“விடிஞ்சே போச்சா!”
வீட்டின் கடிகாரம் சரியாக மணி ஆறு என அடித்ததில் கண்களை கசக்கி பார்த்து விடிந்து விட்டதை கண்டு அதிர்ந்து போனான் சித்தார்த். பின்னே இருக்காதா ஒரு ராத்திரி முழுவதும் அந்த குகைக்கு உள்ளே அல்லவா கழிந்திருக்கிறது.
இதுக்கு மேல எங்கிருந்து தூங்குவது. எனவே இவர்களின் அடுத்த டாஸ்க்கான, இந்த நகைகளை ஊர் மக்களிடம் சேர்ப்பிக்கும் பணியை பற்றி யோசித்தான் அரவிந்தின் மகன். அதன்படி இப்போது மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்த கார்மேகத்திடம் சென்று தங்கள் குடும்பத்தின் சாபத்தை குறித்து ஷார்ட்டாக சொல்லி, ஊர்மக்களை பொதுவான ஒரு இடத்திற்கு வருமாறு சொல்லிவிட்டான்.
இதுவரை நடந்ததை எல்லாம் அமைதியாக கவனித்து கொண்டிருந்த பக்கத்து ஊர் தலைவர் கேசவன் தற்போது அப்படியே யார் கண்ணிலும் படாமல் வெளியேற நினைக்க, எங்கே அவர் வாசலை அடையும் முன் அவரைத்தான் நம் அரவிந்த் பார்த்துவிட்டாரே.
“ஏய் நில்லுயா அதுக்குள்ள எங்க நீ வெளிய போற. இவ்ளோ நேரம் எங்க கூடவே இருந்தியே நீ யாருன்னு சொல்லிட்டு போயா”
அரவிந்தின் சத்தத்தில் அனைவரும் வாசலை திரும்பி பார்க்க, அங்கே சட்டி பானையை திருட வந்த திருடனை போல் கேசவன் முழுத்தபடி நின்றிருந்தார்.
“ஆமா நானும் கேக்கனும்னு நினைச்சேன், நீங்க யாருங்க எப்படி அங்க வந்து மாட்டுனீங்க”
இப்போது சித்துவும் கேட்டுவிட்டான். அவனுக்கு தான் அந்த சந்தேகம் குகையினுள் இருக்கும் போதிலிருந்தே இருக்கிறதே.
‘நல்லா மாட்டிடோம் போலையே’ கேசவன் மனதிற்குள் பயத்துடன் நினைத்த நேரம்
“நீ பக்கத்து ஊரு பிரசிடெண்டு கேசவன் தானே. ஆமா நீ எப்படியா இங்க வந்து மாட்டுன”
கார்மேகம் அந்த ஆளின் அடையாளத்தை கேப்சர் செய்துவிட இப்போது கேசவனுக்கு முள்ளின் மேல் நிற்பதைப்போல் இருந்தது.
முழுதாய் நனைந்தாகிவிட்டாச்சு இனி முக்காடு எதற்கு என்று உணர்ந்த கேசவன், அவர் அந்தப் புதையல் மேப்பை எடுக்க இந்த வீட்டிற்குள் வந்ததிலிருந்து பேயிடம் அடிவாங்கி குகைக்குள் வந்த வரை வரிசையாக சொல்லி முடித்தார்.
“ஓஹோ அப்ப தவணை முறைல எங்க வீட்டுக்கு திருட ஆளுங்கள அனுப்பி விட்டதும் நீதானா”
கார்மேகம் முகத்தை விரைத்துக் கொண்டு கேட்டதற்கு ஆம் என்று தலையை மட்டும் ஆட்டி வைத்த கேசவன்
“இங்க பாருங்க இந்த அரவிந்தோட சின்ன வயசு தோஸ்து நானு. ஒருதடவை அவனை இங்க பாக்க வந்தப்பதான் இவங்க தாத்தா இந்த புதையல பத்தி சொல்றத ஒட்டு கேட்டுட்டேன். நானும் ரொம்ப வருஷமா அந்த புதையல் மேப்ப எடுக்க ஆள ஏவி விட்டு பாத்தேன். ஆனா ஒருபய கூட உசுரோட திரும்பி வந்தது இல்ல.
