Advertisement

அவனுடைய கண்களை சந்திக்க முடியாமல் வேறு புறம் திரும்பினாள். இப்போதும், அவள் கண்களில் ராமர் சீதை சிலை தெரிந்தது.

“அப்படியா? தாங்கள் உரைத்தது மெய்யா?”, என்று ஆனந்தத்துடன் கேட்க தூண்டிய நாவை அடக்கியவளுக்கு காதலுக்கு பிறகான நிலை கண்ணில் வந்தது. அதை நினைத்து சோர்ந்து போனாள். அடுத்த நொடி  தடுமாற்றத்திலிருந்து வெளியே வந்தவள் நிமிர்ந்து அவனை பார்த்து சலனமே இல்லாமல் கூற ஆரம்பித்தாள்.

“உங்களுக்கும் காதலுக்கும் வெகு தூரம் இளவரசரே”

“ஏன் காதல் உனக்கு மட்டும் தான் பொதுவானதா? எனக்கு வர கூடாதா?”, என்று சிரித்து கொண்டே  கேட்டான் நரேந்திரவர்மன்.

“இல்லை அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் காதல் ராஜாக்களுக்கு உகந்தது அல்ல”

“நான் ராஜா அல்லவே வான்மதி”

அவன் வாய் வழியாக வந்த தன்னுடைய பெயரை கேட்டவளுக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. அந்த உணர்வை மறைத்து கொண்டு “இப்போது ராஜா அல்ல தான். ஆனால் ராணி வந்து விட்டால் அரியணை ஏறி தானே ஆக வேண்டும்?”, என்று கேட்டாள்.

“ஆம் அது தானே மரபு? அதற்கும் என் காதலுக்கும் என்ன தொடர்பு வான்மதி? நான் ராஜா என்றால் நீ தானே ராணி?”

“நான் மட்டும் தான் ராணியா?”

அவளுடைய அந்த கேள்வியில் அவள் மனதை தெளிவாக படித்து விட்டான் நரேந்திரவர்மன். அவள் அன்று வாளை கழுத்தில் வைத்து கொண்டு உரையாற்றிய போது வீரமாக பேசிய அனைத்து வார்த்தைகளும் இப்போது அவனுக்கு  நினைவில் வந்தது.

“கண்களில் தெரிந்த காதலை மறைத்து கொண்டு அவள் இவ்வாறு கூறுவதற்கு காரணம் இது தானா? இது தான் அவளை இப்படி கலங்க வைக்கிறதா? அன்று சொன்னாளே, நான் மட்டும் தான் ராணி என்று வாக்கு கொடுப்பவனே என் மணாளன் என்று. அதை மறந்து போனோமே”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான்.

“என்ன இளவரசே வாயடைத்து நின்று கொண்டிருக்கிறீர்கள்? நான் கேட்டது தங்கள் காதில் விழ வில்லையா? என் மீது காதல் கொண்டுள்ளதாக பிதற்றுகிறீர்களே? அப்போது தங்கள் அரியாசனத்தை மட்டும் இல்லை. பஞ்சணையையும் அலங்கரிக்கும் ராணி நான் மட்டும் தானா? பதில் கூறுங்கள்”, என்று ஏளனமாக கேட்டாள்.

“என் காதல் ஒன்றும் பிதற்றல் இல்லை தேவி”, என்று காதல் மயக்கத்தை மறைத்து விட்டு சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டு கூறினான்.

“சரி உண்மையான காதல் என்றே வைத்து கொள்ளலாம். கேட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள்”

“நான் பதில் கூறினால் நம்புவாயா?”

“பதில் கூறினால் நம்ப இயலாது தான். ஆனால் வாக்களித்தால் நம்புவேன்”

“அது பொய்யான வாக்காக இருந்தால்?”, என்று சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.

“எப்போது அது பொய்யான வாக்கு என்று எனக்கு தெரிகிறதோ, அன்றே நான் இந்த உலகில் இருக்கும் கடைசி நாள்”, என்று அவள் கூறிய அடுத்த நொடி அவள் உதட்டில் தன்னுடைய கையை வைத்து மூடி இருந்தான் நரேந்திரவர்மன்.

