Advertisement

                                                    மௌன முத்திரைகள் – 3

ப்ரீத்தி சொன்னதுபோலவே புகாரை திரும்பப் பெற்று இருந்தாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வீடும் வந்திருந்தாள். அதற்குள் தனரூபன், சித்தி சித்தப்பாவை ஒருவழி செய்திருந்தான்.

நித்தீஸ் சொல்லவே வேண்டாம். வாங்கிய அடிகளின் காயம் இன்னமும் ஆறவில்லை. மனதிற்குள் குமுறிக்கொண்டே தான் இருந்தான்.

‘பெரியப்பா மேல இருக்க கோபத்தை எல்லாம் என் மேல காட்ட வேண்டியது…’ என்று.

தனரூபனும் விடுவதாய் இல்லை. அதிலும் தவசியிடம் “ஏன் சித்தப்பா இப்படி அமைதியாவே இருக்கீங்க? அன்னிக்கே எங்கப்பாவை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டு இருந்தா என்ன? இல்லை இப்பவும் நித்தீஸ் முன்னாடி சத்தமாவாது ஒரு வார்த்தை பேசினா என்ன?” என்று கேட்க,

“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை தனா.. அண்ணாவை என் அப்பா ஸ்தானத்துல வச்சுத்தான் பார்த்தேன்.. அவர் எது செஞ்சாலும் சரிங்கிற கண்ணோட்டம் தான். இப்போ உன்மேலயும் கூட அதே எண்ணம் தான். என் அண்ணன் இடத்துல நீ. நீ என்ன சொல்றியோ செய்றேன்…” என,

‘என்ன மனிதர் இவர்..?’ என்று எரிச்சலாய் பார்த்து வைத்தான்.

அதற்குமேலே சுலோச்சனா “அதுதான் ஏதாவது பிரச்னை அப்படின்னா, நீ இருக்க தானே தனா…” என,

“என்னது பிரச்னை அப்படின்னா அதெல்லாம் தீர்த்து வைக்கிறது தானா என் வேலை சித்தி..”  என்று கடிந்தான்.

“நீதான் எங்களுக்கு மூத்த பிள்ளை…” என,

‘சுத்தம்…’ என்று தலையில் அடித்துக்கொண்டான்.

இன்னமும் கூட சித்தாப்பவின் சொத்துக்களை பொறுப்பெடுத்து பார்ப்பது இவன்தான். நித்தீஸ் கூட அண்ணன் சொல்லும் வேலைகளை செய்வான் அவ்வளவே.

சும்மா இருப்பதால் தானே இவனுக்கு புத்தி இப்படி எங்கெங்கோ போகிறது என்று எண்ணி “சித்தப்பா, இனிமே நித்தீஸ் உங்க ரைஸ் மில் அப்புறம் உரக் கடை பொறுப்பு எடுத்துக்கட்டும்.. காலைல கடை திறந்து வச்சிட்டு, பத்து மணிக்கு மேல ரைஸ்மில் போயிட்டு, மதியம் மறுபடியும் கடைக்கு வந்து உக்காரட்டும்.. திரும்ப சாயந்திரம் மில்லுக்கு போயிட்டு வந்து கணக்கு உங்கக்கிட்ட காட்டட்டும்…” என,

“எது? அவனா? அவனுக்கு என்ன தெரியும்?” என்று இருவருமே பதற, அனைத்தையும் ப்ரீத்தி கவனித்துக்கொண்டு இருந்தவள்,

“ஏன் தெரியாம? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துகத் தெரியும். பொண்டாட்டி வீட்ல இல்லைன்னா இன்னொருத்தி கூட பொறுக்கித்தனம் செய்ய தெரியும்.. பிறந்ததுல இருந்து பழக்கமான இடம், வேலை, நம்ம தொழில் அது செய்யத் தெரியாதா..?” என்று கேட்டுவிட, பெற்றவர்கள் இருவருக்கும் முகம் வாடி விட்டது.

அவள் சொல்லும் வார்த்தைகள் சரிதானே.

