Advertisement

அத்தியாயம் 4

என் காதல் உன் மேல்

பிறந்ததால் கருவறை நீ,

அது மடிந்ததால்

கல்லறையும் நீ!!!

 

நரேந்திரவர்மன் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தாள் வான்மதிதேவி.

அவள் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் திரு திருவென்று விழித்தான். அவன் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “தாங்கள் எப்போதும் தங்கள் தேவியை பற்றிய கனவிலே சஞ்சரிக்கிறீர் வீரரே. அதனால் தான் அடிக்கடி கனவுலகத்திற்கு போய் விடுகிறீர்கள்”, என்று சிரித்தாள்.

ஒரு நிம்மதி பெரு மூச்சு வந்தது அவனிடத்தில்.

“தங்கள் கனவை சிறிது நேரம் ஒதுக்கி விட்டு வேலி வேலையை கவனித்தால் நலமாயிருக்கும் வீரரே”

“அப்படியே ஆகட்டும் இளவரசி”

“இதோ இந்த  பாதையை முற்றிலுமாக அடைக்க வேண்டும் வீரரே”

“இது எதுவோ குகைக்கு செல்லும் பாதை போல் உள்ளதே”

“ஆம் தங்கள் யுகம் சரியே. இது வனத்துக்கு செல்லும் குகை வழி. இதன் வழியாக தான் விலங்குகள் உள்ளே வந்து விடுகின்றன”

“இந்த வழி மூலமாக அவை வந்தால் என்ன இளவரசி? பூத்து குலுங்கும் இந்த சோலையில் காய்த்திருக்கும் கனிகளை உண்ணவே அவை வருகை தருகின்றன. உண்டு விட்டு போகட்டுமே. அனைத்து உயிர்களுக்கும் இறங்கும் சுபாவம் கொண்டவர் தங்கள் இளவரசி என்பது என் எண்ணம். ஆனால் பாதையை மூடி அந்த வாயில்லா பிராணிகளை வஞ்சிக்க நினைக்கலாமா இளவரசி?”

“அது அப்படி அல்ல வீரரே. நான் என் தந்தையிடம் இந்த நந்தவனத்தை போல தான் வனத்தையும் பராமரிக்க சொல்லி இருக்கிறேன். இங்கே பூத்து குலுங்கும் பூக்கள் வனத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் விலங்குகள் உண்ணுவதற்கு வகை வகையான பழ மரங்கள் உள்ளன. பழங்கள் அங்கே காய்த்து   தொங்குகின்றன. அப்படி இருக்கும் போது அவைகள் இந்த நந்தவனத்துக்குள் வந்து தான் உண்ண வேண்டுமா? இங்கே நாம் அனைவரும் நடமாடுகிறோம். இன்னும் சொல்ல போனால் நான் என்னுடைய பொழுதை கழிப்பதே இங்கு தான். அப்படி இருக்கும் போது எமக்கு அவைகள் இடையூறு செய்கின்றன. சற்று முன் பார்த்தீர்கள் தானே? அவைகளை நம் வீரர்கள் கண்டால் என்னை துன்புறுத்துகின்றன என்று எண்ணி விலங்குகளை வதைப்பார்கள். என்னால் விலங்களுக்கு இடைஞ்சல். அதனால் தான் அந்த பாதையை அடைக்கும் படி கூறினேன்”

“தாங்கள் கூறியது  சரியே இளவரசி”

“ம்ம், வாருங்கள் பொய்கையை காண்பிக்கிறேன்”

“என்ன? இங்கே குளம் கூட இருக்கிறதா?”

