Advertisement

அத்தியாயம் 7

முகம் பார்க்கும்

கண்ணாடி நீயென்றால்

அது காட்டும்

பிம்பம் நானாவேன்!!!

 

மூடிய அவள் முகத்தை ரசித்து பார்த்த நரேந்திரவர்மன், மெதுவாக அவள் கைகளை விலக்கினான். இமை மூடி அவள் நின்றிருந்த தோற்றம் அவனை மயக்கம் கொள்ள வைத்தது.

மெதுவாக அவள் முகம் நோக்கி குனிந்து அவள் கண்ணிமையின் மீது முத்தம் பதித்தான். அவனுடைய முத்தத்தை தாங்க முடியாமல் வான்மதியின் தளிர் உடல் நடுங்கியது.

கைகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள். காலை அழுத்தமாக தரையில் ஊன்றி தன்னுடைய நடுக்கத்தை குறைக்க முயன்றாள். ஆனால் முள் குத்தி இருந்த கால் அவள் கொடுத்த அழுத்தத்தால் அசைந்து அவளுக்கு வலியை கொடுத்தது.

“ஸ்ஸ் ஆ”, என்று அவள் உதடு வலி பொறுக்க முடியாமல் உச்சரித்தது.

“நான் கொஞ்சம் கடினமானவன் தான் தேவி. ஆனால் என் உதடும் உனக்கு நோவை தருகின்றதா? நான் முத்தமிட்டதை நீ விரும்ப வில்லையா?”, என்று கவலையான குரலில் கேட்டான்  நரேந்திரவர்மன்.

“தாங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் என்ன செய்வேன் இளவரசே? காலை அசைத்ததால் வலி ஏற்பட்டு விட்டது. அதனால்…”, என்று தயக்கத்துடன் பதில் உரைத்தாள் வான்மதி.

“ஓ அதனால் தானா? கால் வலி காரணமாக தான் ஒலி எழுப்பினாயா? அப்போது என் முத்தம் உனக்கு பிடித்து தான் இருக்கிறதா?”, என்று சிறு புன்னகையுடன் கேட்டான்.

“இங்கே இருந்தால் தாங்கள் இப்படி தான் உளறுவீர்கள். வாருங்கள் அரண்மனைக்கு செல்லலாம்?”

“மகாராஜா என்னவோ  நீ இந்த நந்தவனத்தில் குடியிருப்பதாக கூறினார். நீ என்னவென்றால் போக வேண்டும் என்று உரைக்கிறாயே?”

“அப்போது நான் மட்டுமே இங்கே உலாவுவேன். தற்போது நீங்களும் அல்லவா இருக்கிறீர்கள்”

“நான் உனக்கு தொந்தரவாக வந்து விட்டேனா?”

“ஒரு காலும் நான் அப்படி நினையேன். ஆனால் அச்சமாக இருக்கிறது?”

“என்ன? வாசுதேவச்சக்கரவர்த்தியின் புதல்விக்கு அச்சமா? வியப்பாக இருக்கிறதே. ஆனால் எதற்காக அச்சம் தேவி? நீ கூறியது போல நந்தவனத்துக்கு, வேலி கூட போட்டாயிற்றே? நேற்று வந்தது போல எந்த விலங்குகளும் கூட உள்ளே நுழைய முடியாது? பின் ஏன் அச்சம்?”

“விலங்குகளை கண்டு அச்சம் கொள்ள வில்லை. தங்களை கண்டும், என் பெண்மையை கண்டும் தான் அஞ்சுகிறேன்”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள் வான்மதி.

“ஹா ஹா, நான் உன்னை ஒன்றுமே செய்ய வில்லையே தேவி. நான் அறியா பிள்ளை தெரியுமா? என்னை கண்டு நீ அச்சம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை”

“யார்? தாங்களா அறியா பிள்ளை? நம்பும் படியாக இல்லை இளவரசே. சிறிது நேரத்துக்கு முன் தாங்கள் செய்த செயல் அறியா பிள்ளை செயல் போலவா இருந்தது?”

“ஆம் அறியா பிள்ளை செயலே தான். அனைத்தும் அறிந்த பிள்ளையாக இருந்தால் இந்த செயலை அல்லவா புரிந்திருப்பேன்”, என்று கூறி கொண்டே அவள் இதழ்களை சிறை செய்தான்.

