அங்கே வரிசையாய் அமைந்திருந்த வீடுகள் தோறும் பெயிண்ட் அடித்து, கலர் கலர் பேப்பர் மற்றும் பூக்களால் வீடுகள் மட்டுமின்றி தெரு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, மொத்த வத்தலகுண்டு ஊரும் என்னவோ திருவிழாவிற்கு ரெடியாவதைப்போல் ரெடியாகி ஊரே ஜெகஜோதியாய் அலப்பறையாய் காட்சி அளித்தது.
     எதற்கு இவ்வளவு அலப்பறையாக ஊரே ரெடியாகி இருக்கிறது என்று பார்க்கிறீர்களா, இந்த புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் மட்டும் இவர்கள் ரெடியாகவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் நம் அரவிந்தின் தவப்புதல்வன் சித்தார்த்துக்கும், அவரின் ஆருயிர் மருமகள் வீரசுந்தரிக்கும் கல்யாணம்.
     புதையலை எல்லாரிடமும் பகிர்ந்து கொடுத்துவிட்டு ஊரைவிட்டு சென்னையை பார்த்து கிளம்புகிறேன் என்ற சித்துவை எமோஷனலாக பேசி இன்னும் சில நாட்கள் அங்கையே பிடித்து தங்க வைத்துவிட்டார் அலமேலு. ஊரில் இருக்கும் போதே இவர்களின் திருமணத்தை பார்த்துவிட்டால் நிம்மதியா மேலோகம் போவேன் என அந்த நேரத்தில் அரவிந்த் இடையில் பேசியிருக்க, அதை பிடித்துக் கொண்ட அலமேலு அவர்களின் திருமணத்தை நடத்தும் முடிவை எடுத்துவிட்டார்.
     ‘அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா இருக்கு’ இதை கேட்டவுடன் மைண்ட் வாய்சில் பேசி உற்சாகத்தில் துள்ளிவிட்டான் சித்து. வீராவும் சம்மதம் சொல்லிவிட இவர்கள் திருமணம் திடீரென முடிவானது.
     இதை தெரிந்துக் கொண்ட ஊர் மக்கள், ஊருக்கு உதவி செய்த சித்தார்த்தின் திருமணத்தை கோலாகலாம  தாங்களே முன் நின்று நடத்துவதாக கெஞ்சிக் கேட்டு கொண்டதில் சித்துவின் குடும்பத்தினரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
     அதன் பலனாகவே இப்போது மொத்த ஊரும் புதுப்பெயிண்ட் அடித்த வீட்டை போல் ஜிகுஜிகுவென ரெடியாகி உள்ளது.
     மொத்த ஊரும் இங்கே சித்துவின் கல்யாணத்திற்கு பரபரப்பாய் ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்க, மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய நம் கல்யாண மாப்பிள்ளையோ கோபத்தின் உச்சத்தில் இருந்தான். ஏன் என்று யோசிக்க பெரியதாய் அறிவு எதுவும் தேவையில்லை. அரவிந்த் என்ற ஒரு பெயர் மொத்தத்தையும் சொல்லுமே.
     திருமணம் முடிவானதில் இருந்து, பூதம் புதையலை அடைகாப்பதைப்போல் வீராவை சித்துவின் கண்ணில் கூட காட்டாமல் அடைகாத்துக் கொண்டிருந்தார் மனிதர். சாதாரண நாளிலே வீராவிடம் சித்துவை நெருங்க விடாத அரவிந்த், இந்த ஒரு வாரம் அவள் இருக்கும் திசைப்பக்கம் கூட அவர் மகனை நெருங்கவிடாது ஹெவியாக காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.
     கடையாக அவளை அவன் பார்த்தது, போன வாரம் இவன் திருமணத்திற்கு உடைகள் மற்றும் பல பொருட்களை இவர்கள் பர்சேஸ் செய்ய போனபோதுதான். ஷாப்பிங் முடித்து வீட்டிற்கு வந்த சித்து சந்தோஷத்தின் உச்சத்தில் யாருக்கும் தெரியாமல் வீராவிடம் கொஞ்ச நேரம் ரொமான்ஸ் செய்து வரலாம் என அவள் அறைக்கு போய், எப்போதும் போல் அரவிந்திடம் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டான்.
