Advertisement

அத்தியாயம் 6

ஏழு வண்ண வானவில்லிலும்

காணாத வண்ணம்

உன் மேனியின் வண்ணம்!!!

 

தன்னுடைய தொடுகையை தாங்க முடியாமல் அவள் சிலிர்த்ததை நரேந்திரவர்மன் உணர்ந்து கொண்டான். பிடிக்காத ஆண் மகன் அவளை தொட்டால் கண்டிப்பாக இப்படி சிலிர்க்க மாட்டாள். அதையும் அவன் உணர்ந்து தான் இருந்தான்.  ஆனால் அவள் கண்களில் வழியும் கண்ணீருக்கு தான் விடை அவனுக்கு புரியவே இல்லை.

அவள் கண்களில் காதல் வழிகிறது. அவனுடைய ஒற்றை தொடுகையை தவிப்புடன் ஏற்கிறாள். ஆனால் கண்ணீர் எதனால் வருகிறது என்று தெரியாமல் அவன் குழம்பி போனான்.

அவளுடைய பாதத்தை வருடுவதை நிறுத்தி விட்டு அவள் முகத்தையே ஆழமாக பார்த்தான். சித்தரிடம் போர் முடிந்த பிறகு தான் அவளிடமும், தன் பெற்றோரிடமும் காதலை பற்றி உரைக்க வேண்டும் என்று கூறி இருந்தவன் இன்று அவள் கண்ணீரை காண முடியாமல் அவள் காலை மெதுவாக தரையில் வைத்து விட்டு அவள் அருகில் சென்றான்.

அவள் அருகே நெருக்கமாக அமர்ந்தவன் ஆசையாக காதலாக கிசு கிசுப்பான குரலில் “தேவி”, என்று அழைத்தான்.

அவன் குரலில் வழிந்த காதலிலும், தேவி என்ற உரிமையான  அழைப்பிலும் வான்மதியின் உடல் முழுவதும் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. அவன் கண்களில் வழியும் காதலை காண நாணம் கொண்டு   கண்களை திறவாமல் இருந்தாள்.

“உன் கண்களை திறந்து என்னை பார் தேவி”, என்று உரிமையுடன் கூறினான் நரேந்திரவர்மன்.

அடுத்த நொடி அவள் கண் இமைகள் பிரிந்தது. அவன் முகத்தை வெகு அருகாமையில் கண்டாள். இப்போது தான் அவன் அவளுடைய கண்களுக்கு கந்தர்வனாக தெரிந்தான். இது வரை அவனை எந்த வித நோக்கத்துடன் காணாதவளுக்கு இப்போது தான் அவன் அழகே கண்ணில் தெரிந்தது.

ரசித்து பார்த்து கொண்டே இருந்தவளை அவனும் காதலுடன் தான் நோக்கி கொண்டிருந்தான். “அந்த சீதையும் ராமனும் முதல் முறை இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் நோக்கி இருப்பார்கள்”, என்று நினைத்து கொண்டாள் வான்மதி.

அவள் கண்ணீர் நின்று விட்டது தான். ஆனால் ஏற்கனவே வந்திருந்த கண்ணீர் அவள் முகத்திலே தேங்கி இருந்தது. அடுத்த நொடி அவன் விரல் நீண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டது.

“இப்போது என்னவாயிற்று என்று இப்படி கலங்குகிறாய் இளவரசி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“எனக்கு என்னவாயிற்று என்று நானே அறியேன். என்னால் இந்த புது விதமான உணர்வை தாங்க இயல வில்லை”, என்று எங்கோ பார்த்து கொண்டு பதில் கூறினாள் வான்மதி.

“என் தேவி எப்போதும், எதற்காகவும் கலங்க கூடாது. முதல் முறை எவ்வாறு உன்னை கம்பீரமாக கண்டேனோ, அவ்வாறு காண்பதே என் விருப்பம்”

முகத்தை திருப்பி அவனை பார்த்தாள். அவள் கண்ணின் கரு மணிகள் அங்கே இங்கே அலைந்து அவளுடைய மனதின் அலைப்புறுதலை அவனுக்கு சொன்னது. “அவளுடைய அலைப்புறுதலை நீக்க வேண்டும்”, என்று நினைத்தவன் அவள் கண்ணிமை மீது இதழ் பதித்தான்.

அவள் கண்ணீர் அவனது உதடால் துடைக்க பட்டது. அந்த முதல் முத்தத்தை தாங்க முடியாமல் கண்களை மூடி கொண்டாள் வான்மதி. முதல் முறை உணர்ந்த ஒரு ஆணின் தொடுகை அவளை உணர்ச்சி வச பட வைத்தது.

அவளின் அந்த மோன நிலையை கண்டவன் தன்னையே மறந்து  அவள் கன்னத்தில் இதழ் பதித்தான். அவள் கைகள் உயர்ந்து அவனுடைய தோளின் மீது படிந்தது.

அவனுடைய சூடான உதடுகள், அவள் இதழ்களை தீண்டும் முன்பு கண் திறந்தவளின் கண்ணில் விழுந்தது தூரத்தில் இருந்த ராமர், சீதை சிலை.

அந்த சிலையை பார்த்த மாத்திரத்தில் அவளுடைய உணர்ச்சிகள் அனைத்தும் வடிந்தது. ஆனால் அவளுடைய மன நிலையை அறியாமல் முகத்தில் சிரிப்புடன் அவள் இதழ் நோக்கி குனிந்தான் நரேந்திரவர்மன்.

