Advertisement

அந்த கண்ணீரை உணர்ந்தவன் “ஒரு சிறு பெண்ணின் மனதில் அவசர பட்டு சலனத்தை ஏற்படுத்தி விட்டோமோ?”, என்று கலங்கி போனான்.

ஆனாலும் அவன் தைரியாமாகவே இருந்தான். அவன் ஒரு பெண்ணை காதலித்து விட்டான். பல யுகம் வாழ்ந்த சந்தோசத்தை சிறு நேரத்திலே பெற்று விட்டான். இனி போரில் அவன் உயிர் சென்றால் கூட இன்பமாகவே  இறப்பான்.

அவள் கண்ணீரை நிறுத்த “தேவி எனக்கு ஒரு சந்தேகம்”, என்று ஆரம்பித்தான்.

அவனுடைய குரலில் நடப்புக்கு வந்த வான்மதி, கண்ணீரை துடைத்து கொண்டே “இப்போது என்னவாம்? என் உடல் எப்படி இருக்கிறது என்ற ஆராய்ச்சியா?”, என்று உதட்டை சுளித்து கொண்டு கேட்டாள்.

அவள் உதட்டு சுளிப்பில் கூட சறுக்கி விழுந்தான் நரேந்திரவர்மன்.

“உன் உடலை பற்றிய சந்தேகம் எனக்கு இந்த ஜென்மம் முழுவதும் போகாது தேவி. அப்போது மனதில் வந்த சந்தேகத்தை சீர் செய்ய தான் என் கைகளால் பரிசோதிக்க முயன்றேன். எங்க? அதை தான் நீ தடுத்து விட்டாயே”, என்று புன்னகையுடன் கூறினான்.

வெட்கத்தில் முகம் சிவந்தவள் “தயவு செய்து அது போல் பேசாதீர்கள். எனக்கு என்னவோ போல் இருக்கிறது”, என்றாள்.

“நான் வேறு ஒன்று தான் கேட்க வந்தேன். நீ தான் என்னை திசை திருப்புகிறாய் தேவி”

“சரி சரி, நான் ஒன்றும் கூற வில்லை. தங்களுடைய சந்தேகத்தை கேளுங்கள்”

“இப்படி உன்னுடன் உரையாடும் தருணம் என் வாழ்வில் வருமா தேவி?”

அவனுடைய உதடுகளை தன் விரலால் மூடியவள் “அபசகுனமாக எதையும் உரைக்க வேண்டாம் இளவரசே. தங்களுடைய வீரத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வென்று வாருங்கள். தங்களுக்காக இந்த வான்மதி காத்திருப்பாள். உங்கள் கரம் பற்றி தங்கள் தேசம் வரும் நாள் விரைவில் வரும்”, என்றாள்.

“என் தேசத்தில் என் பஞ்சணையில், என் நெஞ்சினில் மஞ்சம் கொண்டிருக்கும் தருணம் வரவேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது தேவி”, என்று புன்னகைத்தான் நரேந்திரவர்மன்.

“இப்படியே பேசி நாழிகை தான் சென்று விட்டது. அதை எல்லாம் பிறகு பார்க்கலாம். தாங்கள் இன்று இரவு பயண படவேண்டும் என்று என் தந்தை கூறினார். இப்போதே அந்தி வேளை வந்துவிட்டது. அரண்மனைக்கு  செல்லலாம்”

“போர் முடியட்டும். அதன் பிறகு உன்னை கவனித்து கொள்கிறேன். இப்போது செல்லலாம் வா”

“ஹ்ம்ம்”, என்று எழுந்தவளுக்கு காலை அழுத்தி ஊன்ற  முடியவில்லை.

“ஆ என்னால் காலை அசைக்க முடிய வில்லை”, என்று மெது குரலில் கூறினாள் வான்மதி.

“வலி இன்னும் குறைய வில்லை அல்லவா? நீ எவ்வாறு அரண்மனை வரை நடந்து வருவாய் தேவி?”

“நொண்டி கொண்டு தான் வர வேண்டும். வேறு வழி?”

“வாசு தேவ சக்கரவர்த்தியின் செல்ல இளவரசி, நரேந்திரவர்மனின்  இதய ராணி நொண்டி நடந்து செல்வதா? அதை நான் பார்த்து கொண்டிருப்பதா?”

