Advertisement

“அப்படியா சங்கதி?”

“ஆம்”, என்று புன்னகைத்து விட்டு திரும்பி நடந்தவள் “ஆ”, என்ற அலறலுடன் கீழே அமர்ந்து விட்டாள்.

“என்னவாயிற்று இளவரசி?”, என்று பதறி கொண்டே அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்தான்.

“தவறுதலாக முள் மீது பாதத்தை வைத்து விட்டேன்”, என்று கூறி கொண்டே காலை அவனிடம் காண்பித்தாள்.

அது நன்றாக அவள் பாதத்தில் கிழித்திருந்தது. அதில் இருந்து குருதி வடிந்தது. அவள் ரத்தத்தை கண்டு துடித்து போனான் மகேந்திரவர்மன்.

அவன் பதற்றத்தை வியப்பாக பார்த்தாள் வான்மதி. “ஐயோ ரத்தம் வருகிறதே”, என்று கூறி கொண்டே அவள் காலை கையால் தூக்கினான்.

வலி பொறுக்காமல் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தாலும் அவன் கைகளை விலக்கினாள்.

அதை பார்த்தவன் “இப்படியே விட்டால் வலி அதிகமாகவும், புண்ணாகவும் வாய்ப்பிருக்கிறது இளவரசி. முள்ளை அகற்ற வேண்டும். அதனால் என்னை தடுக்காதீர்கள்”, என்று கூறி கொண்டே அவள் பாதத்தை பார்த்தான்.

அந்நியன் ஒருவன் தொடுகையில் தயக்கமாக அமர்ந்திருந்தாள் வான்மதி.

குத்தி இருந்த முள்ளை விரலால் பிடுங்கினான் நரேந்திரவர்மன். அதனால் கூட கொஞ்சம் தான் ரத்தம் வந்தது. வலி  பொறுக்க  முடியாமல்  துடித்தாள் வான்மதி.

அவள் துடிப்பதை  பார்த்தவனுக்கு  கண்களில்  கண்ணீர்  வந்தது. “அதிகமாக  வலி  இருக்கிறதா?”, என்று கண்களில்  நீருடன்  உயிர்  உருகும்  குரலில்  கேட்டான்  நரேந்திரவர்மன்.

அவனுடைய கனிவில்  பேச  மறந்து  போனாள் வான்மதி.

அதிக  வலியால்  அவள் பதில்  பேச  வில்லை  என்று நினைத்து  கொண்டவன்  முள்ளை பார்வை இட்டான். அதன் நுனி முறிந்திருந்தது. அதை பார்த்து அவன் முகம் கவலை கொண்டது.

முள் முறிந்து போய் இருந்தது. மீதமுள்ள துண்டு அவள் காலில் இருக்கிறது என்று புரிந்து கொண்டான்.

“நுனி முள் பாதத்தினுள் சென்று விட்டது இளவரசி. அப்படியே விட்டால் ஆபத்து. உடனே வைத்தியரிடம் செல்ல வேண்டும்”, என்று  அவளை  அழைத்தான்.

“ஹ்ம்ம்”, என்று முனங்கி விட்டு எழுந்து கொள்ள பார்த்தாள். ரத்தம் வந்து கொண்டே இருந்ததால் காலை கீழே வைத்தால் அந்த ரத்தத்தில் தரையில் உள்ள மண் படும் வாய்ப்பு இருப்பதால், “எப்படி சுத்தம் செய்ய?”, என்று முழித்து கொண்டிருந்தாள்.

அதை அவன் உணர்ந்தானோ என்னவோ, தன்னுடைய கையால் அவள் காலை தூக்கி தன் தொடை மீது வைத்து கொண்டான்.

கூச்சத்தில் முகம் சிவந்து விட்டது அவளுக்கு. “காலை விடுங்கள் நான் கீழே வைத்து கொள்கிறேன்”, என்றாள் வான்மதி.

“அப்படியே அசையாமல் வைத்திருங்கள் இளவரசி. முதலில் ரத்தத்தை நிறுத்த வேண்டும். அதன் பின் தான் அரண்மனைக்கு செல்ல முடியும்”, என்று கூறி கொண்டே அவனுடைய மேலாடையை எடுத்தான்.