அவன் என்ன செய்ய போகிறான் என்று உணர்ந்தவள்  தன்னுடைய பலம் அனைத்தையும் ஒன்றாக  திரட்டி அவனை தள்ளி விட்டு எழ பார்த்தாள்.

எதிர்பாராமல் அவள் தள்ளியதால் அப்படியே பின்னே சாய்ந்தான் நரேந்திரவர்மன். அவளும் எழ பார்த்ததால் காலை நிலத்தில் வேகமாக ஊன்றி விட்டாள். அப்போது தான் முள் குத்திய நினைவே வந்தது அவளுக்கு.

“ஸ்ஸ்”, என்று கூறி காலை பிடித்து கொண்டாள் வான்மதி.

தள்ளி விட்டதில் திகைத்தவன், அவள் வலியை தங்க முடியாமல் துவண்டதில் முத்தத்தை மறந்து “ஐயோ கால் வலிக்கும்”, என்று கூறி கொண்டே அவள் காலை பிடிக்க போனான்.

இப்போதும், அவனுடைய கனிவு அவளை அசைத்தது. ஆனால் அதை தனக்குள்ளே மறைத்து கொண்டு “அங்கேயே நில்லுங்கள். இன்னும் ஒரு அடி கூட  என்னை தாங்கள் நெருங்க கூடாது”, என்று கூறினாள்.

அதிர்ச்சியாக அவளை பார்த்தான் நரேந்திரவர்மன். அவள் கண்களில் இதுவரை இருந்த மயக்கம் இல்லாததை கண்டு  “என்னவாயிற்று தேவி?”, என்று குழப்பத்துடன் கேட்டான்.

“என்னை அப்படி அழையாதீர்கள்”, என்று கீச்சிட்டாள் வான்மதி.

“ஏன் தேவி?”

“மறுபடியும் தேவியா? அப்படி அழையாதீர்கள் என்று கூறினேன் அல்லவா? ஒரு பெண்ணின் மணாளன் மட்டுமே  அவளை அவ்வாறு  அழைக்க வேண்டும். அதனால் தாங்கள் என்னை அப்படி அழைப்பது சரியான செயல் அல்ல இளவரசரே”

“நான் உன் மணாளன் தானே தேவி. எனக்கு மனைவியாக நீ மட்டுமே வர வேண்டும். எனக்கு நீ தான் தேவி. உன்னை மனப்பூர்வமாக விரும்புகிறேன். எப்போது உன்னை அரண்மனையில் கண்டேனோ, அப்போதிருந்து பித்து பிடித்தது போல திரிகிறேன். உன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தான் நான் இங்கே தங்கி இருக்கிறேன். நான் உன்னை தேவி என்று அழைக்காமல் வேறு யாரு அழைப்பார்களாம்”, என்று சிரித்து கொண்டே தன் காதலை கூறி விட்டான் நரேந்திரவர்மன்.

அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். அவள் மனதில் அவன் மீது  தோன்றி இருந்த மயக்கத்துக்கும் அவளுக்கு விடை தெரிந்தது.

“நானும் அவனை விரும்புகிறேனா? என் மனதில் நுழைந்து விட்டானா? அதனால் தான் அவனுடைய தொடுகையில் கரைந்து

போனேனா?”, என்று நினைத்து பார்த்தாள். அதே மயக்கத்தை அவனும் கொண்டுள்ளான் என்று அறிந்து அவள் மதி மயங்கினாள்.

“தன்னுடைய அக்கறையினால் அவன் என்னை வீழ்த்தி விட்டான். அவனுடைய அழகால் என்னை கவர்ந்து விட்டான்.  அவனிடம் முற்றிலுமாக நான் மயங்கி போனேன். ஆனால் அவன் என் மீது கண்டுள்ள மயக்கம் எத்தனை நாட்களுக்கு இருக்கும்? ராமர், சீதை காதலை குறை கூறினானே? மகாராஜாக்கள் பல மணம் செய்வதை, சூழ்நிலை தான் காரணம் என்று கூறி வாதாடினானே? அப்போது இவனும் அவ்வாறு தானே செய்வான்”, என்று நினைத்து அவள் மனதில் கவலை மேகம் சூழ்ந்தது.

“இனி இவனை தவிர வேறு ஆண் மகன் என் மனதில் வர முடியாது. அதே போல் இளவரசனாக இருக்கும் இவனை மணந்து கொண்டு ராணியாக சென்றாலும், எனக்கு பின் இவன் மணக்கும் பல ராணிகளை என்னால் ஏற்று கொள்ளவும் முடியாது. எப்படி இவனால் மற்ற ராஜாக்களின் வாழ்க்கையை போல் அல்லாமல் ஒரு சாதாரண குடிமகனாக வாழ முடியாதோ அதே போல் இவனை மற்ற பெண்களுக்கு விட்டு கொடுத்து விட்டு அவர்களுக்கு என்னால் ஆரற்றி எடுக்க முடியாது”, என்று நினைத்து கொண்டிருந்தாள்.

“நான் என் காதலை கூறி கொண்டிருக்கிறேன் தேவி. நீயோ என்ன சிந்தித்து கொண்டிருக்கிறாய்?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

Advertisement