தன் முன்பு தட்டில் மூடி இருந்த உணவையே, பேசிய அந்த புதியவன் மேல் கிளர்ந்த கோவத்தில் முறைத்து பார்த்து கொண்டிருந்தாள் யாழினி.
“என்னை எவ்வளவு பேசிட்டான், அதுக்காகவே இந்த சாப்பாட்டை சாப்பிட கூடாது”
என்று வாய்விட்டு சொன்னவள், எழுந்து தனது அறையை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தவள்,
“அவன் யாரு எனக்கு, அவன் சொன்னா நான் கேட்கணுமா, முடியாது நான் சாப்பிட மாட்டேன்”
என்றவளுக்கு சற்று முன்பு கோவத்துடன் பேசி சென்றவனின் முகம் நினைவுக்கு வர, வீம்புடன் தலையை சிலுப்பி கொண்டு, மீண்டும் திரும்பி உணவு மேசைக்கே வந்து,
“என்னோட அப்பா சம்பாதிக்கிறாரு, என் காசு, நான் இப்படி தான் வீணாக்குவேன், உனக்கு என்ன வந்துச்சு”
என்று இளவளவனை திட்டி கொண்டே, அவன் மீது இருந்த கோவத்தில் உணவை கீழே கொட்டிவிட எண்ணம் கொண்டு தட்டை கையில் எடுத்தாள்.
உணவு தட்டு குப்பை தொட்டியை பாதி நெருங்கி இருந்த நேரம், அவன் சொல்லி சென்ற “பத்தாயிரம் குழந்தைகளின் மரணம்” என்ற வார்த்தை நினைவுக்கு வர, அவளின் கைகள் அப்படியே அந்தந்தரத்தில் நின்றது.
என்று கேள்வி கேட்க, தன் தலையை குலுக்கி கொண்டு, தட்டை மீண்டும் மேசையின் மீதே வைத்த யாழினியின் மனது,
“உன்னால அந்த பத்தாயிரம் குழந்தைகள் பசியை போக்க முடியாது தான், ஆனா குறைந்தபட்சம் உணவை வீணாக்காமல் இருக்கலாம் இல்ல”
என்று குரல் கொடுக்க, இத்தனை நாள் தான் உணவை புறக்கணித்ததை நினைக்கும் போது, சொல்லாமல் கொள்ளாமல் குற்ற உணர்ச்சி அவளை தொற்றி கொண்டது.
அந்த குற்ற உணர்ச்சிக்கும் சேர்த்து, மனது அந்த புதியவனையே குற்றம் சொல்ல,
“ஆ…ஆ…ஆ…ஆ, கொல்றானே”
என்று அவன் சொல்லியபடி செய்ய வேண்டி இருக்கிறதே என்ற, தன் இயலாமையில் உறுமி விட்டு, உணவை மூடி இருந்த தட்டை திறந்தவளின் முகமோ ஏக குழப்பத்தில்.
முன்பு எல்லாம் யாழினிக்கு பிடித்த உணவுகள் என்று சிலது இருந்தாலும், பாரபட்சம் இன்றி எல்லா உணவையும் எடுத்து கொள்வாள்.
ஆனால் கடந்த ஒன்னரை வருடங்கள் அவள் உண்பதே அரிதாக, உண்ணும் போது அவள் நிறைய உண்ணட்டும் என்ற எண்ணத்தில், எப்போதும் அவளுக்கு பிடித்த உணவு வகைகள் தான் தட்டில் இருக்கும்.
குதிரைவாலி அரிசியில் செய்த சாதம் சற்று குழைந்து இருக்க, காரகுழம்பு ஒரு கிண்ணத்திலும், இரண்டு கிண்ணங்களில் பொரியலும், உபரியாக ஒரு வாழைப்பழமும் இருந்தது.