அவன் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறான் என்று உணர்ந்தவளோ, “அது பட்டாடை. அதை வைத்து ரத்தத்தை துடைக்கலாமா? அப்படியே விட்டு விடுங்கள்”, என்றாள்.

“தங்களின் வலியின் முன் பட்டாடை அவ்வளவு முக்கியம் அல்ல இளவரசி”, என்று கூறி கொண்டே அவள் பாதத்தை துடைக்க ஆரம்பித்தான்.

அவன் உருவில் மற்றொரு தகப்பனை கண்டாள் வான்மதி.

அவனுடைய பேச்சிலும், செயலிலும் ஏதோ ஒரு புரியாத உணர்வை அடைந்தாள். அவன் கண்களில் இருந்து வழிந்த நேசத்தை முதல் முறை பார்த்தாள். இது வரை அவன் பார்வையை அலட்சியம் செய்தவள் இப்போது இமைக்காமல் அவனை பார்த்தாள்.

அவள் மனதில் நரேந்திரவர்மன்  நுழைந்தே விட்டான். தன்னை  மணக்கும்  மணாளனை தவிர எவரையும் கண்டு சலனம் கொள்ள மாட்டேன் என்ற கொள்கையை வைத்திருந்தவள், இன்று அவனால் முற்றிலும் மாறி போனாள்.

மனம் முழுவதும் தடுமாறி போனது. அவன் கண்களில் இருந்து வழிந்த காதலை பார்க்கும் போது மனதை பிசைந்தது.

இது வரை ஒரு அந்நிய ஆடவனின் தொடுகை என்று மட்டும் நினைத்தவள், அவன் காதல் சுமந்த பார்வையை தாங்க முடியாமல் தேகம் சிலிர்த்தாள். அந்நிய ஆடவனின் தொடுகை என்ற உணர்வை தாண்டி, ஒரு விதமான இன்பமான அவஸ்தையை உணர்ந்தாள்.

அவளிடம் இருந்து சத்தமே வராததால் ரத்தத்தை துடைத்து கொண்டே அவள் முகத்தை நோக்கினான். பார்த்தவன் சிலையாக சமைந்து போனான்.

ஏன் என்றால் கண்கள் முழுவதும் காதல் கொண்ட பார்வையுடன் அவனையே நோக்கி கொண்டிருந்தாள் வான்மதி. இதுவல்லவோ அவன் எதிர்பார்த்த மயக்கம்.

“என்னை கண்டு அவள் மயங்க வேண்டும். நான் அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்த வேண்டும்”, என்று எண்ணி கனவு கண்டானே. இன்று அந்த கனவு நிறைவேறியது போல இருந்தது.

அவன் பார்வையை கண்டதும் மங்கை அவள், நாணத்துடன் தலை குனிந்தாள். அவள் நாணத்தில்  பரவச பட்டு போனான் நரேந்திரவர்மன்.

காலில் துடைக்க துடைக்க ரத்தம் வந்து கொண்டிருந்ததால், ஓரளவு துடைத்து முடித்தவன், இடுப்பில் கட்டி இருந்த வாளின் பையில் இருந்து ஒரு பொருளை எடுத்தான். “என்ன இது?”, என்று சிந்தித்து கொண்டே  பார்த்தாள் வான்மதி.

அவனோ, அதை வெளியே எடுத்து கையில் வைத்து கொண்டான். எதுவோ ஒரு பொடி என்று புரிந்தது.

“இது ரத்தம் நிற்பதற்கான பொடி இளவரசி. காயம் ஏற்பட்டால் இதை தடவினால் ரத்தம் முழுவதுமாக நின்று விடும். ஆனால் கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள். இது புண்ணில் பட்டவுடன் அதிகமாக எரியும்”, என்று கூறி விட்டு அதை அவள் காலில் தடவ ஆரம்பித்தான்.

“ஆ எரியுதே”, என்று கதறி கொண்டே அவன் தோளில் கை வைத்து இறுக்கி பிடித்தாள்.

அவளுடைய கதறலை தாங்க முடியாமல் “சிறிது நேரம் எரியும் தேவி. பொறுத்து கொள். விரைவில் சரியாகி விடும். கலங்காதே”, என்று ஒருமைக்கு தாவி இருந்தான்.