“பார்க்காமல் வேறு என்ன செய்வீர்களாம்? சரி வாருங்கள் செல்லலாம்?”

“அப்படி என்னால் உன்னை நடக்க வைத்து பார்த்து கொண்டிருக்க முடியாது தேவி? எனக்கு கடவுள் இரண்டு கைகளை கொடுத்ததன் பலனை இன்று தான் அடைய போகிறேன்”

“என் காலுக்கும், தங்கள் கரங்களுக்கும்  என்ன சம்பந்தம் இளவரசே?”

“இளவரசர் என்று அழையாமல்  வர்மா, இல்லையென்றால் நரேந்திரா  என்று அழைத்தால் இன்னும் சுகமாக இருக்கும். நீ மரியாதையாக அழைப்பது, எனக்கு பிடித்தமே இல்லை வான்மதி”

“முதலில் மங்கள நாணை என் கழுத்தில் பூட்டுங்கள். பின் போக போக மரியாதை தானாகவே குறைந்து விடும்”

“நீ என்னை ஏதாவது ஜீவராசியின் பெயர்களை வைத்து அழைத்தால் கூட நான் ஆனந்த படுவேன் தேவி”

“தங்களுக்கு காதல் பித்து அதிகம் பிடித்து விட்டது இளவரசரே. நாம் செல்லலாம்”

“வலியை வைத்து கொண்டு எவ்வாறு வருவாய் தேவி? காதல் போதையில் உன் கால்வலியை மறந்து போனேன். அடியேன் இருக்க நீ ஏன் நடக்க  சிரம பட வேண்டும்?”

“சிரமம் கொள்ளாமல் எப்படி நான் அரண்மனைக்கு செல்வதாம்?”

“இப்படி தான்”, என்று கூறி கொண்டே அவளை இரு கைகளால் வாரி தூக்கி கொண்டான். அவன் இப்படி செய்வான் என்று தெரியாமல் திகைத்து போனாள் வான்மதி.

“ஐயோ! தாங்கள் என்ன செய்கிறீர்கள்? தயவு செய்து என்னை இறக்கி விடுங்கள்”

“நான் உன்னை தொட கூடாதா தேவி? சற்று நேரம் முன்பு நடந்தது அனைத்தும் மறந்து விட்டதா?”

“உளறாதீர்கள். அது நாம் மட்டும் தனித்திருக்கும் வேளையில். தற்போது அரண்மனைக்கு செல்லும் போது அனைவரும் காண்பார்கள்”

“அது தானே கவலை? அதை நான் பார்த்து கொள்கிறேன். நீ அமைதியாக இரு”, என்று அவள் கண்களை பார்த்து கூறினான்.

அந்த பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள் வான்மதி. அவள் கைகள் உயர்ந்து அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தன.

நந்தவனத்தில் எல்லை வரைக்கும் எதுவோ பஞ்சு பொதியை சுமப்பது போல தூக்கி சென்றான் நரேந்திரவர்மன். எல்லை சென்ற பின்னர் தான் அவன் கண்களில் அந்த காவல் வீரன் விழுந்தான்.

“இப்படியே கனவில் நடந்தால் அனைவரும் என்ன நினைப்பார்கள்?”, என்று சிந்தித்தவன் அவளை பார்த்தான்.

அவளும் அவனுடன் ஒண்டி கொண்டு தான் கிடந்தாள். அவள் செய்கையை ரசித்தவன் “தேவி”, என்று அழைத்தான்.

“ம்ம்”, என்று சொல்லி அவனை  நிமிர்ந்து பார்த்தாள் வான்மதி.

“நீ இப்படி மாலையாக என் கழுத்தில் கைகளை போட்டிருந்தால் பார்ப்பவர்கள் காதலாக உன்னை தூக்கி கொண்டது போல பார்ப்பார்கள். எனக்கும்  அப்படி அவர்கள் பார்த்தால் மகிழ்ச்சி தான். ஆனால் போர் முடியும் வரை உன் தந்தையிடம் நான் நம் காதலை பற்றி உரைக்க வேண்டாம் என்று எண்ணி இருந்தேன். இப்போது என்ன செய்வது?”

“இதை தானே நானும் முன்னே கூறினேன். என்னை இறக்கி விடுங்கள். நானே நடந்து வருகிறேன்”

“அப்படி எல்லாம் விட முடியாது?”