அதான் இந்த தடவை என்ன ஆனாலும் அந்த புதையல எடுக்கனும்னு நானே வந்தேன். ஆனா இந்த புதையல நெஜமாலுமே ஒரு ஆவி காவவகாத்துட்டு இருந்திருக்குன்னு என இப்பதான் தெரியுது”
கண்ணாத்தா பேய்தான் அந்த புதையலை காவல் காத்தது என தவறாக நினைத்து உளறிய கேசவன்
“எனக்கு புதையலும் வேணாம் ஒன்னும் வேணாம், வாங்குன அடில உடம்பு பூரா புண்ணா கெடக்கு. நான் அப்புடியே வீட்டப்பாத்து போறேன் ஆளவிடுங்க சாமிகளா. நீங்களும் சேரி உங்க புதையலும் சேரி”
ஒரு இரவு வாங்கிய தர்ம அடியில் அந்த குடும்பத்துக்கே பெரிய கும்புடாய் போட்ட கேசவன் தனக்கு இருக்க சொத்தே போதும் என அவர் ஊரை பார்த்து நடையை கட்டினார். அவர் அந்த புதையல் மேப்பை குட்டிக்கரணம் அடித்து எடுத்திருந்தாலும் அந்த மூளை செத்த முன்னோர் வைத்திருந்த புதையலை எடுக்க குகையின் கதவைக்கூட திறக்க முடிந்திருக்காது என்பது வேறு கதை. பாவம் அது எங்கிருந்து நம் கேசவனுக்கு தெரிய போகிறது.
கதையின் முதலில் ஹெவி பட்ஜெட் வில்லனாக களமிறங்கிய நம் கேசவன் இப்போது சல்லி சல்லியாக நொறுங்கிப்போன கண்ணாடி டம்பளராக வெளியேறினார்.
‘நான்லா எவ்ளோ பெரிய வில்லன் தெரியுமா’ வானத்தை பார்த்து புலம்பி சென்ற கேசவனை,
‘புதையலை எடுக்க முடியாத அதிர்ச்சியில் மூளை வளர்ச்சி எதுவும் குன்றிபோய் பைத்தியம் ஆகிட்டாரோ’ என அரவிந்தின் குடும்பத்தார் அவர் தெருவை தாண்டும்வரை பாவமாய் பார்த்து வைத்தனர்.
“சரி அந்த ஆள விடுங்க, இப்ப நாம பண்ண வேண்டிய முக்கியமான வேலைய பாப்போம். எல்லாரும் இப்ப போய் குளிச்சு முடிச்சு நல்லா ஜமீன்தார் வம்சம்னு சொல்றாப்ல ஜகஜோதியா உடுப்ப மாத்திப்புட்டு வாங்க. நான் நம்ம ஊரு குரூப்ல காலைல பத்து மணிக்கு அரசமரத்தடிக்கு எல்லாரையும் வரச்சொல்லி மெசேஜ தட்டிவிட்டுட்டேன். அதுக்கு முன்ன நாம அங்க இருக்கனும் புரிஞ்சிதுள்ள”
எல்லோருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு கார்மேகம் அவர் அறைக்கு சென்றுவிட்டார். அவர் மயங்கி கிடந்ததில் இந்த ஜமீன்தார் வம்சத்தின் முழு எஸ்டிடியை பாவம் அறியாது போனார் மனிதர்.
