்க்க அவரோ அவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

“அம்மா”, குட்டிப் பொண்ணு அழகான பொம்மையை காட்டி, “எனக்கு வேணும்” என்றது.

“அம்மாவிடம் பொருட்கள் வாங்க மட்டும் தான் பணம் இருக்கு” என்று சொல்ல, “அம்மா” என அழுது கொண்டே காலை தரையில் உதைத்து அழுதது.

இதை பார்த்த ஆரியனுக்கு தானாக அவன் நினைவு அதியாவிடம் சென்றது. அவள் சாப்பிட துருவினியை விரட்டியதை எண்ணி புன்னகைத்தான்.

அவன் ஊழியர்களில் ஒருவன், “ஹே சக்தி..நம்ம முதலாளி சிரிக்கிறார் பாரு” என ஒருவன் சொல்ல, “ஆமாடா,ரொம்ப க்யூட்..ஹண்ட்சம்” என்றாள் சக்தி.

“அப்புறம் என்ன? அவர் சிரிக்கவே ஆரம்பித்து விட்டார். உன் காதலை சொல்லி விடு”. இவர்கள் பேசிக் கொண்டிருக்க, ஆரியன் அந்த குட்டிப்பொண்ணு பொம்மையை எடுத்து கொடுத்து விட்டு, இதை வச்சுக்கோ. அம்மா சொல்ற பேச்சை கேட்கணும் என அறிவுறுத்தி விட்டு நகர்ந்தான்.

இவர்கள் பேசுவதை கேட்டு நின்றான். அவன் நிற்பதையே கவனிக்காமல் பேசினார்கள்.

“காதலா? அவரையா? பார்க்க ஹண்சம் க்யூட்டா இருக்கார். சைட் தான் அடிக்கலாம். இவரோட காதல் செய்யணுமா? நெவர்.. இவரு கடை ஆரம்பிக்கும் முன் வேற எங்கோ தான் இருந்திருக்கார். பொண்டாட்டியை தனியே விட்டு வேலையை கவனிக்கும் இவரை எந்த முட்டாள் பொண்ணு காதலிப்பா?”

எப்பொழுது பார்த்தாலும் எரிந்து எரிந்து விழுவார். இன்று கூட கஷ்டமர் என்பதால் தான் சிரித்து பேசுகிறார். இவரை காதலித்து திருமணம் செய்து அவர் பொண்டாட்டி மாதிரி நானும் சாகணுமா? அவள் கேட்க, சினத்தை மனதில் கட்டுப்படுத்திக் கொண்டு ஆரியன் அவர்களை முறைத்தவாறு அவர்கள் முன் நின்றார்.

“சார்” அவன் தயங்க, “எதுக்கு பயப்படுற? நான் ஒன்றும் பொய் சொல்லலையே! வேலையை விட்டு நிறுத்தினால் அவர் நிறுத்தட்டும்” என சக்தி சாதாரணமாக பேசினாள்.

சக்தி பக்கமிருந்தவன் முறைக்க, “உனக்கென்னடா?” என அவள் வேலையை பார்க்க, ஆரியன் கையை முறுக்கிக் கொண்டே சென்று அமர்ந்தான்.

உத்தமசீலனும் துருவினியும் அதியாவை திருமணம் செய்ய சொல்லி கேட்டது நினைவு வர ஆரியன் மனம் அமைதியற்று இருந்தது.

அச்சமயம் உத்தமசீலன், அதியா, ஆகர்ஷனா உள்ளே வந்தனர்.

“அப்பா, நீங்க எதுக்கு வந்தீங்க?” ஆரியன் கோபமாக பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.

“ஏன்? வரக் கூடாதா?” அதியா கேட்டாள்.

“வாய மூடு” அவன் சொல்ல, அங்கே ஆரியனை பார்த்து இரு பெண்கள் ஏதோ பேசிக் கொண்டே சென்றனர்.

அதியா அவர்களிடம் சென்று, “அவரை பத்தியா பேசுறீங்க? என்ன பேசுறீங்க?” எனக் கேட்டாள். அவர்கள் சக்தி பேசியதை சொல்ல, “அதுவும் வேலை பார்க்கும் பொண்ணே சொல்றா” என சொல்ல கேட்ட உத்தமசீலன் “என்னடா நடக்குது?” கத்தினார்.

அப்பா, கஷ்டமர் இருக்காங்க.