“ஆம், நான் நீந்தி பழக என் தந்தை எனக்காக உருவாக்கியது. இதோ இது தான் அது”

“இது தங்களுக்காக மகாராஜா உருவாக்கியதா? என்னால் நம்ப இயலவில்லை இளவரசி. இது இயற்கையாக அமைந்தது போல அல்லவா இருக்கிறது”

“ஆம் வீரரே. இங்கு இருக்கும் பாறைகளும், கற்களும் ஆற்றில் இருந்து கொண்டு வர பட்டவை. அது மட்டும் இல்லாமல் அந்த ஆற்றில் இருந்து தான் நீர் வந்து கொண்டிருக்கும். வெளியேறும் நீர் வேறு வழியில் நதியுடன் கலக்கும்”

“அற்புதமான செயல் இளவரசி”

“ஆம்  இதுவே என் தந்தையின் புத்திக்கூர்மைக்கு சான்று”

“இதை மகாராஜாவின் புத்தி கூர்மைக்கு சான்றாக கூறுவதை விட, அவர் தங்கள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு சான்றாக கூறலாம்”

“ஆம் ஆம். மிக சரியாக கூறினீர்கள் வீரரே”, என்று கனிவுடன் கூறினாள் வான்மதி.

அவள் முகத்தில் இருந்த கனிவை பார்த்தவன் இந்த முகம் என் மீது காதலை சிந்தினால் எவ்வாறு இருக்கும்?”, என்று சிந்தித்தான்.

“சரி தான் அடுத்த கனவுக்கு சென்று விட்டீர்களா? உங்களை வீரரே என்று அழைப்பதுக்கு பதில் சொப்பணக்காரன் என்றே அழைக்கலாம் வீரரே”, என்று சிரித்தாள் வான்மதி.

“அந்த கனவே நீ தான் பெண்ணே”, என்று நினைத்து கொண்டவன் அவளை பார்த்து வெண்பற்கள் தெரியும் அளவு சிரித்தான்.

“தங்களுடைய சிரிப்பு கவர்ச்சியாக இருக்கிறது வீரரே. என் தோழிகள் தங்களை கண்டால், ஆள் ஆளுக்கு போட்டியிட ஆரம்பித்து விடுவார்கள்”

தன்னுடைய அழகை அவள் புகழ்ந்தது அவனுக்கு ஒரு மன நிறைவை  தந்தது. “தங்களுடைய புகழ்ச்சிக்கு நன்றி இளவரசி. தாம் தங்கள் தோழிகளின் கண்களில் சிக்காமல் இருக்க எண்ணுகிறேன் . என்னால் அவர்களுக்குள் எதற்காக போட்டி வர வேண்டும்?”, என்று கேட்டு சிரித்தான்.

“என்ன ஒரு உயர்ந்த உள்ளம் தங்களுக்கு?”, என்று சிரித்த வான்மதி “இதோ இது தான் நான், என் ராமன் சீதைக்காக கட்டிய சிறு ஆலயம்”, என்று அந்த சிறு கோயிலை காட்டினாள்.

“அழகாக இருக்கிறது இளவரசி. சிலை போல அல்லாமல் ஒரு உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் வெகு சிறியதாக இருக்கிறதே”

“ஆம் சிறியதாக இருந்தால் தான், ராமர் சீதையுடன் நான் ஒட்டி  உறவாட முடியும். கோவில் பெரியதாக மாறினால் நான் தூர நின்றல்லவா வணங்க வேண்டி இருக்கும்”

“அந்த அளவுக்கு பக்தியா?”

“அல்ல, அந்த அளவுக்கு காதல்”

“காதலா? சிலை மீதா?”

“அல்ல, என் ராமர் சீதை மீது”

“ராமர், சீதை மீது கொண்டுள்ள காதலை விட ராமர் சீதை மீது அதிகமான காதலை தாங்கள் கொண்டுள்ளீர்கள் போல இளவரசி?”

“ஏன்  அவ்வாறு உரைக்கிறீர் வீரரே?”

“ஏன்  என்றால்  தாங்கள் வார்த்தைக்கு வார்த்தை ராமர் சீதை என்கிறீர்கள். ஆனால் அதே அளவு காதல் ராமர், சீதை இடையே  இருந்ததாக தெரியவில்லையே இளவரசி”

“தாங்கள் உரைப்பது அபத்தமாக இருக்கிறது வீரரே”

“யாம் மெய் தான் உரைத்தோம் இளவரசி”

“என்ன மெய்? கடைசி வரை ராமரும் சீதையும் மற்றவர் நினைவில் தானே வாழ்ந்தார்கள்? அது காதல் அல்லாமல் வேறு ஏது?”