“ஆனாலும் பேய பாத்து பயத்துல மயங்கி உழுந்த உன்ற அப்பாருக்கு இன்னும் நாம அவரை பழையபடியே பாப்போம்முன்னுட்டு எம்புட்டு நம்பிக்கை பாத்தியாடா”
முதல்நாள் இரவு நடந்தவற்றை வைத்து சங்கர் கார்மேகத்தை அவர் சென்ற பின்னர் வார,
“அந்த மனுஷனே நாம எல்லாரையும் ஆளவச்சு தூக்கிட்டு போனத மறந்து வேற பேசிட்டு போறாரு, நீ வேற ஏன்டா. பேசாம வாய மூடிட்டு வா, அந்தாளுக்கு கேட்டு எதுவும் தொலைக்க போவுது”
டைமிங்கில் அவனை ஆஃப் செய்து அவன் அறைக்கு இழுத்துக் கொண்டு சென்றுவிட்டான் மாதவன். என்னதான் தங்கள் குடும்பத்தின் திருட்டு வேலை சூனிய வேலை அனைத்தும் இவர்களுக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்களுக்கு அது தெரியாதே. எனவே ஜமீன்தார் குடும்பம் என்ற கெத்தை மெயின்டைன் பண்ண பெயருக்கு ஏற்றார் போல் மொத்த குடும்பமும் அலப்பறையாக கிளம்பிவந்து நின்றது. எல்லாம் அந்த குடும்பத்தில் ஓடும் பிளட்டின் இபெக்ட், ஒரே போல்தான் ஜிகுஜிகுவென கிளம்பி வந்திருந்தனர் அனைவரும்.
நகைகள் இருந்த நாலு பெட்டிகளையும் அள்ளிப்போட்டு கொண்டு ஒரு காரை பிடித்து சும்மா கெத்தாக வந்து இறங்கியது அரவிந்தின் குடும்பம். அங்கே ஊர் மொத்தமும் அரசமரத்தடியில் அட்டன்சை போட்டு நின்றிருக்க, நாலு பெட்டிகளை தூக்க முடியாமல் தூக்கி வரும் தங்கள் பிரசிடென்ட் குடும்பத்தை கண்டு குழம்பி தான் போனார்கள் அந்த மக்கள்.
“என்னவா இருக்கும்?” அவர்கள் தங்களுக்குள் பேசிய நேரம் அனைவருக்கும் முன்னால் வந்து நின்றனர் கார்மேகமும் சித்துவும். அவர்களை பார்த்து அப்படியே எல்லோரும் ஆஃப் ஆகிவிட கார்மேகம் தன் உரையை தொடங்கினார்.
“நம்ம ஊர் மக்கள் எல்லாருக்கும் என்னோட வணக்கம். எதுக்குடா ஊரை பூரா இங்கன திரட்டி கொண்டாந்திருக்கேன்னு உங்க எல்லாருக்கும் யோசனை இருக்கும். அதுக்கு எல்லாத்துக்கும் இப்ப பதில் சொல்லதான் போறேன். ஆனா அதுக்கு முன்ன இன்னொரு முக்கியமான விஷயத்தை பத்தி நான் பேசியே ஆவனும்.
கொஞ்ச நாளாவே நம்ம ஊரு கோடில இருக்க அந்த மலைக்குள்ள பொதையலு இருக்குன்னு நெறைய வதந்தி பரவிக்கிட்டு இருந்தது. என்னுட்டேயே வந்து நம்ம ஊரு ஆளுங்க உங்கள்ள நெறைய பேரு இதபத்தி நேராவே கேட்டீங்க. அதைபத்தியும் சொல்லத்தான் இந்த கூட்டம்”
கார்மேகம் புதையல் பற்றிய டாப்பிக்கை எடுத்தவுடன் கூட்டத்தில் ஏகப்பட்ட சலசலப்பு.
“எல்லாரும் அமைதியா இருங்க, அப்புறம் நான் சொல்றது எப்புடி கேக்கும்”
கூட்டத்தை ஒரு அதட்டு அதட்டி அடக்கிய கார்மேகம் “இப்ப மீதி விஷயத்தை என் மச்சான் அரவிந்தோட மகன் சித்தார்த்து சொல்லுவாரு” என சித்துவை காட்டி அமைதியானார்.
