கண்ணாத்தா கிழவி தன்மேல் சுமத்தப்பட்ட கடமையை அப்பாவி ஜீவன்களை பாடாய்படுத்தி, குட்டிக்கரணம் அடித்து வெற்றிகரமாய் நிறைவேற்றிவிட்டு, காற்றில் கரைந்து போவதை அனைவரும் ஆவென பார்த்திருந்தனர்.
     “ஹப்பாடா ஒருவழியா பிரச்சினையும் முடிஞ்சது. நம்மல ராப்பகலா போட்டு படுத்தி எடுத்த அந்த கெழவியும் ஒழிஞ்சது, இப்பதான் நிம்மதியா இருக்கு”
     வாய்விட்டே மாதவன் சொல்லி நிம்மதி பெருமூச்சுவிட்டான். அதை ஆமென ஒத்துக் கொண்டான் சங்கரும். என்னதான் கிழவி போகும்போது எமோஷனலாய் பேசி சென்றாலும், இதுநாள் வரை இருவரும் அந்த கிழவி படுத்தியபாட்டை ஒரு துளிக்கூட மறக்கவில்லையே.
     “ஆனா உங்க குடும்பத்தை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” தன் முன்னால் அமர்ந்திருந்த மொத்த குடும்பத்தையும் பார்த்து சங்கர் சொல்ல அனைவரின் முகமும் புரியாத பாவத்தை காட்டியது. எனவே சங்கரே தொடர்ந்தான்.
     “ஏன் சொல்றேன் தெரியுமா, அந்த புதையல அவ்ளோ கஷ்டப்பட்டு உயிரை பணயம் வச்சு எடுத்து அதை ஊருக்கு தானம் செஞ்சிருக்கீங்களே. அதான் உங்களை நெனச்சா எனக்கு பெருமையா இருக்குன்னு சொன்னேன்”
     சங்கர் பூரிப்பாய் அவர்களை பெருமைப்படுத்தி பேசியதை கேட்டு அங்கிருந்த ஒரு சிலரின் முகங்கள் மட்டும் ஒருமாதிரி ஆக, இப்போது முழிப்பது சங்கரின் முறையானது.
     “நானே உங்க எல்லாருட்டையும் ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சேன். இருங்க ஒரு நிமிஷம் இப்ப வந்தர்ரேன்”
     எல்லாரிடமும் பொதுவாக சொன்ன சித்து அவன் அறை நோக்கி சென்றான். அப்படி அவன் என்னதான் சொல்ல போகிறான் என மற்றவர்கள் யோசிக்க, சித்து வேகமாய் தன் அறைக்குள் சென்றான்.
     ‘சித்து எதுக்கு இவ்ளோ வேகமா ஓடுறாரு’
     சங்கர் அவன் போன் திசையை பார்த்து குழம்பிப்போனான். அவன் எப்போது வருவான் என அவன் சென்ற வழியையே பார்க்க, அவன் கேள்விக்கான பதில் சில நிமிடங்களிளே கிடைத்தது.
     உள்ளே சென்ற சித்து சில நிமிடங்களில் கையில் ஒரு பெரிய சூட்கேஸை தூக்கிக் கொண்டு வர, என்னடா இது என பார்த்தனர் பாதி பேர். உண்மை தெரிந்த மீதி பேரோ என்னவோ இமயமலை உச்சியில் நிற்பதைப்போல் குளுகுளுவென இருந்தனர்.
     அந்த சூட்கேசை எல்லோருக்கும் நடுவில் இருந்த டேபிலின் மீது வைத்தவன், முதலில் சென்று வீட்டின் கதவை சாத்திவிட்டு வந்தான்.
     ‘அப்படி என்ன பண்ண போறாரு’ சங்கர் ஆர்வமாய் பார்த்து வைத்தான்.
     மெல்ல அந்த பெட்டியை சித்து திறக்க, அதனுள் இருந்து பளபளவென நகைகள் ஜொலித்தன. கிட்டதட்ட ஒரு இருநூறு கிலோ தங்கம் இருக்கும் அந்த பெட்டிக்குள். அந்த நகைகளை பார்த்த மாத்திரத்தில் சங்கர் மட்டுமல்ல கார்மேகம் அலமேலு மாதவன் கூட கண்களை விரித்து ஆவென பார்த்திருந்தனர்.
     ஒருவருக்கும் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. குகையில் இருந்து எடுத்து வந்திருந்த புதையல் அனைத்தையும்தான் ஊர் மக்களுக்கு தந்து விட்டனரே, இந்த நகைகள் புதிதாக எங்கிருந்து வந்தது என்று குழம்பிப்போய் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள் அவர்கள்.
