மறுநாள் எழுந்த வந்த மகனின் முகம், முகில் மறைவில் இருந்து வெளிப்பட்ட சூரியன் போல பிரகாசமாக இருக்க, பெற்றோர் இருவருக்கும் முழு நிம்மதி.
தன் தலைவியை நாடி செல்ல மனம் முழுதும் பரப்பரத்த போதும், அடுத்த வந்த இரண்டு நாட்களையும் பெற்றோருக்கு பிள்ளையாக, அவர்களுடனே செலவழித்தான் இளவளவன்.
இதற்கிடையில் யாழினிக்காக அவன் இணையத்தை சல்லடையாக சலித்து, தன்னவளுக்காக சிறப்பான பரிசு ஒன்றையும் தேர்வு செய்தான் இளவளவன்.
மூன்று அல்லது நான்கு நாட்களில் அந்த பரிசு வீட்டிற்கு வரும் என்று இணையம் சொல்ல, தான் அதற்குள் யாழினி வீட்டிற்கு சென்று விடுவோம் என்பதால், அந்த வீட்டின் முகவரியையே கொடுத்தான்.
தந்தையோடு தங்களின் நட்சத்திர விடுத்திக்கு நேரில் சென்று, அதன் அமைப்பு, இயங்கும் முறை என்று எல்லாவற்றையும் பார்த்து வந்தான்.
விடுதி மேலாண்மையை தானே இரண்டு வருடம் படித்துவிட்டு வந்து இருக்கிறான் அவன், அதனால் சிலவற்றை குறிப்பிட்டு, அதை மாற்றலாம் என்று தனது எண்ணத்தையும் தந்தையிடம் பகிர்ந்து கொண்டான்.
அதுப்போக முழுக்க, முழுக்க தனது ஆசைப்படி விடுதி ஒன்றை நிர்மாணிக்க ஆசைப்படுவதாய், வெளிநாட்டில் இருந்த போதே இளவளவன், தந்தையிடம் சொல்லி இருந்தான்.
அதனால் ஆவுடையப்பர் இங்கு சில இடங்களை ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருந்தார்.
தந்தையும், மகனும் சென்று அவற்றை எல்லாம் பார்க்க, தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருந்த ஒரு இடத்தை, இளவளவன் தேர்வும் செய்தான்.
இப்படியாக இரண்டு நாட்களும் முழுக்க முழுக்க வேலையிலே இளவளவனுக்கு கழிய, யாழினிக்கோ ஆமை வேகத்தில் நகர்வது போல இருந்தது.
அதுவும் கண்ணா எங்கே சென்றிருக்கிறான், எப்போது திரும்பி வருவான் என்று தெரியமால், மண்டைக்குள் நண்டு ஊர்வது போலவே இருந்தது அவளுக்கு.
தனது அறையில், தன் மெத்தையின் விரிப்பை சரி செய்து கொண்டிருந்த அம்மாவிடம் அக்கறை இல்லாதது போல,
என்று ஒன்றும் அறியாதவள் போல கேட்க, அவரோ சாதாரணமாக,
“இளா அவன் அப்பா, அம்மாவை பார்க்க போயிருக்கான்”
என்று சொல்ல, யாழினிக்கோ தன் அபி அத்தையும், மாமாவும் தன் இருப்பிடம் தெரிந்தும், இன்னும் தன்னை வந்து பார்க்கவில்லை என்பது பெரிய குறையாகி போனது.
“எப்படியும் ஒருநாள் என்னை பார்க்க வருவீங்க இல்ல, அப்போ வச்சிக்கிறேன் கச்சேரியை”
என்று மனதுக்குள் கருவி கொண்ட யாழினி, அவளே அறியாமல், கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயம் திரும்பி கொண்டிருந்தாள்.
தன்னுடைய ஒரு கேள்விக்கு விடை கிடைத்தவுடன், அடுத்த கேள்விக்கு பதில் அறியும் வண்ணம் யாழினி, பொய்யாக முகத்தில் அதிருப்தியை விரவ விட்டு,
“ஒரு வேளைக்குன்னு வந்தா பொறுப்பா இருக்க வேண்டாமா, இப்படி திடிர்னு கிளம்பி போயிட்டா, அப்பாவை யாரு பார்த்துகிறது, அவர் திரும்பி வர ரொம்ப நாள் ஆகுற மாதிரி இருந்தா, நாம அப்பாவுக்கு வேற டையட்டிஷியன் பார்த்துக்கலாம்”
என்று மெதுவாக நூல் விட்டு பார்க்க, லீலாவதியோ அப்பாவியாய்,
“அது எல்லாம் வேண்டாம் யாழிமா, இளா ரெண்டு, மூணு நாள்ல வந்துடுவேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கான்”
என்று அவளுக்கு வேண்டிய தகவலை சொல்ல, யாழினி இன்னமும் தன் நடிப்பை கைவிடாமல்,
“ஓ, அப்போ சரி”
என்று வெளியில் வேண்டா வெறுப்பாக சொல்லுவது போல சொல்லி வைத்தவள், அவன் திரும்பி வர இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறது என்று கணக்கு பார்க்க ஆரம்பித்தாள்.