“நான் சித்தார்த் அரவிந்தோட மகன் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். என் மாமா சொன்ன மாதிரி இந்த புதையலை பத்திதான் நான் பேசப்போறேன். இங்க வதந்தி பரவுன மாதிரி அந்த மலைக்குள்ள எங்க முன்னோர்கள் வச்ச புதையல் இருந்தது உண்மைதான். அதை நேத்து தான் நாங்க அந்த மலைக்குள்ள இருந்த குகைல இருந்து எடுத்தோம்”
சித்து புதையலை எடுத்துவிட்டோம் என சொன்னதுதான் தாமதம் மக்களின் சலசலப்பு இன்னும் அதிகமானது. சித்து பேச வருவதை கூட கேட்காமல் அவர்கள் தங்களுக்குள் பேச, கார்மேகம் மீண்டும் கத்தி அவர்களை அடக்கினார்.
அதன்பின்னர் என்னவோ சித்து பெரிய பாரி வள்ளல் கர்ணன் வழிதோன்றலை போல் அந்த புதையலை மக்களிடம் பகிர்ந்து அளிக்கப்போவதாக கூற, மக்கள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது.
“அதுதான் நான் சொல்ல வந்தது. இந்த புதையல் வேனா எங்க குடும்பத்தோடதா இருக்கலாம், ஆனா இவ்வளவு வருஷமா அந்த மலைக்குள்ள சும்மாதான் தூங்கிட்டு இருந்துச்சு. அதனால நம்ம ஊர் மக்களோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு இதை எல்லாருக்கும் சமமா பகிர்ந்து குடுக்கலாம்னு எங்க குடும்பத்துல எல்லாரும் முடிவெடுத்திருக்கோம். என்ன மக்களே எல்லாருக்கும் சந்தோஷம் தானே”
இவ்வாறு சொல்லி சித்து நிறுத்த அந்த மக்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. இப்படி திடீரென அதிஷ்டம் அடிக்கும் என அவர்கள் தங்கள் வாழ்நாளில் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.
சித்து சொன்னது போலவே மக்களை வரிசையில் நிறுத்தி, வீராவோடு சேர்ந்து ஒவ்வொருத்தருக்கும் கை நிறைய நிறைய நகைகளை அள்ளி கொடுத்தான்.
“தம்பி இந்த பொதையலு வேற யாரு கைலயாச்சும் கெடச்சிருந்தா இந்நேரம் எல்லாத்தையும் பதுக்கி, அவன் குடும்பம் மட்டும் நல்லா இருக்கனும்னு பாத்திருப்பான். அதான் அந்த ஆண்டவன் உங்க கைல கெடக்க வச்சிருக்கான். உங்க சொந்த பரம்பரை சொத்த ஊருக்கே அள்ளி தாரீயளே, ஜமீன்தார் வம்சம்னு பேருல மட்டும் இல்லாம செயல்லையும் செஞ்சு காமிச்சுட்டீக தம்பி”
நகையை வாங்கிய பூரிப்பில் வந்த முதல் நபரே சித்துவை புகழ, பாவம் அவருக்கு தெரியவில்லை இவர்கள் அள்ளி கொடுக்கும் நகையில் அந்த நபரின் பரம்பரை நகைக்கூட இருக்கலாமென.
அதோடு இந்த சாபம் என்ற ஒரு விஷயம் இடையில் வராது போயிந்தால் இந்நேரம் இந்த புதையல் அனைத்தையும் ஒன் மேன் ஆர்மியாக சித்து அள்ளிக் கொண்டு போயிருப்பான். பாவம் அந்த மனிதர் வரலாறு தெரியாமல் பேசி சென்றார்.