இருந்தும் தனரூபன் ‘நீ அமைதியாய் இரு…’ என்பதுபோல் பார்க்க,

“என்னை ஏன் மாமா அமைதியா இருக்கச் சொல்றீங்க..? இன்னமும் எத்தனை நாளைக்கு இவர் நீங்க சொல்ற வேலையே செய்வார்? இல்லை உங்களுக்குன்னு எவ்வளோ பொறுப்பை தான் தூக்கி தலையில போட்டுப்பீங்க.. நாளைக்கு உங்களுக்குன்னு ஒருத்தி வருவா.. உங்களுக்குன்னு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு.. அப்போ இது அத்தனையையும் நீங்க ஒருத்தரே சமாளிக்க முடியுமா மாமா?” என, அவள் பேசுவது நூத்துக்கு நூறு நியாயமான ஒன்று.

“பரவாயில்ல ப்ரீத்தி… நித்தீஸ் கொஞ்சம் கொஞ்சமா பழகுவான்…” என்று தவசி சொல்ல,

“எப்படி? பழக விட்டா தான் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்.. கை குள்ளே வச்சுக்கிட்டா எப்படி பழகுறது? இதோ தனா மாமாக்கு என்ன வயசு, அவரை விட மூனோ நாலோ தான் கூடுதல். ஆனா ஊருக்குள்ள இவருக்கு இருக்கிற செல்வாக்கு என் புருசனுக்கு இருக்கா? சொல்லுங்க பாப்போம்…” என,

சுலோச்சனாவோ “ப்ரீத்தி குடும்பத்துல சச்சரவு கிளப்பக் கூடாது…” என்று குரல் உயர்த்த,

“எதார்த்தத்தை சொன்னேன் அத்தை…” என்றவள், தனரூபனிடம் “மாமா, நீங்க சொல்றமாதிரி அவரே ரெண்டையும் பார்க்கட்டும்..” என,

“நல்லதும்மா…” என்றவன் எழுந்துகொள்ள, தவசி தயக்கமாய் அவன் முகம் பார்த்தார்.

“நல்லதுக்குத்தான் சொல்றேன் சித்தப்பா.. அவனும் எல்லாம் பழகனும். நம்மக்கிட்ட இருக்க பணம் செல்வாக்கு எல்லாம் சும்மா வரலை. உழைப்புனால வந்தது. அது அவனுக்கு புரியணும். சித்தி நீங்களும் அவனை ரொம்ப இழுத்து இழுத்து வைக்காதீங்க..” என்றவன்

பிரீத்தியிடம் “நீ பார்த்துக்கோ…” என்று சொல்லி அவர்களின் வீடு வர, ஹால் சோபாவில், தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து இருந்தனர்.

இப்போதெல்லாம் இந்த காட்சி மிக மிக அரிதாகி இருந்தது. ஏதேனும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே இப்படி இருவரும் வந்து அமர்வது. இல்லையெனில் பாட்டி எப்போதும் காட்சியளிப்பார். தாத்தா அப்படியில்லை.

இருவரையும் ஒன்றாய் பார்க்கவும், மனதில் அவனையும் மீறிய ஒரு நிம்மதி பிறக்க “என்ன பெருசு, ஜோடியா உக்காந்து இருக்கீங்க..?” என்று தன் சிறுவயதில் பேசுவது போல் பேச,

கங்கையம்மாள் பேரனின் பழைய பேச்சு கண்டு “என்ன பேரா பேச்சுல உல்லாசம் தெரியுது?” என்றார் பதிலுக்கு.

“உல்லாசம் தான, நல்லா தெரியுமே…” என்றவன் “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று அடுத்து அப்படியே முகத்தை மாற்ற,

“ஹ்ம்ம் கொஞ்சம் பழையமாதிரி இரேன் தனா…” என்றார் பெருங்கோடி.

“எப்படி தாத்தா?” என்றவனின் குரலில் அப்பட்டமான கசப்பு.

