Advertisement

அத்தியாயம் 5

நிஜத்தில் நீ தூரமானாலும்

நிழழாக என்

அருகிலே இருக்கிறாய்!!!

முறைத்து கொண்டிருந்த வான்மதியை  ரசித்து பார்த்தான் நரேந்திரவர்மன்.

அவன் பார்வையை உணர்ந்த சித்தர், “மகனே தற்போது உணவில் மட்டும்  கவனம் வைத்தால் நன்றாக இருக்கும். உன் வாய்க்குள் நுழைய காத்திருக்கும் அனைத்து பட்சிகளும் உள்ளே சென்று விட போகிறது”, என்று சொல்லி புன்னகைத்தார்.

“தந்தையே, பட்சிகள் உள்ளே சென்றாலும் அதில் உள்ள சத்து எனக்குள் போய் சேரட்டுமே. ஆனால் எதிரில் அமர்ந்து உணவருந்து பாக்கியம் வேறு எப்போது கிடைக்குமோ? அதை நழுவ விட மனதில்லை”

“சரி தான், காதல் கிறுக்கு முற்றி விட்டது. கண்ணுக்கு தெரியாத ஜீவராசிகளை கூட உண்ண நினைத்து விட்டாயே. நான் கூடிய விரைவில் உன் தந்தையிடம் பேசியே ஆக வேண்டும்”

“எனக்கும் விருப்பமாக  தான் இருக்கிறது. ஆனால் இடையில் போர் இருக்கிறதே தந்தையே”

“போர் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதா மகனே?”, என்று சித்தர் கேள்வி கேட்கும் போது “தகப்பனும், மகனும் உணவு உண்ணாமல் என்ன உரையாடுகிறீர்கள்?”, என்று கேட்டார் வாசுதேவச்சக்கரவர்தி.

“போரை பற்றி தான் உரையாற்றி கொண்டிருந்தோம் மகாராஜா”, என்றான் நரேந்திரவர்மன்.

“அப்படியா?”, என்று அவன் காதில் விழும்  படி கேட்டார் சித்தர்.

“அதை எல்லாம் பிறகும் பேசி கொள்ளலாம். இப்போது நிம்மதியாக விருந்தை சுவை பாருங்கள்”, என்றார் மகாராஜா.

மறுபடியும் வான்மதி முகத்தை பார்த்தான் நரேந்திரவர்மன். அவன் பார்வையில் இருந்த ஜொலிப்பில் சிறிது குழம்பி போனாள் வான்மதி. ஆனாலும் எப்போதும் தன்னிடம், எதாவது சேட்டை செய்யும் மேகவேந்தன் கூட இன்று அவனிடமே பேசுவதை பார்த்தவள், அவன் பார்வையை பற்றி யோசிக்காமல் மறுபடியும் முறைக்க ஆரம்பித்தாள்.

விருந்து முடிந்து அனைவரும் கலைந்து சென்றார்கள். தனக்கென்று அளிக்க பட்டுள்ள மஞ்சத்தில் அமர்ந்தவன் மேல் மாடத்தில் தெரிந்த பிறை மதியை நோக்கினான்.

அதில் வான்மதியின் முகம் இருப்பதாக அவனுக்கு தெரிந்தது. “தந்தை கூறியது போல எனக்கு காதல் பித்து தான் பிடித்து விட்டது”, என்று அவளை பற்றியே சிந்தித்த படியே தூங்கி போனான்.

அதே நேரம் அவனை பற்றி தான் நினைத்து கொண்டிருந்தாள் வான்மதி தேவி.

“தான் பயின்ற ராமாயணத்தையே வேறு கோணத்தில் பார்க்க வைத்து விட்டானே. நான் உயிராக நினைக்கும் ராமர் மீதே குறை இருக்கு என்று கூறினானே? ராமர் மீது சீதைக்கு காதல் இல்லையாமா? காதலை பற்றி இவனுக்கு என்ன தெரியும்? இவனும் ஓரு  ராஜ குமாரன் தானே? இவனுக்கு எத்தனை ராஜ குமாரிகள் மாலை இட போகிறார்களோ? அடிக்கடி கனவில் வேறு சஞ்சரிக்கிறான். அவனுடைய மனம் கவர்ந்த ராஜ குமாரியை கண்டு விட்டான் போல? ஆனால் ஒரு இளவரசனாக இருந்து கொண்டு ஒரு காதலை இவனால் எவ்வாறு பின்பற்ற இயலும்?  ஆம், இவனுக்கு ராமரை குறை சொல்லும் தகுதியே இல்லை.

