ஒரு துண்டு பேப்பர். அந்த துண்டு பேப்பரில் வட்டம் சதுரம் என பல வடிவங்கள் இருக்க, அதை மேலிருந்நு கீழாக தலைகீழாக இப்படி அப்படி என எப்படி வைத்து பார்த்தும் அது என்னவென புரியாது முழித்துக் கொண்டிருந்தார்கள் கண்ணாத்தாவும் அவள் கணவனும்.
“என்னங்க இது என்னான்னுட்டு உங்களுக்கு வெளங்குதா?”
கண்ணாத்தா மெல்ல அவள் கணவனிடம் கேட்க, அவரும் இல்லை என உதட்டை பிதுக்கி தலையாட்டினார். இதெல்லாம் அப்படி என்னவா இருக்கும் என இருவரும் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்த நேரம் அவர்கள் எதிரே அமர்ந்திருந்த அவளின் மாமனாரே அது என்னவென விளக்கினார்.
“இப்ப நான் சொல்லப்போற ரகசியம் நம்ம வீட்டுக்குள்ளாரையே இருக்கனும், இந்த வீட்டதான்டி ஒரு அடிகூட வெளியே போவ கூடாது. மொதல்ல இத யாருட்டையும் சொல்ல மாட்டேன்னுட்டு சத்தியம் செஞ்சு குடுங்க” என அந்த ஆள் முன்கூட்டியே சத்தியத்தை வாங்கி கொண்டு ஆரம்பித்தார்.
“உங்க கையில இருக்கறது ஒரு பெதையலுக்கான வரபடம். இந்தா இருக்கு பாத்தியலா இதுதான் நம்ம ஊரு எல்லக்கெணறு”
‘என்னது இது கெணறா, ஆனா இதப்பாத்தா என்னவோ சின்னபுள்ளைக வரைஞ்சா வட்டங்கணக்கா இல்ல இருக்கு’ மாமனாரின் பதிலுக்கான கண்ணாத்தாவுன் மைண்ட் வாய்ஸ் இது.
“இந்த கெணத்துல எறங்குனா ஒரு கொகையோட பாத தெரியும். அது உள்ளார ஒரு மைல் நடந்தா, இதா கடைசியா இருக்கே அதுதான் நீங்க போவ வேண்டிய எடம். அந்த எடத்துக்கு நீங்க போயிபுடலாம். அங்கதேன் உங்க பாட்டேன் காவாந்து செஞ்சு வச்ச பொதையலு இருக்கு” என ஒருவழியாக சொல்லி முடித்தார் அந்த மனிதர்.
‘அடப்பாவிகளா இந்த படத்தை வரைஞ்சவேன் எவன்டா. காடு மலை கெணறு கொகைனு இதை சத்தியஞ் செஞ்சாலும் நம்ப முடியலையே’
அந்த மேப்பை அப்படிக்கா இப்படிக்கா என எப்படிக்கா திருப்பி பார்த்தாலும் அது ஒரு புதையல் மேப்பாக கண்ணாத்தாவின் கண்களுக்கு தெரியவில்லை.
‘இந்த கடுதாசி கழுத எப்புடி இருந்தா நமக்கென்ன, நமக்கு தேவ அதுல இருக்க பொதையலு. பொதையல பொதச்சு வச்சிருக்கறவ கொஞ்சமாவா பொதச்சு வச்சிருந்திருக்க போறாவ. எப்புடியும் பல பொட்டியில தங்கம் வைரம் வைடூரியம் இப்புடி எல்லா இருந்தாலும் இருக்கும். கண்ணாத்தா உனக்கு அடிச்சுதுடி அதிஸ்டம்’
கண்ணாத்தா சந்தோஷத்தில் அதிகமாய் வைஃப் பண்ணிய நேரம் அவள் மாமனாரோ
“அங்க பொதைஞ்சு இருக்க பொதையல எடுத்து நம்ம ஊரு மக்க மனுசாளுக்கெல்லாம் குடுத்துப்புடனும். இதுதான் நான் முக்கியமா சொல்ல நெனச்சது” என்றொரு பெரிய சைஸ் அணு குண்டை அசால்டாய் தூக்கிப் போட்டார்.
‘என்னாது…’
மாமனார் போட்ட குண்டால் கண்ணாத்தா நிலை குழைந்து போக, அவள் தன்னிலை திரும்ப சில நிமிடங்கள் பிடித்தது. தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்ட கண்ணாத்தா தன் மனதில் இருந்ததை கேட்டகலானாள்.