“மதியம் எதுக்கு வெண்பொங்கல் செஞ்சி இருக்காங்க, அதுவும் சாம்பார் வைக்காமல், காரகுழம்பு வச்சி இருக்காங்க, இது என்னடா ஒரு மார்க்கமான காம்பினேஷன் அஹ இருக்கு”
என்று குதிரைவாலி சாதத்தை, முன் பின் பார்த்தே இராத யாழினி, அதை பொங்கல் என்று நினைத்து, பேய் முழி முழித்து கொண்டிருந்தாள்.
எப்படியும் சாப்பிட்டு தான் ஆக வேண்டும் என்பது புரிய, ஒரு பெரு மூச்சை வெளிவிட்டவள்,
“காமான் யாழினி, உன்னால முடியும்”
என்று ஏதோ சண்டைக்கு போவது போல, தன் முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டு, ‘அந்த பொங்கலில்’ காரகுழம்பை சேர்த்து, ஒரு வாய் எடுத்து வைத்தாள்.
உணவின் சுவை வித்தியாசமாக இருந்த போதிலும், சாப்பிடும் படியாகவே இருக்க, அது பொங்கல் இல்லை என்றும் புரிந்தது.
அந்த உணவு என்னவென்று கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே தட்டில் இருந்த உணவுகள், அவளின் வயிறுக்கு இடம் பெயர, நிரம்ப நாட்களுக்கு பிறகு, தான் அறியாமலே, தன் வயிறார உண்டாள் யாழினி.
உண்ட உணவு சிறிது நேரத்திற்கு எல்லாம் அதன் வேலையை காட்ட, உறக்கம் கண்ணை சுழற்றியது.
தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்த யாழினி,
“கடைசியாக என்னைக்கு இப்படி தூக்க மாத்திரை இல்லாம தூங்குனோம்”
என்று யோசித்தபடியே, ஆழ்ந்த உறக்கத்திற்குள் நழுவினாள்.
இத்தனை நாள் இருந்த யாழினியின் இறுக்கம், இன்று இளவளவனின் மீதான கோவத்தின் காரணமாக சற்று தளர்ந்து, அவனுடன் இயல்பாக வார்த்தையாடியது, அவளை கொஞ்சம் இளகி இருந்தது.
மாலை உணவு தட்டை ராஜி வந்து எடுத்து சென்றதோ, கீழே காத்திருந்த இளவளவன், காலி தட்டை பார்த்து துள்ளி குதித்ததோ யாழினி அறியாள்.
அன்று மாலை, தோட்டத்தில் உலவியப்படி, தன் கைப்பேசியில் தன் அப்பாவுக்கு அழைத்துவிட்டு, அவர் எடுப்பதற்காக காத்திருந்தான் இளவளவன்.
“யாழினிக்காக எத்தனை பேரு தான் சப்போர்டுக்கு வருவீங்க”
என்று நினைத்து தனக்குள் சிரித்து கொண்ட இளவளவன், வெளியில்,
“நீ இப்படி பாவம் பார்த்துக்கிட்டே இருந்தா, கடைசி வரைக்கும் உன்னோட அக்கா இப்படியே தான் இருப்பா பரவாயில்லையா”
என்று கேட்க, அம்மு அவனை புரியாமல் பார்க்க, தொடர்ந்த இளவளவன்,
“நீயும், நானும் சேர்ந்தா உன்னோட அக்காவை பழைய மாதிரி மாற்றலாம், என்ன சொல்ற”
என்று அவளையும் தன்னோடு கூட்டு சேர்த்து கேட்க, அம்முவோ ஆர்வமே உருவாக,
“அக்கா பழைய மாதிரி, என் கிட்ட நல்லா பேசுவாங்களா”
என்று அது மட்டும் தான் தனக்கு தேவை என்பது போல பேச, அவளின் வெள்ளந்தியான பாசத்தை நினைத்து புன்னகையுடன் இளவளவன் தலையசைக்க, அம்முவோ,
“ஹைய்யா”
என்று துள்ளி குதித்தவளுக்கு, யாழினி, இன்று இளவளவன் பேசியதால் தான் உணவை முழுவதும் உண்டால் என்பதும் புரிய, அதுவே அம்முவுக்கு அவன் மீது, ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.