“ஆன்ட்டி, யாரு பேசினா?” அதியா கேட்க, அவர்கள் சக்தியை கையை காட்டினர்.

“பாரேன் உண்மையை சொன்னால் கோபம் வருது” மேலும் சக்தி தூபம் போட, கடுப்பான அதியா அவளிடம் சென்றாள்.

“அதியா” ஆரியன் அழைக்க, அவள் காதில் வாங்கவேயில்லை.

சக்தி முன் சென்று கையை கட்டிக் கொண்டு அதியா அவளை மேலும் கீழுமாய் பார்த்தாள்.

“ஹலோ, எதுக்கு இப்படி பாக்குறீங்க?”

அட, “உன்னால உணர முடியுதா?” என அதியா கேட்க, “என்ன சொல்றீங்க?”

இல்லை. நீ பேசியதை அந்தம்மா சொன்னாங்க. இங்க ஷாப்ல்ல எத்தனையோ பேர் பொருட்களை தேடிட்டு இருக்காங்க. “நீ கஷ்டமரா? வொர்க்கரா? வெட்டியா பேசிட்டு இருக்க?”

“நான் பேசினால் உங்களுக்கென்ன?”

ஆகர்ஷனாவும் அதியா போல் கையை கட்டிக் கொண்டு அவளை முறைத்தாள்.

“பேசலாம். வெளிய போய் பேசணும். நீ உன்னோட வேலையை பார்க்காமல் உன்னோட முதலாளியை பற்றியே இப்படி பேசுற?”

நான் ஒன்றும் தப்பா பேசலையே!

“நீ பார்த்தியா? அவரால அவங்க வொய்ஃப் கஷ்டப்பட்டதை நீ பார்த்தியா?” அதியா கேட்க, “அதான் பேசிக்கிறாங்களே!”

ஓ..மேடமுக்கு மத்தவங்க பேசுவதை கேட்க நேரமிருக்கு. ஆனால் வொர்க் பண்ண முடியல. “ஏய், நீ என்னடா இவளோட சேர்த்து வெட்டியா பேசிட்டு இருக்க? போடா..வந்திருக்கும் கஷ்டமரை கவனி”.

அவன் ஆரியனை பார்க்க, ஆரியன் அவளிடம் வந்து “எல்லாரும்  உன்னை தான் பாக்குறாங்க” பல்லை கடித்தான்.

அட..ஆகு செல்லம் உன்னோட ஆருவுக்கு நம்மகிட்ட தான் முறைப்பு. கண்டவங்க என்ன பேசினாலும் அதுவும் அவருக்கு கீழே வேலை பார்க்கும் பொண்ணு பேசினால் முறைக்க மாட்டாரு. கோபப்பட மாட்டாரு..

வேலை நேரத்துல இவ வெட்டியா பேசி நேரத்தை போக்கிட்டு இருக்கா என்னன்னு கேட்காமல் நம்மள முறைக்கிறாரு..

“ஹே லிசன், நீ காசிப் பேச உனக்கு சம்பளம் தரல. வெளிய போ”.

“அதியா” ஆரியன் சினமாக அவளது தோள்ப்பட்டையை பிடித்து இழுத்தான். அவனை முறைத்த அதியா, “ஐ சே கெட் அவுட் கெர்ல்” சத்தமிட்டாள்.

“அதை சொல்ல நீங்க யாரு?” தடுமாறினாள் சக்தி.

நைஸ்..எதிர்பார்த்தேன் கேட்பன்னு..

மேடம் சைட் அடிப்பீங்க.. ஹண்ட்சம்..க்யூட்ன்னு கொஞ்சுவீங்க. ஆனால் லவ் பண்ண முடியாதாம். மேரேஜ் பண்ண முடியாதாம். அப்புறம் எந்த இதுக்கு இதுக்குடி அவரை பார்த்த? என அவள் முடியை பின்னே தள்ளினாள்.

ஹே..அதியா ஆரியன் அவளை பிடித்து இழுக்க, “ஹலோ..நான் உங்களிடம் பேசலை” அவனை தள்ளி விட்டு, “ஆகும்மா, உன்னோட ஆருவை தள்ளி அழைச்சிட்டு போ”.

ஆரு..வாங்க. நாம வேடிக்கை பார்ப்போம். என்னோட அதிம்மா இப்படி பேசி பார்த்ததில்லை. ஆரு, இங்க பாப்கார்ன் இருக்கா? கேட்டாள் ஆகர்ஷனா.

