Advertisement

“நான் வந்து விட்டேன் தந்தையே”, என்று துள்ளி குதித்து அவர் முன்பு போய் நின்றாள் வான்மதி.

“வா மகளே”, என்று புன்னகைத்த மகாராஜா, “இவர் பெரிய சித்தர் மகளே. அவர் பாதம் பணிந்து கொள்”, என்றார்.

“ஆகட்டும் தந்தையே”, என்று மகாராஜாவிடம் சொன்னவள் சித்தர் முன்பு போய் அவர் காலில் விழுந்து வணங்கினாள்.

“நீடூடி வாழ்க மகளே”, என்று வாழ்த்தினார் சித்தர்.

பின்னர் மகாராஜா அருகில் அமர்ந்த வான்மதி “இவன் என்ன சிறு குழந்தையா? மடியில் வைத்து சீராட்டுகிறீர்கள்”, என்று கூறி கொண்டே மேகவேந்தனின் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

ஆ என்று தலையை பிடித்து கொண்ட மேகவேந்தன் வான்மதியை முறைத்தான்.

“இருவரும் சண்டையை எப்போது தான் நிறுத்துவீர்களோ?”, என்று சிரித்தார் மகாராஜா.

“தங்கள் மேல் நான் மிகவும் கோபமாக உள்ளேன் தந்தையே”, என்றாள் வான்மதி.

“ஏனம்மா? நான் யாது செய்தேன்? உனக்கு விருப்பம் இல்லாததை நான் செய்ய மாட்டேனே? என் மீது  என்ன கோபம்?”

“நான் வேலியை சீர் செய்ய சிறந்த வீரனை அனுப்ப சொன்னால், தாங்களோ ஒரு வாயாடியை அனுப்பி வைத்திருக்கிறீர்களே”, என்று கூறி கொண்டே அங்கே வந்த  நரேந்திரவர்மனை பார்த்தாள்.

அவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

“என்ன வான்மதி  கூறுகிறாய்? நீ வேலியிட சொன்னதையே நான் மறந்து போனேனே? நான் யாரை அனுப்பினேன்? நீ யாது உரைக்கிறாய் மகளே?”

“என்ன கூறுகிறீர்கள் தந்தையே? இதோ இருக்கிறாரே இந்த வீரர் தான் வேலியிட வந்தார். வந்தவர் ஒன்று கனவில் சஞ்சரிக்கிறார், இல்லையென்றால் பேசியே கொள்கிறார்”

“வான்மதி”, என்று அரட்டலுடன் அழைத்தார் வாசுதேவ சக்கரவர்த்தி.

அவருடைய கடினமான குரலில் அவள்  திகைத்து போய் அவரை பார்த்தாள்.

“நான் சொல்லவில்லை, இவளுக்கு வர வர திமிர் ஏறி விட்டது. அனைத்தும் தாங்கள் கொடுக்கும் இடம்”, என்றாள் அருந்ததி.

“நான் இப்போது யாது உரைத்தேன் என்று இருவரும் என்னை கண்டிக்கிறார்கள்”, என்று எண்ணி முகம் சோர்ந்து போனது அவளுக்கு.

“ஆம் தந்தையே, வர வர என் தமக்கைக்கு புத்தி மழுங்கி விட்டது”, என்று சிரித்தான் மேகவேந்தன்.

அவனும் அவளை கேலி செய்ததில் வான்மதியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“ஒரு சாம்ராஜ்யத்தின் இளவரசர் நரேந்திரவர்மனை போய் வேலியிட  வந்த வீரர் என்று உரைக்கலாமா? மரியாதையுடன் உரையாட வேண்டும் என்று தெரியாதா வான்மதி”, என்றார் வாசுதேவ சக்கரவர்தி.

“என்ன இளவரசனா?”, என்று திகைத்து விழித்தவள் அவனை திரும்பி பார்த்தாள். அவளை பார்த்து அழகாய் புன்னகைத்தான் அவன். அவனை தீ பார்வை பார்த்து முறைத்தாள் வான்மதி.

“மன்னிக்க வேண்டும் மகாராஜா. தங்கள் மகள் மீது எந்த தவறும் இல்லை. நான் யாரென்று அவரிடம் கூற வில்லை. அதனால் இளவரசி என்னை பற்றி அறிய வாய்ப்பில்லை. அதற்கு போய் தாங்கள் கடிந்து கொள்ளலாமா? பாருங்கள் இளவரசி முகம் சோர்ந்து விட்டது. கண்களில் நீர் கோர்த்து விட்டது”, என்றான் நரேந்திரவர்மன்.