     “ரொம்ப குழம்பாதீங்க நானே என்ன நடந்ததுன்னு சொல்றேன்”
     முழித்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து சொன்ன சித்து அந்த நகைகளை பற்றி சொல்ல ஆரம்பித்தான்.
     “அந்த குகைல இருந்து எடுத்து வந்த நகை எல்லாத்தையும் ஊர் மக்களுக்கு தானமா தந்தரலாம்னு தான் நானும் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா எல்லாரும் இன்னைக்கு காலைல குளிச்சு கெளம்ப போனீங்கல, அப்பதான் அந்த கண்ணாத்தா கெழவி ஒரு விஷயத்தை சொன்னுச்சு.
     அந்த புதையல்ல இருந்தது ஊர் மக்களோட நகைமட்டும் இல்லையாம். அதுல நம்ம குடும்பத்து நகையும் இருந்ததாம். அந்த கெழவி சொன்னத கேட்டு நான் எப்படி அமைதியா இருக்கிறது. எப்படி இந்த ஊர் மக்களோட நகை அவங்களுக்கு சேரனுமோ அதேபோலதானே நம்மலோட நகை நமக்கு சேரனும். அதுபோக நம்ம குடும்பமும் இந்த ஊர்ல தானே இருக்கு, அப்ப அந்த நகைல ஒரு பங்கு நம்ம குடும்பத்துக்கு வரனும்ல. அதான் கொஞ்சம் நகை எடுத்து வச்சேன்”
     கொஞ்சம் என ஆழாக்கு பொட்டி நகையை காட்டிய சித்து பெருமையாக சொல்லி நிறுத்தினான்.
     “அட ஆமாம். மச்சான் தங்கச்சி இவ்ளோ கஷ்டப்பட்டு அந்த புதையல எடுத்த நமக்கு ஒரு பங்கு எடுத்து வைக்கிறதுதானே நியாயம்”
     சைடில் தன் மகனின் புறம் கோலை போட்டு நின்றார் இப்போது அனைவரின் கண்களுக்கும் தெரிகின்ற அரவிந்த். அப்பா பிள்ளைக்கு எதில் ஒற்றுமையோ இல்லையோ இதில் நல்ல ஒற்றுமை இருக்கும்போது என்ன செய்ய.
     முதலில் இதை அதிர்ந்து போய் பார்த்த கார்மேகத்தின் ஃபேமிலி கூட சிறிது நேரத்தில் ‘நியாயமான பேச்சு’ என சித்து அரவிந்த் பேசியதை ஆமோதித்தனர்.
     ஆனால் இவர்கள் யாரும் அதிர்ச்சியில் அணகோன்டாவை போல் வாயை பிளந்துவிட்ட சங்கரை கவனித்திருக்கவில்லை. அவர்கள் கண்முன் பளபளவென மின்னும் நகைகள் முன் அவன் தெரிந்தால்தான் அதிசயம்.
     ‘அடப்பாவிகளா உங்கள புகழ்ந்து பேசுன என் வாய் கூட இன்னும் மூடல. ஆனா நீங்க எல்லாம் அந்த திருட்டு தாண்டவராயன் வம்சம்னு நொடிக்கு ஒருதடவை நிரூபிக்கிறீங்கடா’ சங்கரின் மைண்ட் வாய்ஸ் இது.
     “சங்கர்” சங்கரை அழைத்தபடி அவனிடம் வந்த சித்து அவன் கையில் ஒரு பிடி நகையை‌ திணித்தான். சங்கருக்கு நடந்த மற்றதைவிட இதுதான் பெரிய ஆச்சரியமாய்‌ இருந்தது.
     “சங்கர் இந்த நகை எல்லா உங்களுக்குதான். எங்க கூட வந்து அந்த குகைக்குள்ள புதையல‌ எடுக்க நீங்களும் ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. அதனால உங்களுக்கும் சேர்த்துதான் ஒரு பங்கு எடுத்து வச்சேன்”
     மெரினா பீச்சில் காக்கா குருவி உக்கார வச்ச சிலைபோல் நின்றிருந்த சங்கரிடம் நகைகளை தந்து சித்து பேசி வைத்தான்.
     ‘இவன் ஹீரோவா இல்ல காமெடி பீசா, ஒன்னும் வெளங்க மாட்டேங்குதே’ சித்துவின் செயல்களில் பாவம் சங்கருக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். இத்தனை நாள் எழுதும் எனக்கே புரியாதபோது, பாவம் சங்கருக்கு எங்கிருந்து புரிய..