“மாமா இந்த பொதையலு நம்ப குடும்பத்து ஆளுவ பொதச்சதுன்னு சொல்லுதீய, ஆனா எதுக்கு அத ஊரு ஆளுவளுக்கு தர சொல்லுதீய”
கண்ணாத்தாவின் வாய் பவ்யமாக பேசினாலும், அவளும் வயிறு ஒரு கட்டு விறகை கொளுத்தி விட்டதைப் போல் திகுதிகுவென எரிந்தது. காதில் புகை வரவில்லை அது ஒன்று மட்டும்தான் குறை. அவள் கேட்டு முடித்ததும் ஒரு பெருமூச்சை வெளியிட்ட பெரியவர் தன் பங்குக்கு அவர் ஒரு ஃபிளாஷ் பேக்கை எடுத்துவிட்டார்.
“ஏன்னா அந்த பொதையலு நம்ம குடும்பத்துக்கு சொந்தமானது இல்ல ஆத்தா. அதுல இருக்க ஒருஒரு பைசாவும் திருட்டுதனமா நம்ம மக்கட்டு இருந்து ஆட்டையபோட்ட காசு ஆத்தா ஆட்டையபோட்ட காசு” அப்பாவியாய் சொல்ல நிறுத்தினார் மனிதர்.
“ஏதே!” கோரசாய் சில குரல்கள் கேட்க பழைய நினைவுகளிலிருந்து நிகழ்காலத்திற்கு திரும்பினாள் கண்ணாத்தா.
“அவ்வா அவ்வா அவ்வா! அப்ப என் கிரேட் கிரேட் கிராண்ட்பாதர் எல்லா பயலும் களவாணி பயலுங்க தானா. ஏய் நைனா இது தெரியாம என்னா பேச்சு பேசுவ. நான் ஜமீன்தார் வம்சம் ஜம்பமா வாழ்ந்த வம்சம்னு. நல்லா கேட்டுக்கயா எல்லாரும் ஜமீன்தாரர் வம்சம் இல்ல திருட்டு பய வம்சம்யா”
பட்பட் பட்டாசாய் பொறிந்து தள்ளிவிட்டான் சித்து. பின்னே இருக்காதா இத்தனை வருஷமாக சொந்த பிள்ளை என்று கூட பார்க்காது எப்படி எல்லாம் சீனை போட்டுக் கொண்டிருந்தார் மனிதர். ஏற்கனவே தங்களின் முன்னோர்களின் அருமை பெருமைகளை கேட்டு கடுப்பில் இருந்த அரவிந்த், சித்து பேசியதில் மேலும் காண்டாகிவிட்டார்.
“ஏய் இந்தா கெழவி, இப்ப என்னதான் சொல்ல வர. இந்த இடத்துல பொதையல் இருக்குன்னு சொல்லுறியா? ஆனா எப்புடி மக்கள்ட்ட இருந்து காச அடிச்சாங்க. அந்த கெழவன் என்னதான் சொன்னான், இப்ப எதுக்கு எங்கள இங்க கொண்டாந்து போட்டு இப்புடி கதைகதையா சொல்லிட்டு இருக்க. உன் ஃபிளாஷ் பேக்க சட்டுப்புட்டுனு முடிச்சூடு”
புதையல் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அந்த ஃபிளாஷ் பேக் வேறு லெந்தியாய் போய்க்கொண்டிருக்க அது முடிஞ்சால் போதுமென அரவிந்துக்கு தோன்றிவிட்டது. அதை கேட்ட கண்ணாத்தா மீண்டும் ஃபிளாஷ் பேக் மோடுக்கு போய்விட்டது.
விட்ட இடத்திலிருந்து தன் மாமனார் அன்று கூறியதை இன்று அனைவரிடமும் பகிர துவங்கினாள் கண்ணாத்தா.
நம் சித்துவின் முன்னோர்கள், பல ஆண்டு காலத்திற்கு முன் இருந்தே ஜமீன்தாரர் வம்சத்தை சேர்ந்தவர்களே. இந்த மண் மக்கள் அனைத்தையும் திறம்படவே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் கண்ணாத்தாவின் காலத்திற்கு முன் ஒரு நாலு ஐஞ்சு தலைமுறைக்கு முன்னர் ஆட்சிக்கு வந்தார் ஒரு மனிதர்.