முதல் இதழ் முத்தம், அவனுக்கு அமுத கானமாகவே தெரிந்தது. தேனுரும் அவளுடைய இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்தவனுக்கு சித்தம் கலங்கி நாடி, நரம்பு அனைத்தும் துடித்தது.

உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சிலிர்த்து போனான். அவன் அறிந்த முதல் பெண்ணின் உதடுகளுக்குள் தன்னை தொலைத்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.

அவன் அப்படி என்றால் அவள் நிலையோ பரிதாபத்திற்குரியது.

ஏற்கனவே அவள் கன்னி மனதில் சலனத்தை ஏற்படுத்தி அவளை துடிக்க வைத்தவன் இம்முறை முத்தம் என்னும் மோக முள் கொண்டு அவளை துளையிட்டு கொண்டிருந்தான்.

முள் குத்தியதால் உணர்ந்த கால் வலியை கூட வான்மதியால் பொறுத்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்த இதழ் முத்தம் அவள் உடல் முழுவதும் ஒரு இன்பமான வலியை கொடுத்தது. அடி வயிற்றில் ஒரு உணர்வலை உருவாகி அவள் தேகம் எங்கும் பயணித்தது. அவள் கண்ணிமைகள் மெதுவாக மூடி கொண்டன.

அவன் கொடுத்த அதிக அழுத்தத்தில் மூடி இருந்த அவளுடைய இதழ்கள் சிறிதாக பிரிந்தன. ஆனால் அதையே வழியாக கொண்டு அவன் நாக்கு அவள் உதட்டுக்குள் நுழைந்தது.

மென்மையான அவனுடைய உதட்டின் தொடுதலையே தாங்க முடியாமல் தவித்தவள் குளிர்ச்சியான அவனுடைய நாக்கு மற்றும் எச்சில் என்னும் அமுதமும் இணைந்து ஏற்படுத்திய உணர்வை தாங்க முடியாமல் அவன் தோள்களில் தன் கரங்களை வைத்தாள்.

அவள் தந்த நெருக்கத்தில் அவன் கரங்களும் அவள் சிற்றிடையை வளைத்து கொண்டன.

அவளுடைய ஒத்துழைப்பும், அவளுடைய வெற்றிடையில் ஒரு விதமான குளிர்ச்சியான சூட்டையும் உணர்ந்த நரேந்திரவர்மனின் உணர்வுகள் அவனுக்குள் பேயாட்டம் போட்டன.

இடையில் அவன் கைகள் அழுந்தும் போது அவன் தோளில் உள்ள அவள் கைகள் அவனை இறுக்கி பிடித்தது. அது கூட அவனுக்கு அழைப்பாகவே இருந்தது.

அவள் உதடுகளில் இருந்து விலகியவன் மீண்டும் அவள் உதடுகளை சிறை செய்தான். பின் விலகியவன் அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவன் உதடுகள் அவள் காது மடலை வருடி கொண்டிருந்தது. “தேவி”, என்று   அவள் காதில் முனங்கினான் நரேந்திரவர்மன்.

அவளும் அவனுடன் ஒன்றி கொண்டாள். அவள் கரங்கள் அவன்  கழுத்தை சுற்றி வளைத்தது. அந்த அலாதி நெருக்கத்தில் அவளுடைய பெண்மை அவன் மார்பில் வேகமாக அழுந்தியது. அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் அவள்  இடையில் இருந்த அவனுடைய கை மெதுவாக மேல் நோக்கி பயணித்தது.

கள்ள தனமாக அவன் செய்கை அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தவள், இப்போது அவன் கை மேல் நோக்கி ஊர்வதை உணர்ந்து வேகமாக அதை தடுக்க ஒற்றை கையை இறக்கினாள்.

அதன் மென்மையை  அனுபவிக்கும் முன் அவன் கரங்களை பலம் கொண்டு தள்ளி விட்டவள் அவனிடம் இருந்தும் விலகினாள்.

நரேந்திரவர்மன் சுயவுணர்வை இழந்த நிலையில் இருந்த அந்த வேளையில் அவனை எளிதாக தள்ளி விட முடிந்தது வான்மதியால்.