     கேப்டன் ஸ்டைலில் பேக் ஷாட் அடித்து “ரொம்ப கொழுப்பு கூடிபோச்சு இனி ஒருவாரம் இந்த பக்கமே வரக்கூடாது. கல்யாணத்தப்பதான் என்ற மருமவள நீ பாக்கனும்” என ஸ்டிரிக்காய் சொல்லி தன் மகனை வெளியேற்றிவிட்டார் மனிதர். அப்போதில் இருந்தே வீராவை பார்த்து பேச சித்து எவ்வளவோ முயற்சி செய்தும், சிலபல கோக்குமாக்கு வேலைகள் எல்லாம் பார்த்தும் கூட அலிபாபா குகைப்போல் வீராவின் அறை கதவுகள் திறந்தபாடில்லை.
     எப்போது வெளியே வருகிறாள் எப்போது சாப்புடுகிறாள் என எதுவும் தெரியவில்லை. அரவிந்த் அவள் அறைக்கே உணவை கொண்டு செல்வது பாவம் பிள்ளைக்கு இன்னும் தெரியாது போனது‌. இந்த ஒரு வாரமும் அவன் புண்பட்ட மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது என்னவோ வீராவின் தம்பி கதிர்தான்.
     இந்த கொடுமைகளை எல்லாம் இன்னும் ஒரு வாரம் வேறு அவன் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவனுக்கு இன்னும் கடுப்பாக இருந்தது. எப்படா இந்த இம்சையான நாட்கள் முடிவுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்துவிட்டான் சித்து‌.
     அவன் பொறுமையை எல்லாம் அரவிந்த் வைத்து சோதிக்க, அவனை மேலும் சோதிக்கும் படி அந்த ஒரு வாரமும் இன்னும் ஆமை வேகத்தில் மெல்ல நகர்ந்து வைத்தது…
————————–
     ‘ஆஹா எவ்ளோ பிரஷ்ஷான காத்து, ஆஹா என்ன இன்னைக்கு குளிக்குற தண்ணீ கூட இப்ப நம்மல இவ்ளோ பிரைட்டா ஆக்கிருச்சு’
     காலையில் எழுந்தது முதல் அடிக்கும் காற்றில் இருந்து குடிக்கும் காபி வரை ஒவ்வொன்றையும் ரசித்து கொண்டே கிளம்பினான் சித்து‌. காரணம் அந்த நீண்ட ஒரு வாரத்தை வெற்றிகரமாக நெட்டித்தள்ளி, அவனுடைய கல்யாண நாளுக்குள் காலை வைத்துவிட்டானே. அப்புறம் என்ன காற்று காபி என்ன, காக்கா கழுதைகூட பையனுக்கு அழகாக தெரியும்.
     “மாமா ரெடியா நீங்க, அங்கிள் கேக்க சொன்னாங்க மண்டபத்துக்கு போக டைம் ஆகிருச்சாம்”
     தன் முகத்தில் ஒரு கோட்டிங் பவுண்டேஷனை அடித்தும் திருப்தி ஆகாமல் மீண்டும் ஒரு கோட்டிங் போட்டுக் கொண்டிருந்த சித்துவை வந்தழைத்தான் கதிர்.
