“என்னவே எல்லா பயலும் முழிச்சுக்கிட்டு நிக்குதீய. எதாவது யோசனை பண்ணி இந்த இடத்தை தாண்டுங்கலே. அப்பதேன் அந்த பொதையல எடுக்க முடியும்”
எல்லாரும் வெளிரிபோய் நிற்பதை கண்டு கண்ணாத்தா இடையில் வர “ஏய் கெழவி! இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ என்ன பேசிக்கிட்டு இருக்க. இங்க பூமியே பொழக்குது என்ன பண்றதுன்னு எல்லாரும் யோசிச்சுட்டு இருக்காங்கள. உன் திருவாய மூடிட்டு செத்த நில்லு” அரவிந்த் கிழவியிடம் எகிறினார்.
“என்னவே என்கிட்ட எகிறிகிட்டு வாரவேன். எவ்வளவுதான் வெளையாட்டா இருந்தாலும், எப்பவும் காரியத்துல கண்ணா இருப்பாடா இந்த கண்ணாத்தா” கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டிவிட்ட மிதப்பில் கண்ணாத்தாவின் வாய் மீண்டிருந்தது.
“கெழவி என்ன மறுபடியும் உன் வாய் நீளுது. இவ்ளோ நேரம் வரிசையா அடிவாங்குனது எல்லா மறந்து போச்சா. அதோட பேர பாரு பேர கண்ணாத்தா காளியாத்தான்னு. இந்த அரவிந்தோட பாட்டி கொஞ்சமாவது மார்டனா இருக்க வேண்டாம்”
அங்கு வீரா எப்படி இந்த லெவலை கடப்பது என தீவிர யேசனையில் இருக்க, இங்கு பேயும் பேயும் கேவலமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தது.
அதில் கடுப்பான சித்து “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். இங்க இருந்து போக என்ன வழின்னு நாங்க மண்டைய போட்டு பிச்சிக்கிட்டு இருந்தா, உங்க ரெண்டு பேருக்கும் சண்டை கேக்குதா” அவன் கத்தியப்பின்னே அமைதியானது இரண்டு பேய்களும்.
அடுத்த லெவலை எப்படி தாண்டுவது என மீண்டும் சித்து யோசனைக்கு செல்ல, சாரி சாரி யோசிப்பது போல் நடிக்க சென்ற நேரம் வீரா மாதவனை அழைத்தாள்.
“மாதவன் இந்த லெவல நாம எல்லாரு தாண்டிப் போக நீங்கதான் மொதல் ஸ்டெப் எடுக்கப்போறீங்க. ஏன்னா இங்க இருக்கிறதுலையே கொஞ்சம் பிட்டான ஆளா நீங்கதான் தெரியறீங்க. சோ இத நீங்கதான் செய்யப்போறீங்க, அதனால நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோங்க”
வீரா பெரிய கடப்பாரையையே மாதவனின் நெஞ்சில் இறக்கினாள். அந்த ஷாக்கில் “என்னாது நானா! நான் எப்படிங்க!” வாயை பிளந்தான் மாதவன். அவன் வாயை பிளந்ததில் விட்டால் அவன் வயிற்றில் இருக்கும் குடலே தெரியும் போல.
“ஆமாங்க நீங்க ஒன்னும் பயப்படாதீங்க, ஏன்னா உங்களோட சேத்து எங்க எல்லாரையும் காப்பாத்த போறது நீங்கதான். இப்ப நான் சொல்றத மட்டும் கேட்டு அதை கவனமா செஞ்சா மட்டும் போதும். நீங்க பெருசா ஒன்னும் செய்ய வேணாம், இப்ப கொஞ்ச முன்னாடி செஞ்சீங்கல்ல இந்த கடப்பாரைய அந்த ஸ்கொயர் பாக்ஸ்ல வச்சு எடுத்தது. அதேதான் மறுபடியும் செய்ய போறீங்க.
இந்த இடம் சின்னதா இருக்கறதால, ஒரு லைன்க்கு மூனு பாக்ஸ் போட்டிருக்காங்க. இப்ப நீங்க முன்னாடி கடப்பாரை வச்சது இந்த ரைட் கார்னர்ல இருக்க பாக்ஸ்ல அது பொழந்துக்கிச்சு. அடுத்து இன்னும் ரெண்டு பாக்ஸ் இருக்கு, இதுலையும் நீங்க கடப்பாரையை வச்சு அழுத்துங்க. எந்த பாக்ஸ் தெறக்காம இருக்கோ அதுதான் நாம போகவேண்டிய கட்டம் புரிஞ்சுதா”
பெரிய பாடமாக வீரா மாதவனுக்கு எடுத்து முடிக்க, பயத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது மாதவனுக்கு.