“ஷனா, எதுக்கு பாப்கார்ன்?” விழித்து அதியாவையும் ஆகர்ஷனாவையும் பார்த்தான்.

“மூவி பார்க்கும் போது இப்படி தான் நாங்க ஜாலியா சாப்பிட்டுகிட்டே பார்ப்போம்” என்றாள் ஆகர்ஷனா.

“ஷனா, இங்க மூவியெல்லாம் ஓடலை. உன்னோட அதிம்மா என் கடையை இழுத்து மூடாமல் விட மாட்டா போல” என அவளிடம் செல்ல இருந்தவன் கையை பிடித்த ஆகர்ஷனா, “ப்ளீஸ் ஆரு..நான் அதிம்மா பேசி இப்ப தான் பார்க்கிறேன்” ஆகர்ஷனா அவன் கையை விடாமல் பிடித்து கேட்டாள்.

“என்ன சொன்ன? பையன் இருக்கானா? பையனை பெத்தவரை தானடி சைட் அடிச்ச? அப்புறம் என்னடி? நான் பேசலாம். நானும் கஷ்டமராக தான் வந்துருகேன்” என ஒரு பெண்மணியை பார்த்து,

ஆன்ட்டி இங்க வாங்களேன் அழைத்தாள். அவரும் அதியாவை பார்த்து பயத்துடன் வந்தார்.

“ஆன்ட்டி, என்னை பார்த்து எதுக்கு பயப்படுறீங்க? இந்த பொண்ணு அவ முதலாளியவே ஓவரா பேசுறா? நாம கஷ்டமர்ஸ். நமக்கு தேவையான பொருட்கள் எங்க இருக்கு? அதோட தரத்தை பற்றி பேசி வாங்க வைப்பது தான இவ வேலை. இவள் ஓனரையே பேசுறாளே! நீங்களும் என்னை போல க்யூட்டா வெயிட் போட்ருக்கீங்க. இவ உங்களை பார்த்து கமெண்டு பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லுங்க?” என அவரை பார்த்தார்.

“ஆமாம்மா, இந்த பொண்ணு நான் உள்ள வரும் போது இந்த பையனிடம் ஏதோ சொன்னா? டேய் தம்பி..என்னை பற்றி அந்த பொண்ணு என்ன சொல்லுச்சு?” அவர் கேட்க,” கையை கட்டிக் கொண்டு சொல்லு..சொல்லு?” என்றாள் அதியா.

“மகனே! சூப்பரா பர்பார்ம் பண்றா?” உத்தமசீலன் சிரித்தார். வர்ற கஷ்டமரை பத்திருவாளோன்னு எனக்கு பயமா இருக்கு..

“மேம், சக்தி என்ன சொன்னன்னா?”

“சொல்லாத” அவள் வாயசைக்க, “வாய அசைச்ச செஞ்சிருவேன்” என அதியா சொல்ல, எல்லாரும் அவளையே பார்த்தனர்.

“டேய் தம்பி சொல்றீயா? இல்லை கடையில எதுவும் வாங்காம போயிருவேன்” அந்த பெண்மணி மிரட்டினார்.

“பன்னிக்குட்டி மாதிரி இருக்கீங்க. அளவாக சாப்பிடாமல் உருண்டையா இருக்கீங்கன்னு சொன்னா” என்று அவன் சொல்ல, சிரிப்பை அடக்கியவாறு வாயில் கை வைத்து உத்தமசீலன், ஆரியன், ஆகுவை பார்த்து விட்டு, கையை எடுத்து மூச்செடுத்து, “ஆன்ட்டிஸ், அங்கிள்ஸ், சிஸ்டர்ஸ், குட்டீஸ் எல்லாரும் பாருங்க. இந்த பொண்ணு உங்களையும் இப்படி தான கமென்ட் செய்திருக்கும். இந்த பொண்ணு இங்க இருக்கணுமா?” கத்தினாள்.

“ஓனர் எங்க இருக்காரு?” ஒருவர் கத்த, ஆரியனோ அதியாவை முறைத்துக் கொண்டே வந்து நின்றான்.

இந்த பொண்ணு இப்பவே வெளிய போகணும். அப்ப தான் நாங்க பொருட்களை வாங்குவோம் அவர் சொல்ல, “இதோ சார்” என்ற ஆரியன், “சக்தி வெளிய போ” என்றான்.

“சார், நீங்களே அமைதியா தான இருக்கீங்க? யாரு சார் இவ?”