“அவர்கள் சேர்ந்து வாழ்ந்த நாட்களே குறைவு இளவரசி. இருவரும் பிரிந்து தானே வாழ்ந்தார்கள்? ராமர் மக்களின் தவறான எண்ணத்தை சரி செய்ய  சீதையை சந்தேக பட்டதை கூட ஒத்து கொள்ளலாம். ஆனால் அவளை சந்தேகித்து வனத்துக்கு அனுப்பிய போது இந்த அரச கிரீடம் வேண்டாம், அரண்மனை வாழ்வு வேண்டாம், ராஜா பதவி வேண்டாம். இந்த நாட்டின் அரசன் என்கிற பட்டம் வேண்டாம், என் சீதை தான் வேண்டும் என்று அவளுடன் செல்ல வில்லையே ஏன்?”

“அது…, மக்களுக்காக”

“சரி மக்களுக்காக அவர் அரசனாக இருக்க நினைத்தது சரி என்று வைத்து கொள்வோம். ஆனால் மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டிருந்தால் தசரத மகாராஜா, ராமரை வனவாசம் அனுப்பிய போது என் நாடு மக்களுக்கு நானே அரசனாக இருக்க வேண்டும். அதனால் செல்ல மாட்டேன் என்று ஏன் அவர் கூற வில்லை?”

“தந்தை சொல் மீற முடியாத மகனாக இருந்தார் ராமர்”

“தந்தை சொல் தவற முடியாதவர், அவர் நேசித்த மக்களை விட்டு ஏன் வனவாசம் போனார்?  மக்களை முக்கியம் என்று கருதி இருந்தால் தந்தை சொல் கேட்டு அரசவாழ்வை அவர் துறந்தது ஏன்? இதற்கு விளக்கம் என்ன தெரியுமா? அவர் மக்களை முக்கியம் என்று கருதாமல் அவருடைய தந்தையின் வார்த்தையை முக்கியமாக எண்ணினார். அது சரியான முடிவு என்று ஒத்து கொள்ள தான் வேண்டும்.  ஆனால் சீதை விசயத்தில் மட்டும் ராமர் மக்களுக்காக அரச வாழ்வை ஏற்று கொண்டது ஏன்?  ராமன் வனவாசம் சென்ற பின்னர் அந்த நாட்டை ஆண்டு வந்தானே பரதன் அவன் சரியான ஆட்சி செய்ய வில்லையா? அவன்  நல்லாட்சி  செய்யாமலா அவன் பெயரில் பரத கண்டம் என்ற பெயர் வந்தது. அவன் இல்லை என்றாலும் வேற யாராவது அந்த நாட்டை நல்லாட்சி செய்யாமலா இருந்திருப்பார்கள்? அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து  விட்டு சீதை பின் சென்றிருக்கலாமே?”

……

“அந்த ராமன் காட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்த போது அவன் பின்னே சென்றாளே சீதை. அவள் காதலை வேண்டும் என்றால் சிறிது புகழலாம். அதுவும் கூட கணவன் பின்னே மனைவி செல்ல வேண்டும் என்ற மரபின் அடிப்படையாக கூட அது இருக்கலாம். ஆனால் சிம்மாசனத்தை துறந்து மனைவியே போதும் என்ற முடிவுக்கு தங்களுடைய ராமர் ஏன் இளவரசி வரவில்லை? அப்போது மட்டும் நாட்டு மக்கள் முக்கியமாக போய் விட்டார்களா?”

அவன் பேசியதில் திகைத்து போய் அவனை பார்த்தாள் வான்மதி. “ஆம் வனவாசம் போன போது ஆட்சி செய்தது பரதன் தானே? அவனும் ஒரு ராஜாவாக தன்னுடைய கடமையை செய்திருப்பான் தானே? அவன் இல்லாமல் போனால் கூட வேறு ஒரு ராஜா அந்த மக்களை காக்கலாம் தானே? ஏன் ராமர் மக்களுக்காக சீதையை வனத்துக்கு அனுப்பினார்?”, என்று அவள் மூளை யோசித்தது.