“உங்கப்பன் பண்ண வேலை.. ம்ம்ச் நாங்களும் ஒன்னும் செய்ய முடியாம போச்சு. எங்க ஏதாவது கண்டிக்க போய் ஒரேதா நம்ம எல்லாரையும் விட்டு அங்க போயிடுவானோன்னு பயந்தே எதுவும் செய்யாம விட்டோம். குணத்துல நல்லவன், எங்க சறுக்குனான்னு தெரியலை…” என்று கங்கையம்மாள் அப்போதும் வருந்த,

“ம்ம்ச் இன்னும் இந்த பேச்சு ஓயாலையா?” என்றபடி வந்தார் பாக்கியம்.

“ம்மா…” என்று தனரூபன் எதோ பேச வர,

“இல்லை தனா… எனக்கு மனசு தாங்களை… உங்கப்பா இறந்தும் இதோ இன்னும் ரெண்டு மாசத்துல ஒரு வருஷம் ஆகப்போகுது.. ஆனா இப்பவும் இந்த பேச்சு முடியலை.. எனக்கு தாங்க முடியலை.. அவர் பண்ணது தப்புதான் இல்லைன்னு சொல்லவே மாட்டேன். அதுல முதல்ல பாதிக்கப்பட்டு நிக்கிறது நான் தான். அதையும் யாராலையும் மறுக்க முடியாது.

ஆனா இப்போ அவர் இல்லைதானே. இப்பவும் கூட இதை சொல்லிக் காட்டணுமா? நித்தீஸ் பண்ண வேலைக்கும் அவரைத்தான் சொல்றாங்க எல்லாம்.. என் மனசுல என்ன இருக்கும்னு யாருமே நினைக்கலை இப்போ வரைக்கும்..” என்று வருந்த, பெருங்கோடி தன் மனைவியை முறைக்க,

“சரிம்மா விடு.. இனி நாங்க யாரும் அவனை பேசல…” என்றார் கங்கையம்மாள்.

பாக்கியம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருக்க, பெருங்கோடி தான் “தனா, நாளைக்கு நீ கோவை போகணும் தான…” என,

“ஆமா தாத்தா…” என்றவனின் பார்வை தன்னைப்போல் அம்மாவைத் தொட்டு மீள, அப்போதும் எதுவும் பேசாமல் பாக்கியம் அமைதியாய் இருக்க,

கங்கையம்மாள் பேரனிடம் “அது தனா, என்னையும் உங்கம்மாவையும் அங்க கூட்டிட்டு போறியா?” என்றார்.

இப்போதுதான் புரிந்தது, இதற்குத்தான் இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று.

அப்போதும் தனரூபன் தன் தாயின் முகம் பார்க்க, பாக்கியம் “அது வந்து தனா..” என்று இழுத்தார்.

“ஏன் ம்மா உங்களுக்கு இந்த பிடிவாதம்? அப்பா இறந்தப்போ இருந்து கேட்டுட்டு இருக்கீங்க. நானும் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன்.. அவங்களை பார்த்து என்ன பேச போறீங்க நீங்க?” என,

“சும்மா பார்க்கணும்?” என்றார் சிறு குழந்தையின் பிடிவாதம் போல.

ஆம்! பாக்கியம், நல்லசிவம் மறைவிற்கு பிறகு தன் மகனிடம் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார் ஒருமுறை பார்வதியை பார்த்து பேசவேண்டும் என்று. ஆனால் தனரூபனுக்கு அதில் விருப்பம் இல்லை.

தன் தாய் தேடிச் சென்று பார்வதியைப் பார்த்து பேசுவதா?

அப்படி இறங்கிப்போய் பேசவேண்டிய அவசியம் இல்லை என்பது அவனின் எண்ணம்.

ஆனால் அன்றிலிருந்து பாக்கியமும் விடுவதாய் இல்லை. ஒவ்வொரு மாதமும் தனரூபன், பார்வதியை காணச் செல்லும் போதெல்லாம், இதே கதைதான்.