முடியா பகலே, விடியா இரவே என்று நேரத்தை யாழினி நெட்டி தள்ளி கொண்டிருக்க, நான்காம் நாள் காலை, ஒருவழியாக வந்து சேர்ந்தான் இளவளவன்.
வாசலை பார்த்தபடி இருக்கும் நீல் இருக்கையில், தாயுடன் அமர்ந்து இருந்த யாழினி, உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்க்க, இளவளவன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
அதுவும் ‘அத்தை பெத்த பூங்குயிலை தேடி ஓடுறேன்’ என்று பாட்டை முணுமுணுத்த படி வெகு உல்லாசமாய்.
அவன் பாடிய பாட்டில் யாழினியின் உதடுகள் வளைய, அவளின் கண்களோ, அவனிலே பசைபோட்டு ஒட்டி கொண்டது போல நகர மாட்டேன் என்று அழிசாட்டியம் செய்தது.
யாரோ ஒருவன் என்று நினைத்து இதுநாள் வரை அவனை கவனிக்காதவள், இன்று அவன் தன் கண்ணா என்று அறிந்ததும், தலை முதல் கால் வரை ஆர்வத்துடன் பார்த்தாள்.
முழு சிரிப்புடன் வந்த அவனின் அழகிய பிம்பத்தை, தன் கண்களினாலே உள்ளத்தில் பச்சை குத்தி பசுமையாய் வைத்து கொள்ள முயன்றாள் யாழினி.
கண்ணீர் சுரப்பிகள் வேறு நேரம், காலம் தெரியாமல் வேலை செய்து, அவனை பார்க்க கண்ணீரில் வேலி போட்டன.
கண்களை அகல விரித்து, கண்ணீர் இமை தாண்டமல் இவள் தடுக்க போராடி கொண்டிருக்க, யாரோ வரும் சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்த லீலாவதியின் கவனம் முழுவதும், அவனில் இருக்க, யாழினியை அவர் கவனிக்கவில்லை.
உள்ளே நுழைந்ததுமே யாழினியை பார்த்து விட்டு இளவளவனின் முகம், பூவாய் மலர, முயன்று முகத்தில் தோன்றிய மலர்ச்சியை மறைக்க முயன்றான்.
கண்ணெடுக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்த யாழினியின் கண்களிலிருந்து அவனின் பாவனைகள் எதுவும் தப்பவில்லை.
தன் முகத்தை சீராக்கி கொண்டு நிமிர்ந்த இளவளவன் வாய், தன் அத்தையின் கேள்விக்கு பதில் அளித்தாலும், மனமோ யாழினியை தான் சுற்றி கொண்டிருந்தது.
அவன் திரும்பி வந்த மகிழ்ச்சியில் இருந்த லீலாவதி ஒருவழியாக, அவனுக்கு குடிக்க ஏதேனும் கொண்டு வரும் எண்ணம் கொண்டு, சமையலறைக்கு சென்றார்.
வீட்டின் மாப்பிள்ளையாக போகிறவன், திடுதிப்பென்று தெளிவாக எதுவும் சொல்லாமல் கிளம்பி செல்ல, ஒரு பெண்ணின் தாயாக, அவர் மனம் பட்டபாட்டை அவர் மட்டுமே அறிவார்.
இப்போது அவன் முகத்தில் புன்னகையுடன் திரும்பி வந்திருக்க, இப்போது தான் அவருக்கு நிம்மதி.
அவர் உள்ளே செல்ல, வரவேற்பறையில் இளவளவனும், யாழினி மட்டுமே நின்றிருந்தனர்.
தொண்டையை கனைத்து கொண்ட யாழினி சிறிய குரலில்,
“என்ன இவ்ளோ சீ…க்…கி…ர…மா வந்துட்ட”
என்று இரு பொருள் பட கேட்க, அவளின் குரலில் இருந்த பாவமும், முகத்தில் தோன்றிய உணர்வுகளும், இளவளவனை குழப்ப, அவன் அவனவளை வியப்பாக பார்த்தான்.
அதற்கு மேல் தன் உணர்வுகளை கண்ணா முன்னால் கட்டுப்படுத்த முடியாத யாழினி, தாயை பின்தொடர்ந்து சமையலறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடி விட்டாள்.