     சங்கரிடம் தந்த நகைகள் போக மீதமிருந்த நகைகளை தங்கள் குடும்பத்துக்குள்ளே பிரித்து எடுத்துக் கொண்டனர். இதில் ஹைலைட் என்னவென்றால் இதை எடுக்க அவர்கள் சிறிதுகூட கூச்சப்படவில்லை. அந்த முன்னோரின் பிளட் அல்லவா பணம் நகை என்று வரும்போது கூச்சமாது வெக்கமாவது என புகுந்து அள்ளிப்போட்டு சென்றுவிடுவது இவர்கள் குடும்பத்தின் பாலிசி அல்லவோ.
     எல்லாரிடமும் நகைகளை பகிர்ந்து முடித்து, சிலபல விஷயங்கள் பேசிவிட்டு ஓய்வெடுக்க தங்கள் அறைக்குள் சித்து நுழைந்தான்.
     “மகனே இவ்ளோ நகைய வச்சு என்னடா பண்ணப்போற”
     அந்த அறைக்குள் வந்ததும் வராததுமாக அவன்முன் வந்து குதித்து, அவனை குடைந்தார் சித்துவின் தந்தை அரவிந்த்‌. கிட்டதட்ட நூறு கிலோவுக்கு இருக்கும் நகைகளை தனக்கென எடுத்து வந்திருந்தான் சித்து. அதுவும் அந்த நகைகளை பார்த்த மாத்திரத்தில் அரவிந்தின் கண்கள் இரண்டும் ரத்தினம் போல் ஜொலிஜொலித்தது. அப்புறம் அதைக்குறித்து தெரிந்துக் கொள்ளவில்லை என்றால் அரவிந்தின் மூளை வெடித்து விடாதா‌.
     “அதெல்லாம் நீ எதுக்கு நைனா கேக்குற”
     சித்து பட்டும் படாமலும் பேச, அவன் தந்தை அவன் பதிலில் முறைத்தார். பதிலுக்கு இப்போது சித்துவும் அவரை பார்த்து முறைத்து நிற்க, சரியாக அந்தநேரம் உள்ளே வந்தாள் வீரா. அவள் வந்ததில் டக்கென தன் எக்ஸ்பிரஷனை மாற்றி, அவளை பார்த்து முப்பத்திரண்டு பல்லையும் காட்டி ஈயென சிரித்து வைத்தான் சித்து.
     “வீரா செல்லம் வாடி வாடி”
     வீராவின் கையை பிடித்து கட்டிலை நோக்கி பரபரவென இழுத்து போனான் சித்து…
     “செல்லம் இங்க பாரேன் எவ்ளோ நகை, எல்லாமே நமக்குதான். நாம பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கெடச்சிடுச்சுடி”
     சித்து ஆர்ப்பாட்டமாக பேச, வீராவுக்கும் மகிழ்ச்சியே.
     “ஏன் சித்து இவ்ளோ நகை நாம என்ன பண்ண போறோம்” அரவிந்த் கேட்ட கேள்வியை இப்போது வீராவும் கேட்டு நின்றாள். ‘இப்ப சொல்லுவல்ல சொல்லுடா மகனே’ மனதில் வெற்றி களிப்பை புரிந்து நின்றார் மனிதர்.
     “அதெல்லாம் நான் யோசிச்சு எல்லாம் பக்காவா பிளான் பண்ணிட்டேன்”
     அவளின் கேள்விக்கு ஒரு மார்கமாய் சிரித்து சித்து பதிலளிக்க, அப்படி என்ன பிளான் என மாமனாரும் மருமகளும் குழப்பமாய் ஒருவரை ஒருவர் பார்த்து அடுத்து அவன் என்னதான் சொல்ல போகிறான் என கேட்டனர்.
