Advertisement

“இளவரசே, எங்கள் படை தளபதி கூறிய போர் நுணுக்கங்களை கேட்டீர்கள் தானே? அது சரியாக உள்ளதா? தங்கள் விருப்பத்தை கூறுங்கள்”, என்றார் மகாராஜா.

“தாங்கள் அனைத்து போரிலும் வெல்வது எப்படி இன்று புரிந்து கொண்டேன் மகாராஜா. ஒரு படையின் தளபதி சரியாக இருப்பது தான் அந்த படையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். தாங்கள் படைத்தலைவரின் அறிவு நுட்பத்தை கேட்டு நான் வியந்து போனேன். இப்படி திட்டம் தீட்டும் ஆள்கள் கூட இருந்தால் எந்த எதிரியையும் தரை மட்டம் ஆக்கி விடலாம். அப்படி தானே தந்தையே?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“ஆம், மகனே. சரியான திட்டம் தான். படைத்தளபதிக்கு எனது பாராட்டுக்கள்”, என்றார் வராக சித்தர்.

மகிழ்ந்து போனான் சந்திர வரதன்.

“ஆனால் இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் இளவரசே”, என்று ஆரம்பித்தான் நரேந்திரவர்மன்.

அனைவரும் குழப்பமாக அவனை பார்த்தார்கள். “இவன் என்ன பெரிய மற்றம் செய்ய போகிறான்”, என்று ஏளனமாக நினைத்து உதட்டை சுளித்தாள் வான்மதி.

“தாங்கள் தானே படைத்தளபதியுடைய நுணுக்கங்கள் சரி என்றீர்கள்? அதில் என்ன மாறுதல்?”, என்று கேட்டார் மகாராஜா.

“இப்போதும் அதை சரி என்று தான் கூறுகிறேன் மகாராஜா. மாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டும்”

“கூறுங்கள் இளவரசரே”

“முதலில் கோட்டையை காக்க இருக்கும் வீரர்கள் கோட்டைக்கு காவல் நிற்க வேண்டிய அவசியம் இல்லை”

“என்ன?”, என்று அதிர்ச்சியானார் மகாராஜா.

“அறிவே இல்லாதவன்”, என்று நினைத்தாள் வான்மதி. அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

“தாங்கள் கூறுவது, சரியாக இல்லை இளவரசே? போரின் போது கோட்டைக்கு காவல் என்பது இன்றி அமையாதது. எந்த எதிரிகளும் கோட்டையை தாக்க தான் முயற்சி செய்வான். அப்படி இருக்கும் போது கோட்டைக்கு காவல் இல்லாமல் செய்தால் அவன் எளிதாக முற்றுகை இட்டு விடுவானே”, என்று பதறினார் மகாராஜா.

“பதட்டம் கொள்ள வேண்டாம் மகாராஜா. நான் படைத்தலைவரின் திட்டத்தில் சிறிது மாற்றத்தை கூறுகிறேன். கேட்டு விட்டு தங்கள் முடிவை கூறுங்கள்”

“அப்படியே ஆகட்டும். நீங்கள் கூறுங்கள்”

“சாதாரண எதிரியாக இருந்தால் சாதாரணமான போர் முறையை பின் பற்றலாம். ஆனால் நான் முன்பே கூறி இருந்த படி செங்கல்வராயன் எந்த வழி முறையையும் பின் பற்ற மாட்டான். அவனிடம் ஒரு நேர்மை இருக்காது. சதி செய்து, வெற்றி கொள்ள எண்ணுபவனை எதிரியாக வைத்து கொண்டு நாம் கோட்டைக்கு மட்டும்  காவல் வைத்தால் அவன் எளிதில் முன்னேறி விடுவான்”

“அதற்காக தானே இளவரசே, தாங்கள் படையுடன் வருகிறீர்கள். அப்படி இருக்கும் போது அவனால் எப்படி வெல்ல இயலும்?”

“நான் படையுடன் வருகிறேன் தான் மகாராஜா. ஆனால் என்னுடைய படை மட்டும் அவனிடம் தனித்து போரிட முடியுமா?? நம் இருவரின் படையும் சேர வேண்டுமே? அப்படி சேர்ந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்? அப்படி சேர்வது என்பது எப்படி?”

அந்த கேள்வியில் யோசிக்க ஆரம்பித்தார் மகாராஜா. அது தானே, நம் படை கோட்டையை சுற்றி இருக்கும், எதிரே எதிரி படை இருக்கும். அப்போது எப்படி இடையில் நரேந்திரவர்மனின் படை இணைய முடியும்?