     “கதிர் குட்டி உன் மாமன் எப்படிடா இருக்கேன். உன்னோட அக்கா அளவுக்கு இல்லைனாலும் அவக்கூட நிக்கிற அளவாவது இருக்கேனாடா”
     கண்ணாடியில் தன்னை இப்படி அப்படி திருப்பி பார்த்து கொண்டு கதிரிடம் சித்து கேட்க,
     “அதெல்லாம் என் தங்கச்சிக்கு ஏத்த மாதிரி தான் இருக்கீங்க சித்து. ஆனா இப்படி ரெடியாகி இங்கையே நின்னுட்டு இருந்தா ஏற்கனவே மண்டபத்துக்கு கிளம்பிட்ட உங்க வீரா என்ன பண்ணுவாங்கனுதான் எனக்கு தெரியல”
     கதிரின் பின்னாலே வந்திருந்த மாதவன் சித்துவிடம் வீரா மண்டபத்திற்கு கிளம்பிவிட்டாள் என சுற்றி வளைத்து சொல்ல, ஜெர்கானது சித்துவுக்கு. எங்கே இவன் லேட்டாக கிளம்ப போக, இவன் தந்தை எதாவது திருவிளையாடலை நிகழ்த்தி அவன் திருமணத்தில் கல் எறிந்து விடுவாரோ என ஒரு நிமிடம் அவன் இதயம் அதன் துடிப்பையே நிறுத்திவிட்டது.
     அதன்பின் என்ன வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் எடுத்தான் ஓட்டம்‌. மெதுவாக காரை செலுத்திய மாதவனை அரட்டி உருட்டி, அந்த வத்தலகுண்டின் வத்திப்போன சாலையில் காரை நூறில் செல்லுத்த வைத்தான்.. சித்து கத்திய கத்தில் காரை மாதவன் விரட்டியதில் காற்று போல் இவர்கள் கார் சாலையில் பறந்தது..
     இவர்களுக்கு ஜஸ்ட் பத்து நிமிடத்திற்கு முன்னால் சென்றிருந்த வீராவின் காரை ஓவர்டேக் செய்து, அவர்களுக்கு முன் மண்டபத்தில் போய் நின்ற பின்னர்தான் அப்பாடாவென சற்று சாந்தமானான் சித்து.
     மணப்பெண் கோலத்தில் இப்போது வரப்போகும் தன் காதலியை, எப்போது பார்ப்போம் என வாசலில் தவம் கிடந்த சித்துவை பொடனியிலே ஒன்று போட்டு உள்ளே துரத்திவிட்டார் அவன் தந்தை.
     ‘இந்தாளு எப்ப வந்தாரு’
     உள்ளே ஜெர்க் ஆன சித்து, அவன் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் கடைசி நிமிடத்தில் அவன் தந்தையை சற்றும் பகைத்துக் கொள்ள கூடாது என புரிந்ததால் வாயிற்குள் அரவிந்தை கழுவி ஊற்றினாலும், வெளியே ஈயென பல்லை காட்டி உள்ளே போய்விட்டான்.
     ‘சரி பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் என்ன கொஞ்ச நேரம்தானே’
     தன்னையே சமாதானம் செய்துக்கொண்டு அவர்கள் திருமணம் நடக்கப்போகும் அந்த தருணத்திற்காய் காத்திருக்க தொடங்கினான்.
     இந்த இடைப்பட்ட தருணத்தில் அவன் மனதிற்குள் வீரா அவர்கள் வாழ்வில் வந்ததுமுதல் நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வந்தது. என்னதான் வீரா அவன் தந்தை பார்த்து தேர்வு செய்த பெண்ணாக இருந்தாலும், இவன் காதலை சொல்லிதானே அவளின் சம்மதம் பெற்றான்.
     அப்படி அவளோடு காதலை பகிர்ந்துக் கொண்ட தருணத்தை நினைத்து சிரித்தவனுக்கு, அதன்பின்னான வீரா ஒரு கவிதைதான். தாய் இல்லாத அவனுக்கு நேரா நேரம் உணவு தருவதாகட்டும்.. எப்படிப்பட்ட சிக்கல் வந்தபோதும் அவனோட நின்றதாகட்டும்.. அதிமுக்கியமாக அவனுக்கும் அவன் தந்தைக்கும் வரும் வாய்கா தகராறுகளை தூசாய் சமாளிப்பதாகட்டும்…
     எல்லாத்தையும் ஒன் மேன் ஆர்மியாக நின்று செய்து காட்டியவள் அவனின் வீரா. இவன் இங்கு அவன் காதலியை எண்ணி கனவுலோகத்தில் சிரித்து வைக்க,
     அவனை எங்கும் நகரவிடாது பார்த்துக்கொள்ளும்படி அரவிந்தால் அமர்ந்தப்பட்டிருந்த மாதவனுக்கு சித்து சீலிங்கை பார்த்து சிரித்ததில் ‘பயபுல்ல கல்யாணத்த பத்தி நெனச்சு ஓவரா சந்தோஷபட்டு மூளை மூன் வாக் எதாவும் போயிருச்சோ’ என யோசனை ஆகிவிட்டது.