இதற்கு முன் வந்தவர்களை போல் அல்லாது மிகமிக பேராசை குணம் கொண்டவராக பிறந்துவிட்டார். மக்கள் செலுத்தும் வரி பற்றாதென இவரே சில ஆட்களை வைத்து மக்களிடம் இருக்கும் செல்வத்தை திருடி பதுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் பதுக்க தேடி கண்டுபிடித்த இடமே இந்த குகை.
வெகு நாட்கள் இந்த திருட்டு நடந்து கொண்டிருக்க, கடைசியில் இது மக்களை கடுமையான வறுமை நிலைக்கு தள்ளியது. இதற்குமேல் பொறுக்க முடியாது என்று ஊரே திரண்டு ஒரு யாகத்தை நடத்த முடிவு செய்தது.
அந்த யாகத்தை நடத்தி வைக்க பில்லி சூனியம் வைப்பதில் பி.எச்டி பட்டம் பெறும் அளவு, மண்டை ஓட்டை வைத்து பேயை ஏவி விடுவது குறித்து ஆராய்ச்சி செய்து நோபல் பரிசே பெறும் அளவும் நாலேட்ஜை வளர்த்து வைத்திருந்த ஒரு மாபெரும் மந்திரிவாதியை காசியில் இருந்து ஏற்பாடு செய்தனர் மக்கள்.
தாங்கள் நல்லா இல்லை என்றாலும் பரவாயில்லை தங்களின் பொருட்களை திருடியவன் விளங்காது போகவேண்டும் என மந்திரிவாதியை சூனியம் வைக்க வரவைத்த மக்கள், அப்போதும் தங்களின் திருட்டுச் போன பொருட்களை தேட முன்வராதது வினோதமே.
அவர்கள் பொருட்களை களவாடியவன் கைகால் இழுத்து சாகும்வரை கஷ்டப்பட வேண்டும், அதோடு அவனுடைய குடும்பம் எத்தனை தலைமுறை கண்டாலும், அதில் ஒரு குறை இருந்துக்கொண்டே இருக்கவேண்டும் என மொத்த பரம்பரைக்கே சூனியம் வைத்துவிட்டனர் மக்கள்.
இந்த நிலை சரியாகவேண்டும் என்றால் அந்த பரம்பரையை சார்ந்த வாரிசு தன் முன்னோர் எடுத்த பொருட்களை தன்னுடைய மக்களிடமே திரும்ப தரவேண்டுமென கடைசியில் ஒரு டுவிஸ்டை வைத்து சிறப்பாக முடித்தார் அந்த மந்திரவாதி.
அந்த சூனியத்தால் அந்த பொருட்களை திருடிய அந்த ஆள் கைகால் இழுத்து சாகும் வரை படுக்கையில்தான் கிடந்தான். சாகும் தருவாயில் தன்னுடைய தவறை உணர்ந்த அந்த ஆள் தன்னுடைய மகனை கூப்பிட்டு தன் தவறை எல்லாம் சொல்லி, அந்த நகைகளை எல்லாம் உரியவர்களிடம் ஒப்படைக்க சொல்லிட்டு தன் உயிரை துறந்தார்.
அவர் மகனோ இந்த சூனியத்தின் புல் பவரை அறியாது அந்த புதையலின் மேல் ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய எலியாய் வசமாய் மாட்டிக் கொண்டார். இவரின் பேராசையின் பலனாக அவர் மனைவியின் உயிர் பறிபோனது. அடுத்தடுத்து வந்த வாரிசுகளும் அந்த புதையலின் மேல் ஆசை வைத்ததால் யாரும் மக்களிடம் தர முன்வரவில்லை.
அதன் பலனாக அந்த குடும்பத்து ஆண் வாரிசுகளுக்கு ஒன்று இரண்டு பிள்ளைகள் பிறந்தவுடன் என்ன ஏது என்றே அறியாது, அவர்கள் மனைவி இறந்து போவது வழக்கமானது. யார் செஞ்ச தப்புக்கு யாருடா பலனை அனுபவிக்கிறது. ஆனால் அந்த முழு லூசு மந்திரவாதி இந்த சாபத்தைதான் வைத்துவிட்டு சென்றிருந்தான்.
கண்ணாத்தா பேய் தங்கள் வரலாறை முற்று முழுதாக சொல்லி நிறுத்த அந்த குகையினுள் பலத்த அமைதி.