அவன் பரிந்து பேசியதில்  அவளுக்கு கூட கொஞ்சம் தான் எரிச்சல் வந்தது. “இவன் யாரென்று சொல்லி இருந்தால் என் தந்தை இப்படி என் மீது கோபம் கொண்டிருப்பாரா?”, என்று நினைத்து மனதுக்குள் வெகுண்டாள் வான்மதி.

“தாங்கள் யாரென்று அவளிடம் கூற வில்லையா இளவரசே?”, என்று கேட்டார் மகாராஜா.

“ஆம் மகாராஜா, நந்தவனத்தை பார்க்கும் ஆவலில் அதை மறந்தே போனேன். நீங்கள் கடிந்து கொள்ளாதீர்கள். முழு தவறும் என்னுடையது”

“தெரியாமல் உன்னை கடிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடு மகளே”, என்றார் மகாராஜா.

“இவ்வளவு பெரிய மகாராஜா, தன் மகளிடம் அதுவும் இந்த சிறு பெண்ணிடம் மன்னிப்பு கோருகிறாரா?”, என்று திகைத்து போய் பார்த்தான்.

ஆனால் அவனுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள் வான்மதி. அவ்வளவு பெரிய மகாராஜா அவளிடம் மன்னிப்பை யாசித்ததே அவனுக்கு அதிசயம் என்றால், “காரணம் இல்லாமல் என்னை கடிந்து கொண்டீர்கள் அல்லவா? தங்களுடன் நான் பேச மாட்டேன். நான் போகிறேன்”, என்று சொல்லி அவரை முறைத்து விட்டு அவனையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

பாவமாக அவள் போகும் திசையை பார்த்து கொண்டிருந்தார் மகாராஜா.

“பார்த்தீர்களா? எப்படி உரைத்து விட்டு போகிறாள் என்று? காலையில் அரண்மனையில் அவள் கூறியதையே தாங்க முடியாமல் அவளை கண்டிக்க சொன்னேன். இப்போது எப்படி போகிறாள் பாருங்கள்”, என்றாள் அருந்ததி.

“விட்டு விடு தேவி. அவள் மீது தவறு இல்லாமல் அவளை கடிந்து கொண்டோம் அல்லவா? அந்த கோபத்தில் செல்கிறாள். என்னுடைய கவலை என்னவென்றால், எப்போது அவள் கோபம் தணிந்து அவள் என்னுடன் பேசுவாள் என்றிருக்கிறது. அவள் பேச வில்லையென்றால் எனக்கு வேலையே ஓடாதே”

“நல்ல தந்தை. நல்ல மகள். எக்கேடோ கெட்டு போங்கள். நீ வா மேகவேந்தா”, என்று அழைத்து விட்டு அவனுடன் சென்று விட்டாள் அருந்ததி.

அவர்கள் உரையாடலை, தன்னவளின் கோபத்தை, மகாராஜா மகள் மீது கொண்ட நேசத்தை அனைத்தையும் ரசித்தான் நரேந்திரவர்மன். சித்தரும் அங்கு நடந்தவையை கண்டு  நகைத்தார்.

அவன் காதில் மட்டும், “இன்று நீ அவளை சந்திக்க போன வேகத்தை பார்த்து, காதலில் முடியும் என்று எதிர்பார்த்தேன். ஊடலில் அல்லவா முடிந்து விட்டது”, என்று சிரித்தார்.

அவரை முறைத்தவன் அதன் பின் நந்தவனத்துக்கு வேலி இடுவதை பற்றி மகாராஜாவுடன் பேசினான். அவரும் ஒரு வீரனை  அழைத்து, “இரவோடு இரவாக நந்தவனத்துக்கு வேலி இடு. பின்னால் உள்ள குகை வாயிலை மூடி விடு. நாளை உச்சி வேளை இளவரசி நந்தவனம் செல்லும் போது அனைத்து வேலையும் முடிந்திருக்க வேண்டும்”, என்று கட்டளை பிறப்பித்தார்.