     இப்படி அதிரிபுதிரியாக ஆரம்பித்தது அரவிந்த் புதல்வனின் திருமணம்‌. சில நிமிடங்களில் ஐயரின் ‘மாப்பிள்ளைய அழைச்சுட்டு வாங்கோ’ என்ற ஒரு குரல் கேட்க, இருந்த கனவிலிருந்து டமாலென வெளிவந்த சித்து மாலை எடுத்து போட்டுக்கொண்டு மேடைக்கு ஓடிவிட்டான்.
     சித்து ஜெட் போல் சொய்யென ஓடிய வேகத்தை பார்த்து ‘அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு’ என அதிர்ந்துதான் போனான் மாதவன். ஆனாலும் மாதவனின் மனதிற்குள் நமக்கும் இப்படி ஒரு வாழ்க்கை துணை அமைந்தால் நல்லாதான் இருக்கும் என்ற எண்ணம் வராமல் இல்லை.
     இங்கு மேடையில் வந்தமர்ந்திருந்து மந்திரத்தை சொல்லி கொண்டிருந்த சித்துவுக்கோ ‘இந்த ஐயர் பொண்ண எப்படா கூப்டுவாரு’ என மனதிற்குள் அவ்வளவு பரபரப்பு.
     அவன் பொறுமையை மேலும் சோதிக்காமல் ஐயர் வீராவை அழைத்து வர சொல்லிவிட, நம் பையன் ஆவலாக அவள் வரும் திசையை பார்த்து கொண்டிருந்தான்‌. மணப்பெண்ணின் அறைக்கதவு திறந்து அதிலிருந்த அனைவரும் வெளியே வந்த பின்னும் கூட சித்து யாரையோ தேடிக்கொண்டிருக்க, சில நொடிகளிலே அவன் அருகே யாரோ அமரும் அரவம் கேட்டு சித்து திரும்பி பார்த்தான்‌.
     மணப்பெண் கோலத்தில் தேவதைப்போன்ற பெண் ஒருத்தி சித்துவின் அருகில் அமர வைக்கப்பட்டிருக்க, சித்தவுக்கோ அதிர்ச்சி. பெண்ணை யாரோ மாற்றி விட்டனர் என்று‌. அப்படியே அவன் தந்தை இருக்கும் திசை பக்கம் தலையை திருப்ப, அரவிந்தோ எதோ ஜென்ம பயனை அடைந்த திருப்தியில் நின்றிருந்தார்.
     வீராவை தவிர்த்து வேறு யாரும் அவன் அருகில் அமர்ந்திருந்தாள் அவனின் தந்தையின் ரியாக்ஷன் வேறு மாதிரி இருக்கும் என்று புரிந்த சித்து, அவன் அருகினில் உட்கார்ந்திருந்த அந்த பெண்ணை இப்போது நன்றாக உற்று பார்த்தான்.
     அப்படி பார்க்கும் போதுதான் அந்த வித்யாசம் தெரிய, அவன் கண்டது உண்மைதானா என ஒருமுறைக்கு இருமுறை பார்த்து உறுதிபடுத்தினான். அவன் அருகே அமர்ந்திருந்தது வேறு யாரும் இல்லை அவன் ஆருயிர் காதலி வீரசுந்தரியேதான்.
     எப்போதும் ஜீன்ஸ் டாப்பில் சுத்தும் பெண் இப்போது புடவை அணிந்திருக்கிறாள். அதுபோக அவள் முகத்தை பியூட்டி பார்லர் ஆட்கள் பட்டி டிங்கரிங் பார்த்திருக்க ஆள் அடையாளம் தெரியவில்லை நம் பையனுக்கு‌.