“யோசிக்க வேண்டிய விசயம் தான் இளவரசே. இதை நான் சிந்திக்க வில்லையே. எதிரிகளை தாண்டி வந்து எங்களுடன் எப்படி நீங்கள் சேர முடியும்?”

“முடியும் மகாராஜா. தாங்கள் தங்கள் படையை கொஞ்சம் முன்னே நகர்த்தினால், தங்கள் படைக்கு பின்னே என் படையை நிறுத்தி விடுவேன். அதாவது பின் வழி வழியாக. செங்கல்வராயனுக்கும் அது தெரியாது. இது ஒன்றே வழி மகாராஜா. நான் மற்றும்  என் படையின் ஒரு பகுதி தங்கள் வீரர்களுடன் இணைந்து போரிடுவார்கள். மீதி படை கோட்டையை சுற்றி காவல் இருப்பார்கள். ஆனால் போர் நடை பெரும் இடம் நம் எல்லைக்கு வெளியே தான் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் போர் புரிய இடத்தை கொஞ்சம் தள்ளி கொண்டு போக வேண்டும்”

“அற்புதம். சரியான திட்டம் நாங்கள் படையை முன்னே நகர்ந்த வில்லை என்றால் தங்கள் படை உள்ளே வர முடியாது தான். தங்களின் அறிவை மெச்சுகிறேன் இளவரசே”

“இதுவும் அவ்வளவு சாதாரணமான விசயம் இல்லை மகாராஜா. இதிலும் சிக்கல்கள் இருக்கின்றன”

“என்ன சிக்கல் இளவரசே?”

“அவன் போர் முழக்கம் இடும் முன் நாம் போர் களத்தில் அதாவது போர் புரியும் இடத்துக்கு அருகில் உள்ள வனத்தில் முன்னே பொய் குழுமி இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான், அவன் படைகளை நிறுத்தியவுடன் நம் படையை உடனே வரிசை படுத்த முடியும். அதில் தாமதம் செய்தால், நாம் நம் வீரர்களை நிறுத்தாமல் இருந்தால் அவன் படை முன்னேறி வந்து நிறுத்தி விடுவான்”

“ஆம் ஆம். ஆனால் இந்த விசயம் செங்கல்வராயனுக்கு தெரிந்து விட்டால் என்ன செய்வது?”

“பின்னே வந்து உதவ போகும் என் படையை பற்றி தெரிந்தால் அவன் தான் பின் வாங்க வேண்டியது  இருக்கும் மகாராஜா. ஏன் என்றால் நம் இரு படைகளையும் கடந்து அவனால் வெற்றி பெற முடியாது”

அனைவருமே நரேந்திரவர்மனின் முடிவை ஏற்று கொண்டார்கள். வான்மதிக்குமே இந்த திட்டம் பிடித்து தான் இருந்தது.

அதன் பின் போரை பற்றிய சாதாரண பேச்சு வார்த்தைகளுடன் சபை தொடர்ந்தது.

சிறிது நேரம் கழித்து நந்தவனம் சென்றாள் வான்மதி. ஆனால் அதுக்கு முன்பே அங்கே இருந்தான் நரேந்திரவர்மன்.

ஒரு வியப்பான பார்வையை அவனை பார்த்து வீசியவள் திகைத்து போனாள். ஏன் என்றால் அங்கே அழகாக வேலி இட பட்டிருந்தது.

வெகுநாளாக அவள் மனதில் இருந்த ஆசை நிறைவேறியது போல இருந்தது.

“தங்களின் விருப்ப படி வேலி வேலை முடிந்து விட்டது. இப்போது மகிழ்ச்சி தானே இளவரசி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“என் தந்தை எனக்காக போட்டது. ஏதோ தாங்கள் தான் செய்த மாதிரி பெருமை பட வேண்டாம்”, என்று முறுக்கி கொண்டாள் வான்மதி.

“அப்படி எல்லாம் பெருமை பட்டு விட மாட்டேன் இளவரசி. வாருங்கள் உள்ளே செல்லலாம். நேற்று தாங்கள் சொன்ன மாற்றங்கள் எல்லாம் செய்திருக்கிறார்களா என்று நானும் இன்னும் பார்வை இட வில்லை”, என்று சொல்லி கொண்டே நந்தவனத்துக்குள் நுழைந்தான்.

அழகுற அமைந்த வேலியை பார்வை இட்டவாறே அவன் பின்னே சென்றாள் வான்மதி.

அவனுடன் வேலியை பார்வை இட்டு கொண்டே வந்தவளுக்கு நிறைவாக இருந்தது. அதுவும் பின் பக்கம் அடைக்க சொன்ன அந்த குகை வழியை பார்த்தவளின் கண்கள் வியப்பால் விரிந்தன.