எட்டி நடைபோட்ட யாழினிக்கோ,
“என்னால ஒரு நாளே இயல்பா இருக்குற மாதிரி நடிக்க முடியலையே, ஆனா இந்த பக்கி எப்படி இத்தனை நாளா மேனேஜ் பண்ணானு தெரியலையே”
என்று யோசித்தபடியே சென்றாள். செல்லும் யாழினியின் முதுகை பார்த்த இளவளவனோ, ‘என்னவாயிற்று இவளுக்கு’ என்ற சிந்தனையில் மூழ்கினான்.
அன்று மாலை இளவளவன், யாழினிக்காக இணையத்தில் முன்பதிவு செய்திருந்த பரிசு வந்து சேர்ந்தது.
அதை கையில் வாங்கிய இளவளவனுக்கு, மனதில் எங்கே யாழினி, இதை பார்த்து வருந்துவாளோ அல்லது இதற்கு எல்லாம் என்ன அவசியம் என்று கோவப்படுவளோ என்ற எண்ணம்.
இப்படியும், அப்படியும் நடந்தவனுக்கு, எப்படி யோசித்தாலும், இது அவளுக்கு தேவையான ஒன்று என்றே தோன்றியது.
இரவு உணவு முடிந்ததும், யாழினி அவளின் அறைக்கு செல்லும் வரை காத்திருந்தவன், அவன் எதிர்பார்த்த தனிமை கிட்டியதும், பரிசை எடுத்து கொண்டு மாடி படியேறினான்.
இவனை எதிர்பாராத யாழினி லேசாக திகைக்க, இளவளவனோ வாய் வார்த்தையாக எதுவும் சொல்லாமல், அவளின் முன் நின்று, பரிசை நீட்டினான்.
அவனின் கையையும், பரிசையும் மாறி, மாறி பார்த்த யாழினி,
“என்ன இது”
என்று கேட்க, அவனோ தன் அலட்சியமான குரலில்,
“பிரிச்சி பார்த்தா என்னன்னு தெரிய போகுது”
என, அவளும் லேசாக துளிர்விட்ட ஆர்வத்துடன் அதை பிரிக்க, அதனுள் இருந்ததோ கைக்கடிகாரம்.
பார்க்க சாதரணமாக தெரிந்த அந்த கைக்கடிகாரத்தை இயக்கியதும், அதனுள் இருந்த அம்சங்களை பார்த்ததும் பெரிதாக விரிந்தது யாழினியின் நயனங்கள்.
அவளின் அருகில் அமர்ந்த இளவளவன், அந்த மேம்படுத்தபட்ட தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அந்த கைக்கடிகாரத்தை, எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அதன் பயன்கள் பற்றியும் விளக்கினான்.
அதோடு அதை அவளின் கையில், அப்போதே அணிய சொன்னவன்,
“இதை எப்பவுமே கழட்டாத புரியுதா”
என்று அழுத்தி சொன்னவன், அவளின் முகத்தை கண்களால் அளவெடுத்தப்படி,
“உனக்கு இ..து இதை பிடிச்சி இருக்கு தானே”
என்று கேட்க, தன் கையை தூக்கி அந்த கடிகாரத்தை பார்த்த யாழினி, உண்மையான மகிழ்ச்சியுடன்,
“ஹ்ம்ம் எனக்கு பிடிச்சி இருக்கு”
என்று சொல்ல, ஒரு பெருமூச்சு விட்ட இளவளவன், தன் கையில் இருந்த இன்னொரு பொருளையும் அவளிடம் கொடுத்தான்.
கண்கள் விரிய ஆர்வமுடன் வாங்கிய யாழினியின் முகம், அதை பிரித்து பார்த்ததும் சுருங்கியது.
சற்றும் யோசிக்காமல், இளவளவனின் கையிலே அதை மீண்டும் திணித்த யாழினி,
“இது எனக்கு வேண்டாம், தேவையும் பாடாது”
என்று சொல்ல, அவளின் கையில் மீண்டும் அதை திணித்த இளவளவனோ,
“இல்ல இது உனக்கு கண்டிப்பா யூஸ் ஆகும், தனியா படிக்க கஷ்டமா இருந்தா சொல்லு, நானும் உன்கூட சேர்ந்து படிக்கிறேன்”
என்று அவளின் கையில் இருந்த அந்த புத்தகத்தையும், குறுந்தகடுகளையும் கண்களால் குறிப்பிட்டு சொன்னவன், இருக்கையில் இருந்து எழுந்து,
என்றவன் அவளின் மறுப்பு மொழியை கேட்க அங்கு நிற்கவே இல்லை. தன் கையில் இருந்த புத்தகத்தையே வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தாள் யாழினி.