இருந்த வலியில் அவன் தன்னை ஒருமையில் அழைத்ததை கூட கவனிக்காமல் இருந்தாள்.

“ஆ எரியுது எரியுது”, என்று சொல்லி கொண்டே முகத்தை அவன் தோளில் புதைத்து முகத்தை மூடி கொண்டாள்.

ஆனந்த வியப்பை அடைந்தான் நரேந்திரவர்மன். வலியில் தான் தோள் சாய்ந்தாலும், அதுவே அவள் மனதில் தனக்கு இடம் இருக்கிறது என்பதை அவனுக்கு பறை சாற்றியது.

வலி தாங்க முடியாமல் அவன் தோளிலே தலையை அங்கே இங்கே என்று அசைத்தாள். அவன் அவளுக்கு ஆறுதல் கூறி கொண்டே மருந்திட்டான்.

சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் எரிச்சல் குறைந்தது. அப்போது தான் அவன் தோளில் சாய்ந்திருப்பதை உணர்ந்தாள். வெகு ஆறுதலாக இருந்தது. அவன் நெஞ்சில் சாய்ந்திருப்பது, ஏதோ அவளுக்கான இடத்தில் இருப்பது போல இருந்தது அவளுக்கு. தன் யோசனையில் அதிர்ந்து  போனாள்.

திடுக்கிட்டு அவனிடம் இருந்து  விலகியவளின்  கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. “இப்படி என்னையே அறியாமல் அவன் தோளில் சாய்ந்து விட்டேனே? என்னை பற்றி என்ன நினைப்பான்? அது மட்டும் இல்லாமல் அப்படி சாய்ந்து கொள்ள சொல்ல என் மனம் விரும்புகிறதே? எனக்கு என்னவாயிற்று?”, என்று குழம்பி தவித்தாள்.

அவள் மனநிலையை யூகித்த நரேந்திரவர்மன் “கலங்காதீர்கள் இளவரசி. வலியில் துடிக்கும் போது பக்கத்தில் ஒரு மரக்கட்டை இருந்தால் இறுக்கி கொள்ளமாட்டோமா? அது போல தான் நீங்கள் என் தோளில் சாய்ந்ததும். அதை தவறு என்று ஒருவரும் எண்ண மாட்டார்கள்”, என்றான்.

அவன் கூறியதை சாதாரணமாக எடுத்து கொண்டவளுக்கு, அவன் இப்போது மறுபடியும் இளவரசி என்று அழைக்கும் போது தான் இவ்வளவு நேரம் அவளை தேவி தேவி என்று அவன் அழைத்தது நினைவில் வந்தது.

“அப்படியே அழைத்தால் தான் என்ன?”, என்று சிணுங்கியது அவள் மனது. அவனை முழுவதுமாக அவள் மனது ஏற்று கொண்டதை நினைத்து ஒரு புறம்  அதிசயமாகவும், மறு புறம் கலக்கமாகவும் இருந்தது.

அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். அவளுடைய கண்களில் ஒரு அலைப்புறுதல் இருந்தது.  அவள் கண்கள் அவனை திருட்டு தனமாக தரிசித்து மீள்வதை கண்டவன் அவள் மன குழப்பத்தை நன்கு அறிந்து கொண்டான்.

அவன் விரல்கள் இன்னும் அவள் பாதத்திலே தான் இருந்தது. இத்தனை நேரம் அவள் வலியை பற்றி மட்டும் கவலை கொண்டிருந்தவன் இப்போது காதலனாக மாறி போனான். அதிலும் எதிரே அமர்ந்திருந்தவளின் கண்களிலும் காதலை கண்டவன் உல்லாசமாக பாதத்தை சுற்றி விரலால் வருடினான்.

அந்த கூச்சத்தை தாங்க முடியாமல் கண்களை மூடி கொண்டாள் வான்மதி. அவன் தொடுகையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த வான்மதிக்கோ உடல் சிலிர்த்தாலும், தன்னுடைய மனதையே கணிக்க முடியாமல்  கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது. ஒரு ஆண் அவளை தொட்டு கொண்டிருக்கிறான். அதை தடுக்க தோன்றவில்லை அவளுக்கு. அதை நினைத்து தான் வெகுவாக கலங்கி போனாள்.

Advertisement