ஆனால் ராமர் சீதை மட்டும் காதலுக்கு சான்று இல்லை. சாதாரண பிரஜைகள் கூட உண்மையான காதலுக்கு சான்றாக வாழ்கிறார்கள் என்று அவன் கூறியதை ஒத்து கொள்ள தான் வேணும். ஆனாலும் இந்த ராமர் ஏன் இவ்வாறு முரண்பாடாக செயல் பட வேண்டும்? மறுபடியும் தேசத்தை யார் கையிலாவது ஒப்படைத்து விட்டு சீதைக்கு துணையாக சென்றிருக்கலாமே? சீதை மிகவும் பாவ பட்டவள். இளவரசியாக பிறந்து வளர்ந்து, கட்டிய கணவனையே மனதில் கொண்டு, அவனுடன் அரண்மனையில் ராஜ போகத்துடன் வாழ முடியாமல்  வனத்துக்கு சென்று, அங்கும் அவனுடன் இருக்க முடியாமல், ராவணன் கவர்ந்து சென்று எந்த சுகத்தை கண்டாள்? அதன் பின்னாவது அவளுக்கு நிம்மதி கிடைத்திருக்க வேண்டாமா? ஒரு நாட்டின் ராணியானவளை இந்த குடி மக்கள் குறை கூறினால் அது தகுமா? அவர்கள் மனது கேவலமானதல்லவா? அப்படி பட்டவர்களுக்காக என்று காரணம் சொல்லி கொண்டு அவளை தள்ளி வைக்கலாமா?”, என்று நினைத்து கொண்டே எதிரே இருந்த ராமர் சீதை ஓவியத்தை பார்த்தாள்.

“ஆம் ராமர் காதல் சீதை வைத்திருந்த காதல் போல் உயர்ந்தது அல்ல. எனக்கு ராமரை போன்ற மணாளன் வேண்டாம். அவனை விட  உயர்ந்த ஒருவன் தான் வேண்டும்.  எந்த சூழ்நிலையிலும் என்னை தூணாக தாங்கும் மனம்  படைத்தவன் தான் எனக்கு வேண்டும்.

என்றைக்கும் படுத்த உடனே என்னை நித்திரை என்னை  ஆட்கொள்ளும். ஆனால் இன்று துயில் கொள்ள இயலாமல் தவிக்கிறேனே? என்னவாயிற்று எனக்கு? ராமர், ராமர் இத்தனை வருடம் சுற்றி திரிந்தேன். ஆனால் இன்று அந்த ராமனை விட உயர்ந்தவன் வேண்டும் என்கிறேனே? ராமனை போல மணாளன் கிடைப்பதே அரிது. இதில் அவனை விட உயர்ந்தவன் ஒருவன் இருக்கவா போகிறான். ராமா, என் மனது சஞ்சலமாக இருக்கிறது. எனக்கு நித்திரை அளித்து அருள் புரிவாயாக”, என்று வேண்டி கொண்டே துயில் கொள்ள ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. கதிரவன் அழகாக தன் ஒளியை இப்புவியில் பாய்ச்சினான்.

அதே குயிலின் சத்தத்தில் கண் விழித்தாள் வான்மதி. “என்னை எழுப்பவேன்றே இந்த குயில்  கூவும் போல?”,என்று நினைத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

நேற்று நடந்த அனைத்து நிகழ்வுகளும் மனக்கண்ணில் வந்தது. “தந்தை மீது நான் கோபத்துடன் இருக்கிறேன். அதை அவரிடம் காட்ட வேண்டுமே. தாமதமாக  அரண்மனைக்கு சென்றால் அவரை தனியாக வணங்க வேண்டி இருக்கும். ஆதலால் முன்னமே சென்று அமர்ந்து விட்டால், அனைவருடன் சேர்ந்து எழுந்து நின்றால் மட்டும் போதும். அவருடன் இரண்டு நாள்களாவது பேச கூடாது”, என்று நினைத்து கொண்டு காலை கடன்களை முடிக்க கிளம்பி விட்டாள்.