தன் அக்காவுக்கு இவனால் பாதிப்பு வராது என்ற நம்பிக்கையில், அவனிடம் இயல்பாக அதே நேரம் ஆவலுடன்,
“ஆமா உங்களை நான் எப்படி கூப்பிடறது”
என்று புதிய சந்தேகம் ஒன்றை கேட்க, உற்சாக பந்தென குதித்து கொண்டிருந்த அம்முவை பார்த்த இளவளவன்,
“அண்ணானு கூப்பிடுறியா”
என்று அவளை தன் குட்டி தங்கையாக அல்லாமல், வேறு எப்படியும் நினைக்க முடியாமல் கேட்க, அம்முவோ துடுக்குடன்,
“நீங்க என்னோட அம்மாவை அக்கான்னு கூப்பிடிங்க இல்ல, அப்போ நான் உங்களை மாமான்னு தானே கூப்பிடனும்”
என்று எந்த விகல்பமும் இல்லாமல் கேட்க, அதை கேட்டு இளவளவனோ கண்களில் குறும்பு புன்னகையுடன், குரலில் பதற்றத்தை கொண்டு வந்து,
“அய்யோ ராஜிக்கா, அம்மு தெரியமா பேசிட்டா, அவளை திரும்பவும் அடிச்சிடாதீங்க”
என்று அம்முவுக்கு பின்னால் பார்த்து சொல்ல, மதியம் வாங்கிய அடியின் நினைவில் அம்மு அலறியபடி,
“அம்மா நான் சும்மா விளையாட்டுக்கு தான்மா கேட்டேன், அவரை நான் அண்ணானே கூப்பிடுறேன்மா, அடிக்காதமா”
என்று திரும்பியவள், தனக்கு பின்னால் யாரும் இல்லாமல் போக, அவனை முறைக்க, இப்போது இளவளவனுக்கு பின்னால் நின்று அவளை முறைத்து கொண்டிருந்தார் ராஜி.
“இந்த அம்மா ரஜினி பேன் அஹ இருக்கும் போல, எப்போ வருது, எப்படி வருதுன்னு தெரியல, ஆனா சரியா தப்பான நேரத்துக்கு வந்துடுது”
என்று உள்ளுக்குள் அவரை வறுத்ததெடுத்தவள், வெளியில் பாவமாக முகத்தை வைத்து கொள்ள, ராஜியோ,
“ஏண்டி கொஞ்சமாவது அடங்குறியா நீ, அவரு என் வயசுக்கு மரியாதை கொடுத்து அக்கான்னு கூப்பிட்டா, நீ மாமானு கூப்பிடுவியா, ஒழுங்கா அண்ணானு கூப்பிடு”
என்று சொல்ல, இளவளவன் ஆனந்த மிகுதியில் கண்களை துடைத்து கொள்வது போன்று பாவனையுடன்,
“அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ”
என்று பாட, அம்முவோ அந்த பழைய பாட்டு தெரியாமல் முழித்து, தனக்கு தெரியாத பாடலை பாடியதற்காக அவனை முறைத்து, பின்பு ராஜியிடம் அடுத்த வரியை அவசரமாக, அவசரமாக கேட்டு,
“அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ”
என்று பாட, இருவரும் அதோடு நிறுத்தாமல்,
“அண்ணா”
“தங்கச்சி”
என்று பாசமழை வேறு பொழிய, ராஜியோ அவர்கள் இருவரின் செயலில் சிரித்து கொண்டிருக்க, யாழினியோ மேலிருந்து இளவளவனை முறைத்து கொண்டிருந்தாள்.