அதை உடனடியாக  தட்டி விட்டாள் வான்மதி.

“விளையாட்டுக்கு கூட அவ்வாறு நீ உரைக்க கூடாது வான்மதி”, என்று பதறி போய் சொன்னான்.

“நெருப்பென்று சொன்னால் சுட்டு விடாது இளவரசே”

“எப்போதுமே தர்க்கம் செய்கிறாயே? காதலின் அடையாளமே நம்பிக்கை தான். என்னை நம்ப மாட்டாயா? ஒரு வாக்கை நம்பும் நீ, என்னை நம்பாதது ஏன்?”

“உங்களை நம்பாமல் இல்லை. உங்களை முழுமையாக நம்புவேன். அது நீங்கள் சாதாரண குடிமகனாக இருந்தால். ஆனால் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசனாக தங்கள் மீது துளி கூட எனக்கு  நம்பிக்கை இல்லை. அதுவே வாக்களித்தால், தமிழ் மன்னர்கள் வாக்கு தவறாதவர்கள் என்று கண்ணை மூடி கொண்டு நம்புவேன். எனக்கு காதல் முக்கியம். சாம்ராஜ்யத்தின் ராணி பட்டம் அல்ல”

“சரி வாக்களித்தால் நம்புவாய் தானே? நல்லது. ஆனால் உனக்கு என் மீது காதல் வர வில்லையே? பின் ஏன் அதை பற்றி பேச வேண்டும்? விடு. ஒருதலையாக உன்னையே நினைத்து கொண்டு வாழ்ந்து விடுகிறேன். நீ என்னை விரும்புகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக நான் என் வாக்கை அளிப்பேன். ஆனால் உன் மனதில் என் மீது சிறு சலனம் கூட வர வில்லையே”, என்று உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டு அவளிடம் உரைத்தான் நரேந்திரவர்மன்.

அவன் தன்னிடம் போட்டு வாங்குகிறான் என்று உணராமல் தன் மனதை அவனிடம் கூற ஆரம்பித்தாள் வான்மதி.

“என்னையே நினைத்து கொண்டு, வேறு பெண்ணை மணக்காமல் தாங்கள் இருப்பது என்பது இயலாத செயல் இளவரசே. தாங்கள் அரியணை ஏறினால் கண்டிப்பாக தங்கள் அருகே ஒரு ராணி இருக்க வேண்டும். உங்களுடைய ராஜ வம்சத்தில் நீங்கள் மட்டுமே, ஆண் வாரிசு. அதனால் அரச பதவி உங்களுக்கு காத்திருக்கிறது. அதனால் என்னையே நினைத்து கொண்டு வாழ்வேன் என்று கேலியாக கூற வேண்டாம். நரசிம்ம பல்லவனின் கதை தெரியும் தானே? அரியணைக்காக மனதில் இருந்த காதலை விட்டு கொடுத்தானே? ஏன் நேற்று நாம் பேசிய ராமர் கதையும் அதுவே தானே? ஒரு ராஜாவாக இருந்து கொண்டு காதலுக்கு முக்கியத்துவம் அவர்களிடம் இருக்காது. அடுத்ததாக என்ன கூறினீர்கள், என் மனதில் சலனம் இல்லை என்றா?”

….

“ஆம் எந்த வித சலனமே இல்லாமல் நான் உண்டு என் கொள்கை உண்டு என்று இருந்தேன். ஆனால் உங்களை கண்டு இக்கணம் என் மனதை பறி கொடுத்து விட்டு அடுத்து என்ன என்று யோசிக்க முடியாமல் இருக்கிறேன் நான்”, என்று கண்ணீருடன் சொன்னவள் மேலும் தொடர்ந்தாள்.