     ‘ஆத்தி இப்படிதான் மேக்கப்ப போட்டு நம்ம பசங்கல மாட்டிவிடாறானுங்களா‌. என் ஆளை எனக்கே அடையாளம் தெரியாத மாதிரி மாத்திட்டானுங்களே. நல்லவேளை பொண்ண மாத்திட்டானுங்கனு சண்டையை போட்டு கல்யாணத்த நிறுத்தாம போனேன்’
     மனதிற்குள் ஜெர்க் ஆனாலும், அவன் காதலியின் அழகில் பூரித்துபோய்விட்டான் சித்தார்த். நல்ல நேரம் நெருங்க, அவன் சொந்த ஊர் மக்களின் ஆசிர்வாதத்தோடு அவன் தந்தையின் ஆசைப்படி வீராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு வெற்றிகரமாய் அவளை தன் மனைவி ஆக்கிகொண்டான் சித்து. இந்த திருமணத்தை ஆன்மாவாக மேடையில் நின்று பார்த்த அரவிந்துக்கு உணர்ச்சி மிகுதியில் கண்களில் வழிந்த கண்ணீர் அப்படியே காற்றில் கரைந்தது.
     கல்யாணம் நல்லபடியாக பிரம்மாண்டமாக முடிய ஆடல் பாடல் என அந்த மண்டபமே கலைகட்டியது‌. ஊர் மக்கள் அனைவரும் நடந்தது என்னவோ தங்கள் வீட்டின் திருமணம் என்பதைபோல் அவ்வளவு உற்சாகமாய் இருந்தனர்.
     ஆனால் எப்போதும் சிரிப்பை குத்தகைக்கு எடுத்திருக்கும் அரவிந்தின் முகம் பூரண நிறைவை தத்தெடுத்து இருந்தாலும், அதில் ஒரு சோகம் இளையோடவே செய்தது. அதை கண்ட சித்துவுக்கு அவன் தந்தைக்கு என்ன ஆனதோ என மனது படபடத்தது‌. சரி வீட்டிற்கு போய் எதுவானாலும் கேட்டுக் கொள்ளலாம் என அப்போது அமைதி காத்தான்.
     எல்லா கொண்டாடங்களும் முடிவு பெற்று தங்கள் வீட்டிற்கு அனைவரும் வந்து சேர மாலையானது. வந்ததும் வராததுமாய் வீராவை இழுத்து சென்று தன் தந்தையின் முன் தான் நின்றான் சித்து.
     “அப்பா நானும் காலைல இருந்து கவனிச்சுட்டுதான் இருக்கேன், உன் முகமே சரியில்ல. என்ன ஆச்சு? எங்க கல்யாணம் தான் நல்லபடியா முடிஞ்சிருச்சே. அப்புறம் ஏன் ஒருமாதிரி இருக்க”
     சித்து கேட்டதற்கு எதையோ நினைத்து மெல்ல புன்னகை புரிந்த அரவிந்த் “சித்து கண்ணா வீராமா, இன்னைக்குதான் என் மனசு ரொம்ப நிறைவா இருக்குடா. ரெண்டு பேரும் புள்ளைக்குட்டியோட ரொம்ப நாள் சந்தோஷமா இருக்கனும். என் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்” என சம்மந்தமே இல்லாது பேசவும்
     “அங்கிள் ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க.. உங்களுக்கு என்ன ஆச்சு.. நீங்க மனசுல என்னவோ வச்சுட்டு பேசற மாதிரி இருக்கு பிளீஸ் எதுவா இருந்தாலும் நேராவே சொல்லிருங்க அங்கிள்…”
     அர்விந்தின் தோற்றத்தில் பதறிப்போய் வீரா கேட்டாள்‌. அதற்கும் ஒரு சிரிப்பை உதிர்த்த அரவிந்த், வீராவின் தலையை ஆதூரமாக தடவிவிட்டபடி
     “எனக்கு என்னடா மனசுல இருக்க போகுது.. என் மனசு தான் இப்ப நெறஞ்சு போயி கெடக்குதே.. என் புள்ள அம்மா இல்லாம வளந்தவன்மா அவன கொஞ்சம் பாத்துக்க தாயி..