“என்ன சும்மா பார்க்கணும்? நீங்க எதையாவது பேசி, இல்லை அவங்க பேசுறது உங்களை கஷ்டப்படுத்தி, அப்பா இல்லாத சூழ்நிலைல இதெல்லாம் வேண்டாம்மா. அப்பா வார்த்தைகளை நீங்க காப்பாத்தனும்னு நினைக்கிறீங்க.. அந்த பெருந்தன்மை போதும். அதுக்குமேல நீங்க எங்கயும் இறங்கி போகணும்னு இல்லை..” என,

தன் மகன் தன்னை எத்தனை உயரத்தில் வைத்திருக்கிறான் என்பது கண்டு பாக்கியத்திற்கு பெருமையாய் இருந்தது. உண்மைதானே, நல்லசிவத்தின் மறைவிற்கு பிறகு, அடுத்து என்ன செய்வது என்று பாக்கியத்திடம் தானே தனரூபன் கேட்டான்.

“என்ன செய்றதுன்னா?” என்று விளங்காமல் பாக்கியம் கேட்க,

“ம்மா.. அதான் அப்பா சொன்னாரே.. அவங்களை பார்த்துக்கணும்னு.. அதைத்தான் கேக்குறேன்.. என்ன செய்யணும் நான்..” என,

“ஹ்ம்ம்…” என்று ஒரு ஆழ்ந்த மூச்சினை எடுத்து விட்டவர், சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்துவிட்டு, பின்

“எனக்கும் மனசாட்சின்னு ஒன்னு இருக்கு.. மனிதாபிமானம்னு ஒன்னு இருக்கு. உங்கப்பா அவரோட வார்த்தைகளை காப்பாத்தினார். இப்போ அவர் இல்லை. ஆனா அவர் கடைசியா சொன்னதை நம்ம காப்பாத்தனும்..” என்றவர்,

“முதல்ல அவங்கக்கிட்ட பேசு.. என்ன வேணும்னு கேளு.. என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு அடுத்து என்ன செய்றதுன்னு பார்ப்போம்..” என, தனரூபனுக்கு பாக்கியத்தின் வார்த்தைகள் கண்டு வியப்பாய் இருந்தது.

“ம்மா!” என்று பார்க்க,

“உங்கப்பா இல்லை…  இல்லைன்னாலும் அவரோட பேரும், மரியாதையும் ரொம்ப முக்கியம். அவர் எப்படியோ.. ஆனா நான் அவருக்கு உணம்யா தான் வாழ்ந்தேன்.. வாழ்றேன்…” என்று முடித்துக்கொண்டார்.

தனரூபனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று. ஆனால் அம்மாவின் வார்த்தைகள் தனலட்சுமிக்கு அப்படி ஒன்றும் ஏற்புடையதாய் இல்லை.

“என்னம்மா நீ? தேவையா? எப்படியோ போறங்கன்னு விட வேண்டியது தானே. எப்படியும் நம்ம அப்பா அவங்களுக்கு சொத்து சம்பாரிச்சு குடுக்காமையா இருந்திருப்பார்.. எல்லாம் நானும் கேள்விபட்டிருக்கேன்… நீ ஒன்னும் போய் பார்க்கவேண்டாம் ரூபன்…” என்றாள் தம்பியிடம்.

“லட்சுமி…” என்று பாக்கியம் அதட்ட,

“ம்மா எனக்கு இதுல உடன்பாடு இல்லை…” என்றாள்.

“உன்னை யாரும் இங்க கேட்கலை…” என்று பாக்கியம் பேச,

“ம்மா என்னம்மா இது?” என்றான் தனரூபன்.

“பின்ன என்னடா? நானும் பாக்குறேன் ஆரம்பத்துல இருந்தே இவ பேச்சு சரியில்லை..” என்று அம்மாவும் பேச,

“அதான என்னை எப்போ நீங்க பெருசா நினைச்சு இருக்கீங்க..? உங்களுக்கு எப்பவுமே உங்க மகன் தான் உசத்தி…” என்று தனலட்சுமி, தம்பியின் மீது பாய,

“போதும் நிறுத்து லட்சுமி. சில விஷயங்கள் நாங்க முடிவு எடுத்துப்போம்.. உங்க வீட்டு விசயங்கள்ல நாங்க தலையிடுரோமா இல்லை தானே…” என்று பாக்கியம் சொல்லவும், தனலெட்சுமி ஓ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