சேடி பெண்கள் தயாராக வைத்திருந்த நலங்கு மாவை எடுத்து குளித்தவள் வாசனை திரவியங்களை பயன் படுத்தி, பட்டாடை அணிந்து தயாராகி அரண்மனைக்கு வந்து அமர்ந்து விட்டாள்.

அவளை பார்த்ததும் மேகவேந்தன் விழிகளை விரித்தான். அதை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள் வான்மதி.

“எனக்கு ஒரு சந்தேகம் சகோதரி”,  என்று ஆரம்பித்தான் மேகவேந்தன்.

“உனக்கோ தலையில் சிறு துளி கூட அறிவே இல்லை. அப்படி இருக்கும் போது சந்தேகம் வருவது இயல்பு தான். அதனால் உன் சந்தேகத்தை கேள் மேகவேந்தா”

“சரியாக சொன்னாய் அக்கா, என்னை மாதிரியே உனக்கும் அறிவு இல்லாதால் தான் உன்னால் இப்படி சரியாக கணித்து கூற முடிகிறது. எனக்கு அது தெரிந்ததே. என் சந்தேகம் அதுவல்ல. ஆதவன் உச்சிக்கு வந்த பிறகே, உன் நித்திரை கழியும். தாய் உன்னை எழுப்ப மல்லுக்கட்டுவார்கள். ஆனால் இன்று இவ்வளவு விரைவாக எழுந்து வந்திருக்கிறாயே? என்ன ஒரு அற்புதம்”

“வாயை மூட வில்லை என்றால், இப்போது நீ ஆ என்று அலற போகிறாய்”, என்று மிரட்டினாள் வான்மதி.

அவளை பார்த்து உதட்டை சுளித்து விட்டு திரும்பி கொண்டான் மேகவேந்தன்.

சிறிது நேரத்தில் மகாராஜா வருகிறார் என்ற அறிவிப்பை தொடர்ந்து மகாராஜாவும், மகாராணியும் அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.

அனைவரும் எழுந்து நின்று வணங்கினார்கள். சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர் “தேவி எனக்கு ஒரு சந்தேகம்”, என்றார் மகாராஜா.

“என்ன மகாராஜா?”, என்று கேட்டாள் அருந்ததி.

“இல்லை இன்று தாமதமாக அரசவைக்கு வந்து விட்டோமா?”

“இல்லையே? ஏன் அவ்வாறு உரைக்கிறீர்கள்?”

“வான்மதியை பார்த்தாயா? முன்னரே வந்து அமர்ந்து விட்டாள்”

“தந்தைக்கும் மகளுக்கும் இதே வேலை தான். அவளை பற்றிய யோசனையை விடுங்கள். அதோ சித்தரும், இளவரசரும் வருகிறார்கள்”

சிறிது நேரத்தில் சபை ஆரம்பிக்க பட்டது. இன்று போரை பற்றிய விவாதம் அதனால் வான்மதியே ஆவலாக பார்வை இட ஆரம்பித்தாள். அவளை விட வெகு தீவிரமாக மேகவேந்தன் கவனித்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்ததும் வான்மதி “இந்த சாம்ராஜ்யத்துக்கு அடுத்த மகாராஜா தயாராகி விட்டார்”, என்று நினைத்து கொண்டாள்.

“படைத்தலைவரே, தங்கள் உத்தேசித்துள்ள போர் வழி முறைகளை அவையில் அனைவருக்கும் கூறுங்கள்”, என்று உத்தரவிட்டார் மகாராஜா.

“ஆகட்டும் அரசே”, என்று எழுந்த படை தலைவர் சந்திரவரதன் கோட்டைக்கு காவல் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், வீரர்கள் எவ்வாறு முன்னேறி செல்ல வேண்டும் என்றும், அனைத்தையும் பற்றி கூறினார்.

அவர் கூறியதை கேட்ட அனைவரும் சரியான திட்டம் என்று புகழ்ந்தார்கள்.

Advertisement