“இப்படி முரண்டு பிடித்தால் நான் என்ன செய்வது?”

“ஒன்றும் செய்ய வேண்டாம். என் தோளில் இருந்து உன் கரங்களை  மட்டும் எடுத்து விடு. கண்களை இறுக்கி மூடி கொள். அப்போது உன் தலை தோய்ந்தது போல் இருக்கும். அதனால் பார்ப்பவருக்கு உடல் நிலை சரி இல்லாதவரை தூக்கி செல்வது போல தான் இருக்கும்”

ம்ம் என்று முனங்கி விட்டு அவன் சொல் படி செய்தாள்.

அதன் பின் தலை தோய்ந்த இளவரசியை அவன் வேகமாக அரண்மனைக்கு தூக்கி செல்வதை தான் பார்த்தார்கள். “இளவரசிக்கு என்னவாயிற்று?”, என்று பதறி போனார்கள் அனைவரும்.

யாரையும் கண்டு கொள்ளாமல் அரண்மனைக்கு தூக்கிச் சென்றான். அங்கே வராக சித்தர் தயாராகி அமர்ந்திருந்தார். கூடவே மகாராணியும் மகாராஜாவும் இருந்தார்கள்.

நரேந்திரவர்மன் வான்மதியை தூக்கி கொண்டு வருவதை பார்த்து பதறி போனார்கள்.

இவன் அங்கிருந்த பஞ்சணையில் அவளை கிடத்தினான். மூவரும் அவள் அருகில் வந்து விட்டார்கள்.

“என் கண்மணிக்கு என்ன வாயிற்று?”, என்று பதறி போனார் மகாராஜா.

“பதட்டம் கொள்ள வேண்டாம் மகாராஜா. இளவரசியின் காலில் முள் குத்தி விட்டது. அதிக ரத்தம் வீணாகி விட்டது. அதனால் சிறிது மயக்கம். நான் காயத்தை ஆராய்ந்தேன். அதில் தான் சிறு பிரச்சனை. முள்ளின் முனை காலில் சிக்கி விட்டது. உடனே வைத்தியரை அழையுங்கள்”

“இதோ இப்போதே அழைக்கிறேன்”, என்று அழைத்த மகாராஜா யாரங்கே? உடனே அரணமனை வைத்தியரை வர சொல்லுங்கள்”, என்று உத்தரவிட்டார்.

“ஒரு சாதாரண முள் குத்தி தான் மயங்கி விழுந்து விட்டாளா? ஏய் உனக்கு ஒன்றும் ஆக வில்லை எழுந்திரு”, என்று  அவள் கன்னம் தட்டினாள் அருந்ததி.

“தேவி என் மகளை தொந்தரவு செய்யாதே”, என்று கண்டிப்புடன் சொன்னார் மகாராஜா.

“எல்லாம் தாங்கள் கொடுக்கும் செல்லம் தான். இவள் எப்படி பலவீனமாக இருக்கிறாள் பாருங்கள். முள் குத்தினால் எடுத்து போட்டு வராமல் மயங்கி கிடக்கலாமா? ஏய் வான்மதி. எழுந்திரு’, என்று மறுபடியும் அவள் கன்னம் தட்டினாள்.

“என்னுடைய தாய்க்கு என்னை கடிந்து கொள்ளவில்லையென்றால் நித்திரையே வராது”, என்று எண்ணிக் கொண்டு உண்மையாகவே மயங்கி விழுந்தவள் கண் விழிப்பவள் போல கண் விழித்தாள்.

அவளுடைய நாடகத்தை ரசித்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். கூடவே வராக சித்தரும். “நாடகம் பிரமாதம் மகனே”, என்று அவன் காதில் கூறினார். “இவர் கண்களில் இருந்து மட்டும் எதுவுமே தப்பாது போல?”, என்று எண்ணிக் கொண்டு அவரை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தான்.

அடுத்து வைத்தியர் வந்து ஒடிந்திருந்த முள்ளை அகற்றி விட்டு மருந்து வைத்து கட்டு போட்டார்.

“காலை வரை காலை அசைக்காமல் வைத்திருந்தால் இளவரசிக்கு குணமாகி விடும் மகாராஜா. நான் சென்று வருகிறேன்”,என்று சொல்லி விட்டு சென்று விட்டார் வைத்தியர்.

Advertisement