ஆச்சர்யமாக பார்த்த நரேந்திரவர்மனிடம் “என்னை முழுமனிதனாக்கியது வான்மதி தான். அவள் என்றால் எனக்கு அதிக பிரியம். அவள் முகம் சுண்டினால் என்னால் தாங்க இயலாது இளவரசே. இன்னும் இரண்டொரு நாள் முகத்தை தூக்கி கொண்டு திரிவாள். அவளை சரி செய்ய தான் வேலியை உடனே சரி செய்ய சொன்னேன்”, என்று சிரித்தார் மகாராஜா.

“கொஞ்சம் கடினம் தான்”, என்று சொல்லி  சிரித்தார் வராக சித்தர்.

புரியாமல் அவரை நோக்கினார்கள் நரேந்திரவர்மனும், மகாராஜாவும்.

“தங்கள் மகளின் கோபத்தை சரி செய்வது கொஞ்சம் கடினம் தான். தங்கள் முகத்தை பார்த்தாலே பாவமாக உள்ளது. அவளை கட்டி கொள்ள போகிறவனும் திணற தான் போகிறான், அவள் கோபத்தை பார்த்து”, என்று சொல்லி நரேந்திரவர்மனை பார்த்து சிரித்தார்.

அவரை மகாராஜா அறியாமல் முறைத்தான் அவன்.

“ஆம், தவறு செய்தால் அவள் தாங்கி கொள்ளவே மாட்டாள்”, என்று சிரித்தார் மகாராஜா.

“இது எல்லாவற்றுக்கும் காரணம் என் மகன் தான். இவன் உண்மையை உரைத்திருந்தால் அந்த சிறு பெண் மனது சங்கட பட்டிருக்காது”, என்று சொன்னார் சித்தர்.

“இளவரசரை கடிந்து கொள்ளாதீர்கள் சித்தரே. வான்மதி, இரண்டு நாட்களில் சரியாகி விடுவாள். அதுவும் நாளை நந்தவனம் சென்று பார்த்தால் உடனே சந்தோசத்துடன் தந்தையே என்று குதித்து கொண்டு ஓடி வருவாள். வளர்ந்தாலும் சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறாள்”, என்று வாத்சல்யத்துடன் கூறினார் மகாராஜா.

“அப்படி தங்கள் மகள் சரியாகா  விட்டாலும், என் மகன் நாளைக்கும் நந்தவனம் சென்று இளவரசியின் மனதை மாற்றி விடுவான்”, என்று கூறியவர் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு “மகனே நீ தானே இளவரசியின் சினத்துக்கு காரணம். அதனால் நீ அவளிடம்  மன்னிப்பு வேண்ட வேண்டும். அது மட்டும் இல்லாமல் அவள் கூறிய வேலி வேலை அனைத்தும் சரியாக நடந்திருக்கிறதா என்று பார்வை இட வேண்டும்”, என்றார்.

அடுத்த நாளும் அவளை தனியே சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தன் தந்தையை புன்னகையுடன் பார்த்தான் நரேந்திரவர்மன்.

“இளவரசர் என் மகளிடம் மன்னிப்பு கேப்பதா? அப்படி எல்லாம் செய்ய கூடாது சித்தரே”, என்றார் மகாராஜா.

“இப்போது தாங்கள் செய்த தவறுக்கு மகளென்றும் பாராமல் மன்னிப்பு வேண்டினீர்களே? அது தான் மனு தர்மம் மகாராஜா. நாளை மேலை நாட்டின் ராஜாவாக முடிசூட இருக்கும் என் மகனும், அந்த தர்மத்தை பின் பற்ற வேண்டும். தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு வேண்ட வேண்டும். சரிதானே மகனே?”

“தாங்கள் கூறி நான் எதை மறுத்திருக்கிறேன் தந்தையே. என் தந்தை சொல்வது சரி தான் மகாராஜா. தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னால் உருவான இந்த சிக்கலை நானே தீர்த்து வைப்பேன். களைப்பாக உள்ளது. நான் ஓய்வெடுக்க செல்லலாமா?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.

“சென்று இளைப்பாருங்கள் இளவரசே. சிறிது நேரத்தில் விருந்து தயாராகி விடும். அது வரை ஓய்வெடுத்து கொள்ளுங்கள். அது வரை நான் சித்தரிடம் உரையாடுகிறேன்”

“ஆகட்டும் மகாராஜா. வருகிறேன் தந்தையே”, என்று சென்றவன் அவனுக்கு அளித்திருந்த பஞ்சணையில் படுத்து கொண்டு வான்மதியின் மதி முகத்தை நினைத்து பார்த்தான். அவளுடன் உரையாடிய தருணங்கள் நினைவில் வந்தது.