அவனை தள்ளி விட்டவள் அவன் முகம் பார்க்க முடியாமல் மறுபடியும் முகத்தை கைகளால் மூடி கொண்டாள்.

நரேந்திரவர்மனோ, பொம்மையை தொலைத்த குழந்தையை போல் விழித்தான். பின் அவள் வெட்கம் கண்டு, உரக்க சிரித்தான்.

“என்னை மன்னித்து விடு தேவி. என்னையே மறந்து அவ்வாறு நடந்து கொண்டேன். இன்னும் உனக்கு மங்கள நாண் பூட்ட வில்லை என்ற உண்மையே மறந்தே விட்டேன். இப்போதே உன்னை கந்தர்வ மனம் புரிய வேண்டும் போல் ஆவலாக உள்ளது. ஆனால் இடையில் போர் இருக்கிறது”, என்று சோகமாக உரைத்தான் நரேந்திரவர்மன்.

போரை பற்றி அவன் உரைத்ததும் தன் வெட்கத்தை மறந்து அவன் முகத்தை ஏறிட்டாள் வான்மதி.

அவள் முகத்தில் இருந்த கலக்கத்தை பார்த்தவன் “என்னவாயிற்று தேவி? வெட்கத்தில் சிவந்திருந்த உன் முகம் பார்க்க அழகாக இருந்தது. இப்போது அந்த வெட்க முகத்தில் ஏன் இந்த கலக்கம்?”, என்று கேட்டான்.

“போர் பற்றி தாங்கள் உரைத்ததும் மனதில் அச்சம் சூழ்ந்து விட்டது இளவரசே”

“அச்சம் கொள்ள வேண்டாம் தேவி. நானுமே போர் முடியும் வரை உன்னிடம் என் காதலை மறைக்க தான் எண்ணினேன். ஆனால் தனிமையில் உன்னை கண்டதும், அதுவும் இவ்வளவு நெருக்கமாக கண்டதும்… என்னால் என்னையே கட்டு படுத்தி கொள்ள இயலவில்லை. அதனால் தான் இவ்வாறு நடந்து கொண்டேன்”

….

“போர் என்பது நமக்கு சாதாரணமான செயல் தேவி. அதை பற்றி கவலை படாதே. நீ கூட போர் நம் வீரர்களுக்கு மரபு என்று உரைத்தாயே? அந்த தைரியம் எங்கே சென்றது தேவி?”

“ஆம் போர் மரபு தான். வீரர்களுக்கு அது அழகு தான். ஆனால் அது என்னவன் என்று வரும் போது உள்ளமெல்லாம் நடுங்குகிறது இளவரசே. தங்களுக்கு ஏதுவாது நடந்தால்…..”

“கலங்காதே தேவி. இறைவன் நியாயத்தின் பக்கம் நிற்கிறான். எனக்கு ஒரு குறையும் வராது. அப்படியே இந்த போரில் நான் மாண்டு போனாலும் என் நெஞ்சம் முழுவதும் நிறைந்த உனக்காக, உன்னுடைய நாட்டை காப்பாற்றி தந்த நிம்மதி இருக்கும். நான் உன் மக்களுக்காக உயிர் தியாகம் செய்வது உனக்காக செய்வதே ஆகும்”

“தங்களுக்கு ஏதாவது  நேர்ந்தால் நான் என்னையே மாய்த்து கொள்வேன்”, என்று கூறி கொண்டே அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் வான்மதி.

“அப்படி எதுவும் அபத்தம் நேராது என்று நம்புவோம் தேவி. என்றைக்கு இருந்தாலும் நீயே என் தேவி. போரில் வெற்றி பெற நீ இறைவனிடம் வேண்டிக்கொள். போரில் மட்டும் அல்ல, உன்னை மணந்து வெற்றிவாகை சூட இந்த நரேந்திரவர்மன் மீண்டும் வருவான்”, என்று கூறியவனின் விரல்கள் அவள் தலையை மெதுவாக வருடியது.

உயிரோடு உயிர் கலப்பது போன்ற உணர்வை தந்த அடுத்த நொடி வர போகும் பிரிவை  தாங்க முடியாமல் வான்மதியின் கண்கள் கலங்கியது. அவளுடைய கண்ணீர் அவன் மார்பை நனைத்தது.

Advertisement