     எலேய் சித்து! வீரா அப்பா அம்மா இல்லாத குழந்தைடா.. உன் வாழ்கைல கெடச்ச வரம்டா கண்ணு அவ.. அந்த புள்ளைய சூதனமா பாத்துக்கடா குட்டி.. அப்புறம் நம்ம கதிரு தங்கம்..
     உங்களுக்கு எத்தனை புள்ளை பொறந்தாலும் அவன் தான் உங்களோட மொத புள்ளையா இருப்பான்.. அவனை நல்லா படிக்க வச்சு பெரிய ஆளா ஆக்கி விட்டுருடா சித்து..”
     அரவிந்த் திடீரென இப்படி பேசவும் சித்துவின் இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது‌. ஏன் அரவிந்த் இப்படி பேசுகிறார் என அவனுக்கு என்னவோ புரிவதுபோல் இருந்தது. ஆனால் அதை அவர் வாயால் கேட்கும் தைரியம் எல்லாம் பாவம் அவர் பிள்ளைக்கு இல்லை. எனவே எதுவும் பேசாமல் தலையை குனிந்தபடி அமைதியாகவே நின்றிருந்தான்.
     “ஏன் அங்கிள் திடீர்னு இப்படிலாம் பேசுறீங்க.. நீங்களும் எங்க கூட தானே இருந்து எல்லாத்தையும் பாத்துக்க போறீங்க..”
     வீராதான் அரவிந்தின் பேச்சிற்கு பதட்டத்துடன் இடையில் ஒரு பதிலை சொன்னாள். அதற்கும் ஒரு சாந்தமான புன்னகையையே தந்த அரவிந்த் அங்கே நின்றிருந்த மற்றவர்களின் மீது பார்வையை திரும்பினார்.
     “கதிர் குட்டி நீ நல்லா படிக்கனும்.. பெரிய வேலைக்கு போகனும்.. உன் மாமாவுக்கும் அக்காக்கும் வாழ்க்கை பூரா நீ துணையா இருக்கனும் சரியா”
     கதிர் அரவிந்த் எதற்கு சொல்கிறார் என்று புரியாதபோதும் தலையை அசைத்து வைத்தான்..
     “மச்சான் என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆனப்போ வேணா நான் இங்க இல்லாம இருந்திருக்கலாம்.. ஆனா இனி என் சார்பா என் புள்ள இருப்பான்.. எல்லாரையும் எப்பவும் போல நல்லா பாத்துக்கங்க மச்சான்..”
     அரவிந்த் வந்ததில் இருந்து பார்த்தவரை கார்மேகத்தின் மீது பெரிய நன்மதிப்பு உருவாகி இருக்க, அவரிடம் கேட்டார். கார்மேகமும் சரியென தலையசைக்க புன்னகைத்துக் கொண்டார் மனிதர்.
     “அலமேலு என் மூனு பிள்ளைகளும் தாய் தகப்பன் இல்லாத பிள்ளைமா.. உன் பிள்ளையோட சேத்து அதுங்குளுக்கு ஒரு நல்லது கெட்டதுனா இப்ப போல கூட இருந்து பாத்துக்கடா”
     அலுமேலு கண்களில் கண்ணீர் வடிய “ஏன் ண்ணே நீ சொல்லிதான் எனக்கு தெரியனுமா.. உன் புள்ளைக இனி எங்களுக்கும் புள்ளைகதான் அண்ணே.. ஆனா நீ எதுக்கு ண்ணே திடீர்னு இப்படி எல்லாம் பேசுற..” என்றார் அவரும்‌.
     அங்கு நின்றிருந்த தன் குடும்பத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து தன் கண்களுக்குள் ஆசை தீர நிரம்பிக் கொண்ட அரவிந்த், ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டார்.