“இவ அவன்னு பேசுற பேச்செல்லாம் ஆகாதும்மா. அதான் என் பிள்ள உன்னை வெளிய போக சொல்லீட்டான்ல்ல?” உத்தம சீலன் கோபமாக பேசினார்.

நில்லு சக்தி. அதி சொன்ன விதம் சரியில்லைன்னாலும் சொன்ன விசயம் சரி. உன்னை நான் வேலையை விட்டு தூக்கி இருந்தால் தேவையில்லாமல் என் குடும்பத்தை இழுப்பன்னு தெரிந்து தான் உன் பேச்சுக்கு அமைதியா இருந்தேனே தவிர, நீ சொன்ன எதுவும் உண்மையில்லை. என்னோட வொய்ப் என்னால கஷ்டப்படவும் இல்லை. என்னால சாகவும் இல்லை. எல்லாத்துக்கும் காரணம் இருக்கு. அதை யாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை.

நீ அடுத்து வேலைக்கு போற இடத்துல்ல பார்த்து இருந்துக்கோ. எல்லாரும் அமைதியா இருக்க மாட்டாங்க. வாழ்க்கை போயிருச்சுன்னு அழுதால் யாரும் உதவிக்கு வர மாட்டாங்க. எனக்கு தங்கை இருக்கா. அதனால தான் இந்த அறிவுரை உனக்கு என சொல்லி விட்டு அதியாவை பார்த்தான்.

சக்தி தலைகவிழ்ந்து வெளியேறினாள்.

“சாரி சார், மேம், நீங்க ஷாப்பிங் பண்ணுங்க” என்ற அதியா அந்த பெண்மணியை பார்த்து, “ஆன்ட்டி நாம ப்ரெண்ட்ஸ் ஓ.கேவா?” என கையை நீட்டினாள்.

“நல்ல பொண்ணா இருக்க. அழகா இருக்க” என அவளை நெட்டி முறித்தார். அதியாவிற்கோ செம்ம சந்தோசம். “தேங்க்ஸ் ஆன்ட்டி” என அவர் கன்னத்தில் பட்டென முத்தமிட, அவர் விழித்து பார்த்தார்.

பாருங்க. யாருன்னே தெரியல. என்ன செய்றா? என ஆரியன் அவருக்கும் கேட்கும் படி சொல்லி விட்டு அவளது முடியை பிடிக்க, “அங்கிள்..ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த முடி. உங்க பையனை கையை எடுக்க சொல்லுங்க வலிக்குது” என கத்தினாள். எல்லாரும் அவளை புன்னகையுடன் பார்த்தான்.

அந்த பையன் சிரிக்க, ஆரியன் அவளை விட்டான்.

“ஏய் தம்பி, நில்லு. நாம இப்படி நின்னு பேசினால் உனக்கு எப்படி போனஸ் கிடைக்கும்? நீ நிறைய ஆட்களிடம் பேசணும்” என அங்கிருந்த ஷாம்பு டப்பாவை எடுத்து, ஆன்ட்டி..இந்த ஷாப்புல்ல எக், ஆலோவீரா எல்லாமே இருக்கு. உங்க உடம்பு ஹீட் தணியும். நல்ல மணமும் வரும். வாங்கிக்கோங்க..என அவர் கையில் கொடுக்க, அவரோ புன்னகையுடன் “என்னம்மா படிச்சிருக்க?” எனக் கேட்டார்.

“நானா ஆன்ட்டி?” என வருத்தமாக முகத்தை வைத்து “எம்.பி.ஏ பர்ஸ் கிளாஸ்” என்றாள்.

“அதி சொல்லவேயில்லைம்மா” உத்தமசீலன் அவர்களிடம் வந்தார்.

அங்கிள், நான் சொல்லி எங்க வீட்ல தள்ளீட்டீங்கன்னா அதான் சொல்லலை.

“அதெப்படி உன்னை போக விட்ருவேனா?”

“அங்கிள், என்னை ரொம்ப பாராட்டுறீங்க?” எனச் சிரித்தாள்.

சரிம்மா, நீயும் வேணும்கிறதை வாங்கு. நாமும் கிளம்பலாம்.

“தம்பி, நான் சொன்னதை கேட்ட நீ எங்கேயோ போயிருவ?” என கடையின் மேலே பார்த்தாள்.

அவன் போறது இருக்கட்டும். நீ கிளம்பு.