“எப்போது என் காலில் முள் குத்தி பதறி துடித்தீர்களோ, அதில் என் தந்தையை கண்டு தங்கள் மேல் சலனம் வந்தது. நான் என் தந்தை, சகோதரனை  தவிர வேறு எந்த ஆண் மகனையும் பற்றி சிந்தித்து இல்லை. ஆனால் தங்களுடைய  ஒற்றை கண்ணீர் துளியில் என் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டீர்கள். நான் தேடிய காதலை தங்கள்  கண்களில் கண்ட போது மயங்கி போய் நின்றேன். தங்களுடைய  விரல் தீண்டிய போது சிலிர்த்து போனேன். தாங்கள் தந்த முத்தத்தில் என் பெண்மை முற்றிலுமாக தங்களிடம் அடைக்கலமானது. என் கண்களுக்கு கந்தர்வனாக தெரிகிறீர்கள். ஒப்பு கொள்கிறேன் என் காதலை. ஆனால், அது நிறைவேறாத காதல். தங்களால் என்னை நினைத்து கொண்டு வாழ இயலாது. ஆனால் என்னால் இயலும். அந்த சிவகாமியை போல கடவுளுக்கு தொண்டு செய்வேன்”, என்று முடிக்கும்  போது அவள் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

வான்மதியின் வாய் மொழியாக வந்த காதல் வார்த்தைகளை கேட்டு திகைத்து போய் நின்றான். அவள்  கண்ணீரை கண்டு நரேந்திரவர்மனும் வெகுவாக கலங்கினான்.

தன்னை சரி படுத்தி கொண்டு அவளிடம் கூற ஆரம்பித்தான்.

“அரண்மனையில் அத்தனை மக்கள் முன்பு கம்பீரமாக  உரையாற்றி, உன்னுடைய  கருத்தை நிலை நாட்டிய உன் தைரியத்தை, பெற்ற தந்தை என்றும் பாராமல் இந்த தேசத்தின் மகாராஜாவையே  எதிர்த்து நின்ற உன்னுடைய அந்த கம்பீரத்தை, கண்டு உன் மேல் காதல் கொண்டு விட்டேன் வான்மதி. இது சத்தியமான உண்மை. அப்போதே என் மனது திருமணம் ஒன்று புரிந்தால் அது உன்னுடன் தான் என்று முடிவு செய்து விட்டது”

….

“இந்த ஜென்மத்தில் நீ மட்டுமே என்னுடைய ராணியாவாய். நான் உனக்கு வாக்களிக்கிறேன். நரேந்திரவர்மனின் கடைசி நிமிடம் வரை  என் சாம்ராஜியத்தின் ராணியாக நீ மட்டுமே இருப்பாய். அது  மட்டும் அல்ல, என் காதல் சாம்ராஜியத்திலும் நீ மட்டுமே என்னுடைய மகாராணி.  அது வரை எந்த பெண்ணின் பின்னும் என் மனது செல்லாது. தப்பான கண்ணோட்டத்தில் உன்னை தவிர  வேறு யார் மீதும் என் பார்வை படராது”

….

“அரியாசனத்தை இழக்கும் தறுவாயில் கூட அந்த அரச பதவியை விலக்குவேனே தவிர நீ சொன்ன ராஜாக்கள் போல, என் தந்தை உன் தந்தை போல, வேறு பெண்ணை  ராணியாக கொண்டு அரச வாழ்வை தக்க வைத்து கொள்ள மாட்டேன். இதனுடன் உனக்கு மற்றொரு வாக்கையும் நான் அளிக்கிறேன் வான்மதி. என்னுடைய உயிர் பிரியும் முன் உனக்கு எதாவது ஆபத்து நேர்ந்தாலோ, அல்லது எமன் உன்னை அழைத்து கொள்ள முடிவு எடுத்தாலோ அந்த நொடியே இந்த வாள் கொண்டு என் தலையை துண்டித்து கொள்வேன். இது இந்திரவர்மனின் புதல்வனாக, மேலை நாட்டின் இளவரசனாக இந்த நரேந்திரவர்மனின் வாக்கு. என் காதலின் சாட்சியாக  இந்த ராமர், சீதை முன்பு உனக்கு இந்த வாக்கை நான்  வாக்களிக்கிறேன்”, என்று சொல்லி வான்மதியின் தலை மீது கை வைத்தான்.

Advertisement