அவள் புன்னகையை பொக்கிஷமாக அவன்  இதய அறைக்குள் சேமித்து வைத்திருந்தான். அதை எல்லாம் நினைத்து பார்த்தவனுக்கு நாளை அவளை காண போகிறோம் என்று ஆவல் அதிகமானது.

அதே நேரம் தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் வான்மதி. அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் அவன் தான் என்று நினைக்கும் போதே அங்கு வந்த மகாராணி மறுபடியும் நன்கு கடிந்து கொண்டு தான் சென்றாள்.

அதில் அவன் மேல் இன்னும் கோபம் அதிகமானது.

போதாதென்று, மேகவேந்தன் வேறு அவள் அருகில் வந்து “உனக்கு மூளையே இல்லை அக்கா. அவர் யாரென்று தெரியுமா? மேலை நாட்டின் இளவரசர் நரேந்திரவர்மன். அவர் வாள் வீச்சில் வல்லவர். அவரை கண்டால் எதிரிகள் நடுங்குவார்கள். அவரை போய் வேலியிட வந்தவர் என்று எப்படி நினைத்தாய்? உன்னை பார்த்தால் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவே இல்லை”, என்று சிரித்து கூட கொஞ்சம் வெறி ஏற்றினான்.

அவனை பார்த்து முறைத்தவள் தன்னுடைய பற்களை கோபத்தில் கடித்தாள்.

நாளை தான் அவளை காண முடியும் என்று நினைத்திருந்த நரேந்திரவர்மனுக்கு உணவு வேளையிலே அவளை பார்வை இட சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆனால்  நந்தவனத்தில் முகம் முழுவதும் சிரிப்புடன் அவனை கொள்ளை கொண்டவள், பூக்களின் மத்தியில் மற்றொரு பூவாக மலர்ந்தவள் இப்போது பார்வையால் அவனை பொசுக்கினாள்.

ஆனால் அவள் கோபத்தை பார்த்த போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. தான் கண்ட பெண்களில் அனைத்திலும் வேறு விதமாக தோற்றம் அளித்த அவளிடம் மனம் மயங்கி போனான்.

அதுவும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு வாசுதேவச்சக்கரவர்தி அவளை பேச வைக்க சிறு பிள்ளை தனமாக முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது.

“எப்படி சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்கிறாள்”, என்று நினைத்து பார்த்தவனுக்கு அன்று காலையில் அரசவையில் சுற்றி இருந்த அனைவரின் முன்னிலையில், வாளை கழுத்தில் வைத்து கொண்டு அவள் உரையாற்றியது நினைவில் வந்தது.

“அப்படி பேசியவள் இவள் தானா? இவள் ஒரு பொக்கிஷம்”, என்று நினைத்து கொண்டு அவளை கள்ள பார்வை பார்த்து கொண்டிருந்தான்.

அவன் பார்வையை உணராமல், கள்ள பார்வையாக இல்லாமல் நேரடியாகவே அவனை முறைத்த படி இருந்தாள் வான்மதி.

“நாளை அவளை தனியே சந்திக்கும் போது, எதுக்கும் போருக்கு செல்வது போல கவசத்தோடு போவது நல்லது மகனே. சேதாரம் அதிகமாகும் போல தெரிகிறது”, என்று சிரித்தார் வராக சித்தர்.

“தந்தையே நீங்களே சொல்லி கொடுப்பீர்கள் போலவே? பாருங்கள் அவளை. எப்படி தீப்பார்வை பார்க்கிறாள்? எப்படி சமாளிக்க போகிறேனோ?”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்

“பெண்களை சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல மகனே. அதனால் தான் உன் அப்பனை மாட்டி விட்டுவிட்டு நான் சந்நியாசத்தை தேர்ந்தெடுத்தேன். நீ வேண்டுமானால் என்னுடன் வருகிறாயா?”

“ஆளை விடுங்கள். நான் அடுத்த வருடத்துக்குள் என் மகனுடன் உலாவ கனா கண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் தாங்கள் என்னை சந்நியாசத்துக்கு அழைக்கிறீர்கள். பரம்பரையில் ஒரு சந்நியாசி போதும் தந்தையே”, என்று சிரித்தான் நரேந்திர வர்மன்.

Advertisement