“சார், அங்கிள் சொன்னது உங்களுக்கு கேட்கலையா?”

ஆரியன் முறைக்க, “ஆமா இதை விட்டால் ஒன்னும் தெரியாது” என முணங்கி விட்டு, தம்பி..இங்கு இருக்கும் எல்லா பிராடெக்ட்லையும் என்ன சேர்ப்பாங்கன்னு தெரிஞ்சு வச்சிக்கணும்..அப்புறம் வரும் கஷ்டமரின் எண்ணம் போல பேசணும்.

“குருவே நமக” என அவன் அதியா காலில் பொத்தென விழுந்தான்.

அவன் சட்டை காலரை இழுத்த ஆரியன், “போய் வேலைய பாருடா”.

“அப்பா, இவள முதல்ல அழைச்சிட்டு போங்க” ஆரியன் சொல்ல, “நோ ஆரு. எங்களுக்கு வேணும்கிறத வாங்கிட்டு தான் போவோம்” என அதியாவும் ஆகுவும் ஷாப்பிங் செய்து ஆரியனிடம் பில் போட வந்தனர்.

வாங்கிய பொருட்களை அவனருகே இருந்தவர் பில் போட, அவன் அதை பார்த்து அவளை முறைத்து பார்த்தான். அவள் கார்ட்டை நீட்டினாள்.

கார்ட்டில் பணமில்லை என வந்தது.

“ஒழுங்கா எல்லாத்தையும் இருந்த இடத்துல்ல வைக்கிற” என அதியாவை மிரட்டினான். அவள் உதட்டை பிதுக்க, “அப்பா இதுக்கு தான் இவளை அழைச்சிட்டு போக சொன்னேன்” என்றான்.

“அழுத டென்சன் ஆகிடுவேன்” ஆரியன் சொல்ல, “ஆமா இதை தவிர என்ன தான் தெரியுமாம்? சேடிஸ்ட்” என்றாள். அருகே இருந்தவர் ஆரியனை பார்க்க, “இப்ப என்ன சொன்ன?” ஆரியன் அவளிடம் கோபமாக வந்தான்.

“சார்” அவர் அழைக்க, பில் போட வந்த கஷ்டமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவன் அவர்களை கவனித்தான்.

“என்னோட அம்மா வேலையாக தான் இருக்கும்” என மனதில் வசைபாடிக் கொண்டே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தாள் அதியா.

அவளையும் ஆகர்ஷனாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு உத்தமசீலன் எழுந்து அவள் தனியே வைத்திருந்த பொருட்களை எடுத்து வந்து அதியா கையில் கொடுத்தார்.

அங்கிள்..வேண்டாம்..

“நான் பே பண்ணிடுறேன்ம்மா” என அவர் தன் மகனை பார்த்தார். அவன் மும்பரமாக ஆட்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

அங்கிள், நீங்க சொல்ல வேண்டியதை சொல்லுங்களேன்..ப்ளீஸ்..

அவன் கொஞ்சம் ஃபீரியாகட்டும் கேட்கிறேன். ஒத்துக் கொள்வது கஷ்டம்மா..

அங்கிள், ஆகுவையும் உடன் அழைச்சிட்டு போங்க. அவர் புன்னகையுடன் “அவனுக்கு ஆகா தான் சரி” என்றார்.

ஆட்கள் குறையவும் அந்த பொருட்களை அதியாவிடமிருந்து வாங்கி ஆரியனிடம் சென்று பொருட்களை முன் வைத்து பணத்தை எடுத்தார்.

“அப்பா, நீங்க எதுக்கு வாங்கி தர்றீங்க? இதுல பாதி பொருள் வீட்ல இருக்கு” என்றான் கடுப்புடன்.

“நாங்க பணம் தந்து தான வாங்குறோம்” என அவர் பணத்தை நீட்டினார்.

போய் அவகிட்ட கொடுங்க. நான் என்னோடதை போட்டுக்கிறேன்.

வேண்டாம். அதிம்மாவுக்கு நானே கொடுக்கிறேன்..

பொருட்களை வாங்கி பார்த்த ஆரியன், எல்லாம் ஆயில் புட் என அவளை முறைத்தான்.

அதியா அவர்களிடம் வந்து, “அங்கிள் எனக்கு எதுவும் வேண்டாம்” என ஆகர்ஷனாவை அழைத்து கோபமாக வெளியேறினாள்.