“ஏங்க வீரா நான் எப்புடிங்க?”
விட்டால் அழுதுறுவேன் என்பதைப் போல் கேட்டான் மாதவன். பயத்தில் பீதியாகி அவன் கால்கள் இரண்டும் வேறு நேரம் காலம் தெரியாமல் சால்சா ஆடிக் கொண்டிருக்க, முகம் முழுவதும் டன் கணக்கில் வியர்வை வழிந்தோடியது.
“ப்ச் நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. இப்ப நான் சொன்ன மாதிரி நீங்க ஒவ்வொரு ஸ்கொயர் பாக்ஸ்லையும் இந்த கடப்பாரைய வச்சு மெது மெதுவா முன்னாடி போங்க, நாங்க பின்னாடியே வந்திடுறோம். சோ சிம்பில்”
சாதாரணமாக வீரா சொல்லி முடித்து மாதவனை பிடித்து முன்னே தள்ள, இப்போது மாதவனின் முறையானது உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களையும் அழைக்க. பேய்க்கு வாக்கபட்டதில் இருந்து மாதவன் இதுக்கு மேலையே கஷ்டங்களை பார்த்த குருட்டு தைரியத்தில் அவனும் ஒவ்வொரு ஸ்கொயராக கடப்பாரையை வைக்க ஆரம்பித்தான்.
பூமி பிளந்த கட்டங்களை விடுத்து பிளக்காத கட்டத்திற்கு உயிரை பிடித்துக் கொண்டு தாவி தாவி மாதவன் செல்ல, மற்றவர்கள் அவனை பின்தொடர்ந்து தாவ ஆரம்பித்தனர். இதில் வீரா சற்று உஷாராக கீழே இருந்த ஒரு கல்லை எடுத்து அவர்கள் செல்லும் கட்டங்களை குறித்து கொண்டே முன்னேறினாள்.
இவர்கள் முன்னேறி சென்ற பாதையில் ஒரு வளைவு வர, ஒருவழியாக புதுவித ரணகளத்துடன் இவர்கள் பயணம் மூனாவது லெவலை தாண்டும் நேரம் இவர்கள் முன் ஒரு பெரிய அறை வந்து நின்றது.
இதுவரை சிறிய பாதையாக சென்ற அந்த குகையின் முடிவு இப்போது ஒரு வீட்டின் அளவு உயரத்துக்கு ஒரு அறையாக குடைந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பெரிய அறையில் ஆங்காங்கு பலவித பெரிய சிற்பங்கள், மெத்தை போன்று உட்கார மேடான இடம், அதோடு பல பெட்டிகள் ஆங்காங்கே இருந்தது.
“ஆத்தாடி என்னா இம்மா பெருசா இருக்கு, ஐய்யோ இம்புட்டு பொட்டி இருக்கு எல்லாத்துலையும் தங்கம் வைரமுனுட்டு எல்லா இருக்கும் போலையே”
எல்லாத்தையும் பார்த்த சந்தோஷத்தில் கண்கள் இரண்டும் கோலிகுண்டாய் விரிய கண்மண் தெரியாது கண்ணாத்தா கிழவி ஆர்ப்பரித்தது. வேகவேகமாய் பறந்து சென்று அந்த பொருட்களை எல்லாம் தொட நினைத்த கண்ணாத்தாவுக்கு பெரிய பல்பாய் போனது.
பாவம் ஆவியாக ஊரை சுற்றும் நம் கண்ணாத்தாவால் அந்த பொருட்களை தொட முடியாதென்பது அந்த நேரம் கிழவி பேய்க்கு வசதியாய் மறந்து போனது. கிழவி செய்வதை கேவலமாய் பார்த்து வைத்த சித்து, அது எங்கேடோ கெட்டு ஒழியட்டும் என மற்றவர்களை பார்த்து திரும்பினான்.
“வீரா அந்த திருட்டு முன்னோர் இந்த இடத்தை கெஸ்ட் ஹவுஸா யூஸ் பண்ணி இருப்பானோ. இங்க பாரு பெட்டு, பானை என்னென்னமோ இருக்கே”
அங்கே இருந்தவற்றை காட்டி சித்து கூற ‘ஆம்’ என்று தலை அசைத்த வீரா “இப்போ அது நமக்கு முக்கியம் இல்ல சித்து அந்த திருட்டு நகையெல்லாம் எங்க இருக்குன்னு மொதல்ல நாம கண்டுப்பிடிக்கனும். அதோட இந்த இடத்துலையும் அந்த ஆளு எதாவது டாஸ்க் வச்சிருக்காறான்னு மொதல்ல நாம கண்டுப்பிடிக்கனும். மறுபடியும் அசால்டா நாம முன்ன போகக்கூடாது. எல்லாம் நம்ம சேப்டிக்குதான்” என்றாள்.