“அப்போ.. எனக்கு இந்த வீடு சொந்தமில்லை.. அதுனால எனக்கு இங்க எந்த பேச்சுவார்த்தையும் வைக்கக் கூடாது அப்படித்தானே…” என,

“ஏய் அக்கா.. கொஞ்சம் ப்ரீயா விடு.. அம்மா சொல்றங்கன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். இப்போ நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா, வீட்ல இருந்த சொந்தக்காரங்க வாய்க்கு எல்லாம் நம்ம அவல் ஆகுவோம்.. உன் மாமியார் வேற இப்போதான் இந்த பக்கமா போனாங்க?” என்று தனரூபன் சொல்லவும், அடுத்தநொடி தனலட்சுமி கண்களை துடைத்து முகத்தை சாதாரணம் போல் வைத்துக்கொண்டாள்.

எது எப்படியாகினும், அம்மா தம்பியோடு வாயாடுவாளே தவிர, மாமியார் வீட்டினில் இவர்களை விட்டுக்கொடுக்கவே மாட்டாள்.

மகளை ஒரு பார்வை பார்த்தவர் “இப்போ போகாத தனா..ரெண்டு நாள் போகட்டும்.. எல்லாம் கிளம்பட்டும்.. தாத்தா பாட்டிக்கிட்ட சொல்லிட்டு போயிட்டு வா…” என்றுவிட்டார்.

அன்றிலிருந்து, இதோ இன்றுவரைக்கும் மாதம் ஒருமுறை பார்வதியை சென்று பார்த்து வருவான். அடிக்கடி கோவை செல்வான் தான். ஆனால் மாதம் ஒருமுறை மட்டுமே அவரைக் காண்பது. பார்வதியும் முன்னர் இருந்ததுபோலத்தான். தேவையில்லாது தனரூபனுக்கு அழைத்து அது இதென்று உதவிக் கேட்க மாட்டார்.

முதல் முறை நான் வருகிறேன் என்று சொல்லித்தான் சென்றான். பார்வதி மறுப்பாய் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவன் வந்ததில் அங்கே எதுவும் சங்கடம் இருக்குமோ என்ற பார்வை அவரிடம் தெரிந்தது.

“அங்க எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனா அம்மா தான் போயிட்டு வர சொன்னாங்க?” எனவும், பார்வதியின் கண்களில் வியப்பு.

ம்ருதுளா வந்து குடிப்பதற்கு பழச்சாறு வைக்க “இல்லை வேண்டாம்…” என்றான் மறுப்பாய்.

பார்வதி சன்னமாய் ஒரு புன்னகையோடு “நான் கட்டாயப் படுத்தலை..” என, அப்போது தான் அங்கே கவனித்தான், அங்கே நல்லசிவத்தின் ஆளுயர புகைப்படம் சுவரில் ஒருபக்கம் மாட்டியிருந்தது.

தங்கள் வீட்டினில் கூட இத்தனை பெரிதாய் புகைப்படம் போடவில்லை. ஓரளவு பெரியதுதான். ஆனால் இங்கே மிகப் பெரியது. அவனது பார்வை அந்த படத்தினில் நிலைக்க,

“அவரோட பெரிய மனசுக்கு, இதைவிட கூட பெரிய படம் போடலாம்…” என, தனரூபன் ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேர அமைதிக்கு பிறகு “உங்களுக்கு நான் என்ன செய்யணும்?” என, பார்வதியின் பார்வை தான்ரூபன் முகத்தில் நிலைத்து நின்றது. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது அவனுக்குப் புரிய,

“இல்லை…” என்று தயங்கியவன், கடைசி நேரத்தில் நல்லசிவம் சொன்ன வார்த்தைகளை சொல்ல, பார்வதியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. ம்ருதுளா அத்தனை நேரம் எங்கிருந்தாளோ, பார்வதி தன் கண்களைத் துடைக்கவும், அங்கே வந்தவள்,

“இந்த பேச்சு மட்டும் வேண்டாமே…” என, தனரூபன் பட்டென்று அவள் முகம் பார்த்தான்.                                   

      

         

         

 

Advertisement