‘நம்ம முன்னோர் எல்லா பயலும் திருட்டு கம்முனாட்டி தானா. ச்சை என்ன ஒரு கேவலமான வரலாறு. அப்ப இங்க இருக்கறது எல்லாம் ஊரை அடிச்சு ஓலையில போட்டதா. ஐயோ இப்ப என் புள்ளை இன்னும் கண்ட மேனிக்கு கலாச்சு விடுவானே’
அரவிந்தே இந்த வரலாற்றை கேட்டதில் ‘ஒரே ஷேமா போச்சு குமாரு’ என்ற நிலையில் இருந்தார்.
அங்கிருந்த எல்லாரும் தாங்கள் கேட்ட கதையை பல்வேறு கோணத்தில் ஆராய்ச்சி செய்ய, நம் சித்துவுக்கு வேறொரு சந்தேகம் தோன்றியது.
“ஏய் கெழவி நீ சொன்ன கதையெல்லாம் சரிதான். ஆனா நீ எப்படி செத்த, எதுக்கு பேயா அந்த பொம்மைல மாட்டிட்டு இருந்த, வீராவ உன்னோட ரெத்தம்னு ஏன் சொன்ன. இந்தமாதிரி நிறைய கேள்விய நீ டீல்ல விட்டுட்ட”
சித்து தன் மூளைக்குள் தோன்றிய டௌட்டுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து விட, கண்ணாத்தா பேய் திருட்டுமுழி முழித்தது. அதிலையே தெரிந்துபோனது கிழவி ஏதோவொரு வில்லி வேலை பார்த்திருக்கிறதென. இதற்கு மேலும் மறைக்கமுடியாது என புரிந்துபோன கண்ணாத்தா தன்னுடைய கதையை சார்ட்டாக சொல்ல ஆரம்பித்தது.
“அப்புடி பாக்காதடா சித்தார்த்தா, இரு சொல்லுறேன். என்ற மாமனாரு இதையெல்லாம் சொல்லவும் எனக்கு அந்த நகை பணம் மேல ஆசை வந்துட்டது. அதனால ஒரு பௌர்ணமி நாளு ராத்திரி இங்க இருக்க பொதையல எடுக்க வந்தேன்.
ஆனா அந்த சூனியம் வச்சவன் நெம்ப ஆழமா வச்சூட்டு போயிட்டான்போல. நான் அந்த பொதையல தேட ஆரம்பிக்கவும் எங்கயிருந்தோ ஒரு கை வந்து என் கழுத்த நெறிச்சு போட்டுருச்சு. என்னோட அந்த பேராசையால என்னோட ஆவியால இந்த உலகத்தில இருந்து போவ முடியலை.
அதுமட்டும் இல்லாம என் ஆவி இந்த பொம்மக்குள்ள அடபட்டுபோச்சு” என கண்ணாத்தா பேய் நிறுத்த
“ஏய் கெழவி இன்னமும் எங்கையோ இடிக்குதே. முழுசா உண்மைதான் சொல்றியா” சித்து இடையே கேட்டு விட்டான்.
‘ஐயோ கண்டுபுடிச்சிட்டானே’ என மீண்டும் திருட்டு முழி முழித்த கிழவி சலித்தபடி தொடர்ந்தது.
“அது என்ற மாமனாரு சூனியம் அது இதுன்னுட்டு சொல்லவும் கொஞ்சம் பயந்து போயிட்டேன். அதேன் என்ற அண்ணன் மூலமா ஒரு மந்திரவாதிய வரவச்சு அந்த கட்ட ஒடைக்க பாத்தேன். ஆனா அந்த கட்ட போட்ட கட்டைல போனவன் அவ்ளோ கெட்டியா போட்டுவிட்டுருக்கான். அந்த முயற்சிலதான் என் உயிரும் போச்சுது, அந்த பொம்மைலையும் நான் மாட்டிபுட்டேன்”
என்னவோ உலக சாதனைகாக முயற்சி செய்து அதனால் செத்ததுபோல் கிழவி பேசி நிறுத்த தூவென துப்பியேவிட்டான் சித்து.
“ஏய் கெழவி நீ செஞ்சது பூரா கேடி வேலை. இதுல உனக்கு ஒரு ஃபிளாஷ் பேக்கு. நீ என்ன வெறி ஏத்திட்டு இருக்க. சட்டுப்புட்டுன்னு நீ சொல்ல வரத சொல்லிமுடி”
சித்தார்த்தின் மிரட்டலை கேட்டு முகத்தை மூன்று முழத்திற்கு நீட்டிய கண்ணாத்தா தன்னுடைய ஃபிளாஷ் பேக்கின் கடைசி பாகத்திற்கு நகர்ந்தது.