இதுவரை பட்டதெல்லாம் சித்துவின் கண்முன்னே வர, அவனுக்கும் வீரா சொல்வது சரிதான் என புரிந்தது. எனவே இவர்கள் முன்னே செல்லும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பத்திரமாகவே வைத்தனர்.
அவர்கள் பயந்ததைப்போல் இங்கு எந்தவித டுவிஸ்டும் இல்லை. ஒரு பெட்டிய நெருங்கியதும் தான் நால்வருக்கும் ஹப்பாடா என்றானது.
வந்த வேலை நல்லபடியாக முடியப் போகிறது என்ற மகிழ்வில் மூஞ்சியில் பெரிய பல்பை எறியவிட்டு தன்முன் இருந்த ஒரு பெட்டியை சித்து திறக்க, ஐய்யோ பாவம் அந்த பல்ப் அப்படியே புயூஸ் போனது.
ஏனென்றால் அவன் ஆர்வமாக திறந்த அந்த பெட்டியில் தங்கம் வைரம் என்ன ஒரு கட்டி செங்கல் கூட இல்லை எனும் போது பல்ப் புயூஸ் போகத்தானே செய்யும்.
“என்னடி வீரா, இதுல ஒன்னுமே இல்ல” கரண்டு கம்பியில் மாட்டிய கங்காருவைப் போல் வெட்டி வெட்டி இழுத்து பேசினான் நம் அரவிந்த் பெத்த முத்து. இதை கண்டு அங்கிருந்த மற்ற பெட்டிகளையும் திறந்து பார்த்தான் மாதவன். அந்த பெட்டிகளிலும் ஒன்றும் இல்லாதிருக்க நெஞ்சு லேசாக வலி எடுத்தது மாதவனுகே.
“ஐயையோ! என்னங்க இது எந்த பொட்டியிலையும் ஒன்னுமே இல்ல. ஒருவேளை நமக்கு முன்னாடி எவனாவது வந்து இங்க இருந்ததை எல்லாம் ஆட்டையப் போட்டுட்டானோ” இது மாதவன்
“அப்போ நாம இவ்ளோ நாள் பட்ட கஷ்டமெல்லாம் இந்த இத்துப்போன வெத்துப் பெட்டிக்குதானா” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சங்கரின் கண்களில் கூட கண்ணீர் ஊற்றியது. பின்னே அவனும் கிழவியிடம் பட்ட வேதனை கொஞ்சமா நஞ்சமா.
“ஐயோ போச்சே போச்சே! இத்தினி வருஷம் நான் அடஞ்சு கெடந்தது எல்லாம் இங்க வந்து இந்த வெத்து பொட்டிய பாக்கவா. கட்டையில போறவன் எவனோ எல்லா பொதையலையும் ஆட்டையப் போட்டுட்டானே” ஒப்பாரி வைத்தது கிழவி
“ஏய் கெழவி ஒப்பாரி வச்சு தப்பிச்சுக்கலாம்னு பாக்குறியா. இங்க நடக்குற எல்லாத்துக்கும் முக்கிய காரணமே நீதான். ஒழுங்கா இங்க என்ன நடக்குதுன்னு இப்ப சொல்லப்போறியா இல்ல நான் உன்ன கொல்லட்டா” வந்த கோவத்தில் செத்த கிழவியை மறுபடியும் சாகடிப்பேன் என மூளை டேமேஜாகி பேசி வைத்தார் அரவிந்த்.
இப்படி தன்னை சுற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசி பிரச்சினையை கிளப்ப, இவ்வளவு நேரம் பொறுத்து பொறுத்து பார்த்த வீரா பொறுமையை இழந்து “எல்லாரும் நிறுத்துங்க” என கத்தி விட்டாள்.
வீரா கத்திய பின்னர் அந்த இடம் முழுவதும் பேரமைதியை தத்தெடுத்தது. சித்து எதுவோ பேச வாய் எடுக்க
“மூச் நான் சொல்ற வரை எதுவும் பேசாதீங்க” வாயின் மீது விரலை வைத்து சித்துவை வாயை மூட வைத்த வீரா பேச ஆரம்பித்தாள்.
“எல்லாரும் நான் இப்ப சொல்ல போறதை கவனமா கேளுங்க. முக்கியமா நான் பேசும்போது இடையில யாரும் எதுவும் பேசக்கூடாது” எல்லோருக்கும் ஒரு வார்னிங்கை தந்துவிட்டே பேச ஆரம்பித்தாள் வீரா.