     “உங்களுக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த உலகத்துல என்னோட ஆன்மா இருக்க ஒரு குறிப்பிட்ட நாள்தான் குடுக்கப்பட்டிருக்கு.. என்னோட ஆசை நிறைவேறின பின்னாடி நான் இந்த உலகத்தைவிட்டு போறதுதானே நியதி. என் ஆசை என்னோட பிள்ளைக்கு நானே ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும், அவன் சந்தோஷமா இருக்கிறத பாக்கனும்கிறதுதான். அதுதான் என் கண்ணு முன்னாடியே நடந்திருச்சே…
     இனி என்னமா என் புள்ள ஜாம் ஜாம்னு பிழைச்சிப்பான். அப்புறம் நான் கிளம்பி ஆகனும்ல.. டேய் சித்து கண்ணா அப்பா கிளம்பறேன்டா அழக்கூடாது என்ன”
     கடைசியாக தன் பிள்ளையை பார்த்து அரவிந்த் சொன்னதில் மௌனமாக அழுதிருந்த சித்து இப்போது வெடித்து அழுதான்.
     “போகாத ப்பா பிளீஸ்.. அம்மா போனப்ப என்ன சொன்ன.. என் புள்ள குட்டி எல்லாம் பாத்துட்டு தான் போவேன்னு சொன்னல்ல.. போகாதப்பா..”
     சித்து அரவிந்தை பிடித்துக் கொண்டு திணறி அழுக, அரவிந்த் வீரா உதவிக்கு வருவாளா என அவளை பார்க்க.. அவள் மறுபுறம் அரவிந்தை பிடித்துக் அழுதுக் கொண்டிருந்தாள்..
     சற்று நேரம் அவர்களை சமாதானம் செய்த அரவிந்த் தன்னை அவர்களிடமிருந்து விலக்கி கொண்டார்.
     “ப்ச் என்ன மை சன் இப்படி அழற.. உன் தகப்பன் மேல அவ்ளோ லவ்வா.. அச்சோ அதுக்குனு இப்படியா அழுவ.. உன்னை நிம்மதியா தனியா விட்டுட்டு போற அளவு என்னை என்ன அவ்ளோ நல்லவனு நினைச்சியா நீ..”
     அரவிந்த் அவர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கூற, அரவிந்த் போகமாட்டார் போல் என்று நினைத்த அனைவரும் அவரை ஆவலுடன் பார்த்து வைத்தனர்..
     “ஆமாடா மகனே.. நான் இப்ப போனாலும் உனக்கு புள்ளையா வந்து பொறந்து உன்ன டபுள் மடங்கு டார்சர் பண்ணுவேன்.. ரெடியா இருந்துக்க..”
     என்று அரவிந்த் சொல்ல அனைவரின் முகத்திலும் சிறு புன்னகை..
     “சரி மக்கா நான் கிளம்பறேன்.. எல்லாரும் நான் போறதை நினைச்சு கதறி அழுவாம போய் பொழப்பு கழுதைய பாருங்க.. டேய் சித்து நான் உன் புள்ளையா வந்து பொறக்கும் போது சென்னைல நீ ஒரு மாலோட ஓனரா இருக்கனும்… அப்பதானே இந்த அரவிந்துக்கு ஒரு கெத்து”
     கடைசியாய் போது கூட தன் பிள்ளையை அரவிந்த் வம்பிழுக்க, இப்போது அவரிடம் சித்து மல்லுக்கு நிக்கவில்லை. மாறாக சரியென தலையசைத்தான்..
     இப்படி எல்லோரையும் வேண்டும் என்ற அளவு அழ வைத்துவிட்டு தன் குடும்பத்தை பார்த்தபடி மகிழ்வுடன் காற்றில் கரைந்து போனார் அரவிந்த்.
     என்னதான் அவர் ஆன்மா மறைந்தாலும், நம் சித்துவை போட்டு வாட்டி வதைக்கவாவது மீண்டும் அவன் பிள்ளையாக வந்து பிறந்து வரமாட்டாரா நம் அரவிந்த்..
     அரவிந்தின் ஆசியோடு புதிதாக திருமணமான சித்தார்த்தும் வீராவும் நீண்ட நாள் மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை… இத்துடன் நாமும் அவர்களிடமிருந்து விடைபொற்று மகிழ்வுடன் வாழ்வோம்!
-முற்றும்