“என்ன இளவரசி வாயடைத்து போய் விட்டீர்கள் . எங்கே தங்களுடைய ராம புராணம்? ராமர் ராமர் என்று கூறினீர்களே? இப்போது மௌனம்  காப்பது ஏன்?”

“குழப்பாதீர்கள்  வீரரே. தாங்கள் உரைப்பதை பார்த்தால்  அவர்களுக்குள் காதலே இல்லை என்று கூறுவீர்கள் போல?”

“காதல் அவர்களுக்குள் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் காதலுக்கு உதாரணமாக அவர்களை கூறுவதை தான் என்னால் ஏற்று கொள்ள இயல வில்லை”, என்றான் நரேந்திரவர்மன்

“அப்படி என்றால் யாரை உதாரணம் சொல்ல போகிறீர்கள்? சற்று முன்பு சூழ்நிலையின் காரணமாக, அரசியல் காரணமாக பல மனைவிகளை மணந்த மகாராஜாக்களுக்கு பரிந்து பேசினீர்களே? அவர்களா காதலுக்கு  உதாரணம்?”, என்று சீற்றத்துடன் கேட்டாள் வான்மதி .

“சீற்றம் வேண்டாம் இளவரசி. நான் கூற வந்ததே வேறு. எந்த காரணத்தையாவது  கூறி கொண்டு ஒருவன் மற்றொரு பெண்ணை மணந்தால் அவன் மனதில் காதல் இருக்கிறது என்று உரைக்க வில்லை. நான் சொல்ல வந்தது ஒரு நாள் ஒருவனுடன் வாழ்ந்தால் கூட போரில் கணவனை இழந்து, அவன் நினைவாகவே கடைசி வரை வாழ்ந்து இறந்து போகும் பெண்களே சீதைகள் என்று கூற வந்தேன். மற்ற மங்கையரின் நிழலை கூட தீண்டாமல், மனைவியே உலகம் என்று போற்றுபவர்களும், அவளை இழந்தால் அவள் நினைவாகவே வாழும் ஆண் மகன்கள் அனைவரும் ராமனே. இதை தான் யாம் கூற வந்தோம்”

ஆழ்ந்த சிந்தனைக்கு போயிருந்தாள் வான்மதி. குழம்பிய அவள் முகத்தை பார்த்தவனுக்கு புன்னகை அரும்பியது.

“நான் சாதாரணமாக என் மனதில் இருப்பதை உரைத்தேன். மற்ற படி தங்களுடைய ராமர், சீதை பற்றி குறை கூற அல்ல. தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் இளவரசி. நாழிகை  கடந்து விட்டது. அரண்மனைக்கு செல்லலாமா? தாங்கள் கூறிய  அனைத்து வேலைகளையும்  நான் செய்து முடிப்பேன் இளவரசி. அப்படியே மகாராஜாவிடமும் ஒப்புதல் பெற வேண்டும். நாம் செல்லலாமா?”

“ஹ்ம்ம்”, என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு அவனுடனே நடந்தாள்.

“என்ன இளவரசி தங்களின் மகிழ்ச்சியான மனநிலையை மாற்றி விட்டேனா?”

“அப்படி எல்லாம் இல்லை வீரரே. என்னவென்று தெரிய வில்லை. மனதில் ஏதோ குழப்பம் சூழ்ந்துள்ளது. வாருங்கள் விரைவாக செல்லலாம்”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தாள்.

“இருந்த மகிழ்ச்சி யை கெடுத்து, அவளை கவலைக்குள்ளாக்கி விட்டோமே”, என்று நினைத்து கொண்டே அவளுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.

சிறிது நேரத்தில் வாசுதேவ சக்கரவர்த்தி முன்பு நின்றாள் வான்மதி. மேகவேந்தன் மகாராஜா மடியில் அமர்ந்திருந்தான். மகாராஜா அருகில் தான் அருந்ததி தேவியும் அமர்ந்திருந்தாள். அவர்கள் எதிரே வராக சித்தரும் அமர்ந்திருந்தார்.

Advertisement