     “முதல்ல இதுல இருக்க பாதி நகை எல்லாம் உனக்குதான் வீரா செல்லம். அப்புறம் மீதி இருக்க நகைய வித்து, இந்த ஊருக்கு எதுக்கு வந்தனோ அந்த வேலைய பாக்கப்போறேன். அதான் எனக்குன்னு ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்க போறேன். இனி யாரோட ஹெல்ப்ப கேட்டு, நான் கெஞ்சி நிக்க வேண்டிய அவசியமே இல்லை”
     அரவிந்தை நேராக தாக்கி அவர் மகன் பேசினாலும் அதை தூசியாய் தட்டிவிட்ட அரவிந்த் “என்ன பிஸ்னஸ்டா பண்ண போற. எதாவது தெரியாத தொழில்ல இறங்கி எங்கையாவது எசக்குப்பிசகா மாட்டிக்காதடா மவனே. இப்பவும் சொல்லுறேன் நீ இந்த நகைய பூரா என்ற மருவட்ட தந்து புட்டு ஒழுங்கா ஒரு வேலைய தேடிக்கிற வழியப்பாரு”
     சித்து பிஸ்னஸ் என ஆரம்பிக்கவுமே நான்சிங்கில் வாயை விட்டார் அரவிந்த். இதை கேட்டு தன் தந்தையை வெறிகொண்டு முறைத்த சித்து
     “யோவ் நைனா என் வாய்ல வண்ண வண்ணமா வந்திரும் பாத்துக்க. இது ஒன்னும் நீ ரத்தம் வேர்வை சிந்தி சம்பாரிச்சு தந்த காசு இல்ல‌. அந்த மூளை கெட்ட அந்த முன்னோர் ஊரை அடிச்சு ஓலையில போட்டாலும், நமக்கு உருப்படியா எதையோ ஒன்னு பண்ணி வச்சிட்டு போயிறுக்கு. அதனால‌ நான் பிஸ்னஸ் ஆரம்பிக்கிறது ஆரம்பிக்கிறதுதான். என்னால‌ நீ சொல்றதை எல்லாம் கேக்க முடியாது”
     ஹைப்பிச்சில் அரவிந்த் பெத்த முத்து எகிறிகொண்டு நிற்க, அவனுக்கு சற்றும் சளைக்காது அவன் தந்தையும் அவனிடம் மல்லுக்கு நின்றார். வழமைபோல் சலித்துக்கொண்டு இருவரையும் கஷ்டப்பட்டு பிரித்துவிட்ட வீரா
     “அங்கிள் டென்ஷன் ஆகாதீங்க, சித்து என்னதான் சொல்ல வரார்னு கொஞ்சம் பொறுமையாதான் கேக்கலாமே”
     அது இதுவென பேசி அரவிந்தை சற்று சாந்தப்படுத்திய வீரா, சித்துவிடம் அவன் பிளான் என்னவென கேட்டாள். பெத்த தந்தை என வரும்போது வருத்தெடுக்கும் சித்து, தன் காதலியின் வார்த்தையில் பெட்டி பாம்பாய் அடிங்கித்தான் போனான்.
     “பாரு நைனா எவ்ளோ அழகா கேக்குறா என் செல்லாக்குட்டி, அவளை பாத்து கத்துக்க. வீரா நைனா நீங்க என் பிஸ்னஸ் பத்தி எந்த கவலையும்பட வேண்டாம். நான் என்ன பண்ணனும் எப்படி பண்ணனும்னு நான் எல்லாத்தையும் பிளான் பண்ணிட்டேன்”
     தெளிவாய்‌ பேசிய சித்து அவன் என்ன பிஸ்னஸ் செய்ய போகிறான் என சொன்னதை கேட்டு வீரா அரவிந்த் இருவருக்கும் ஆச்சரியமே. சித்துவின் படிப்பை வைத்து அவன் சாப்ட்வேர் கம்பெனி எதுவும் ஆரம்பிப்பான் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் சித்து அவன் ஆரம்பிப்பதாய் சொன்னது வேறு. சித்துவின் பிளான் இதுதான் சென்னையில் மெயினான ஒரு இடத்தில் நல்ல இடமாய் வாங்கி, அங்கே ஒரு பெரிய பன் மால் கட்டுவதுதான். ஏற்கனவே அங்கு போய் விலையெல்லாம் பார்த்து வேர்த்துப்போய் வந்திருந்த வீராவுக்கு இந்த தொழில் சரியாகவே பட்டது.
     ‘இவனுக்கு திடீர்னு எப்படி இவ்ளோ அறிவு வந்தது’ என மனதிற்குள் நினைத்தாலும் அரவிந்துக்கு அவர் மகனின் தேர்வு சரியாகத்தான்பட்டது.
     அதன்பின் சித்து அவன் எப்படி எல்லாம் பிஸ்னஸ் செய்யப்போகிறான் என ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல அரவிந்துக்கே ‘பராவாயில்லயே பைய நல்ல முடிவை தான் எடுத்திருக்கான். இவன் வாழ்க்கையில‌ எப்புடியும் உருப்பட்டுருவான்’ என மனதிற்குள் நிறைவாக உணர்ந்தார். இருந்தும் அதை எல்லாம் வெளியே காட்டிவிட்டால் அது அரவிந்த் இல்லையே. அப்புறம் அவர் கெத்து என்னாவது.
     எனவே வெளியே முகத்தை போனால் போகிறது என்பதைப்போல் வைத்து கொண்டு சித்துவின் பிளானுக்கு இறுதியில் சம்மதம் சொல்லிவிட்டார். தந்தையின் இந்த வார்த்தையை கேட்டு தான் எடுத்து முடிவு சரிதான் என்று நம்பிக்கைக்கு வந்தான் அந்த மகனும்..
-ரகசியம் தொடரும்