“தம்பி என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நகை விக்கிற காசுக்கு எப்புடி வாங்கன்னு மலச்சு போயி கெடந்தேன்பா. சாமி மாதிரி வந்து இப்புடி அள்ளி தாரியே, பொண்டாட்டி புள்ளன்னு நல்லா இருப்ப கண்ணு. மனசார சொல்லுறேன் தம்பி உங்க குடும்பம் மட்டும் இல்ல உங்க பரம்பரையே நல்லா சுகபோவமா எந்த நோய் நொடி இல்லாம வாழ்வீங்க தம்பி”
அடுத்து வந்த ஒரு பெண்மணி கண்ணீர் மல்க நன்றி சொல்லி சென்றதில் சித்துவுக்கே மனம் ஒருமாதிரி ஆனது.
இப்படி ஊர் உலகம் அவர்களின் வாய் வலிக்க வலிக்க வாழ்த்தி செல்ல, நகைகளை அள்ளி தந்தே அரவிந்தின் குடும்பம் டயேர்ட் ஆகி நின்றது. நாலு பெட்டிகளையும் கொடுத்து முடித்தப்பின்
“நம்ம ஊருல புதையல் கெடச்சு ஊரே சந்தோஷமா இருக்கன்னால, நம்ம மாரியாத்தாலுக்கு ஊரே சேந்து இந்த வாரம் கெடாய வெட்டி விருந்து போடலாம்னு நான் நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்லுதீய”
பொதுவாக மக்களை பார்த்து கேட்டார் கார்மேகம். பின்னே புதையல் கிடைத்தது கொண்டாட வேண்டிய விஷயம் அல்லவா. உடனே மக்களும் சரியென ஒத்துக் கொண்டனர், ஆனால் இந்த விருந்தை தாங்களே முன்வந்து செய்வோம் என அன்பு கட்டளை வேறு போட்டு சென்றனர்.
எல்லா புதையலையும் கொடுத்துவிட்டு வீட்டை வந்து அக்கடா என குடும்பம் மொத்தமும் உட்காரும் போது
“என் கண்ணுங்களா, இந்த கெழவி போவ வேண்டிய நேரம் வந்திருச்சு போலையா. எதுவோ ஒரு சக்தி என்னைய இழுக்குற மாதிரியே இருக்கு. எனக்கு தெரிஞ்சு நம்ம பரம்பரை மேல இருந்த சாபம் போயிட்டுன்னு என் மனசு சொல்லுது. சித்து வீரா என் செல்லாக்குட்டிகளா, கல்யாணம் பண்ணி புள்ள குட்டின்னு நல்லா இருக்கனுயா”
கண்ணாத்தா பேய் தான் கிளம்ப போவதை எல்லாருக்கும் அறிவித்து சித்துவையும் வீராவையும் ஆசிர்வதித்தது. அடுத்து மாதவன் சங்கர் இருவரையும் பார்த்து
“என் செல்லாக்குட்டிகளா, உங்களதேன் நான் ரொம்ப பாடாபடுத்திட்டேன். மன்னிச்சிக்கிடுங்க. எல்லாரும் நல்லா இருங்கையா, அப்ப நான் வரட்டா”
ஊருக்கு கிளம்பி செல்வதைப்போல் அனைவருக்கும் கிழவி டாட்டா சொல்லும் நேரம் அப்படியே அதன் உருவம் காற்றில் கரைந்திருந்தது. என்ன நடந்தது என எல்லாரும் யோசிக்கும் முன்னே மின்னல் வேகத்தில் கிழவி கிளம்பியிருந்தது.
“என்னடா கெழவி பொசுக்குன்னு கெளம்பிருச்சு” கிழவி சென்ற அதிர்ச்சி விலகாமல் சங்கர் கேட்க
“அதான்டா எனக்கு ஒன்னும் புரியலை” என்றான் மாதவனும்.
இத்தனை நாட்கள் இரவு பகலாக தங்களை வைத்து செய்த பேய் இப்போது டாட்டா பாய்பாய் சொல்லி கிளம்பிவிட்டதே அந்த அதிர்ச்சி தான் இருவருக்கும். இந்த கண்ணாத்தா பேய் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு புரியாத புதிர்தான் போல்!
-ரகசியம் தொடரும்