குகை வாயிலை மறைத்து அது தெரியாதவாறு, அருகில் இருந்த பொய்கையில் இருந்த நீரை சிறிது கால்வாய் போல வளைத்து, ஒரு சின்ன நீரூற்று போன்று அமைந்திருந்தது.

சின்ன சின்ன தூறலாய் தெறித்து ஓடியது நீர். பார்ப்பதுக்கே ரம்மியமாக இருந்தது. ஆசையாக அதையே பார்த்து கொண்டிருந்தாள் வான்மதி. அவளை, அவள் மகிழ்ச்சியை ரசித்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.

வியப்பால் விரிந்த அவள் கண்களை அருகில் இருந்து பார்க்க வேண்டும். குழி விழும் கன்னங்களை கைகளால் தொட்டு பார்க்க வேண்டும் என்று அவன் மனது கூக்குரல் இட்டது.

சிறு குழந்தை போல் குதூகலிக்கும் அவளையே ரசித்து பார்த்து கொண்டே இருந்தான். அவன் புறம் திரும்பியவள் அவனுடைய ஆழ்ந்த பார்வையில் புருவம் உயர்த்தினாலும் அதை கண்டு கொள்ளாமல் “மிக்க நன்றி”, என்றாள்.

“எனக்கு எதுக்காக நன்றி இளவரசி?”

“இப்படி அழகாக வேலி இட்டதுக்கும், இந்த குகை பாதையை அழகாக மாற்றி தந்ததுக்கும்”

“அப்போதே, இது உங்களுடைய தந்தையில் வேலை என்று சொன்னீர்களே. இப்போது மட்டும் எதற்காக எனக்கு நன்றி கூறுகிறீர்கள்”

“அமைத்தது தந்தை தான். ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று வழி காட்டியது தாங்கள் தானே?”

“நானா? நான் என்று எப்படி கூற  முடியும்? மகாராஜா  கூட இப்படி செய்ய வேண்டும் என்று வீரர்களுக்கு கட்டளை இட்டிருக்கலாமே”

“எனக்கு தெரியும். என் தந்தை இந்த வேலையை செய்திருக்க மாட்டார். அவர் போரில் வல்லவர் தான், எங்கள் நாட்டு மக்களின் கடவுள் தான். எதிரிகளுக்கு கூட இறங்குபவர் தான். ஆனால் அவருக்கு அழகான வேலை பாடுகளிலும், கலை நயத்திலும் அதிக ஈடு பாடு கிடையாது. அவர் வேலி அமைக்க சொல்லி இருந்தால், சுற்றி இரும்பு வேலியை மட்டும் தான் போட்டிருப்பார். இப்படி அழகு படுத்தி இருக்க மாட்டார். அதனால் அறிந்து கொண்டேன். இது தங்கள் செயலாக தான் இருக்கும் என்று”

“தங்களுக்கு பிடித்திருக்கிறதல்லவா? அதுவே எனக்கு  போதும் இளவரசி. பின் ஒரு விண்ணப்பம்?”

“என்ன விண்ணப்பம்?”

“நீங்கள் மகாராஜாவிடம் பேசி விட வேண்டும். தங்களுடைய முகம் திருப்புதல் அவரை மிகவும் பாதிக்கிறது. தங்கள் முகத்தையே அவர் ஆசையாக பார்க்கும் போது எனக்கு பாவமாக இருக்கிறது இளவரசி. நீங்கள் மகாராஜா மீது கொண்ட சினத்துக்கு நான் தானே காரணம்? என்னை மன்னித்து விடுங்கள். மகாராஜாவை கோபித்து கொள்ளாதீர்கள் இளவரசி”

“ஹா ஹா, தங்கள் மீது கோபம் இருந்தது உண்மை தான். ஆனால் அதற்காக எல்லாம் நான் தந்தையிடம் சினம் கொள்ள வில்லை”

“பின்னே எதற்காக தாங்கள் மகாராஜாவுடன் பேச வில்லை”

“அது, நான் அவரிடம் சிறு பிள்ளை தனமாக கோபித்து கொண்டால் அவர் என்னை சமாதான படுத்த என்னையே சுற்றி சுற்றி வருவார். சிறு குழந்தை போல் உணவு ஊட்டுவார். அதெல்லாம் எனக்கு பிடித்த செய்கைகள். அது நான் மௌனமாக இருந்தால் மட்டும் தான் செய்வார். அதுவே அவரிடம் நான் உரையாடி கொண்டிருந்தால் அப்படி எல்லாம் நடக்காது அல்லவா? அதனால் தான்”, என்று ரசித்து புன்னகைத்தாள் வான்மதி.

Advertisement