“எதுனாலும் முட்டாள் தனமா பண்ற?” என ஆரியன் ஓடி வந்து அவள் கையை பிடித்தான்.

“நீங்க எனக்காக பே பண்ண வேண்டாம். இதே போல தான ஆகுவிற்கும் கணக்கு பார்ப்பீங்க?” கோபமாக கேட்டாள்.

நான் யாருக்கும் கணக்கு பார்க்கலை. ஆயில் புட் அதிகம் எடுத்துக்கிட்டா ஹார்ட் பிராபிளம் வரும்.

“வந்தா வருது. எனக்கு தான வருது உங்களுக்கென்ன?”

“ஷனாவை வச்சிக்கிட்டு இப்படி பேசுற? நீ உண்மையிலே அவ அம்மா தானா?” சீற்றமுடன் ஆரியன் கேட்க, அதியா ரோட்டில் செல்பவர்கள் அவளை பார்ப்பதை பார்க்கவும் அழுகை வந்தது. உதட்டை கடித்து அழுகையை கட்டுப்படுத்தி அவன் கையை உதறி விட்டு அழுது கொண்டே வேகமாக நடந்தாள்.

“ஆ..ரு” என ஆகர்ஷனா அவனை முறைத்து விட்டு, “அதிம்மா” என ரோட்டில் ஓடினாள்.

“ஷனா” என ஆரியன் கத்த, அதியா நின்று பார்த்தாள். உத்தமசீலனோ பயந்து நின்றார். பைக் ஒன்று ஆகர்ஷனாவை இடிப்பது போல் வந்தது. ஆரியன் அவளருகே செல்வதற்குள் அதியா அவளிடம் விரைந்து ஓடி அவளை தன்னுடன் இழுத்து கீழே விழுந்தாள்.

பின் தலையில் அடிப்பட்டு அதியா மயங்கினாள். “அதிம்மா” என ஆகர்ஷனா அழுதாள்.

அதி..அதி..ஆரியன் அழைக்க, “தூக்குடா பிள்ளையை” என உத்தமசீலன் சத்தமிட்டார்.

அப்பா ஒன்றும் இருக்காது. இரத்தம் வரலை என நிம்மதியுடன் அதியாவை தூக்கிக் கொண்டு அவனது கடைக்கே வந்தான். பில் போடுபவர் தண்ணீரை எடுத்து அவனிடம் வந்தார். எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பேருந்திற்காக நின்று கொண்டிருந்த சக்தி இவர்களை பார்த்து ஓடி வந்தாள்.

தண்ணீரை தெளிக்க விழித்த அதியா, “ஆகு” அழைத்தாள். “அதிம்மா” என தாவி அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டாள்.

எல்லாரையும் பார்த்து விட்டு ஆரியனை பார்க்கவும் ஏதும் பேசாமல் பாப்பாவை தூக்கிக் கொண்டு எழுந்தாள். சக்தி அவள் முன் வந்து அவளை உற்று பார்த்தாள்.

“என்ன?”

உங்களிடம் பேசணும்.

“அதெல்லாம் தேவையில்லை” ஆரியன் சொல்ல, “என்ன பேசணும்?” அதியா கேட்டாள்.

தனியாக தான் பேசணும்.

“பழிவாங்கும் படலமா?” அதியா கேட்க, புன்னகைத்த சக்தி, “நான் சாதாரண பொண்ணு. எதுக்கு பழி வாங்கணும்? என் மேல தவறு இருக்கு” என அதியாவை பார்த்தாள். புருவத்தை நெறித்தவாறு ஆரியன் சக்தியை பார்த்து, “எதுவும் பேச வேண்டாம். கிளம்பு” என்றான்.

சக்தி அதியாவை பார்த்துக் கொண்டே சென்றாள்.

“வா..நானே உங்களை வீட்ல விட்டுறேன்” ஆரியன் சொல்ல, அவள் உத்தமசீலனை பார்த்தாள்.

“நீ போம்மா. நான் வந்துருவேன்” என்றார்.

ஆரியன் அருகில் இருந்தவரை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு இருவரையும் தன் பைக்கில் அழைத்து சென்றான்.

“நேற்று ஷாப்பிங் பண்ண முடியல. அதனால இன்று போகலாமா?” எனக் கேட்டாள்.

“போகலாம். உன்னிடம் ஓவரா தான் பேசிட்டேன் சாரி” என்றான் ஆரியன். ஆகர்ஷனா அவனிடம் பேசவேயில்லை.