இதற்கு எல்லாம் இப்போது என்ன அவசியம் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை, ஆனால் அவசியம் என்று சொல்வது அவளின் கண்ணா.
அதனால் அதை அவளால் எளிதாக வேண்டாம் என்று, புறம் தள்ளவும் முடியவில்லை.
விடாத சிந்தனையின் பயனாய், அன்றிரவு யாழினி உறக்கத்தை தொலைத்தது தான் மிச்சம்.
மறுநாள் இளவளவன் கேட்டால், எப்படி முடியாது என்று மறுக்க என்று யாழினி யோசிக்க, அந்த எமகாதகனோ அந்த புத்தகத்தை பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.
மருமகனுக்கு பிடித்த பாதாம் அல்வாவை செய்த லீலாவதி, சுட சூட இளவளவனுக்கு கொண்டு வந்து கொடுத்தவர், அருகில் அமர்ந்திருந்த யாழினிக்கும் கொடுத்தார்.
அதை ஆசையாய் வாங்கிய இளவளவன் சப்பு கொட்டி சாப்பிட்ட படி,
“நானும் எவ்ளோ ஹோட்டல்ல சாப்பிட்டு பார்த்துட்டேன் அத்தை, ஆனா இந்த டேஸ்ட் வரவேயில்லை, உங்க கை பக்குவமே பக்குவம் தான்”
என்று சிலாகித்தவன், யாழினி அல்வாவில் கவனமாய் இருப்பதாய் நினைக்க, அவளோ ஓர கண்ணால் இவர்களை தான் கவனித்து கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு கொண்டே இருந்தவன், திடிரென லீலாவதியிடம்,
“ஆமா அத்தை நம்ப வீட்டுல என்ன பாத்திரம் யூஸ் பண்றிங்க சமைக்கிறதுக்கு”
என்று கேட்க, லீலாவதியோ,
“எவர்சில்வர் தான் கண்ணா, ஏன்”
என்று கேட்க, அவனோ வழக்கமான உரையாற்றும் குரலில்,
“நான் ஒரு ஆர்டிக்கிள் படிச்சேன் அத்தை, அலுமினியம் பாத்திரம்ல சமைச்சா, சாப்பாட்டாட சேர்த்து அலுமினியமும் உடம்புக்குள்ள போகுமாம், அது நல்லது இல்லையாம், அதனால் நல்ல குவாளிட்டியான ஸ்டீல் பாத்திரம் தான் யூஸ் பண்ண சொல்றாங்க”
என்று சொல்ல, சோகம் கவ்விய முகத்துடன் லீலாவதி,
“ஹ்ம்ம் இந்த மாதிரி தான் யாழி அப்பாவும் ஏதோ ஏதோ படிச்சிட்டு சொன்னாங்க, எல்லாமே சேஞ் பண்ணோம்”
என்று சொல்ல, அதன் பின் இருந்த காரணம் புரிந்த இளவளவன், ஆதரவாக அவரின் கையில் தட்டி கொடுக்க, சோகத்தை மறைத்து கொண்டு, அவனை பார்த்து புன்னகைக்க முயன்றார் லீலாவதி.
தாயின் வருத்தத்தை பார்த்த யாழினிக்கு, அதற்கு மேல் அந்த இனிப்பு தொண்டையில் இறங்கவில்லை.
அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல, அன்று மீண்டும் கடையின் மேலாளர் வந்தார், பல கோப்புகளை எடுத்து கொண்டு.
அவரை பார்த்தத்தும் யாழினிக்கு,
“மறுபடியும் முதல்ல இருந்தா”
என்று ஆயசமாக இருக்க, அவள் நினைத்தபடியே அன்று நடந்த நிகழ்வு எல்லாம் அச்சரம் பிசாகமல் அப்படியே நடக்க, இன்றும் வேலை எல்லாம் யாழினியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அடுத்து அடுத்து வந்த நாட்களில் இதுவே வாடிக்கையாகவும் மாற ஆரம்பித்தது. முதல் முறை போல இளவளவன் அவளுக்கு உதவியும் செய்யவில்லை.
அவளின் அருகே அமர்ந்து இருப்பவன், அவளுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதை மட்டும் தீர்த்து வைப்பவன், அவளையே தனியே எல்லா வேலையையும் பார்க்க வைத்தான்.
கொஞ்சம், கொஞ்சமாக கடையின் நிலமையை யாழினிக்கு பரிச்சயம் செய்தவன், நிர்வாகத்தில் யாழினி பங்கு இருக்குமாறு பார்த்து கொண்டான் இளவளவன்.