“மொதல்ல இந்த பொதையல மறைச்சு வச்சிருக்க அந்த ஆளு சரியான கிருக்கனா இருப்பான்னு நீங்களே சொன்னீங்கள்ள சித்து. நாம இங்க வந்ததுல இருந்து என்னென்ன நடந்துச்சுன்னு நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க. அவ்ளோ தூரம் டாஸ்க்க வச்சு, சூன்யம் எல்லா வச்சிருந்திருக்கு அந்த ஆளு. இதை தாண்டி ஒருத்தரால உள்ள வந்திருக்க முடியுமா என்ன”
வீரா சொன்னதை கேட்டு வந்ததில் இருந்து நடந்தவற்றை எல்லாம் ரீவைண்ட் செய்து பார்த்தான் சித்து. அப்போதுதான் இவ்வளவு நேரம் மூலையில் முடங்கி கிடந்த அவன் மூளையும் சற்று வேலை செய்தது. வீரா யோசிக்கும் வழியில் சித்துவும் இப்போது யோசிக்க துவங்கினான்.
“கரெக்ட் வீரா, அந்த ஆளு நாம உள்ள எண்டர் ஆகுறதுக்கே பிங்கர் பிரிண்ட் வைக்கிற மாதிரி என்னோட பாடில இருந்து ஒரு பாட்டில் ரத்தத்தை வச்சு கதவை அன்லாக் பண்ண வச்சிது.
அதோட பர்ஸ்ட் லெவல் நாம கிராஸ் செஞ்சதுக்கு காரணம் நான் அந்த ஆளோட ரத்த வாரிசுன்றதாலதான். அதை தாண்டி வந்த அப்புறம் இன்னும் ரெண்டு டேஜ்சரான லெவல வேற வச்சிருக்காரு அந்த ஆளு”
சித்து முதலில் இருந்து நடந்த விஷயங்களை கோர்வையாக சொல்லி முடித்து வீராவை பார்க்க, வீரா தொடர்ந்தாள்.
“அதேதான் சித்து. இவ்ளோ லெவலையும் ஒரு ஆள் தாண்டி வரணும்னா, உங்க பரம்பரைய சேர்ந்த ஒரு ஆளால மட்டும்தான் முடியும். அப்புடி யாராவது புதையல எடுத்திருந்தா இன்னேரம் உங்க பேமிலிக்கு கண்டிப்பா அப்டேட் பண்ணியிருப்பாங்க. சோ அந்த புதையல் எங்கையும் போயிருக்க வாய்ப்பே இல்ல. இந்த இடத்துக்குள்ளதான் எங்கையோ இருக்கு”
தான் யோசித்த விஷயங்களை வீரா பாயிண்ட் பாயிண்டாக அவிழ்த்து விட்டபிறகே எல்லார் முகத்திலும் சற்று தெளிவு வந்தது. அதன்பின்னர் அனைவரும் பேசி ஆளுக்கு ஒரு மூலையை பிடித்து தேட தொடங்கினர். ஆனால் இவர்கள் தேடிய வரை ஒன்றும் கிடைக்கவில்லை. தேடி தேடி கலைத்து போன நால்வரும் மீண்டும் அந்த அறையின் மையத்துக்கே வந்து நின்றனர்.
“என்ன வீராம்மா இது ஒரு குளூவும் கிடைக்கல. இந்த படங்கள்ல வருமே பொம்மை கழுத்து கை காலுன்னு எதையாவது புடிச்சு திருப்புனா சீலிங்கல இருந்து புதையல் கொட்டும்ல. அதுமாதிரி அந்த கேன கிறுக்கன் எதுனா செட் பண்ணி வச்சிட்டு போயிருப்பானோ”
எதுவும் கிடைக்காத கடுப்பில் கேட்டு வைத்தான் சித்து. எதற்கும் அதையும் டிரை பண்ணி பார்க்கலாமே என அதைக்கூட செய்து பார்த்துவிட்டான் பையன். ம்ஹூம் அந்த பொம்மையின் விரலைக்கூட அசைக்க முடியவில்லை நம் சித்துவால்.
“யோவ் அப்படி அந்த புதையல எங்கதான்யா ஒளிச்சு வச்சிருக்க”
விட்டத்தை பார்த்து வெறி கொண்டு சித்து கத்த “எனக்கு ஒரு ஐடியா இருக்கு” என்று வீராவின் குரல் கேட்க எல்லோரும் அவளையே பார்த்திருந்தனர்.